http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 141

இதழ் 141
[ ஏப்ரல் 2018 ]


இந்த இதழில்..
In this Issue..

செய்திகள் வாசிப்பது வரலாறு டாட் காம் - 2
கோட்டாராப்பட்டியில் ஒரு காலை!
கயிலைப் பயணம் - 3
எழும்பூர் அற்புதக் காட்சியகம்
ஆயிரம் ஆனாலும் மாயுரம் ஆகுமோ?!
மாமல்லபுரக் குடைவரைகள் - 2
இதழ் எண். 141 > கலையும் ஆய்வும்
கயிலைப் பயணம் - 3
இரா.கலைக்கோவன், மு.நளினி
ஏகாந்த ஆடல்

இக்கலைஞர்களுக்குக் கீழே, மேகங்களுக்கிடையே சேரமானின் குதிரைக்கு முன்னால் எழிலார்ந்த பெண்ணரசி ஒருவரின் ஏகாந்த ஆடல்! தலைக்கோலியாய் இருப்பாரோ? பரதரின் நூற்றியெட்டுக் கரணங்களில் கடினமானவை மிகச் சிலவே. அவற்றுள் ஒன்றே இவ்வம்மை இங்கே ஆடிக்காட்டுவது. இதை பிருஷ்ட ஸ்வஸ்திகமாகவோ, பிரமரகமாகவோ அடையாளம் காணலாம். இரண்டில் பிரமரகமே கூடுதலாகப் பொருந்துகிறது. இந்த ஓவிய நாயகியின் ஆடற்காட்சி சிற்பத் தோற்றமாய்ப் புள்ளமங்கை ஆலந்துறையார் கோயிலில் பராந்தகப் புதையலாய்க் காட்சியளிக்கிறது. பாட்டன் வழிச் சீதனத்தைச் சொத்தாய்க் கொண்டவரல்லவா இராஜராஜர்.

அப்பப்பா, என்ன இலாவகம்? அந்தத் தலைக்கோலியின் உடல்தான் எந்தெந்த இடங்களில், எப்படி எப்படியெல்லாம் வளைந்திருக்கிறது. கால்கள் பின்னினாற் போல் ஸ்வஸ்திகமாகியுள்ளன. சிலம்பு, சதங்கை, நூபுரமென எத்தனை காலணிகள்! கால்விரல்களில்கூட அணிகள். இடுப்பை மறைத்திருக்கும் இடையாடைக்கு முன் தொங்கும் இடைக்கட்டின் முடிச்சுகளும் தொங்கல்களும் உடலின் சுழற்சி தாங்காது இருபுறத்தும் பறந்துள்ளன. வலக்கை அர்த்தரேசிதமாய் நீள, இடக்கை மார்பின் முன்புறம் மறைகிறது. செவிகளில் குண்டலங்கள், கைகளில் கங்கணங்கள், வளைகள். இடப்புறம் திரும்பியிருக்கும் முகத்தில் விவரிக்க முடியாத உணர்வலைகள் சாத்விகத்தின் வெளிப்பாடாய். கழுத்தில் கண்டிகை. தமிழம் கொண்டை முழுவதும் முத்துக்களும் பூக்களும்.

அலங்காரம் இருக்கட்டும், இவர் உடல் எங்கெங்கு எப்படியெப்படி வளைந்துள்ளது! சொல்வது கடினம்தான், இருந்தாலும் முயலலாம்; முதுகும், இடையின் பின்பகுதியும் தெரிவதால், இடுப்பிற்குக் கீழ்ச் சுழற்சி அதிகமில்லை என்பதை ஊகிக்கலாம். கால்கள் மட்டுமே சுழற்சியின் ஓரங்கமாய் ஸ்வஸ்திகத்தில்! இடைப்பின்புறத்திற்கு மேற்பட்ட பகுதியில் வலப்புற ஒருக்கணிப்பைக் காணலாம். வலக்கையின் அர்த்த ரேசித வீச்சிற்கேற்றாற் போல் வலமார்பகம் உயர்ந்துள்ளது. கழுத்தை முழுவதும் இடப்புறம் திருப்பியுள்ள நேர்த்தி இயலக் கூடியதா என்று கேட்கக்கூடாது. இளம்பருவம் முதல் உடலை இயக்குவார்க்கு எந்தத் திருப்பமும் வளைவும் சுழற்சியும் சாத்தியமே. எலும்புகளே இல்லாத இரப்பர் உடலர்களாய் இத்தகு பயிற்சியாளர்கள் வளைவர். இடுப்பிற்குக் கீழ் அதிகச் சுழற்சியின்றியும் கழுத்திற்குக் கீழ் மிகுந்த எழுச்சியுடனும் முகத்தளவில் முழுச் சுழற்சியும் காட்டிடும் இக்கரணம் பிரமரக மாகத்தான் இருக்க முடியும்.



சுந்தரருக்கு மேலும், சேரமானுக்கு முன்னுமாய்க் களை கட்டியிருக்கும் இந்த வரவேற்பு நிகழ்ச்சி கண்களுக்கு மட்டும் விருந்தன்று; வரலாற்றிற்கும்தான். தம் காலத்து ஆடல், இசைக் கலைஞர்களின் தோற்றம், மெய்ப்பாடு, கருவிகளின் அமைப்பு ஒப்பனையாற்றல், விலங்கலங்காரம், கடல்வாழ் உயிரினங்கள், நம்பிக்கைகள் என எத்தனை அருமையான வரலாற்றுத் தரவு களை இந்த வரவேற்புக் காட்சியில் பொதிந்து வைத்துள்ளார் சோழேந்திரசிம்மர்! இது நட்புக்கான வரவேற்பு. தோழமைக்குக் காட்டப்பட்டுள்ள சிறப்பு. அதனால்தான், படப்பிடிப்பின் ஒவ்வோர் அணுவிலும் கூர்மையான சிந்தனை. வெறுங் காட்சியாய் எதுவுமே அமைந்துவிடக்கூடாது என்பதில்தான் அவருக்கு எத்தனை அக்கறை! இந்த வரலாற்று நோக்கம் அவர் குருதியில் கலந்தது.

அதனால்தான், அந்த மாமனிதர் இன்றளவும் வரலாறாகவே வாழ்கிறார். வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் வானுறை யும் தெய்வத்துள் வைக்கப்படும் என்பது அவரைப் பொருத்த மட்டில் சத்தியவாக்கானது. இன்றைக்கும் இராஜராஜீசுவரத் திருச்சுற்றில் அவர் திருமேனியைத் தலையில் சுமந்தபடி ஆண்டுக்கொரு முறை அவர் பிறந்த திருநாளில் அன்பர்கள் கூட்டம் உலா வருகிறதெனில், அந்தப் பெருவேந்தர் வையத்தில் வாழ்ந்தது வரலாற்று வாழ்வாகத்தானே இருக்கமுடியும்?

'இந்த அறத்தைக் காப்பவர் திருவடிகள் என் தலைமேலன' என்று அறமளித்த அறச்செல்வர்கள் பழங்காலத்தே கல்லிலும் செம்பிலும் ஓலையிலும் எழுதி வைத்தனர். இறைவன் திருவடிகளைத் தலையில் சுமக்கும் பேறு பெற இறைத்தொண்டர்கள் தவமாய்த் தவமிருந்தனர். இராஜராஜர்கூட, தம்மைச் சிவபாத சேகரன் என்று அழைத்துக் கொண்டவர்தான். ஆனால், கேட்காமலும் நினைக்காமலும் எதிர்பார்க்காமலும் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் தாம் செய்தன கருதி உளமுருகித் தம் திருவடிகள் சுமக்கும் மனிதர்களைப் பெறுவதெனில், அந்தத் திருவடிகளுக்குரியவர் எத்தனை பெருஞ்செயல் செய்தவராய், பேரின்பப் பெருவாழ்வு வாழ்ந்தவராய்த் திகழ்ந்திருக்க வேண்டும்! தமிழ்நாட்டு வரலாற்றில், ஏன் உலக வரலாற்றிலேயே, அந்தப் பேற்றைப் பெற்ற ஒரே மனிதர், வேந்தர், நம் அன்பிற்குரிய இராஜராஜர்தான்.

ஆடல் காணீரோ

இராஜராஜீசுவரத்து ஓவியங்கள் வெளிப்படுத்தும் சுந்தரர் வரலாற்றின் சிகரமாய் அமைந்திருப்பது கயிலைக் காட்சி. மூன்றாம் பத்தி முழுவதற்குமாய் விரிந்திருக்கும் இதில் இடப் புறம் சிவபெருமானும் உமையும் அமர்ந்திருக்க, பின்னால் கவரிப்பெண்கள். எதிர்ப்புறம் ஆடல் நிகழ்கிறது. பாடுவாரும் கருவி இசைப்பாரும் மேலும் கீழுமாய் நின்றும் அமர்ந்தும் காட்சிதரக் கண்டு மகிழ்வாராய்ச் சுந்தரரும் சேரமானும் தேவ கணங்களும் காட்டப்பட்டுள்ளனர். ஆடல், பாடல், கருவிக் கலைஞர்களின் பின்புறத்தே தொழுத கைகளுடன் நான்முகன் முன்நிற்க, அவரைப் பின்பற்றி அதே மெய்ப்பாட்டில் விஷ்ணு உள்ளிட்ட தேவர்கள் வரிசை. இவ்வோவியப் பத்தியின் மேற்பகுதியில் வலப்புறத்தே, சடைமகுடர்களாய் பதினொரு ருத்திரர்களும் கிரீடமகுடச் செவ்வண்ணர்களாய்ப் பன்னிரு ஆதித்தர்களும் நிற்கிறார்கள்.

இரு பெரும் இலக்கியங்களைப் படைத்த நட்பு நாயகர்களுக்கு அரசர்களுக்குரிய வரவேற்பை நல்கிப் பெருமைப்படுத்திய இராஜராஜர், படைப்பும் தோழமையும் அந்த இருவருக்கும் கயிலைக் காட்சியையே வயப்படுத்தியமை காட்டவே, இறைத்திருமுன் வரவேற்பையும் தம் கால ஒழுகலாறுகளைப் பின்பற்றி இந்தப் பத்தியில் பதிவுசெய்திருக்கிறார். இராஜராஜருக்குக் கண்ணப்பரின் பத்திமையிலும் காதல் உண்டு. அவர் மீது இறைவன் கொண்ட பேரன்பிலும் மிகு மதிப்புண்டு. அன்பு வழிபாட்டிற்கும் ஆகம வழிபாட்டிற்கும் இடையில் சிக்கிய இறைவன் இரண்டில் எது தமக்கு உகந்தது என்பதைத் தம் வாய்மொழியாகவே வெளிப்படுத்தக் கண்ணப்பரின் ஈடு இணையற்ற பத்திமையே துணைநின்றது.

அதனால்தான், கண்ணப்பர் வரலாற்றைத் தம் பெருங்கோயிலின் இரண்டாம் வாயிலான இராஜராஜன் திருவாயிலின் வடசுவரில் மிக விரிவாகப் பதிவு செய்திருக்கிறார் இராஜராஜர். 'நில்லு கண்ணப்ப, அன்புடைத் தோன்றல் நில்லு கண்ணப்ப' என்று இறைவனே கைப்பிடித்த இறைக்காதலர் அல்லவா கண்ணப்பர்! இராஜராஜரின் சிந்தையில் இறைவனுக்காக இரு கண்களையும் இழக்கத் துணிந்த கண்ணப்பரின் இணையற்ற பத்திமை நிறைந்திருந்தமையால்தான், கயிலைக் காட்சியிலும் கண்ணப்பரை இணைத்தார்.

இறைவனும் இறைவியும்

கயிலைக் காட்சியின் தலைநாயகர்களாய் சிவபெருமானும் உமையன்னையும் விளங்குகின்றனர். சிறுத்தைப் புலித்தோல் பரப்பப் பெற்ற இருக்கையின் மீது சிவபெருமான் வலப்புறமும் அவரை ஒன்றியபடி இடப்புறத்தே உமையும் தமக்கெதிரே நடைபெறும் ஆடற்காட்சியை அகமகிழ்ந்து பார்ப்பவர்களாய் அமர்ந்துள்ளனர். இடக்காலை மடித்து இருக்கையில் கிடத்தி, வலக்காலைக் குத்துக்காலாக்கி, நீட்டிய வல முன் கை வலமுழங்காலின் மேல் தாங்கலாக அமைய, மகாராஜ லீலாசனத்திலுள்ள இறைவனின் வலப் பின் கையில் பரசு. இட முன் கை மார்பருகே விஸ்மயமாய் விரல்கள் விரித்துள்ளது. இடப் பின் கையில் மான். மகுடமென முடியப்பட்டிருக்கும் இறைவனின் சடைமுகப்பில் மண்டையோடு. நெற்றிப்பட்டத்தோடு இணைக்கப்பட்டிருக்கும் பவழம் பதித்த பக்க முகப்புகள் சடைக்கட்டை அணைத்தவாறு இறைவனின் திருமுகத்திற்குக் கம்பீரம் சேர்க்கின்றன.

செவ்வண்ண மேனியராய்க் காட்டப்பட்டிருக்கும் எம்பெருமானின் மலர்ந்த முகத்தில் நெற்றிக்கண். இதழ்கள் இளநகையில் கனிய, விழிகளில் பரவசம். வலச்செவியில் பனையோலைச்சுருள், இடச்செவியில் தோளில் தவழுமாறு மகரகுண்டலம். செவிமடலில் முத்துப் பதித்த அலங்காரச் செவிப்பூக்கள். தோள்களின் இருபுறத்தும் சரியும் ஸ்கந்தமாலை. கழுத்தில் தோரணச் சரங்களோடு முத்துச்சரப்பளி. மார்பில் இடமிருந்து வலமாக நெளிந்து முறுக்கேறிச் செல்லும் துணிப்பட்டையே முப்புரிநூலாக, இடைக்கு மேல் சதுரப் பதக்கங்களாலான உதரபந்தம். அதன் கீழிருந்து உடலைச் சுற்றி இருபுறத்தும் நீளும் மடிப்புத்துணி குத்துக்காலாய் ஊன்றப்பட்டிருக்கும் வலக்காலின் முழங்காலருகே நன்கு முடியப்பட்டு யோகபட்டமாய்த் திகழ்கிறது. இடுப்புச் சிற்றாடையின் இருபுற முடிச்சுத்தொங்கல்களுள் வலப்புறத்தது வலப்பாதத்தின் கீழிருந்து வெளிப்பட்டு மடல்களாய் விரிந்துள்ளது.

இறைவனின் மேற்கைப் பகுதியில் வலப்புறம் பாம்புக் கங்கணமும் இடப்புறம் பெருமுகப்புடனான முத்துக் கங்கணமும் அமைய, முழங்கையருகே பெருமுத்துகள் பதித்த கடகவளையும் மணிக்கட்டில் வளைகளும் விரல்களில் மோதிரங் களும் உள்ளன. இடுப்பாடையின் கீழ்க் குறங்குசெறியும் கணுக்காலில் தண்டை வரிசையும் கால் விரல்களில் மோதிரங்களும் காணப்படுகின்றன.

இறைவனின் இடப்புறத்தே கரண்டமகுடராய்ப் பச்சை வண்ணத்தில் எதிரில் நடப்பவற்றை ஆர்வத்தோடு உற்றுநோக்கும் பார்வையராய் உமையன்னை. இரண்டு கால்களையும் தொங்கவிட்டு அமர்ந்திருக்கும் தேவியின் வலத்தொடை மீது இறைவனின் மடித்த இடக்கால் படர்ந்துள்ளது. அரைப் பட்டிகையுடன் இடுப்பாடையின் முடிச்சு இடப்புறம் தொங்க, இடை நடுவில் இடைக்கட்டு. மேகலையும் குறங்குசெறியும் இடப்புறம் நன்கு தெரிகின்றன. வலக்கையை மடித்து இறைவ னின் இடத்தொடை மீது படரவிட்டுள்ள இறைவியின் இடக் கையில் தாமரை. கைகளில் கங்கணங்களும் பட்டை வளைகளும் பதக்க வளைகளும் உள்ளன. செவிகளில் வலப்புறம் பனையோலைச்சுருள், இடப்புறம் கடிப்பு. மடல்களில் செவிப்பூக்கள்.



கழுத்தணிகள் பலவாக இருப்பினும் இன்னவையென அடையாளம் காணக்கூடவில்லை. கழுத்தணிகளுக்குக் கீழிருந்து வயிற்றுப்பகுதி வரையிலும் பூசப்பட்டிருக்கும் சிவப்பு வண்ணம் கைகளின் மீதும் காட்டப்பட்டுக் கேயூரம்வரை பரவியிருப்பதால், அம்மை தற்கால ரவிக்கை போன்றதொரு மேலாடை அணிந்திருக்கும் தோற்றம் கிடைக்கிறது. மார்பின் இடப்பகுதி முழுவதும் சிதைந்துள்ள நிலையில், வலப்புறத்தே தோளிலிருந்து தொங்கும் மார்புக்கச்சின் பட்டைகள் கொண்டு கச்சணிந்துள்ளமையை அறியமுடிகிறது. இடைக்கு மேல் உதரபந்தமும் ஸ்வர்ணவைகாக்ஷம் போன்றதோர் அணியும் காணப்படுகின்றன. கால்களில் தண்டை, தாள்செறி.

மரமும் கவரிப்பெண்களும்

இந்த இறைஇணையின் பின்னிருக்குமாறு நன்கு கிளைத்துச் செழித்துள்ள மரத்தின் ஒரு கிளையில் இறைவனின் கைப் பையான பொக்கணம் உள்ளது. மரத்தின் ஒரு பகுதியில் தெரியும் அடர்த்தியான மயில்தோகை கவரியின் ஒரு பகுதியாகலாம். இறைவியின் பின்னால் நிற்கும் இரண்டு கவரிப் பெண்களுள் முதலாமவர் இளஞ்சிவப்பினர். இரண்டாமவர் மஞ்சள் மங்கை. முதலாமவர், இடுப்பிலிருந்து கணுக்கால்வரை இடையிடையே சரிகை வளையங்கள் பெற்றுள்ள மெல்லிய ஆடையணிந்துள்ளார். இடுப்பில் அரைப்பட்டிகை. தமிழம் வகைக் கொண்டை முடித்து, அதில் மலர்ச்சரங்களும் அணிகலன்களும் சூடியுள்ள அவரது நெற்றிச்சுட்டி பூரப்பாளையாய் முகத்திற்கு எழில் கூட்டுகிறது. செவிகளில் கடிப்பு. கழுத்தில் உமையன்னையைப் போலவே முத்துச்சரப்பளி. கைகளில் கங்கணங்கள், வளைகள். இடக்கை கடியவலம்பிதமாய் இருக்க, வலக்கை தோளின் மீதுள்ள கவரியைப் பிடித்துள்ளது. மறைக்கப்படாத இளமார்புகளுக்கிடையில் மடித்த துண்டு போலப் பரவியுள்ள மேலாக்கு வலத்தோளிலிருந்து இடமார்பகத்தை இலேசாகத் தொட்டபடி இடப்புறம் செல்கிறது. இளஞ்சிவப்பு நங்கையின் பின்னுள்ள மஞ்சள்மங்கையின் முகமும் கால்களும் மட்டுமே தெரிகின்றன. ஏறத்தாழ முதலாமவர் போலவே காட்சியளிக்கும் அவரது இடுப்பாடையில் சரிகை வளையங்கள் இல்லை.

நந்தியும் நான்கு பூதங்களும்

இறைவன் இருக்கையின் கீழே திருநீற்றுச் சம்புடம், பொற்குடம், மூடப்பட்ட பேழை ஆகியன காட்டப்பட்டுள்ளன. பேழைக்கு இடப்புறம் இறைவனின் வாகனமான நந்தி அமர்ந்துள்ளது. அதன் முதுகில் அழகிய செந்நிற விரிப்புச் சேணம் போலமைய, அதை இடத்திலிருத்துமாறு அதன் நடுப்பகுதி யிலிருந்து இருபுறமும் முத்துப்பட்டைகள் தொங்குகின்றன. திமிலின் கீழிருந்து கழுத்தைச் சுற்றியும் வாலின் கீழிருந்து பின் முதுகைச் சுற்றியும் அழகிய மணிச்சரங்கள். கழுத்தில் மணி மாலைகள். வளைந்த சிறு கொம்புகளில் பூண்கள். சற்றே சினம் காட்டும் கண்கள் என்றாலும் எழிலார்ந்த வடிவம்.

நந்தியின் பின்னே நான்கு பூதங்கள் நிற்கின்றன. நந்தியின் பின் மறைந்தவாறு வலக்கையை வியப்பில் விரித்துள்ள சுடர்முடிப் பூதம் அழகிய முகப்புகளோடு நெற்றிப்பட்டம் அணிந்து, செவிகளில் பனையோலைச் சுருள்கள், கழுத்தில் சவடியுடன், இதழ்களை இலேசாக விரித்துக் கடைக்கண் பார்வை காட்டுகிறது. இது சட்டையணிந்துள்ளதோ என்று கருதுமாறு உடலின் மேற்பகுதியில் வேறொரு வண்ணப்பூச்சு. மடிக்கப்பட்ட துணியை முப்புரிநூல் போல் அணிந்து அடுத்து நிற்கும் பூதத்தின் புடைத்த விழிகளில் திகைப்புப் பார்வை. பனையோலைக் குண்டலங்கள், பூப்பதக்க ஆரம் பெற்றுள்ள அதன் சிற்றாடை முடிச்சுத்தொங்கல் இடப்புறம் காட்டப்பட்டுள்ளது.





தலைமுடி விரிசடை போலப் பின்னோக்கிப் பறக்க, நெற்றிப்பட்டம், சரப்பளி, பனையோலைக் குண்டலங்கள், வளைகள் எனக் காட்சிதரும் மூன்றாவது பூதம் இடப்புறமாய் முகம் சாய்த்துக் கடைக்கண் பார்வை காட்டியவாறு இடக்கையை வியப்பில் விரித்துள்ளது. இதுவும் முதற் பூதம் போலவே சட்டையணிந்துள்ளதோ எனக் கருதுமாறு மார்பு மற்றும் மேற்கைப் பகுதிகளில் வேறொரு வண்ணப்பூச்சுக் கொண்டுள்ளது. துணியொன்றை முப்புரிநூலென அணிந்திருக்கும் அதன் சிற்றாடையொட்டி மேகலையும் குறங்குசெறியும் உள்ளன. வலக்கையில் தாமரைப்பூவுடன் காட்சிதரும் பின்னிரண்டு பூதங்களின் கால்களில் தண்டை.

இடுப்பில் இடைக்கட்டுடனான சிற்றாடை பெற்றுள்ள நான்காவது பூதம் பத்திச்சுவரையடுத்த வாயில் நிலைக்கருகே அரைத்தூணில் இடம்பெற்றுள்ளது. பச்சை வண்ணத்திலுள்ள அதன் பார்வையிலும் திகைப்பு. விரிசடைகளுடன் அழகிய நெற்றிப்பட்டமும் பனையோலைக் குண்டலங்களும் சரப்பளியும் கைவளைகளும் உதரபந்தமும் அணிந்து, இதழ்களை இலேசாக விரித்துள்ள அதன் இருகைகளும் வியப்பு முத்திரையில் விரிந்துள்ளன.

- வளரும்
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.