http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 139

இதழ் 139
[ டிசம்பர் 2017 ]


இந்த இதழில்..
In this Issue..

கற்பவை கசடறக் கற்க
இருண்டகாலமா? - 1
வலஞ்சுழி ஸ்வேத விநாயகர் ஆலயம் - 1
வரலாற்றுச் சிறப்பு மிக்க மங்க(ல) நல்லூர்
கயிலைப் பயணம் - 1
புள்ளமங்கை - திருவாலந்துறையார் கோயில் - 4
மாமல்லபுரம் – பல்லவர் சிற்பக் கலைக்கூடம்
ஒருநாள் பயணத்தில் ஒரு வாழ்க்கை
திரிபுராந்தகரும் இராஜராஜரும்
இலக்கியப்பீடம் - சிவசங்கரி விருது
Architecture of the RaṅgaVimāna at Sri Raṅganāthaswāmi Temple, Srīraṅgam
ORNAMENTAL DOOR FRAMES IN THE EARLY STRUCTURAL TEMPLES
வெகுமக்கள் இலக்கியத்தில் தமிழ் இலக்கணம் - 4
இதழ் எண். 139 > கலைக்கோவன் பக்கம்
கற்பவை கசடறக் கற்க
இரா. கலைக்கோவன்

அன்புள்ள வாருணிக்கு, 



நலந்தானே? 



சிங்களாந்தகபுரத்தை அடுத்துத் துடையூர் விஷமங்களேசுவரரில் பணி தொடங்கியுள்ளோம். ஏற்கனவே பலமுறை பார்த்த கோயில்தான் என்றாலும், இதுநாள்வரை கட்டுரையாகப் பதிவாகவில்லை. பாச்சில் கோயில்கள் போலச் சிராப்பள்ளி மாவட்டக் கோயில்கள் சிலவற்றின் வரலாற்றைத் தொகுத்து மூன்றாம் தொகுதி கொணரக் கருதியுள்ளோம். துடையூர் அற்புதமான களமாக மாறிக்கொண்டிருக்கிறது. கோயில் விமானம், முகமண்டபப் பாதச் சிற்பங்களாகவும் சுவர்த் தூண்களின் கட்டுச் சிற்பங்களாகவும் இங்கு விளைந்துள்ளவை வியக்க வைக்கின்றன. அக்கால மக்களின் சுற்றுச்சூழல் அறிவும் அவற்றைப் பதிவுசெய்திருக்கும் பாங்கும் நீ பார்க்கவேண்டும். சிராப்பள்ளி மாவட்டச் சோழர் காலக் கோயில்கள் வேறெங்கும் காணாத சில மாறுபட்ட சிற்பங்கள் இங்குள்ளன. 



வரலாறு டாட் காம் மின்னிதழில் வெளியாகியிருக்கும் முனைவர் சுமிதாவின் கட்டுரையை நீ படிக்கவேண்டும். மின்னிதழ் படிப்பவர்களை நோக்கிய கட்டுரை அது. கருத்தரங்கொன்றில் இரண்டு பெரியவர்களால் (அப்படித் தங்களை அந்தப் பெரியவர்களே அரங்கில் அடையாளப்படுத்திக் கொண்டார்களாம்!) தம் கட்டுரைப் படிப்புக்கு நேர்ந்த அனுபவத்தை அதில் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார். மின்னிதழ் படிப்பாரிடம் நியாயம் கேட்கும் கட்டுரை அது. கட்டுரை வெளியாகிப் பல நாட்கள் ஆனபோதும் இதுநாள்வரை யாரிடமிருந்தும் மறுமொழி இல்லை. சுமிதாவுக்கான விடையை நான் எழுதக் கருதியிருந்தேன். எனினும், இன்னும் ஒரு திங்கள் மற்றவர் கருத்தறியக் காத்திருக்கலாம் என்பதால் இம்மடலில் வேறு சில செய்திகளை உன்னிடம் பகிர்ந்துகொள்கிறேன். 



9. 11. 2017 வியாழக்கிழமை தினமணி இதழின் தலையங்கப் பக்கத்தில் (ப. எண். 8), 'அசுத்தத்தை மறுபடியும் மார்பில் பூசுவதேன்?' என்ற தலைப்பில் திரு. தி. இராசகோபாலன் நடுப்பக்கக் கட்டுரை எழுதியுள்ளார். அக்கட்டுரையில் அவர் தெரிவித்திருக்கும் சில வரலாற்றுக் குறிப்புகள் பிழையாக உள்ளன. 



1. 'தேவதாசி முறைமை சோழர் காலத்திலும் நாயக்கர் காலத்திலும் நடைமுறைக்கு வந்தது எனலாம்' என்று 8ஆம் பத்தியின் தொடக்கத்தில் கூறும் பேராசிரியர், பத்தி 12இல் மன்னராட்சிக்குப் பிறகு மேலோங்கிய நிலஉடைமைக்காரர்கள், ஜமீன்தார்கள் ஆதிக்கக் காலத்தில்தான் தேவனுக்குத் தொண்டு செய்ய வந்த தேவரடியார்கள் தேவதாசிகளாக மாறத் தொடங்கியதாகச் சொல்கிறார். இந்த இரண்டு கூற்றுகளில் முதல் கூற்றின் முதல் பகுதி சரியன்று. சோழர் காலத்தில் நானறிந்தவரையில் தேவதாசி என்ற சொல்வழக்கு இல்லை. தேவரடியார், தளிப்பெண்டுகள், தளிக்கூத்திகள், தலைக்கோலிகள், தளியிலார், பதியிலார் என்றே கோயிற் சார்ந்த பெண்கள் சோழர் காலத்தில் அழைக்கப்பட்டனர். (காண்க: இரா. கலைக்கோவன், சோழர்கால ஆடற்கலை, சேகர் பதிப்பகம்.) 



2. கட்டுரையின் 8ஆம் பத்தியில், 'முதலாம் இராஜராஜ சோழன் தாம் படையெடுத்துச் சென்ற நாடுகளை வென்ற பிறகு அந்நாட்டுப் பெண்களைத் தஞ்சைக்குக் கொண்டு வந்தான்' என்று பேராசிரியர் எழுதியிருப்பது பிழையாகும். இதற்கான சான்றேதும் தமிழ்நாட்டுக் கல்வெட்டுகளில் இதுவரை அறியப்படவில்லை.



3. 9ஆம் பத்தியில், 'அருண்மொழிச் செல்வராகிய இராஜராஜ சோழன் பகைப்புலத்துப் பெண்களைத் தஞ்சைப் பெருவுடையாருக்குத் தொண்டு செய்வதற்கென்று அர்ப்பணித்தான்' எனும் பேராசிரியரின் கூற்றும் பிழையானதே. தஞ்சாவூரில் தாம் எடுப்பித்த இராஜராஜீசுவரத்தில் பணி செய்ய முதலாம் இராஜராஜர் அளித்த பெண்கள் அனைவரும் சோழ மண்டலத்தின் 102 தளிச்சேரிகளிலிருந்து அக்கோயிலுக்கு வரவழைக்கப்பட்டவர்கள். (காண்க: மு. நளினி, இரா. கலைக்கோவன், தளிச்சேரிக் கல்வெட்டு, கழக வெளியீடு.) 



4. அதே 9ஆம் பத்தியில், 'தஞ்சைப் பெருவுடையாருக்குத் தொண்டு செய்ய அர்ப்பணிக்கப்பட்ட பெண்களுக்கு வேளத்துப் பெண்டிர் எனவும் பெயரிட்டான்' என்கிறார் பேராசிரியர். இதுவும் பிழையான கூற்றே. தஞ்சாவூர் இராஜராஜீசுவரத்திற்கு வரவழைக்கப்பட்ட பெண்கள் 'தளிச்சேரிப் பெண்டுகள்' என்றே கல்வெட்டில் குறிக்கப்பெறுகின்றனர். (காண்க: தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி 2 - கல்வெட்டு எண் 66). தமிழ்நாட்டுக் கல்வெட்டுகளில் நானறிந்தவரையில் திருக்கோயில்களில் வேளங்கள் இயங்கியமைக்குச் சான்றுகள் இல்லை. அவை பொதுவாக அரண்மனை வளாகங்களிலேயே அமைந்தன. அரசர், அரசியர் பெயர்களில் அமைந்த அவ்வேளங்களில் பணியாற்றிய பெண்கள் பெண்டாட்டி என்ற சொல்லால் அறியப்பட்டனர். (காண்க: தமிழ்க் கல்வெட்டுச் சொல்லகராதி, இரண்டாம் தொகுதி, சாந்தி சாதனா வெளியீடு.)



5. 11ஆம் பத்தியில் இடம்பெற்றுள்ள,

(i) 'தஞ்சைப் பெருவுடையார் கோயிலின் தெற்குப் பக்கத்தில் வாழ்ந்த பெண்களுக்குத் தெற்குத் தளிச்சேரிப் பெண்கள் என்றும் வடக்குப் புறத்தில் வாழ்ந்த பெண்களுக்கு வடக்குத் தளிச்சேரிப் பெண்கள் என்றும் பெயர்'

(ii) 'கோயிற் பணிகளுக்கு என்று அர்ப்பணிக்கப்பட்ட பெண்களுக்குச் சோழ அரசு முத்திரை பொறித்தது' எனும் பேராசிரியரின் கூற்றுகளும் தவறானவை. தளிச்சேரிக் கல்வெட்டு இது போல் தரவுகள் ஏதும் தரவில்லை. 



6. அதே பத்தியில், 'சைவக் கோயிலில் தொண்டாற்றும் தேவதாசிகளுக்குச் சூலஇலச்சினையும் வைணவக் கோயில்களில் பணியாற்றும் தேவதாசிகளுக்குச் சக்கரச்சின்னமும் பொறிக்கப்பட்டதாகக் கல்வெட்டுக் கூறுகிறது' எனக் குறிப்பிடும் பேராசிரியர் அதற்கான சான்றாகத் தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுப்பு 8இன் கல்வெட்டு எண் 169ஐத் தந்துள்ளார். இக்கல்வெட்டுக் கட்டுரையாளர் குறிப்பது போலச் சோழர் காலத்தது அன்று. இரண்டாம் பாண்டிய அரசுக் காலத்து எம்மண்டலமும் கொண்டருளிய குலசேகரருடையது. சிவகங்கை மாவட்டம் காளையார்கோயிலைச் சேர்ந்த காளீசுவரர் கோயில் நூற்றுக்கால் மண்டத்தின் கிழக்குச் சுவரிலிருந்து படியெடுக்கப்பட்டிருக்கும் இக்கல்வெட்டில் பேராசிரியர் குறிக்கும், 'தேவதாசிகளுக்குச் சூலஇலச்சினை, சக்கரச்சின்னம்' பொறிக்கப்பட்ட தகவல் இல்லை. ஊர்த்தளியிலார் நக்கன் செய்யாளான காலிங்காராயத் தலைக்கோலிக்கு ஊரார் இறையிலியாக அளித்த நிலக்கொடை பற்றிய தகவலே இக்கல்வெட்டில் உள்ளது. 



வரலாற்றுத் தரவுகளை முன்வைக்கும்போது மிகுந்த கவனம் தேவை. ஒரு நாளிதழின் நடுப்பக்கக் கட்டுரைக்கான இடம் பெருமைக்குரியது. அங்குப் பதிவாகும் கட்டுரைகள் பிழைகளின்றி வெளியாவதே சிறப்பாகும். 



தினமணி 2017 நவம்பர் 10ஆம் நாள் இணைப்பான வெள்ளிமணியின் முதல் பக்கத்தின் கீழ்ப்புறத்தே வெளியாகியுள்ள இலக்கிய மேகம் திரு. ந. ஸ்ரீநிவாஸனின், 'மஹாலட்சுமி தரிசித்த கௌரிதாண்டவம்' கட்டுரை தொடர்பாகவும் உன்னிடம் பகிர்ந்துகொள்ளவேண்டும். திருப்புத்தூர்த் திருத்தளிநாதர் கோயிலிலுள்ள கௌரிதாண்டவர் திருமேனி ஆனந்ததாண்டவக் கோலத்தில் அமைந்துள்ளது. ஆனால், கட்டுரை பதிவாகியுள்ள தினமணியில் ஊர்த்வதாண்டவத்தில் அமைந்த சிவபெருமானின் செப்புத் திருமேனி படமாக வெளியாகியுள்ளது. இரண்டு தாண்டவங்களும் முற்றிலும் வேறானவை. இறைவன் ஆடிய தாண்டவ வகைகளை விரிவாகப் பேசும் ஸ்ரீதத்துவநிதி கௌரிதாண்டவம் குறித்த வரையறைகளை மிகத் தெளிவாகச் சுட்டியுள்ளது. அதன்படி கௌரிதாண்டவர் நான்கு கைகளே பெறவேண்டும். ஆனால், திருப்புத்தூர் கௌரிதாண்டவர் 10 கைகள் பெற்றவர். அவரது திருமேனி பற்றிய என்னுடைய விரிவான கட்டுரை 13. 1. 1991 தினமணி கதிர் இதழில் வெளியாகியுள்ளது. 



இறைவன் காலைத்தூக்கி ஆடும் ஆடல் 'புஜங்கத்திராசம்' என்றழைக்கப்படுவதாகக் கட்டுரையாளர் குறிப்பிட்டிருக்கிறார். புஜங்கத்திராசிதம் என்பதே சரி. பாம்போடு இணைந்த மூன்று வகைக் கரணங்களை பரதர் தம் நாட்டியசாத்திரத்தின் தாண்டவலட்சணம் பகுதியில் சுட்டுகிறார். புஜங்கத்திராசிதம், புஜங்கத்திரஸ்தரேசிதம், புஜங்காஞ்சிதம் எனும் அம்மூன்று கரணங்களுமே ஆனந்ததாண்டவத் திருக்கோலம் உருவாக அடிப்படையாயின என்பர். இவற்றையெல்லாம் சுட்டி தினமணி ஆசிரியருக்கு மடல் எழுதியுள்ளேன்.



தினமணி 26. 11. 2017 இதழுடன் வெளியான 'கொண்டாட்டம்' இணைப்பின் 3ஆம் பக்கத்தில், 'கங்கை கொண்ட சோழபுரம் - தெரிந்த பெயர், தெரியாத விவரம்' என்ற தலைப்பில் திரு. சி. சண்முகவேல் 3 படங்களுடன் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். முதற் படம் நந்தி முதற் கொண்டு விமானம் வரையிலான காட்சி காட்ட, இரண்டாம் படம் ஆடவல்லான் சிற்பத்தைக் கொண்டுள்ளது. மூன்றாம் படம் அங்குள்ள சிம்மக்கேணியின் முகப்பிலுள்ள சிம்மத்தின் வடிவத்தை அழகுபடக் காட்டுகிறது. இக்கட்டுரையின் அனைத்துப் பத்திகளிலுமே கட்டுரையாசிரியர் தவறான தரவுகளை மிடைந்து தந்துள்ளார். 





1. முதல் பத்தியில் சோழப் பேரரசை நான்கு திசைகளிலும் விரிவு செய்த இராஜராஜ சோழரைத் தஞ்சையை ஆண்டவராகக் குறிப்பிடுகிறார். 



2. 2ஆம் பத்தியில் இராஜேந்திர சோழரின் தேவியர்களாக அவர் குறிப்பிடும் முக்கோக்கிலம், பங்கவன்மாதேவியார் ஆகிய இருவர் பெயர்களும் திரு. சதாசிவ பண்டாரத்தார், திரு. நீலகண்ட சாஸ்திரியார் எழுதிய சோழர் வரலாறு நூல்களில் இல்லை. 



3. பத்தி 3இல் இராஜேந்திர சோழர் காலத்தில் சோழநாட்டின் எல்லை வடக்கே கங்கை வரையிலும் விரிந்ததாகவும் கடல் கடந்து சோழ சாம்ராஜ்யம் மியான்மர் கடற்கரைவரை பரவியதாகவும் குறிப்பிடும் கட்டுரையாசிரியர், ஸ்ரீவிஜய இராஜ்யங்களான சுமத்ரா, ஜாவா, மலேயா தீபகற்பம் தவிர தூரக் கிழக்கு ஆசிய நாடுகள் அனைத்தும் சோழ ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டதாகவும் எழுதியுள்ளார். வரலாற்றாசிரியர்களுக்குக்கூட தெரியாத இத்தகு விவரங்களைத் திரு. சண்முகவேல் எங்கிருந்து பெற்றார் எனத் தெரியவில்லை.



4. பத்தி 4இல் இராஜேந்திர சோழர் கங்கை கொண்ட சோழபுரத்தில் எடுப்பித்த கோயிலின் பெயரை பிரகதீசுவரர் கோயிலாகக் குறிப்பிட்டுள்ளார். (கல்வெட்டில் அக்கோயிலின் பெயர் கங்கை கொண்ட சோழீசுவரர் )



5. பத்தி 5இல் தந்தை தஞ்சையில் கட்டியதைவிடப் பெரியதாக இராஜேந்திர சோழன் கங்கை கொண்ட சோழபுரக் கோயிலைக் கட்டியதாகவும் கோயில் எட்டுப் பக்கங்களோடு அமைக்கப்பட்ட விமானத்தைக் கொண்டிருப்பதாகவும் எழுதியுள்ளார். (இக்கோயிலின் விமானம் நாகரமாகத் தொடங்கி திரவிடமாக வளர்ந்து வேசரமாக முடிவதாகும்.) 



6. பத்தி 6இல் சூரியன் உதயமானதிலிருந்து மறையும் வரை நந்தியின் நெற்றியில் பட்டு பிரதிபலிக்கும் சூரிய ஒளிக்கீற்று 200 மீட்டர் தொலைவில் உள்ள இலிங்கத்தின்மீது விழுவதாகக் கூறுகிறார். (கிழக்குப் பார்த்த இக்கோயிலில் நந்தி மேற்குப் பார்வையில் கருவறை நோக்கி உள்ளது.)



7. அடுத்த பத்தியில் கோபுரக் கலசத்தின் (விமானத்தைத்தான் கோபுரம் என்று எழுதியுள்ளார்) நிழல் தஞ்சைக் கோயிலில் உள்ளது போலவே இங்கும் பூமியில் விழாது என்கிறார். (இரண்டு கோயில்களிலுமே விமானக் கலசத்தின் நிழல் கோயில் வளாகத்தில் விழும். தஞ்சாவூர் விமானக் கலச நிழல் ஒளிப்படத்துடன் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது)



8. பத்தி 8இல் கங்கையிலிருந்து புனித நீரைத் தன்னிடம் (இராஜேந்திரர்) தோற்ற மன்னர்களின் தலையில் ஏற்றி இங்குக் கொண்டுவரச் செய்ததாக வரலாறு கூறுகிறதென்பவர், அதைத் தொடர்ந்து எழுதியிருக்கும் வரிகளில் வெளிப்படுத்தியுள்ள அனைத்துமே பிழையாகும். சிம்மக்கேணியின் படத்தை வெளியிட்டிருப்பவர் அதைச் சரியாகப் பார்க்காமல் அந்தச் சிங்கமுக வடிவத்தின் வாய் வழியாக உள்ளே சென்று புனித நீரை எடுத்துத் தலையில் தெளிக்கும் வகையில் அவ்வடிவம் அமைந்துள்ளதாகக் கூறியுள்ளார். (சிங்கத்தின் படம் காண்க) 



9. பத்தி 9இல் முப்பரிமாண நடராஜரை நமக்கு அறிமுகப்படுத்துபவர், 10ஆம் பத்தியில் சாதனைகளின் காரணமாகவே இராஜேந்திர சோழர் பரகேசரி என்றழைக்கப்பட்டதாகக் கூறுகிறார். (அப்படியானால் மற்ற பரகேசரிகளுக்கு என்ன சொல்வது?)சாளுக்கியர்களை வென்ற இராஜாதிராஜன் அந்த வெற்றியின் நினைவாக 2 ஜதை துவாரபாலகர் சிலைகளைத் தந்தைக்குக் கொடுத்ததாகக் கூறுபவர் அவற்றுள் ஒன்று இக்கோயிலின் வாயிலிலும் மற்றொன்று திருபுவனத்திலும் வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். (இச்சிற்பங்கள் இரண்டு கோயில்களிலும் இன்று இல்லை)



கட்டுரைகளில் பிழைகள் இருக்கலாம் வாருணி, பேராசிரியர் தி. இராசகோபாலன் கட்டுரை போல். ஆனால், பிழைகளே கட்டுரையாவது வரலாற்றுக்குத் தீங்கல்லவா? இதழ்களில் வெளியாகும் வரலாற்றுக் கட்டுரைகள் பல இப்படித்தான் அமைந்துவிடுகின்றன. எழுதுபவர்கள் தக்காரைக் கேட்டு தகுதியான நூல்கள் பயின்று கட்டுரைகளை அமைத்தால் வரலாறு வளப்படும். கட்டுரைகளை வெளியிடுவாரும் அவற்றை ஒருமுறையேனும் படித்து அவற்றின் தகுதி அறிந்து பதிப்பிப்பது வரலாற்றைக் காப்பாற்றும் முயற்சியாக அமையும். இது போன்ற கட்டுரைகளை நாளும் பார்ப்பதால்தான், வரலாற்றைப் படிப்பவர்கள் கவனத்துடன் கருத்துக்களைக் கொள்ள வேண்டும் என மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறோம். கற்பவை கசடறக் கற்க வாருணி. 



அன்புடன்,

இரா. கலைக்கோவன்.

 


       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.