http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 141
இதழ் 141 [ ஏப்ரல் 2018 ] இந்த இதழில்.. In this Issue.. |
2018 மார்ச்சு 17 'தி இந்து' நாளிதழின் 11ஆம் பக்கத்தில், 'கல்வெட்டு ஆதாரங்கள் கூறும் அசல் வரலாறு' என்ற கீழ்த் தலைப்புடன், 'பெரிய கோயிலின் பொக்கிஷங்கள்' என்ற தலைப்பில் திரு. சி. கதிரவனின் கட்டுரை வெளியாகியுள்ளது.
1. முதல் பத்தியின், 'வானளாவ நிற்கும் தஞ்சைப் பெரிய கோயிலின் கருவறை விமானம்' என்ற தொடர், இன்னமும் கட்டுரையாளர்கள், 'விமானம்' என்ற கட்டடக்கலைச் சொல்லைப் பற்றிய புரிதல் பெறாமையை உணர்த்துகிறது. கருவறையை உள்ளடக்கிய கட்டமைப்பே விமானம். தாங்குதளத்திலிருந்து குடம் வரையிலான அனைத்து உறுப்புகளும் இணைந்த வடிவத்தையே விமானம் என்கிறோம். 2. இரண்டாம் பத்தியில், 'பிரம்மாண்டமான இந்த விமானம், மாமன்னன் இராஜராஜ சோழனால் தங்கம் பூசிய தகடுகள் போர்த்தப்பட்டு சூரிய ஒளியில் ஒளிர்ந்து கொண்டிருந்தது' என்ற செய்தியைத் தொடர்ச்சியற்ற துண்டுக் கல்வெட்டு ஒன்றின் அடிப்படையில் திரு. கதிரவன் பகிர்ந்துகொண்டுள்ளார். திரு. குடவாயில் பாலசுப்ரமணியன் தங்கத் தகடு போர்த்திய விமானம் பற்றிய தகவலைப் பதிவு செய்தபோதே இராஜராஜீசுவரம் விமானம் பொன் வேயப்பட்டதன்று என்பதை உரிய சான்றுகளோடு வரலாறு மின்னிதழில் கட்டுரையாக வெளியிட்டிருந்தோம். 'வாருணிக்கு எழுதிய வரலாற்று மடல்கள்' என்ற நூலிலும் 'மகுடாகமம்-பரசிவம்-தங்க விமானம்' எனும் அக்கட்டுரை பதிவாகியுள்ளது (பக். 62-73). 3. திரு. கதிரவன் தம் கட்டுரையில் மிகப் பிழையான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். 'ராஜராஜன் தனது 25ஆம் ஆட்சியாண்டில் 3083 பலம் எடை கொண்ட செப்பு, 2926.50 கழஞ்சு (1949 பவுன் தங்கம்) பொன்னை அளித்து தங்கமுலாம் பூசிய செப்புத்தகடுகளைக் கொண்டு விமானத்துக்குப் பொன் வேய்ந்தான் என்று கல்வெட்டுகள் கூறுகின்றன.' கதிரவனின் இத்தகவல் முற்றிலும் தவறாகும். இராஜராஜனின் கொடைகளை ஆதரங்களுடன் பதிவு செய்தவராகக் கதிரவன் குறிப்பிடும் திரு. குடவாயில் பாலசுப்ரமணியன் தம்முடைய இராஜராஜேச்சரம் நூலின் 419ஆம் பக்கத்தில், '25ஆம் ஆண்டின் 275ஆம் நாளில் நம் இராசராசனே ஸ்ரீராஜராஜீசுவரமுடையார் விமானக் கலசத்திற்காக மூவாயிரத்து எண்பத்து மூன்று பலம் உள்ள செப்புக்குடமும் அதன் மேல் பூச இரண்டாயிரத்துத் தொள்ளாயிரத்து இருபத்தாறரைக் கழஞ்சுப் பொன்னும் அளித்த'தாகக் குறிப்பிட்டுள்ளார். தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி 2இல் எண் 1ஆகப் பதிவு செய்யப்பட்டிருக்கும் முதலாம் இராஜராஜரின் புகழ் பெற்ற கல்வெட்டு இது பற்றிப் பேசுகையில், 'யாண்டு இருபத்தைஞ்சாவது நாள் இருநூற்றெழுபத்தைஞ்சினால் உடையார் ஸ்ரீராஜராஜதேவர் ஸ்ரீராஜராஜீசுவரமுடையார் ஸ்ரீவிமானத்துச் செம்பின் தூபித்தறியில் வைக்கக் குடுத்த செப்புக் குடம் ஒன்று நிறை மூவாயிரத்து எண்பத்து முப்பலத்தில் சுருக்கிந தகடு பல பொன் ஆடவல்லானென்னுங் கல்லால் நிறை இரண்டாயிரத்துத் தொளாயிரத்து இருபத்தறு கழஞ்சரை' என்று மிகத் தெளிவாகக் குடத்தின் எடையையும் அக்குடத்தின் மீது தகடாக்கிப் போர்த்தப்பட்ட (திரு. குடவாயில் பாலசுப்ரமணியன் கூறியிருக்குமாறு குடத்தின்மீது பூச அன்று) தங்கத்தின் அளவையும் குறிக்கிறது. திரு. கதிரவன் இக்கல்வெட்டின் பாடத்தையோ, திரு. குடவாயில் பாலசுப்ரமணியனின் நூலிலுள்ள தகவலையோ சரியாகப் படிக்கவில்லை போலும். அதனால்தான், விமானத்தின் உச்சிக் குடமாக வைக்க இராஜராஜர் அளித்த செப்புக்குடத்தைச் செப்புத்தகடுகளாக்கி அந்த விமானத்தின் உடல் முழுவதும் போர்த்தி மகிழ்ந்துள்ளார். தாம் அளித்த செப்புக்குடத்தின் மேல் தகடுகளாக்கிப் போர்த்த இராஜராஜர் அளித்த பொன், கதிரவனின் கற்பனையில் விமானத்துக்கே தங்கமுலாம் பூசப் பயன்பட்டுள்ளது. 'கல்வெட்டு ஆதாரங்கள் கூறும் அசல் வரலாறு' எப்படியிருக்கிறது பாருங்கள். கதிரவனின் இந்தக் கட்டுரையைப் படிக்கும் வரலாற்று ஆர்வலர்கள் எத்தகைய தவறான புரிதலுக்கு ஆளாவார்கள் என்பதைக் கருதியே இக்கட்டுரை எழுத நேர்ந்தது. திரு. கதிரவனுக்கும் வரலாற்றை எழுதப் புகும் பிற அன்பர்களுக்கும் வரலாறு மின்னிதழ் வைக்கும் பணிவான வேண்டுகோள். அருள்கூர்ந்து வரலாற்றின் முதன்மைத் தரவுகளைச் சரியாகப் படித்துத் தெளிவாகப் புரிந்துகொண்டு எழுதுங்கள். உங்களுடைய தவறான பதிவுகள் ஒவ்வொன்றும் பிழையான வரலாற்றுப் புரிதலை விதைத்துவிடும். வரலாற்று ஆர்வலர்களுக்கு ஒரு வேண்டுகோள். எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும், யார் யார் கை வழிக் காண்கினும் அவற்றின் மெய்ப்பொருள் கண்டு தெளிக. |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |