http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 115

இதழ் 115
[ ஜனவரி 2015 ]


இந்த இதழில்..
In this Issue..

வயலும் வளமும்
Revolution in Reclamation
பென்னலூர் அகத்தீசுவரர் திருக்கோயில்
ஆக்கூர் தான்தோன்றி மாடம்
தேடலில் தெறித்தவை - 19
ஆய்வுப்பாதையில் ஆங்காங்கே - 9
Kundardarkoil-2
இந்திர விழா
இதழ் எண். 115 > கலையும் ஆய்வும்
ஆக்கூர் தான்தோன்றி மாடம்
இரா.கலைக்கோவன், மு.நளினி
மயிலாடுதுறையிலிருந்து தரங்கம்பாடி செல்லும் வழியில் 16 கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது பாடல் பெற்ற ஊரான ஆக்கூர்.[1] அறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஒருவரான சிறப்புலி நாயனார் வாழ்ந்த[2] இவ்வூரில்தான் கோச்செங்கட்சோழனால் எழுப்பப்பட்ட எழுபது மாடக்கோயில்களுள் ஒன்று விளங்குகிறது.



கோயிலின் கிழக்கு வாயில் சுதையுருவங்களற்ற மூன்று நிலைக் கோபுரத்துடன் அமைய, தெற்கிலும் வாயில் பெற்றுள்ள இக்கோயில் வளாகத்தில், மாடக்கோயில் கிழக்குப் பார்வையில் அமைந்துள்ளது.[3] கோபுரத்தின் வடகோட்டத்தில் திரயச்ர பாதங்களுடன் மார்பின் இடப்புறம் வாளொன்றை அணைத்தபடி வணக்க முத்திரையில் நிற்கும் அதிகாரநந்தி சடைமகுடம், இடச்செவியில் பனையோலைக் குண்டலம், தோள், கை, வளைகள், சரப்பளி, தோள்மாலை, பட்டாடை, இடைக்கட்டு அணிந்து பின்கைகளில் மான், மழு ஏந்தி நிற்கிறார். வலச்செவி வெறுஞ்செவியாக உள்ளது.

கோபுரத்தின் தென்கோட்டத்தில் சிற்றாடை, தாடி, மீசை, பின்கொண்டையுடன் வணக்க முத்திரையில் காட்சிதரும் ஆடவர் கோபுரத்தைக் கட்டியவராகலாம். தெற்கு மதில் சுவரில் தேவார மூவரின் சிற்பங்கள் உள்ளன.

வளாகத்தின் வடபுறம் அம்பலக்கூத்தர் திருமுன்னாக விளங்கிய கட்டமைப்பு தற்போது வெற்றுக் கட்டுமானமாய் உள்ளது. தென்புறம் அம்மன்கோயிலும் மேற்கில் ஒருதள வேசர விமானத்தில் பிள்ளையாரும் ஒருதள நாகர விமானத்தில் சரசுவதியும் உள்ளனர். வடபுறம் ஒருதள நாகர விமானத்தில் சண்டேசுவரர். வடமேற்கு மூலையில் தேர் போன்ற கட்டுமானத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கோயிலில் முருகன் தேவியருடன் காட்சிதர, வாயிலின் வலப்புறம் நக்கீரரும் இடப்புறம் அருணகிரியும் காட்டப்பட்டுள்ளனர்.

அம்பலக்கூத்தர் திருமுன்

கபோதபந்தத் துணைத்தளம், பத்மபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி, நாகபந்தம் பெற்ற சதுரபாதங்களின் மீதெழும் எண்முக அரைத்தூண்கள் சூழ்ந்த சுவர், பூமொட்டுப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள் என அமைந்துள்ள இக்கட்டுமானத்தின் கர்ணபத்திகளில் உள்ள கோட்டங்கள் மகர தோரணங்களால் தலைப்பிடப்பட்டுள்ளன. உருளைத்தூண் அணைப்புடன் பஞ்சர அலங்கரிப்புப் பெற்றுள்ள சாலைப்பத்திக் கோட்டங்கள் வெறுமையாக உள்ளன. இக்கட்டுமானத்தின் முன் பிற்கால முன்றில் ஒன்றுள்ளது.

வெற்றுத்தளம்

விமானம், முகமண்டபம், மண்டபச்சுற்று, பெருமண்டபம், முன்றில் என அமைந்துள்ள இறைக்கோயில் 1. 56 மீ. உயரமுள்ள வெற்றுத்தளத்தின் மீது கட்டப்பட்டுள்ளது. சுற்றுப்புறத் தரை உயர்ந்திருப்பதால் பாதபந்தத் தாங்குதளம் மறைக்கப்பட்ட நிலையில் கண்டத்திலிருந்து வெளித்தெரியும் வெற்றுத்தளம் நான்முக அரைத்தூண்களால் சூழப்பட்ட சுவரும் கூரையுறுப்புகளும் பெற்றுள்ளது.
இத்தளத்தின் சுவர்ப்பகுதியில் ஆங்காங்கே வெறுமையான கோட்டங்கள் உள்ளன.

இந்தக் கட்டுமானம் பெருமண்டபம், முன்றில் இவற்றிற்கு மட்டுமே உள்ளது. இறைவன் விமானம், முகமண்டபம், மண்டபச் சுற்று இவற்றிற்கான வெற்றுத்தளம் பத்மஜகதி மீதெழும் நெடுஞ்சுவரும் கூரையுறுப்புகளும் மட்டுமே பெற்றுள்ளது.
வெற்றுத்தளத்தின் மேல் அமர்ந்திருக்கும் பெருமண்டபத்தை அடைய, தெற்கில் ஏழு படிகளும் கிழக்கில் ஏழு படிகளும் பெற்றுள்ள முன்றில் உதவுகிறது. மணிக்கூண்டு அமைந்துள்ள முன்றில் கூரையை சதுரபாதத்தில் எழும் இந்திரகாந்தத் தூண்களும் முச்சதுர, இருகட்டுத் தூண்களும் பூமொட்டுப் போதிகைகளுடன் தாங்குகின்றன. முன்றிலின் வடகிழக்குப்பகுதியில் கதிரவன் திருமேனியும் இரண்டு பைரவர் வடிவங்களும் உள்ளன.

பெருமண்டபம்

உபானங்கள் பெற்ற பத்மபந்தத் தாங்குதளமும் வேதிகைத்தொகுதியும் பெற்றெழும் பெருமண்டபத்தின் புறச்சுவரை நான்முக அரைத்தூண்கள் தழுவியுள்ளன. வெட்டுத் தரங்கப் போதிகைகள் கூரையுறுப்புகள் தாங்க, மேலே கூடுவளைவுகளுடன் கபோதம். மண்டப வாயிலின் இருபுறத்தும் உள்ள கோட்டங்களில் கரண்டமகுடம், பனையோலைக் குண்டலங்கள், தோள், கை வளைகள், முப்புரிநூல், சிற்றாடை அணிந்து கோரைப்பற்களுடன் காவலர்கள் உள்ளனர். வலக்காவலர் வலக்கையை வியப்பில் காட்டி, இடக்கையை அருகிலுள்ள மழு மேல் நிறுத்தியுள்ளார். அவரது இடப்பாதம் கருவறை நோக்கி அமைய, வலப்பாதம் மழுவின் மேல். இடக்காவலர் வலக்கையால் இறைவனைப் போற்றியவாறு இடக்கையை மழு மீது வைத்துள்ளார். வலப்பாதம் கருவறை நோக்கி அமைய, இடப்பாதம் மழுவின் மேல். இருவருமே இளஞ்சிரிப்புடன் இருப்பது குறிப்பிடத்தக்கது.

கோட்டங்களை அடுத்துள்ள வாயில் ஒட்டிய சுவர்ப்பகுதிகளில் வணக்க முத்திரையுடன் அடியவர் சிற்பங்கள் உள்ளன. வலப்புறம் முதியவரும் இளையவருமாய் இருவர் நிற்க, இடப்புறம் ஆணும் பெண்ணுமாய் இணையர் உள்ளனர். கோயிலார் இவர்களை ஊர்வாரிப் பெருமக்களாக அடையாளப்படுத்தியுள்ளனர். முச்சதுர, இருகட்டுத் தூண்கள் ஆறு வரிசைகளாக அமைந்து பூமொட்டுப் போதிகைகளுடன் பெருமண்டபக் கூரையைத் தாங்குகின்றன. மண்டபத்தின் வடகிழக்கு மூலையில் ஒன்பான்கோள்கள்.

அடுத்துள்ள மண்டபச் சுற்று இறைக்கோயில் வளாகத்தை சூழ்ந்துள்ளது. அதன் கூரையை முச்சதுர, இருகட்டுத் தூண்கள் பூமொட்டுப் போதிகைகளுடன் தாங்குகின்றன. சதுரமுகங்களில் தாமரைப்பதக்கங்கள். சுற்றின் தென்புறத்தே விசாலாட்சி, விசுவநாதர், சங்கிலி- பரவையுடன் சுந்தரர், அப்பர், சம்பந்தர், மாணிக்கவாசகர் இவர்தம் திருமேனிகள் உள்ளன. இவ்வூரில் வாழ்ந்தவரான சிறப்புலிநாயனார் மண்டபம் ஒன்றில் எழுந்தருளியுள்ளார். மேற்கில் முருகன், யானைத்திருமகள், பர்வதவர்த்தனி அமைய, முத்திசைகளிலும் இலிங்கத் திருமேனிகள் உள்ளன.

விமானம்

துணை உபானம், பாதபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி பெற்றெழும் விமானத்தின் சுவர், சதுரபாதங்களின் மீது நாகபந்தங்களுடன் அமைந்த எண்முக அரைத்தூண்களால் தழுவப்பட்டுள்ளது. மேலுள்ள பூமொட்டுப் போதிகைகள் கூரையுறுப்புகள் தாங்க, கூடுவளைவுகளுடன் கபோதம். விமானத்தின் முப்புறத்தும் சற்றே புறந்தள்ளியுள்ள சாலைப்பத்திகளில் உள்ள கோட்டங்களைச் சட்டத்தலை பெற்ற உருளை அரைத்தூண்கள் அணைத்து, கோட்டப்பஞ்சரங்களாய் மாற்றியுள்ளன. தெற்குக் கோட்டத்தில் ஆலமர் அண்ணலும் மேற்குக் கோட்டத்தில் இலிங்கோத்பவரும் வடக்குக் கோட்டத்தில் நான்முகனும் இடம்பெற்றுள்ளனர். விமானம் 4. 95 மீ. பக்கம் உடைய சதுரமாக அமைந்துள்ளது.

சடைமகுடம், மகர, பனையோலைக் குண்டலங்கள், கழுத்தணிகள், தோள், கை வளைகள், முப்புரிநூல், உதரபந்தம், சிற்றாடை அணிந்து முயலகன் மீது வலப்பாதத்தை இருத்தி வீராசனத்தில் உள்ள ஆலமர்அண்ணலின் பின்கைகளில் பாம்பும் தீச்சுடரும். சின்முத்திரையில் உள்ள இறைவனின் வல முன் கை பின்புறம் அமர்ந்துள்ள நந்தியின் கழுத்தின் மீது தாங்கலாக வைக்கப்பட்டுள்ளது. இட முன் கை சுவடி ஏந்தியுள்ளது. இறைவன் இருக்கையின் இருபுறத்தும் பக்கத்திற்கிருவராக முனிவர்கள்.

இலிங்கத்தில் காட்டப்பட்டிருக்கும் கோளத்திறப்பில் இருந்து தொடையளவினராக வெளிப்படும் இலிங்கோத்பவர் பின்கைகளில் மான், மழு ஏந்தி, முன்கைகளைக் காக்கும் குறிப்பிலும் கடியவலம்பிதத்திலும் கொண்டுள்ளார். வலச்செவியில் மகரகுண்டலம், இடச்செவியில் பனையோலைச் சுருள் பெற்றுச் சடைமகுடராய் விளங்கும் அவர் முப்புரிநூல், உதரபந்தம், அரும்புச்சரம், தோள், கை வளைகள், சிற்றாடை அணிந்துள்ளார். இலிங்கத்தின் தலைப்பகுதியைத் தாமரையிதழ்கள் சூழ்ந்துள்ளன. இலிங்கப்பகுதியில் சிவபெருமானின் தலையருகே அன்னமும் இடக்காலருகே பன்றியும் உள்ளன.

பின்கைகளில் அக்கமாலையும் குண்டிகையும் பெற்றுள்ள வடகோட்ட நான்முகனின் முன்கைகள் காக்கும் குறிப்பிலும் கடியவலம்பிதத்திலும் உள்ளன. சடைமகுடம், முப்புரிநூல், சரப்பளி அணிந்து சமபங்கத்தில் நிற்கும் அவரது செவிகளில் குண்டலங்கள்.

இருதள வேசரமாய் விளங்கும் விமானத்தின் ஆரஉறுப்பு களும் இரண்டாம் தளமும் பெரு, குறு நாசிகைகள் பெற்ற கிரீவ, சிகரப்பகுதிகளும் செங்கல் கட்டுமானங்களாய் அமைந்துள்ளன. ஆரச்சாலைகளில் நின்றகோலத்திலும் பெருநாசிகைகளில் அமர்ந்த கோலத்திலும் மேற்கில் விஷ்ணு, வடக்கில் நான்முகன், கிழக்கில் முருகன் இவர்தம் சுதையுருவங்கள் தேவியருடன் இடம்பெற்றுள்ளன. தெற்குச் சாலையில் வீராசனத்திலும் கிரீவகோட்டத்தில் உத்குடியிலும் ஆலமர்அண்ணல் உள்ளார்.

முகமண்டபம்

விமானம் ஒத்த கட்டமைப்பில் உள்ள முகமண்டபத்தின் தெற்குக் கோட்டத்தில் ஆடற்கோலப் பிள்ளையாரும் வடக்குக் கோட்டத்தில் மகிடாசுரமர்த்தினியும் இடம்பெற்றுள்ளனர். ஊர்த்வஜாநு கரணக்கோலத்தில் கரண்டமகுடம், முப்புரிநூல், உதரபந்தம், சிற்றாடை, தோள், கையணிகள் அணிந்து, இடம் புரியாக உள்ள பிள்ளையாரின் பின்கைகளில் அங்குசமும் மோதகமும் உள்ளன. வல முன் கை உடைந்த தந்தம் ஏற்க, இட முன் கை அர்த்தரேசிதமாக வீசப்பட்டுள்ளது.

கரண்டமகுடம், மகரகுண்டலங்கள், அரும்புச்சரம், தோள், கை வளைகள், பட்டாடை இவற்றுடன் மகிடத்தலை மீது நிற்கும் மர்த்தினியின் பின்கைகள் சங்கு, சக்கரம் ஏந்த, வல முன் கை காக்கும் குறிப்பிலும் இட முன் கை கடியவலம்பிதத்திலும் உள்ளன.

முகமண்டபத்தின் தென்சுவரில் சடைமகுடம், தாடி, மீசையுடன் அகத்தியர் சிற்பம் கோட்டமற்ற நிலையில் இடம் பெற்றுள்ளது. வஸ்திர முப்புரிநூல், உதரபந்தம், பட்டாடை இவற்றுடன் சுகாசனத்தில் உள்ள அவரது வலக்கை அக்கமாலை ஏந்த, இடக்கையில் சுவடி. முகமண்டப வடசுவரில் இலிங்க வழிபாடு காட்டப்பட்டுள்ளது. சதுர ஆவுடையார் மீதுள்ள உருளைப்பாணத்தின் மேல் மாலை சுற்றப்பட்டுள்ளது. அருகே வணங்கிய நிலையில் உள்ள ஆடவர் பட்டாடையைக் கீழ்ப்பாய்ச்சாக அணிந்துள்ளார். இவரைக் கோயிலார் கோச்செங்கணானாக அடையாளப்படுத்தியுள்ளனர். அதே வடசுவரில் தளத்தின்மீது நீள் வெறுஞ்செவிகளுடன் சிற்றாடை, முப்புரிநூல் அணிந்து வணக்க முத்திரையிலுள்ள ஆடவர் அடியவராகலாம்.

முகமண்டப வாயிலின் இருபுறமும் வேதிகைத்தொகுதியை ஊடறுத்துத் துணைக்கம்பைத் தளமாய்க் கொண்டுள்ள கோட்டங்களில் காவலர்கள் கருவறைக்காய் ஒருக்கணித்துள்ளனர். சடைமகுடம், கோரைப்பற்கள், குதம்பை, முப்புரிநூல், உதரபந்தம், சிற்றாடை, வீரக்கழல், கால்களுக்கிடையில் இருந்து கணுக்காலுக்காய் நெகிழ்ந்து மேலேறும் மணிச்சரம் பெற்றுள்ள அவர்களுள் தெற்கர் வலக்கையால் போற்றி, இடக்கையை அருகிலுள்ள மழு மேல் தாங்கலாக நிறுத்தியுள்ளார். அருகே படமெடுத்த பாம்பு. இடப்பாதம் கருவறை நோக்கி அமைய, வலக்கால் மழுவின் கத்திப்பகுதி மேல் நிறுத்தப்பட்டுள்ளது. அங்கேயும் ஒரு பாம்பு படமெடுத்துள்ளது. மழுவின் வலப்புறம் அமர் சிம்மம் காட்டப்பட்டுள்ளது. வடக்கர் வலக்கையால் போற்றி, இடக்கையை மழுவின் மீது தாழ்த்தியுள்ளார். அவரது மழுவருகே யானை காட்டப்பட்டுள்ளது. வலப்பாதம் கருவறை நோக்கி அமைய, இடக்கால் பாம்புப் படம் பெற்ற மழுவின் மீது இருத்தப்பட்டுள்ளது.

முகமண்டபம் வெறுமையாக உள்ளது. கருவறையில் இறைவன் இலிங்கத் திருமேனியராய்ப் பிளவுபட்ட பாணத்துடன் காட்சிதருகிறார்.



தனிச்சிற்பங்கள்

கோயில் வளாகத்தின் வடகிழக்கு மூலையில் கிடத்தப்பட்டுள்ள பழைமை நலம் வாய்ந்த சிற்பங்களில் சுகாசனத்தில் உள்ள சோழர் காலச் சண்டேசுவரரின் வலக்கை மழு ஏந்த, இடக்கை தொடை மீது அமர்ந்துள்ளது. பனையோலைக் குண்டலங்கள், சடைப்பாரம், சரப்பளி, சவடி, முப்புரிநூல், தோள், கை வளைகள், உதரபந்தம், சிற்றாடை அணிந்துள்ள அவரது இடையில் இடைக்கட்டு. எழுவர்அன்னையருள் அடங்கும் வராகி, பிராமி உட்பட்ட அறுவர் அன்னையர் சிற்பங்கள் பெரிதும் சிதைந்த நிலையில் வளாகத்தின் வட கிழக்குப் பகுதியில் உள்ளன. நால்வரை இன்னின்னார் என அடையாளப்படுத்தக் கூடவில்லை. கதிரவன் கரண்டமகுடராய்ப் பட்டாடை அணிந்து இருகைகளிலும் தாமரை ஏந்தி நிற்கிறார்.



அம்மன் கோயில்

இறைவன் கோயிலுக்குத் தென்புறத்தே கிழக்குப் பார்வையாக உள்ள வாள்நெடுங்கண்ணி அம்மன் கோயில் விமானம், முகமண்டபம், முன்மண்டபம், பெருமண்டபம் பெற்று அமைந் துள்ளது. கபோதபந்தத் தாங்குதளம், கண்டம், பெருவாஜனம், மேற்கம்பு, எண்முக அரைத்தூண்கள் அணைத்த சுவர், பூமொட்டுப் போதிகைகள் தாங்கும் கூரை கொண்டுள்ள அம்மன் கோயில் விமானத்தின் கீழ்த்தளத்தில் முப்புறத்துமுள்ள கோட்டங்கள் வெறுமையாக உள்ளன.

இக்கோட்டங்கள் இடம்பெற்றுள்ள சாலைப்பத்திகள் புறந்தள்ளலாக அமைய, கோட்டங்கள் பஞ்சரங்களாக அழகுபடுத்தப்பட்டுள்ளன. மேலே உள்ள ஆரமும் இரண்டாம் தளமும் கிரீவ, சிகரமும் செங்கல் கட்டுமானங்கள். இவ்விருதள திராவிட விமானத்தின் முன்னுள்ள முகமண்டபம் இதே கட்டமைப்பில் தெற்கிலும் வடக்கிலும் வெறுமையான கோட்டங்கள் கொண்டுள்ளது. வண்டிக்கூடு அமைப்பிலுள்ள முன்மண்டபமும் அதன் முன்னுள்ள பெருமண்டபமும் பின்னாளையன. கருவறையில் வாள்நெடுங்கண்ணி அம்மன் பின்கைகளில் மலர்மொட்டுகள் கொண்டு, முன்கைகளைக் காக்கும் குறிப்பிலும் அருட்குறிப்பிலும் கொண்டுள்ளார்.

செப்புத் திருமேனிகள்

ஆடவல்லான் உமை

மண்டபச்சுற்றின் வடபுறத்துள்ள திருமுன்னில் ஆடவல்லான், உமை, ஆயிரத்தில் ஒருவர் செப்புத் திருமேனிகள் உள்ளன. இத்திருமுன் பாதபந்தத் தாங்குதளம், வேதிகைத் தொகுதி, நான்முக அரைத்தூண்கள் அணைத்த சுவர், வெட்டுத் தரங்கப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள் கொண்டு ஒருதள நாகரமாக வெற்றுத்தளத்தின் மேல் அமைந்துள்ளது.

கொக்கிறகுகள், ஊமத்தம்பூ, மண்டையோடு விளங்கும் சடைமகுடத்துடன் ஆனந்தத்தாண்டவம் பயிலும் இறைவனின் விரிசடைகளில் வலப்புறம் வணக்கத்துடன் கங்கையிருக்க, இடப்புறம் பாம்பு. நெற்றிக்கண், சவடி, சரப்பளி, உதரபந்தம், சிற்றாடை, இடைக்கட்டு இவற்றுடன் வலக்காலை முயலகன் முதுகில் இருத்தி, இடக்காலை வலப்புறம் வீசியிருக்கும் இறைவனின் பின்கைகளில் உடுக்கையும் தீச்சுடரும் உள்ளன. வல முன் கை காக்கும் குறிப்பில் இருக்க, இட முன் கை வேழமுத்திரையில் உள்ளது. இடச்செவியில் பனையோலைக் குண்டலம். வலச்செவி வெறுஞ்செவியாக நீண்டுள்ளது.

கோரைப்பற்களுடன் இடக்கையில் பாம்பைப் பிடித்தவாறு குப்புறக் கவிழ்ந்துள்ள முயலகனின் வலப்புறத்துள்ள அடியவர் கால்களை முழங்காலளவில் பின்னுக்கு மடித்து அமர்ந்து ஐமுக முழவை வாசிக்க, இடப்புறத்துள்ள அடியவர் இடக்காலைப் பின்னுக்கு மடித்து வலக்காலை முழங்காலளவில் மடக்கி முன்னிருத்தி இலைத்தாளம் இசைக்கிறார். சடை மகுடம், பனையோலைக் குண்டலங்கள், முப்புரிநூல், அரும்புச்சரம், சவடி அணிந்துள்ள முழவர் பின்கைகளில் வியப்புக் காட்டி, முன்கைகளால் முழவை இயக்குகிறார். நிறைந்த அலங்காரத்துடன் விளங்கும் இலைத்தாளர் பெருவயிற்றினர்.

இறைவனின் இடப்புறம் நிற்கும் உமையன்னை வலக்கையைக் கடகத்திலிருத்தி, இடக்கையை நெகிழ்த்தியுள்ளார். கரண்டமகுடம், மகரகுண்டலங்கள், அரும்புச்சரம், சவடி, சரப்பளி, முப்புரிநூல், தோள், கடக, கை வளைகள், பட்டாடை அணிந்துள்ள அன்னையின் மார்பகங்கள் கச்சின்றி உள்ளன.

ஆயிரத்தில் ஒருவர்

தாமரைத் தளத்தில் நெற்றிக்கண், சடைமகுடம், வலச்செவியில் மகரகுண்டலம், இடச்செவியில் பனையோலைச் சுருள், அரும்புச்சரம், முப்புரிநூல், உதரபந்தம், தோள்மாலை, புலிமுகக் கச்சுப் பெற்ற சிற்றாடை, தோள், கடக, கை வளைகள் இவற்றுடன் விளங்கும் சிவபெருமானின் இந்த ஆயிரத்தில் ஒருவர் தோற்றம் பின்கைகளில் மானும் மழுவும் கொண்டு, வல முன் கையைக் காக்கும் குறிப்பில் இருத்திக் காட்சியளிக்கிறது. இட முன் கை அலங்காரம் பெற்ற தடியின்மீது இருத்தப்பட்டுள்ளது. தடியின் மேற்பகுதியில் நாணுதல்களாய் வளைந்துள்ள பழக்கொத்துக்களை அவற்றின் கீழிருக்கும் கிளிகள் கொத்துகின்றன.

ஆக்கூரை ஆண்ட மன்னர் ஒருவர் ஆயிரம் அந்தணர்களுக்கு விருந்தமைத்ததாகவும் அனைவரும் அமர்ந்தபின் எண்ணிப் பார்த்தபோது ஓர் இலை ஆளில்லாமல் இருந்ததாகவும் அப்போது புதிதாக ஒருவர் வந்து அந்த இலையில் அமர்ந்ததாகவும் அவர் புதியவராக இருந்தமையால், ‘நீர் எந்த ஊர்?’ என்று மன்னன் கேட்டதாகவும், ‘யார் ஊரைக் கேட்கிறாய்?’ என்ற கேள்வியுடன் எழுந்த அப்புதியவர் காட்டிற்குள் சென்று மறைந்ததாகவும் மன்னரும் மற்றவர்களும் தொடர்ந்து சென்று பார்த்தபோது காட்டில் புற்றொன்று காணப்படவே மன்னர் அதை வெட்டச் சொல்ல, அங்கிருந்து சிவலிங்கம் வெளிப்பட்டதாகவும் வெட்டிய அந்தக் காயமே ஆக்கூர் கோயில் சிவலிங்கத்தில் இருப்பதாகவும் வெட்டியபோது வெளிப்பட்டவர் புதியவராக வந்த இறைவன் என்பதால் அவருக்கு ஆயிரத்தில் ஒருவர் என்ற பெயர் ஏற்பட்டதாகவும் உள்ளூர்க் கதை ஒன்று ஆயிரத்தில் ஒருவர் செப்புத்திருமேனி உருவானமைக்குப் பின்புலமாக நிலவுகிறது.

கல்வெட்டுகள்

இக்கோயிலில் இருந்து ஆறு கல்வெட்டுகள்4 படியெடுக்கப்பட்டுள்ளன. மூன்றாம் இராஜராஜரின் ஆறாம் ஆட்சியாண்டில் பதிவாகியுள்ள கல்வெட்டு, இக்கோயிலை ஆக்கூரான இராஜேந்திரசிம்ம சதுர்வேதிமங்கலத்தில் இருந்த திருத்தான்தோன்றி மாடமுடையார் கோயிலாக அறிமுகப்படுத்துகிறது. இக்கோயிலில் நந்தாவிளக்கேற்றச் சிலர் நிலக்கொடை தந்தனர். அந்நிலங்களுக்கு நீர்வளம் உண்டாக்கப்பட்டது.

அதே மன்னரின் பதிbனட்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, வைகாசித்திங்களில் இறைத்திருமேனியைக் காவிரியில் நீராட்ட எடுத்துச் செல்வதற்கான சாலை அமைக்கப் பலர் நிலக்கொடையளித்த தகவலைத் தருகிறது. ஊர்ச் செயற்பாடுகளை மேற்கொண்ட சபை அந்நிலங்களை இறையிலியாகப் பதிவுசெய்ய ஆணையிட்டது. இவ்வூரில் உள்ள வைகுந்தநாராயணப் பெருமாள் கோயிலில் இருந்து படியெடுக்கப்பட்டிருக்கும் மூன்றாம் இராஜராஜரின் பதினான்காம் ஆட்சியாண்டு கல்வெட்டு, இராஜராஜ விண்ணகராக அறியப்பட்ட அக்கோயில் எம்பெருமானைத் தான்தோன்றி மாடமுடையார் கோயில் குளத்தில் நீராட்ட, கோயில் நிருவாகிகள் அனுமதி மறுத்தமையில், பெருமாள் கோயில் நிருவாகிகள் கோயிலில் இருந்து காவிரிக்குச் செல்லப் புதிய சாலை ஒன்று அமைத்துத் திருமேனியை எடுத்துச் சென்று நீராட்டியதாகக் கூறுகிறது. இக்கல்வெட்டினால் கி. பி. பதின்மூன்றாம் நூற்றாண்டளவில் இப்பகுதியில் இருந்த சைவ, வைணவக் காழ்ப்புணர்ச்சியை அறியமுடிகிறது.

மன்னர் பெயரற்ற பதினோராம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, ஆடல்அமர்ந்தான் சூரியன் தில்லைமூவாயிரன் கடுமையான நோயிலிருந்து விடுபட்டுக் கொண்டிருந்த நிலையில் இக்கோயிலில் வழிபாடு, படையல் நிகழ்த்த நிலக்கொடையளித்த தகவலைப் பதிவுசெய்துள்ளது.

இரண்டாம் இராஜாதிராஜரின் பதினான்காம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, கோயில் நிருவாகமும் ஊர்ப் பெருங்குறி மகாசபையும் கோயில் வருவாய் பற்றிப் பரிமாறிக்கொண்ட தகவல்களைப் பதிவுசெய்துள்ளது.

சகலபுவன சக்கரவர்த்திகள் கோப்பெருஞ்சிங்கரின் காலத்தில் வெட்டப்பட்டிருக்கும் கல்வெட்டு, அழகிய பல்லவரான வீரப்பிரதாபர் போசளர்களைச் சிறையிலிட்டுப் பாண்டியர்களிடம் திறைபெற்றதாகக் கூறுகிறது. சோழமண்டலத்திற்குத் திரும்பிய அவர் காவிரியின் தென்கரை வழியாகக் கிழக்கு நோக்கித் திருத்தலப் பயணம் மேற்கொண்டதாகவும் வழியில் இருந்த கோயில்களின் அனைத்து நிலங்களையும் இறையிலியாக்கியதாகவும் கோயில்களுக்குத் தேவையான திருப்பணிகளைச் செய்ததாகவும் கூறும் இக்கல்வெட்டு, ஜெயங்கொண்ட சோழ வளநாட்டில் இருந்த ஓர் ஊரில் வீரப்பிரதாபர் தங்கியபோது, அவ்வூர்க் குடிகள் வரிச்சுமை தாங்கமுடியாமல் தத்தம் நிலங்களைத் தரிசாகப் போட்டு வேறு ஊர்களுக்குக் குடியேறிப் போனமையை அறிந்து, அவர்களால் செலுத்தப்படாதிருந்த வரிகள் அனைத்தையும் தள்ளுபடி செய்து அவர்களை ஊர் திரும்பி நிலப் பொறுப்பேற்று நலமுற்றிருக்க அழைத்ததாகவும் கூறுகிறது. நிலங்கள் அனைத்தும் எல்லைகள் சரிபார்க்கப்பட்டுப் புதிதாகப் பதிவுசெய்யப்பட்டன.[5]

கி. பி. 1517ல் வெட்டப்பட்டிருக்கும் கிருஷ்ணதேவராயரின் கல்வெட்டு அவருடைய வெற்றிகளைக் குறிப்பதுடன் ஆக்கூர் கோயில் நிலங்களுக்கான சோடிவரி, சூலவரி, அரசுப்பேறு இவற்றை அரசர் தவிர்த்த செய்தியையும் தருகிறது.

காலம்

விமானத்தின் தற்போதைய கட்டமைப்பு கொண்டு அதன் காலத்தைப் பொதுக்காலம் 12ஆம் நூற்றாண்டாகக் கொள்ளலாம்.

குறிப்புகள்

1. 2: 42; 6: 21. ‘தொல்கோயில்’ என்றும் ‘தான்தோன்றி மாடம்’ என்றும் பாடலடிகள் இக்கோயிலைப் போற்றுகின்றன.
2. ‘சீர்கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்’ என்று திருத்தொண்டர் தொகையில் சுந்தரராலும், ‘வள்ளல் தம்செயல் வாய்ப்ப ஈசர் தாள் நிழல் தங்கினாரே’ என்று திருத்தொண்டர் புராணத்தில் சேக்கிழாராலும் பாராட்டப்பெறும் சிறப்புலி நாயனார் இவ்வூரில் வாழ்ந்து தம்மிடம் வந்த அடியார்களுக்கெல்லாம் உணவு படைத்தே இறையடி சேர்ந்து புகழ் எய்தியவராவார்.
3. ஆய்வு நாட்கள் 26. 11. 1982, 26. 9. 2க்ஷூக்ஷூ9. இக்கோயில் பற்றிய முதல் கட்டுரை, ‘ஆயிரத்தில் ஒருவருக்காய் அமைந்த அழகிய தான்தோன்றி மாடம்’ என்ற தலைப்பில் 1983 ஜனவரி, பிப்ருவரியில் வெளியான தமிழ்ப் பொழில் இதழில் பதிவாகியுள்ளது. ஆய்வுக் காலத்தே உடனிருந்த நண்பர்களுக்குக் கட்டுரையாசிரியர்களின் உளமார்ந்த நன்றி உரியது.
4. Aசுநு 1925: 224 - 229.
5. Aசுநு 1925: 229. யீ. 87.
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.