http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[180 Issues]
[1786 Articles]
Home About US Temples Facebook
Issue No. 162

இதழ் 162
[ ஃபிப்ரவரி 2022 ]


இந்த இதழில்..
In this Issue..

குடக்கூத்து
புள்ளமங்கை ஆலந்துறையார் கோயில் கண்டபாதச் சிற்பங்கள் - 3
திருவடிகள் என் தலைமேலன
பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில் - கண்ணனூர் - 2
ஜப்பானியப் பழங்குறுநூறு - 9 (இணையற்ற அழகும் நிலையற்றதே)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 8 (தான் மட்டுமே அறியும் அமைதி)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 7 (அன்று வந்ததும் இதே நிலா)
இதழ் எண். 162 > இலக்கியச் சுவை
ஜப்பானியப் பழங்குறுநூறு - 8 (தான் மட்டுமே அறியும் அமைதி)
ச. கமலக்கண்ணன்


பாடல் 8: தான் மட்டுமே அறியும் அமைதி

மூலப்பாடம்:

காஞ்சி எழுத்துருக்களில்
わが庵は
都のたつみ
しかぞすむ
世をうぢ山と
人はいふなり

கனா எழுத்துருக்களில்
わがいほは
みやこのたつみ
しかぞすむ
よをうぢやまと
ひとはいふなり

ஆசிரியர் குறிப்பு:

பெயர்: துறவி கிஸென்

காலம்: தெரியவில்லை.

இவரது வாழ்க்கையைப் பற்றி அதிகத் தகவல்கள் இல்லை. கி.பி 920ல் புலவர் ட்சுராயுக்கி தலைமையில் கொக்கின்ஷு தொகுக்கப்பட்டபோது ஜப்பானின் ஆறு பழம்புலவர்களில் ஒருவராக இவர் குறிப்பிடப்பட்டிருக்கிறார். ஆனால் ஜப்பானிய இலக்கியத்தில் இரண்டே இரண்டு பாடல்கள் மட்டுமே இவர் எழுதியவை என அறுதியிட்டுக் கூறத்தக்கன. அதிலேயே ஆறில் ஒருவராக இடம்பெற்றிருக்கிறார் என்றால் அப்பாடல்களின் தன்மையைப் புரிந்துகொள்ளலாம். வக்கா சக்குஷிக்கி என்றொரு பாடல் திரட்டு இவரால் எழுதப்பட்டது என்கிறார்கள். ஆனால் அது ஐயம் திரிபற உறுதி செய்யப்படவில்லை. இவர் கியோத்தோ நகருக்குத் தென்கிழக்கிலுள்ள உஜி மலையில் வாழ்ந்தவர் என்பது மட்டும் (அவரே பாடலில் குறிப்பிட்டிருப்பதால்) நமக்குத் தெரிகிறது.

பாடுபொருள்: மலையில் தனித்த வாழ்வு

பாடலின் பொருள்:

என்னுடைய வீடு தலைநகர் கியோத்தோவுக்குத் தென்கிழக்கில் உள்ள உஜி மலையில் இருக்கிறது. அருகில் புள்ளிமான்கள் உலவும் அமைதிமிகு இல்லத்தில் வசிக்கும் என்னை நகரிலுள்ள மக்கள் உஜி மலையில் வசிக்கிறேன் என இருபொருள்படப் பேசுகிறார்கள்.

உஜி மலையில் வசிப்பது எப்படி இருபொருள் கொண்டது என்றால், ஜப்பானிய மொழியில் உஜி என்ற சொல்லுக்குத் துன்பம் என்றொரு பொருள் உள்ளது. உஜி என்ற பெயர்கொண்ட மலையில் வசிக்கிறார் எனவும் பொருள் கொள்ளலாம். மலைபோன்ற துன்பத்துக்கிடையில் வாழ்கிறார் என்றும் கொள்ளலாம். புள்ளிமான்கள் எப்போதும் ஆபத்தற்ற அமைதியான இடங்களிலேயே வசிக்கும் தன்மை கொண்டவை. தலைநகரில் இருந்த பவுத்த விகாரை ஒன்றில் துறவியாக இருந்த இவர் அமைதியான வாழ்க்கையை விரும்பி அருகிலுள்ள மலையில் வீடுகட்டிக் குடியேறிவிடுகிறார். இவர் அமைதியை விரும்பியே இங்கே இருக்கிறேன் என்பதையும் குறிப்பிட்டிருப்பதால் ஊர்வாயை மூட உலைமூடி இல்லை என்பதையும் சேர்த்தே சொல்கிறார்.

இப்பாடலில் தென்கிழக்குத் திசையைக் குறிக்கத் தட்ஸுமி என்றொரு சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார். இது சீனமொழியுடன் தொடர்புள்ளது. தட்ஸு என்பது டிராகன் எனும் கற்பனை மிருகம். மி என்பது பாம்பு. சீனாவில் ஒவ்வோர் ஆண்டையும் ஒவ்வொரு விலங்கை வைத்துக் குறிப்பிடுவார்கள். தற்போதைய 2022ம் ஆண்டின் விலங்கு புலி ஆகும். நம் ஜாதகங்களில் இராசிக் கட்டங்களை வட்டமாக எழுதுவதுபோல் சீனாவில் இவ்விலங்குகளையும் ஆண்டு வரிசையில் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்கள். மேலே உள்ள திசை வடக்கு; கீழே தெற்கு. வடக்கு நோக்கி நின்றால் இடதுபுறம் மேற்கு; வலதுபுறம் கிழக்கு. நாம் துணைத்திசைமூலைகளுடன் சேர்த்து எண்திசைகளாகப் பகுத்து இருக்கிறோம். ஆனால் சீனாவிலும் ஜப்பானிலும் 12ஆகப் பிரித்திருக்கிறார்கள். தெற்குக்கும் கிழக்குக்கும் இடையில் இருப்பது நமக்குத் தென்கிழக்கு மட்டுமே. ஆனால் இவர்கள் தெற்குச் சார்ந்த தென்கிழக்கு, கிழக்குச் சார்ந்த தென்கிழக்கு என இரு தென்கிழக்குகளைக் கொண்டிருக்கிறார்கள். தட்ஸு எனப்படும் டிராகனுக்கும் மி எனப்படும் பாம்புக்கும் இடையில் தெற்குச் சார்ந்த தென்கிழக்குத் திசை அமைந்திருப்பதால் அதைத் தட்ஸுமி எனக் கூறுகிறார்கள்.


சீன ஆண்டு விலங்குப் படம்

வெண்பா:

மானுலாவு காவனக் குன்றமை வேய்குடிலில்
வானுலாவு திங்கள் கிளறாத - தானுணர்
துன்பமறு நெஞ்சத் தமைதியை மற்றோர்
உணராத் தனிமைசூழ் வாழ்வு

(மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்)
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.