![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1800 Articles] |
Issue No. 111
![]() இதழ் 111 [ செப்டம்பர் 2014 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
தொடர்:
தமிழ் அமுதம்
அன்புள்ள வாருணி,
கதவுகளுக்கு முன்னால் காக்க வைத்துவிட்டீர்களே என்று கேட்டிருக்கிறாய். காத்திருப்பது சுகம்தானே! எந்தக் கதவுக்கு முன்னால் யாருக்கான காத்திருப்பு என்பதில்தான் அந்தக் காத்திருப்பு சுகமா அல்லவா என்பது வெளிப்படும். அப்பர் வாழ்க்கையில் அப்படி ஒரு காத்திருப்பு மறைக்காட்டுக் கதவுகளுக்கு முன்னால் நிகழ்ந்ததல்லவா! திருமறைக்காடு, வங்கக் கடலோரம் அமைந்த நெய்தல் நில ஊர். மறைக்காட்டு ஈசரைக் காண, அப்பரும் சம்பந்தரும் அங்கு வந்தபோது கோயில் கதவுகள் மூடியிருந்தன. சம்பந்தர் வேண்டுகோள் ஏற்று, அப்பர் பெருந்தகை அக்கதவுகள் திறக்குமாறு பாடினார். ‘கண்ணினால் உமைக் காணக் கதவினைத் திண்ணமாகத் திறந்து அருள் செய்ம்மினே’, என்று முதல் பாடலைப் பாடியதுமே கதவுகள் திறந்திருக்க வேண்டும். அப்பரும் அப்படி விரும்பித்தான் ‘திண்ணமாக’ என்ற சொல்லைப் பெய்தருளினார். ‘கண்ணால் உமைக் காண’ என்ற காரணத்தையும் விளம்பி நின்றார். ஆனால், மறைக்காட்டீசரின் நோக்கம் வேறாக இருந்தது. அவர் அப்பரின் தமிழில் தமையிழந்தவர். அதனாலேயே, ‘பாவுற்றலர் செந்தமிழின் சொல்வளப் பதிகத் தொடை பாடிய பான்மையினால், ‘நாவுக்கரசு’ என்று, உலகேழினும் நின் நன் நாமம் நயப்புற மன்னுக’ என்று மருள்நீக்கியை நாவுக்கரசராக்கியவர். ஒரு பாட்டுக்குக் கதவு திறந்தால், தொடர்ந்து கதவு நோக்கி அப்பர் பாடமுடியாது போய்விடுமே என்று கருதியவர், தாள் விலக்காது தவிர்த்திருந்தார். நெடுநாள் திறக்காத கதவுகள் - நெடிய கதவுகள் என்றாலும், அப்பரின் தமிழுக்குத் திறந்திருக்க வேண்டிய கதவுகள். அப்பர், திறக்காமையின் காரணம் புரிந்து கொண்டவராய்த் தொடர்ந்தார். மருத நிலத்து ஊடல் போல, தலைவிக்கு மாற்றாக இறைவன் கதவடைத்துக் காத்திருக்க, தலைவனைப்போல அப்பர் தாள் விலக்கப் பாடி நின்றார். பத்துப் பாடல்கள் கேட்ட பிறகும், நீண்ட மாக்கதவும், பெரிய வான் கதவம், தொலைவிலாக் கதவம், மாறிலாக் கதவம் எனக் கதவின் பெருமைகளை இறைவன் பெருமைகளோடு இணைத்து அப்பர் பாடிய பிறகும், கதவுகள் திறக்காமையால், ‘இரக்கம் இல்லாத எப்பெருமானே விரைந்து திறப்பீர் கதவுகளை’ என்று அப்பர் செல்லமாய்ச் சினந்தார். பதிகத் தமிழில் தாள் திறக்க மறந்து மயங்கியிருந்த மறைக்காட்டீசர் திடுக்கிட்டு விழித்தார். கதவுகள் திறந்தன. இறைவழிபாடு முடிந்ததும் மீளவும் கதவடைக்க சம்பந்தர் பாடினார். பாடல் தொடங்கியதுமே கதவுகள் மூடின. ![]() ‘கபாடம் திறமினோ’ என்னும் அடைத்த கதவுகள் நோக்கிய அகப் பாடல்கள், கலிங்கத்துப் பரணியின் காதல் உச்சம் காட்டுவன. சயங்கொண்டார் பன்னிரண்டாம் நூற்றாண்டுச் சோழர் காதலைச் சொக்கவைக்கும் தமிழில் பாடிய சுந்தரப் பாடல்கள் அவை. இல்லற வாழ்வின் இணையற்ற சுகங்களைக் கதவுக்கு வெளியே நின்று தலைவன் அடுக்கிட, கேட்காதவள் போல் கேட்டு, உள்ளிருக்கும் தலைவி உவப்புக் கொள்ளும் பரணியின் பாடல்கள். ‘கதவு’, இலக்கியங்களில் எப்படியெல்லாம் ஆளப்பட்டிருக்கிறது என்பதற்குச் சிறந்த காட்டுகளாய் அமையும். ‘கதவு’ சங்க இலக்கியங்களிலும் பரவலாய் இடம்பெற்றுள்ளது. பெரும்பாணாற்றுப் படை கழிகளால் கட்டப்பட்ட கதவு காட்ட, மதுரைக் காஞ்சி, ‘நெய் பட சுரிந்த திண் போர்க் கதவு’ மதுரை வாயிலை அலங்கரித்ததாகக் கூறுகிறது. புகாரின் கதவமோ, புலிப் பொறிப்புடன் திகழ்ந்தது. பற்கள் பதித்த கதவுகளும் இருந்தன. சேரவேந்தரான பொறையன், மூவன் என்னும் பகையரசரைப் போரில் வென்று, வலிமயுடைய அவர் பற்களைப் பெயர்த்துவந்து தம் தொண்டி நகர்க் கோட்டைக் கதவுகளில் பதித்துப் பெருமை கொண்டதாகப் பெஹைகயார் சொல்கிறார். பெருங்குழிகள் வெட்டி, அவற்றில் யானைகளை அகப்படுத்தும் வேட்டைக்குக் கூப்பிட்டனுப்பியும் எழினி என்னும் குறுநிலைத் தலைவர் வராமையால், சினங்கொண்ட சோழ அரசர் மத்தி எனும் படைத்தலைவரை ஏவ, அவர் எழினியைப் போரில் வென்று, அவரது பற்களைப் பறித்து வந்து வெண்மணி என்னும் ஊரின் வாயிற் கதவுகளில் பதித்து மகிழ்ந்ததுடன், அவ்வெற்றியின் அடையாளமாக அங்கிருந்த நீர்த்துறையருகே ஒரு நினைவுக் கல்லும் நாட்டியதாக மாமூலனார் கூறுகிறார். நற்றிணையும் அகநானூறும் காட்டும் இந்தப் பல் பதித்த கதவுகளை நீங்கிக் காதல் பக்கம் கண்களை நகர்த்தினால், அகநானூற்றில் ஓர் அற்புதக் காட்சி காணக் கிடைக்கிறது. காவலையுடைய மதில் சூழ்ந்த அகன்ற வீடு அது. அதன் கதவைத் திறக்கிறது ஒரு கை. எப்போது! பேய் உலவும் நள்ளிரவில். காவலர்கள் அந்நேரம்தான் உலவி உலவிச் சோர்ந்திருப்பர் என்று தக்க செவ்வி பார்த்து வந்த கை அது! கதவைத் திறந்ததும் காதலியின் அறையை அடைந்து, அவளுடன் மகிழ்ந்திருந்து, அவள் தலையை நீவி, ‘உன்னைப் போல் அன்பில் சிறந்தவள் உலகில் இல்லை’ என்று கூறி, வேண்டியது பெற்று விடைபெறுகிறது அந்த வலிய கை. குறிஞ்சி நிலத்திலோ கைக்கு வேலையே இல்லை. தாழ் வீழ்த்தாத கதவாம் அது. வருவான் என்று அறிந்து விழைவோடு தாள் நீக்கி நின்ற கதவு. அங்கும் வந்தவன் தலைவியை அணைத்து உரியன சொல்லி உடன் நீங்குகிறான். வாயிற்கதவை விடு வாருணி, ‘மனக்கதவு திறப்போமா’ என்ற மன்றாடல் பார். ‘தலைவன் வருவதும் போவதுமாய் இருக்கிறான். ஊர் பார்த்துக் கொண்டிருக்கிறது. வம்புகள் தோன்றும் முன் வீட்டாரிடம் மனக் கதவு திறப்போமா’ தலைவியிடம் தோழி வேண்ட, கதவு திறந்ததா? காதல் மலர்ந்ததா? குறுந்தொகைதான் சொல்ல வேண்டும். காதலைத் தாண்டியும் கதவுகள் புகழ் பெற்றுள்ளன. ஆம்! கோயில்கள் வளர்ந்த காலத்தில் கதவுகளும் வளர்ந்தன. தாம் வளர்ந்த போக்கில் தம்மில் கதைகளும் வளர்த்தன. நல்லூர்க் கோயிலின் வாயிற்கதவுகள் குறிக்கத்தக்கன. பல்வகைச் சிற்பங்கள். குறிப்பாக அமர்நீதி நாயனாரின் வாழ்க்கை வரலாற்றைச் சுட்டலாம். நாமக்கல் சிங்கப் பெருமாள் கோயிலின் மேற்கு, வடக்கு வாயிற்கதவுகள் இராமாயணக் கதவுகளாய்ச் சிறந்துள்ளன. தமிழ்நாட்டு இராமாயணம் கம்பரையும் வால்மீகியையும் ஒரு புறம் வைத்துச் சொந்தக் கதைகளையும் சேர்த்துக் கொண்டது. சோழர் கால இராமாயணம் சிற்றுருவச் சிற்பங்களாய்த் தஞ்சாவூர் மாவட்டப் புள்ளமங்கை, குடந்தை கீழ்க் கோட்டம், சென்னம்பூண்டிச் சடையாரிக் கோயில்களின் விமானத்திலும் முகமண்டபத்திலும் விளங்க, நாயக்கர் கால இராமாயணம் சுவர், கூரை தேடிப் பொலிந்தது. பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் கோயில்களைத் திருப்பணி செய்த அருளாளர்கள் இராமாயணத்தைக் கதவுகளுக்கும் அழைத்து வந்தனர். மிகச் சில கோயில்களின் கதவுகளுக்கே இராமாயணப் பெருமை கிட்டியது. அவற்றுள் நாமக்கல் கதவுகள் பெருமைக்குரியன. சின்னஞ்சிறு சதுரங்களுக்குள் இராமாயணத்தின் தேர்ந்த காட்சிகளை மரச் சிற்பங்களாய்க் காட்டியிருக்கும் அழகு பார்த்தால்தான் விளங்கும். ஆனால், பார்க்க வேண்டுமே! கோயிலுக்குள் நுழைந்தால் இறைவனிடம் விண்ணப்பங்கள் வைக்கவே நமக்கு நேரம் போதவில்லை. கண்களை மலர்த்திக் கதவுகளைப் பார்ப்பது எங்கே! கோயில்கள் பார்ப்பதற்கும் பழகுவதற்கும்தான். பார்த்தால் மகிழவைக்கும். பழகினால் கூடவரும். வாழ்க்கை அங்கே விதைக்கப்பட்டிருக்கிறது. விதைகளைத் தேடிட விழிகளைத் திறக்கவேண்டும். தெரிந்த விழிகளே தேடியது பெறும். பார்வைகள் பற்றியும் அந்தப் பார்வைகள் பிறந்த கண்களைப் பற்றியும் அந்தக் கண்களில் தெறித்த காட்சிகள் பற்றியும் தொடர்ந்து காண்போம். அன்புடன், இரா. கலைக்கோவன்.this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |