http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[180 Issues]
[1786 Articles]
Home About US Temples Facebook
Issue No. 162

இதழ் 162
[ ஃபிப்ரவரி 2022 ]


இந்த இதழில்..
In this Issue..

குடக்கூத்து
புள்ளமங்கை ஆலந்துறையார் கோயில் கண்டபாதச் சிற்பங்கள் - 3
திருவடிகள் என் தலைமேலன
பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில் - கண்ணனூர் - 2
ஜப்பானியப் பழங்குறுநூறு - 9 (இணையற்ற அழகும் நிலையற்றதே)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 8 (தான் மட்டுமே அறியும் அமைதி)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 7 (அன்று வந்ததும் இதே நிலா)
இதழ் எண். 162 > இலக்கியச் சுவை
ஜப்பானியப் பழங்குறுநூறு - 9 (இணையற்ற அழகும் நிலையற்றதே)
ச. கமலக்கண்ணன்


பாடல் 9: இணையற்ற அழகும் நிலையற்றதே

மூலப்பாடம்:

காஞ்சி எழுத்துருக்களில்
花の色は
うつりにけりな
いたづらに
わが身世にふる
ながめせしまに

கனா எழுத்துருக்களில்
はなのいろは
うつりにけりな
いたづらに
わがみよにふる
ながめせしまに

ஆசிரியர் குறிப்பு:

பெயர்: புலவர் கொமாச்சி ஓனோ

காலம்: கி.பி. 825-900.

பேரழகியான இவர், சிறந்த புலவர்கள் பட்டியல்கள் இரண்டில் இடம்பெற்றிருந்தாலும் இன்றுவரை நினைவுகூரப்படுவது பெண்ணழகின் மறுபெயராகத்தான். காலத்தால் அழியாத 36 கவிஞர்கள் என ஜப்பானிய இலக்கிய வரலாற்றில் உள்ள காலத்தால் முற்பட்ட நிஷி ஹொங்கான்ஜி பட்டியலிலும் புலவர் ட்சுராயுக்கி தலைமையில் தொகுக்கப்பட்ட ஜப்பானின் ஆறு பழம்புலவர்களின் பட்டியலிலும் இடம்பெற்று இருப்பவர். வெகுசிலரே இரண்டு பட்டியல்களிலும் இடம்பெற்றவர்கள். இவரது பிறப்பைப் பற்றிய விவரங்கள் அவ்வளவு உறுதியாகத் தெரியாத நிலையில், ஜப்பானின் வடக்கிலிருக்கும் இன்றைய அகிதா மாகாணத்தில் உள்ள தேவா என்ற ஊரின் நிலப்பிரபு ஒருவருக்கு மகளாகப் பிறந்தார் எனப் பிற்கால நோவ் நாடகங்களில் குறிப்பிடப்பெற்றுள்ளது. கி.பி 920ல் புலவர் ட்சுராயுக்கி தலைமையில் தொகுக்கப்பட்ட கொக்கின்ஷு பாடல்தொகுப்பின் அணிந்துரையில் இவருக்கும் ஆறு பழம்புலவர் பட்டியலில் இருக்கும் இன்னொரு கவிஞர் யசுஹிதே என்பவருக்கும் இடையே இருந்த காதல் குறிப்பிடப்பட்டுள்ளது.

கி.பி. 11ம் நூற்றாண்டிலிருந்து இவரைப் பற்றிய செவிவழிக் கதைகள் தோன்றத் தொடங்கின. இவர் பேரரசர் நின்மியோவின் அந்தப்புரத்தில் வாழ்ந்தவர் என ஊகிக்கப்படுகிறது. அடுத்த பட்டத்தரசியாகும் நிலையில் இருந்தபோது திடீரென கி.பி. 850ல் நின்மியோ இறந்தபிறகு பிற ஆண்களுடன் காதல்கள் ஏற்பட்டதாகக் கூறுகிறார்கள். அதே ஆறு பழம்புலவர்கள் பட்டியலில் இருந்த புலவர் நரிஹிரா என்பவருடனும் இவருக்குக் காதல் ஏற்பட்டதாகப் பிற்கால நோவ் நாடகங்களில் வருகிறது. இவரது அழகில் மயங்கிப் பலர் இவரைக் காதலித்ததாகவும் அவர்களையெல்லாம் இவர் வாட்டி வதைத்து அதில் இன்பம் கண்டதாகவும் கூறப்படுகிறது. அரசவையில் உயர்பதவியில் இருந்த ஷோஷோ என்பவர் இவரிடம் காதலைத் தெரிவித்தபோது அதை ஏற்றுக்கொள்ள ஒரு விசித்திரமான நிபந்தனையை விதித்தார். இன்றிலிருந்து தொடர்ந்து 100 இரவுகள் கொமாச்சியைக் காண அவரது வீட்டுக்கு ஷோஷோ வரவேண்டும். அப்படி வந்தால் அவரது காதலை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்தார். அதை ஒப்புக்கொண்டு ஷோஷோவும் மழை, குளிர் பாராமல் தினமும் அவரது வீட்டுக்குச் சென்றுவந்தார். ஆனால் 99வது நாள் செல்லும்போது ஷோஷோ இறந்துவிட்டார்.

இவரது அழகு குன்றத்தொடங்கிய முதுமைப் பருவத்தையும் இறந்தபின்னர் மண்டையோடு கிடந்த நிலையையும் நோவ் நாடகங்கள் ஆவணப்படுத்தியுள்ளன. முதுமைக் காலத்தில் அழகு குறைந்ததால் மனவருத்தமுற்றுப் பிறழ்ந்த நிலையில் கிழிந்த ஆடைகளுடன் இவர் தெருக்களில் நடப்பதைச் சுற்றியிருந்தோர் எள்ளி நகையாடியிருக்கின்றனர். இளமைக் காலத்தில் இவர் காதலர்களைப் படுத்திய பாட்டுக்கு இப்போது அனுபவிக்கிறார் என அவர் காதுபடவே பேசியிருக்கின்றனர். அந்த அழகு குறையும் மனவருத்தத்துடன் இவர் பாடியதுதான் இப்பாடல். மரணத்துக்குப் பின் இவரது மண்டையோடு கேட்பாரற்றுக் கிடந்தபோது அதன் கண்களின் துளைகள் வழியே காற்று புகுந்து வெளிப்பட்டபோது ஏற்பட்ட ஓசை இவரது வேதனையைப் பாடுவதுபோல் இருப்பதாக ஒரு நோவ் நாடகம் முடிவுக்காட்சியைப் பெற்றிருந்தது.

இன்றைய கியோத்தோ நகரில் ஹராமச்சி என்ற இடத்தில் இவரது கல்லறையும் யமாஷினா என்ற இடத்தில் இவர் வசித்த வீடும் இருக்கின்றன. அங்கே ஒவ்வோர் ஆண்டின் மார்ச் மாதத்தின் கடைசி ஞாயிறன்றும் ஹனேசு ஒதோரி என்றொரு நடனம் கொமாச்சியைப் போன்று அலங்காரம் செய்துகொண்ட பெண்களால் ஆடப்பட்டு வருகிறது.

பாடுபொருள்: தேய்ந்துகொண்டே வரும் அழகு

பாடலின் பொருள்:

வசந்தகாலத் தொடக்கத்தில் மலரும் சக்குரா மலர்கள் மிகவும் அழகாக இருந்தன. ஆனால் தொடர்ந்து பெய்யும் மழையில் நனைந்துகொண்டே இருப்பதால் நிறம் மங்கி இதழ்கள் உதிர்ந்து அந்த அழகு காணாமல் போய்க்கொண்டிருக்கிறது.

இப்பாடல், மழை எவ்வாறு பூக்களின் அழகைப் பாழாக்குகிறதோ அதுபோலக் காலம் ஓடிக்கொண்டிருக்கும்போது தனது அழகும் பாழாகிக்கொண்டே வருகிறது என்ற பொருளையும் கொண்டிருக்கிறது. இதிலுள்ள பல சொற்கள் சிலேடைத்தன்மை கொண்டவை. உதாரணமாக ஈற்றடியில் வரும் “நகாமே” என்ற சொல்லுக்கு நீண்ட மழை என்றும் வெறுமனே பார்த்துக் கொண்டிருத்தல் என்றும் இருபொருள் கொள்ளலாம். அதேபோல் ஈற்றடிக்கு அயலடியில் இருக்கும் “ஃபுரு” என்ற சொல்லுக்கும் (மழை) பெய்தல் என்றும் (காலம்) செல்லுதல் என்றும் பொருள் கொள்ளலாம். முதல் அடியில் மலரின் நிறம் என்ற பொதுவான சொல்தான் இடம்பெற்றிருக்கிறது. ஆனால் ஜப்பானிய இலக்கியங்களில் மலர் என்று பெயரில்லாமல் பொதுவாகக் குறிப்பிடப்பட்டாலே அது சக்குரா எனப்படும் செர்ரி மலர்களைத்தான் குறிக்கும். இந்தச் செர்ரி மலர் பெண்களின் அழகுக்கும் இளமைக்கும் உவமையாகச் சொல்லப்படுகிறது.

ஆணாதிக்க சமுதாயங்களில் பெண்களின் திறமையைவிட அவர்களின் அழகும் அடக்கமுமே வெகுவாகப் பாராட்டப்படுகின்றன. அதுவும் இன்றைக்கு 1200 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையைச் சொல்லவே வேண்டியதில்லை. ஆறு பழம்புலவர்கள் பட்டியலில் இடம்பெற்ற ஒரேயொரு பெண்பாற் புலவர் என்றாலும் இவர் வாழ்ந்த காலத்தில் இவருக்குப் பெருமையையும் புகழையும் சேர்த்தது இவரது அழகும் இளமையும்தான். அவற்றை உயர்வாகக் கருதிக்கொண்டிருந்தவருக்கு முதுமைப்பருவம் எத்தகைய கொடுமையானது என்பது இப்பாடலில் மிகவும் குறைத்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறதோ எனத் தோன்றுகிறது.

வெண்பா:

நிலவும் இரவும் குளிரும் புகழும்
அலரும் துயரும் ஒருநாள் - விலகல்
உறுதிபோல் நீண்ட பொழிவில் உதிரும்
இதழெனத் தேயும் அழகு

(மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்)
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.