http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 115

இதழ் 115
[ ஜனவரி 2015 ]


இந்த இதழில்..
In this Issue..

வயலும் வளமும்
Revolution in Reclamation
பென்னலூர் அகத்தீசுவரர் திருக்கோயில்
ஆக்கூர் தான்தோன்றி மாடம்
தேடலில் தெறித்தவை - 19
ஆய்வுப்பாதையில் ஆங்காங்கே - 9
Kundardarkoil-2
இந்திர விழா
இதழ் எண். 115 > கலைக்கோவன் பக்கம்
வயலும் வளமும்
இரா. கலைக்கோவன்
அன்புள்ள வாருணி,

வயலின் விளைச்சல் வீட்டுக்கு வந்து பொங்கல் பொங்கியிருக்கும் என்று நம்புகிறேன்.



‘வயல்’ சங்க வழக்குப் பெற்ற சொல்லா? ஆம் என்கிறது மதுரைக் காஞ்சி. இரண்டிடங்களில் வயலைச் சுட்டும் இவ்விலக்கியம், ஓரிடத்தே ஏற்றம் இறைத்து வயலை நீரால் நனைத்த காட்சி காட்டி, மற்றோர் இடத்தில், எருது உழவு செய்த விளை வயலைப் படம்பிடிக்கிறது. நெடுநல்வாடை அகன்ற வயலிடத்தே நீரால் மிக்கெழுந்த நெல்லின் கதிர் முற்றி வளைந்ததாகக் கூறுகிறது. அகநானூறும் வயல் பற்றிப் பேசுகிறது. பெருந்தலைச் சாத்தனார் வயலும் அதில் முற்றியுள்ள நெல்லும் அது ஆடுவதால் அணைக்கப்படும் வரம்பும் காட்டுகிறார்.



‘வரம்பு’ அழகான சங்கச் சொல். வழக்கில் அது ‘வரப்பு’ எனத் திரிந்தது. வயலும் வரம்பும் பொருளுடைய தொடர். வயல் வரப்பு அத்தகு பொருளில் அமையாத திரிந்த சொற்றொடர். கல்வெட்டுகள் கூட வரம்பையே கொண்டுள்ளன. வரம்பு மீறாமல் வயலுக்குள் ஆடும் கரும்பு பார்க்கக் கீரன் அழைக்கிறார். கொட்டித் தீர்த்த மழை, தூவலைக்கூட நிறுத்திய நேரம். முழுவதுமாய் நீர்ப்பூசி நிறைந்திருக்கும் அந்த வயலில் ஒருபுறம் கரும்பு. அதன் தோகையோ, கோடைக் காலப் பூளைப்பூப் போல வாடைக்காற்றில் அசைகிறது. பகன்றை பசிய இலைகளுடன் புதரென மண்டியிருக்கும் இடத்தில், அவரையின் வளவிய அரும்புகள் விரிகின்றன. ஒருபுறம், ‘தோன்றி’ தன் பூக்களை விரித்துள்ளது. நீர் தளும்பும் அந்த வயலிடத்துக் கிடைப்பன பிடிக்கக் காத்திருக்கும் நீர்ப்பறவைகளின் ஒலி விழாக்கால ஓசையென ஊரை நிறைக்கிறது.



வாருணி, இந்த வயல் வளத்தை மழை மட்டும் கொண்டா காணமுடிந்தது! ஆறுகள் ஒருபுறம். தேவைக்கேற்ப மக்கள் அகழ்ந்து கொண்ட குளங்கள், கிணறுகள், ஏரிகள் ஒருபுறம். காவிரியைப் பற்றியும் வையை பற்றியும் சிலப்பதிகாரம், பரிபாடல் முதலிய இலக்கியங்கள் பல செய்திகளை முன்வைக்கின்றன. ‘உலகு புரந்தூட்டும் உயர் பேர் ஒழுக்கத்துப் புலவர் நாவில் பொருந்திய பூங்கொடி, வையை என்னும் பொய்யாக் குலக்கொடி’ என்று புறஞ்சேரியிறுத்த காதையில் வையை நதியின் பெருமை பேசுவார் இளங்கோவடிகள். காவிரியோ இலக்கியப் பரப்புகளில் இணையற்ற இடம் பிடித்துள்ளது.

நீர் வயல்களுக்கு வளமளித்தாற் போலவே அழிவுக்கும் காரணமாக இருந்தது. நதிக்கரை ஊர்கள் பலவும் ஆற்று வெள்ளத்தால், வயல்களில் மணலடித்து வளமிழந்த வரலாறு சோழர் காலக் கல்வெட்டுகளில் துன்பியல் நாடகம் போல் சொல்லப்பட்டுள்ளது. அல்லூர் நக்கன் கோயில், திருச்செந்துறைத் திருக்கோயில் ஆகியவற்றில் காணப்படும் பத்தாம் நூற்றாண்டுக் கல்வெட்டுகள் சில, காவிரியின் வெள்ளத்தால் வளமிழந்த நிலங்களைச் சுட்டுகின்றன.



திருவரங்கம் அரங்கநாதர் கோயில் தமிழ்நாட்டிலேயே அதிக அளவில் கல்வெட்டுகள் பெற்ற கோயிலாகும். இங்குள்ள 600க்கும் மேற்பட்ட கல்வெட்டுகளில் 172 சோழர் காலத்தவை. அவற்றில், 83 கல்வெட்டுகள் முதற் குலோத்துங்கரின் ஆட்சிக் காலத்தன. அந்த 83இல் பெரும்பாலன காவிரியின் வெள்ளத்தால் அரங்கர் மடைப்பள்ளி ஊர்களின் நிலங்களுக்கு நேர்ந்த அழிவை முன்நிறுத்திப் பேசுகின்றன. இக்கல்வெட்டுகளின் மிகப்பெரும் சிறப்பு இழப்பை மட்டும் சுட்டாமல், குலோத்துங்கர் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நிலச்சீர்மை பேசுவதே ஆகும். மணலடித்த தண்டுறை, காரைக்குடி நிலங்களை அரசும் கோயிலும் கையிணைத்துப் போர்க்கால நடவடிக்கை போலச் சீரமைத்து மீண்டும் விளைச்சலுக்குக் கொணர்ந்த பெருமுயற்சி காலத்திற்கும் வழிகாட்டவல்லது.

பாழ்பட்ட நிலங்களை விளைவுக்குக் கொணர வாய்ப்பாக நிலவிலையைக் கருணை விலையாக அறிவித்தது திருவரங்கம். ஒரு வேலி ஒரு காசு. நிலவரிகள் நீக்கப்பட்டு, குடிமை வரி என்ற பெயரிலமைந்த ஆள் உழைப்பும் குறைக்கப்பட்டது. பயிர் விளையும் காலத்துப் பயிர் பார்த்து வரி கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த வரியும் வேலிக்கு எட்டுக் கலமாகவே அமைந்தது. குலோத்துங்கரின் தேவியர் சிலரும், படைத்தலைவர்கள் பலரும், அரசு அலுவலர்கள் எண்ணிறந்தாரும் அவர்தம் பணியாளர்களும் நிலங்களை வாங்கினர். உழுகுடிகளால் சீர்மை செய்யப்பட்ட அந்நிலங்களுள் பெரும்பான்மையன பூந்தோட்டங்களாயின. தமிழ்நாட்டில் வேறெந்தக் கோயிலும் சோழர் காலத்தில் திருவரங்கம் கொண்டிருந்த அளவிற்குப் பூந்தோட்டங்கள் பெற்றிருக்கவில்லை. இந்நிலந்திருத்தல் உழுகுடிகள் பலருக்கு வேலை வாய்ப்பளித்தது. 30க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகள், 8 படைத்தலைவர்கள் வரலாற்று வெளிச்சத்திற்கு வந்தனர். சோழர் காலத்தில் நிலச் சீர்மை, நிலம் அளவிடல், நிலப்பரப்பு வளர்த்தல் எனப் பல்வகையான முயற்சிகள் மண்ணின் வளம் கூட்ட மேற்கொள்ளப்பட்டன. எனினும், குலோத்துங்கர் காலத்தில் அரங்கத்தில் நிகழ்ந்த நிலந்திருத்தல் பணிக்கு இணையான ஒரு முயற்சியைச் சோழர்வரலாற்றின் எந்தப் பக்கத்திலும் காணமுடியாமை அரங்கத்திற்கும் குலோத்துங்கருக்கும் வாய்த்த பெருமையாகும்.

தமிழர்களுடைய பாசனப் பொறியியல் சோழர் காலத்தில் செம்மையுற்று உயர்ந்தது. சோழர் கல்வெட்டுகளில் குளம் தொடர்பான கலைச்சொற்கள் மட்டும் 25க்கு மேல் கிடைத்துள்ளன. சங்க நூல்களில் சொல்லப்படும் குளக்காவல், சோழர் காலத்திலும் தொடர்ந்ததைக் குளச்சுவந்திரம் என்ற விளைச்சல் பங்கு உணர்த்துகிறது. குளங்களைப் பராமரிக்கக் குளப்பட்டியாக நிலங்களும் இருந்தன. மாக்கலம் என்ற வரியினம், அதாவது ஒரு மா அளவுள்ள நிலத்திற்கு ஒரு கலம் விளைவு குளப் பராமரிப்புக்காக எறும்பியூரில் பெறப்பட்டது.

குளங்களிலிருந்தும் ஏரிகளிலிருந்தும் வாய்க்கால்கள் குமிழி வழி நிலத்தை அடைந்தன. ஆற்றிலிருந்து தலைவாய் வழியாகப் பெரு வாய்க்கால்களும் அவற்றிலிருந்து ஊர்களுக்குச் சிறு வாய்க்கால்களும் உள் நிலங்களை நனைக்க உட்சிறு வாய்க்கால்களும் அமைந்தன. நாட்டுக்குப் போன வாய்க்கால் நாட்டு வாய்க்காலாகவும் பிரமதேயங்களுக்கு நீரெடுத்துச் சென்ற கால்கள் பிரமதேய வாய்க்கால்களாகவும் அறியப்பட்டன. வேளான் ஊர்களின் வாய்க்கால்கள் அந்தந்த ஊர்களின் பெயராலேயே வழங்கப்பட்டன. அந்தண ஊர்களின் வாய்க்கால்களும் வதிகளும் அரசர், அரசியர், இறைப் பெயர்கள் ஏற்றன. தேவைக்கேற்ப புதிய வாய்க்கால்கள் வெட்டப்பெற்றன. நீர், தேவைக்கேற்ப வழங்கப்பட்டது. நீர்நிலைகளின் பராமரிப்பிற்கு ஆளுழைப்பு கட்டாயமாக்கப்பட்டிருந்தது. வெட்டி, வேதினை, ஆளமைஞ்சி என்பன இத்தகு உழைப்புச் சுட்டும் கல்வெட்டுக் கலைச்சொற்களாகும்.

நிலவளம், நீர்வளம் போல வரிவளமும் மிகைப்பட்ட காலம் சோழர் காலம். நிலஞ்சார்ந்து தண்டப்பெற்ற இந்த வரிகளைக் கணக்கீடு செய்யச் சோழர் காலத்தில், குறிப்பாக முதலாம் இராஜராஜர் காலத்தில் மிகச் சிறந்த திணைக்கள அமைப்பு உருவானது. மேலாண்மை நிருவாகம் இராஜராஜரின் ஆட்சியில் செவ்வையாக இருந்தமையால்தான் சோழராட்சி பேரரசாக விரிந்தது. இராஜராஜீசுவரம் தஞ்சாவூரில் விண்தடவி வளர இயன்றது. சொல்லப்போனால், நீர்பொசிய நெல் உயர்ந்தது. நெல் உயர வாழ்க்கை வளர்ந்தது. வாழ்க்கை வளம் பெற்றதால் தமிழர் தொட்டதும் அவர்தம் கண்ணில் பட்டதும் அமிழ்தானது. மகிழ்வால் நிறைந்த உள்ளம் தமிழமுதம் உண்டு தெய்வதம் கண்டது. தமிழ் அமுதம்தானே வாருணி.

அன்புடன்,
இரா. கலைக்கோவன்.
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.