http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 139

இதழ் 139
[ டிசம்பர் 2017 ]


இந்த இதழில்..
In this Issue..

கற்பவை கசடறக் கற்க
இருண்டகாலமா? - 1
வலஞ்சுழி ஸ்வேத விநாயகர் ஆலயம் - 1
வரலாற்றுச் சிறப்பு மிக்க மங்க(ல) நல்லூர்
கயிலைப் பயணம் - 1
புள்ளமங்கை - திருவாலந்துறையார் கோயில் - 4
மாமல்லபுரம் – பல்லவர் சிற்பக் கலைக்கூடம்
ஒருநாள் பயணத்தில் ஒரு வாழ்க்கை
திரிபுராந்தகரும் இராஜராஜரும்
இலக்கியப்பீடம் - சிவசங்கரி விருது
Architecture of the RaṅgaVimāna at Sri Raṅganāthaswāmi Temple, Srīraṅgam
ORNAMENTAL DOOR FRAMES IN THE EARLY STRUCTURAL TEMPLES
வெகுமக்கள் இலக்கியத்தில் தமிழ் இலக்கணம் - 4
இதழ் எண். 139 > கலைக்கோவன் பக்கம்
இருண்டகாலமா? - 1
இரா. கலைக்கோவன்

பொதுக்காலம் 250 வரை சங்க காலமாக வரையறுக்கப்பட்ட நிலையில் அதில் தொடங்கி, முதல் மகேந்திரவர்மப் பல்லவரின் பாட்டனார் நான்காம் சிம்மவர்மரின் ஆட்சிக்காலமான பொ. கா. 550 வரையிலான 300 ஆண்டுக் காலத்தை வரலாற்றாசிரியர்கள் பலர் இருண்டகாலமெனத் திரையிட்டு மூடியமைக்கு அக்கால கட்டத்தே போதுமான சான்றுகளும் பல்துறைப் புலமையோடு சான்றுகளை ஒருங்கிணைக்கும் பார்வையும் இல்லாமையே காரணம் எனலாம். கடந்த இருபதாண்டுகளில் வெளிப்பட்டுள்ள கல்வெட்டு, அகழாய்வுச் சான்றுகளும் இலக்கியம், கல்வெட்டுகள், செப்பேடுகள் சார்ந்த நுண்ணாய்வுகளும் இருண்டகாலப் பார்வையில் புத்தொளி பாய்ச்சியுள்ளன. அந்த ஒளித்திரளின் உதவியோடு பொதுக்காலம் 250 - 550க்கு இடைப்பட்ட காலத் தமிழ்நாட்டு வரலாற்றை அறிய உதவும் சான்றுகளை இனங்காண்பதே இக்கட்டுரையின் குறிக்கோள்.



செப்பேடுகள்



தமிழ்நாட்டு வரலாற்றுடன் தொடர்புடையனவாக இது நாள்வரை கிடைத்துள்ள செப்பேடுகளில் காலத்தால் முற்பட்டவை பிராகிருதமொழியில் அமைந்த பல்லவர்களின் மூன்று செப்பேடுகளாகும். அவற்றுள் மயிதவோலுச் செப்பேடே பழைமையானது. முதல் சிம்மவர்மரின் 10ஆம் ஆட்சியாண்டின்போது யுவமகாராஜராக இருந்த சிவஸ்கந்தவர்மர் இரண்டு பிராமணர்களுக்குக் காஞ்சிபுரத்திலிருந்து அளித்த ஊர்க் கொடையைக் குறிக்கும் இச்செப்பேடு பொ. கா. 3ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியினதாகக் கொள்ளத்தக்கதாகும். இது குறிக்கும் முதல் சிம்மவர்மர் தம் மஞ்சிக்கல்லுக் கல்வெட்டு வழிக் கோயில் பட்டர்களுக்கு நிலக்கொடை அளித்தவர். கல்வெட்டு ஆந்திரப்பகுதியில் கிடைத்திருந்தபோதும் மன்னரின் 10ஆம் ஆட்சியாண்டின்போது அவரது மகனால் வழங்கப்பட்ட கொடை காஞ்சிபுரத்தில் இருந்து அளிக்கப்பட்டிருப்பதால், சிம்மவர்மர் காலப் பல்லவர் ஆட்சி ஆந்திரம், கருநாடகத்தின் ஒருபகுதி, தமிழ்நாட்டின் தொண்டைமண்டலம் ஆகியவற்றை உள்ளடக்கி இருந்ததாகக் கொள்ளலாம். 



இக்கருத்தை வலியுறுத்துமாறு முதல் சிவஸ்கந்தவர்மரின் ஹீரஹடஹள்ளிச் செப்பேடும் காஞ்சிபுரத்திலிருந்தே வழங்கப்பட்டுள்ளது. அதுவும் பிராகிருதமொழியில் அமைந்த கொடைச் செப்பேடுதான். மயிதவோலுவில் யுவமகாராஜராக அறிமுகமாகும் சிவஸ்கந்தவர்மர் இச்செப்பேட்டில் தர்ம மகாராஜாதிராஜராகச் சுட்டப்படுகிறார். அவருடைய வழித்தோன்றலின் செப்பேடாக அறியப்படும் குணபதேயம் பல்லவராட்சியிலிருந்து காஞ்சிபுரம் விடுபட்டமையை உணர்த்துகிறது. இப்பிராகிருதமொழிச் செப்பேடு ஸ்கந்தவர்மரின் மகன் புத்தவர்மரின் மனைவி சாருதேவி அளித்த கொடையைச் சுட்டுவதோடு அவர்தம் மகனாகப் புத்தியாங்குரனை வெளிப்படுத்துகிறது. 



பிராகிருதச் செப்பேடுகளை அடுத்துப் பல்லவர்கள் வழங்கியனவாகக் கிடைக்கும் சமஸ்கிருதச் செப்பேடுகள் பலவாகும். அவற்றுள், யுவமகாராஜர் விஷ்ணுகோபருடைய மகனான இரண்டாம் சிம்மவர்மரின் செப்பேடுகள் குறிப்பிடத்தக்கவை. பல்லவமரபில் மிக அதிக அளவில் செப்பேடுகளை வழங்கியவர் அவரே. அவரது மகனான இரண்டாம் விஜயவிஷ்ணுகோபவர்மர் சுராச் செப்பேடுகளை வழங்கியுள்ளார். ஏறத்தாழப் பொ. கா. 350இல் தக்கணத்தை நோக்கிப் படையெடுத்து வந்த சமுத்திர குப்தரைத் தென்னாட்டின் 12 நாடுகளைச் சேர்ந்த அரசர்கள் எதிர்த்ததாகவும் அவர்களைச் சமுத்திரகுப்தர் வென்று, தோல்வியடைந்தவர்களிடமே நாடுகளை ஒப்புவித்ததாகவும் அப்படித் தோல்வியுற்ற அரசர்களுள் காஞ்சிபுரத்து விஷ்ணுகோபரும் ஒருவர் என்றும் அலகாபாத் தூண் கல்வெட்டுக் கூறுகிறது. 



சமுத்திரகுப்தரால் தோற்கடிக்கப்பட்ட விஷ்ணுகோபரை இரண்டாம் சிம்மவர்மரின் மகனான இரண்டாம் விஜயவிஷ்ணு கோபவர்மராகவே கொள்ளமுடியும். அவர் தந்தையும் பேரரசருமான இரண்டாம் சிம்மவர்மர் காலத்தில் காஞ்சிபுரம் மீண்டும் பல்லவராட்சிக்கு உட்பட்டிருத்தல் கூடும். அதனாலேயே, விஷ்ணுகோபரைக் காஞ்சி அரசராக அலகாபாத் கல்வெட்டு அடையாளப்படுத்துகிறது. எனில், ஏறத்தாழப் பொ. கா. 335-375இல் வடதமிழ்நாட்டின் ஒருபகுதி மீண்டும் பல்லவர் ஆட்சிக்கு வந்தமை தெளிவுறும். 



இரண்டாம் புத்தவர்மரின் தந்தையும் நான்காம் ஸ்கந்தவர்மரின் மகனுமான இரண்டாம் குமாரவிஷ்ணுவின் காலத்தில் காஞ்சிபுரம் பல்லவராட்சிக்கு உட்பட்டதாக வேலூர்ப்பாளையம் செப்பேடுகள் குறிப்பிடுவது கொண்டு, 4ஆம் நூற்றாண்டின் கடைப்பகுதிக்கும் 5ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்திற்கும் இடைப்பட்ட நிலையில் இரண்டாவது முறையாகப் பல்லவர்கள் காஞ்சியை இழந்து மீண்டும் பெற்றமை அறியப்படும். அதன் பிறகு காஞ்சிபுரம் தொடர்ந்து பல்லவர்கள் கையிலிருந்ததை அங்கிருந்தே வெளியிடப்பெற்ற வேசந்தம், சேந்தலூர், உதயேந்திரம் செப்பேடுகள் தெளிவாக்கும். இரண்டாம் புத்தவர்மருக்கும் நான்காம் சிம்மவர்மருக்கும் இடையில் ஆறு பல்லவ அரசர்களை இச்செப்பேடுகள் இனங்காட்டுகின்றன. காஞ்சிபுரத்தைப் பல்லவர்கள் இருமுறை இழந்தமைக்குக் களப்பிரர்களே காரணமாகலாம் எனுமாறு போல நான்காம் சிம்மவர்மரின் மகனான சிம்மவிஷ்ணு வென்ற அரசமரபுகளுள் களப்பிரர் இனமும் குறிக்கப்பட்டுள்ளமை இங்குக் கருதத்தக்கது. 



இருண்டகாலமாக அறியப்படும் பொ. கா. 250-550க்கு இடைப்பட்ட காலத்தில் தமிழ்நாட்டின் ஒருபகுதியை சங்கச் சோழமரபினர் தங்கள் ஆட்சியின் கீழ்க் கொண்டிருந்தமை பல்லவர் செப்பேடுகள் சிலவற்றாலும் பத்திமைப் பாடல்கள் சிலவற்றாலும் உறுதிப்படும். வேலூர்ப்பாளையம் செப்பேடு குறிக்கும் இரண்டாம் குமாரவிஷ்ணுவின் மகனான இரண்டாம் புத்தவர்மர், சமுத்திரம் போன்ற சோழர்களுடைய சேனைக்கு வடவாக்னியாகக் குறிக்கப்படுகிறார். இக்குறிப்புக் கொண்டு, புத்தவர்மர் காலத்தில், சோழர்கள் மிகுந்த வலிமையோடு எதிரணி அரசரே, 'சமுத்திரம் போன்ற' என்ற சுட்டலை வழங்கும் அளவிற்குப் படைப்பெருக்கத்துடன் தமிழ்நாட்டின் ஒரு பகுதியில் ஆட்சிசெலுத்தியமை அறியலாம். சோழர்களுடைய படைக்கு வடவாக்னி எனக் குறிப்பிடப்பட்டபோதும் புத்தவர்மர் சோழநாட்டைக் கைப்பற்றியதாக வேலூர்ப்பாளையம் செப்பேடு யாண்டும் குறிப்பிடாமை நோக்க, சோழர்களைப் பல்லவர்கள் போரில் சந்தித்தனரே தவிர, வெற்றிகொள்ளவில்லை என்பது தெளிவாகும். 



பள்ளன்கோயில் செப்பேட்டில் சிம்மவிஷ்ணு, 'கவேரன் மகளான காவிரிநதியை மாலையாகவும் நெல்வயல்கள், செழுமையான கரும்புவயல்கள் ஆகியவற்றை ஆடையாகவும் கமுகுத் தோட்டம், வாழைத்தோட்டம் ஆகியவற்றை ஒட்டியாணமாகவும் கொண்ட சோழர்பூமியைக் கைப்பற்றினான்' என்று சொல்லப்படுவது கொண்டு, பொ. கா. 6ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே சோழராட்சி முடிவுக்கு வந்ததாகக் கொள்ளலாம். எனில், 4ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து 6ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிவரை தமிழ்நாட்டின் ஒருபகுதி சோழராட்சியின் கீழ் விளங்கியமை அறியப்படும். 



கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றும் (களவழி நாற்பது) பத்திமை இலக்கியங்கள் சிலவும் கோச்செங்கணான் எனும் சோழஅரசரை வீரம் செறிந்தவராகவும் பல அரசர்களைப் போரில் வென்று திறை பெற்றவராகவும் மாடக்கோயில் எனும் புதிய கோயிற்கட்டமைப்பை உருவாக்கியவராகவும் முன்நிறுத்துகின்றன. சோழர்காலச் செப்பேடுகள் சிலவும் விஜயாலயருக்கு முற்பட்ட சோழஅரசராக அவரை இனங்காட்டுகின்றன. அப்பர், சம்பந்தர், சுந்தரர், மங்கையாழ்வார் முதலிய பத்திமை ஆசிரியர்களால் பலபடப் போற்றப்படும் இம்மன்னர், காலத்தால் சிம்மவிஷ்ணுவுக்கு முந்தியவராவார். இருண்ட காலமாக அறியப்படும் காலஎல்லைக்குள், களப்பிரர் ஆட்சி இருந்ததாகக் கருதப்படும் சோழமண்டலத்தில் இப்பெருவேந்தரின் பெருமைக்குரிய ஆட்சியும் நிலவியமை எண்ணற்ற சான்றுகளால் நிறுவப்பட்டுள்ளது. சிவபெருமானுக்கும் விஷ்ணுவுக்குமாக 78 மாடக்கோயில்களை உருவாக்கிய இவர் குறுகிய கால ஆட்சிக்குரியவராக இருந்திருத்தல் இயலாது. 



சுந்தரரும் சம்பந்தரும் குறிப்பிடும் இவரது போர்க்கள வெற்றிகள், சேரஅரசரை இவர் வென்றதாகப் பொய்கையார் குறிப்பிடும் களவழிச் சுட்டல் ஆகியன கொண்டு நோக்குகையில், இரண்டாம் புத்தவர்மர் போரிட்டு வெல்லமுடியாமல்போன, சமுத்திரம் போன்ற சேனை உடைய சோழப் பேரரசராக விளங்கியவர் இக்கோச்செங்கணான் ஆகலாம் எனக் கருத இடமுண்டு. எனில், இன்றைக்குத் தமிழ்நாட்டில் பார்வைக்குக் கிடைக்கும் 34 மாடக்கோயில்களின் இருப்பிடம் கொண்டு நோக்குகையில், தற்போதைய தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருவாரூர், நாகபட்டினம் மாவட்டங்கள் அடங்கிய நிலப்பரப்பு பொ. கா. 400-550க்கு இடைப்பட்ட காலஎல்லையில் பல ஆண்டுகள் கோச்செங்கணானின் ஆட்சியில் இருந்தமை உறுதிப்படும். இவ்வேந்தருக்கு முன்பும் பின்பும் சோழமரபு உரிமை பெற்ற அல்லது சிற்றரசநிலையில் ஆட்சியில் தொடர்ந்திருந்தமையை சிம்மவிஷ்ணுவின் சோழமண்டல வெற்றி உறுதிப்படுத்தும். 



களப்பிரர் ஆட்சி தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்ததாக அறியப்பட்டபோதும் அவர்தம் ஆதிக்கம் தென்தமிழ் நாட்டிலேயே மிக்கிருந்தமை, 'களப்பிரன் என்னுங் கலிஅரைசன் கைக்கொண்டதனை இறக்கியபின்' எனும் வேள்விக்குடிச் செப் பேட்டுச் சுட்டலாலும் 'மதுரை வவ்விய கருநடர் வேந்தன்' எனும் கல்லாடப் பாடலடியாலும் உணரப்படும். இவை கொண்டு சங்க காலப் பாண்டியருக்குப் பின்னும் கடுங்கோன் மரபினருக்கு முன்னும் மதுரையில் களப்பிரர் ஆட்சி இடையறாது இருந்ததாகக் கொள்ள வாய்ப்புண்டு. இந்நிலை பல்லவர்பகுதியிலோ, சோழர்பகுதியிலோ அமையாமையைப் பல்லவர் செப்பேடுகளும் கோச்செங்கணான் தொடர்பான சான்றுகளும் நிறுவுகின்றன. 



மயிதவோலு தொடங்கிப் பள்ளன்கோயில் வரையிலான பல்லவச் செப்பேடுகள் அரசியல், பொருளாதாரம், சமூகம் சார்ந்த பல அரிய செய்திகளைப் பகிர்ந்துகொள்கின்றன. அரசின் அலுவல்நிலைகள், அலுவலர் உரிமைகள், அவர்தம் பணிகள், அரசால் பெறப்பட்ட வரிகள், அரசு செயற்பட்டவிதம், உத்தரவு களை மீறுவாருக்கு வழங்கப்பட்ட தண்டனைகள், பிராமண ஊர்களின் உருவாக்கம், சிறப்பு, அவற்றின் தகுதிகள், பல்வகைத் தொழில்கள், தாவரவகைகள், மக்கள் வாழ்க்கை, தேவகுலங்கள், அவை தொடர்பான நிருவாகம் என அக்காலஞ் சார்ந்த எண்ணற்ற செய்திகளை இச்செப்பேடுகள் மிகச் செவ்வையாகப் பதிவுசெய்துள்ளன. இவற்றின் தொகுப்பு இருண்டகால வரலாற்றின் மீட்டுருவாக்கத்திற்குப் பெருந்துணையாகும். 



கல்வெட்டுகள்



பொ. கா. 250க்கும் 550க்கும் இடைப்பட்ட காலத்தனவாகத் தமிழ்பிராமி, வட்டெழுத்துக் கல்வெட்டுகள் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளன. திரு. ஐராவதம் மகாதேவன் இக்காலத்திற்குரியனவாக 17 தமிழ்பிராமி கல்வெட்டுகளையும் 17 வட்டெழுத்துக் கல்வெட்டுகளையும் தம் நூலில் குறிப்பிட்டுள்ளார். 



இக்கல்வெட்டுகளின் பகுப்பாய்வு சமூகம் சார்ந்த பல செய்திகளைப் பகிர்ந்துகொள்கிறது. ஏழு ஊர்ப்பெயர்கள் (அவற்றுள் ஐந்து, ஊர் என்ற பின்னொட்டுக் கொண்டவை), இளவன், பெருங்கீரன் முதலிய தமிழ் ஒளிரும் ஆட்பெயர்கள், வாணிகம் பற்றிய இரண்டு குறிப்புகள் (பொன், எண்ணெய்), ஆடல் தொடர்பான தத்தகாரச் சொற்கட்டுகள் ஆகியவற்றோடு சங்கக் கோழிப்போரின் நினைவூட்டல்களும் கிடைத்துள்ளன. இக்கல்வெட்டுகளில் கிடைக்கும் பரம்பன், வியக்கன், கொற்றி எனும் ஆட்பெயர்களும் சேரி, பொய்கை எனும் இடப்பெயர்களும் சங்க, சங்கம் மருவிய கால இலக்கியங்களில் ஆளப்பட்டுள்ளமை கருதத்தக்கது. 



இவை தவிர, பூலாங்குறிச்சியில் 1980இல் கண்டறியப்பட்ட, தமிழ்பிராமி வட்டெழுத்தாக மாறும் நிலையிலான எழுத்தமைதி பெற்ற இரண்டு கல்வெட்டுகளைக் குறிக்கையில் பேராசிரியர் எ. சுப்பராயலு, அவை களப்பிர அரசர்களைச் சுட்டுவதாகத் தெரிவித்துள்ளார். அவ்விரண்டனுள் பெருமளவு படிக்கத்தக்க நிலையிலுள்ள சேந்தன்கூற்றனின் கல்வெட்டு, வேள்மருகன் மகன் கடலகப் பெரும்படைத்தலைவன் எங்கு மான், ஒல்லையூர்க்கூற்றத்து வேள்கூரிலிருந்த பச்செரிச்சில் குன்றிலும் முத்தூற்றுக் கூற்றத்திருந்த விளமரிலும் தேவகுலங்களையும் மதுரை உலவியத்தான் குளத்தின் வடபுறத்திருந்த தாபதப்பள்ளியில் வாசிதேவனார் கோட்டத்தையும் எடுப்பித்ததாகக் கூறுகிறது. அத்திகோயத்தார், உள்மனையார், நால்வகைத் திணைகள் ஆகிய குழுக்கள் அவற்றைத் தங்கள் காவலில் கொண்டு உரியன செய்தனர். 



இக்கோயில்களின் அறக்கட்டளைகளை மேற்கொண்டிருந்த பாண்டங்கர், சேவுக்கர், விருமச்சாரிகள், தருமிகள் ஆகியோரும் கிராமக்காவலரும் இக்கோயில்களில் வழிபாடு செய்ய யாரைப் பணிக்கு அமர்த்துகின்றனரோ அவர்களே வழிபாட்டை மேற்கொள்ளவேண்டும் என்று அரசர் உத்தரவிட்டதாகவும் இக்கல்வெட்டுக் கூறுகிறது. குழலூருத் துஞ்சிய உடையாரால் வேள்கூரில் குடியமர்த்தப்பட்டவர்களே பச்செரிச்சில் குன்றின் தேவகுலத்தில் குடும்பிகளாக அமைந்து, மரபுவழியாகக் குடும்புக்குரிய கடமைகளைச் செய்தல் வேண்டும்; தேவகுலத்தின் அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றுவதோடு தவறு செய்வாரைத் தண்டிப்பதும் கடமையாகும்; அரசரின் இந்த ஆணை உலவியப் பெருந்திணையர் நல்லன்கிழான் எயினன் குமாண், கிழான் கீரன்காரி, அம்பருகிழான் குமாரம் போந்தை ஆகியோரால் கேட்கப்பட்டது. ஓலைஎழுத்தர் தமண்காரி கண்ணன் செய்தியைக் கொணர்ந்ததாகவும் வேணாட்டான் நாரியன் காரி இறுதி ஓலை எழுதியதாகவும் கூறும் இக்கல்வெட்டு, களப்பிரர் காலத்தில் வழக்கிலிருந்த கோயில்பொறுப்பு, வழிபாட்டு அமைப்பு, குடும்பு, குடும்பி தொடர்பான செய்திகள், அர சாணை செயற்பட்டவிதம், அரசு அலுவலர்கள் எனப் பல தரவுகளை முன்வைக்கிறது. 



சேந்தன் எனும் மன்னருடையதாகக் கொள்ளப்படும் மற்றொரு கல்வெட்டு, சிதைந்திருந்தபோதும் பிரமதேயம் பற்றிய சில முதன்மைத் தகவல்களைத் தருகிறது. இக்கல்வெட்டிலும் வேள்மருகன் மகன் கடலகப் பெரும்படைத்தலைவன், வெள் ளேற்றான்மங்கலத்துக் கிழவரால் அளிக்கப்பட்ட சில நன்செய், புன்செய் நிலத்துண்டுகளைப் பெற்றவராகவும் சிற்றையூர்க் கடையவயலில் சில புன்செய் நிலத்துண்டுகளை விலைக்குப் பெற்றவராகவும் குறிக்கப்படுகிறார். இந்நிலத்துண்டுகள் கூடலூருநாட்டு பிரமதேயமான சிற்றையூர்க் கிழவர்களின் காராண் கிழமை, மீயாட்சி உரிமைக்கு உட்பட்டிருந்தவை. 



பாண்டிநாட்டிலும் கொங்குநாட்டிலும் இருந்த தெய்வத்தின் காராண்கிழமை, கலக்கிழமை, மேலாண்மை உடைமைகள், காலாசம் (கால்நடைகள்), தோட்டங்கள், தமர், குடிகள் ஆகிய அனைத்தும் உடையார், பிரமதேயக் கிழவர், நாடுகாவலர், புறம்காவலர், கிராமகாவலர், தத்தமாண், நெறிஅறஞ் செய்தார் ஆகியோரால் காக்கப்படுவதாக என உரைக்கும் கல்வெட்டு, தம் கடமையில் தவறுவார் ஒவ்வொருவரிடமிருந்தும் 1600 காணம் அபராதம் தண்டப்படும் என்று கூறுவதோடு, இது அரசஆணை என்றும் சொல்கிறது. இந்த ஆணை உலவியப் பெருந்திணைகள் நல்லன்கிழான் எயினன்குமாண், கிழான் இளன்கூற்றன், ஆலத்தூர்க்கிழான் ஆகியோரால் கேட்கப்பட்டதாகவும் ஓலையெழுதியவன் தமன் வடுகன் குமாண் எனவும் தெரியவருகிறது.



இக்கல்வெட்டுகளை நன்கு ஆராய்ந்துள்ள பேராசிரியர் எ. சுப்பராயலு, 'அரசியலைப் பொறுத்தவரையில் சங்க கால அரசுக்கும் இக்கல்வெட்டுகள் காட்டும் அரசுக்கும் அமைப்பில் வேறுபாடுகள் உள்ளன. பின்னது சிலப்பதிகாரம், பெருங்கதை முதலிய காவியங்கள் காட்டும் அரசமைப்போடு பெரிதும் ஒப்புமை உடையதாகக் காண்கிறோம். தேவகுலம், தாபதப் பள்ளி, வாசிதேவனார் கோட்டம், பிரம்மச்சாரிகள், தருமிகள் முதலிய சொற்களும் சமய உலகில் வடக்கிலிருந்து வந்த தாக்கத்தை வெளிப்படுத்துகின்றன. பிரமதேயங்கள் பல்கத் தொடங்கிய காலம் இது என்பதை வெள்ளேற்றான்மங்கலம், சிற்றையூர் பிரமதேயம் முதலியன உணர்த்தும். இவற்றின் விளைவாக நில உரிமைகளில் வேறுபாடுகள் தோன்றத் தொடங்கிவிட்டன. நிலக்கிழார், உழுவோர் என்ற வேறுபாடுகளும் நிலக்கிழமை வேறு, உழும் உரிமை வேறு என்று சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகளும் தெளிவாகத் தொடங்கிவிடுகின்றன. இங்கும் காப்பிய காலச் சமுதாயத்தை ஒப்பிட்டுப் பார்ப்பது சங்க மருவிய கால வரலாற்றுக்குப் புதிய விளக்கத்தைப் பெற உதவும்' என்று எழுதியுள்ளமை கருதத்தக்கது. 



பொ. கா. 200க்கும் 400க்கும் இடைப்பட்ட காலத்தனவாகக் கிடைக்கும் தமிழ்பிராமி கல்வெட்டுகள் இதற்கு முற்பட்டனவான பொ. கா. 2ஆம் நூற்றாண்டுவரையிலான தமிழ்பிராமி கல்வெட்டுகளிலிருந்து எழுத்தமைப்பிலும் மெய்யெழுத்துக்கள் புள்ளிபெறும் நிலையிலும் மாறுபட்டுள்ளமை இருண்டகாலமாக ஒதுக்கப்பட்ட இக்காலத்தே நிகழ்ந்த தமிழ் எழுத்துக்களின் வளர்நிலையை உறுதிப்படுத்தும். தமிழ்பிராமி வடிவிலிருந்து தமிழ்க் கல்வெட்டுகள் வட்டெழுத்து வடிவிற்கு மாற்றம் பெறுவதும் இக்காலத்தில்தான். ஏறத்தாழ இரண்டு நூற்றாண்டுகள் (பொ. கா. 400-600) வட்டெழுத்துக்களில் பொறிக்கப்பட்ட தமிழ்க் கல்வெட்டுகள், 6ஆம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தே தமிழ் எழுத்துக்களிலேயே வெளிப்பட்டமை வல்லம், கழுக்குன்றம், சிறுவாக்கம் கல்வெட்டுகளால் அறியப்படும். இக்கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ள பெரும்பாலான தமிழ் எழுத்துக்களின் வளர்ச்சியடைந்த நிலை, பின்னோக்குப் பார்வையில், குறைந்த அளவில் ஏறத்தாழ 50 ஆண்டுகளேனும் இத்தகு பயன்பாட்டில் தமிழ் நடைபோட்டிருக்க வேண்டும் என்பதை உணர்த்தும். இருண்டகாலமாக ஒதுக்கப்படும் மூன்று நூற்றாண்டுகளில் தமிழ்மொழி மூன்று வகையான வரிவடிவங்களைப் பெற்று (தமிழ்பிராமி, வட்டெழுத்து, தமிழ்) ஒன்றிலிருந்து ஒன்றிற்கு மாறியும் ஒன்றையொன்று தழுவியும் வளர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்க செய்தியாகும். 



இந்த இருண்டகாலத்தில் தமிழ்நாட்டின் பெரும்பகுதியைக் களப்பிரர்கள் கைப்பற்றியிருந்ததாகவே கொண்டபோதும் அவர்தம் ஆட்சி இந்த மண்ணின் மொழிக்கு எவ்விதத்தானும் இடையூறாக இல்லை என்பது அவ் ஆட்சிக்காலத்தே இங்குப் பொறிக்கப்பட்டிருக்கும் 30க்கும் மேற்பட்ட தமிழ்க் கல்வெட்டுகளாலும் களப்பிரவேந்தர்களாகப் பேராசிரியர் சுப்பராயலுவால் சுட்டப்படும் சேந்தன், சேந்தன்கூற்றனின் கல்வெட்டுகளே தமிழ்மொழியில் அமைந்திருப்பதாலும் நன்கு விளங்கும். 



காசுகள்



சங்க காலம் போலவே சங்கம் மருவிய காலத்துக் காசுகளும் கிடைத்துள்ளன. அழகன்குளத்தில் தமிழ்நாட்டரசின் தொல்லியல்துறை நிகழ்த்திய அகழ்வாய்வின்போது சங்கம் மருவிய காலத்தைச் சேர்ந்த ரோமானியச் செப்புக்காசுகள் கிடைக்கப்பெற்றன. பொ. கா. 383-423வரையிலான ரோமப் பேரரசர்களான இரண்டாம் வேலன்டின், அர்க்காடியஸ், ஹொனோரியஸ், இரண்டாம் தியோடோசியஸ் காலக் காசுகளாக வெளிப்பட்டிருக்கும் இவை கொண்டு, அழகன்குளத்துக் கும் ரோமாபுரிக்கும் இடையிலிருந்த வணிகத்தொடர்பு நிறுவப்பட்டுள்ளது. காசியல் அறிஞர் திரு. இரா. கிருஷ்ணமூர்த்தி தமக்குக் கரூர், மதுரைப்பகுதிகளில் கிடைத்த ரோமானியக் காசுகள் 4ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியிலிருந்து 5ஆம் நூற்றாண்டின் இறுதிவரையான காலத்தின என்று தம் நூலில் குறிப்பிட்டுள்ளார். இக்காசுகள் ரோமாபுரியுடன் மதுரை, கொங்குப்பகுதிகள் தொடர்ந்து வணிகம் மேற்கொண்டிருந்தமையைத் தெளிவாக்குகின்றன. இதனால், களப்பிரர் காலமாகக் கருதப்படும் இருண்டகாலத்தில் வெளிநாடுகளுடனான வணிகம் செழித்திருந்தமை உணரப்படுவதோடு, அயலக அரசர்களான களப்பிரர்கள் தமிழ்நாட்டு வணிகத்திற்கு இடையூறாக இல்லை என்பதையும் அறியமுடிகிறது. 



(வளரும்)

 


இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.