http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 151
இதழ் 151 [ பிப்ரவரி 2021 ] இந்த இதழில்.. In this Issue.. |
முந்திச் செய்வினை இம்மைக்கண் நலிய பொருள்: மாலை நேரத்தில் தோன்றும் வெள்ளை நிறைப்பிறைச் சந்திரனைச் சூடும் எம் தலைவனே! திருவாரூரில் எழுந்தருளியிருக்கும், தேவர்களின் தலைவனே! திருவிடைமருதூரில் எழுந்தருளியிருக்கும் எம் தந்தையாகிய பெருமானே! முற்பிறப்பில் செய்த வினை, இப்பிறப்பில் வந்து வருந்துமாறு செய்கிறது; ஆயினும் அதனை அறியாது மூர்க்கனாய் இருந்து, வீணே காலத்தை கழித்துவிட்டேன்; உன் திருவடியை மனத்தில் நிறுத்தி ,தியானிக்கவும் மாட்டேன்; யாசிப்பவர்களுக்கு ஒரு சிறிதளவுகூட பொருளைக் கொடுத்து உதவமாட்டேன்; இருப்பினும்,நான் உய்யும் வழியை இனியாவது அருளுவாயாக! சென்ற இதழில் பரகேசரி என்ற பட்டம் சூடிய மன்னர்களின் 3 ம் ஆட்சியாண்டு கல்வெட்டுகள் இரண்டை ஆராய்ந்தோம். இனி இம் மன்னர்களின் 4 ம் ஆட்சியாண்டு கல்வெட்டுகளை ஆராய்வோம். 4-ம் ஆட்சியாண்டு கல்வெட்டுகள் 1) ARE145/1895- S.I.I.Vol.5-No:709 இது ஒரு சிதைந்த கல்வெட்டு. இருமுடிசோழ மசக்கல் என்ற பெயர் கொண்ட, விவசாயம் செய்ய தகுதியற்ற, தரிசு நிலத்தை திருத்தி, விளைநிலமாக்கி இதில் விளையும் பயிர் கொண்டு, திருவிடைமருதூர் கோயிலில் விளக்கு எரிக்க 50 காசுகள் ஆகும் என்று ஒப்புகொண்டு, சோழகோனாரிடம் கோயில் உடையார்கள் பெற்ற காசு-10. இக்காசு 10 ம் பற்றாமையால் விளக்கு எரிக்க யாரும் இல்லாததை தெரிவிக்கும் இக்கல்வெட்டு அதன்பின் நடந்த நிகழ்ச்சிகள் தெரிவிக்கும் பகுதிகள் முழுவதும் சிதைந்து விட்டதால் இக் கல்வெட்டின் முழுவிபரம் தெரியவில்லை. இருமுடிச்சோழன் என்பது முதலாம் பராந்தகனின் விருதுப்பெயர் ஆகும்.(1) இப் பெயர் கொண்டு நிலம் ஒன்று அழைக்கப்பட்டுள்ளது. அதனால் இக் கல்வெட்டு பராந்தகனுடையதாகவோ அல்லது அதன்பின் வந்த பரகேசரி பட்டம் கொண்ட அரிஞ்சியன், ஆதித்தகரிகாலன், அல்லது உத்தமசோழன் இவர்களில் ஒருவராக இருக்கலாம். 2) ARE 198/1907 –S.I.I. Vol.19 NO:90. திருவிடைமருதூர் வியாபாரி களரி தொன்றி என்பவர் திருவிடைமருதூர் கோயிலில் உள்ள ஆடல் விடங்க தேவரின் கைக்கு பொன்னால் செய்த கவசம் ஒன்று (இதன் நிறை 3.5 கழஞ்சு) அதில் வைத்த கல்லுக்கு விலையாக காசு 2 ம் அக்கம்(2) 2- ம் திருவிடைமருதூர் கோயில் பண்டாரத்தில் வழங்கினான். இக் கல்வெட்டில் உள்ள பரகேசரி இன்னார் என்று தெரிவிக்கும் குறிப்புகள் ஏதும் இல்லாததால் இக் கல்வெட்டு முதலாம் பராந்தகன், அரிஞ்சியன், ஆதித்த கரிகாலன், அல்லது உத்தம சோழன் இவர்களில் ஒருவருடையதாகலாம். 3) ARE 199/1907- S.I.I. Vol.3No:124 இக் கல்வெட்டு பரகேசரி என்ற பட்டம் கொண்ட மன்னனின் 4-ம் ஆட்சியாண்டு நாள் 325 ல் பொறிக்கப்பட்டுள்ளது. இக் கல்வெட்டு முதலாம் பராந்தகனுடையது என்பதை ”இக் கோயில் கற்றளியாக்கிய மன்னன் ” என்ற தலைப்பின் கீழ் பின்னர் பார்ப்போம். 4) ARE 213/1907-S.I.I. Vol.19 No: 92 திருவிடைமருதூர் கோயில் மூலஸ்தானத்து இறைவனுக்கு, இக் கோயில் நிர்வாக அரசு அதிகாரியான மதுராந்தக மூவேந்த வேளாளருக்காக பணிபுரியும் ……பட்டன் கண்ணணாண இங்கன் நாட்டு பல்லவரையன் (3) காலத்தில் ,சில தனி நபர்கள் பொற்பூவும் பொன்னால் செய்யப்பட்ட குண்டிகையும் மற்றும் பொன்னால் செய்யப்பட்ட உபகரணங்களையும் வழங்கினர். என்றும் வீரமாதேவியார் கொடுத்த ஒரு நந்தாவிளக்கு பற்றியும் இக் கல்வெட்டு குறிப்பிடுகின்றது. கல்வெட்டு மிகவும் சிதைந்துள்ளதால் மற்ற விபரங்கள் அறிய இயலவில்லை. இக் கல்வெட்டில் வரும் அதிகாரி மதுராந்தக மூவேந்த வேளார் என்பவர் உத்தமசோழன் காலத்தில் வாழந்த ஒரு அதிகாரி ஆவார்.(4) . இவர் உத்தமசோழனுக்கு முன் இளவரசனாய் ஆண்ட ஆதித்த கரிகாலன் காலத்திலும் மற்றும் சுந்தரசோழன் காலத்திலும் கோயில் மயிலையான பராந்தக மூவேந்த வேளார் என்ற பெயரில் இக்கோயிலில் ஸிகாரியம் ஆராய்கின்ற அதிகாரியாய் இருந்துள்ளான் (5) ,சுந்தர சோழனுக்கு பராந்தகன் என்ற மற்றொரு பெயரும் உண்டு. (6) மன்னரின் கீழ் பணிபுரிந்த அதிகாரிகள் மன்னரின் பெயரை இணைத்துக் கொள்வது வழக்கம் என்பதை ஏற்கனவே பார்த்தோம். சுந்தரசோழன் காலத்தில் பராந்தக மூவேந்த வேளார் என்ற பெயரில் இருந்த இவர் அதன் பின் ஆண்ட உத்தமசோழன் காலத்தில் உத்தமசோழனின் இயற் பெயரான மதுராந்தகன் என்ற பெயரை இணைத்துக்கொண்டு மதுராந்தக மூவேந்த வேளார் என்று மாற்றிக்கொண்டார்.(7) எனவே இக்கல்வெட்டு உத்தமசோழனுடையது என உறுதியாக கூற்லாம். 5) ARE 237/1907 –S.I.I.-19 No.:93 இது ஏற்கனவே படியெடுக்கப்பட்ட கல்வெட்டு ஆகும். 1985 ம் ஆண்டில் படியெடுக்கப்பட்டு ARE145/1895 என பதிவாகியுள்ளது. இதனை 4-ம் ஆட்சியாண்டு கல்வெட்டுகள் என்ற தலைப்பில் முதலாவதாக பார்த்தோம். 6-ம் ஆட்சியாண்டு கல்வெட்டுகள் 1) ARE 219/1907-S.I.I.Vol.19-No:162 அரசு அதிகாரியான சிற்றிங்கன் உடையான் கோயில் மயிலையான மதுராந்தக மூவேந்த வேளார் ,பேராவூர் சபையினரிடமிருந்து பொது ஏலத்தில் 2 வேலி இறையிலி நிலத்தை 150 ஈழக்காசு கொடுத்து விலைக்கு வாங்கி திருவிடைமருதூர் கோயிலுக்கு நில நிவந்தமாக வழங்கினான். கல்வெட்டில் குறிப்பிடப்படும் அரசு அதிகாரி மதுராந்தக மூவேந்த வேளார் என்பவர் இப் பெயரில் உத்தமசோழன் காலத்தில் பணிபுரிந்தவன் என்பதை ஏற்கனவே பார்த்தோம். எனவே இக் கல்வெட்டு உத்தமசோழனுடையதாகும். 9-ம் ஆட்சியாண்டு கல்வெட்டுகள் 1) ARE 210/1907-S.I.I. Vol.19-No:224 சிதைந்த கல்வெட்டு. தஞ்சாவூரைச் சேர்ந்த ஒருவன், இக் கோயிலில் விளக்கு எரிக்கவும், காமக்கோட்டத்திலுள்ள தெய்வத்திற்கு நிவந்தம் அளித்ததையும் இச்சிதைந்த கல்வெட்டு தெரிவிக்கின்றது. வேறுவிபரம் அறிய இயலவில்லை.எனவே இக்கல்வெட்டு எந்த மன்னருடையது என்பதை அறிய இயலவில்லை. 10-ம் ஆட்சியாண்டு கல்வெட்டுகள் 1) ARE 193/1907-S.I.I. Vol-19 No:248 கற்றளி பட்டலகன் என்பவன் திருவிடைமருதூர் கோயிலில் ஒரு நந்தா விளக்கு எரிக்க ,வரம்பூசலான் என்பவரின் மேலாண்மைக் கீழ் இருக்கும் திரைமூர் நாட்டைச் சேர்ந்த திருநீலக்குடி சபையினரிடம், கடனாக 50 காசு கொடுத்தான்.. இக் காசினை திருவிடைமருதூர் வியாபாரி கோமல் உடையான் திருவியலூர் சாத்தான் என்பவனிடம், திருநீலக்குடி சபையினர் கொடுத்து, வட்டியாக தினமும் உழக்கு எண்ணெய் பெற்று அதனை திருவிடைமருதூர் கோயிலுக்கே கொண்டுவந்து கொடுத்து நந்தா விளக்கு எரித்தனர். திருநீலக்குடி சபையினர் பணிக்க இக்கல்வெட்டு எழுதியவன் திருவிடைமருதூர் மத்தியஸ்தன் தொணன் அய்யனன் ஆன திரைமூர் நாட்டு பெருங்காவிரியன் இக் கல்வெட்டோடு 11-ம் ஆட்சியாண்டு கல்வெட்டுகள் மூன்றையும் சேர்த்து ஒன்றாக ஆராய்வோம். 11-ம் ஆட்சியாண்டு கல்வெட்டுகள் 1) ARE 150/1895-S.I.I.-Vol.5 No:714 வெண்ணாட்டு வரம்பூசலான் சந்திராதிச்சன் சத்துருகண்டன் என்பவன் திருவிடைமருதூர் கோயிலில் உள்ள உணவுச்சாலையில் பிராமணர்கள் உண்பதற்கு 18 தாம்பாளம் வழங்கிணான். இதன் நிறை 262 பலம் ,சட்டுவம் நிறை 5 பலம் 2) ARE 230/1907-S.I.I. Vol.19-No:278 இது ஒரு சிதைந்த கல்வெட்டு. வெண்ணாட்டு வரம்பூசலுடையான் சந்திராதிச்சன் சத்துருகண்டன் என்பவன் திருவிடைமருதூர் கோயிலில் மேலாண்மை செய்யும் அதிகாரியாய் பணிபுரிந்தபோது, இக் கோயிலில் ஏதோ ஒரு தானம் வழங்கப்பட்டுள்ளது கல்வெட்டு சிதைந்துள்ளதால் மற்ற விபரம் அறிய இயலவில்லை. 3) ARE 231/1907-S.I.I.Vol-19 –NO:279 இதுவும் ஒரு சிதைந்த கல்வெட்டு வெண்ணாட்டு வரம்பூசலுடையான் என்ற பெயர் மட்டும் உள்ளது. வெண்ணாட்டு வரம்பூசலுடையான் சந்திராதிச்சன் சத்துருகண்டன் என்பவர் பரகேசரியின் 10-ம் ஆட்சியாண்டில் திரைமூர் நாட்டின் மேலாண்மை செய்யும் நபராக இருந்துள்ளார். இப்பரகேசரியின் 11-ம் ஆட்சியாண்டில் திருவிடைமருதூர் கோயிலை மேலாண்மை செய்யும் அதிகாரியாய் இருந்துள்ளார். இனி இந்த பரகெசரி யார் என்று பார்ப்போம். முதலாம் பராந்தகன், அரிஞ்சயன், ஆதித்த கரிகாலன் மற்றும் உத்தமசோழன் ஆகியோர் பரகெசரி பட்டம் சூடி ஆட்சி புரிந்த மன்னர்கள் ஆவர். இதில் ஆதித்த கரிகாலன் 5 ஆண்டுகளும் அரிஞ்சயன் 7 ஆண்டுகளும் ஆட்சிபுரிந்தவர்கள்.(8) எனவே இக்கல்வெட்டுகள் இம் மன்னர்களுடையது அல்ல என உறுதியாக கூறலாம். எனவே மீதமுள்ள இரு மன்னர்களான முதலாம் பராந்தகன் மற்றும் உத்தமசோழன் ஆகியோரில் ஒருவராகலாம். ஆனால் உத்தமசோழனின் 4,6 ,14 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டுகள் மூலமாக இக் கோயிலில் மேலாண்மை செய்யும் அதிகாரிகளாக சிற்றிங்கன் உடையான் கோயில் மயிலையான மதுராந்தக மூவேந்த வேளார் மற்றும் இங்கன் நாட்டு பல்லவரையன் என்ற அதிகாரிகளின் பெயரைச் சுட்டிக் காட்டுகின்றன (9) .17 ஆண்டுகள் ஆட்சி புரிந்த உத்தமசோழனின் ஆட்சிக்காலத்தில் திருவிடைமருதூர் கோயில் மேலாண்மைன்செய்யும் அதிகாரிகளாக பெரும்பாண்மையான ஆண்டுகள் இவ்விருவருமே பணிபுரிந்துள்ளனர். எனவே இப் பரகேசரி கல்வெட்டுகள் முதலாம் பராந்தகனுடையதாகலாம். எனினும் இன்னும் உறுதியான ஆவனங்கள் கிடைத்தால் மட்டுமே இக் கல்வெட்டுகள் முதலாம் பராந்தகனுடையதாக கருதமுடியும். எனவே இக்கல்வெட்டுகள் பரகேசரி என்ற பட்டம் சூடிய ஒரு மன்னனுடையதாக கருதலாம் (வளரும்). அடிக்குறிப்புகள் |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |