![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 116
![]() இதழ் 116 [ பிப்ரவரி 2015 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
தொடர்:
ஆய்வுப்பாதையில் ஆங்காங்கே
பண்டைய நாளில் அண்டம் பற்றியும் அதன் உருவகம் பற்றியும் சமுதாயத்தில் இருந்த புரிதலையும் நம்பிக்கையையும் கம்ப இராமாயணம் பதிவு செய்கிறது. அவனியை (அதாவது இந்த உலகத்தை) ஏழு மாபெரும் கடல்கள் சூழ்ந்திருந்தனவாம். நக்கரம் என்றழைக்கப்பட்ட மாபெரும் முதலைகள் முதலான உயிரினங்கள் வாழ்ந்த அக்கடல்களைச் சுற்றிலும் ஒரு எயில் (கோட்டைச் சுவர்) போன்று அண்டச் சுவராக சக்கரவாள பர்வதம் எனும் மாபெரும் மலை வட்ட வடிவமாகச் சூழ்ந்திருந்ததாம். அவனியெங்கும் பிரகாசிக்கும் சூரியனின் ஒளி அந்த மலைக்கு அப்பால் விழவில்லையாம் (அதாவது அம்மலை அத்தனை பெரியதாக இருந்தது எனக்கொள்ளலாம்). கிஷ்கிந்தா காண்டம் நட்புகோட் படலத்தில் அனுமனின் வாய்மொழியாக இந்த அண்டம் பற்றிய சித்திரம் விரிகிறது. சுக்ரீவனின் பூர்வ வரலாற்றை இராமனுக்குக் கூறத்துவங்கும் அனுமன், மாயாவி எனும் அரக்கனுக்கும் வாலிக்கும் ஒரு குகைக்குள் நடந்த போரையும் அப்போர் முடிவதற்காக சுக்ரீவன் இரண்டு வருட காலங்களுக்கும் மேலாகக் காத்திருந்ததையும் விவரிக்கிறான். இறுதியில் குகையின் வாயிலில் வெளிப்படும் இரத்தத்தை வாலியின் உதிரமாகக் கருதும் சுக்ரீவன், அவன் மரணித்து விட்டதாக நம்பி வருந்தி மந்திரிகளின் வற்புறுத்தலினால் கிஷ்கிந்தையின் அரசனாகப் பதவியேற்கிறான். ![]() வாலி சுக்ரீவன் மோதல் - பத்தடக்கல் பாபநாதர் திருக்கோயில் சிற்பம் சிறிது காலம் கழித்து மாயாவியைக் கொன்று குகையினின்றும் வெளிப்படும் வாலி, சுக்ரீவன் தன்னை ஏமாற்றி அரச பதவியைக் கைப்பற்றியதாகத் தவறாகப் புரிந்து கொண்டு அவனை அடித்துத் துவைக்கிறான். பாற்கடலையே தனது பெருவலிமை மிகுந்த கரங்களால் கடைந்த வாலியின் கைகளில் அகப்பட்டுக் கொண்டால் என்ன ஆவது? ஆகவே அஞ்சி நடுங்கி ஓடத் துவங்கும் சுக்ரீவன், ஓடி ஓடி உலகத்தைக் கடந்து உலகைச் சுற்றியுள்ள ஏழு கடல்களையும் கடந்து அண்டத்தின் எல்லையையே அடைந்துவிட்டானாம். ஆனால் இந்தத் தலைகால் புரியாத ஓட்டத்தினால் பயனேதும் விளையவில்லை என்பதுதான் பரிதாபம். அந்த ஏழு கடல்களையுமே வாலி சிங்கம்போல் ஒரே தாவில் தாவிக்கடந்து விட்டானாம்! இவனுலைந் துலைந்தெழு கடற்புறத் தவனியும் கடந்தெயி லடைந்தன ன் கவனமொன்றியான் கால் கடாயென அவ்வ வனி வேலை ஏழரியின் வாவினான். (கிஷ்கிந்தா காண்டம் - நட்புகோட் படலம் - பாடல் 65) இவன் (சுக்ரீவன்) உலைந்து உலைந்து (வருந்தி வருந்தி) எழுகடற்புறத் தவனியும் (ஏழு கடல்களால் சூழப்பட்ட உலகத்தையும்) கடந்தெயிலடைந்தனன் (கடந்து அண்டச் சுவராகிய எயிலை அடைந்தான்). கவனமொன்றிலான் (இதற்கெல்லாம் கவலைப்படாதவனான வாலி) கால் கடாயென (காற்று சென்றாற்போல்) அவ்வ வனி வேலை ஏழ் (உலகைச் சூழ்ந்த அந்த ஏழு கடல்களையும்) அரியின் வாவினான் (சிங்கம் போலத் தாண்டினான்). சரி, அடுத்து என்ன நடந்ததாம்? நக்கரக் கடற்புறத்து நண்ணு நாட் செக்கர் மெய்த் தனிச்சோதி சேர்க்கலாச் சக்கரப் பொருப்பிற்றலைக்குமப் பக்க முற்றவன் கடிது பற்றினான். (கிஷ்கிந்தா காண்டம் - நட்புகோட் படலம் - பாடல் 66) நக்கரக் கடற்புறத்து (பெருமுதலைகள் வாழ்ந்த கடலின் புறத்து) நண்ணு நாள் (சுக்ரீவன் இருந்த நாளில்) செக்கர் மெய்த் தனிச்சோதி சேர்கலா (சிவந்த நிறமுடைய ஒப்பில்லாத சோதிவடிவமான சூரியனின் ஒளி சேராத) சக்கரப் பொருப்பின் தலைக்கும் அப்பக்கம் (சக்கரவாள பர்வதத்தின் சிகரத்துக்கும் அப்பால்) உற்றவன் கடிது பற்றினான் (ஓடிப்போய் நின்றிருந்த சுக்ரீவனை வாலி விரைந்து சென்று பிடித்துக் கொண்டான்) இந்தப் பாடலை விளக்கும் உரையாசிரியர் வை.மு. கோபால கிருஷ்ணமாச்சாரியார், சக்கரவாள பர்வதத்தைக் கடந்து அண்டப் பித்திகையையே (எல்லையை) அடைந்துவிட்டதால் மேற்கொண்டு எங்கு ஓடுவது என்று தெரியாமல் திகைத்து நிற்க அப்போது வாலி வந்து அவனைப் பிடித்துக்கொண்டான் என்று விளக்குகிறார். மேலும் நக்கரம் என்பது இந்த இடத்தில் முதலை உள்ளடக்கிய பல்வேறு நீர்வாழ் உயிரினங்களையும் குறிக்குமாம். சக்கரம் போன்று வட்ட வடிவமாக உலகைச் சுற்றியிருத்தலால் சக்கரப் பொருப்பின் என்று கூறப்பட்டதாம். வாலியின் அளவற்ற பெருவலிமை - அதன் காரணமாக சுக்ரீவனுக்கு ஏற்படும் பேரச்சம் - அவனிடமிருந்து தப்பிக்க சுக்ரீவன் எடுக்கும் அசாதாரணமான முயற்சி என்று இந்த அண்ட ஓட்டத்தின் வழி கம்பர் தீட்டும் அற்புதமான மனச்சித்திரம் வால்மீகத்திடமிருந்து இரவல் பெறப்பட்ட சிந்தனை அல்ல என்பதைக் குறிப்பிடவேண்டியுள்ளது. |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |