http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 139
இதழ் 139 [ டிசம்பர் 2017 ] இந்த இதழில்.. In this Issue.. |
தலைவி இறைவனையே தலைவனாக கருதி காதலில் ஈடுபடும் சூழலை "வானம்பாடி" என்ற திரைப்படத்தில் கவிஞர் கண்ணதாசன் இயற்றி திரு "கே.வி. மஹாதேவன்" இசையில் "பீ. சுசீலா" பாடியுள்ள இப்பாடல் காலத்தால் அழியாதது. கவிஞர் கண்ணதாசன் அவர்கள் மீராவின் கிருஷ்ணபக்தியை காதலாக வரித்து,கற்பனையும் அற்புதமான மொழிவளமும் குழைத்து தேனில் ஊறிய பலாவை ஒத்த சுவையான விருந்து படைத்துச் சென்றுள்ளார். இப்பாடல் கேட்கும்போதெல்லாம் சுசீலாவின் தேன்மதுரக் குரலில் மயங்கி என்னை மறப்பது இயல்பு.
அதுவும் இன்று (13-11-2017) சுசீலா அம்மா அவர்களின் பிறந்த நாள். இன்று எதேச்சையாக இப்பாடலைக் கேட்டவுடன் இது பற்றி எழுதினாலென்ன என்ற எண்ணம் தோன்ற உடனே அது செயலாக்கம் பெற்றது. இப்பாடலின் அற்புதமான கட்டமைப்பு வியக்க வைக்கும் ஒன்றாகும். கவிஞரின் மொழியாழுமை தமிழ் உள்ள வரை வாழும் என்பதில் ஐயமில்லை! பாடல் தொடங்கும் போது மீரா கண்ணனை கங்கைக் கரைத்தோட்டத்தில் கோபியர்களில் நடுவில் மனக்கண்களில் காண்கிறார். சட்டென்று எங்கோ கரைந்து கேட்கும் குரலெல்லாம் கண்ணனின் குரலென்று சிலாகிக்கிறார்! பாரதியின் காக்கைச் சிறகினிலே நந்தலாலா நினைவிற்கு வருகிறது. ஆம் அத்வைத தத்துவத்தில் எங்கும் நிறைந்த பிரம்மத்தை பாரதியின் இப்பாடல் வெகு எளிமையாய் படம் பிடித்துக் காட்டுவது போல் கண்ணதாசனின் இப்பாடல் இரண்டு தத்துவங்களையும் (த்வைதம் மற்றும் அத்வைதம்)ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு இயல்பாக பயணிப்பதை தெரிந்தோ அல்லது எதார்த்தமாகவோ படம் பிடித்துக் காட்டுகிறது. கங்கைக் கரைத் தோட்டம் கன்னிப் பெண்கள் கூட்டம் கண்ணன் நடுவினிலே...ஓஓ... கண்ணன் நடுவினிலே காலை இளம் காற்று பாடி வரும் பாட்டு எதிலும் அவன் குரலே...ஓஓ...எதிலும் அவன் குரலே! சட்டென்று கண்கள் மூடிய நிலையில் மேற்கூறிய கங்கை கரையில் கோபியர் சூழ் கண்ணனும் எங்கும் ஒலிக்கும் அவன் குரலும் மறைந்து, அவனையே எண்ணி எண்ணி ஏங்கிய மீராவின் முன் கண்ணனே தோன்றுகிறான். கண்ணன் முகத்தோற்றம் கண்டேன் கண்டவுடன் மாற்றம் கொண்டேன் கண்மயங்கி ஏங்கி நின்றேன் கன்னி சிலையாகி நின்றேன் என்ன நினைந்தேனோ... தன்னை மறந்தேனோ! கண்ணீர் பெருகியதே...ஓ... கண்ணீர் பெருகியதே!! கண்ணன் என்னைக் கண்டுகொண்டான் கை இரண்டில் அள்ளிக் கொண்டான் பொன்னழகு மேனி என்றான் பூச்சரங்கள் சூடித் தந்தான் கண்ணனைக் கண்டு,கண்டவுடன் மாற்றம் கொண்டு கன்னி சிலையாக நின்று தன்னை மறந்து பக்திப்பெருக்கில் கண்ணீர் பெருக நிற்கும் மீராவை கண்டு கொண்ட கண்ணன், கைகளில் தாங்கி பொன்னழகு மேனியென வர்ணித்து பூச்சரங்கள் சூடியதாக உருவகம் செய்கிறாள் மீரா. இங்கு ஒன்றை தொடர்ந்து அவதானிக்க அதுவாக ஆகிறோம் என்ற அத்வைத தத்துவத்தை கவிஞர் தற்குறிப்பேற்றமாக மீராவின் பக்தி வாயிலாக நமக்கு உணர்த்துகிறார். ஆம், "அஹம் பிரம்மாஸ்மி" என்பதும் "நீ அது ஆவாய்" என்பதும் கண்கள் மூடி உள்முகமாக பயணிக்கும் போது நிகழும் ஆச்சரியங்கள்! கட்புலனைக் கடக்கும் போது மனிதன் சூட்சுமத்தை அறிகிறான்! கட்புலனில் சூட்சுமத்தால் கரைந்து பேதப்பட்டு எங்கே எங்கே என்று தேடி அல்லலுறுகிறான்! மரத்தை மறைத்தது மாமத யானை மரத்தில் மறைந்தது மாமத யானை பரத்தை மறைத்தன பார்முதல் பூதம் பரத்தில் மறைந்தன பார்முதல் பூதமே. என்ற திருமந்திரப்பாடல் கூறும் பொருளை இப்பாடலில் கவிஞர் மறைமுகமாக மீராவின் வாயிலாக நமக்கு உணர்த்தியிருக்கிறார் கண் திறந்து பார்த்தேன் கண்ணன் அங்கு இல்லை! கண்ணீர் பெருகியதே...ஓ...கண்ணீர் பெருகியதே!! அன்று வந்த கண்ணன் இன்று வர வில்லை ! என்றோ அவன் வருவான்...ஓ... என்றோ அவன் வருவான்! கண்கள் மூடிய நிலையில் காட்சியளித்த கண்ணன்,கண் திறந்து பார்த்ததும் அங்கு இல்லை என்றதும் மிகுந்த துயரத்துக்கு உள்ளாகும் மீரா அவன் மீண்டும் கட்டாயம் வருவான் என்ற நம்பிக்கையில் மேலும் தொடர்கிறாள் கண்ணன் முகம் கண்டகண்கள் மன்னன் முகம் காண்பதில்லை கண்ணனுக்குத் தந்த உள்ளம் இன்னொருவர் கொள்வதில்லை கண்ணன் வரும் நாளில், கன்னி இருப்பேனோ... காற்றில் மறைவேனோ! நாடி வரும் கண்ணன், கோல மணி மார்பில் நானே தவழ்ந்திருப்பேன்!! கண்ணா...!!கண்ணா...!!கண்ணா...!! ஆஹா! கண்ணனை மீண்டும் காண இயலவில்லை என்றாலும் கண்ணனைக் கண்ட கண்களால் மன்னராயினும் காணமாட்டேன். வேறு யாருக்கும் என் உள்ளத்தில் இடமில்லை என்று ஏகாக்கிர சித்தத்துடன் தன் ஆயுட்காலமே முடிந்தாலும் கண்ணனுக்காகக் காத்திருப்பேன் என்று உறுதியாக நிற்கும் மீரா நமக்கு ஆண்டாளையும் ஞாபகப்படுத்துகிறார்! என்ன ஒரு வித்தியாசம் என்றால் ஆண்டாள் மிகுந்த ஆளுமை கொண்டு அரங்கனை மிரட்டுகிறார்! 'ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க்கு என்று உன்னித்து எழுந்த என் தட முலைகள் மானிடர்க்கு என்று பேச்சுப்படில் வாழ்கிலேன் கண்டாய், மன்மதனே" முரட்டு பக்தியால் ஆண்டாள் சாதித்ததை மீரா தன் மென்மையான ஆனால் உறுதியான நம்பிக்கை கலந்த அணுகுமுறைகொண்ட மென்மையான பக்தியால் சாதிப்பதை கவிஞரும் மென்மையாக வெளிப்படுத்திய பாங்கு அற்புதம்! இப்பாடலில் எதுகை,மோனை மற்றும் சந்த நயங்கள் கவிஞரால் இலாவகமாகக் கையாளப்பட்டிருப்பதை நம்மால் நன்றாகவே உணர முடிகிறது. மோனை: பாடலில் அடிதோறும் முதலெழுத்து ஒன்றி வருவது . கங்கைக் கரைத் தோட்டம் கன்னிப் பெண்கள் கூட்டம் கண்ணன் நடுவினிலே...ஓஓ... கண்ணன் நடுவினிலே மேலும், கண்ணன் முகத்தோற்றம் கண்டேன் கண்டவுடன் மாற்றம் கொண்டேன் கண்மயங்கி ஏங்கி நின்றேன் கன்னி சிலையாகி நின்றேன் எதுகை : பாடலில் அடிதோறும் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது . கண்ணன் முகத்தோற்றம் கண்டேன் கண்டவுடன் மாற்றம் கொண்டேன் கண்மயங்கி ஏங்கி நின்றேன் கண் திறந்து பார்த்தேன் கண்ணன் அங்கு இல்லை! கண்ணீர் பெருகியதே...ஓ...கண்ணீர் பெருகியதே!! அன்று வந்த கண்ணன் இன்று வர வில்லை ! என்றோ அவன் வருவான்...ஓ... என்றோ அவன் வருவான்! இயைபு : பாடலில் அடிதோறும் இறுதி சீர் மற்றும் அசை ஒன்றி வருவது கண்ணன் முகத்தோற்றம் கண்டேன் கண்டவுடன் மாற்றம் கொண்டேன் கண்மயங்கி ஏங்கி நின்றேன் கன்னி சிலையாகி நின்றேன் என்ன நினைந்தேனோ... தன்னை மறந்தேனோ! கண்ணீர் பெருகியதே...ஓ... கண்ணீர் பெருகியதே!! கண்ணன் என்னைக் கண்டுகொண்டான் கை இரண்டில் அள்ளிக் கொண்டான் என்றோ அவன் வருவான்...ஓ... என்றோ அவன் வருவான்! யாப்பு அமைப்பு ஒழுங்காக அமைந்ததனாலேயே ஒரு வகையான ஓசை அமைப்பு உருவாகிச் செவிக்கு இன்பமூட்டுவதால் இப்பாடலில் சிறப்பான ஒலிநயமும் பயின்று வருவது கவனிக்கத்தக்கதாகும்! இலக்கியநயம் மிகுந்த இப்பாடல் வெகுநிச்சயமாக காலம் கடந்து தன் இருப்பை பதிவு செய்யும் என்பதில் ஐயமில்லை! கவிஞர் கண்ணதாசன் புகழ் வாழ்க! தமிழ் வாழ்க! வளர்க! ஓங்குக!. |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |