http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 118

இதழ் 118
[ ஏப்ரல் 2015 ]


இந்த இதழில்..
In this Issue..

வரலாறு ஆய்விதழ் - இருபத்தி ஐந்து இதழ் பயணம்
சிராப்பள்ளி முசிறிச் சாலையில் சில கண்டுபிடிப்புகள்-1
Land Measuring rods of Thiruchirappalli District (500-1300 C.E.)
பொன்மார் திருக்கோயில்கள்
குடக்கூத்தாழ்வான்
டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் வெளியீடுகள்
இதழ் எண். 118 > தலையங்கம்
வரலாறு ஆய்விதழ் - இருபத்தி ஐந்து இதழ் பயணம்
ஆசிரியர் குழு
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்.

திருச்சிராப்பள்ளி டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் வெளியீடான ‘வரலாறு’ ஆய்விதழின் 25வது இதழ் விரைவில் வெளியாக உள்ளது எனும் இனிய நற்செய்தியை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

முழுக்க முழுக்க புத்தம் புதிய வரலாற்றுச் செய்திகளையும் கண்டுபிடிப்புக்களையும் கல்வெட்டுக்களையும் தரமான ஆய்வுக்கட்டுரைகளையும் தாங்கி ஆண்டுதோறும் வெளிவந்துகொண்டிருக்கும் இந்த ஆய்விதழின் மகத்தான பணியை வரலாற்றை நேசிக்கும் அன்பர்கள் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும் எனும் நோக்கில் இந்தத் தலையங்கத்தை எழுத விழைகிறோம்.



தரமான ஒரு ஆய்விதழைத் தமிழில் தொடர்ந்து இத்தனை வருடங்களுக்கு வெளிக்கொண்டு வருவதென்பது எளிதான செயலே அல்ல. கட்டமைப்பு வசதிகளும் பொருளாதாரப் பின்புலமும் கொண்ட பல்கலைக்கழக ஆய்விதழ்களே தொடர்ந்து வெளிவருதற்கு சிரமப்படும் ஒரு சூழலில் டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம் தொடர்ந்து இந்த இதழைப் பல்வேறு இன்னல்களுக்குமிடையே பதிப்பித்துத் தமிழக வரலாற்றுக்கும் இந்திய வரலாற்றுக்கும் ஒரு அரிய பெரிய பங்களிப்பைச் செய்துள்ளது.


இதழ் - 24


வரலாறு ஆய்விதழிற்கும் நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் இந்த மின்னிதழான வரலாறு டாட் காமிற்கும் உள்ள உறவு அன்னைக்கும் மகவிற்குமான தொப்புள்கொடி உறவு போன்றது. இரண்டின் பெயரும் ஒன்று. ஆனால் உள்ளடக்கங்கள் முற்றிலும் வேறானவை என்பதினால் வரலாறு ஆய்விதழ் பற்றிய ஒரு விரிவான அறிமுகத்தை இங்கே வழங்குகிறோம்.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *


‘வரலாறு’ ஆய்விதழ் முனைவர் இரா.கலைக்கோவனை ஆசிரியராகவும் முனைவர். மு.நளினி அவர்களை இணை ஆசிரியராகவும் முனைவர் அர.அகிலா அவர்களை துணை ஆசிரியராகவும் கொண்டு அச்சில் பதிப்பிக்கப்படும் ஒரு இதழாகும். இந்திய வரலாற்றாய்வுக் கழகத்தின் (Indian Council for Historic Research - ICHR) நல்கையுடன் இவ்விதழ் ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது. மின்னிதழ் வடிவத்திலோ இணையத்திலோ இது கிடைப்பதில்லை. அச்சு வடிவம் மட்டுமே. 1993ல் தொடங்கி 2014 வரை 24 இதழ்கள் இதுவரை வெளிவந்துள்ளன. 25வது இதழ் இந்த ஆண்டு வெளியாக உள்ளது.


இதழ் - 1

டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்று மைய நூல்கள்


வரலாறு ஆய்விதழின் பகுதிகளைக் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்.

கல்வெட்டுப் பகுதிகள்

புதிய கல்வெட்டுக்கள் - இப்பகுதியில் இதுவரை பதிப்பிக்கப்படாத புதிய கல்வெட்டுக்களின் முழுப்பாடமும் பதிப்பிக்கப்படுகின்றன. மைய ஆய்வாளர்களின் அனைத்து புதிய கல்வெட்டுக் கண்டுபிடிப்புக்களும் அதன் பாடங்களும் இப்பகுதியில் உள்ளன. கடந்த 25 ஆண்டுகளில் தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பல்வேறு முக்கியக் கல்வெட்டுக்களின் தொகுப்பாக இப்பகுதி விளங்குகிறது. பல்லவர் காலம் தொடங்கி சோழர் - பாண்டியர் மற்றும் விஜயநகர - ஆங்கிலேயர் காலம் வரையிலான வெவ்வேறு கல்வெட்டுக்களின் பாடங்கள் இதில் உள்ளன.

பதிப்பிக்கப்படாத பாடங்கள் - மத்தியத் தொல்லியல் அளவீட்டுத்துறையின் ஒரு அங்கமான கல்வெட்டுத்துறை கடந்த நூறுவருட காலத்தில் வருடந்தோறும் கண்டறியப்பட்ட பல்வேறு கல்வெட்டுக்களின் சுருக்கங்களை அவ்வப்போது வெளியிட்டுள்ளது. கல்வெட்டு ஆண்டறிக்கை (Annual Report on Epigraphy) எனும் பெயரில் வெளியிடப்படும் இவ்வறிக்கைகளில் குறிப்பிட்ட கோயிலிலிருந்து படியெடுக்கப்பட்ட கல்வெட்டுக்களைப் பற்றிய ஒரு மேலான அறிவைப் பெறமுடிகிறது. துரதிருஷ்டவசமாக இக்கல்வெட்டுக்களின் சுருக்கங்கள் மட்டுமே இவ்வறிக்கைகளில் உள்ளன. விரிவான பாடங்கள் தென்னிந்தியக் கல்வெட்டுக்கள் முதலான தொகுதிகள் மூலம் பதிப்பிக்கப்படுகின்றன. ஆனால் கல்வெட்டுப் பதிப்புப் பணி பல ஆண்டுகளாக முடங்கி விட்டதனால் பல ஆயிரக்கணக்கான கல்வெட்டுக்களின் முழுமையான பாடங்கள் இன்னும் பதிப்பிக்கப்படாமல் உள்ளன. இருப்பவை ஆண்டறிக்கைகள் மட்டுமே. அவற்றிலிருந்து முழுமையான செய்திகளைப் பெறமுடியவில்லை.

மைய ஆய்வாளர்கள் மேற்கொள்ளும் கோயில் ஆய்வுகளின்போது இத்தகைய சுருக்கங்களின் முழுமையான பாடங்கள் மீண்டும் படிக்கப்படுகின்றன. அவை இப்பகுதியில் தொடர்ச்சியாக வெளியிடப்படுகின்றன.

விட்டுப்போன தொடர்ச்சிகள் - மைய அரசின் கல்வெட்டுத் தொகுதிகளில் இடம்பெற்றுள்ள கல்வெட்டுக்கள் சிலவற்றின் முழுமையான பாடங்கள் கிடைப்பதில்லை. ‘கல்வெட்டு முழுமையாக இல்லை’ அல்லது ‘கல்வெட்டின் ஒரு பகுதி கட்டுமானத்தில் மறைந்துள்ளது’ என்பன போன்ற குறிப்புக்களுடன் இவை காணப்படும். இத்தகைய கல்வெட்டுக்களின் தொடர்ச்சிகள் மைய ஆய்வாளர்களின் ஆய்வின்போது கிடைப்பதுண்டு. அவை இப்பகுதியில் இடம்பிடிக்கின்றன.


முதல் இதழின் உள்ளடக்கம்


ஆய்வுக் கட்டுரைகள்

இப்பகுதியில் அனுபவம் மிக்க ஆய்வாளர்களின் விரிவான ஆய்வுக் கட்டுரைகள் இடம்பெறுகின்றன. பல கட்டுரைகள் ஒரு குடைவரை அல்லது கட்டுமானக் கோயிலின் கட்டுமான அமைப்பு, கல்வெட்டு, சிற்பங்கள் என்று அனைத்துத் தரவுகளையும் உள்ளடக்கியவை. மகேந்திர பல்லவரின் பல்வேறு குடைவரைகள், விஜயாலய சோழீசுவரம் முதலான கற்றளிகள், மாடக்கோயில் கட்டுரைகள், திருக்கோளக்குடி குடைவரை மற்றும் கற்றளிகள் என்று பல்வேறு விரிவான கட்டுரைகளைக் கடந்த இதழ்களில் காணலாம்.

சிற்சில கட்டுரைகள் விரிவான இலக்கியம் தழுவிய வரலாற்றுப் பார்வையை முன்வைப்பவை. உதாரணமாக முதல் திருமுறையில் ஆடற் குறிப்புக்கள், அப்பர் எனும் அரிய மனிதர், பத்துப்பாட்டில் கட்டிடக் கலை முதலான கட்டுரைகளைக் குறிப்பிடலாம்.

வேறு சில ஒப்பீட்டுக் கட்டுரைகளாக அமைந்துள்ளன. உதாரணமாக மகேந்திர பல்லவரின் குடைவரைகள் ஒரு ஒப்பாய்வு போன்ற கட்டுரைகளைக் குறிப்பிடலாம். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் அத்தனை கட்டுமானக் கூறுகளையும் ஒப்பு நோக்குவதன் முலமே ஒரு திருக்கோயிலின் காலகட்டத்தை நிர்ணயிக்க இயலும் என்பதினால் இத்தகைய ஒப்பாய்வுக் கட்டுரைகள் மிக முக்கியமானவை.

பொதுப்பகுதிகள்

உண்டாலம்ம இவ்வுலகம் எனும் பகுதியில் தாம் வாழ்வில் நேரில் கண்டு பழகிய அரிய பெரிய மனிதர்களைப் பற்றிய விரிவான தரவுகளை முன்வைக்கிறார் முனைவர் கலைக்கோவன். பத்ம பூஷண் கூ.ரா.சீனிவாசன் பற்றிய கட்டுரையும் தவத்திரு குன்றக்குடி அடிகளார் பற்றிய கட்டுரையும் மிகவும் ஆழமானவை. பெருமைச் சுவடுகள் பகுதியில் வரலாற்று அறிஞர்கள் பலரின் வாழ்வை விபரமாக அறிந்துகொள்ள முடிகிறது. நூல் மதிப்புரை, யாவரும் கேளிர், அங்கும் இங்கும் என்று மற்ற பகுதிகள் ஒவ்வொரு இதழிலும் உண்டு.

பின்னிணைப்பு நூல்கள்

கடந்த சில வரலாறு இதழ்கள் பின்னிணைப்பாக ஒரு முழு நூலையும் கொண்டுள்ளன. முனைவர் கலைக்கோவனின் நினைவுப் பாதையான திரும்பிப் பார்க்கிறோம் தொடரின் பகுதிகள் பலவும் நூல் வடிவில் பின்னிணப்பாக வழங்கப்படுகிறன.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *



முதல் இதழின் தலையங்கம்


வரலாறு இதழ்களின் தலையங்கங்களைப் படிக்கையில் அந்த இதழ் கடந்து வந்த பாதையின் கடினத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது.

இத்தகைய முயற்சிகளுக்கு மிகப்பெரிய இடையூறாக இருப்பது பொருளாதாரம்தான். வெளியாடுகளில் தரமான ஆய்விதழ்கள் அனைத்து நூலகங்களிலும் பல்கலைகளிலும் வாங்கப்படும் என்பதால் ஒரு குறைந்தபட்ச விற்பனைக்கு உறுதியுண்டு. இங்கு அந்த நிலையில்லை. அரசாங்க நூலகங்களை நம்பி இப்போது எந்தப் பதிப்பாளரும் இருக்க முடியாத நிலை. தரமான புத்தகங்கள் என்கிற தகுதியை விட வேறு சில தகுதிகளும் விகுதிகளுமே இங்கு கிளை நூலகப் பரிவர்தனைகளை நடத்தி வைக்கின்றன.

ஆகவே பொதுமக்களையும் வரலாற்று ஆர்வலர்களையும் ஆதரவாளர்களையும் நம்பியே இந்த இதழ் வளர்ந்துள்ளது. ஜீவித்துள்ளது.

ஒரு வகையில் இது சாதனை.

மற்றொரு வகையில் மிகப்பெரிய வேதனை.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *


நமது வீட்டில் அமைந்துள்ள சிறிய நூலகத்தில் வரிசையாக வீற்றிருக்கும் இந்த வரலாறு ஆய்விதழ்களைப் பார்க்கும்போது தவிர்க்க இயலாமல் ஒரு மலைப்பு ஏற்படுகிறது. இவற்றின் பல கட்டுரைகளைப் பலமுறை பல்வேறு காலகட்டங்களில் படித்தாகி விட்டது. ஒவ்வொரு முறை படிக்கும்போதும் ஒரு புதிய திறப்பு, ஒரு புதிய தரிசனம்.. அல்லது ஒரு புதிய புரிதல்… இப்படி ஏதாவது ஒன்று நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது. எந்தக் கட்டுரையையும் எளிதில் வாசித்துவிட்டுக் கடந்துவிட முடியாதபடி அமைந்த சாரமான படைப்புக்கள்.

இந்த இதழ்களின் பின்னால் தெரியும் உழைப்பும் ஈடுபாடும் அசாதாரணமானவை. இவற்றின் உருவாக்கத்தில் ஊடும் பாவுமாக இருந்து உருவாக்கிய ஆய்வாளர்களின் உழைப்பு மகத்தானது. வணக்கத்திற்குரியது. இவர்களின் உழைப்பையும் ஈடுபாட்டையும் போற்றும் வகையில் அடுத்த வரலாறு டாட் காம் இதழ் ‘டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய’ சிறப்பிதழாக வெளிவரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பரவலான அங்கீகாரத்தையோ ஊடக வெளிச்சத்தையோ நாடாமல் பெரிய நிறுவனங்களின் ஆதரவில்லாமல் எந்த ஆரவாரமும் இல்லாமல் கடந்த இருபத்தி ஐந்து ஆண்டுகளாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்தப் பணி இனிவரும் காலங்களிலும் தொடர்ந்து நடைபெறவேண்டும்.

அதற்கு வரலாற்றில் ஆர்வம் கொண்ட நம் போன்ற அனைவரும் துணை நிற்க வேண்டும்.

வணக்கம்.

அன்புடன்
ஆசிரியர் குழு.

குறிப்பு - டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்று மைய நூல்கள்
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.