http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 139
இதழ் 139 [ டிசம்பர் 2017 ] இந்த இதழில்.. In this Issue.. |
டிசம்பர் 1 - 2017 அன்று சென்னை தியாகராய நகரிலுள்ள வாணிமகால் அரங்கத்தில் "இலக்கியப்பீடம்" மாத இதழும் அனைத்திந்திய எழுத்தாளர்கள் சங்கமும் இணைந்து நடத்திய எழுத்தாளர் விக்கிரமனின் இரண்டாம் ஆண்டு நினைவுவிழா நடைபெற்றது. இதில் "மூத்த எழுத்தாளர் சிவசங்கரி வழங்கும் இலக்கியப்பீடம்-சிவசங்கரி விருது முனைவர் மு.நளினிக்கு வழங்கப்பட்டது. 2-டிசம்பர்-2017 நாளிட்ட தினமணி இச்செய்தியை வெளியிட்டுள்ளது.
திருச்சிராப்பள்ளி டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் மதிப்புறு இணை இயக்குனராகவும் சீதாலட்சுமி இராமசாமி கல்லூரியில் வரலாற்றுத் துறைத் தலைவராகவும் பணியாற்றிவரும் முனைவர் மு.நளினி அவர்கள் ஐம்பதுக்கும் மேற்பட்ட உலக, தேசிய, மாநிலக் கருத்தரங்குகளில் ஆய்வுக்கட்டுரைகள் வாசித்தும் எழுபதுக்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளைப் பல்வேறு ஆய்விதழ்களில் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியும் நம் வரலாறு.காம் மின்னிதழில் தொடக்கம் முதல் தொடர்ந்து எழுதியும் வரலாற்றுக்கும் வரலாறு.காம் மின்னிதழுக்கும் வளம் சேர்த்து வருகிறார். இவர் இதுவரை கண்டறிந்துள்ள புதிய கல்வெட்டுகள் 1500ஐத் தாண்டும். பல்வேறு பழங்கால அளவுகோல்கள் 30க்கும் மேல். இதுவரை இவர் பெற்றுள்ள விருதுகளில் சில கீழே. அமரர் தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் கல்வெட்டுக் கலைச்செல்வி விருது திருத்தவத்துறை நாடுகாண் குழுவின் கல்வெட்டாய்வுச் செம்மல் விருது திருச்சிராப்பள்ளி அனைத்து மகளிர் சங்கங்களின் சார்பில் சிறந்த கல்வெட்டாய்வாளர் விருது கோயில்பட்டித் திருவள்ளுவர் மன்றத்தின் சிறந்த கல்வெட்டாய்வாளர் விருது திருச்சிராப்பள்ளி அண்ணாநகர் மகளிர் மன்றத்தின் சிறந்த கல்வெட்டு அறிஞர் விருது சென்னை சோமசுந்தரர் ஆகமத் தமிழ்ப்பண்பாட்டு ஆராய்ச்சி மன்றத்தின் தமிழாய்வு மணி விருது தமிழ்நாட்டு எழுத்தாளர் நலநிதி அறக்கட்டளையின் 2006ம் ஆண்டுக்கான சிறந்த நூல் பரிசு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஜேசீஸ் சங்கத்தின் சிறந்த மாவட்ட இளைஞர் விருது கடந்த 14 ஆண்டுகளாக இவரது கல்வெட்டு வாசிப்புப் பணியை உடனிருந்து கவனிக்கும் வாய்ப்புப் பெற்றவர்கள் எங்கள் குழுவினர். முதன்முதலில் டாக்டர் இரா. கலைக்கோவன் அவர்களைச் சந்திக்கும் முன்பு கோயில்களிலுள்ள கல்வெட்டுகள் எல்லாம் யாராலும் படிக்க முடியாதவை என்று எண்ணிக்கொண்டிருந்த எங்களுக்கு யார் வேண்டுமானாலும் படிக்கலாம் என்று டாக்டர் சொன்னபோது வியப்பாக இருந்தாலும், முழுவதுமாக நம்பிக்கை ஏற்படவில்லை. அடுத்தநாள் புதுக்கோட்டை மாவட்டம் விசலூர் கோயிலில் ஆதித்தகரிகாலரின் கல்வெட்டொன்றை அவர் முழுவதுமாகப் படித்துக் காட்டியபோதுதான் எங்களுக்கும் கல்வெட்டுகளை வாசிக்கும் ஆர்வம் பிறந்தது. பின்னர் திருவலஞ்சுழி கோயிலாய்வின்போது நடந்த மாபெரும் கண்டுபிடிப்பான சிவசரணசேகரன் கல்வெட்டும் அதை நூலாக்கம் செய்தவிதமும் எங்களின் கல்வெட்டு வாசிப்புப் பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது எனலாம். அதன்பிறகு நடந்த மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டப் பாண்டியர் குடைவரைப் பயணங்கள், மாடக்கோயில் பயணங்கள், தற்போதைய புள்ளமங்கைப் பயணங்கள் வரை இவரிடமிருந்து நாங்கள் கற்றதும் பெற்றதும் ஏராளம். இவ்வாறு, இலக்கியப்பீடம் தகுதி வாய்ந்த ஓர் ஆய்வாளரை இவ்விருதுக்குத் தேர்ந்தமைக்கு நன்றி தெரிவிக்கும் அதேவேளையில், முனைவர் மு. நளினிக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது வரலாறு.காம். |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |