http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 139
இதழ் 139 [ டிசம்பர் 2017 ] இந்த இதழில்.. In this Issue.. |
கொற்றவை
மேலே நன்கு அலங்கரிக்கப்பட்ட குடையுடனும், தலையில் கரண்ட மகுடத்துடனும் காட்சிதரும் அம்மையின் நெற்றியை நெற்றிப்பட்டம் அலங்கரிக்கின்றது. இரு செவிகளிலும் மகர குண்டலங்கள். பின்புறம் இருபுறமும் அம்பறாத்துணியும் இடப்புறம் சங்கும் வலப்புறம் எறிநிலைச் சக்கரமும் காட்டப்பெற்றிருக்கின்றன. வலமுன்கை காக்கும் குறிப்பிலிருக்க, பின்கைகளில் முறையே மணி (?), நீண்ட வாள், சூலம். இடமுன்கை கடியவலம்பிதமாக அமைய, பின்கைகளில் முறையே வில்லும் கேடயமும். மற்றொரு பின்கை திரிபதாக முத்திரையில் இருக்கிறது. மார்புக்கச்சு அணிந்துள்ள அம்மையின் கழுத்தைச் சரப்பளியும் முத்துமாலைகளும் அலங்கரிக்கின்றன. இடமார்பில் முடிச்சுடன் கூடிய உபவீத முப்புரிநூலும் முடிச்சுடன் கூடிய உதரபந்தமும் உள்ளன. அதன்கீழே இடைக்கட்டும் தோலாடையும். எல்லாக் கைகளிலும் மூன்றடுக்கு வளையல்கள் இருக்கின்றன. சிலம்பணிந்து எருமைத்தலையின்மீது இருத்தப்பட்ட கால்களில் வலதுகால் பார்சுவத்திலும் இடதுகால் சமத்திலும் உள்ளன. கோட்ட அணைவுத் தூண்களுக்கும் பத்தி அணைவுத் தூண்களுக்கும் இடைப்பட்ட பகுதியில் கிழக்கில் மேலே சிங்கமும் கீழே தலைப்பலிச் சிற்பமும் வடிக்கப்பெற்று, மேற்கில் மேலே கலைமான் மற்றும் குள்ளப்பூதமும் கீழே நவகண்டச் சிற்பமும் வடிக்கப்பெற்றுள்ளன. கிழக்கில் ஒரு பீடத்தின்மீது நான்கு கால்களையும் ஊன்றியவாறு சுழற்றிய வாலுடன் கர்ஜித்தபடி நின்று கொண்டிருக்கும் சிங்கத்தின் பிடரி மயிர்க்கற்றைகள் சுருண்டிருப்பது செழுமையாகக் காட்டப்பட்டுள்ளது. ஊர்தியாகப் பயன்படுத்தும் வண்ணம் முதுகின்மேல் சிறிய ஆசனமும் அது கீழே விழாமல் இருக்க வயிற்றைச் சுற்றியும் பின்புற உடலைச் சுற்றியும் கட்டப்பட்டிருக்கும் கச்சைகளில் பின்புறக் கச்சை மணிகள் போன்ற அலங்கரிப்புப் பெற்றிருக்கிறது. அதன் கீழே இடது கையால் தலைமுடியைப் பற்றியவாறு வலது கையால் தன் கழுத்தை வெட்டிக் கொள்ளும் தலைப்பலி வீரரின் இடப்புறச் செவியில் பனையோலைக் குண்டலம். கழுத்தைச் சரப்பளியும் கண்டிகையும் அலங்கரிக்க, மார்பை ஸ்வர்ண வைகாக்ஷம் அழகு செய்கிறது. கைகளில் மணிக்கட்டில் வளைகளும் தோளில் கேயூரமும் கொண்டு இடைக்கட்டுடன் கூடிய தோலாடையை அணிந்திருக்கும் இவரது வலக்கால் கருடாசனத்தில் அமைந்துள்ளது. இடுப்பில் குறுவாள் தொங்கிக் கொண்டிருக்கிறது. மேற்கில் கைகளில் இலைத்தாளத்தை இசைத்தவாறு பரவச நிலையில் தலையை வலப்புறமாக ஒருக்கணித்து நின்று கொண்டிருக்கும் குள்ளப்பூதத்தின் தலைமுடி நன்கு அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. நெற்றியில் பதக்கத்துடன் கூடிய பட்டம் உள்ளது. கழுத்தில் கண்டிகையையும் மார்பில் உபவீத முப்புரிநூலையும் வயிற்றில் உதரபந்தத்தையும் கொண்டுள்ள இப்பூதத்தின் இடக்கால் சமத்தில் இருக்க, வலக்கால் பார்சுவத்தில் ஒரு பீடத்தின்மீது உள்ளது. பூதத்தின் மேற்கில் கிளைகளையுடைய கொம்புகளுடன் முதுகில் கட்டி வைக்கப்பட்ட ஆசனத்தைச் சுமந்தபடி கலைமான் ஒன்று நான்கு கால்களையும் பீடத்தில் ஊன்றியவாறு நின்று கொண்டிருக்கிறது. அதன் கழுத்திலும் உடலில் நீளவாக்கிலும் மணிமாலைகள் அழகு செய்கின்றன. அதன்கீழே கொண்டையுடனும் இருசெவிகளிலும் மகர குண்டலங்களுடனும் கருடாசனத்தில் அமர்ந்து தனது தொடையைக் கத்தியால் அறுத்துக்கொண்டிருக்கும் நவகண்ட வீரரின் கழுத்தை அணிகலன்களும் மார்பைச் சன்னவீரமும் தோள்களைக் கேயூரங்களும் மணிக்கட்டை வளைகளும் இடையைத் தோலாடையும் அழகு செய்கின்றன. இடையில் கட்டப்பட்ட கத்தி பின்புறம் நீண்டு காணப்படுகிறது. இக்கோட்டத்தின் மேலே உள்ள மகரதோரணத்தில் சிவபெருமான் உமை இணை காட்டப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இருபுறமும் அடியவர்கள் வணங்கிய நிலையில் கருடாசனத்தில் உள்ளனர். இவர்களைச் சுற்றியுள்ள அரைவட்டத்தில் நடுப்பகுதியைக் கொடிக்கருக்குகள் அலங்கரிக்க, இருபுறமும் ஆடல் நிகழ்த்தும் பூதகணங்கள் பக்கத்துக்கு மூன்றாகக் காட்டப்பட்டுள்ளன. இந்த அரைவட்டத்துக்கு அடுத்த அடுக்கில் நடுப்பகுதியில் ஒரு வட்டத்துக்குள் ஆடல்பூதம் காட்டப்பட்டிருக்க, அதற்கு இருபுறமும் இரு மகரங்களின் வாய்க்குள்ளிருந்து வெளிப்படுமாறு பக்கத்திற்கொன்றாக ஒரு யாளியும் அதன்மீது வீரரும் அமர்ந்திருக்கின்றனர். கீழ்ப்புறத்திலிருக்கும் மகரங்களின் வாய்க்குள்ளிருந்து வெளிப்படுமாறு பக்கத்துக்கு மூன்று யாளிகளின்மீது வீரர்கள் அமர்ந்துள்ளனர். முகமண்டபக் கிழக்குச் சுவர் நடுவில் அமைந்திருக்கும் வாயிலை இருபுறமும் நான்முக அரைத்தூண்கள் அணைத்திருக்க, அவற்றையடுத்துப் பஞ்சரங்கள் அமைய, பஞ்சரங்களில் துவாரபாலகர்கள் இடம்பெற்றிருக்கின்றனர். கர்ணபத்தியின் இருமுனைகளிலும் மகாமண்டபத்தின் பக்கச்சுவர்கள் இணைகின்றன. இம்மகாமண்டபத்தின் தளங்கள் உயர்த்தப்பட்டிருப்பதால் முகமண்டபத்தின் தாங்குதளம் தரைக்குள் உள்ளது. அரைத்தூண்கள் இரு அரைத்தூண்களும் தொங்கல், தானம், தாமரைக்கட்டு, கலசம், தாடி, கும்பம், பாலி, பலகை, வீரகண்டம், எளிய போதிகைகள், உத்திரம் பெற்றுள்ளன. இடது அரைத்தூணின் தொங்கல் இரண்டாகப் பிரிக்கப்பட்டுக் கீழே இரு பெண்கள் ஆட, மேலே நான்கு பெண்கள் குழு ஆடலில் ஈடுபட்டிருக்கின்றனர். கலசம், தாடி, கும்பம், பாலி ஆகியன மலர் அலங்கரிப்புப் பெற்றிருக்கின்றன. வடக்கு அரைத்தூணின் தொங்கல் கொடிக்கருக்குகளைப் பெற்றிருக்கிறது. பஞ்சரங்கள் தாங்குதளமும் வேதிகையும் தரைக்குள் புதைந்திருக்க, இருபுறமும் உள்ள நான்முக அரைத்தூண்கள் தொங்கல், தானம், தாமரைக்கட்டு, கலசம், தாடி, கும்பம், பாலி, பலகை, வீரகண்டம், போதிகை ஆகியவற்றைப் பெற்றுள்ளன. உத்திரம், வாஜனம், வலபி, கபோதம், பூமிதேசம் ஆகியன அமைய, அதன்மீது மேலும் கீழும் கம்புகளுடன் கூடிய வேதிகண்டம் பெற்ற வேதிகைத்தொகுதி அமைந்துள்ளது. கிரீவகோட்டத்தில் சிற்பங்களாக உள்ள பெண்கள் கருவறையை நோக்கித் திரும்பியுள்ளனர். கிரீவத்தின் மேற்பகுதியும் சிகரமும் மகாமண்டபக் கூரைக்குள் மறைந்துள்ளன. துவாரபாலகர்கள் தெற்கு உயர்த்திக் கட்டப்பட்ட கொண்டையுடன் கரண்ட மகுடத்தின்கீழே நெற்றிப்பட்டத்துடன் இருக்கும் இவரது வலச்செவியில் பனையோலைக் குண்டலத்துக்கு நடுவில் பறவையும் இடச்செவியின் பனையோலைக் குண்டலத்துக்கு நடுவில் மலரும் காட்டப்பட்டுள்ளன. நெற்றிக்கண்ணையும் கோரைப்பற்களையும் கொண்டுள்ள இவரது கழுத்தைச் சவடியும் சரப்பளியும் அலங்கரிக்க, பூவேலைப்பாட்டுடன் கூடிய வஸ்திர முப்புரிநூலை அணிந்துள்ளார். தோள்களில் கேயூரம் பெற்று, சிதைந்துள்ள ஆட்காட்டி விரலுடன் வலக்கையை எச்சரிக்கை முத்திரையிலும் இடக்கையைத் தடிமீது ஊன்றியவாறும் இருத்தியுள்ளார். உதரபந்தத்துக்குக் கீழே இடையாடை பெற்று, வலக்காலைச் சமமாகவும் இடக்காலை ஸ்வஸ்திகமாகவும் வைத்துள்ளார். வடக்கு உயர்த்திக் கட்டப்பட்ட கொண்டையுடன் கரண்ட மகுடத்தின்கீழே நெற்றிப் பட்டத்துடன் இருக்கும் இவரது இடச்செவியில் பனையோலைக் குண்டலத்துக்கு நடுவில் பறவையும் வலச்செவியின் பனையோலைக் குண்டலத்துக்கு நடுவில் மலரும் காட்டப்பட்டுள்ளன. நெற்றிக்கண்ணையும் கோரைப்பற்களையும் கொண்டுள்ள இவரது கழுத்தைச் சவடியும் சரப்பளியும் அலங்கரிக்க, பூவேலைப்பாட்டுடன் கூடிய வஸ்திர முப்புரிநூலை அணிந்துள்ளார். தோள்களில் கேயூரங்களும் கைகளில் வளைகளும் பெற்று, வலக்கையை வியப்பு முத்திரையிலும் இடக்கையைத் தடிமீது ஊன்றியவாறும் இருத்தியுள்ளார். உதரபந்தத்துக்குக் கீழே புலிமுகக்கச்சுடன் இடையாடை பெற்று, சிலம்புடன் கூடிய இடக்காலை மழுவின் மீது வைத்துள்ளார். வலக்கால் தரைக்கடியில் மறைந்துள்ளது. உள்மண்டபம் கிழக்கில் வாயிலைப் பெற்றுள்ள முகமண்டபத்தைத் தெற்கு வடக்காக இரு முழுத்தூண்களும் இரு அரைத்தூண்களும் கொண்ட இருவரிசைத் தூண்கள் பிரிக்கின்றன. அனைத்துத் தூண்களின் பாதங்கள் சதுரமாக அமைய, அதற்குமேல் எண்முகமாகவும் நீண்ட தொங்கல், தானம், தாமரைக்கட்டு, கலசம், தாடி, கும்பம், பாலி, பலகை, வீரகண்டம் கொண்டும் அமைய, அதன்மேல் பட்டையுடன் கூடிய குளவுப் போதிகையும் உத்தரம், வாஜனம், வலபி, அதில் பூதவரி ஆகிய கூரை உறுப்புகளும் அமைந்து கூரை சதுரங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. இத்தூண்களின் தொங்கல்கள் மட்டுமின்றி, கலசம், கும்பம், பாலி ஆகியவற்றிலும் கொடிக்கருக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. கிழக்கு வரிசையின் வடபுற அரைத்தூண், தென்புற முழுத்தூண், மேற்கு வரிசையின் வடபுற முழுத்தூண் ஆகியவற்றில் ஆடற்சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |