http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[181 Issues]
[1796 Articles]
Home About US Temples Facebook
Issue No. 130

இதழ் 130
[ நவம்பர் 2016 ]


இந்த இதழில்..
In this Issue..

பத்துப்பாட்டில் கட்டடக்கலை - 1
சங்க காலத்தின் காலம்?
பூதவரியில் குதிரையும் சிங்கமும்
Ammai in Banteay Srei and the Tamil Maritime Links in South East Asia
TEMPLES IN AND AROUND THIRUCHIRAPPALLI - 3
இதழ் எண். 130 > கலைக்கோவன் பக்கம்
சங்க காலத்தின் காலம்?
இரா. கலைக்கோவன்

 

தமிழரின் தொன்மையான வரலாற்றுக் காலமாக அறியப்படும் சங்க காலத்தின் மேல், கீழ் நிலைகளைப் பற்றித் தொடர்ந்து குழப்பமான சுட்டல்களே நிலவி வருகின்றன. சங்க காலத்தின் தொடக்கமாகக் கூறற்கியலா மிகப் பழங்காலம்வரை பயணிக்கச் சில அறிஞர்கள் துணிய, அதன் முடிவுக் காலத்தைப் பொ. கா. மூன்றாம் நூற்றாண்டுவரை நீட்டப் பலர் தொடர்ந்து விழைகின்றனர். அவர்களுள் குறிப்பிடத்தக்க சிலர் கூற்றுகளை முன்நிறுத்திப் பார்க்கலாம்.

'பண்டைத் தமிழ்ச் சமூகம், வரலாற்றுப் புரிதலை நோக்கி' எனும் நூலை 2003ல் படைத்திருக்கும் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி, 'பேராசிரியர்கள் நீலகண்ட சாஸ்திரி, வையாபுரிப்பிள்ளை  இவர்கள் சங்க காலத்தை ஏறத்தாழப் பொ. கா. 100 முதல் பொ. கா. 250 வரையுள்ள காலம் எனவே கொள்வர்; பேராசிரியர் காமில் சுவலபில் பொ. கா. மு. 100 முதல் பொ. கா. 250வரை என்பர்', என்று கூறுவதுடன், தம் கட்டுரைகள் எழுதப்பட்ட காலங்களில் அதுவே பொதுப்படையான நடை முறையாக இருந்தது என்றும் சொல்கிறார். இந்த இரண்டு கால எல்லைகளுள் தாம் கொள்ளத் துணிந்தது எதனை என்பது குறித்து அவர் ஏதும் கூறவில்லை. 

பொ. கா. 100 என்ற தொடக்கத்திற்கும் பொ. கா. மு. 100 என்ற தொடக்கத்திற்கும் இடையே இருநூறு ஆண்டுகள் உள்ளன. இருநூறு ஆண்டுகள் என்பது வரலாற்றுக் கண்ணோட்டத்தில் ஒன்றாகக் கருதக்கூடிய ஒன்றன்று. எனினும், இருவேறு காலகட்டங்களைச் சுட்டும் பேராசிரியர் சிவத்தம்பி, தம் கட்டுரைகள் எழுதப்பட்ட காலங்களில் (பொ. கா. 1966-1992) அதுவே பொதுப்படையான நடைமுறையாக இருந்தது என்கிறார். சாகித்திய அகாதெமி வெளியிட்டுள்ள, 'தமிழ் இலக்கிய வரலாறு' எனும் நூலில் பேராசிரியர் மு. வரதராசன், பொ. கா. 100 முதல் பொ. கா. 500 வரையிலான காலகட்டத்தைச் சங்கம் மருவிய காலமாகக் குறித்துள்ளார். சாஸ்திரியாரும் வையாபுரியாரும் குறிப்பிடும், அதுவே பொதுப்படையான நடைமுறை எனச் சிவத்தம்பி ஏற்றுக்கொள்ளும் பொ. கா. 100 - பொ. கா. 250 எனும் சங்க காலம், வரதராசனின் சங்கம் மருவிய காலத்திற்குள் அடைக்கலமாவதைக் காண்கிறோம். தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள தமிழ்நாட்டு வரலாறு வரிசையில் சங்க காலம் பற்றிய தொகுதி சங்க காலத்தைப் பொ. கா. மு. 400 - பொ. கா. 250 என்று சுட்டுகிறது. சங்க காலத்தின் கீழ் எல்லையைக் பொ. கா. முன்னூறாகக் குறிப்பிடும் பேராசிரியர் மா. இராச மாணிக்கனார் மேல் எல்லை கூறற்கியலாத பழைமையுடையது என்கிறார். 

சங்க காலத்தின் காலத்தை வரலாற்றுச் சான்றுகளின் அடிப்படையில் நிறுவ முயன்றவர்களுள் குறிப்பிடத்தக்க தமிழறிஞர்களாக மா. இராசமாணிக்கனாரையும் பேராசிரியர் சிவத்தம்பியையும் குறிப்பிடலாம். இவர்களுள், மா. இராசமாணிக்கனார் கல்வெட்டுகளோடு நெருங்கிய தொடர்புடையவர். காலத்தால் முற்பட்ட தம்முடைய மொஹஞ்சொ-தரோ எனும் நூலிலேயே பிராமி எழுத்துக்களைப் பற்றிய தெளிவான கண்ணோட்டத்தை வழங்கியவர். தொல்லியல் ஆய்வாளர்கள் பேராசிரியர் கா. இராசன், முனைவர் சு. இராசவேல், கல்வெட்டாய்வாளர்கள் முனைவர் கே. வி. இரமேஷ், முனைவர் மு. து. சம்பத் இவர்கள் பல்வேறு சான்றுகளின் அடிப்படையில் கடந்த இருபதாண்டுகளாக முன்னெடுத்துச் செல்லும் கூற்றை, 1941லேயே முன்மொழிந்தவர் இராசமாணிக்கனார். என்றாலும், சங்க காலத்தின் தொடக்கத்தைப் பற்றிய அவருடைய காலச்சுட்டல் தெளிவான அறிவியல் சான்றுகளின் அடிப்படையில் அமையவில்லை.

திரு. சிவத்தம்பி, சங்க காலத்தைப் பிறர் கூற்றுகளின் அடிப்படையிலேயே வரையறுப்பதைக் காணமுடிகிறது. தொடக்கத்தில் பேராசிரியர் சாஸ்திரி, வையாபுரி, சுவலபில் இவர்தம் கருத்துக்களின் அடிப்படையில், அவை இருவேறுபட்ட கால எல்லைகளைச் சுட்டியபோதும், அவையே பொதுப்படையான நடைமுறை என ஏற்றுக்கொண்ட சிவத்தம்பி, அறிஞர் ஐராவதம் மகாதேவனின், 'Early Tamil Epigraphy' நூல் வெளியானதும், மகாதேவன் குறிப்பிடும் கால எல்லையை ஏற்றுப் போற்றுவதைப் பார்க்கிறோம். பொ. கா. மு 200ல் இருந்து பொ. கா. 250வரை எனச் சங்க கால எல்லைகளை அவரால் எளிதாக விரிவு செய்து கொள்ள முடிகிறது. 2004ல் வெளியான இராசனின், 'தொல்லியல் நோக்கில் சங்க காலம்' என்ற நூலைத் தொடர்ந்து, சங்க காலத்தின் மேல் எல்லையைப் பொ. கா. மு. 300க்கும் முன் கொண்டு செல்ல சிவத்தம்பி உளம் கொள்கிறார். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் கிடைக்கும் அல்லது முன் வைக்கப்படும் புதிய தரவுகளை, அவை சரியானவைதானா என்ற கண்ணோட்டமின்றி ஏற்றுக்கொண்டு, அதற்கேற்பத் தம் கால எல்லைகளை மாற்றிக்கொள்ளும் போக்கு இப்பெரியாரிடத்து உள்ளது. 2004ல் இலங்கையில் நடந்த சங்க இலக்கியமும் சமூகமும் என்ற கருத்தரங்கில், 'சங்க காலமும் இலக்கியமும் - ஆய்வின் மாறும் பரிமாணங்கள்' என்ற தலைப்பில் நிகழ்த்திய உரையில் அவருடைய புதிய காலஎல்லைகள் பதிவாகியுள்ளன. 

ஒவ்வொருவர் சொல்லும் கருத்தையும் அவரவர்தம் பின்புலம் கருதி ஏற்றுக்கொள்ள வேண்டுமானால், சங்க காலத்தை வரையறுக்கவே முடியாது. அதனால், சொல்வார் பின்புலத்தைப் பார்ப்பதைவிட, சொல்லியிருக்கும் கருத்துக்களில் உள்ள உண்மைத் தன்மையை ஆராய்ந்து ஏற்பதே தகும். ஐராவதம் மகாதேவனின் 'Early Tamil Epigraphy' 2003 இல் வெளியான பதிவாகும். தமிழ்நாட்டில் அதுநாள்வரை கிடைத்த பழங்கல்வெட்டுகள் அனைத்தும் இந்நூலில் முறையாகவும் விரிவாகவும் ஆராயப்பட்டுள்ளன. பொ. கா. மு. இரண்டாம் நூற்றாண்டிற்கும் பொ. கா. முதல் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தனவாக 59 பிராமி கல்வெட்டுகளும் பொ. கா. 2ஆம் நூற்றாண்டிற்கும் பொ. கா. 4ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்டனவாக 30 பிராமி கல்வெட்டுகளும் இடம்பெற்றிருக்கும் இந்நூலில், பொ. கா. ஐந்தாம், ஆறாம் நூற்றாண்டுகளுக்கு உரியனவாக 21 வட்டெழுத்துக் கல்வெட்டுகள் தரப்பட்டுள்ளன. அவற்றுடன் அகழாய்வுகளில்  வெளிப்போந்த பானையோடுகள், முத்திரைகள், மோதிரங்கள் இவற்றிலுள்ள பிராமி எழுத்துக்களும் ஆராயப்பட்டுள்ளன. 2014இல் வெளியான இந்நூலின் மறுபதிப்பில் 2003 - 2014க்கு இடைப்பட்டுக் கண்டறியப்பட்ட பிராமி கல்வெட்டுகளும் இன்ன பிறவற்றிலுள்ள பிராமி பொறிப்புகளும் இணைக்கப்பட்டுள்ளன.

ஐராவதம் மகாதேவனின் ஆய்வு முடிவுகளுள் முக்கியமானவை:
1.    எழுதும் முறை தமிழ்நாட்டில் பொ. கா. மு. இரண்டாம் நூற்றாண்டில்தான் தொடங்கியது.
2.    இந்த எழுத்துமுறையைத் 'தமிழ் பிராமி' எனலாம்.
3.    மெளரியரின் பிராமி எனப்படும் அசோகன் பிராமியே தமிழ் பிராமிக்கு மூல வடிவம்.
4.    இந்த எழுத்துமுறையைக் கருநாடகத்திலிருந்து தமிழ் நாட்டிற்கு வந்த சமண முனிவர்கள் கொணர்ந்தனர்.

1941ல் 'பிராமி எழுத்துக்கள் தமிழ்மொழிக்கென்றே அமைக்கப்பட்டுப் பின்னர் வடமொழிக்கும் பயன்படும்படி புதிய குறிகள் உண்டாக்கப்பட்டன' என்று கூறிய மா. இராச மாணிக்கனாரின் கருத்தை பி. ஆர். சுப்பிரமணியமும் மொழிந்துள்ளார். இந்தக் கருத்து 1980களில் வலிமை பெற்றது. விரிவான ஆய்வுகளின் வழி இக்கருத்தை முன்னெடுத்துச் சென்ற நடுவணரசின் கல்வெட்டாய்வு நிறுவனத் தலைவர் இரமேஷைப் பின்பற்றி, 1990க்கும் 2000க்கும் இடைப்பட்ட பத்தாண்டுக் காலத்தில் கா. இராசனும் சு. இராசவேலுவும் தொடராய்வுகள் வழி இக்கருத்தை வலியுறுத்துவாராயினர். இதற்குக் கொடுமணலில் நிகழ்ந்த அகழாய்வுகள் பெருந்துணையாயின என்பார் இராசன்.

2004ல் வெளியான தம்முடைய, 'தொல்லியல் நோக்கில் சங்க காலம்' என்ற நூலில் ஐராவதம் மகாதேவனின் முடிவுகளைக் கொடுமணல் அகழாய்வுகளின் அடிப்படையில் மறுக்கும் இராசன், பெருங்கற்படைப் பண்பாட்டின் இறுதிக் காலத்திலேயே தமிழ்நாட்டில் பரவலாக எழுத்தறிவு பரவிவிட்டது என்கிறார். இதற்குச் சான்றாகக் கொடுமணல் பெருங்கற்படைகளிலும் வாழ்விடத்திலும் கிடைத்த தமிழ் பிராமி எழுத்துப் பொறிப்புப் பெற்ற பானையோடுகளைக் காட்டுகிறார். 

சங்க காலத்தில் தமிழ்நாட்டில் எழுத்தறிவு பரவலாக இருந்தது எனும் கருத்தை முதன்முதலாக முன்வைத்தவர் ஐராவதம் மகாதேவன். அக்கருத்தை ஒட்டியே இராசன் இதைக் கூறுகிறார் என்றாலும், பரவிய காலம் பற்றிய கண்ணோட்டத்தில் இருவருக்கும் வேறுபாடு உள்ளமையை உளங்கொள வேண்டும். மகாதேவனும் இராசனும் முன்வைக்கும் இக்கருத்தைப் பேராசிரியர்கள் கேசவன் வெளுத்தட்டும் சுப்பராயலுவும் ஏற்க மறுக்கின்றனர். மட்பாண்ட எழுத்துப் பொறிப்புகளை ஆராய்ந்த சுப்பராயலு அவற்றில் பிராகிருதக் கலப்பு இருப்பதால், பிராகிருதம் பேசிய வணிகர்களிடமிருந்தே தமிழ் வணிகர்கள் எழுத்துமுறையைக் கற்று அதன் வழித் தமிழ்நாட்டில் எழுத்துமுறை வளரத் தொடங்கியது என்கிறார். 

மகாதேவன், சுப்பராயலு, இராசன் எனும் இம்மூன்று சமகால அறிஞர்களின் கருத்துக்கள் ஒன்றுக்கொன்று மாறுபட்டு நிற்பது சங்க காலத்தின் எல்லைகளை நிருணயிப்பதில் பெரும் இடர்ப்பாட்டை ஏற்படுத்துகிறது. மகாதேவனும் சுப்பராயலுவும் வடபுலத்திலிருந்துதான் எழுத்துமுறை தமிழ் நாட்டிற்கு வந்தது என்பதில் ஒன்றுபட்டாலும் தமிழ்நாட்டு மக்களின் பரவலான எழுத்தறிவு குறித்த கருத்தில் வேறுபடுகின்றனர். எழுத்துமுறை தமிழ்நாட்டில் தோன்றிய காலமாக மகாதேவனும் சுப்பராயலுவும் பொ. கா. மு. இரண்டாம் நூற்றாண்டைக் குறிப்பிட, இராசன் அக்காலத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான காரணங்களை வரிசைப்படுத்துகிறார். அவருடைய பொருந்தல் அகழாய்வு அதற்கான அறிவியல் அடிப்படையை வழங்கியுள்ளது.

இக்கருத்துகளிலுள்ள முரண்பாடுகளுக்குள் நுழைவதற்கு முன், அப்படி நுழைவது சங்க காலத்தின் கால எல்லைகளை அறிய உதவுமா என்பதை உறுதிசெய்யவேண்டும். பானையோட்டுப் பெயர்களுடன் சங்க இலக்கியங்களில் வரும் ஆட் பெயர்களையும் ஒப்பீட்டிற்கு எடுத்துக் கொண்டதாகக் கூறும் எ. சுப்பராயலு, 'மண்கல, பாறைப் பொறிப்புப் பெயர்களோடு ஒப்பிடும்போது இலக்கியத்தில் பிராகிருதச் சாயல் கொண்ட பெயர்கள் குறைந்த விழுக்காட்டில் உள்ளன. வடமொழி ஒலிகளுக்குப் பயன்படுத்தப்படும் எழுத்துக்கள் அறவே இல்லை. எல்லா பிராகிருதப் பெயர்களும் முழுமையாகத் தமிழ்மயம் செய்யப்பட்டுள்ளன. மெய் இரட்டிக்கும் இடங்கள் பிழையின்றி எழுதப்பட்டுள்ளன. இப்பெயர்களுக்கு உரியவர்கள் அக்காலத் தமிழ்ச் சமூகத்தில் பல நிலையில் இருந்து வந்தவர்கள்' என்று குறிப்பதால் தமிழ்நாட்டின் எழுத்துமுறை பற்றி விரிவாகப் பார்க்கவேண்டியது தேவையாகிறது.

தமிழ் சார்ந்தவையாக இதுநாள்வரை நமக்குக் கிடைத்திருக்கும் வரிவடிவங்கள் நான்காகும்.
1.    சிந்துவெளி எழுத்துக்கள் - காலம் பொ. கா. மு. 2500 - பொ. கா. மு. 1500.
2.    ஆதிச்சநல்லூரில் கிடைத்ததாக இந்து நாளிதழ் வெளியிட்ட 'முந்து பிராமி' பொறிப்புப் பெற்ற தாழி.
3.    குறியீடுகளாய்க் கருதப்படும் கீறல்கள்.
4.    பிராமி.

இந்நான்கனுள் சிந்துவெளி எழுத்துக்கள் பற்றிய தெளிவான முடிவுகள் இன்னமும் பெறப்படவில்லை. ஐராவதம் மகாதேவன், அஸ்கோ பர்ப்போலா, போஷல், பிரியான் வெல்ஸ் எனப் பல அறிஞர்கள் அவரவர் கருத்துக்களைச் சிந்துவெளி எழுத்தியல் சார்ந்து தெரிவித்திருந்தாலும் அவை தமிழ் சார்ந்த எழுத்தமைப்பைச் சுட்டுகின்றன என்பதைத் தவிர்த்த வேறெந்தத் தெளிவான முடிவுகளும் இன்றுவரை எட்டப்படவில்லை. 

ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்டதாக இந்தியத் தொல்லியல் அளவீட்டுத்துறை அறிவித்து, இந்து நாளிதழால் வெளியிடப்பட்ட, 'முந்து பிராமி' எழுத்துப் பொறிப்புடனான தாழி ஒரு புதிராகக் காட்சியளித்து, ஆய்வாளர்கள் பார்வைக்குச் சிக்காமல் மறைந்துவிட்டது. அந்தப் பானையில், 'முந்து பிராமி' எழுத்துக்களில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு இருப்பதாக அதைப் படித்தளித்த நடுவணரசின் கல்வெட்டியல் துறைத் தலைவர் முனைவர் மு. து. சம்பத் இந்து நாளிதழிற்கு நேர்முகம் தந்திருந்தார். 

'முந்து பிராமி' என்ற சொல்லாட்சியில் ஆர்வம் கொண்ட ஐராவதம் மகாதேவன், தமிழ்நாடு அரசின் தொல்லியல் ஆய்வுத்துறையினர், டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய ஆய்வர்கள் ஆகியோர் தாழியைப் பார்க்க விரும்பிய போது அது போல் பொறிப்புடன் தாழியேதும் இல்லை எனும் தகவல் முன்வைக்கப்பட்டது. இன்றுவரை அந்தத் தாழி தோன்றி மறைந்த விதம் பற்றிய தெளிவு கிடைக்கவில்லை.

'கீறல்கள்' என்றும் 'குறியீடுகள்' என்றும் குறிக்கப்பெறும் பொறிப்புகள் தொடக்கக் காலத்திலிருந்தே அறியப்பட்டிருப்பினும், அண்மையில்தான் முக்கியத்துவம் பெறத்தொடங்கின. அவற்றை விரிவான அளவில் ஆராய்ந்திருக்கும் அறிஞர்கள் சிலர் சிந்துவெளி எழுத்துக்களுக்கும் பிராமி எழுத்துக்களுக்கும் இடைப்பட்ட வரிவடிவங்களாக அவற்றைக் கொள்கின்றனர். இன்று இந்திய அளவில் கிடைக்கும் இத்தகு குறியீடுகளுள் 75% தமிழ்நாட்டில்தான் கிடைக்கின்றன. இவை தனித்தோ, பிராமி கல்வெட்டுகளுடன் இணைந்தோ கிடைப்பது குறிப்பிடத்தக்கது. பானையோடுகளிலேயே இக்குறியீடுகள் அதிக அளவில் கிடைத்திருந்த போதிலும் மோதிரங்கள், முத்திரைகள், நாணயங்கள், கல்வெட்டுகள் என அனைத்து வழியாகவும் இவற்றைப் பெறமுடிவது சிறப்பாகும். 

இவை குறித்த ஆய்வுகளுள் 1960ல் வெளியிடப்பட்ட பி. பி. லாலின் கருத்துக்கள் முக்கியமானவை. பெருங்கற்படைச் சின்னங்களில் கிடைத்த 131 குறியீடுகளை, 61 குறியீடுகளாக வகைப்படுத்தி, அவற்றில் 47 சிந்துசமவெளிப் பண்பாட்டிலும் பெருங்கற்படைப் பண்பாட்டிலும் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இது சார்ந்து நிகழ்ந்த பலஆய்வுகள் சிந்துவெளி எழுத்துக்களே காலநிலையில் வளர்ச்சி பெற்றுச் செப்புக் காலப் பண்பாட்டின் ஊடாகப் பெருங்கற்காலப் பண்பாட்டை அடைந்தன என்ற முடிவைத் தந்து, சிந்துவெளி மக்களின் தெற்குச் சார்ந்த இடப்பெயர்ச்சியை உறுதிசெய்தன. சிந்துவெளி எழுத்துக்களையும் பிராமி எழுத்துக்களையும் இணைப்பதாக நம்பப்படும் இக்குறியீடுகளைப் படித்தறியும் முயற்சி தொடர்கிறது.

நன்கு படித்துணரப்பட்ட வரிவடிவமாக பிராமியைக் குறிப்பிடலாம். லலிதவிஸ்தரம் எனும் புத்தமத நூலும், பன்னவணாசுத்த எனும் சமணநூலும் பிராமி வரிவடிவத்தைக் குறிக்கின்றன. தமிழ்நாட்டில் கிடைக்கும் பிராமி கல்வெட்டுகள் தமிழ்மொழியிலும் இந்தியாவின் பிற இடங்களில் கிடைக்கும் பிராமி கல்வெட்டுகள் பிராகிருதத்திலும் இருப்பதால் தமிழ்நாட்டுக் கல்வெட்டுகளைத் தமிழ் பிராமி கல்வெட்டுகள் என்று அழைக்கின்றனர். இன்றைக்குக் கல்வெட்டு, தொல்லியல் அறிஞர்களுக்குள் நிகழும் விவாதங்கள், பிராமி முதலில் தோன்றிய இடம் எது என்பது பற்றியதாகவே உள்ளன. இராசன், இராசவேலு உள்ளிட்ட ஆய்வாளர்கள் பிராமி எழுத்துமுறை தமிழ்நாட்டில் தோன்றியதே என வாதிட, மகாதேவனும் சுப்பராயலுவும் அது வடபுலத்திலிருந்து வந்ததே என்று கூறுகின்றனர்.

பிராமி தமிழ்நாட்டில் தோன்றியதே என்பதற்கான சான்றுகளை இராசன் தம் நூலில் பரவலாகக் காட்டியுள்ளார். 'ஐராவதம் மகாதேவன் தமிழ் பிராமிக் கல்வெட்டுகளின் வரிவடிவத்தில் காணப்படுகின்ற அகரமேறிய மெய்யைக் குறிப்பிடுவதற்கு இடப்படும் ஒலிக்குறியீட்டின் அடிப்படையிலும் மெய்யெழுத்திற்கு இடப்படும் புள்ளி வழக்கிற்கு வந்த காலத்தைக் கணக்கில் கொண்டும் தமிழ் பிராமியை  I, II, III எனப் பகுத்துள்ளார். தமிழ் பிராமி Iல் அகரமேறிய மெய்யைக் குறிக்கவும் ஆகாரமேறிய மெய்யைக் குறிக்கவும் எழுத்தின்மேல் வலப்புறம் ஒலிக்குறியீடாக ஒரு படுக்கைக் கோடு இடப்பட்டது. தமிழ்மொழி நன்கு கற்றவர்கள் குறிலுக்கும் நெடிலுக்கும் இடையே காணப்படும் பாகுபாட்டை உணர்ந்து படித்துக்கொள்வர்.

ஒரு சொல்லில் வரும் அகரமேறிய அல்லது ஆகாரமேறிய மெய்யைக் குறிக்கும் இவ்வொலிக் குறியீடு குறிலாக மட்டுமன்றி நெடிலாகவும் பொருள் தருவதாக அமைந்துவிடுமானால் அச்சொல்லின் உண்மைப் பொருளைப் புரிந்துகொள்வதில் மொழி அறிந்தவர்களுக்கும்கூடச் சிக்கல் ஏற்பட்டுவிடும். எனவே இச்சிக்கலைத் தவிர்க்கும் பொருட்டுத் தமிழ் பிராமி IIல் இவ்வொலிக் குறியீடு ஆகாரமேறிய மெய்யைக் குறிக்க மட்டும் பயன்படுத்தப்பட்டது. எனவே தமிழ் பிராமி IIல் ஓர் அடிப்படைக் குறியீட்டை உயிர்மெய்க் குறிலாகவோ அல்லது மெய்யாகவோ எடுத்துக்கொள்ளலாம். இம்முறையில் தமிழ் பிராமி Iல் காணப்படும் சிக்கல் ஓரளவு குறைக்கப்பட்டது எனலாம்.

ஆயினும், மெய்க்கும் உயிர்மெய்க் குறிலுக்கும் வரிவடிவத்தில் எவ்விதப் பாகுபாடும் காட்டப்படவில்லை. இது ஒரு குறை எனலாம். எனினும் இக்குறையை முழுவதுமாகக் களைய, தமிழ் பிராமி IIIல் மெய்யைக் குறிக்க அடிப்படைக் குறியீட்டின் மேல் புள்ளியிடப்பட்டது. எனவே தமிழ் பிராமி I எழுத்துமுறை காலத்தால் முந்தியது எனவும் தமிழ் பிராமி II எழுத்துமுறை காலத்தால் சிறிது பிந்தியது எனவும் தமிழ் பிராமி III எழுத்து முறை அதாவது புள்ளிவைத்து எழுதும் முறை தொல்காப்பியரின் எழுத்துச் சீர்திருத்தத்தினால் ஏற்பட்டது என்ற கருத்தும் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.  

ஆயினும், பல்வேறு தரவுகளை நுணுகிப் பார்க்கும்போது தமிழ் பிராமி Iம் IIம் தொடக்கக் காலம் முதலே தமிழகத்தில் கலந்தே கிடைப்பதாக இப்பொழுது கருதவேண்டியுள்ளது. புள்ளியியல் அடிப்படையில் ஆய்வினை மேற்கொண்ட மகாதேவன், தமிழ் பிராமி I பொ. கா. மு. 2ஆம் நூற்றாண்டின்  தொடக்கக் காலத்தில் அதிகமாகவும் பின்னர்க் குறைந்து பொ. கா. மு. முதலாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் வழக்கில் இருந்து மறைந்துவிடுவதாகவும் தமிழ் பிராமி II பொ. கா. மு. முதலாம் நூற்றாண்டு தொட்டுக் கிடைப்பதாகவும் மெய்க்குப் புள்ளியிடும் தமிழ் பிராமி III முறை பொ. கா. 2ஆம் நூற்றாண்டில் வழக்கிற்கு வந்ததாகவும் கணித்துள்ளார்.' 

அசோகர் காலக் கல்வெட்டுகளையும் தமிழ் பிராமி கல்வெட்டுகளையும் நன்கு ஆராய்ந்த நிலையில், அசோகர் காலக் கல்வெட்டுகளில் காணப்படும் பிராமி எழுத்து முறை மகாதேவன் குறிப்பிடும் தமிழ் பிராமி இரண்டாம் வகையினதாகவே உள்ளதென்கின்றனர் இராசனும் இராசவேலுவும். மகாதேவனும் சுப்பராயலுவும் குறிப்பிடுமாறு அசோகர் பிராமியிலிருந்துதான் தமிழ் பிராமி வந்ததெனில், அசோகர் பிராமியில் காணப்பெறாத 'முதல்வகை' எழுத்துமுறை தமிழ் பிராமியில் மட்டும் இடம்பெற்றிருப்பது எங்ஙனம் எனும் கேள்வியை எழுப்பும் இராசன், எங்கு எழுத்துமுறை தோன்றியதோ அங்குதான் சோதனைகள் நிகழ்த்தப்பட்டு, குழப்பங்கள் நிலவி, தெளிவுகள் ஏற்படமுடியும். அவ்வகையில் பார்த்தால் இவ்வகை எழுத்துமுறை தமிழ்நாட்டிற்கே உரியதாகும் என்று கூறுகிறார்.

தொல்லியல் அடிப்படையிலும் இதற்கான சான்றுகளை இராசன் முன்வைப்பது கூடுதல் சிறப்பாகும். 'கொடுமணல் அகழாய்வுக் குழிகளில் எட்டு வாழ்விட (வீட்டு) மண்தரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பொதுவாக ஒரு வீட்டுத் தரையின் பயன்பாட்டின் காலம் குறைந்தது ஐம்பது ஆண்டுகள் என எடுத்துக்கொண்டால், எட்டு வீட்டுத் தரைகள் 400 ஆண்டுகளில் உருவாகியிருக்கவேண்டும். இவற்றின் காலத்தை மேல் மண்ணடுக்கிலிருந்து கீழ் நோக்கியோ, கன்னிமண் மேலுள்ள மண்ணடுக்கு முதல் மேல் நோக்கியோ கணிக்கலாம்.'

இந்த எட்டு மண் அடுக்குகளின் காலம்  8 X 50 = 400 ஆண்டுகளாக அமைகிறது. கொடுமணல் வாழ்விடத் தரையின் கன்னிமண் அடுக்கில் கிடைத்துள்ள பானையோட்டுப் பொறிப்புகள் பிராமி I, II வகையின. திரு. மகாதேவன் கூற்றுப்படிப் பார்த்தால், இவ்வடுக்கின் காலம் பொ. கா. மு. முதல் நூற்றாண்டு. இவ்வாழ்விடத் தரையின் மேலடுக்கிலும் இதே வகையினவான பிராமி பொறிப்புகள் கொண்ட பானையோடுகளே கிடைத்துள்ளன. மகாதேவன் வகைப்பாடு கொண்டு பார்த்தால், இவ்வடுக்கின் காலமான பொ. கா. 250க்குரிய புள்ளியிட்ட பிராமி பொறிப்புகளே இங்குக் கிடைத்திருக்கவேண்டும். கிடைத்திருக்கும் பொறிப்புகள் பொ. கா. மு. முதல் நூற்றாண்டுக்குரியன என்பதால், இராசன் மேலிருந்து கீழாகக் கணக்கீடு செய்து கன்னிமண் தரையில் கிடைத்திருக்கும் பானையோட்டுப் பொறிப்புகளின் காலத்தைப் பொ. கா. மு. 400க்கு நகர்த்துகிறார். எனில், 300 ஆண்டுக் காலமாகத் தமிழ் பிராமி வளர்ச்சி ஏதும் காணவில்லை என்றாகும். 

தமிழ் பிராமியின் தொடக்க வரிவடிவத்திற்கு மகாதேவன் அளித்துள்ள காலக் கணிப்பான பொ. கா. மு. 2ஆம் நூற்றாண்டு, தொல்லியல் சான்றுகளுக்கு எதிராக இருப்பதை இராசன் தம் நூலில் நன்கு சுட்டியுள்ளார். கொடுமணலின் எட்டு மண் அடுக்குகளிலும் மகாதேவன் வரையறுத்துள்ள பொ. கா. முதல் நூற்றாண்டுக்குரிய வரிவடிவம் கிடைக்காமையின் மொத்தமுள்ள 2 மீட்டர் ஆழப் பண்பாட்டு எச்சங்களையும் பொ. கா. மு. இரண்டிற்கும் ஒன்றிற்கும் இடையேயான கால அளவில் வைக்க வேண்டியுள்ளமை தொல்லியல் மரபுகளுக்கும் கணக்கீட்டிற்கும் முரணாக அமையும் என்பதுடன், கொடுமணல் பகுதியில் பொ. கா. மு. 2ஆம் நூற்றாண்டிற்கு முன் மக்கள் வாழ்ந்தமைக்கான எச்சங்களே இல்லை என்றும் கருத்துக் கொள்ள நேரும் என்று தெரிவிக்கும் இராசன், அகழாய்வுப் பண்பாட்டுக்கூறுகளின் அடிப்படையில் கொடுமணல் கன்னிமண் தரையின் காலத்தைப் பொ. கா. மு. 400க்கும் முன்னதென உறுதிப்படுத்துகிறார். 

பெருங்கற்படைக் காலமாக முன்வைக்கப்படும் நாகரிகம் இரும்புடன் தொடர்புடையது. கருப்பு சிவப்பு மட்பாண்டங்களைப் பயன்படுத்திய இவர்கள்தான் சங்க காலத்தை உருவாக்கியவர்களின் முன்னோடிகள் என்பது பேராசிரியர் செண்பகலட்சுமியின் கூற்றாகும். பொ. கா. மு. ஆயிரத்திலிருந்து தமிழ்நாட்டில் பெருங்கற்படை நாகரிகம் தென்படுவதைத் தொல்லியல் ஆய்வர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இது பொ. கா. மு. 500 அளவில் வரலாற்றுக் காலமாக மாறியிருக்கலாம் என்பது அவர்தம் துணிபு.

தமிழ்நாட்டில் அரசுருவாக்கம் எப்போது ஏற்பட்டது என்பது மிக முக்கியமான கேள்வியாகும். இந்த அரசுருவாக்கத்தைக் கொண்டே சங்க காலத்தின் தொடக்கத்தைத் தீர்மானிக்க முடியும். சங்க இலக்கியங்களில் பதிற்றுப்பத்து, புறநானூறு, பத்துப்பாட்டு எனும் இலக்கியங்கள் அரசு சார்ந்து வளர்ந்தவை. பதிற்றுப்பத்தில் காணப்படும் சேர மன்னர்களைப் பற்றிய பாடல்களைக் கொண்டு நோக்கும்போது, ஒரு மன்னரின் ஆட்சிக் காலத்தை முப்பதாண்டுகளாகக் கொண்டால்கூட முந்நூறு ஆண்டுக்காலம் தேவைப்படுகிறது. இந்தப் பத்துப் பேர் தவிர, புறநானூறு குறிப்பிடும் சேர அரசர்கள், பிற சங்க இலக்கியப் பாடல்களில் இடம்பெறும் சேர அரசர்கள் இவர்களை எல்லாம் எந்தக் கால எல்லைக்குள் கொணர்வது? 

பொ. கா. 250ல் தமிழ்நாட்டில் பல்லவராட்சி தொடங்கிவிடுவதால், சங்க காலத்தின் முடிவு பொ. கா. 250 என்பதில் எந்தத் தடுமாற்றமும் இல்லை. பதிற்றுப்பத்து குறிப்பிடும் சேர அரசர்களைக் கணக்கில் கொண்டாலே, சங்கத்தின் தொடக்கம் பொ. கா. மு. 50க்குப் போய்விடும். எனவே சாஸ்திரி, வையாபுரி இவர்களின் காலக்கணிப்பு சரியன்று என்பது உறுதியாதல் காண்க.

தமிழ்நாட்டு அரசர்களைப் பற்றி வடபுலத்து மன்னர்கள் இருவர்தம் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. அவற்றுள் காலத்தால் முற்பட்டது அசோகரின் கல்வெட்டு. குஜராத் மாநிலத்திலுள்ள கிர்னார் கல்வெட்டு, அசோகரின் அரசுக்கு வெளியில் இருக்கும் அரசர்களாகச் சோழர், பாண்டியர், கேரளர், சத்திய புத்திரர் அரசுகளைக் குறிக்கிறது. பெஷாவருக்கு அருகிலுள்ள ஷாபாங்கார் எனும் ஊரிலுள்ள பாறைக் கல்வெட்டும் சோழ, பாண்டியர்களைக் குறிக்கிறது. கல்வெட்டில், இவர்தம் நாடுகள் நட்பு நாடுகளாகக் குறிக்கப்பட்டுள்ளன. இந்தக் கல்வெட்டின் காலம் பொ. கா. மு. மூன்றாம் நூற்றாண்டின் இடைப்பகுதி, எனில், பொ. கா. மு. 250ல் தமிழ்நாட்டு அரசர்களாகச் சேரர், சோழர், பாண்டியர், அதியமான் இருந்தனர் என்பது உறுதிப்படும்.

இந்தியாவின் பல பகுதிகளில் காணப்படும் அசோகரின் கல்வெட்டுகள் தமிழ்நாட்டைத் தொடவில்லை. ஆந்திராவில் எர்ரகுடி, கருநாடகத்தில் பிரமகிரி என்று நின்றுவிடுவதைப் பார்க்கிறோம். அவை எதைத் தெரிவிக்கின்றன? மெளரியப் பேரரசின் ஆளுமை தொடமுடியாத வல்லமை கொண்ட அரசர்களின் ஆட்சியில் தமிழ்நாடு இருந்ததைத்தானே? பொ. கா. மு. 250ல் இத்தகு நிலையெனில், தமிழ்நாட்டில் அரசுருவாக்கம் நிகழ்ந்தது எப்போது? திடீரென இனக்குழுக்கள் ஒன்றாகித் தலைமைகள் சிதறி வேள், வேந்து என அரசு உருவாகிட முடியாது. அதற்கெனக் காலம் வேண்டும். மிகக் குறைவான கால எல்லையைத் தேர்ந்தால்கூட இத்தகு வலிமை நிலையடைய நூற்றைம்பது முதல் இருநூறு ஆண்டுகளாவது வேண்டியிருக்கும். 

எனில், தமிழ்நாட்டில் அரசுருவாக்கம் பொ. கா. மு. 450ல் தொடங்கியதாகக் கொள்ளலாம். பெருங்கற்படைப் பண்பாட்டு மக்கள் வரலாற்றுக் காலத்திற்குள் நுழைவதாகக் கொள்ளப்படும் பொ. கா. மு. 500க்கும் பொ. கா. மு. 450க்கும் இடைப்பட்ட காலம் அரசுச் சிந்தனைகள் உருப்பெற்ற காலமாகலாம். இவையெல்லாம் தொல்லியல், கல்வெட்டியல், இலக்கியச் சான்றுகள் வழியாக மேலும் முனைப்புடன் ஆராயப்பட வேண்டிய நிலைகள்.

அரசுருவாக்கம் பற்றிய இராசனின் கருத்தும் இவ்விடத்தே நினைக்கத்தக்கதாகும். 'கடந்த 25 ஆண்டுகளாகச் செண்பகலெட்சுமி, ராஜன் குருக்கள், சிவத்தம்பி, சுதர்சன் செனாவிரத்தினே போன்றோர் சங்க காலச் சமுதாயத்தில் காலந்தோறும் ஏற்பட்ட மாறுதல்களைத் தொல்லியல், கல்வெட்டு, நாணயம் போன்ற தரவுகளை உள்வாங்கிக் கொண்டு மானுடவியல் கோட்பாட்டின் அடிப்படையில் ஆய்வு செய்துள்ளனர். இந்த ஆய்வாளர்கள் அனைவரும் சங்க இலக்கியங்களில் காணப்படும் திணைக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு ஐந்திணைகளில் ஏற்படுகின்ற, ஏற்பட்ட பல்வேறு சமூகச் சூழல்களைச் சுட்டிக்காட்டி அவற்றின் அடிப்படையில் எழுந்த அரசுருவாக்கத்தை விளக்கியுள்ளனர். 

இத்திணைமரபுகளின் அடிப்படையில் வளமையான பகுதியான மருதநிலப் பகுதியிலேயே முதன்முதலில் அரசு உருவாகியிருக்க வேண்டும் என்ற கருத்தினை முன்மொழிகின்றனர். உழவுத் தொழிலைப் பெரிதும் நம்பி அதன் மூலம் ஏற்பட்ட உபரி உற்பத்திப் பெருக்கத்தை மனத்தில் கொண்டு இந்நிலைப்பாட்டை இவ்வாய்வாளர்கள் எடுத்திருக்க வேண்டும். வளமையான பகுதிகளிலேயே அரசு உருவாகியிருக்க முடியும் என்ற கருதுகோளின் அடிப்படையில் எழுந்த ஒரு முடிவு இது எனலாம். ஆனால், அண்மைக் காலங்களில் வெளிக்கொணரப்பட்ட தொல்லியல் சான்றுகள் இம்முடிவுகளை முழுமையாக ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் இல்லை. 

எடுத்துக்காட்டாக முல்லையும் பாலையும் தாங்கி நிற்கும் கொங்குநாடும் சேர அரசு உருவாக்கத்திற்குப் பெரும் பங்கு புரிந்துள்ளது. இம்முல்லை நிலத்தில் வாழ்ந்த மக்கள் இங்குக் கிடைக்கின்ற இரும்புக் கனிமத்தையும் மணிக்கற்களையும் பயன்படுத்தித் தமது தொழில்நுட்பத் திறனால் மிகச் சிறந்த எஃகுக் கருவிகளையும் மணிகளையும் உருவாக்கி மேலை நாடுகளுக்குக் குறிப்பாக ரோம நாட்டிற்கு ஏற்றுமதி செய்துள்ளனர். வெளிநாட்டு வணிகத்தின் மூலம் பெற்ற வருவாய் இவர்களது வாழ்க்கை மேம்பாட்டிற்கும் சமூகக் கட்டமைப்பிற்கும் அரசுருவாக்கத்திற்கும் அடிகோலியது. 

இந்தியாவில் கிடைத்த ரோமநாணயங்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் கொங்குப்பகுதியிலேயே அதிகமான நாணயங்கள் கிடைத்துள்ளன. இத்தகைய நாணயங்கள் வளமையான மருதநிலப்பகுதியில் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, நீர்வளம் மிக்க வளமையான பகுதியில் மட்டுமே அரசு உருவாக்கம் முதன்முதலில் ஏற்பட்டிருக்க வேண்டும் என்ற கருத்தை மீண்டும் ஆய்விற்கு உட்படுத்த வேண்டியுள்ளது' எனும் இராசனின் கருத்து 'அரசுருவாக்கம்' பற்றி இதுநாள்வரை எழுந்துள்ள கோட்பாடுகளைத் தகர்ப்பது காணலாம். இனக்குழு, தொழில்நுட்பம், வணிகத் தொடர்புகள், எழுத்தறிவு, இலக்கியம், அரசுருவாக்கம் எனப் பல தளங்களில் ஆராய்வதன் வழியே சங்க காலத்தின் காலத்தைப் பற்றிய அறிவியல் சார்ந்த முடிவினைப் பெறமுடியும்.

பிராமி கல்வெட்டுகளை எப்படிக் காலக் கணிப்புச் செய்கிறார்கள் என்பதும் நோக்கத்தக்கது. அதன் எழுத்தமைதியே இதற்கு உதவுகிறது. அந்த எழுத்தமைதி பார்ப்பவர்க்கேற்ப வேறுபடும் அதிசயமும் உண்டு. மகாதேவனுக்குப் பொ. கா. முதல் நூற்றாண்டினதாகக் காட்சிதரும் ஜம்பைக் கல்வெட்டு தமிழ்நாடு அரசின் தொல்லியல்துறை ஆய்வர்களின் பார்வையில் பொ. கா. மு. இரண்டாம் நூற்றாண்டாகிவிடுகிறது. இருவர் பார்வைக்குமிடையே முந்நூறு ஆண்டுகள் ஊசாலாடுவதைக் கருதவேண்டும். இருவர் பார்வையில் எது சரி? பிராமி எழுத்துமுறை கருநாடகத்திலிருந்து வந்த சமண முனிவர்களிடமிருந்து தான் தமிழ்நாட்டில் பரவியது என்றால், பல கேள்விகள் எழுகின்றன. 

1. மெளரிய பிராமியில் உள்ள வருக்க எழுத்துக்கள், தமிழில் வருக்க ஒலிப்புகள் இருந்தபோதும் ஏன் தமிழ் பிராமி எழுத்துமுறையில் கொள்ளப்படவில்லை?
2. மெளரிய பிராமியில் இல்லாத தமிழுக்கே உரித்தான 'ழ, ள, ற, ன' எழுத்துக்கள் தமிழ் பிராமியில் எப்படி உருவாயின?
3. மெளரிய பிராமியின் 'ம' எழுத்திற்கும் தமிழ் பிராமியின் 'ம' எழுத்திற்கும் உள்ள வேறுபாட்டிற்குக் காரணம் என்ன?
4. மெளரிய பிராமியில் இல்லாத பிராமி I எழுத்துமுறை தமிழ் பிராமிக் கல்வெட்டுகளில் காணப்படுவது எங்ஙனம்?
5. தமிழ்நாட்டில் பிராமி கல்வெட்டுகள் உருவாகக் காரணர்களாகக் கருதப்படும் கருநாடக சமண முனிவர்கள் ஏன் தாங்கள் வாழ்ந்த இடமான கருநாடகத்தில் பிராமி கல்வெட்டுகள் உருவாக உதவவில்லை? 
6. தமிழ்நாட்டு வணிகர்களை பிராகிருத வயப்படுத்தித் தங்கள் எழுத்துமுறையைக் கற்றுத் தந்த வடபுலத்து பிராகிருத வணிகர்கள் ஏன் தாங்கள் வாழ்ந்த பகுதிகளில் பானையோட்டுப் பொறிப்புகளை இந்த அளவிற்கு உருவாக்கவில்லை? 
7. தமிழ்நாட்டுப் பானைப் பொறிப்புகளில் ஐம்பது விழுக்காடு(?) பிராகிருதக் கலப்பு இருப்பதாலேயே எழுத்து முறையைத் தமிழர்கள் பிராகிருதம் பேசிய வணிகர்களிடமிருந்துதான் கற்றார்கள் என்பது பொருந்துமா?

இதில் கவனிக்கவேண்டிய மற்றொரு செய்தியும் உண்டு. தமிழ்நாட்டில் காணப்படும் பிராமி கல்வெட்டுகளுள் பெரும்பான்மையன தமிழர்களின் கொடையைத் தமிழில் குறிப்பன. இவற்றையெல்லாம்விட மிக முக்கியமான செய்தி ஒன்று உண்டு. தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கல்வெட்டுத்துறை மாணவர்கள் தேனிமாவட்டம் ஆண்டிப்பட்டி வட்டத்தில் உள்ள புலிமான் கோம்பையில் மூன்று சங்ககால நடுகற்களைக் கண்டறிந்தனர். எழுத்துப் பொறிப்புள்ள இந்நடுகற்கள் இந்தியாவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட நடுகற்களில் மிகப் பழைமையானவை. அவற்றுள் இரண்டின் எழுத்துப் பொறிப்புகளைப் பொ. கா. மு. மூன்றாம் நூற்றாண்டிற்கும் முற்பட்டவையாக இராசன் குறிப்பிடுகிறார். இவை பொ. கா. மு. இரண்டாம் நூற்றாண்டிற்கு முற்பட்டவையாகலாம் என்று மகாதேவன் கருதுவது குறிப்பிடத்தக்கது.

இந்நடுகற்கள் கிடைப்பதற்கு முன் 'தொல்லியல் நோக்கில் சங்க காலம்' என்ற தம்முடைய நூலில், 'சங்க இலக்கியப் பாடல்களில் உள்ள, 'பெயரும் பீடும் எழுதி', 'பெயர் பொறித்து' என்ற சொற்றொடர்கள் வீரனின் உருவம் வண்ணமாகத் தீட்டப்பட்டதையும் பொறிக்கப்பட்டதையும் குறிக்கின்றனவே தவிர வரிவடிவத்தைக் குறிக்கவில்லை' என்று குறிப்பிட்ட இராசன், 'கூருளி குயின்ற கோடுமாய் எழுத்து' என்ற சங்கத் தொடரைக்கூட வரிவடிவம் குறித்த பாடலடியன்று என்று ஏற்க மறுத்த இராசன், புலிமான்கோம்பை கண்டுபிடிப்பிற்குப் பிறகு, இதே தொடர்களைச் சுட்டி, 'இக்குறிப்புகள் அனைத்தும் சங்க காலத்தில் எழுப்பப்பெற்ற நடுகற்களில் எழுத்துக்கள் இருந்தன என்பதைப் புலப்படுத்துகின்றன' என்று கூறுவது எண்ணத்தக்கது.

இலக்கியம், மொழியியல் சார்ந்த அறிஞர்களுக்கிடையே காணப்படும் கருத்து வேறுபாடுகளைப் போலவே தொல்லியல், கல்வெட்டியல் சார்ந்த அறிஞர்களுக்கிடையிலும் காலக் கணக்கீடுகளில் ஒத்திசைவு இல்லை. அறிவியல் சார்ந்த ஆய்வுத் துறையாகப் போற்றப்படும் தொல்லியல் வழி வெளிப்படும் சான்றுகளைக் கால அட்டவணைப்படுத்துவதில்கூட அறிஞர்களுக்கிடையில் ஒருமைப்போக்கில்லை. ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் கூட்டுறவாக அகழாய்வு செய்யும் இரண்டு அறிஞர்கள்கூடக் கருத்து விளைவுகளில் ஒன்றுபடுவதில்லை என்பதையும் காணமுடிகிறது. இதைவிடப் பெருங்குறை ஒன்று உண்டு. கல்வெட்டு, தொல்லியல் சார்ந்த அறிஞர்கள் தேவைக்கு இலக்கியம் படிக்கிறார்கள். இலக்கிய, வரலாற்று அறிஞர்கள் தங்கள் கருத்துக்களை நிலைநிறுத்த மட்டுமே கல்வெட்டு, தொல்லியல் சான்றுகளைத் துணைக்குக் கொள்கிறார்கள். இவர்களுக்கிடையில் மொழியியல் வல்லுநர்கள் அவர்களால் இயன்றதைச் செய்து நிறுத்திக்கொள்கிறார்கள். 

கல்வெட்டு, தொல்லியல், இலக்கியம், மொழியியல் இவை அனைத்திலும் சிறந்த அறிஞர்கள் தமிழ்நாட்டில் அருகியுள்ளனர். இருப்பவர்களுக்குள்ளும் ஒத்திசைவு இல்லை. இந்த இடைவெளிதான் இன்றளவும் சங்க காலத்தின் காலஎல்லைகள் பற்றியோ, பழந்தமிழ் எழுத்துக்களின் தோற்றக்காலம் பற்றியோ எத்தகு உறுதியான முடிவுகளுக்கும் வரமுடியாச் சூழலில் நம்மைத் தடுத்து நிறுத்தியிருக்கிறது. அரசியல், மொழி, இனம், சமயம், இசங்கள், குழுக்கள் சாராமல் உண்மைகளை முன்நிறுத்தி, உண்மைகளை மட்டுமே வெளிப்படுத்தி வரலாற்றுப் பார்வையில் அறிவியல் பின்புலத்தோடு அவற்றை நிறுவ அறிஞர்கள் ஒன்றிணையும் நாள்வரை எது சங்க காலம் என்ற கேள்விக்கு விடைகிடைக்க வாய்ப்பே இல்லை.

 

       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.