http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 114
இதழ் 114 [ டிசம்பர் 2014 ] இந்த இதழில்.. In this Issue.. |
தொடர்:
தமிழ் அமுதம்
அன்புள்ள வாருணி,
தமிழர் வாழ்வியல், கலையோடு கலந்தது. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே தமிழ்நாட்டில் ஓவியம் வரைதல் வழக்கில் இருந்துள்ளமையைப் பல இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஓவியக் காட்சிகள் மெய்ப்பிக்கின்றன. சங்க இலக்கியப் பக்கங்களில் தமிழர் வாழ்க்கையோடு இணைந்த நிலையில் அவர்தம் கலையாற்றலும் பதிவாகியுள்ளது. பத்துப்பாட்டு இலக்கியங்களுள் ஒன்றான நெடுநல்வாடையில் பாண்டிய அரசன் நெடுஞ்செழியனின் அரசி படுத்திருந்த கட்டிலின் மேற்கூரையில் வரையப்பெற்றிருந்த ஓவியக்காட்சிகள் படமாகியுள்ளன. ஓவியம் வரைவதில் பல செய்முறைகள் கையாளப்பட்டமையைப் பட்டினப்பாலையின் ‘வேறுபட்ட வினை ஓவத்து’ எனும் பாடலடி விளக்கும். பாதிரிப்பூக்களை வண்ணிக்க விழைந்த பெருங்கடுங்கோ எனும் புலவர், அப்பூக்கள் ‘புணர் வினை ஓவமாக்கள் ஒள்அரக்கு ஊட்டிய துகிலிகை’ போல் இருந்ததாகக் கூறுவார். ஓவியம், ஓவமென்றும் வரைந்தவர்கள் ஓவமாக்கள் என்றும் குறிக்கப்பட்டுள்ளமை அறிக. பதிற்றுப்பத்து வினையாற்றலுடன் கட்டமைக்கப்பட்டிருந்த இல்லத்தை ஓவியம் போல் இருந்ததாகக் கூறுகிறது. சிறப்பாக இருந்தவற்றை ஓவியக்காட்சி என விதந்தோதுவது அக்கால மரபாக இருந்தமை பதிற்றுப்பத்தின் மற்றொரு விளம்பலாலும் உறுதிப்படுகிறது. பரிபாடல், பரங்குன்றம் முருகப் பெருமாள் கோயில் மண்டபத்தில் எழுதப்பட்டிருந்த ஓவியக்காட்சிகளை விரிவாக விளக்குகிறது. ‘ஓவியச் செந்நூல்’ என்றொரு வழிகாட்டு நூல் இருந்தமையை உணர்த்தும் மணிமேகலை, ‘சுடுமண் ஓங்கிய நெடுநிலை மனைதொறும் மையறு படிவத்து வானவர் முதலா எவ்வகை உயிர்களும் உவமம் காட்டி வெண் சுதை விளக்கத்து வித்தகர் இயற்றிய கண்கவர் ஓவியம்’ கண்டு நின்றாரையும் பதிவு செய்துள்ளது. உவவனம் என்ற சோலை, ‘வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினைச் சித்திரச் செய்கைப் படாம் போர்த்தது’ போல் இருந்ததாகவும் மேகலை பேசும். தொன்று தொட்டு இந்த மண்ணில் உருவாகி வளர்ந்த ஓவியக் கலையின் சில பதிவுகளே இன்று நம் பார்வைக்குக் கிடைக்கின்றன. வரலாற்றுக்கு முற்பட்ட ஓவியங்கள் பாறைகளிலும் குன்றுகளிலும் அமைய, பெருங்கற்கால வண்ணப்பூக்கள் கலத்துண்டுகளில் பதிவாகியுள்ளன. பல்லவர் ஓவியங்கள் பனைமலையீசுவரர் கோயிலிலும் காஞ்சிபுரம் இராஜசிம்மேசுவரத்திலும் காலத்தால் காக்கப்பட்ட நிலையில் சிலவாகவேனும் காணக் கிடைக்கின்றன. மென்மையான வண்ணங்கள், இயல்பு மாறாத உடலமைப்பு, உணர்வு வெளிப்படுத்தும் தோற்றம் எனப் பல்லவ ஓவியங்களின் மாண்பு மகத்தானது. காஞ்சிபுரம் இராஜசிம்மேசுவரத்தின் சுற்றாலைச் சிறுகோயில்களின் உட்சுவர்களில் சில இத்தகு ஓவியங்களைக் காப்பாற்றிக் கொண்டுள்ளன. முழுமையான நிலையில் ஒன்றேனும் அமையவில்லை என்றாலும் கிடைத்திருக்கும் பகுதிகளே பல்லவர் காலக் கலையாற்றல் காட்டப் போதுமானவையாகத் திகழ்கின்றன. சிற்றண்ணல்வாயில் இளங்கெளதமனின் திருப்பணி. பொதுக்காலம் ஒன்பதாம் நூற்றாண்டில் பாண்டியர் பெற்றிருந்த ஓவியத்திறன் புலப்படுத்தும் அழகிய குடைவரை. முகமண்டத் தூண்களிலும் கூரையிலும் எஞ்சியிருக்கும் ஓவியங்கள் அக்கால ஆடல் திறமும் தாமரைக் குளமும் காட்டுகின்றன. யானைகள், எருமைகள், பலவகை நீர்ப் பறவைகள், தாமரை, குவளளை மலர்கள்,மலர் பறிக்க உலவும் ஆடவர் எனத் தாமரைக் குளம் உயிர்ப்புடன் காட்சிதரும் சிற்றண்ணல்வாயில், அக்கால ஓவியர்களின் வண்ணத்தேர்வு, உடற்கூறியல் அறிவு, விலங்கு, பறவைகள் பற்றிய தெளிவு எனப் பல திறன்களை வெளிப்படுத்தும் வாயிலாக விளங்குகிறது. தூண்களில் திகழும் இரண்டு பெண்களும் பாதிக்குமேல் சிதைந்திருந்தாலும், கிடைத்திருக்கும் பகுதிகளே நம்மை வியப்பிலாழ்த்துகின்றன. ஒன்பதாம் நூற்றாண்டு மகளிர் ஒப்பனை அறிய இவ்விரண்டு ஓவியங்களே போதுமான சான்றென ஆய்வுள்ளம் மகிழ்ந்து நிறைகிறது.நெல்வேலி மாவட்டம் திருமலைப்புரம் குடைவரையிலும் பாண்டியரின் ஓவியச் சிதறல்களைக் காணமுடிகிறது. அது போலவே பட்டூர்க் கைலாசநாதர் கோயிலின் போதிகைகளில் பல்லவர் கால ஓவியச் சிதறல்கள் இன்றும் உள்ளன. தஞ்சாவூர் இராஜராஜீசுவரம், முதலாம் இராஜராஜர் கால ஓவியக்காட்சிகளை இழக்காமல் பெற்றுள்ளது. கருவறைச் சுவரின் புறத்தே நான்கு பெருங்காட்சிகள். ஆலமர்அண்ணல் ஒருபுறம். சுந்தரரை இறைவன் தடுத்தாட்கொள்ளும் வரலாறு அடுத்தாற் போல். மூன்றாம் சுவரில் திரிபுர அழிப்பு. தொடர்ந்து தில்லை வழிபாடு. ஆலமர்அண்ணல் காட்சியில் சுவரளாவிய காடு இடம்பெற்றுள்ளது. அதில் நடுப்புள்ளியாய்த் தென்திசைக் கடவுள். அவரைச் சுற்றியுள்ள இடத்தை மிக நேர்த்தியாகப் பங்கீடு செய்து முனிவர்கள், காடுவாழ் உயிரினங்கள் என அனைத்தும் காட்டியுள்ளனர் சோழ ஓவியர்கள். இந்தக் காட்சியில் குறிப்பிடத்தக்கன மரக்கிளையொன்றில் படரும் பாம்பும், அதைக் கண்டு அஞ்சியோடும் குரங்கும்தான். எத்தகு உயிரோட்டமான காட்சி! தடுத்தாட்கொண்ட வரலாறு திருமணவீடு, வழக்கு மன்று, கோயில்கள், இறைவன் இருப்பிடம் காட்டும் தொகுப்போவியமாய் மலர்ந்துள்ளது. கீழிருந்து மேலாக வரலாற்றுக் காட்சிகளை நகர்த்திச் செல்லும் பாங்கும், நிகழ்வுகளுக்கேற்ப மாந்தர்களிடம் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் உணர்வுகளும் ஓவியக் கைகளின் இணையற்ற ஆற்றல் காட்டுகின்றன. கயிலாயத்தில் நடக்கும் ஆடற்காட்சிக்கும், சேரமானும் சுந்தரரும் பெறும் வரவேற்பின் ஆடற்காட்சிக்கும் இணையே இல்லை. சோழர் ஆடற்கலை, இசைக்கலை, ஒப்பனைக்கலை எழுதுவார் இவற்றைப் பார்த்தால் போதும். இறைவனின் இருப்பும்- அம்மையின் புன்சிரிப்பும் - கண்டு மகிழ்வார் அனைவர்தம் களிப்பும் வண்ணித்துச் சொல்லும் வலிமை தமிழுக்கு இல்லை. காணவேண்டியவற்றை கேட்பது சுகமா நீயே சொல். திரிபுர அழிப்பு சுவர் தழுவிய போர்க்காட்சியாய்ப் படம்பிடிக்கப்பட்டுள்ளது. வலப்புறம் இறைவனின் படை. இடப்புறம் அரக்கரின் எதிர்ப்பு. தேரும் இறைவனும் எழுச்சியுடன் இருந்தாலும், கொதிப்புடன் பூதக் காவலர் கருவிகளுடன் நகர்ந்தாலும், நம்மை உலுக்கி இழுப்பவை இரண்டு கண்களே. எதிர்வரிசையில் தன் கணவனைப் போருக்குப் போகாமல் தடுக்க முயற்சிக்கும் பூவை ஒருத்தியின் கண்கள் அவை. அவலத்தின் உச்சமாய்ச் சரிந்த முகமும் நீர்தேங்கிய விழிகளுமாய் நம்பிக்கையிழந்த ஒரு பெண்! தமிழ்நாட்டுக் கலை வரலாற்றில் துன்பத்தை இதனினும் ஆழ்ந்து சந்தித்த இடம் வேறில்லை. தில்லைக்காட்சி கோயில் மரபுகள் காட்ட, சுற்றுச் சுவர்களில் பல்வேறு படப்பிடிப்புகள். சோழர் கால வாழ்க்கை முறை அறிய இந்தச் சாந்தார நாழியில் சற்றே உலவினால்கூடப் போதும். தமிழர்கள்தான் வரலாற்றை எப்படி எப்படியெல்லாம் பதிவுசெய்துவிடுகிறார்கள். சில பார்த்தவுடன் கிடைக்கும். சில பார்க்கப் பார்க்க விளங்கும். இன்னும் சிலவோ பார்த்தும் சிந்தித்தும் தொடரப் பார்த்தும் புரிந்துகொள்ள வைக்கும். எது வேண்டுமானலும் நட்போடு கை நீட்டவேண்டும். வரலாறு இல்லாத இடமில்லை. தொட்டனைத்தூறும்தானே மணற்கேணி. பார்த்தாயா, கேணி என்றதும் தமிழர் வயல் வளம் வளர்த்த நீர்ப்பாசன முறைகள்தான் கண் முன் நிழலிடுகின்றன. மருதத்தில் சங்கத் தமிழர் தொடங்கிய வேளாண் நுட்பங்கள் சோழர் காலத்தில் பெருவெடிப்பாய் விரிந்தன. நிலச்சீரமைப்பு சோழர் காலத்தில் கோலோச்சினாற் போல் வேறெப்போதும் வீறுபெற்றதில்லை. வயல் வளம் காண தைத் திங்கள் வரவேண்டும். என்ன வாருணி சரிதானே! அன்புடன், இரா. கலைக்கோவன். this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |