http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 106
இதழ் 106 [ ஏப்ரல் 2014] இந்த இதழில்.. In this Issue.. |
தொடர்:
தமிழ் அமுதம்
அன்புள்ள வாருணி,
பானைக்காகக் காத்திருப்பதாக எழுதியிருந்தாய். பானை சங்க இலக்கியங்களிலும் காப்பியங்களிலும் அருகி வரும் சொல். பெருங்கதை, சீவகசிந்தாமணி முதலியவற்றிலும் பானையைப் பார்க்க முடியவில்லை. நற்றிணை ஓரிடத்திலும் அகநானூற்றில் பாடபேதமாக ஓரிடத்திலுமே பானை கையாளப்பட்டுள்ளது. பானைக்கு இணையான ‘சட்டி’ என்ற சொல்லையும் இவ்விலக்கியங்கள் கொள்ளவில்லை. கல்வெட்டுகளும் பானையை மிகுதியாகக் கொள்ளாமை வியப்பளிக்கிறது. சட்டிப்பானை என்ற தொடரைக் காணும்போது சட்டி வேறு, பானை வேறு என்பது தெளிவானாலும், இரண்டுமே பழஞ்சொற்களாகப் பரவலாகக் காணப்படாமை கருதத்தக்கது. இன்றைக்கு அகழ்வாய்வுகளில் கிடைக்கும் மட்பாண்டச் சில்லுகளைப் பொதுவாகப் பானையோடுகள் என்றே குறிப்பிடுகிறார்கள். சட்டி ஓடுகள் ஒன்றோ, கலத் துண்டுகள் என்றோ அவற்றை வழங்குவதில்லை. முழுமையான அளவில் அகழ்வாய்வில் வெளிப்படும் கலன்களை அவற்றின் அமைப்பிற்கேற்ப பெயரிட்டழைப்பது இயல்பாக உள்ளது. கருப்பு சிவப்புப் பானையோடுகள், பழுப்பு நிறப் பானையோடுகள் என அனைத்து வகை மட்பாண்டச் சில்லுகளும் பானையோடுகளாகவே கருதப்பட்டாலும், அவை ‘பானை’ என்ற வடிவமைப்புக் கொண்ட கலத்தின் துண்டுகளா அல்லது வேறு பெயருடைய கலங்களின் சிதைந்த பகுதிகளா என்பதை ஆராய வேண்டியுள்ளது. கல்வெட்டுகள், சட்டியைக் கைக்கொண்ட அளவிற்குப் பானையைக் கொள்ளாமை கல்வெட்டாய்வில் புலப்படும் உண்மையாகும். ‘நிசதம் ஒரு திருவமுது பானையும் கறிச் சட்டியும்’ என்ற கல்வெட்டுத் தொடர் பானையில் சோறும் சட்டியில் கறியும் இடப்பட்டாற் போல் கருத்துக் காட்டினாலும், பல கல்வெட்டுகளில், ‘சட்டி’ சோறு கொள்ளும் கலமாகவே சுட்டப்பட்டுள்ளமை கருதத்தக்கது. ‘ஒரு ஸ்ரீமாகேசுவரர் அமுது செய்யச் சட்டிச் சோறுக்கு நெல் நாற்பத்தைந்து கலம்’, ‘இவன் வைச்ச சட்டிச் சோறு, சட்டி ஒன்றுக்கு ராஜகேசரியால் நெல்லு நானாழி’ எனும் தொடர்கள் கருத்தில் கொள்ளத்தக்கன. சட்டியானாலும் பானையானாலும் வேறு கலங்களானாலும் மண்ணை மூலப்பொருளாகக் கொண்டு உருவாக்கப்பட்டவற்றை வனைந்தளித்த கலைஞர்கள் ‘குசவர்கள்’ என்றே கல்வெட்டுகளில் சுட்டப்பெறுகின்றனர். குசவர் செய்த பாண்டம், அது எவ்வடிவில் அமைந்திருந்தபோதும் குசக்கலமாகவே சுட்டப்பட்டது. வடிவத்திற்கேற்ற பெயர்களையும் அப்பாண்டங்கள் கொண்டிருந்தமை கல்வெட்டு வழக்காறுகளால் தெளிவாகிறது. குயவர்கள் மீதான தொழில்வரி, ‘குசக்காணம்’, ‘குசத்திறை’ என அழைக்கப்பட்டது. பல்லவர் காலத்திலிருந்தே இவ்விறைகள் தொழில் சார்ந்த வரியினங்களாகக் கைவினைஞர்களிடமிருந்து பெறப்பட்டமைக்குப் பல சான்றுகள் உள்ளன. குயவர்கள் போலவே பொன் வினைஞர், இரும்பு, தோல் கொண்டு வினையாற்றியவர்கள், துணி நெய்தவர்கள் என அனைத்துத் தொழிலர்களும் தொழில் வரி செலுத்தியுள்ளனர். புறநானூறு, மட்பாண்ட வனைஞர்களை ‘வேட்கோ’ என்றழைத்துப் பெருமைப்படுத்துகிறது. ‘கலம் செய் கோ’ என்றும் மிகு மதிப்புடன் அவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்தம் பிள்ளைகள் புறநானூற்றுப் பாடலொன்றில் ‘வேட்கோச் சிறார்’ என்றே மொழியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தந்தையின் தொழிலுக்குப் பிள்ளைகள் உதவிய காட்சியை இப்பாடல் படம்பிடித்துள்ளது. கலம் செய்யும் பொருட்டு இச்சிறுவர்கள், மண் பிசைந்து கொணர்ந்து, தந்தையின் பானை வனையும் சக்கரத்தின் கண் வைக்க, வேட்கோவர், தம் கருத்துப்படி அம்மண்ணை உருப்படுத்தி, கருதிய கலங்களைச் செய்வாராம். பானை, சட்டி போல, ‘குழிசி’ என்ற சொல் குடத்தைக் குறிக்கப் பயன்பட்டுள்ளது. அகநானூற்றில் இடம்பெறும் இச்சொல், பின்னாள் பயன்பாட்டில் இடம்பெறாது குடமே ஆட்சிக்கு வந்தது. வள்ளுவரின் ‘குடங்கருள் பாம்பு’ சிறந்த ஆளுகையாய் மலர்ந்துள்ளது. மனமொத்து வாழாதார் வாழ்க்கை எப்படியிருக்கும் என்ற கேள்விக்கு வள்ளுவப் பெருந்தகை தந்துள்ள விடையாகவே குடங்கருள் பாம்பு முன் நிற்கிறது. ‘குடம்’ கல்வெட்டுகளில் பரவலாக ஆளப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நிலவிய மூன்று வகை ஊராட்சி அமைப்புகளுள் ‘சபை’ என்பதும் ஒன்று. அந்தணர் வாழ்ந்த ஊர்களை ஆட்சி செய்த அச்சபைக்குரிய உறுப்பினர்களைத் தேர்வு செய்யவே குடவோலைத் திட்டம் செயற்பட்டது. குடத்தில் ஓலையிட்டு ஒன்றுமறியாச் சிறுவன் கொண்டு ஓலை தேர்ந்து, அவ்வோலையிலுள்ள பெயருக்குரியவரே சபை உறுப்பினராயினர். இந்தக் குடவோலைத் திட்டத்தில் பல சீர்மைகளைக் கொணர்ந்தவர் சோழப் பேரரசரான முதலாம் பராந்தகராவார். குடவோலை முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், ஊர் சார்ந்த பல செயற்பாடுகளை கவனிக்கும் முகத்தான் பல வாரியங்களை அமைத்துச் செயற்பட்டனர். ஏரிவாரியம், தோட்ட வாரியம், பொன்வாரியம், கோயில் வாரியம், ஆண்டு வாரியம் எனப் பல வாரியங்கள் அந்தண ஊர் சபைகளில் செயற்பட்டன. எறும்பியூருக்கு அருகிலுள்ள சோழமாதேவி கைலாசநாதர் கோயிலில் உள்ள கல்வெட்டு, வாரியங்கள் பற்றிய விரிவான தகவல்களை முன்வைக்கிறது. குடம், ஓலை எடுக்கப் பயன்பட்டாற் போலவே விளக்கு ஏற்றவும் பயன்பட்டது. குடவிளக்குகளைக் கல்வெட்டுகள் காட்டுகின்றன. இன்றைக்கும் குடவடிவில் அமைந்த விளக்குகள் கோயில்களில் ஏற்றப்படுவது கண்கூடு. ‘குடம்’ சிவிகையின் ஓர் உறுப்பைக் குறிக்கும் சொல்லாகவும் தூணின் ஓர் உறுப்பைக் குறிக்கும் சொல்லாகவும் பெருங்கதையில் கையாளப்பட்டுள்ளது. குடத்தின் வடிவில் அமைந்த தோல்கருவி குடமுழவானது. குடமுழவு வேத்தியல் சார்ந்த தோலிசைக் கருவியாகும். தமிழ்நாட்டுக் கோயில்களில் குடமுழவின் சிற்பங்கள் பரவலாகக் காணக்கிடைக்கின்றன. இறையாடல்களுக்கு மட்டுமே இவ்விசைக்கருவி பயன்படுத்தப்பட்டாற் போலச் சிற்பங்கள் கண்காட்டுகின்றன. மக்களாடல் காட்டும் சிற்பங்களில் குடமுழவைக் காணமுடிவதில்லை. அடியார்க்குநல்லார் சிலப்பதிகாரத்திற்கான தம் உரையின் ஓரிடத்தில், குடமுழவைத் தண்ணுமையாகக் காட்டுவார். சீவகசிந்தாமணி உள்ளங்கையைக் ‘குடங்கை’ என்று குறிக்கும். ‘குடங்கை போலும் கண்கள்’ என்ற ஆட்சியைச் சிந்தாமணியில் பல இடங்களில் காணமுடிகிறது. பதுமையார் இலம்பகம் ‘குடங்கையின் நெடிய கண்ணால் குமரன் மேல் நோக்கினாளே’ என்று கொண்டாடுகிறது. பானையில் தொடங்கிய பயணம் குடத்தின் பயன்பாடுகளில் நிற்கிறது. பானையானாலும், சட்டியானாலும், குடமானாலும் வேறெந்தக் கலமானாலும், அவை பொருள் கொள்ளவே செய்யப்பட்டன. இலக்கியங்கள் கலம் கொண்டிருந்த பொருட்களைக் கண் முன் காட்டுகின்றன. நீர் நிரப்பி வைக்கவும், நெல் நிறைத்து வைக்கவும் பெரிய அளவிலான கலங்கள் பயன்பட்டன. சமைக்கப் பயன்படுத்திய கலங்கள், ‘அடுகலம்’ என்ற பொதுப் பெயரில், பல வடிவுகளில் அமைந்தன. இன்றைக்கு அகழ்வாய்வுகளில் கிடைக்கும் கலங்கள்அன்றைய பயன்பாட்டு நிலைகளை முன் இருத்தி விளக்கினாலும், இலக்கிய அடிகளில் கிடைக்கும் இன்பமே தனி. குறுந்தொகை ‘கலம்’ பற்றிய இரண்டு செய்திகளை முன் வகைக்கிறது. ‘தோழி, என் தோள்களில் முல்லையின் மணம் கமழ்கிறது என்கிறாய். உண்மைதான். சென்ற மாதத்தின் நிறை நிலவு நாளில் இங்கு வந்திருந்த காதலர் என் தோள்களைத் தழுவியதாகச் சொன்னேன் அல்லவா! அந்த நாளில் அவர் முல்லைப்பூ மாலை அணிந்திருந்தார். அந்த மலர்மாலை என் தோளில் பட்டதால், தோள் பெற்ற மணமே நீ நுகரும் இந்த முல்லை மணம். தோழி, அந்த முல்லை மார்பர், யார் தெரியுமா? கள் பெய்யப் பெற்ற வாய் சிறுத்த கலம் போல அமைந்த சிறிய அளவினதான சுனைகளில் தேரைகள் பறை போல் ஒலி செய்யும் நாட்டினர்.’ இந்த முல்லை நிலப் பாடல் வாய் சிறுத்த கலங்கள் கள் நிறைத்து வைக்கப் பயன்பட்டமை காட்டுகிறது. நச்செள்ளையார் காட்டும் மற்றொரு முல்லைக் காட்சியில், காதலன் பல நாட்களாக வரவில்லை. காதலி அவன் நினைவால் வாடி, வருந்தித் தோள் மெலிந்திருந்தாள். அந்தப் போதில் வீட்டுச் சுவரில் வந்தமர்ந்த காக்கை ஒன்று கனிவாய்க் கரைந்தது. காக்கை கரைவது, விருந்தினர் வருவவதைக் குறிப்பதாக நம்பப்பட்ட காலம் அது. காக்கையின் குரலால் தலைவி நிலை குலைந்தாள். மகிழ்வு மென்முறுவலாய் வெளிப்பட்டது. தலைவியின் மகிழ்வு கண்ட தோழி, காதலியின் துயர் நீக்கிய காக்கைக்கு விருந்து வைக்க விழைகிறாள். எப்படிப்பட்ட விருந்து! வலிய தேரினை உடைய நள்ளி என்னும் முல்லை நில அரசனின் காட்டிலுள்ள, இடையர்களின் பல பசுக்கள் வழங்கிய பாலில் திரண்ட நெய்யில், தொண்டி வயல்களில் முற்றி விளைந்த வெண்ணெல் கொண்டாக்கிய, வெண்மையான நெய் சோற்றைப் பிசைந்து, ஒன்றல்ல இரண்டல்ல, ஏழு கலங்களில் நிரப்பி, இனிதே வழங்கிட உளங்கொண்டாளாம் அத்தோழி. காக்கைக்குத்தானே, ஓர் உருண்டை போதாதா என்கிறீர்களா? காக்கைக்குத்தான். ஆனால், அது சாதாரண காக்கையா வாருணி! காதலர் வரவு கூறிக் கரைந்த செல்லக் காக்கையாயிற்றே. அதனால்தான், எழு கல உணவு! நள்ளியின் நெய் பெய்த தொண்டி வெண்சோறு! கொடுத்து வைத்த காக்கை என்கிறாயா? காக்கையை விடு, கலத்துக்கு வருவோம். ‘கலம்’, ‘உண்கலம்’ குறித்தாற் போலவே, நன்கலமும் குறித்தது. ஆம், வாருணி! கலம் பல பொருள் ஒரு மொழி. அது அணிகலத்தையும் குறித்தது. ஆழி அலைகளில் ஆடிவந்த கப்பலையும் குறித்தது. சங்க காலத்து அணிகலன்களில் முத்து பேரிடம் வகித்தது. பரிய பொன்னும், குளித்த முத்தும் சங்கப் பெண்களை மின்ன வைத்தன. எட்டுத் தொகையில் நற்றிணை, குறுந்தொகை, அகம், புறம், ஐங்குறுநூறு, பரிபாடல், கலித்தொகை என்ற ஏழு தொகை நூல்களில் முத்து, முந்தி இடம்பிடித்துள்ளது. பத்துப்பாட்டிலும் மூன்று, முத்து பற்றிப் பேசுகின்றன. சில முத்தான செய்திகள் பார்ப்போமா! ‘கைவல் கம்மியன், கவின்பெறக் கழாஅ மண்ணாப் பசுமுத்து ஏய்ப்ப’ இது நற்றிணை அடி. கைத்தொழில் வல்ல கம்மியன் அழகு பொருந்தக் கழுவுதல் செய்யானாயின் முத்து ஒளி பெறாது. எத்தனை அரிய தகவல் தருகிறது இந்த இலக்கியம்! சங்கத் தொழில்நுட்பம் காட்டும் இந்தச் செய்தி வரலாற்றுச் சிறப்புடையது. அகத்தின் பாலைப் பாடல், இலுப்பையின் பூங்கொத்துக்கள் நிலத்தில் சிதறுவதைப் படம்பிடிக்க முத்தைத் துணைக்கு அழைத்துள்ளது. சேர்த்துப் பிணைத்துள்ள நூல் சிதைந்ததால், நழுவி விழும் துளை பொருந்திய முத்தைப் போல, அந்தப் பூக்கள் விழுந்தனவாம். கண்களிலிருந்து சொரிந்த கண்Ùருக்கும் நூலிற்று உதிரும் முத்துக்களே, எடுத்துக்காட்டாய், அகத்தில் சுட்டப்பட்டுள்ளன. எயினந்தை மகனார் இளங்கீரனாரின் இந்தப் பாடலும் பாலைக் குரியதே. குறுந்தொகையும் அகத்தின் அடியொற்றி ஐம்பத்தோராம் பாடலில், ‘கழிமுள்ளியின் அரிய மலர்கள், காற்றால் சிதறிக் கீழ் விழுந்ததை நூல் அறு முத்தொடுதான்’ உவமித்துள்ளது. முல்லைப்பூதனார் பாடலிலும் நூலறு முத்தே பனித்துளியின் சிதறலுக்கு உவமையாக்கப்படுகிறது. இந்த இரண்டு பாடல்களும்கூடப் பாலைப் பாடல்களே. பாலை பிரிவுக்குரிய திணையல்லவா! அதனால்தான், முத்தும்கூடத் தன்னைப் பிணைத்திருந்த நூலின் நழுவிச் சிதறுகிறது போலும். முத்தைக் குளித்தெடுத்து, கம்மியர் கைகளால் கழுவித் துளையிட்டு வாங்கிச் சரடாய் நூலில் கோத்து மாலையாய்க் கழுத்தில் அணிந்தனர் சங்கப் பெண்கள். எளிய தொழில்நுட்பம் என்றாலும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பான கைநுட்பம் அல்லவா! சங்க முத்து இன்று வரை தொடர்கிறது. கல்வெட்டுகள் முத்துக்களைப் பற்றி நிறைய பேசுகின்றன. முதலாம் இராஜராஜரின் இராஜராஜீசுவரத்துக் கல்வெட்டுகள் முத்துக்களின் வகைகளை முன் வைக்கின்றன. முத்துக்களைத் தனியாகவும், பிற விலையுயர்ந்த கற்களோடு ஒன்றிணைத்தும் செய்யப்பட்ட அணிகலன்களை இராஜராஜீசுவரக் கல்வெட்டுகள் போலவே ஐயாற்றுக் கல்வெட்டுகளும் வலஞ்சுழி சேத்ரபாலர் கோயில் கல்வெட்டுகளும் கனிவோடு சுட்டுகின்றன. ‘முத்து அரிப் பொற் சிலம்பை’ நற்றிணையும் ‘முத்துக்கோல் அவிர் தொடியை’ கலித்தொகையும் காட்டுகின்றன. முத்துப்படு பரப்பு, முத்து விளை கழனி என முத்து வளரும் இடங்களும் இலக்கியங்களில் நேர்ப்படுகின்றன. ‘கொற்கையம் பெருந்துறை முத்து’, காலப் பெருமையது. அந்தப் பெருந்துறை மறப்போர் பாண்டியர் அறத்திற் காக்கும் இடமாம். மதுரைக் கணக்காயனார் அகநானூற்றில் கூறும் செய்தி இது. பாண்டியன் திண்தேர்ச் செழியரைப் பாடும் உறையூர் முதுகூத்தனார், ‘தோளா முத்து’ என்று துளையிடாத புதிய முத்துக்களைச் சுட்டி அத்தகு முத்துக்கள் விளையும் கடலனாகச் செழியனை ஒளிரவிடுகிறார். முத்தைப் போலவே சங்கும் ‘அணி’கலன் செய்யப் பயன்பட்டது. இதுவும் கடல் தந்த விளைச்சல்தான். கல்வெட்டுகள் காட்டும் முத்து வளைகளைப் போலச் சங்கச் செய்யுட்கள், சங்கு வளைகளைப் பற்றிப் பரக்கப் பேசுகின்றன. சங்க இலக்கியங்கள் கொண்டாடிப் பேசும் ஓர் அணிகலம் உண்டென்றால் அது சங்கு வளைதான். வெள்ளிய வளையென்றும், அரத்தால் பிளக்கப் பெற்ற அழகிய வளையென்றும், தொழில் திறம் வாய்ந்த வாளால் அறுத்து அழகு செய்யப் பெற்ற ஒளி பொருந்திய வளையென்றும் சங்கு வளைகள் அகநானூற்றில் போற்றப்படுகின்றன. இந்த வளையணிந்த கைகளும் அந்தக் கைகளுக்குரிய பெண்களும், அவர்தம் காதல், ஏக்கம், மகிழ்வு, கூடுகை, பிரிவு என அலையாடும் உணர்வுப்போதுகளும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வாழ்கையின் சுவடுகள் என்பது உண்மையென்றாலும், இன்றைக்கும் அவை இளகியோ, வீங்கியோ இருக்கத்தான் செய்கின்றன. சங்க இலக்கியங்கள் செம்மாந்து பேசும் இந்தச் சங்கு வளைகள் காப்பிய காலத்தில் குறைந்து, கல்வெட்டுகளின் காட்டலில் காணாமல் போவது காலச் சுழற்சியில் சங்குக்கு நேர்ந்த இழப்புதான் என்றாலும், வளையாகாத நிலையில் முழுதாய், கோயில்களில் ஒலிக்கும் கருவியாய்ச் சங்கு தொடர்ந்து இடம்பெற்றது. தனித்து முக்காலியில் வைக்கப்பெற்றுச் சிற்பக் காட்சியாகவும் பூதவரிகளில் கணங்கள் ஒலிக்கும் இசைக்கருவியாகவும் வெளிப்படும் சங்கு, தொடர்பிழை விடாமல் தொடர்ந்து வந்துள்ளது. கப்பல், அதுவும் கலம்தான். அது குறித்து அடுத்தத் திங்கள் பேசுவோம். அன்புடன், இரா. கலைக்கோவன்this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |