http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 105
இதழ் 105 [ மார்ச் 2014] இந்த இதழில்.. In this Issue.. |
தொடர்:
தேடலில் தெறித்தவை
நெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் இருந்து படியெடுக்கப்பட்டுள்ள சடையவர்மர் குலசேகர பாண்டியரின் 26ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு (தெ. க. தொ. 5: 415), எளிய வரி விதிப்பு ஆவணமாகவே காட்சி தந்த போதும் அருமையான தரவுகளை உள்ளடக்கியுள்ளது. நிலவும் கதிரவனும் உள்ளவரை நெல்வேலிக் கோயில் இறைவனுக்கு இடக்கை வாசிப்பதற்காகக் கோயில் இசைக்கலைஞர்களுள் ஒருவரான தேவன் அனவரததான இடக்கை மாராயனுக்கு நெல்வேலி சீயன் தேவனான கண்டியதேவர் 3 மா நிலம் அளித்தார். இந்நிலத்திற்கான கடமையை நிருணயித்து, கீழ்வெம்பநாட்டு சிவசரணசேகரப் பெருந்தெருவான ஸ்ரீவல்லவபுரத்து நகரத்தார் ஓலையளித்தனர். ஒரு மா நிலத்துக்கு 10 கலம் நெல்bலன 30 கலம் நெல் கார் விளைச்சலின்போது அளிக்க முடிவாகியது. இக்கல்வெட்டில் உள்ள ஐந்து செய்திகள் இதைச் சிறப்புக்குரியதாக்குகின்றன. ஐந்துமே நிகரற்ற தரவுகளாக முன் நிற்கின்றன. 1. தமிழ்நாட்டுக் கல்வெட்டுகளில் தோல், காற்று, நரம்பு, கஞ்சம், மிடறு என ஐவகைப் பேரொலி (பஞ்சமாசப்தம்) எழுப்புவன பற்றியும் குறிப்புகள் உள்ளன. முதல் நான்கு சார்ந்த இசைக்கருவிகள் கல்வெட்டுகளில் சிலவாகவேனும் இடம்பெற்றுள்ளன. தோல் இசைக்கருவிகளாகப் பறை, மத்தளம், பேரிகை, உடுக்கை, திமிலை முதலியன கல்வெட்டுகளில் பரவலாக இடம்பெற்றிருந்தபோதும் தமிழ்நாட்டுக் கோயில்களிலுள்ள இடைக்கால ஆடற்சிற்பங்களில் பெருவழக்காய்க் காட்சியளிக்கும், ‘இடக்கை’ எனும் தோலிசைக்கருவி, கல்வெட்டுகளில் மிக மிக அருகியே இடம்பெறுகிறது. இந்த நெல்வேலிக் கல்வெட்டு, ‘இடக்கையை’க் கோயிலில் நாளும் வாசிக்கப்பட்ட தோலிசைக் கருவியாகப் படம்பிடிப்பதுடன், அதை இசைத்த கலைஞரின் பெயரையும் பதிவு செய்திருப்பது மிக அரிய செய்தியாகும். 2. ‘சிவபாதசேகரன்’ என்றழைக்கப்பட்ட முதலாம் இராஜராஜரின் திருமகனாரும் இந்தியத் துணைக்கண்டத்தின் இணையற்ற பெருவீரருமான முதலாம் இராஜேந்திரர் ‘சிவசரணசேகரன்’ என்றழைக்கப்பட்டமையை வலஞ்சுழியில் நாங்கள் கண்டறிந்த கல்வெட்டின் மூலம் நிறுவியுள்ளோம். வணிகக்குழுக்கள் அரசர்களின் பெயரோடு தங்களை இணைத்து அழைத்துக் கொண்டமையை ‘ராஜராஜப் பெருநீரவியோம்’ என்ற சொல் வழக்கு உணர்த்தும். இக்கல்வெட்டின் வழி இராஜேந்திரர் பெயரையும் வணிகக்குழுக்கள் பயன்படுத்தியுள்ளமை தெரியவருகிறது. தங்கள் வாழிடத்திற்கு இராஜேந்திரரின் ‘சிவசரணசேகரன்’ எனும் மிக அரிய விருதுப் பெயரை ஸ்ரீவல்லவபுரத்து நகரத்தார் கொண்டிருந்தனர். நகரத்தார் பெருமக்களின் வாழிடங்கள் ‘புரம்’ என்ற பின்னொட்டுப் பெறுவதும், ‘தெரு’ எனும் பின்னொட்டுப் பெறுவதும் கல்வெட்டுகள் வழி வெளிப்படும் உண்மையாகும். சுந்தரசோழப் பெருந்தெரு, சுத்தவல்லிப் பெருந்தெரு எனப் பல சான்றுகளைக் கல்வெட்டுகளில் காணமுடிகிறது. அரசர்களின் அபிடேகப் பெயர்களைக் கொண்டிருந்தாற் போலவே, அவர்தம் விருதுப்பெயர்களையும் நகரத்தார் தம் வாழிடங்களுக்குச் சூட்டியுள்ளமை சிவசரணசேகரப் பெருந்தெருவால் வெளிச்சம் பெறுகிறது. 3. ‘கைத்தடி’ என்றால் கையில் கொள்ளும் தடியென்றே இன்றைய சூழலில் பொருள் கொள்வோம். ஆனால், இடைக்காலக் கல்வெட்டுகளில் ‘கைத்தடி’ எனும் சொல்வழக்கு ஊர் நில விபரம் அடங்கிய புத்தகத்தைக் குறித்தது. இந்த வழக்கும் தமிழ்நாட்டுக் கல்வெட்டுகளில் மிக அருகியே பயன்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டில் ‘கைத்தடி’ எனும் சொல்வழக்கு நில விபரம் அடங்கிய வரியிடு ஓலையாகக் காட்டப்பட்டுள்ளது. கோயிலில் இடக்கை வாசிப்பதற்காகக் கண்டியதேவர் தந்திருந்த மூன்று மாநிலம், எல்லைகளுடன் அடையாளப்படுத்தப்பட்டுக் கடமை நிச்சயிக்கப்பட்ட ஓலையையே கல்வெட்டு இங்குக் கைத்தடி என்று குறிக்கிறது. இந்த ஓலையை இசைக்கலைஞருக்கு நகரத்தார் அளிப்பதுவே கல்வெட்டின் சாரம். 4. இடக்கைக் கலைஞருக்கு அளிக்கப்பட்ட நிலத்தின் எல்லைகளுள் மூன்று திசை எல்லைகள் விளைச்சலுக்குக் கொணரப்பட்ட தரிசு நிலங்களாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. பல்லவர் காலத்திலேயே நிலச் சீர்மை தொடங்கியிருந்தபோதும் சோழர் காலத்தில் இது உச்ச நிலை அடைந்தது. பிற்பாண்டியர் காலத்திலும் இது தொடர்ந்தமைக்கு இக்கல்வெட்டு சான்றாகிறது. திருநாராயண வயக்கல், மலையன் வயக்கல், வாழி வயக்கல் எனும் இம்மூன்று எல்லைகளோடு நான்காம் எல்லையாகச் சீவல்லவன் நந்தவனத்து மேலைப் பெருவழி அமைந்திருந்தது. 5. இக்கல்வெட்டில் இடம்பெறும் குலசேகரரின் மெய்க்கீர்த்தி, ‘இயல் இசை நாடகம்’ எனும் முத்தமிழைச் சுட்டுகிறது. அவற்றை ஒருசேர ‘இன்னமுது’ என்றழைக்கிறது. குலசேகரரின் ஆட்சியில் ‘இன்னமுதாகிய இயலிசை நாடகம் மன்னி வளர்’வதாகச் சுட்டுகிறது. பத்தொன்பதே வரிகளில் அமைந்த இக்கல்வெட்டில் எத்தனை முதன்மைத் தரவுகள். வரலாறு தமிழர்ப் பதிவுகளில் விழித்து நோக்கிய போதும் இல்லையென்று சொல்வரும் இருக்கத்தான் செய்கின்றனர்.this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |