http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 151

இதழ் 151
[ பிப்ரவரி 2021 ]


இந்த இதழில்..
In this Issue..

நரபதிசிம்மப் பல்லவ விஷ்ணுகிருகம்
விளக்கேற்றல் எனும் அறம் - 2
எறும்பியூர்க் கோயில் பாதச் சிற்பங்கள்
கல்வெட்டுகளில் திருவிடைமருதூர் - 2a
சிந்தை சிலிர்க்கும் சிற்பங்கள் - 2
இதழ் எண். 151 > கலையும் ஆய்வும்
எறும்பியூர்க் கோயில் பாதச் சிற்பங்கள்
மு.நளினி, அர.அகிலா



பொதுக்காலம் 10ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் நிலவிய சமய, கலைச் சூழல்களை நன்கறியும் நோக்கில் முற்சோழர் கோயில்கள் பலவாகத் திகழும் சிராப்பள்ளி மாவட்டத்தில் அக்கோயில்களின் விமானம், முகமண்டபப் பாதங்களில் செதுக்கப்பட்டுள்ள சிற்றுருவச் சிற்பங்கள் குறித்த விரிவான ஆய்வு டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய ஆய்வர்களால் மேற்கொள்ளப்பட்டது. அவற்றுள் சிராப்பள்ளி மாவட்டத்தின் சிறப்பான மலைக்கோயில்களுள் ஒன்றாய்ச் சிராப்பள்ளித் தஞ்சாவூர்ச் சாலையில் 15 கி. மீ. தொலைவில் உள்ளது எறும்பியூர்க் குன்றின் உச்சியிலுள்ள எறும்பீசுவரம். சுற்று மதிலுக்குள் அமைந்துள்ள இக்கோயிலின் ஒருதள வேசரக் கற்றளியும் அதன் முன்னுள்ள முகமண்டபமும் சோழ அரசர் கண்டராதித்தர் காலத்தில் வீரநாராயணனான செம்பியன் வேதிவேளானால் உருவாக்கப்பெற்ற கட்டுமானங்கள். உபானத்தின் மீது பாதபந்தத் தாங்குதளம் பெற்று, 5. 74 மீ. பக்கமுடைய சதுரமாக எழும் ஒருதள விமானம், அதே கட்டமைப்பில் 4. 10 மீ. பக்கமுடைய சதுரமாகத் திகழும் முகமண்டபம் இரண்டும் பாதச்சிற்பங்கள் பெற்றுள்ளன. 



பாதச்சிற்பங்கள்



தாங்குதளத்தின் கண்டபாதங்களும் தாங்குதளத்திற்கு மேலுள்ள வேதிபாதங்களும் 15 செ. மீ. என ஒரே அளவான உயரம் கொண்டிருந்தபோதும் தூண்களைப் பொறுத்து அவை அகலத்தில் மாறுபடுகின்றன. திருப்பத்தூண் பாதங்கள் 19 செ. மீ. அகலமும் சுவர் அரைத்தூண் பாதங்கள் 21 செ. மீ. அகலமும் கொள்ள, கோட்ட அணைவுத்தூண்கள், பஞ்சரத்தூண்கள் ஆகியவற்றின் பாதங்கள் 13 செ. மீ. அகலம் மட்டுமே பெற்றுச் சிறுத்துள்ளன. 



கண்டபாதச் சிற்பங்கள்



கருவறை, முகமண்டபக் கண்டபாதங்கள் 58இல் நான்கில் தெளிவான சிற்பங்களும் இரண்டில் தேய்ந்த நிலையிலான சிற்பங்களும் அமைய, எஞ்சிய பாதங்கள் செதுக்கல் ஏதுமின்றி வெறுமையாக உள்ளன. கருவறையின் தென்மேற்கு உருளைத்தூணின் தெற்கு, மேற்குப் பாதங்களில் முறையே கிராதார்ச்சுனரும் அருச்சுன அனுக்கிரகரும் அமைய, மேற்கில் லிங்கோத்பவர். தெற்குப்பாதம் ஒன்றில் காமனை எரித்த சிவபெருமானை யோகபட்டத்துடன் காணமுடிகிறது. தேய்ந்துள்ள இரு சிற்பங்களில் ஒன்று ஆடற்காட்சியாகவும் மற்றொன்று அசுரர் ஒருவரைப் படம்பிடிப்பதாகவும் உள்ளன.



சன்னவீரம், சிற்றாடை, தோள்வளை அணிந்துள்ள அருச்சுனர் வில் வளைத்து அம்பெய்யும் கோலத்தில் காட்சிதர, வலப்புறத்தே சிவபெருமானும் உமையும் வேடுவர்களாய் நிற்கின்றனர். சன்னவீரமணிந்த பெருமானின் வலக்கை வில்லும் இடக்கை அம்பும் கொள்ள, இடுப்பில் சிறு கத்தி. உமையின் செவிகளில் பனையோலைக் குண்டலங்கள். வேடர், அருச்சுனர் பின்னிருக்குமாறு நாயும் காட்டுப்பன்றியும் காட்டப்பட்டுள்ளன. 



அருச்சுன அனுக்கிரகரில் கிரீடமகுடம், பனையோலைக் குண்டலங்கள், கழுத்தணி அணிந்து கால்களைக் குறுக்கீடு செய்து கூப்பிய கைகளுடன் சிவபெருமான், உமை முன் அருச்சுனர் அமர்ந்திருக்க, அவர் முன், நிற்கும் பூதம் கைகளில் பாசுபதம் ஏந்தியுள்ளது. பின்கைகளில் மழுவும் மானும் கொண்டுள்ள சிவபெருமான் சடைமகுடராய்ப் பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, சிற்றாடை அணிந்து வல முன் கையைக் காக்கும் குறிப்பிலும் இட முன் கையைக் கடியவலம்பிதத்திலும் காட்டி அருச்சுனப் பார்வையில் நிற்க, பின்னுள்ள தேவியும் கரண்டமகுடம், பட்டாடையுடன் வலக்கையில் காக்கும் குறிப்பு காட்டி, அதே பார்வையிலுள்ளார். இடக்கை இறைவன் பின் மறைந்துள்ளது.



மேற்குப்பாத லிங்கோத்பவரின் வலப்புறம் பின்கைகளில் அக்கமாலை, குண்டிகை ஏந்தி நிற்கும் நான்முகனின் வல முன் கை சிவபெருமானைப் போற்ற இட முன் கை கடியவலம்பிதமாக உள்ளது. இடப்புறம் பின்கைகளில் சங்கு, சக்கரம் கொண்டு நிற்கும் விஷ்ணுவின் இட முன் கை இடுப்பிலிருக்க, வல முன் கை இறைவனைப் போற்றுகிறது. இலிங்கத்தின் கோளத்திறப்பில் வெளிப்படுபவர் போலக் காட்டப்பட்டுள்ள சிவபெருமானின் பின்கைகளில் மான், மழு. வல முன் கை காக்கும் குறிப்பிலிருக்க, இட முன் கை தொடையில் உள்ளது. இலிங்கத்திற்கு அருகில் மேற்பகுதியில் அன்னமும் கீழே அளவில் பெரியதாகப் பன்றியும் காட்டப்பட்டுள்ளன. 



வேதிபாதச் சிற்பங்கள்



கண்டபாதங்கள் போல் அல்லாமல் கிழக்கிலும் இரு பாதங்களைப் பெற்று, 60ஆக உள்ள வேதிபாதங்களில் 14 முகமண்டபப் பகுதியிலும் 46 விமானக் கட்டுமானத்திலும் இடம்பெற்றுள்ளன. அவற்றுள், விமானப்பகுதியில் இரண்டு பாதங்களும் முகமண்டபப் பகுதியில் நான்கு பாதங்களும் செதுக்கல் ஏதுமின்றி வெறுமையாக உள்ளன. எஞ்சியவற்றுள் 33 பாதங்கள் சிற்பங்கள் பெற, 10 பாதங்கள் கொடிக்கருக்கு கொண்டுள்ளன. மூன்று பாதங்களில் உள்ள சிற்பங்கள் அடையாளப்படுத்த முடியாத அளவிற்குத் தேய்ந்துள்ளன. நான்கு பாதங்களில் நந்திகளும் இரண்டில் அன்னப்பறவையும் ஒன்றில் யானையும் மற்றொன்றில் யாளியும் செதுக்கப்பட்டுள்ளன. 



கருவறையின் கிழக்குப்பாதங்களில் தனித்த நந்திகளும் முகமண்டபத் தெற்குப்பாதத்தில் இரட்டை நந்திகளும் வடக்குப் பாதத்தில் மூன்று நந்திகளும் காட்டப்பட்டுள்ளன. சிராப்பள்ளி மாவட்டத்தில் துடையூர் விஷமங்களேசுவரர் போன்ற ஒன்றிரண்டு சோழர் காலக் கோயில்களிலேயே நந்திகள் இத்தகு பெருமைநிலை பெற்றுள்ளன. கிழக்குப்பாத நந்தி கிரீவநந்திகளை ஒத்துள்ளமையும் இங்கு எண்ணத்தக்கது. 



வேதிபாதச் சிற்பங்கள் உள்ள சிராப்பள்ளி மாவட்டக் கோயில்களில் எறும்பீசுவரமும் விஷமங்களேசுவரமும் மட்டுமே பதினொரு ஆடற்சிற்பங்களைக் கொண்டுள்ளன. எறும்பியூர்ச் சிற்பங்களுள் ஒன்று சிவபெருமானின் ஆடலாக அமைய, நான்கில் ஆண் இசைக்கலைஞராகவும் பெண் ஆடலரசியாகவும் உள்ளனர். சிலம்பின் அரங்கேற்றுகாதை குறிப்பிடும் பதினோராடல்களில் ஒன்றான குடக்கூத்து மூன்று பாதங்களில் மிளிர்வதும் தமிழ்நாட்டின் வேறெந்தத் திருக்கோயிலின் பாதச்சிற்பத் தொகுதிகளிலும் காணமுடியாத காட்சியாகும். தனித்த ஆடவர் ஆடல் மூன்று பாதங்களில் பதிவாகியுள்ளது.



பாகவதப் படப்பிடிப்புகளாக கருடன்மீதான விஷ்ணுவும் கண்ணன் உறியிலிருந்து வெண்ணெய் எடுப்பதும் ஆயர்களைப் பெருமழையிலிருந்து காக்க கோவர்த்தனமலையைக் குடையாகப் பிடிப்பதும் தன்னைக் கொல்ல வந்த காளை வடிவ அரக்கனை அடக்கி அழிக்கும் வீரமும் காட்டப்பட்டுள்ளன. இராமாயணப் பக்கங்களிலிருந்து சூர்ப்பனகையின் மூக்கறுப்பும் வாலி, சுக்ரீவப் போரும் வாலிமீது இராமன் அம்பெய்வதும் எடுக்கப்பட்டுள்ளன. வாலி, சுக்ரீவப்போர் மேற்கிலும் வடக்கிலும் இருமுறை அமைந்துள்ளமை இக்கோயிலுக்கே உரிய தனித்தன்மையதாகும். 



தமிழ்நாட்டின் வேறெந்தச் சோழர் காலக் கோயிலின் பாதச்சிற்பங்களிலும் இடம்பெறாத அளவிற்கு எறும்பியூர்ப் பாதங்கள் பல்வேறு இறைவடிவங்களை, அவற்றுள் சிலவற்றை அவற்றின் வாகனங்களோடு கொண்டுள்ளன. சிம்மவாகினி, எருமையின் மேல் இயமன், மூஞ்சுறு தாங்கும் பிள்ளையார், குதிரையின் மேல் செண்டேந்திய ஐயனார், பேய் சுமக்கும் காளி, நந்தியின் மீது மழு ஏந்திய சிவபெருமான், இரட்டையர்களாய்க் கதிரும் நிலவும் ஆகியவற்றுடன் முத்தலைஈட்டியுடன் பாயும் காளியையும் பதிவுசெய்துள்ளனர். இவை தவிர, சடைப்பாரத்துடன் நிற்கும் இருவரும் யாளிப் போர்வீரர் இருவரும் கருடாசன பூதமும் அமர்நிலை அரக்கரும் பத்மநிதியும் எக்குழுவிலும் இணைக்கமுடியாத தனித்த சிற்பங்களாக எறும்பியூர்ப் பாதங்களை அலங்கரிக்கின்றனர்.



சிவபெருமானுக்குரியதான இக்கோயிலில் அவர் தொடர்பான தோற்றங்கள் லிங்கவழிபாடு, யானையை அழித்தவர், சிவஆடல், நந்திஊர்தியர் என மிகக் குறைந்த அளவிலேயே உள்ளமை அக்காலச் சமயப் பெரும்போக்கைக் காட்டுவதாகக் கொள்ளலாம்.



ஆடற்சிற்பங்கள்



மண்டலநிலையில் இருபாதங்களையும் பார்சுவத்தில் அமைத்து சிவபெருமான் ஆடும் ஆடலுக்கு, கீழே கால்களைக் குறுக்கீடு செய்து வலப்புறம் திரும்பி அமர்ந்திருப்பவர் தம் மடியிலுள்ள குடமுழவை வாசித்தும் இறைவனைப் பார்த்தவாறு இடப்புறம் அமர்ந்திருப்பவர் தாளங்களை இயக்கியும் இசைகூட்ட, ஆடலைப் போற்றுமாறு வலப்புறம் மேலே உள்ள வானவர் கையுயர்த்தியுள்ளார். சடைமகுடம், பனையோலைக் குண்டலங்கள், இடைத்தொங்கல் பெற்ற சிற்றாடை கொண்டு நேர்ப்பார்வையராய் ஆடும் இறைவனின் பின்கைகளில் வலப்புறம் துடி, இடப்புறம் தீயகல். வல முன் கை காக்கும் குறிப்பு காட்ட, இட முன் கை அர்த்தரேசிதமாகியுள்ளது. ஆடும் இறைவனின் இருபுறத்தும் கவரிகள்.



குடக்கூத்துச் சிற்பங்கள் மூன்றனுள் இரண்டில் ஆடவர் தனித்தாட, பெண்ணாடும் குடக்கூத்து இசைக்கலைஞரைப் பெற்றுள்ளது. பாதங்களைப் பார்சுவத்தில் இருத்தி, இடக்கையை அர்த்த ரேசிதமாக்கி, இடுப்பை இடப்புறம் நன்கு உயர்த்திச் சிற்பத்தளத்தின் மூன்றில் இரண்டு பகுதிகளில் பரவியுள்ள பெண் குடக்கூத்துக் கலைஞரின் வலக்கை மேற்பகுதியில் பானை. முழங்கையளவில் மடங்கியுள்ள அக்கையின் கீழ்ப்பகுதி மார்பருகே கடகமாக்கப்பட்டுள்ளது. உயர்த்தி முடித்த கொண்டை, சரப்பளி, கைவளைகள் கொண்டு ஆடும் பெண்ணின் வலப்புறம், அதே அமைப்பிலான கொண்டை, பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, இடைத்தொங்கல் பெற்ற இடுப்புச் சிற்றாடையுடன் உடல் வலப்புறம் திரும்பியிருக்குமாறு செண்டுதாளக் கலைஞராக ஆடவர். 



ஆண் குடக்கூத்தர்களுள் ஒருவர் கரண இளைஞர். வலக்காலை ஊர்த்வஜாநு கரணத்தின் முதல் நிலையில் இருத்தி இடப்பாதத்தைப் பார்சுவமாக்கியுள்ள அவரது இடக்கை முழங்கையளவில் மடங்கி மார்பருகே பதாகமாய் அமைய, மார்பருகே தாழ்ந்துள்ள வலக்கையின் மேற்பகுதியில் பானை. தலையை இலேசாக இடப்புறம் சாய்த்து, வலப்பார்வையராக முக்கோண இடைத்தொங்கல் பெற்ற சிற்றாடையுடன் உச்சிக்கொண்டையும் சரப்பளியும் பெற்றாடும் அவரது பானையின் வாய் நன்கு அகன்றுள்ளது. இரண்டாமவரோ வலப்பாதத்தைப் பார்சுவமாகவும் இடப்பாதத்தை அக்ரதலசஞ்சாரத்திலும் நிறுத்தி, இடக்கையை அர்த்தரேசிதத்தில் வீசி, மார்பருகே மடிந்து இறங்கியுள்ள வலக்கையின் மேற்புறத்தே பானை நிறுத்திக் குடக்கூத்து காட்டுகிறார். 



தனியர் ஆடலைப் பதிவுசெய்துள்ள மூன்று பாதங்களுள் ஒன்றில் சடைப்பாரம், பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, கைவளைகள், முக்கோணத்தொங்கலுடனான இடைச்சிற்றாடை பெற்று மண்டலத்தில் பார்சுவப் பாதங்களுடன் ஆடும் ஆடவரின் இடக்கை மடிந்து மார்பருகே காட்சிதர, வலக்கை முழங்கை அளவில் மடிந்து மேலுயர்த்தப்பட்டுள்ளது. சுடர்முடி, பனையோலைக் குண்டலங்கள், சுவர்ணவைகாக்ஷம், கைவளைகள், முக்கோணத்தொங்கல் பெற்ற இடைச்சிற்றாடை கொண்டு ஆடும் மற்றோர் ஆடவரின் பாதங்கள் பார்சுவத்தில் அமைய, வலக்கை மேலுயர்த்திய பதாகமாக உள்ளது. இடக்கை நெகிழ்ந்துள்ளது. ஆடவரின் இடப்புறம் அழகிய தோரணம் காட்சிதர, இடையாடையின் முடிச்சுத்தொங்கல்கள் இடப்புறம் காட்டப்படுள்ளன. மூன்றாமவர் சிறுமகுடம், பனையோலைக் குண்டலங்கள், சுவர்ணவைகாக்ஷம், இடைக்கட்டு இருத்தும் சிற்றாடையுடன், மண்டலப் பார்சுவத்தில் வலக்கையில் பதாகம் காட்டி, இடக்கையை அர்த்தரேசிதமாக்கியுள்ளார். தலையின் இடச்சாய்வால் முகம் வலம் திரும்பியுள்ளது. 



நான்கு பாதங்களில் ஆண் இசைக்கலைஞருடன் பெண் ஆடற்கலைஞர் இணைந்தாடும் காட்சி. அவற்றுள் நிறைவடையாதிருக்கும் பாதச்சிற்பத்தில் வலப்பாதத்தைப் பார்சுவத்தில் திருப்பி, இடக்காலை ஊர்த்வஜாநு கரண முதல்நிலையில் உயர்த்தியுள்ள ஆடற்காரிகையின் இடக்கை மேலுயர்த்திய பதாகமாக அமைய, வலக்கை தொடையில். மண்டலப் பார்சுவத்தில் இடுப்புக்கு மேற்பட்ட உடற்பகுதி வலச்சாய்வில் அமைய, இடத்தோளில் தொங்கும் இடக்கைக்கருவியை வலக்கையால் தட்டிக் கயிற்றுப் புரிகளை இடக்கையால் இளக்கியும் இறுக்கியும் இசைகூட்டுகிறார் ஆடற்பெண்ணின் வலப்புற ஆண்கலைஞர். 



தோரணங்கள் பின்னிருக்கத் தாளக்கலைஞர் வலப்புறத்தும் ஆடற்பெண் இடப்புறத்துமாய்க் காட்சிதரும் மற்றொரு சிற்பத்தில் சடைமகுடம், பனையோலைக் குண்டலங்கள், சிற்றாடை கொண்டு சமபாதத்தில் நின்று ஆடற்கலைஞரை நோக்கியவாறு செண்டுதாளங்களை இயக்கும் இசைஞர் பாதத்தின் மூன்றில் ஒருபகுதியில் விளங்க, ஆடலர் இரண்டு பங்குகளில் பரவியுள்ளார். மண்டலப் பார்சுவத்தில் இடக்கையைத் தொடையில் இருத்தி, வலக்கையில் கடகம் காட்டி ஆடும் அவரும் பனையோலைக் குண்டலங்கள் அணிந்துள்ளார். இடைத்தொங்கலுடனான சிற்றாடையின் முடிச்சுத்தொங்கல்கள் வலக்காலின் புறத்தே ஆட்டநிலைக்கேற்ப நெகிழ்ந்துள்ளன. 



ஆடற்பெண் வலப்புறத்தும் இடக்கைக்கலைஞர் இடப்புறத்துமாய் அமைந்த ஆடற்காட்சியில் பெண், சரப்பளி, பனையோலைக் குண்டலங்கள், பட்டாடை அணிந்து, பாதங்கள் இரண்டையும் பார்சுவத்தில் இருத்தி, வலக்கையைப் பதாகமாய் மார்பருகே நிறுத்தி, இடக்கையில் வியப்பு காட்ட, இடப்புறம் சவடியும் சிற்றாடையுமாய் இசையெழுப்பும் இடக்கைக்கலைஞரும் பார்சுவப் பாதங்களுடன் மண்டலநிலையிலேயே காட்சிதருகிறார். 



இதே அமைப்பிலான மற்றொரு சிற்பத்தில் வலக்கை முழங்கையளவில் மடிந்து மேலுயர்த்திய பதாகமாக அமைய, இடக்கையைக் கடியவலம்பிதமாக்கி ஆடும் வலப்பெண் பனையோலைக் குண்டலங்கள், சவடி, இடைத்தொங்கலுடனான சிற்றாடை அணிந்துள்ளார். இடக்கை வாசிக்கும் இடப்புற ஆடவரோ கரண்டமகுடராய்ப் பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி கொண்டு மண்டலநிலையில் பார்சுவப் பாதங்களுடன் காட்சிதருகிறார். 



ஊர்திகளில் இறைவடிவங்கள்



சோழர் கோயில்களின் பாதச்சிற்பங்களில் ஊர்திகளில் அமர்ந்தநிலையில் விஷ்ணு, முருகன் தவிர ஏனைய இறைவடிவங்களைப் பார்ப்பது அரிது. ஆனால், எறும்பியூர் வேதிபாதங்களில் சிவபெருமான், விஷ்ணு, காளி, கொற்றவை, பிள்ளையார், ஐயனார் ஆகியோருடன் எமனும்கூட எருமையில் அமர்ந்த நிலையில் பதிவாகியுள்ளார். வல முன் கை வாள் கொள்ள, இட முன் கை சிங்கத்தின் கழுத்தில் இருக்க, பின்கைகளில் சங்கு, சக்கரம் ஏந்தி சிம்மவாகினியாகக் காட்சிதரும் கொற்றவையின் தலையில் கரண்டமகுடம். பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, சுவர்ணவைகாக்ஷம் அணிந்துள்ள அவரது இடையில் பட்டாடை. முதுகு விரிப்புடன் உள்ள சிம்மம் வாலை உயர்த்தி வளைத்தபடி முன்னங்கால்களுள் ஒன்றை உயர்த்தி வாய்திறந்த நிலையில் உள்ளது.



சடைப்பாரத்துடன், வலச்செவியில் பிணக்குண்டலம், இடச்செவியில் பனையோலைக் குண்டலம் அணிந்து, வல முன் கையில் காக்கும் குறிப்பு காட்டி, இட முன் கையைக் கடகமாகத் தொடைமேல் இருத்தியுள்ள காளியைத் தன் தோளில் தாங்கும் பெண்பேய் கருடாசனத்தில் திரங்கிய மார்புகளுடன் அமைய, அதன் வலக்கை தொடைமீதுள்ளது. காளியின் வலக்கால் பேயின் வலப்பாதத்தில் அழுந்த, இடப்பாதம் அதன் தோள் மீதுள்ளது. பேயின் இடக்கை காளியின் இடக்காலைத் தழுவித் தாங்க உயர்ந்துள்ளது. காளியின் பின்கைக் கருவிகளை இனங்காண முடியவில்லை. 



எருமையின் மீது எமன் ஒரு பாதத்திலும் நந்தியின் மீது சிவபெருமான் ஒரு பாதத்திலும் காட்சிதந்தபோதும் சிற்பங்கள் நிறைவடையாமையால் அவர்தம் தோற்றப்பொலிவை அறியக் கூடவில்லை. சிவபெருமானின் வலப் பின் கையில் மழு. எமன் கைக்கருவி கொடுவாளாகலாம். கருடாசனத்திலுள்ள கருடன் தோள்களில் உத்குடியாசனத்திலுள்ள விஷ்ணுவின் பின்கைகளில் சங்கு, சக்கரம். கிரீடமகுடம் அணிந்துள்ள அவரது வல முன் கை காக்கும் குறிப்பு காட்ட, இட முன் கை முழங்கால் மீது. கருடன் இருகைகளாலும் இறைவனின் திருவடிகளைத் தாங்கியுள்ள இச்சிற்பமும் நிறைவுறவில்லை. 



இவற்றினின்று மாறுபட்ட நிலையில் ஒரே பாதத்தில் இரு தெய்வங்களாகப் பிள்ளையாரும் ஐயனாரும் அவரவர் ஊர்திகளான மூஞ்சுறு, குதிரை மீதமர்ந்தவர்களாகக் காட்சிதருகின்றனர். கரண்டமகுடத்துடன் இடம்புரியாக உள்ள பிள்ளையாருக்கு மட்டும் இருபுறத்தும் கவரிகளும் மேலே குடையும். பின் கைகளில் அங்குசம், பாசம் கொண்டுள்ள அவரது வல முன் கையில் உடைந்த தந்தமும் இட முன் கையில் மோதகமும் உள்ளன. சடைப்பாரம், பனையோலைக் குண்டலங்களுடன் விளங்கும் ஐயனாரின் வலக்கையில் செண்டு. இடக்கை குதிரையின் கழுத்தைப் பற்றியுள்ளது. பிள்ளையாரின் ஊர்தியான மூஞ்சுறு அமர்நிலையில் காட்சிதர, ஐயனாரின் குதிரை நடைபயில்கிறது.



சிறப்புச் சிற்பங்கள்



ஆடல், ஊர்தி இறைகள் தவிர்த்த சிற்பங்களில் மூன்றினை அவற்றின் செதுக்குத் திறத்துக்காகவும் தனித்தன்மைக்காகவும் விரிவாகப் பார்ப்பது பயன்தரும். சோழர் காலப் பாதச்சிற்பங்களில் அரிதாகக் காணப்படும் சூரிய, சந்திரர் இங்கு இணைந்தநிலையில் பறக்கும் கோலத்தில் மிகச் சிறந்த உடலமைப்புடன் காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. வலக்கையில் மலர் ஏந்தி, இடக்கையால் போற்றும் அவர்தம் தலை சுற்றி ஒளிவட்டம். இலேசான வலச்சாய்வுடன் முகமும் விண்ணுலாவிற் கேற்ப வளைவுகள் பெற்ற உடலமைப்பும் இச்சிற்பங்களில் மிக நன்றாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன.



முன்னிரு கைகளில் முத்தலைஈட்டி ஏந்தி, பின்கைகளில் வலப்புறம் கத்தியும் இடப்புறம் கேடயமும் கொண்டு அசுரவேகத்தில் செல்லும் சுடர்முடிக் காளியின் சுந்தரவடிவம் சின்னஞ்சிறு தூண் பாதத்தில் சிறப்பாக வடிக்கப்பட்டுள்ளது. அம்மையின் நெற்றிப்பட்டமும் பனையோலைக் குண்டலங்களும் இடையாடையை இருத்தும் இடைக்கட்டும் அவர் எழிலுக்கு எழில் சேர்க்கின்றன. 



காளைஅரக்கனைக் கண்ணன் அழிக்கும் காட்சி பல கோயில்களில் காணப்பட்டாலும் எறும்பியூர்ப் பதிவு இணையற்றது. காளையின் தலையை வலக்கையால் இழுத்துத் தன் பக்கம் திருப்பிய நிலையில் இடக்கையை அதன் முதுகில் ஊன்றி அழுத்தும் கண்ணனின் கோலம் உடலமைப்பு, மெய்ப்பாடு இருநிலைகளிலும் உச்சத்தைத் தொட்டுள்ளது. ஒரு நிகழ்வை அது நடக்குமாறு போலவே சிற்பமாக்குவது எளிதானதன்று. தேர்ந்த உளித்திறம், கற்பனையாற்றல், நிகழ்வு பற்றிய செயல்தெளிவு இருந்தால்தான் பதிவு காலத்தை விஞ்சி நிற்கும். அவ்வகையில் இங்குள்ள கண்ணன் காளையழிக்கும் காட்சி தமிழ்நாட்டின் வேறெந்தக் கோயில் பதிவிலும் பார்க்கமுடியாத சிற்ப அற்புதமாக விளைந்துள்ளது.  



எறும்பியூர்ப் பாதச்சிற்பங்கள் ஆய்வு சிவபெருமானுக்கு இணையாக விஷ்ணு தொடர்பான புராணக் கதைகளுக்கும் அக்காலச் சிற்பிகள் இடமளித்ததையும் ஆடற்கலைக்குச் சோழநாட்டில் பெருஞ்சிறப்பு இருந்ததையும் வெளிப்படுத்துவதுடன், இப்பகுதிக்குரிய தனித்தன்மையாக இறைவடிவங்கள் பல அவற்றின் ஊர்திகளோடு காட்சிப்படுத்தப்பட்டுள்ளமையையும் சுட்டுகிறது.























 


இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.