http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[180 Issues]
[1786 Articles]
Home About US Temples Facebook
Issue No. 130

இதழ் 130
[ நவம்பர் 2016 ]


இந்த இதழில்..
In this Issue..

பத்துப்பாட்டில் கட்டடக்கலை - 1
சங்க காலத்தின் காலம்?
பூதவரியில் குதிரையும் சிங்கமும்
Ammai in Banteay Srei and the Tamil Maritime Links in South East Asia
TEMPLES IN AND AROUND THIRUCHIRAPPALLI - 3
இதழ் எண். 130 > தலையங்கம்
பத்துப்பாட்டில் கட்டடக்கலை - 1
இரா. கலைக்கோவன்

 

தமிழ் இலக்கியச் சான்றுகளுள் காலத்தால் முற்பட்டவையாக அமைந்துள்ள சங்க இலக்கியங்கள் தமிழர் நாகரிகம், பண்பாடு குறித்த அரிய தகவல்களை உள்ளடக்கியுள்ளன. பல அறிஞர்கள் இவற்றை இலக்கிய அடிகளிலிருந்து தொடர்ந்து அகழ்ந்து காட்சிப்படுத்தி வருகின்றனர். தொகை, பாட்டு இவற்றை முழுமையான அளவில் ஆய்ந்தும் நூல்கள் வெளிவந்துள்ளன. அண்மையில் சாகித்ய அகாதெமி மறுபதிப்புச் செய்துள்ள தமிழறிஞர் டாக்டர் மா. இராசமாணிக்கனாரின் 'பத்துப்பாட்டு ஆராய்ச்சி' நூலை மறுபடிப்புச் செய்தபோது, தமிழர் வளர்த்த அழகுக் கலைகளுள் கட்டடக்கலை மட்டும் அந்நூலில் விடுபட்டிருப்பது தெரியவந்தது. அதை நேர்செய்யும் நோக்கில் பத்துப்பாட்டையும் மீளப் பயின்றமை பயனுள்ள கட்டடக்கலைச் செய்திகளை அளித்தது.

கட்டடக்கலைத் தரவுகளைக் கொண்டு பத்துப்பாட்டு இலக்கியங்களை மூவகைப்படுத்தலாம். குறிஞ்சிப்பாட்டு, முருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை எனும் மூன்றும் குறைவான அளவிலேயே கட்டடக்கலைச் செய்திகளைக் கொண்டுள்ளன. முல்லைப்பாட்டு, மலைபடுகடாம், பட்டினப்பாலை, சிறுபாணாற்றுப்படை ஆகிய நான்கும் கட்டடக்கலைச் செய்திகளை மிகுதியாகப் பெற்றுள்ள இலக்கியங்களாகக் காட்சிதருகின்றன. பெரும்பாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை ஆகியன பயனுள்ள கட்டடக்கலைத் தரவுகளுடன் முன்னனியில் உள்ளன.

குறிஞ்சிப்பாட்டு

குரம்பை

கபிலரின் குறிஞ்சிப்பாட்டு குறிப்பிடும், குறுங்கால் குரம்பை சிறிய அளவிலான மரத்தூண்கள் கொண்ட சிறு குடிலாகும். இதைக் குடிசையாகவும் கொள்ளலாம். இதன் கூரையாக மணிகள் அகற்றப்பட்ட தினைத்தாள் வேயப்பட்டிருந்தது. இது போன்ற சிறு குடில்களின் கூரை புல்லாலும் தருப்பை, ஈந்திலை போன்றவற்றாலும்கூட வேயப்பட்டிருந்தது. குரம்பைகள் பற்றிய சில விரிவான படப்பிடிப்புகள் பெரும்பாணாற்றுப்படையில் உள்ளன. சங்ககாலக் குரம்பைகள் பற்றித் தனித்ததோர் ஆய்வே மேற்கொள்ளத்தக்க நிலையில் தொகையும் பாட்டும் தரவுகளை நிறைத்து வைத்துள்ளன.

பரண்

குறிஞ்சிப்பாட்டு குறிப்பிடும் மற்றொரு கட்டமைப்பு பரணாகும். முற்றிய தானியங்களை விலங்குகளிடமிருந்தும் பறவைகளிடமிருந்தும் காப்பாற்றுவதற்காக மரத்தின்மீது அமைக்கப்படும் சிறு தங்குமிடமே பரணாகும். இவற்றை நிற்பதற்கான தட்டுப்பலகை, இருப்பதற்கும் படுப்பதற்கும்கூட இடம்தந்த சிறுகுடில் எனப் பல்வேறு அமைப்புகளில் உருவாக்கியிருந்தனர். இந்தப் பரணும்கூட விரிவான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட வேண்டிய சங்ககாலக் கட்டமைப்பாகும். இதன் வேறு வடிவங்களாய் இன்றளவும் தொடரும் மரக்குடில்கள் சங்கப் பரண்களின் அமைப்பறிய உதவும். குறிஞ்சிப்பாட்டுச் சுட்டும் பரண் (இதணம்) புலி நடமாட்டத்தின்போது பாதுகாப்பிற்காக மனிதன் ஏறித் தங்க உதவும் இடமாகக் காட்டப்பட்டுள்ளது. பலவிதமாய் ஓசை எழுப்பும் கருவிகளை (தழல், தட்டை, குயிர் - கிளி விரட்டும் கருவிகள்) இங்கிருந்து ஒலித்துப் புனம் காத்தனர் குறிஞ்சி மக்கள். 'சேணோன்' என்ற சொல் பரண் அமைத்த கட்டுமானக் கலைஞரைச் சுட்டிப் பின்னாளில் சாதிப் பெயராக மாறியதாக உரையாசிரியர் குறிப்பிடுகிறார்.

முருகாற்றுப்படை

முருகன் உறையும் இடங்களாகப் பரங்குன்று, அலைவாய், ஆவினன்குடி, ஏரகம், பழமுதிர்ச்சோலை ஆகிய ஐந்து ஊர்களைக் குறிப்பாகவும் குன்றுகளைப் பொதுவாகவும் சுட்டும் நக்கீரரின் இவ்விலக்கியம் பத்துப்பாட்டு இலக்கியங்களில் காலத்தால் மிகவும் பிற்பட்டது. ஐந்து முருகத்தலங்கள் இடம்பெற்றிருந்தும் ஒரு கோயில்கூடக் கட்டுமான நோக்கில் விளக்கப்படவில்லை. வாயில், மாடம், கொடிமரம், மாடங்கள் மிக்க அங்காடித்தெரு எனும் மிகச்சில சொல்லாட்சிகளே கட்டுமானம் குறித்து நிற்கின்றன. அவற்றுள் வாயில், மாடம் எனும் சொற்கள் பிற பத்துப்பாட்டு நூல்களிலும் விரவியுள்ளன. அவற்றுள் வாயில் சிறு, பெருவாயில்களாகவும் நெடுமை பொருந்திய வாயிலாகவும் சுட்டப்படுவது நோக்க, சங்ககால வாயில் அமைப்புப் பற்றியும் தனி ஆய்வு தேவைப்படுவது உணர்க.

மதுரையின் வாயில்

முருகாற்றுப்படை சுட்டும் வாயில் மதுரையின் வாயில். கட்டுமானச் செய்திகள் இல்லையாயினும் மதுரை மன்னரின் வீரச்சிறப்புக்கு வாயில் சான்று பகர்கிறது. போரிடுவார் இல்லையென்றானதால் போர் அருகிப்போன வாயிலாம் அது. அந்த வாயிலருகே இருந்த கொடிமரத்தில் வரிப்பந்தும் பாவையும் நாலவிடப்பட்டிருந்தன. பந்தும் பாவையும் சங்கப் பெண்களின் விளையாட்டுப்பொருட்கள். அவை கொடிமரத்தில் தொங்குவதன் காரணம், அவற்றை அறுத்து வாயிலைத் தகர்க்கும் ஆண்மையாளர் யாருமில்லாமல் போனமைதான். பாண்டியனைத் தவிர, சுற்றியுள்ள பிற மன்னரெல்லாம் 'பந்தும் பாவையும் மட்டுமே விளையாடத்தக்கவர்' என்பதை அந்தக் கொடிமரம் உணர்த்துகிறதாம்.

மாடம்

தொகையும் பாட்டும் பரவலாகப் பயன்படுத்தியிருக்கும் கட்டடக் கலைச்சொல்லான 'மாடம்' பல பொருள் ஒரு சொல்லாக மிளிர்கிறது. வீடு, மண்டபம், உப்பரிகை, மாடக்குழி எனப் பேரகராதி தரும் இந்நான்கில் ஏற்புடைய பொருளை இடம் நோக்கி மாடத்திற்குப் பயன்படுத்த வேண்டியுள்ளது. 'மாடமாளிகை', 'எழுநிலைமாடம்' முதலிய தொடர்கள் மாடம் பெரும்பான்மையும் 'மாடிவீடு' எனும் பொருளிலேயே ஆளப்பட்டுள்ளமையை உணர்த்துமாறே, 'எழில்மாடம் எழுபது செய்து' எனும் மங்கையாழ்வாரின் சுட்டலும் கோச்செங்கணானின் மாடக்கோயில்களாம் பெருந்திருக்கோயில்களை நோக்கி நின்று, உயர்ந்த இடமே 'மாடம்' என உறுதி செய்வதை அறியலாம். 'கொடுங்கால் மாடம்', 'நெடுங்கால் மாடம்' எனும் தொடர்களும் இதை வலியுறுத்தும். 'உப்பரிகை' எனும் பொருளிலும் மாடம் ஆளப்பட்டிருப்பதை 'மேல்நிலை மாடம்', 'மகிழ் செய் மாடம்' எனும் பத்துப்பாட்டு ஆட்சிகள் விதந்தோதுகின்றன. முருகாற்றுப்படையில் இடம்பெறும் 'மாடம் மலி மறுகு', மாடிவீடுகள் விளங்கிய தெருவையே சுட்டி நிற்கிறது.

நியமம்

'நியமம்' என்ற கலைச்சொல்லால் முருகாற்றுப்படையில் சுட்டப்பெறும் மதுரையின் செல்வச் செழிப்பான அங்காடித்தெரு மதுரைக்காஞ்சியில் மிகவிரிவான அளவில் பேசப்படுகிறது. கடைகளின் அமைப்புக் குறித்த தரவுகள் இல்லை எனினும் மதுரைக்காஞ்சியில் கிடைக்கும் விற்பனையாளர், விற்பனைப்பொருள் வண்ணனைகள் கொண்டு கடைகளின் அளவு கருதமுடிகிறது. பின்னாளைய இலக்கியங்கள், கல்வெட்டுகள், சிற்பக்காட்சிகளின் துணையோடு அங்காடிகளை விரிவான பார்வைக்கு உட்படுத்தினால் பல அற்புதமான தரவுகள் வெளிவர வாய்ப்பிருக்கிறது. தமிழ்நாட்டின் வணிகக் கல்வெட்டுகள் அந்த வகையில் பெருமளவிற்கு உதவக்கூடும்.

பொருநராற்றுப்படை

முடத்தாமக்கண்ணியார் கரிகாலனைப் பாட்டுடைத் தலைவனாக்கிப் பாடியிருக்கும் பொருநராற்றுப்படை, வாய்ப்புகள் இருந்தும் சோழ அரண்மனையை விரிவாகப் படம் பிடிக்காமை வியப்பளிக்கிறது. கட்டடஞ் சார்ந்த மதில், வாயில், மாடம், கோயில் எனும் நான்கு சொற்களையே இவ்விலக்கியம் முன்வைக்கிறது. அகன்ற மதிலும் நற்பெரு வாயிலும் காவலும் கொண்ட திரு வாழும் அரண்மனையாகக் கரிகாலன் மாளிகை வண்ணிக்கப்பட்டுள்ளது. மாடம், மகிழ்செய் மாடமாக ஏவல் மகளிர் இருந்து, களைப்புற்று வருவாருக்கு, அக்களைப்பு நீங்குமாறு தேறல் அளிக்கும் இடமாகவே சுட்டப்பட்டுள்ளது.

(தொடரும்)
 

       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.