http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 151
இதழ் 151 [ பிப்ரவரி 2021 ] இந்த இதழில்.. In this Issue.. |
விளக்கேற்றத் துணைநின்ற கால்நடைகள் சாவா மூவாப் பேராடுகள் கோயில்களில் விளக்கேற்றத் துணைநின்ற ஆடு, பசு, எருமை உள்ளிட்ட கால்நடைகள் கல்வெட்டுகளில், ‘கால்மாடு’, ‘முந்நிரை’ என அழைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் பெரும்பாலான கோயில்களில் விளக்கேற்ற இம்முந்நிரையில் ஆடுகளே மிகுதியான அளவில் வழங்கப்பட்டுள்ளன. பசுக்களையும் எருமைகளையும் கொடையாகப் பெற்ற கோயில்களில்கூட பராமரிப்புக் காரணங்களாலோ அல்லது பிற காரணங்களாலோ சில கோயில் நிருவாகங்கள் அவற்றுக்கு மாற்றாக ஆடுகளையே கொண்டமையைக் கல்வெட்டுகளில் காணமுடிகிறது. தஞ்சாவூர் ராஜராஜீசுவரத்து விளக்குக் கல்வெட்டு, முதல் ராஜராஜரின் பெருந்தர அலுவலர் ஆலத்தூருடையான் காளன் கண்ணப்பன் அளித்த 15 பசுக்களுக்கு மாற்றாக இடையர்களிடம் 30 ஆடுகள் வழங்கப்பட்டதையும் ராஜராஜர் அளித்த 3 எருமைகளுக்கு மாற்றாக 18 ஆடுகள் தரப்பட்டதையும் தெரிவிக்கிறது. கொடையாளர்களால் ஏற்றப்பெற்ற விளக்குகளின் எண்ணிக்கைக்கும் அவற்றுக்கான நெய்த்தேவைக்கும் ஏற்பவே அவர்தம் கொடைகள் அமைந்தன. உழக்கு நெய் கொண்டு இரவும் பகலும் நில்லாதொளிர்ந்த ஒரு நந்தாவிளக்கிற்குச் சோழர் காலத்தில் பொதுவாக 90 அல்லது 96 ஆடுகள் வழங்கப்பட்டன. சில கோயில்களில் இவ்வெண்ணிக்கை நெய் அளவிற்கேற்பக் குறைந்தும் கூடியும் அமைந்தது. திருவாமாத்தூர் அபிராமேசுவரர் கோயிலில் முதல் பராந்தகர் காலத்தில் 100 ஆடுகளும் அம்பாசமுத்திரம் எரிச்சாவுடையார் கோயிலில் சுந்தரசோழ பாண்டியர் காலத்தில் 60 ஆடுகளும் சோழன் தலைகொண்ட வீரபாண்டியர் காலத்தில் நெல்லையப்பர் கோயிலில் 25 ஆடுகளும் நந்தாவிளக்கேற்றத் தரப்பட்டமையை அறியமுடிகிறது. முதல் ராஜராஜர் காலத்தில் ஒரு காசுக்கு 3 ஆடுகள் பெறப்பட்டதாகத் தஞ்சாவூர் ராஜராஜீசுவரம் கல்வெட்டு கூற, திருவாமாத்தூர் அபிராமேசுவரர் கோயிலிலுள்ள முதல் இராஜேந்திரரின் கல்வெட்டு. ஒரு காசுக்கு எட்டு ஆடுகள் விற்கப்பட்டதாகத் தெரிவிக்கிறது. இராஜேந்திரரின் அலுவலர் வேளான் ஆரூரன் 132 காசுகள் வழங்கி 1056 ஆடுகளை விலைக்குப் பெற்றுக் கோயிலுக்களித்தார். இவ்வாடுகளுக்குப் பொறுப்பேற்ற பன்மன்றாடியர் (பல மன்றாடியர்), அக்கோயில் வழக்கப்படி உழக்கு நெய்யால் ஒளிரும் ஒரு நந்தாவிளக்கிற்கு 90 ஆடுகள் என, 1056 ஆடுகள் கொண்டு 11 நந்தாவிளக்குகளுக்கு நாளும் 2 நாழி 3 உழக்கு நெய்யளித்தனர். அதே கோயிலிலுள்ள குலோத்துங்க சோழரின் கல்வெட்டு அரசரின் படைத்தலைவர் அரையன் பூமாங்கழல் கோயிலாரிடம் 11 காசு தந்து 96 ஆடுகள் விலைக்குப் பெற்று அவற்றின் வழி நந்தாவிளக்கேற்ற வகை செய்தமை கூறுகிறது. சோழர் காலத்தில் பல்வேறு காசுகள் வழக்கிலிருந்தன. இக்கல்வெட்டுகள் வழி வெளிப்படும் காசுகளின் தன்மையும் மதிப்பும் தெரியாமையால் ஆடுகளின் விலைமாற்றம் குறித்துக் கருத்துக்கூற இயலவில்லை. விளக்கேற்ற வழங்கப்பட்ட ஆடுகள் வெள்ளாடு, செம்மறியாடு, கொங்கலாடு என்று பல்வேறு வகையினவாய் அமைந்தன. பட்டி பெருகிச் செழிக்கவேண்டும் என்ற நோக்கில், ‘சாவா மூவாப் பேராடு’களாகக் குறிக்கப்பெற்ற இவ்வாடுகளோடு, இவை விருத்தியாவதற்காகவே சிலர் கிடா ஆடுகளும் வழங்கினர். அவை பொலி கிடா, பொலி மோத்தை, தகர் என்றழைக்கப்பட்டன. சிராப்பள்ளி மாவட்டம் சீனிவாசநல்லூர்க் குரங்கநாதர் கோயிலிலுள்ள கண்டராதித்தர் கல்வெட்டு, மகேந்திரமங்கலத்தைச் சேர்ந்த எழுவன் கங்காதரன், கோயில் இறைவன் திருமுன் நந்தாவிளக்கேற்றச் செம்மறி பாதியும் வெள்ளாடு பாதியுமாகச் சாவா மூவாப் பேராடுகள் வழங்கியதாகக் கூறுகிறது. கோயில் அல்லது ஊராட்சியரால் பெற்றுக்கொள்ளப்பட்ட இக்கால்நடைகள் கோயிலுடன் தொடர்புடைய இடையர் குடும்பங்களிடம் ஒப்புவிக்கப்பெற்றன. மன்றாடிகள் என்று பரவலாக அழைக்கப்பட்ட இப்பெருமக்கள், தங்கள் நெருங்கிய உறவுகள் (தஞ்சாவூர் ராஜராஜீசுவரத்து விளக்குக் கல்வெட்டில் சுட்டியுள்ளவாறு மகன்கள், உடன்பிறந்தார், அவர்தம் மகன்கள், சிற்றப்பன், பேரப்பன், அவர்தம் மக்கள், மாமன், மச்சுனன், மருமகன்-இவர்களுள் இறுதி மூன்று உறவுகளும் நன் என்ற முன்னொட்டுடன் சிறப்பிக்கப்பட்டுள்ளன), கிளை உறவுகளுடன் அக்கால்நடைகளைப் பேணிவளர்த்து அவற்றைப் பெருகச்செய்து அவற்றின் பால் வழிக் கிடைத்த நெய்யில் விளக்கேற்றத் தேவையான அளவைக் கோயிலில் நாளும் அளந்தனர். கோயில் தேவைபோக எஞ்சிய வருவாய் இவ்இடையர்களின் வாழ்க்கைக்குப் போதுமானதாக அமைந்தது. இப்படி வழங்கப்படும் நெய்யை அளந்து வாங்கக் கோயிலார் அளவு நிர்ணயம் செய்யப் பெற்ற சிறப்பு முகத்தலளவைகளைக் கொண்டிருந்தனர். ஒரு சில கோயில்களில் கொடையாளிகள் கால்நடைகளை நேரடியாக இடைப்பெருமக்களிடமே ஒப்புவித்து விளக்கேற்ற வேண்டியமையையும் கல்வெட்டுகள் பதிவுசெய்துள்ளன. மாறமங்கலம் சந்திரசேகரர் கோயிலிலுள்ள முதல் குலோத்துங்கர் கல்வெட்டு, தம் தம்பி தாளிதூவேதிக்காகக் கோயிலில் நாளும் ஆழாக்கு நெய் கொண்டு நந்தாவிளக்கேற்ற விழைந்த மணமேற்குடி வணிகர் தாளிநாராயணன் 25 ஆடுகளை இவமறங்கோன் சூளாமணி எனும் ஆயரிடம் அளித்ததாகக் கூறுகிறது. கொடையாக வழங்கப்படும் ஆடுகள் நோய் அல்லது வேறு காரணங்களினால் உயிரிழப்பின், கொடையாளியின் விளக்கறம் என்னவாகும் என்ற கேள்விக்கு விடையிறுக்குமாறு அமைந்த சோழர் காலக் கல்வெட்டைச் சிராப்பள்ளி மாவட்ட லால்குடி சப்தரிஷீசுவரர் கோயிலில் டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய ஆய்வர்கள் அண்மையில் கண்டறிந்தனர். பூதி பல்ல வரையரான வீரசிகாமணிப் பல்லவரையர் இக்கோயிலில் நந்தாவிளக்கேற்ற 84 கொங்கலாடுகளை வழங்கியிருந்தார். கோயில் பொறுப்பிலிருந்த அவ்வாடுகள் புன்னையிலைகளைத் தின்று குடல் அழுகி இறந்தன. செய்தி அறிந்த கொடையாளர் புதுக்குடியைச் சேர்ந்த இராயரி ஆதித்தன் வழி அவற்றை விற்றுக் கிடைத்த 9 கழஞ்சு 7 மஞ்சாடி குன்றிப் பொன்னைக் கோயிலாரிடம் தந்து நாளும் ஆழாக்கே அரைப்பிடி நெய் கொண்டு விளக்கேற்ற வகைசெய்தார். திருப்புறம்பியம் சாட்சீசுவரநாதர் கோயிலில் உழக்கு நெய்கொண்டு நந்தாவிளக்கேற்ற நாட்டு விடங்கப் பெருமன்றாடி என்பார் வழங்கிய 90 ஆடுகளும் குவாத்திரன் துறையன், ஊரன் பாலை எனும் இரு இடைப்பெருமக்களிடம் அளிக்கப்பெற்றன. அவற்றுள் 12 ஆடுகள் இறந்தன. இதை அறிந்த மழவடி கண்ணன் எண்ணிக்கையை நேர்செய்ய 12 ஆடுகளைப் புதிதாக வழங்கி நந்தாவிளக்கு தொடர்ந்தெரிய உதவினார். பசுவின் நறு நெய் கொண்ட விளக்குகள் கோயில்களில் விளக்கேற்ற அளிக்கப்பட்ட பசுக்களைப் பெரும்பசு, பாற்பசு, சாவா மூவா வாழ் மாடு எனும் சிறப்புச் சொற்களால் கல்வெட்டுகள் பெருமைப்படுத்துகின்றன. ஆடுகளைப் போல் அல்லாமல் பசுக்களின் பால், நெய்யாகி விளக்கேற்றப் பயன்பட்டதுடன், இறைத்திருமேனிகளை முழுக்காட்டவும் இறைப் படையல்களுக்கான மூலப்பொருளாகவும் விளங்கியதைக் கல்வெட்டுகளால் அறியமுடிகிறது. சில கல்வெட்டுகள் கோயில்களில் பெறப்பட்ட பசுவின் பாலை, ‘நீர் படா தரத்துப் பால்’ என்றே குறிப்பிடுகின்றன. இறைவனுக்கான திருஅமுதுகளில் பெரும்பங்கு வகித்த தயிரும் நெய்யும் இத்தகு பசுவின் பால் கொண்டே தயாரிக்கப்பட்டன. அப்பர் பெருமான் குறிப்பிடும் இறைவனின் ஆனைந்து (பஞ்சகவ்யம்) முழுக்காட்டு பசுவின் பால், தயிர், நெய், சிறுநீர், சாணம் கொண்டே செய்யப்பட்டது. சோழர் காலக் கல்வெட்டுகளில் ஒன்று, இத்தகு திருமுழுக்காட்டிற்கு இவ்வைந்து ஆன்படு பொருள்களை எந்தெந்த அளவு கொள்ளவேண்டும் என்பது குறித்துத் தெளிவான சுட்டல்களை முன்வைக்கிறது. சித்தூர் மாவட்டம் காளஹஸ்தியிலுள்ள காளத்திநாதர் கோயிலில் இறைத்திருமுன் இரண்டு நந்தாவிளக்குகளேற்றப் பொன்னியரசரும் அவர் மகன் வீமரசரும் விளக்கிற்கு 32 பசுக்களும் ஓர் எருதும் தந்தனர். பொன்னியரசர் இருநிலைகள் கொண்ட குத்துவிளக்கு ஒன்றையும் அளித்தார். பசுக்களின் எண்ணிக்கை சற்று முன்பின்னாக அமைந்தபோதும் கோயிலார் கொடையை ஒப்புக்கொண்டு விளக்கேற்றியுள்ளமை குடிமல்லம் கல்வெட்டொன்றால் தெரியவருகிறது. அதிகைமான் என்பவர் இக்கோயிலில் நந்தாவிளக்கேற்ற 30 பசுக்களே வழங்கியுள்ளார். அதே கோயிலில் சந்திவிளக்கேற்ற கற்கடராயன் 3 பசுக்களை மட்டுமே தந்துள்ளார். காளஹஸ்தி திருக்கோயில் திருவிளக்கு மன்றாடிகளில் ஒருவரான நாற்பத்தெண்ணாயிரக்கோன் மகன் முதலியான், சோமதேவனிடம் 32 பசுக்களும் எருது ஒன்றும் பெற்றுக்கொண்டு நாள்தோறும் உழக்கு நெய்யால் இறைத்திருமுன் நந்தாவிளக்கேற்ற ஒப்புக்கொண்டார். அந்நெய்யைக் கோயில் அளவையான திருக்காளத்தி உடையானால் அளப்பதாகவும் முதலியான் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டளவில் விளக்குகள் தொடர்பாகப் படியெடுக்கப்பட்டிருக்கும் கல்வெட்டுகளில் மிக நீளமானதும் சமூக வரலாற்றுக் களஞ்சியமாகவும் விளங்கும் ராஜராஜீசுவரத்து விளக்குக் கல்வெட்டின்படி, அக்கோயிலிலுள்ள ஆடவல்லான் என்னும் முகத்தலளவையால் அளக்கப்பெற்ற உழக்கு நெய் கொண்டு நாளும் திருவிளக்கேற்ற ஆடுகள் எனில் 96ம், பசுவாக இருந்தால் 48ம், எருமையாக வழங்கின் 16ம் தரப்பட்டன. இக்கால்நடைகளைப் பாட்டம் செய்து (வளர்த்து, பராமரித்து) கோயிலுக்கு நெய்யளந்த இடையர்தம் உறவினர்கள் அடைகுடிகள் என்றழைக்கப்பட்டனர். இராஜராஜீசுவரம் கல்வெட்டுச் சுட்டும் கணக்கு, அக்கோயில் தவிர பிற கோயில்களில் வழக்கில் இல்லாமையை 32 பசுக்கள் பெற்று விளக்கெரித்த செய்தியைத் தரும் கல்வெட்டுகளால் அறியமுடிகிறது. ஒரு சில கோயில்களில் 30 பசுக்கள் கொண்டு விளக்கேற்றம் அமைய, 12 எருமைகள் பெற்று விளக்கேற்றிய இடங்களும் இருந்தன. திருவாலீசுவரம் கோயிலில் 25 பசுக்கள் பெற்று உழக்கு நெய்யால் காரிசேந்தன் நந்தாவிளக்கேற்ற, அதே கோயிலில் அஞ்சி காரிசணன் 35 எருமைகளைப் பெற்று அதே உழக்கு நெய்யால் ஒரு நந்தாவிளக்கேற்றியுள்ளார். இந்த எண்ணிக்கை மாற்றம் கொடையளிக்கப்பட்ட கால்நடைகளின் வகைமை, அவற்றின் பால் தரும் திறன் இவை பொறுத்து அமைந்ததாகலாம். தமிழ்நாட்டுக் கோயில்களில் அக்காலத்தே ஏற்றப்பட்ட விளக்குகளில் 80 விழுக்காடு, ஆடுகள் வழி கிடைத்த நெய் கொண்டே ஒளிர்ந்தன. பசுக்களைப் பராமரிப்பதில் சிக்கல்கள் நேர்ந்து அவற்றைக் காக்க முடியாது, விற்றுக் கிடைத்த பொன் கொண்டு விளக்கேற்றிய சூழலைக் குடுமியான்மலைக் கோயில் கல்வெட்டு பகிர்ந்துகொள்கிறது. திருக்குரக்குத்துறைக் கல்வெட்டால், எருமைகளுக்கும் அதே நிலை இருந்தமை தெரியவருகிறது. சத்ரிரமணி என்பார் இக்கோயிலில் பகல் விளக்கு ஏற்ற அளித்த 4 எருமைகளையும் ஒரு கிடாக்கன்றையும் விற்று 8 கழஞ்சுப் பொன் பெற்ற கோயிலார், கொடையாளியிடம் 2 கழஞ்சு கூடுதலாகப் பெற்றுக் கிடைத்த 10 கழஞ்சை முதலாகக் கொண்டு, அதன் ஆண்டு வட்டியாகக் கிடைத்த எண்ணெயில் நாளும் ஆழாக்கு எண்ணெயால் விளக்கேற்றினர். விளக்கும் நிலமும் கோயில்களில் விளக்கெரிக்கக் கால்நடைகள், அவ்வக் காலத்தே வழக்கிலிருந்த காசுகள், பொன் முதலியன கொடையளித்தாற் போலவே நிலம் தந்தவர்களும் எண்ணிக்கையில் மிகுதியாக இருந்தனர். அவர்களுள் சிலர் சொந்த நிலைத்தின் ஒருபகுதியை விளக்கேற்றலுக்கு வழங்க, வேறு சிலர் நிலத்துண்டுகளை விலைக்குப் பெற்று விளக்கேற்றத் தந்தனர். இன்னும் சிலர் விளைந்தறியாத் திடல்களையும் மணலடித்த வயல்களையும் விலைக்குப் பெற்று அரும்பாடுபட்டு அந்நிலங்களைப் பண்படுத்தி விளைநிலமாக்கிக் கொடையளித்தனர். விளக்கேற்றும் அறத்திற்காக வழங்கப்பட்ட நிலத்தொகுதிகள் திருவிளக்குப்புறம் அல்லது விளக்குச்செய் எனக் கல்வெட்டுகளில் சுட்டப் பெறுகின்றன. திருவிடைமருதூர் மகாலிங்கசாமி கோயிலில் மன்னர் விக்கிரமசோழரின் திருவாய் மொழியாக அமைந்துள்ள கல்வெட்டொன்று, ‘நம் பெண்டுகளில் திரிபுவனமுழுதுடையாள் இத்தேவர் கோயிலில் திருஉண்ணாழிகைக்குள் திருவணுக்கன் திருநொந்தாவிளக்காக எரியக்கடவிதாக வைத்த விளக்குகளுக்குத் திருவிளக்குப்புறமாக’ நிலமளித்த தகவலைத் தருகிறது. கோயில் நிருவாகம் அல்லது ஊராட்சியினரிடம் ஒப்புவிக்கப்பெற்ற இந்நிலத்துண்டுகள் பெரும்பாலும் வரிநீக்கம் செய்யப்பெற்றே அளிக்கப்பட்டன. வரிநீக்கத்திற்கென நிலத்தின் அளவிற்கும் விளைதிறனுக்கும் ஏற்பக் கொடையாளிகளிடமிருந்து ஊரவை ஒரு குறிப்பிட்ட தொகையைப் பெற்றுக்கொண்டது. சில நேரங்களில் இவ்வரிநீக்கத்தொகை நிலத்தின் விலைத்தொகையைவிடக் கூடுதலாக அமைந்தமையையும் பார்க்கமுடிகிறது. இவ்வரிநீக்கச் செயற்பாடுகளால் அக்காலத்தே வழக்கிலிருந்த வரியினங்கள் வெளிப்படுகின்றன. கொடைநிலத்தின் உரிமை குறித்த தகவல்கள், நிலத்துண்டுகளின் பெயர்கள், நிலத்தின் தரம், அதன் எல்லைகள், விளைவு, பருவங்கள், நீர்ப்பாசனம், பயிர்கள், பண்படுத்தல் குறித்த தரவுகள் என அக்கால வேளாண்மை குறித்த பல அரிய செய்திகளை இத்தகு நிலஆவணங்கள் உள்ளடக்கியுள்ளன. தொடர் விளக்குகள் விளக்குகள் தனித்து ஏற்றப்பெற்றாற் போலவே தீபமாலை, விளக்குத் தோரணம், சோதிமாலை எனப் பல பெயர்களில் தொடர் விளக்குகளாகவும் வழங்கப்பட்டன. செந்தலை சுந்தரேசுவரர், நங்கவரம் மறவனீசுவரம், திருவிடைமருதூர் மகாலிங்கசாமி உள்ளிட்ட பல கோயில்களில் தீபமாலைகள் ஒளிர்ந்தன. முதற் பராந்தகர் காலத்தில் மகாலிங்கசாமி கோயிலில் விளங்கிய தீபமாலைகளுள் ஒன்றில் 17 விளக்குகள் மாலை முதல் இரவுவரை ஒளிர்ந்தன. இத்தீபமாலைகள் காலப்போக்கில் விளக்குத் தோரணங்களாகித் தமிழ்நாட்டுக் கோயில்கள் பலவற்றில் இடம்பெற்றன. அவற்றுள் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலிலுள்ள 3 விளக்குத் தோரணங்களை அவற்றின் அமைப்பு, அழகு, கல்வெட்டுப் பின்புலம் இவற்றிற்காகக் குறிப்பிட்டுச் சொல்லலாம். கோயிலின் வீரவசந்தராயர் மண்டபப் பிற்பகுதியில் பேச்சியம்மன் மண்டப வாயிலை அலங்கரித்தவாறு நிற்கும் விளக்குத்தோரணம் இறைவன் திருமுன்னுக்கான முதல் அலங்கரிப் பாகும். இருபுறத்தும் 6. 13 மீ. உயரம் கொண்டெழும் 70 செ. மீ. அகல விளக்குத் தாங்கல்களைப் பக்கத்திற்கொன்றாக நிற்கும் யானைகள் தாங்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ள இத்தோரணம், மேற்பகுதியில் பிறைநிலவென வளைக்கப்பட்டு, உச்சியில் கீர்த்திமுகத்தைத் தலைப்பாகக் கொண்டுள்ளது. கீர்த்திமுக வாயிலிருந்து வெளிப்படும் தீச்சுடர்கள் இருபுறத்தும் மகரங்களாகித் திரும்ப, கொடிக்கருக்குகளால் அணைக்கப்பட்ட தாவுயாளிகளுடன் தோரணவரிசை தொடங்குகிறது. பக்கத்திற்கு 13 யாளிகளை அகல்தாங்கிகளாகக் கொண்டு முற்றுப்பெறும் பிறைவளைவை அடுத்திறங்கும் தாங்கல்களில் பக்கத்திற்கு ஒரு வானவரைக் காணமுடிகிறது. இறக்கைகளை விரித்தபடி ஒரு கையில் அகலும் ஒரு கையில் மதியும் கொண்டு நிற்கும் இவர்தம் கழுத்தில் பதக்கமாலை. பிறைவளைவின் கீழ்ப்பகுதியில் தாமரைமலரில் அர்த்தபத்மாசனத்தில் யானைத்திருமகள். பின்கைகளில் தாமரைமொட்டுகள். முன்கைகள் காப்பும் அருளும் காட்டத் தலையில் கிரீடமகுடம்; அம்மையின் இருபுறத்தும் யானைகள் நீர்க்குடங்களை ஏந்தித் தாமரைமலர்களின் மீது ஊற்றுமாறு காட்டப்பட்டுள்ளன. பக்கங்களில் இறங்கும் விளக்குத்தாங்கல்கள் ஒவ்வொன்றும் ஐந்து பிரிவுகளாக வடிவமைக்கப்பட்டுள்ளன. நடுப்பிரிவு புடைப்பு வளையமாக அமைய, பிற நான்கும் விரிந்த தாமரையிதழ் அடுக்குகள் போல் அழகுபடுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் ஓர் அகல் என வரிசைக்கு ஐந்து அகல்களாய், ஒவ்வொரு தாங்கலிலும் எண்ணற்ற அகல்கள். கீழே இந்தத் தாங்கல்களைத் தாங்குவனவாய் நிற்கும் யானைகளின் தந்தங்களில் பூண்கள். அவற்றிற்கு மேலுள்ள பகுதியில் பக்கத்திற்கு ஒரு வாயிற்காவலர். இத்தோரணத் தாங்கல்களில் டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய ஆய்வர்கள் கண்டறிந்த கல்வெட்டுகளுள் வலக்கல்வெட்டு 66 வரிகள் பெற்றுள்ளது. கி. பி. 1819ம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் 13ம் நாள் வெட்டப்பட்டுள்ள இக்கல்வெட்டு, அப்போது மதுரை மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்த ரோ பீட்டரின் ஆணைக்கு இணங்க, மதுரை, மாடக்குளம் வட்டாட்சியர் சையது இசுமாயில் அனைத்து மக்களுக்குமாய் இவ்விளக்குத்தோரணம் அமைத்த வரலாற்றைக் கூறுகிறது. இவ்விளக்குமாலையில் 616 விளக்குகள் உள்ளதாகக் கூறும் கல்வெட்டு, அதற்கான வெண்கலம், மெழுக்கு, சில்லறை சாமான், கூலி இவற்றிற்காகச் செலவழிக்கப்பட்ட தொகை 1500 பணம் என்கிறது. இத்தோரணத்தை அமைத்தவர்களாகச் சிலம்பம் மாம்பழ ஆசாரி மகன் முத்து வயிரவன் ஆசாரி, காமாட்சி ஆசாரி தம்பி பரிமளம் ஆசாரி, அம்மமுத்து ஆசாரி மகன் சொக்கலிங்கம் ஆசாரி ஆகியோரை இடப்புறக் கல்வெட்டு அறிமுகப்படுத்துகிறது. இதன் இரு தாங்கல்களையும் இணைக்கும் படிமுகப்பில் காணப்படும் ஆடவர்கள் பெருந்தனக்காரர்களாகலாம். சிற்பக் களஞ்சியமாக விளங்கும் கம்பத்தடி மண்டப முகப்பில் விளங்கும் விளக்குத்தோரணம் சிறியது. மூன்றடுக்குத் தாங்கல்களுடன் மேலெழுந்து அகல்கள் பெற்ற மகரதிருவாசியாய்ப் பிறை வளைவு பெற்றுக் கீர்த்திமுக உச்சியில் முடியும் அதன் இருபுறத்துமுள்ள தாவுயாளிகளின் தலை தொட்டவாறு நீள்மொட்டு நாணுதல்கள். மேற்பகுதியில் அகல்கள் தாங்கும் யாளிகள் பெற்றுள்ள இதன் வலத்தாங்கலின் கீழ்ப்புறத்தே ஒரு கல்வெட்டு கண்டறியப்பட்டது. ஜெய வருடம் மாசி 12ம் நாள் வெட்டப்பட்டுள்ள இக்கல்வெட்டின் கீழே முத்தலைஈட்டி பொறிக்கப்பட்டுள்ளது. திருமலைநாயக்கருக்குப் புண்ணியமாகக் குப்பையாண்டிச் செட்டியார் செய்த இம்மகரதோரண விளக்கைக் கல்வெட்டு, 'புவனேசுவர விளக்கு' என்கிறது. இத்தோரணம் செய்விக்கப்பட்ட காலத்தில் இக்கோயிலின் பாரபத்தியமாகப் பணியில் இருந்தவர் நாவாயி ஆனந்த வீரப்பச் செட்டியார் ஆவார். இக்கோயிலில் உள்ள மூன்று விளக்குத்தோரணங்களுள் எழிலார்ந்ததும் கம்பீரமானதும் அதிக வேலைப்பாடு உடையதுமான விளக்குத்தோரணம் மீனாட்சிநாயக்கர் மண்டபத்தின் பிற்பகுதியில் இருட்டுமண்டப வாயிலுக்கு முன்னுள்ளது. அலங்கரிக்கப்பட்ட யானைகளின் மீது எழும் தோரணத்தாங்கல்கள் 48 செ. மீ. அகலம் பெற்றுள்ளன. யானைகளை அடுத்து இத்தாங்கல்களும் காவலர்களைப் பெற்றுள்ளன. ரோ பீட்டர் காலத் தோரணத்தினும் இத்தோரண யானைகளும் காவலர் வடிவங்களும் திருத்தமாகவும் எழிலுறவும் அமைந்துள்ளன. 6. 89 மீ. உயரத்திற்கு எழும் இதன் தாங்கல்கள் 3. 82 மீ. அகலத்திற்கு 78 செ. மீ. உயரப் பிறைவளைவென விரிந்து, 1. 64 மீ. உயரக் கீர்த்திமுகத்தைத் தலைப்பாகக் கொண்டு முடிகின்றன. பிறைவளைவு தொடங்கும் இடத்துப் பக்கத்திற்கொருவராக உச்சிக் கொண்டையிட்ட வானவ மகளிர். இறக்கைகளுடன் பறக்கும் நிலையிலுள்ள இப்பெண்கள் இருவரும் ஒரு கையில் அகலும் மற்றொரு கையில் மணியும் கொண்டுள்ளனர். பிறைவளைவு முழுவதும் இருபுறத்தும் பக்கத்திற்குப் பதின்மூவராக ஆடல்அழகியர். வலப்புறம் இருப்பவர்கள் வலக்காலையும் இடப்புறம் இருப்பவர்கள் இடக்காலையும் 'ஊர்த்வஜாநு' அமைப்பில் உயர்த்திக் கரணக்காரிகையராய் விளங்க, அவர்தம் இடக்கையில் தாமரை. வலக்கையில் மற்றொரு மலர். அவர்தம் தலைக்கருகே நீளும் தண்டு அகலேந்தி நிற்கிறது. இருபத்தாறு பெண்களுள் ஓரிருவர் தவிர, ஏனைய அனைவரும் மலர்ந்த முகத்துடன் எழிலரசிகளாய் விளங்குகின்றனர். அளவில் பெரியதாக அமைந்துள்ள கீர்த்திமுக மகரங்களுக்குக் கீழிருக்குமாறு யானைத்திருமகள். இத்தோரணத்தில் கண்டறியப்பட்ட 82 வரித் தமிழ்க் கல்வெட்டு, கி. பி. 1898ம் ஆண்டு நவம்பர்த் திங்கள் 21ம் நாள் இவ்விளக்குத்தோரணம் செய்து வைக்கப்பட்டமையைத் தெரிவிக்கிறது. ஆதிமீனாட்சி நாயக்கரின் கொடையாக இவ்விடத்தில் விளங்கிய பழைய மகர தோரணவிளக்குச் சிதைந்ததால் இத்தோரணம் புதிதாகச் செய்து வைக்கப்பட்டது. இதற்கு ஆவியூரை உள்ளடக்கிய ஐந்து ஊர்களின் வருவாய் செலவிடப்பட்டது. இத்திருப்பணியின் மேலாண்மை சிவகங்கை ஜமீன்தார் முத்து விஜயரகுநாத துரைசிங்கமாகிய கெளரி வல்லபத் தேவர், மீனாட்சி நாயக்கரின் வாரிசு பங்காரு திருமலைசாமி நாயக்கர் இவர்களிடம் இருந்தது. இத்திருப்பணி நிறைவேறிய காலம் 21. 11. 1898. இத்தோரணத்தைச் செய்தவர் திருநெல்வேலி முத்துசாமி ஆசாரி மகன் இராஜகோபால் ஆசாரி. 10,003 அகல்கள் பெற்றுள்ள இதைச் செய்யத் தேவைப்பட்ட பித்தளையின் அளவு, தோரணத் திருவாசியைத் தாங்கும் தாங்கல்கள், நின்று விளக்குப் போடுகிற தாங்கல், விளக்கேற்றப் பயன்படும் மர ஏணி இவற்றிற்கான செலவினங்களையும் கல்வெட்டு தெரிவிக்கிறது. |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |