http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 109

இதழ் 109
[ ஜூலை 2014 ]


இந்த இதழில்..
In this Issue..

காவிரிக் கரையிலோர் காவியக் கற்றளி - 6
Kudumiyanmalai - 3
நாகை சட்டைநாதர் மாடக்கோயில்
கடத்தூர் அர்ச்சுனேசுவரர் திருக்கோயில்
இசையால் இசையும் இடைமருதூர் இறைவன்
இதழ் எண். 109 > கலையும் ஆய்வும்
இசையால் இசையும் இடைமருதூர் இறைவன்
பால.பத்மநாபன்
ஒரு இசைக் கருவியிலிருந்து பெறப்படும் இசை, தனியே ஒலித்தாலும் உள்ளத்து உணர்ச்சிகளை உருவாக்கி உள்வாங்கி அதை ஒருமுகமாக்கி வெளிப்படுத்தும் திறன் பெற்றது. அதே இசை ஒரு பாடலுடன் பண்ணுக்கேற்றவாறு பிணைந்து பிறக்கும்போது பரவசம் ஏற்படுகின்றது. அதே இசை ஒரு ஆடலுடன் அளவோடு இணையும்போது, பார்க்கும்,கேட்கும் சூழ்நிலைக்கேற்ப மயக்க வைக்கும், மறக்க வைக்கும் உணர்வுகள் உதயமாகின்றன இந்த இசையுடன் இணைந்த ஆடலும், பாடலும் இறையின் இரு கண்களாக விளங்கின.



அதனால்தான் இறை வழிபாட்டு, 16 அங்கங்கள் கொண்ட ஆகமத்தில் [சோடசோபசாரம்] 14 வது அங்கமாக கீத வாத்தியமும் 15 வது அங்கமாக ஆடலும் வைக்கப்பட்டன (1) எந்த ஒரு இறை வழிபாடும் இசை, ஆடல் இன்றி முடிவடைவதில்லை. இசையும், பாடலும், ஆடலும் இடைமருதூர் இறை முன்பு எவ்வாறு இயங்கின என்பதை கல்வெட்டுகள் வழி காண்போம்.

திருவிடைமருதூரில் இருந்த 151 கல்வெட்டுகளில் 14 கல்வெட்டுகள் அங்கு நடைபெற்ற ஆடல்,பாடல்,இசை பற்றி பேசுகின்றன.

(1)157/1895-{S.I.I-5-Sl.No.721}

முதலாம் பராந்தக சோழனின் 27 ஆட்சியாண்டு {கி.பி.934} கல்வெட்டு, இக்கோயிலில் இருந்த நாடகசாலையில் இக்கோயில் நிர்வாக அலுவலர் குறும்பில் வாசுதேவன் என்பவனும், இக்கோயில் தேவகன்மிகளும், பதிபாத மூலத்தாரும், திரைமூர் சபையினரும், திருவிடைமருதூர் நகரத்தாரும் கூடி எடுத்த ஒரு முடிவினை பற்றி தெரிவிக்கின்றன.

இம் முடிவின்படி, இடைமருதூர் இறைவன் (உற்சவமூர்த்தி) திருஓலகத்து மண்டபத்தில் எழுந்திருக்கும்பொழுது, மூன்று சந்திகளிலும் இறைவன் முன்பு உடுக்கை வாசிக்கும் ஒருவனுக்கு விளங்குடி என்ற ஊரிள்ள அவ்வூர் கோயில் நிலத்தில் 3/4 வேலி நிலம் நிவந்தமாக கொடுக்கப்பட்டது

விளங்குடி என்ற ஊர் திருவிடைமருதூரிலிருந்து சுமார் 7கி.மீ தொலைவில், தென் கிழக்கில் அமைந்துள்ளது. இக்கல்வெட்டு செய்தியிலிருந்து, உடுக்கை இறை முன்பு தனியே வாசிக்கப்பட்டதென உணரலாம்.



உடுக்கை: இதன் இரு பக்கங்களிலும் கன்றின் தோலால் மூடப்பட்டிருக்கும். இதன் உடல் மண், மரம் பித்தளை ஆகியவற்றில் ஏதெனும் ஒன்றில் செய்யப்பட்டிருக்கும். மூடப்பட்டிருக்கும் தோலின் பக்கமே உள்ள சிரு துளைகளின் வழியே நீண்ட கயிற்றிணை நுழைத்து மாறிமாறிப் பின்னி கயிற்றின் நடுவில் நாடாவைப் பொருத்துவர்.இக்கருவியை நடுவில் இடக்கையால் பிடித்துக்கொண்டு வலக்கையால் நாடவை அழுத்தி வாசிப்பர்.(2)

(2)258/1907-{S.I.I-23-Sl.No.258
முதலாம் பரந்தக சோழனின் 30 ஆட்சியாண்டு{கி.பி.937} கல்வெட்டு இக்கோயிலில் இருந்த வரகுண விடங்கர் என்ற உற்சவமூர்த்திக்கும்,இசை கருவிகளை இசைத்த உவச்சர்களுக்கும் வழங்கப்பட்ட நிவந்தத்தை குறிப்படுகின்றது.

இக்கோயிலில் நடைபெற்ற வைகாசித் திருவிழாவில் வரகுண விடங்கர் என்ற இறை மூர்த்த்த்திற்கு மூன்று பொழுதிற்கும்,மற்றும் பள்ளி எழுச்சி எழவும் இவ்வூர் உவச்சர்கள் (இசை கலைஞ்சர்கள்) செண்டை நான்கும்,கைமணி ஒன்றும் ,திமிலை ஒன்றும் வாசிக்க ஒப்புக்கொண்டனர்.

செண்டை வாசிக்கும் நால்வருக்கு ஒரு வேலியும்,திமிலை வாசிக்கும் நபருக்கு 1/2 வேலியும்,கைமணி வாசிக்கும் கலைஞருக்கு 1/4 வேலியும் ஆக அறுவர்க்கும் மொத்தமாய் ஒன்றே முக்கால் வேலி நிலம் நிவந்தமாக வழங்கப்பட்ட்து.

மேலும் வரகுணவிடங்கருக்கு நிவந்தமாய்,திருநறையுர் நாட்டு பிரம்மதேயம் பாரதாயக்குடி என்ற ஊரில் உள்ள சபையினர் ,வஞ்சித்தோட்டம் என்றழைக்கப்பட்ட நிலம் 2 வேலியினை இறையிலியாக விற்றுக்கொடுத்தனர் என்ற செய்தியும் இக்கல்வெட்டில் காணக்கிடைக்கின்றது. கொங்கு நாட்டில் மேற்பார்வையிடும் முதல் பராந்தக சோழனின் அரசியல் அதிகாரி காரி நக்கனார் என்பவர் இக்கல்வெட்டில் குறிப்பிடப்படுகின்றார். கல்வெட்டு ஆங்காங்கு சிதைந்துள்ளதால் இவரின் செய்கை அறியப்படவில்லை

செண்டை: இரு முகங்களும் தோலால் போர்த்தப்பட்ட இரண்டு அடி நீளமும் ஓரடி விட்டமும் கொண்ட கூம்பு வடிவிலான தோற்கருவி. இதனை தோளில் மாட்டியபடி, நின்ற நிலையில் இரு கைகளிலும் மரக்குச்சிகள் கொண்டு இதன் மேல் முகத்தில் முழக்குவர்.(3)

கைமணி: தற்போது வழிபாட்டில் அர்ச்சகர் இயக்கும் கருவி.

திமிலை: இருமுகப் பறையான இத்தோற்கருவியை தோளில் மாட்டியபடி, நின்று கொண்டு இரு கைகளாலும் மேற்புற முகத்தில் அடித்து இசை எழுப்புவர்.(4)



1)264/1907-S.I.I.Vol-23-Sl.No-264

முதலாம் இராஜாதிராஜன் என்ற சோழனின் 32 (கி.பி.1050) ஆட்சியாண்டு கல்வெட்டு இடைமருதூர்கோயிலில் பாடவியம் என்ற இசைக்கருவி வாசிக்கப்பட்டதைப் பற்றி விபரம் தருகின்றது. தோற்கருவியா, நரம்புக்கருவியா, காற்றுக்கருவியா, அல்லது தாளம் போன்ற கஞ்சக்கருவியா என இனம் அறியமுடியாது, தற்போது கல்வெட்டுகளில் மட்டும் வாழ்ந்து கொண்டிருக்கும் பாடவியம் என்ற கருவி இடைமருதூர் கோயிலில் முதலாம் இராஜாதிராஜன் காலத்தில்தான் புகுத்தப்பட்டது. இவ்விசைக்கருவி காலச்சக்கரத்தின் சுழற்சியில் மறைந்து வழக்கொழிந்துவிட்டது இவ்விசைக்கருவி சோழர் காலத்தில் ஒரு சில கோயில்களில்தான் இசைக்கப்பட்டன. முதலாம் இராஜராஜன் கட்டிய தஞ்சை பெரிய கோயிலில் முதலாம் இராஜராஜன் காலத்தில் இவ்விசைக்கருவியை வாசிக்க நால்வர் பணியில் இருந்தனர்.

திருவிடைமருதூர் கோயிலினுள், திருவிடைமருதூர் நகரத்தாரும், திரைமூர் சபையினரும், திரைமூர் ஊராரும், கோயில் தேவகன்மிகளும், கோயில் பதிபாதமூலப்பட்டுடை பஞ்சாரியப் பலபணி நிவந்தக்காரரும் கோயில் செயல் அலுவலரான விக்கிரமகேசரி விழுப்பரையனும் கூடி இருக்க , இராஜாதிராஜதேவர் பெருந்தனத்து காந்தவர்களில் (படைப்பிரிவிலுள்ள பாடகர்கள்) ஒருவன் அரையன் திருவிடைமருதூருடையானான மும்முடிசோழ நிருத்தப்பேரையன் என்பவனுக்காக இவனின் தமையன் அரையன் திருவெண்ணாவலான சோழகுல நிருத்தப்பேரையன் என்பவன் அரச ஆணையை கொண்டு வந்துகொடுக்க, கூட்டத்தினர் அவ்வோலையைத் தலைமேல் தாங்கி பின் வாசித்தனர்.

இடைமருதூர் கோயிலில் அதுவரை பாடவியம் வாசிக்கப்படாமையால் ,நிவந்தம் ஏற்படுத்தப்படாமலிருந்த்து என்ற விபரம் தெரிவித்து ,பாடவியம் வாசிக்க அரையன் திருவிடைமருதூருடையானான மும்முடிசோழ நிருத்தப்பேரையன் என்பவனை நியமித்து அவனும் அவன் சந்ததியினரும் பயன்பெற நிவந்தம் வழங்கப்பட்டது. பாடவியம் வாசிக்க தினம் 2 தூணி (8 மரக்கால்) நெல் வீதம் ஆண்டு ஒன்றுக்கு 240 கலம் (12 மரக்கால் கொண்ட்து ஒரு கலம்) வழங்க, திருவிடைமருதூர் கோயிலின் தேவதானமாக விளங்கும் விளங்குடி என்ற கிராமத்திலுள்ள 7 வேலி நிலத்தில் 2 வேலி நிலம் வழங்கப்பட்டது. இதனுடன் விளங்குடி கிராமத்தில் 2 மனைகளும் ஒதுக்கப்பட்டன.

பல கோயில் கல்வெட்டுகள் பல வகையான இசைக் கலைஞர்களுக்கு வழங்கப்பட்ட நிவந்தங்களின் அளவை எடுத்துரைக்கின்றன. அவைகளுடன் இவ்விசைக் கலைஞருக்கு வழங்கப்பட்ட நிவந்தத்தின் அளவை ஒப்பிட்டு பார்த்தால் இவனுக்கு வழங்கப்பட்ட நிவந்தம் மிக அதிகமாக தெரிகின்றது. பாடவியம் பற்றி தெரிவிக்கும் கல்வெட்டு மிகக் குறைவாக காணப்படுவதால் இக்கருவி அரிதாக இசைக்கப்படும் இசைக்கருவி எனத்தெரியவருகிறது. அதனால்தான் இவ்விசை கலைஞனுக்கு நிவந்தம் அதிகமாக வழங்கப்பட்டது என உணரலாம். .

இப்பாடவியத்தை வாசிப்பவன் பெருந்தனத்து காந்தவர்களில் ஒருவனாக கல்வெட்டு குறிப்பதால் இவன் செவி இனிக்க பாடல்களையும் பாடுபவன் எனத்தெரிய வருகிறது. மேலும் இவன் படைப்பிரிவிலிருந்து விலகி தன் நிலங்கள் உள்ள ஊரான் திருவிடைமருதூரில் கோயில் பணி பார்க்க வருவது என்பது இவனின் வயதான நிலையைக் குறிப்பதாகக் கருதலாம்.

2)142/1895-S.I.I.Vol-5-Sl.No.706

குலோத்துங்க சோழனின் 12 ம் ஆட்சியாண்டு கல்வெட்டு இக்கோயிலில் உடுக்கை வாசித்ததைப் பற்றி தெரிவிக்கின்றது. எண்ணரியான் என்பவன் இக்கோயிலில் உடுக்கை வாசித்து அதற்கு நிவந்தமாக நிலம் பெற்றான்.

3)223/1907-S.I.I.Vol.-23-Sl.No-223

முதலாம் பராந்தகச் சோழனின் ஆட்சியாண்டு தெரியாத(ஆட்சியாண்டு பொறிக்கப்பட்ட இடம் சேதமடைந்த்தால்) கல்வெட்டு ஒன்று தலைக்கோலி ஒருவரை சுட்டுகின்றது இத்தலைக்கோலி 9 மா நிலத்தை இக்கோயிலுக்கு கொடையாக வழங்கியுள்ளார். இக்கல்வெட்டு மிகவும் சேதமடைந்துள்ளதால் மற்ற விபரங்கள் அறிய இயலவில்லை.

விறலியர் என்றும் ஆடுகளமகளிர் என்றும் சங்ககாலத்தில் அழைக்கப்பட்ட ஆடல்மகளிர், சங்கம் மருவிய காலத்தில் கூத்தி என்றும் நாடகக்கணிகை என்றும் அழைக்கப்பட்டனர் கூத்தி என்ற சொல் பல்லவர்,முற்சோழர் காலம்வரை தொடர்ந்தாலும், முற்சோழர் கால கோயில்கள் சில இவர்களை இத்தளிக் கூத்தப்பிள்ளைகள் என்றே அழைக்கின்றன. சோழர்கள் காலத்தில் ஆடல் மகளிர் தளியிலார், பதியிலார், தலைக்கோலி, தளிச்சேரி பெண்டுகள் எனவும் அழைக்கப்பட்டனர். ஆடற்கலையில் தளியிலாரைக்காட்டிலும் பதியிலார் மேம்பட்டவர்களாக விளங்கினர் என்பதை பல கல்வெட்டுகள் உணர்த்துகின்றன.(1) பதியிலார் அரசர்கள் முன்பும் இறைவனுக்கு முன்பும் கோயிலில் ஆடுவர். தளியிலார் இறைவன் வீதிஉலா வரும்போது ஆடல் புரிவர். தலைக்கோலிகளாக பட்டம் பெற்றவர்கள் பெரும்பாலும் பதியிலாராக இருந்தமையை சில கல்வெட்டுகள் சுட்டுகின்றன.

ஆடற்கலையில் சிறந்து விளங்கும் நங்கைக்கு தலைக்கோலி, தலைக்கோல் அரிவை என்ற பட்டங்கள் ச்ங்கம் மருவிய காலத்திலேயே வழங்கப்பட்டன. தலைக்கோல் செய்யப்பட்டவிதம், ஊர்வலமாக எடுத்துவரப்பட்டவிதம்,தலைக்கோல் பரிசுளிக்கப்பட்டபோது எடுக்கப்பட்டவிழா ஆகியவற்றை விபரமாக சிலப்பதிகாரம் படம்பிடித்து காட்டுகின்றது.(2)

இப்படி ஆடற்கலையில் சிறப்புபெற்ற தலைக்கோலி பட்டம் பெற்ற ஆடற்மகளிர் பலரும் இக்கோயிலில் இருந்துள்ளனர்.

4)221/1907-S.I.I.Vol.No.-19-SL.No-344

பரகேசரிவர்மன் என்ற பட்டம் சூட்டிக்கொண்ட சோழனின் 14 ம் ஆட்சியாண்டு கல்வெட்டு இக்கோயிலில் தினமும் நடந்த வைகறை ஆட்டத்தைப் பற்றி தெரிவிக்கின்றன. இக்கோயிலில் தினமும் அதிகாலையில் இறைவன் முன்னால் ஆடல் மகளிரால் ஆட்டம் நிகழ்த்தப்பட்டது. இவ்வாட்டத்தின்போது கொடுமுடி அரங்கனான பகுல விடங்கன், முருகம்பட்டமுடையானான ஐஞ்நூற்றுப் பேருவச்சன் உள்ளிட்ட 10 நபர்கள் இசை இசைத்தனர். இவர்களுக்கு நிலதானம் வழங்கப்பட்டது.

இந்த வைகறை ஆடலில் , ஆடல் மகளிர் எத்தனைபேர் கலந்துகொண்டனர் என்ற விபரமும் என்னென்ன வகையான இசைக்கருவிகள் வாசிக்கப்பட்டன என்ற விபரமும் இக்கல்வெட்டில் இல்லை. அதிகாலையிலே பத்து இசைக்கருவிகள் எழுப்பும் .இசை ஒலியும், இசை தாளத்திற்கு ஏற்ப கலிர்,கலிர் என சலங்கை ஒலி கேட்க ஆடப்படும் ஆடலும் இறைவன் முன்னால் நிகழ்த்தப்பட்டதையும் சற்றே கற்பனை செய்துபாருங்கள். இடைமருதூர் இறைவனோடு இசையும், ஆடலும் எவ்வாறு இணைக்கப்பட்டிருந்தன என்பதனை உணரலாம்.

5)234/1907-S.I.I.Vol.No-19-Sl.No181

உத்தமசோழனின் 7வது ஆட்சியாண்டு கல்வெட்டு, இக்கோயிலில் பாடப்பட்ட தேசி பாடலையும், அப்பாடல் பாடியவருக்கு வழங்கப்பட்ட நில தானத்தையும் பற்றி விபரம் தருகின்றது..இடைமருதூர் இறைவன் திருவோலகத்தில் எழுந்த்ருளியபொழுது ,எழுபணைதேவன் என்பவன் இறைவன் முன் தேசி பாடல்கள் பாடினான் இத்தேசி பாடல்கள் என்பது என்ன என்பதைப்பற்றி சுருங்கக் காண்போம்.

அக்காலத்தில் கூத்து சாந்தி, விநோதம் என இருவகையாய் பிரிக்கப்பட்டிருந்தது. சாந்திக்கூத்து சொக்கம், மெய், அவிநயம், நாடகம் என நான்காக பிரிக்கப்பட்டிருந்தது. இதில் சொக்கம் என்பது 108 கரணங்கள் கொண்டது. இதை சுத்த நிருத்தம் என்றும் அழைப்பர்

மெய் என்பது அகச்சுவை பற்றித் தெரிவிக்கும் ஆடலைக்கொண்டது. இது மூன்று உட்பிரிவுகள் கொண்ட்து.அவை தேசி, வடுகு, சிங்களம் ஆகும். இவை மூன்றும் அகச்சுவையை தெரிவிக்கும் ஆடலையும் ,பாடலையும் கொண்டதாகும் அவிநயம் என்பது கதை தழுவாது பாடப்பட்ட பாட்டிற்கு ஏற்ப கை,கால்களில் அபிநயம் பிடித்து ஆடப்படுவது. நாடகம் என்பது கதை தழுவி வரும் பாட்டிற்கு ஆடப்படுவது..(3)

இக்கல்வெட்டில் காணப்படும் தேசி பாடல் என்பது மெய் கூத்தின் உட்பிரிவாகிய தேசி கூத்தின்போது பாடப்படும் அகப்பாடலாகும். இப்பாடலைதான் இடைமருதூர் இறைவன் முன்பு இக்கல்வெட்டு குறிப்படும் எழுபணைதேவன் பாடியுள்ளான். இதற்கு இவனுக்கு 1 வேலி நிலம் விளங்குடி என்ற கிராமத்தில் வழங்கப்பட்டது.

6)213/1907-S.I.I.19-SlNo.92

உத்தமசோழனின் 4 ம் ஆட்சியாண்டு இக்கோயிலில் உள்ள த்லைக்கோலியை பற்றிய தகவலை தருகின்ற்து. இக்கல்வெட்டு மிகவும் சிதைந்துள்ளதால் தலைக்கோலியின் பெயரைத் தவிர மற்ற விபரங்கள் சரியாக அறிய இயலவில்லை.இக்கல்வெட்டு குறிப்பிடும் தலைக்கோலியின் பெயர் நக்கன் ஆச்சிநங்கையான இரண்டாயிரன் .என்பதாகும்.

7)154/1895-S.I.I.Vol.5-S.No-718

ஆதித்த கரிகாலனின் 4 ம ஆட்சியாண்டு கல்வெட்டு இக்கொயிலில் நட்த்தப்பட்ட ஆரியகூத்தைப் பற்றியும் அது எந்தெந்த நாளில் நடத்தப்பட்டது என்பதைப் பற்றியும் விரிவாக் தெரிவிக்கின்றது. இடைமருதூர் கோயிலில் உள்ள நாடகசாலையில் கோயில் செயல் அலுவலரான சிற்றிங்கண் உடையான் கோயில் மயிலையான பராந்தக மூவேந்தவேளாரும், திரைமூர் நாடுடையாரும், திருவிடைமருதூர் நகரத்தாரும், கோயில் தேவகன்மிகளும் கூடியிருந்து ஆரியக்கூத்து நடத்துபவனுக்கு வழங்கப்பட வேண்டிய நிவந்தம் குறித்து விவாதிக்கின்றனர்

இதன்படி இக்கோயிலில் தைப்பூசத்திருநாள்ன்று ஆரியக்கூத்தாடவும், இதற்கு மறுநாள் தொடங்கி மூன்று நாள் தொடர்ந்து கூத்து நட்த்தவும், பின்பு வைகாசித் திருவாதிரைக்கு மறுநாள் தொடங்கி மூன்று நாள் தொடர்ந்து ஆரியக்கூத்தாடவும் ஆக மொத்தம் 7 நாள் நடத்தவும், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அங்கம் நடத்தவும் கூத்தாடும் கீர்த்தி மறைக்காடனான திருவெள்ளறைச் சாக்கைக்கு 1 வேலி நிலம் காணியாக விளங்குடி என்ற கிராமத்தில் வழங்கப்பட்டது. மேலும் இக்கூத்து நட்த்தும் குழுவில் உள்ளோர் ஒரு குடும்பமாக அமைந்த பணியாளர் தொகுதியாக உள்ளதால் கோயில் பண்டாரத்தே 16 கலம் நெல்லும் கொற்றாக வழங்கப்பட்டது.

குறிப்புகள்

(1) சோழர் கால ஆடற்கலை-இரா.கலைக்கோவன்
(2) சோழர் கால ஆடற்கலை-இரா.கலைக்கோவன்
(3) சோழர் கால ஆடற்கலை-இரா.கலைக்கோவன்this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.