http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[178 Issues]
[1762 Articles]
Home About US Temples Facebook
Issue No. 159

இதழ் 159
[ நவம்பர் 2021 ]


இந்த இதழில்..
In this Issue..

பேய் பாடிய பிஞ்ஞகனின் ஆடல்கள்
எடுத்த படியும் அடித்த படியும்
புள்ளமங்கை ஆலந்துறையார் தாங்குசிற்பங்கள்
கார்த்திகையில் பிறந்த கற்பகவல்லி
மாமல்லபுரம் குடைவரைகள் - ஒப்பாய்வு - 4
ஜப்பானியப் பழங்குறுநூறு - 1 (துளியுதிர் இரவு)
பத்துப்பாட்டு ஆராய்ச்சி - அரசியல் - 4
இதழ் எண். 159 > இலக்கியச் சுவை
பத்துப்பாட்டு ஆராய்ச்சி - அரசியல் - 4
மா.இராசமாணிக்கனார்

போர்க்களக்காட்சி

பாண்டியன் நெடுஞ்செழியன் சேர சோழரையும் ஐம்பெருவேளிரையும் தன் நால்வகைப் படைகளுடன் போர்க்களத்தில் சந்திக்கிறான். அவனுடைய யானைகள் கண்டோர் ‘இவை மலைகளோ!’ என்று மருளுதற்குக் காரணமான பேருடல் படைத்தவை. அவை அணிவகுத்து நிற்கின்றன. அவற்றின் முகத்தில் அணியபட்ட பொன்னால் இயன்ற நெற்றிப்பட்டங்கள் பளபளவென்று மின்னுகின்றன. அவை தம் எதிரே பகைப்படை வருதலைக் கண்டதும் சினம் கொள்கின்றன. அவற்றின் விழிகளிலிருந்து நெருப்பு வெளிப்படுகிறது. பாகர் அவற்றைப் போர்த்தொழிலில் ஏவுகின்றனர். உடனே அவை பகைப்படையுள் புகுந்து போர்புரியத் தொடங்குகின்றன.

மற்றொரு பக்கம் போர்புரியும் புரவிகள் விரைந்து பாய்கின்றன. அவற்றின் இயக்கத்தால் எழுந்த துகள் வானம் முழுமையும் பரவி இருள் சூழச்செய்கின்றது. அஃதாவது, ஞாயிற்று மண்டிலம் துகள்களால் மறைக்கப்படுகிறது.

வேறொரு பக்கம், தேர்கள் தம் உருத்தெரியாதபடி விரைந்து சுழல்கின்றன. அவற்றை இழுக்கும் குதிரைகள் தாவித்தாவிப் பாய்கின்றன. இதனால் சூறைக்காற்று அடிப்பது போன்ற தோற்றம் போர்க்களத்தின் ஒரு பகுதியில் காணப்படுகிறது.

வேறொரு பக்கம் காலாட்படையினர் கடும்போர் புரிகின்றனர்; தம் தோள்வலியால் பகைவர் படையைச் சிதறடிக்கின்றனர்; முடிவில் வெற்றி முழக்கம் செய்கின்றனர் (மதுரைக்காஞ்சி அடி. 43-56)

படையெடுப்பின் பயன்

படையெடுப்பவன், தேவைப்படின், பகைவர் ஊர்களையும் பயிர்களையும் நீர்நிலைகளையும் அழிப்பான். ‘நாடு’ என்ற பெயரையிழந்து ‘காடு’ என்னும் பெயரைப் பெறுமாறு செய்வான். அச்செயலால் பசுக்கள் தங்கியிருந்த இடங்களில் புலிகள் முதலியன தங்கும்; ஊராயிருந்த இடங்கள் பாழாய்க்கிடக்கும். சான்றோர்கள் இருந்த அம்பலங்கள் பேய்கள் வாழிடமாகும். ஊர்கள் அழிதலால் ஊரார் உணவின்றித் துன்புறுவர். அவர்தம் உறவினர் தம் ஊர்களிலிருந்து சென்று அவர்கட்குப் பாதுகாவலாக அமைவர். பெரிய மாளிகைகளில் இருந்த நெற்குதிர்கள் வெந்து அழியும். அவ்விடங்களில் கூகைச் சேவல் பேட்டுடன் இருந்து குழறும். குளங்களில் நீர் எடுப்பாரின்மையால், யானை நின்றால் மறையும் அளவிற்கு வாட்கோரையும் சண்பங்கோரையும் நெருங்கி வளரும். பகைவரால் அழிக்கப்பட்ட வயல்களில் பெண் பன்றிகளுடன் ஆண்பன்றிகள் ஓடித்திரியும் (மதுரைக்காஞ்சி அடி 150-180, 225-258)

பட்டினப்பாலையில் கரிகாலனது படையெடுப்பால் நடைபெற்ற அழிவுகள் கீழ்வருமாறு கூறப்பட்டுள்ளன.

கரும்பும் செந்நெல்லும் வளர்ந்து குவளையும் நெய்தலும் மலர்ந்து விளங்கிய மருதநிலம், இடமகன்ற பொய்கைகளையுடையது. கரிகாலனது படையெடுப்பு அம்மருத நிலக்குடிகளை ஒட்டியது. படையெடுப்பால் செய்களும் வாவிகளும் நீரற்றன. அவற்றில் அறுகும் கோரைகளும் வளர்ந்தன. மகளிர் நீருண்ணும் துறையிற் சென்று முழுகிக் கந்து நிறுத்தப்பட்டுள்ள அம்பலத்தை மெழுகி, அந்திக்காலத்தில் விளக்கேற்றுவர். (அவ்வம்பலத்தில் இருந்த கந்தினைக் கரிகாலன் யானைகள் சாய்த்து விட்டன. அவை அவ்வம்பலத்திலேயே தங்கிவிட்டன). மன்றத்தில் விழா நடைபெறும். யாழ் முதலிய இசைக்கருவிகள் இசைக்கப்படும். கரிகாலன் படையெடுப்பால் ஊர்விழா நடைபெறவில்லை; மன்றத்தில் அச்சம் குடிகொண்டிருந்தது. தலைவாயில், மாடம், அடுக்களை முதலியவற்றைக் கொண்ட பெரிய வீடுகள் மக்களின்றி இருந்தன. அவ்வீடுகள் சாந்திட்ட சுவர்களையுடையவை. அவ்வீட்டுத் திண்ணைகளில் கிளிக்கூண்டுகள் இருந்தன. படையெடுப்பால் அவ்வில்லங்கள் பாழ்பட்டன. அங்குக் கூகைகளும் ஆண்டலைப் புட்களும் அலறிக்கொண்டிருந்தன. ஆண்பேய்களுடன் பெண்பேய்கள் அலைந்து கொண்டிருந்தன. பெரிய மனைகளில் நெற்கூடுகள் நிறைய நெல் இருந்தது. படையெடுப்பில் அக்கூடுகள் கொள்ளையிடப்பட்டன. வறுவிய அக்கூடுகளின் உள்ளிருந்து கூகைகள் அலறின. கரிகாலன் பகைவருடைய மதில்களை அழித்தான்; படைவீடுகளை அழித்தான்; ஊர்களைப் பாழாக்கினான் (பட்டினப்பாலை, அடி 239-270). போரில் பகைவருடைய மனைவியரையும் ஏனைய மகளிரையும் பிடித்துவந்து பணி மகளிராக்கிக் கொள்ளுதல் பண்டை மரபு; அம்மகளிர் நீருண்ணும் துறையிலே சென்று முழுகி அம்பலத்தை மெழுகுவர்; அங்கு விளக்கினை ஏற்றுவர் (பட்டினப்பாலை, அடி 241-249).

பாண்டியன் நெடுஞ்செழியன் பகைவர் நாட்டின்மீது படையெடுத்துச் சென்று, அவர்தம் காவலையுடைய பொழில்களை அழித்தான்; எக்காலத்தும் வளம் குன்றாத மருத நிலங்களை நெருப்புண்ணச் செய்தான்; நாடு என்னும் பெயர் மறைந்து காடு என்னும் பெயர் பெறச் செய்தான்; அதனால் ஆடுமாடுகள் தங்கியிருந்த இடங்களில் புலி முதலிய கொடிய விலங்குகள் தங்கலாயின; ஊராய் இருந்த இடங்கள் பாழாயின; அந்நாட்டு மகளிர் துணங்கைக் கூத்தினையும் குரவைக்கூத்தினையும் மறந்தனர்; சான்றோர் இருந்த பெரிய அவைகளில் பேய்மகளிர் ஆடி உலாவினர்; இல்லுறை தெய்வங்கள் உலாவி அகன்ற ஊரில் வீட்டு வாயிலில் இருந்து பெண்டிர் வருந்தி அழுதனர்; அவர்தம் உறவினர் இருந்த வேற்றுநாடுகட்குச் சென்றனர்; பெரிய மாளிகைகள் வெந்து வீழ்ந்தன; அம்மாளிகையில் இருந்த கரிந்த குதிர்களில் ஆந்தைகள் இருந்து அலறின; செங்கழுநீர் இருந்த பொய்கைகளில் யானையை மறைக்கும் வாட்கோரையும் சண்பங்கோரையும் நெருங்கி வளர்ந்தன; எருதுகள் உழுத வயல்களில் பன்றிகள் ஓடித்திரிந்தன. இங்ஙனம், நெடுஞ்செழியன் படையெடுப்பால் பகைவர் நாடுகள் பாழாயின (மதுரைக்காஞ்சி, அடி 152-176).

தொண்டைமான் இளந்திரையன் வெள்ளிய கொம்பினையுடைய கரிய யானைப் பிணத்தைக் குருதியாகிய ஆறு இழுத்துக்கொண்டு போகும்படி பொருதவன்; துரியோதனன் முதலிய நூற்றுவரும் களத்திலேயே இறக்கும்படி பெரிய போரை வென்ற தருமன் முதலியோரைப்போல, எண்ணில் அடங்காத படையுடனே கோபித்துத் தன்மேல் வந்த பகைவரை வென்றவன்; அவ்வெற்றிக் களிப்பினால் ஆரவாரம் செய்தவன்; தன்னுடன் போரிட்டவர்களின் நாட்டு ஊர் மன்றங்கள் பாழாகும்படி அழித்தவன்; தனக்கு அடங்கி நடந்தவர் நாட்டை வளமாக்கியவன் (பெரும்பாணாற்றுப்படை, 414-425). இளந்திரையன், சிங்கக்குருளை யானைமீது பாய்ந்து அதன் மத்தகத்தைக் கொள்ள விரும்பினாற்போலப் பகைவரின் காவலையுடைய மதிலை அழித்து அங்கு இருந்த அரசருடைய முடிக்கலம் முதலியவற்றை வாங்கி வீரமுடி புனையும் இயல்பு படைத்தவன்; அம்மதிலரசன் சந்து செய்தற்கு உடன்பட்டாலும், தான் உடன்படாதவன் (பட்டினப்பாலை, அடி 448-454).

நடுகல்

போரில் விழுப்புண் பட்டு இறந்த வீரர்க்குக் கல் எடுத்து விழாச் செய்தல் மரபு. அதுவே தமிழகத்துள் சிறப்புற்ற வீரர் வணக்கமாய் இருந்ததென்பது தொல்காப்பியர் விரிவாகக் கூறலால் நன்கு விளங்கும். 1. கற்காண்டல், 2. கால்கோள், 3. கல்லை நீர்ப்படுத்துதல், 4. கல்லை நடுதல், 5. வீரன் பெயர் செயல் முதலியவற்றைக் கல்லின்மீது பொறித்தல், 6. கால் கொண்ட தெய்வத்திற்குச் சிறப்புச் செய்து வாழ்த்தல் என இக்கல் எடுப்புவிழா ஆறுவகைப்படும் என்பார் தொல்காப்பியர். நடுகல்லைப் பீலியாலும் மலராலும் அணி செய்து, பல்லியம் ஒலிக்க விழவு செய்தல் தமிழர் மரபு. இங்ஙனம் நாட்டப்படும் கல்லிற்குக் கோவிலும் மதிலும் வாயிலும் ஏனைச் சிறப்புகளும் செய்தலும் பழந்தமிழர் மரபு. இதனைச் செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோயில் எடுத்ததனைக் கொண்டு விளக்கமாக அறியலாம்.

இங்ஙனம் வீரர்க்குக் கல் நட்டமை, நட்டு வழிபட்டமை பண்டைத்தமிழ் இலக்கியங்களில் பலவிடத்தும் பரக்கக் காணலாம்.

ஒரு நாட்டின்மேல் படையெடுக்க விரும்பும் அரசன் முதலில் தன் வீரரை ஏவிப் பகைவருடைய கால்நடைகளைக் கவர்வான். இது வெட்சித்திணை எனப்படும். இம்முயற்சியில் ஈடுபட்டவர் வெட்சி மலர்களைச் சூடுவர். இம்முயற்சியை எதிர்த்து நிற்பது கரந்தைத்திணை எனப்படும். அவர்கள் கரந்தை மலர்களைச் சூடிக்கொள்வார்கள். பின்பு அந்நாட்டின்மீது படையெடுப்பு நடைபெறும். அது வஞ்சித்திணை எனப்படும். அப்படையெடுப்பை எதிர்த்து நிற்றல் காஞ்சித்திணை எனப்படும். கோட்டையை முற்றுகையிடல் உழிஞைட்திணை எனப்படும். கோட்டையுள் இருந்து எதிர்த்தல் நொச்சித்திணை எனப்படும். கோட்டைக்கப்பால் வெட்டவெளியில் நடைபெறும் கடும்போர் தும்பைத்திணை எனப்படும். போரில் வெற்றி பெறுதல் வாகைத்திணை எனப்படும். ஒவ்வொரு திணைச்செயலிலும் ஈடுபட்ட வீரர்கள் அவ்வத்திணைக்குரிய மலர்களை அணிந்துகொள்ளுதல் மரபு.

இப்போர்களில் தம் வீரத்தைக் காட்டிச் சிறந்த வீரர் பாராட்டுக்குரியவராவார். ஒரு படை சிதறி ஓடுகின்றது. உடனே ஒரு வீரன் தோன்றி அப்படைக்கு முன்நின்று, பகைவரைத் தாக்கி அலைக்கழித்து, இறுதியில் பகைவர் தாக்குதலால் மடிகிறான். இத்தகைய வீரத்தை அவனைச் சேர்ந்த அரசனும் மற்ற வீரரும் பாராட்டுவர். அவன் இறந்த இடத்தில் அல்லது அவன் உடலை எரித்த இடத்தில் அவனது வீரத்துக்கு அறிகுறியாக ஒரு கல்லை நடுவர். அக்கல்லில் அவனது உருவம் பொறிக்கப்படும். அவ்வுருவத்தின்கீழ் அவன் பெயரும் வீரச்சிறப்பும் குறிக்கப்படும். இங்ஙனம் நடப்பெறும் கல், முன்பு கூறியபடி நன்கு தேர்ந்தெடுக்கப்பட்டும், நீராட்டப்பட்டும் இருக்கும். அக்கல்லின்மீது மயிற்பீலி சூட்டப்படும். கல் நடப்பட்ட அன்று அக்கல்லைச் சுற்றிலும் மேலே துணிப்பந்தல் அமைக்கப்படும்.

“உயரிசை வெறுப்பத் தோன்றிய பெயரே
மடஞ்சால் மஞ்ஞை அணிமயிர் சூட்டி
இடம்பிறர் கொள்ளாச் சிறுவழிப்
படஞ்செய் பந்தர்க் கன்மிசை யதுவே”

என்பது புறநானூறு (செ. 260).

நன்னனது மலைநாட்டில் இத்தகைய நடுகற்கள் இரண்டு இடங்களில் இருந்தன. அக்கற்களின்மீது இறந்த வீரர் பெயர்களும் பீடும் பொறிக்கப்பட்டிருந்தன. அவற்றுட்சில, மரங்களின் நிழலிலே நடப்பட்டிருந்தன. அவ்வழிச் சென்ற கூத்தர் விறலியர் முதலியோர் தம் யாழை வாசித்து, அந்நடுகற்களில் உறைந்த தெய்வங்களை வழிபட்டுச் சென்றனர் (மலைபடுகடாம், அடி 386-396).

(வளரும்)
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.