http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 151
இதழ் 151 [ பிப்ரவரி 2021 ] இந்த இதழில்.. In this Issue.. |
மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் வளாகத்தில் முதல் கோயிலாக விளங்கும் ராஜசிம்மேசுவரத்தின் கிழக்கில் அதை ஒட்டிச் செவ்வகக் கட்டுமானமாய்ச் சாலை அமைப்பில் விளங்கும் நரபதிசிம்மப் பல்லவ விஷ்ணுகிருகம் முன்னால் முகமண்டபம் பெற்றுள்ளது. கருவறையின் பாதபந்தத் தாங்குதளத் தென்பகுதி தாய்ப்பாறையிலும் வடபகுதி கற்கள் அடுக்கிக் கட்டப்பட்டதாகவும் அமைய, சுவர்த்திருப்பங்களில் தாவுசிம்ம எண்முக அரைத்தூண்கள். தூண்கள், கோட்டங்களின்றித் தென்சுவர் வெறுமையாக அமைய, மேற்குச்சுவரின் தாய்ப்பாறைப் பகுதி அகலமான நான்முக அரைத்தூண்களால் நான்கு பிரிவுகளாக்கப்பட்டுள்ளது. தெற்கிலிருந்து வடக்காக மூன்று பிரிவுகளில் சிற்பங்கள் அமைய, நான்காம் பிரிவு வெறுமையாக உள்ளது. முதல் பிரிவு செவ்வகமாக, இரண்டாம், மூன்றாம் பிரிவுகள் சதுரமாக உள்ளன. அவற்றிலுள்ள சிற்பங்கள் சிதைந்துள்ளன. நான்முக அரைத்தூண்கள் தழுவும் ஆழமான வடசுவர்க் கோட்டத்தில் விஷ்ணுவின் அடையாளப்படுத்த முடியாத திருத்தோற்றம் விளங்க, கோட்டத்தின் கீழ்ப்பகுதியில் அதைத் தாங்குமாறு போலச் சற்றே வெளிநீட்டிய நிலையில் ஜகதி, குமுதம், கண்டம் அடங்கிய தனித்தளம். நான்முக அரைத்தூணால் இருபிரிவுகளாக்கப்பட்டுள்ள கிழக்குச்சுவரின் அகலமான வடபகுதியில் குதிரைவடிவில் வந்த கேசி அரக்கனைக் கண்ணன் அழிக்கும் சிற்பம் சிதைந்த நிலையில் காட்சிதர, அகலக் குறுக்கமான தென்பகுதிச் சிற்பம் முற்றிலுமாய்ச் சிதைந்துள்ளது. கிழக்குச்சுவரின் தென்பகுதி பெரிதும் சிதைந்துள்ளதால், அதன் கட்டமைப்பையோ, நான்முக அரைத்தூண்களால் தழுவப்பட்டுள்ள அதன் கோட்டச் சிற்பங்களையோ அறியமுடியவில்லை. சுவர்த்தூண்களின் வளைமுகப் போதிகைகள் கூரையுறுப்புகள் தாங்க, சிதைவின் காரணமாகத் தொடர்ச்சியற்ற சந்திரமண்டலம் பெற்றுள்ள கபோதம், தெற்கிலும் கிழக்கிலும் மேற்கிலும் திசைக்கு இரு கூடுவளைவுகள் கொண்டுள்ளது. மேற்குக் கபோதக்கூடு ஒன்றில் கந்தருவத்தலை. வடகபோதம் வெறுமையாக உள்ளது. ஆரம் மேலுறுப்புகளற்ற கருவறையின் கூரையில் பூமிதேசம், வேதிகை, ஆரம். கிழக்கு ஆரம் மூலைகளில் கர்ணகூடங்களும் இடைப்பட்டனவாய் இருசாலைகளும் அவற்றை இணைக்கும் ஆரச்சுவர்த்துண்டுகளும் பெற்றுள்ளது. கர்ணகூடம், சாலை இவற்றிற்கு இடைப்பட்ட ஆரச்சுவரில் பக்கத்திற்கிரு ஒற்றைக் கால் பஞ்சரங்கள். வடக்கு ஆரம் வடகிழக்குக் கர்ணகூடத்தை அடுத்து ஆரச்சுவர்த்துண்டும் பஞ்சரமும் பெற, தெற்கு ஆரம் கூடுதலாகத் தென்மேற்கில் ஒரு கர்ணகூடம் பெற்றுள்ளது. மேற்கில் தென்புறக் கர்ணகூடம், இரண்டு ஒற்றைக்கால் பஞ்சரங்களுடன் ஆரச்சுவர், சாலை, ஓர் ஒற்றைக்கால் பஞ்சரத்துடன் ஆரச்சுவர் என ஆரம் அமைந்துள்ளது. முகமண்டபம் இச்சாலைக் கருவறையின் முன்னுள்ள முகமண்டபம் விமானம் ஒத்த தாங்குதளம் பெற்றுள்ளது. தென்புறம் நன்கு காட்சியாகும் இத்தாங்குதளம் வடபுறம் படிகளுடனான சுற்றின் தரைத்தள உயர்வால் மறைந்துள்ளது. இத்தாங்குதளத்தின் மீதெழும் மண்டபச்சுவர், திருப்பங்களில் வீரர் அமர் தாவுசிம்ம எண்முக அரைத்தூண்கள் பெற்றுள்ளது. மண்டபத்தின் வட, தென்சுவர்களில் முறையே காளிங்கமர்த்தனரும் கருடன் மீதமர்ந்த விஷ்ணுவும் அமைய, கிழக்குச் சுவரின் நடுப்பகுதியில் மேல், கீழ் நிலைகளுடன் வாயில். அதன் நிலைக்கால்களென அமைந்துள்ள நான்முக அரைத்தூண்களின் கிழக்குமுகங்கள் விலங்கடியாகத் தாவும்ஆடு பெற்றுள்ளன. அவற்றிற்கும் திருப்பத்தூண்களுக்கும் இடைப்பட்ட சுவர்த்துண்டுகளில் வடபுறத்தே மேல் சதுரத்தில் சுகாசனத்தில் ஆடவரும் கீழ்ச்செவ்வகத்தில் கவரிக்காரிகையின் எழிலார்ந்த சிற்பமும் இடம்பெற்றுள்ளன. தெற்குச் சுவர்த்துண்டு சிதைந்துள்ளது. திருப்பத்தூண்களின் வளைமுகப் போதிகைகள் கூரையுறுப்புகள் தாங்க, மேலே சந்திரமண்டலம், கோண, நடுப் பட்டங்களுடன் முகமண்டபக் கபோதம் கிழக்கில் இரு கூடு வளைவுகளும் தென், வடதிசைகளில் பக்கத்திற்கொரு கூடுவளைவும் கொள்ள, மேலே பூமிதேசம், வேதிகை. கூடுகளில் கந்தருவத்தலைகள். கூரை ஆரஉறுப்புகள் பெறவில்லை. தென், வடலாக 3. 64 மீ. நீளமும் கிழக்கு மேற்காக வடபுறத்தே 1. 32 மீ. அகலமும் பெற்றுள்ள முகமண்டபத்தின் அகச்சுவர்கள் வெறுமையாக உள்ளன. கருவறை முகமண்டபத்தின் பின்னுள்ள கருவறை வாயில், காவலர்களை அடியாகக் கொண்ட நான்முக அரைத்தூண்களால் அணைக்கப்பட்டுள்ளது. வாயிலின் உயரம் 2. 11 மீ., அகலம் 1. 16 மீ. அரைத்தூண்களின் கிழக்குமுகக் காவலர்களில் வடக்கர் இடுப்பிற்கு மேலும் தெற்கர் முழங்கால்களுக்குக் கீழும் சிதைந்துள்ளனர். இடைக்கட்டுப் பெற்றுள்ள தெற்கரின் இடக்கை போற்ற, வலக்கை மார்பருகே. அரைத்தூண்களின் வட, தென்முகக் காவலர்களுள் கருவறைக்காய் ஒருக்கணித்துள்ள தெற்கர் வலக்கையைத் தொடைமீதிருத்தி, இடக்கையைத் தலையருகே கொண்டுள்ளார். முப்புரி, மார்புநூல்கள், இடைக்கட்டு அணிந்துள்ள அவரது முகம் சிதைந்துள்ளது. இடுப்பிற்குக் கீழ் ஒருக்கணிப்பிலுள்ள வடக்கர் தெற்குப் பார்வையில் உள்ளார். அவரது இடக்கை இடுப்பில் அமர, வலக்கை போற்றியாக உள்ளது. காவலர்களுக்கு மேலெழும் தூணுடல் மேலுறுப்புகளும் வீரகண்டமும் பெற்று வளைமுகத் தரங்கப் போதிகைகளால் கூரையுறுப்புகள் தாங்க, கூரைநீட்சி கபோதமாக முகமண்டபத்திற்குள் நீண்டுள்ளது. இவ்வாயில் தூண்கள் பலகைவரை சட்டத்தலை அரைத்தூண்களாக உள்ளன. உட்புறத்தே தென்வடலாக 3. 82 மீ. நீளம், கிழக்கு மேற்காக 1. 32 மீ. அகலம் பெற்றுள்ள கருவறையில் தாய்ப்பாறையில் அமைக்கப்பெற்ற படுக்கைத்தளத்தில் தென்புறம் தலைவைத்துத் துயில்பவராக விஷ்ணு. சற்றே உயர்த்திய தலை படுக்கையின் தென்மேற்குப் பகுதியில் அமைய, உடல், கிழக்காக ஒருக்கணித்துள்ளது. திருவடிகள் இரண்டும் சற்றே விரித்த நிலையில் உள்ளன. தலையில் நெற்றிப்பட்டம்சூழ் மகுடம். செவிகளில் மகரகுண்டலங்கள். மேலுயர்த்திய வல முன் கையும் பெருவிரல் விரித்து உள்ளங்கை மேல்நோக்கிய நிலையிலுள்ள வலப் பின் கையும் படுக்கைமீது. சிதைந்த இட முன் கை முழங்கையருகே மடிந்து உயர்ந்திருக்க, பின்கை தொடையருகே. முப்புரிநூல் பெற்றுள்ள அவரது கீழ்ப்பாய்ச்சப் பெற்ற பட்டாடை கணுக்கால்கள்வரை நீண்டுள்ளது. கருவறைச் சுவர்களும் கூரையும் வெறுமையாக உள்ளன. இராஜசிம்மப் பல்லவரால் உருவாக்கப்பெற்ற கற்றளிகளுள் சாலை அமைப்பில் விமானம் பெற்ற ஒரே கட்டுமானமாக நரபதிசிம்மப் பல்லவ விஷ்ணுகிருகம் பெருமை பெறுகிறது.
|
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |