http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 118

இதழ் 118
[ ஏப்ரல் 2015 ]


இந்த இதழில்..
In this Issue..

வரலாறு ஆய்விதழ் - இருபத்தி ஐந்து இதழ் பயணம்
சிராப்பள்ளி முசிறிச் சாலையில் சில கண்டுபிடிப்புகள்-1
Land Measuring rods of Thiruchirappalli District (500-1300 C.E.)
பொன்மார் திருக்கோயில்கள்
குடக்கூத்தாழ்வான்
டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் வெளியீடுகள்
இதழ் எண். 118 > கலையும் ஆய்வும்
பொன்மார் திருக்கோயில்கள்
கி.ஸ்ரீதரன்
சென்னைக்கு அருகில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருப்போரூர் வட்டத்தில் பசுமையான வயல்கள், குளங்கள், நீர்வளம் மிக்க கிணறுகள் நிறைந்த ‘பொன்மார்’ எனும் ஊர் அமைந்துள்ளது. சென்னை தாம்பரத்திலிருந்தும் தி.நகர் மற்றும் சைதாப்பேட்டையிலிருந்தும் இவ்வூருக்கு நகரப்பேருந்துகள் வந்து செல்கின்றன.

பொன்மாறு என்று முற்காலத்தில் அழைக்கப்பட்ட இவ்வூரில் பழமையான சைவ வைணவத் திருக்கோயில்கள் அமைந்துள்ளன. இவற்றுள் சிவபெருமான் திருக்கோயிலான சத்தியபுரீசுவரர் கோயில் விஜயநகர மன்னர் காலக் கலைப்படைப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டாக நல்நிலையில் அமைந்துள்ளது.


பெருமாள் திருக்கோயில்


பெருமாள் திருக்கோயில் மக்களால் கைவிடப்பட்ட நிலையில் மரம் செடிகொடிகள் முளைத்து முற்றிலும் சிதைந்த நிலையில் உள்ளது.

சத்திரபுரீசுவரர் திருக்கோயில்

இக்கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோயிலின் வடபகுதியில் திருக்குளம் அல்லி மலர்களுடன் காட்சியளிக்கிறது.


சத்தியபுரீசுவரர் திருக்கோயில்


செங்கல் சுவரால் சூழப்பட்டுள்ள திருக்கோயில் வளாகம் விமானம், அர்த்த மண்டபம் மற்றும் முகமண்டபப் பகுதிகளைக் கொண்டுள்ளது. நாற்புறங்களிலும் கற்களால் மூடப்பட்டுள்ள முகமண்டபத்தின் தென்புறத்தில் திருமுன் நுழைவாயில் அமைந்திருக்க, அதன் வடபுறத்தில் சாலை விமானத்துடன் இறைவியின் திருமுன் அமைந்துள்ளது.



விமானம்

திருக்கோயில் விமானம் கலப்பு வேசர விமானமாக நாகரத் தளங்களுடனும் வேசர கீரீவ சிகரங்களுடனும் அமைந்துள்ளது. விமான ஆதிதளத்தின் மீது எழும்பியுள்ள சுதைக் கட்டுமானங்கள் அனைத்துமே பிற்காலத்தவை.



கருங்கற்களால் அமைந்த விமான ஆதிதளம் கபோதபந்தத்த தாங்குதளத்தின் மீது எழுகிறது. பத்ம உபானம், ஜகதி, தாமரை வரிகள் தழுவிய உருள் குமுதம், பாதங்களுடன் அமைந்த கண்டம் மற்றும் நாசிக்கூடுகள் கொண்ட கபோதம் ஆகிய உறுப்புக்களுடன் தாங்குதளம் அமைக்கப்பட்டுள்ளது. தாங்குதளக் கபோத த்தின் நாசிக்கூடுகளில் கணபதி, யோகநரசிம்மர், பூதகணம், மத்தளம் இசைக்கும் கலைஞருடன் ஆடல் புரியும் ஆடவல்லான், லிங்கத்தின் மீது பால்சொரியும் பசு, திரிபுரம் எரித்தவர், வாலி சுக்ரீவன் சண்டை எனப் பல்வேறு புராண இதிகாசக் காட்சிகள் குறுஞ்சிற்பங்களாக வடிக்கப்பெற்றுள்ளன. கபோதத்தின் மூலைகளில் நுண்ணிய கொடிக்கருக்கு வேலைப்பாடுகள் காணப்படுகின்றன.



கபோதபந்தத் தாங்குதளத்தின் மீது வேதிகைத் தொகுதி அமைந்துள்ளது. வேதிகைப் பாதங்கள் சிற்பங்கள் செதுக்கப்படாமல் வெறுமையாக உள்ளன. வேதிகையின் மீதெழும் ஆதிதளச் சுவர் கர்ண - பஞ்சர - சாலைப் பத்திகளுடன் அமைந்துள்ளது. பத்திகள் எவையும் பிதுக்கம் பெறவில்லை. பத்திகள் அனைத்தும் ஒரே உயரத்தில் அமைந்துள்ள விஷ்ணுகாந்த(எண்பட்டை) அரைத்தூண்களால் பகுக்கப்பட்டுள்ளன. துண்கள் சதுர பாதங்கள் எண்பட்டைத் தூணுடல், மாலைத்தொங்கல், கலசம், தாடி, கும்பம், பாலி பலகை என அனைத்து அங்கங்களுடனும் அமைந்துள்ளன. சாலைப்பத்தியின் நடுவே கோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பிரம்மகாந்த அரைத்தூண்களால் அணைக்கப்பட்டுள்ள இக்கோட்டங்கின் மேற்பகுதிகள் சாலை விமானங்காக உருவெடுத்துள்ளன.



பஞ்சரப் பத்தியில் நன்கு வேலைப்பாடுகளுடன் அமைந்த கும்ப பஞ்சரம் செதுக்கப்பட்டுள்ளது. இப்பஞ்சரங்களின் மேற்பகுதியில் உள்ள நாசிகைக்களுள் விமானங்கள் குறுஞ்சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.

தூண்களின் போதிகைக் கரங்கள் விமானத்தின் கூரையுறுப்புக்களைத் தாங்கியுள்ளன. உத்தரம் வாஜனம், வலபி முதலானவற்றை உள்ளடக்கிய பிரஸ்தரம் நாசிக்கூடுகளால் அலங்கரிக்கப்பட்ட கபோதத்தைக் கொண்டுள்ளது. இக்கபோத முனைகளில் கொடிக்கருக்கு அலங்காரங்கள் காணப்படுகின்றன. கபோத த்திற்கு மேல் பூமிதேசம் யாளிவரியாக அமைந்துள்ளது.

மண்டபங்கள்

முகமண்டபத்தின் வடபகுதியில் அமைந்துள்ள அம்பாள் சத்தியபுரீசுவரி திருமுன் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. அம்பிகை நான்கு திருக்கரங்களுடன் அங்குசம், பாசம் ஏந்தி அபய-வரத முத்திரைகளுடன் அருள்புரிகிறார்.



அர்த்த மண்டபத்தை நான்கு தூண்கள் தாங்கி நிற்கின்றன. இத்தூண்கள் அனைத்தும் நுண்ணிய புடைப்புச் சிற்பங்களுடன் கூடிய வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளன. நடனமிடும் கணபதி, மகிஷமர்த்தினி, இராமன், அனுமன், லிங்கத்தின் மீது பால்சொரியும் பசு, நரசிம்மர், கோபிகைகளின் ஆடைகளைக் களைந்து நிற்கும் கண்ணன், விஜயநகர மன்னர்களின் அரசமுத்திரையான கண்பேருண்ட பறவை எனப் பல சிற்பங்கள் இத்தூண்களை அணி செய்கின்றன. அர்த்த மண்டபத்தின் கிழக்குச் சுவரில் வெளிச்சம் தருவதற்காக சாளரம் அமைக்கப்பட்டுள்ளது.



அர்த்த மண்டபத்தில் கணபதி, முருகன் மற்றும் பைரவர் சிற்பங்கள் வழிபடப்படுகின்றன. தாமரைப் பீடத்தின் மீது அமர்ந்த நிலையில் துதிக்கையை வலப்புறமாகச் சுழற்றியபடி காட்சியளிக்கும் கணபதியின் கரண்ட மகுடத் தலை சற்றே வலப்புறமாக சாய்ந்துள்ளது. நான்கு திருக்கரங்களுடன் அருள்புரியும் இவரது கரங்களில் மோதகம் மற்றும் பழம். மார்பின் குறுக்கே இவர் அணிந்துள்ள முப்புரிநூல் தடிமனாக ருத்ராட்ச மணிகளுடன் விளங்குவது சிறப்புக்குரியது.

கல்வெட்டுச் செய்திகள்

இறைவன் விமானத்தின் தாங்குதளத்தின் ஜகதி மற்றும் குமுத த்தில் காணப்படும் கல்வெட்டு விஜயநகர அரசர் சதாசிவராயர் காலத்தில் (சகவருடம் 1442 - கி.பி.1520) பொறிக்கப்பட்டதாகும்.

ஜெயங்கொண்ட சோழ மண்டலத்துப் புலியூர்க்கோட்டத்துக் கால்வாய் நாட்டு தியாக வினோத நல்லூரான ‘பொன்மாறு’ என்ற ஊரில் அமைந்துள்ள பொயிலீசுவரமுடைய நாயனார்க்கும் வீரபத்திர நாயனார்க்கும் தினப்படி பூஜை மற்றும் வழிபாடுகளுக்கு பொயிலிச்சேரியை தானமாக அளித்த செய்தி இக்கல்வெட்டில் காணப்படுகிறது. சிவபெருமான் திருக்கோயில் வளாகத்திலேயே கைவிடப்பட்ட நிலையில் வடபுறத்தில் காணப்படும் சிறுகோயில் இக்கல்வெட்டு குறிப்பிடப்படும் வீரபத்திரர் திருக்கோயிலாகலாம்.

இக்கல்வெட்டினால் இவ்வூர் பழங்காலத்தில் தியாக வினோத நல்லூர் என்றும் பொன்மாறு என்றும் அழைக்கப்பட்டதை அறிய முடிகிறது. இவ்வூரின் மற்றொரு பகுதியில் அமைந்துள்ள அம்மன் கோயில் குளத்தின் அருகே காணப்படும் மற்றொரு கல்வெட்டிலும் இவ்வூர் பொன்மாறு என்றே குறிப்பிடப்பட்டுள்ளது கவனத்தில் கொள்ளத்தக்கது.

குறிப்புக்கள்

1. காஞ்சீபுரம் மாவட்டக் கல்வெட்டுக்கள், தமிழகத் தொல்லியல் துறை வெளியீடு (2006). பக்கம் 17-19
2. தமிழ்நாட்டுச் சிவாலயங்கள், தொகுதி-1. மா.சந்திரமூர்த்தி. 2003. பக்கம் 264-273
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.