http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[181 Issues]
[1796 Articles]
Home About US Temples Facebook
Issue No. 164

இதழ் 164
[ மே 2022 ]


இந்த இதழில்..
In this Issue..

கோலாட்டம்
கம்பன் மணியனான விக்கிரமசிங்க மூவேந்தவேளார்
நெடுங்களநாதர் கோயில் கல்வெட்டுகள்
ஜப்பானியப் பழங்குறுநூறு - 13 (வலிய காதல் வழிகிறதே!)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 12 (கொண்டல் விலக்காயோ கொண்டலே!)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 11 (என் நிலை உரைப்பார் யாரோ?)
இதழ் எண். 164 > கலையும் ஆய்வும்
நெடுங்களநாதர் கோயில் கல்வெட்டுகள்
இரா.கலைக்கோவன், மு.நளினி

சிராப்பள்ளித் தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் துழாய்க்குடியை அடுத்து இடப்புறம் பிரியும் சாலையில் 4 கி. மீ. தொலைவில் உள்ளது நெடுங்களம். சம்பந்தரால் பாடப்பெற்ற இவ்வூர்க் கோயில் பல்லவர், பாண்டியர் காலத்திலிருந்தே மக்கள் கொடைகளால் செழித்திருந்தமைக்கு டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையக் களஆய்வுகளின்போது கிடைத்த புதிய கல்வெட்டுகளே சான்றாகும்.

1909இல் இந்தியத் தொல்லியல் அளவீட்டுத்துறையின் கல்வெட்டுப் பிரிவு இக்கோயிலிலிருந்து 34 கல்வெட்டுகளைப் படியெடுத்து அவற்றின் பாடங்களைத் தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி 26இல் வெளியிட்டுள்ளது. இக்கோயிலில் 1999இல் தொடங்கிய இந்நூலாசிரியர்களின் களஆய்வுகள் 15 புதிய கல்வெட்டுகளையும் பல துண்டுக் கல்வெட்டுகளையும் வரலாற்று வெளிச்சத்திற்குக் கொணர்ந்தன.

இதுநாள்வரை இங்குக் கிடைத்துள்ள கல்வெட்டுகளுள் காலத்தால் முற்பட்டது தந்திவர்மப்பல்லவரின் 2ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டாகும். பாண்டிய அரசர் கோமாறஞ்சடையரின் கல்வெட்டுகள் 2ம் முதலாம் ஆதித்தர் காலக் கல்வெட்டுகள் 3ம் இங்குள்ளன. முதலாம் பராந்தகர் (2) முதலாம் ராஜராஜர் (7), முதலாம் ராஜேந்திரர் (1), மூன்றாம் குலோத்துங்கர் (5), மூன்றாம் ராஜராஜர் (2) ஆகிய சோழஅரசர்களின் கல்வெட்டுகளும் அரசர் பெயரற்ற ராஜகேசரி (1), பரகேசரி (3), சடையவர்மர் சுந்தர பாண்டியர் (5) கல்வெட்டுகளும் இங்கிருந்து படியெடுக்கப்பட்டுள்ளன. வீரசோமேசுவரர், வீரராமநாதர் காலக் கல்வெட்டுகள் 2ம் விஜயநகர (5), நாயக்கர் (1), சிற்றரசர் (4) காலக் கல்வெட்டுகள் 10ம் அரசர் பெயரற்ற கல்வெட்டுகள் சிலவும் இங்குள்ளன.

கல்வெட்டுத்தொகுதி மன்னர் பெயரற்ற பரகேசரிக் கல்வெட்டுகள் மூன்றையும் அவற்றின் உயரிய ஆட்சியாண்டு கொண்டு உத்தமசோழருடையதாகக் குறித்துள்ளது. அரசர் பெயரற்ற ராஜகேசரியின் 3ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு இங்குள்ள முதலாம் ராஜராஜர் கல்வெட்டுகளின் எழுத்தமைதியோடு ஒத்துப்போவதாலும் உள்ளீட்டின் அடிப்படையில், முதலாம் ராஜராஜருடையதாகக் கல்வெட்டுத்தொகுதி வரையறுத்துள்ள கல்வெட்டிலும் பெயர் சுட்டப்பெறாது ராஜகேசரி என்று மட்டுமே அரசர் குறிக்கப்பட்டிருப்பதாலும் பெயரற்ற இந்த ராஜகேசரிக் கல்வெட்டையும் முதலாம் ராஜராஜர் காலத்ததாகக் கொள்வதில் தவறில்லை.

அரசர் பெயரற்ற கல்வெட்டுகளுள், பொ. கா. 8-9ஆம் நூற்றாண்டு எழுத்தமைதியில் 2ம் 10ஆம் நூற்றாண்டு எழுத்தமைதியில் 3ம் 12ஆம் நூற்றாண்டு எழுத்தமைதியில் 6ம்9 உள்ளமையால் அவற்றைச் சோழர் காலப் பதிவுகளாகக் கொள்ளலாம். இங்குக் கிடைத்துள்ள துண்டுக் கல்வெட்டுகளும் சோழர்கால எழுத் தமைதியிலேயே உள்ளன.

நெடுங்களம்

இவ்வளாகத்துள்ள காலத்தால் முற்பட்ட பல்லவர், பாண்டியர் கல்வெட்டுகளிலும் முற்சோழ அரசர்களான முதலாம் ஆதித்தர், முதலாம் பராந்தகர் கல்வெட்டுகளிலும் நெடுங்களம் எந்த நாட்டுப்பிரிவின் கீழிருந்தது எனும் குறிப்பில்லை. முதலாம் ராஜராஜர் காலத்ததாகக் கருதப்படும் ராஜகேசரியின் 3ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டே இவ்வூர் கவிரநாட்டின் கீழிருந்த தகவலைத் தருகிறது. இங்குள்ள பிற முதலாம் ராஜராஜரின் கல்வெட்டுகளில் இந்நிலை தொடர, முதலாம் ராஜேந்திரரின் கல்வெட்டு, இவ்வூர் பாண்டிகுலாசனி வளநாட்டில் இணைந்திருந்த வடகவிரநாட்டின் உட்பிரிவாக விளங்கியமையை வெளிப்படுத்துகிறது. பாண்டியர் ஆட்சியில் பாண்டிகுலபதி என மாறிய வளநாட்டின் பெயர் விஜயநகர அரசர்கள் காலத்தில் மீண்டும் பாண்டிகுலாசனியானது. 16ஆம் நூற்றாண்டுவரை இவ்வமைப்புத் தொடர்ந்தமை இம்மடித் தம்மையதேவ மகாராயர் கல்வெட்டால் தெரியவருகிறது.

முதலாம் ஆதித்தர், முதலாம் பராந்தகர் கல்வெட்டுகள் நெடுங்களத்தில் சபை இருந்தமை சுட்ட, மன்னர் பெயரற்ற முற்சோழர் கல்வெட்டும் முதலாம் ராஜராஜர் கல்வெட்டுகள் இரண்டும் நெடுங்களத்தில் சபையும் ஊரும் இணைந்திருந்த காட்சியைத் தருகின்றன. முதலாம் ராஜராஜரின் வேறு இரு கல்வெட்டுகள் நெடுங்களத்தைக் கவிரநாட்டுப் பெருமானார் தேவதானமாகச் சுட்ட, மூன்றாம் ராஜராஜரின் இரண்டு கல்வெட்டுகளுள் ஒன்று, நெடுங்களத்தை, வடகவிர நாட்டு பிரமதேயம் நெடுங்களமான தியாகவல்லிச் சதுர்வேதிமங்கலம் என்கிறது. தியாகவல்லி முதலாம் குலோத்துங்கரின் தேவி என்பதால் நெடுங்களம் அம்மன்னரின் காலத்தில் அப்பெயரேற்றதாகக் கொள்ளலாம். பிற்பாண்டியர், விஜயநகர அரசர்களின் கல்வெட்டுகளில் இப்பெயர் வழங்காமையின் 12ம் நூற்றாண்டளவில் நெடுங்களம் பிரமதேயத் தகுதியிழந்து ஊராகவே விளங்கியதாகக் கொள்ளலாம். பிற்காலக் கல்வெட்டுகளில் நிழலார் சோலைவனம் எனக் கொண்டாடப்படும் நெடுங்களம், ஒரு கல்வெட்டில், தட்சிண கயிலாயமான நிழலார் சோலைவனமாகவும் சுட்டப்படுகிறது.

வளநாடு, நாடு

நெடுங்களம் கல்வெட்டுகளால், அவ்வூர் இணைந்திருந்த நாடு, வளநாட்டுப் பிரிவுகள் கிடைக்குமாறு போலவே கொடையாளர்களின் வாழிடங்களாகப் பல நாடுகளின் பெயர்களும் அவை இணைந்திருந்த ஜயசிங்ககுலகால வளநாடு, ராஜேந்திர சோழ வளநாடு முதலிய வளநாட்டுப் பெயர்களும் தெரியவருகின்றன. ஒரு கல்வெட்டுப் பாண்டிமண்டலத்தைச் சுட்டுகிறது.

கிளியூர், புறக்கிளியூர், எயில், மீசெங்கிளி, விளா, தேவூர், வடபுறையூர் முதலிய நாடுகளின் பெயர்களும் முத்தூற்றுக்கூற்றம், ஆர்வலக்கூற்றம் ஆகிய கூற்றங்களின் பெயர்களும் நெடுங்களம் கல்வெட்டுகளில் பதிவாகியுள்ளன.

ஊர்கள்

நெடுங்களம் கல்வெட்டுகளால் அக்கோயிலுடன் ஏதோ ஒரு வகையில் தொடர்பிலிருந்த 65 ஊர்களின் பெயர்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. அவற்றுள் ஊர் என்ற பின்னொட்டுடன் 20 ஊர்களும் (பூதலூர், அடைஞ்சியூர், இரிஞியூர், மணலூர், கிளியூர், பெரும்புலியூர், சிற்றுகவூர், அரியலூர், மருதூர், கருப்பூர், புத்தாம்பூர், பெருமருதூர், ஊற்றத்தூர், புதுவூர், சூரலூர், மாத்தூர், கீரனூர், கருவூர், கள்ளூர், பாலவாயற்றூர்) குடி எனும் பின்னொட்டுடன் 16 ஊர்களும் (கள்ளிக்குடி, சாயக்குடி, இடைக்குடி, கடையக்குடி, செயந்தக்குடி, பழங்குடி, பணைக்குடி, வளம்பக்குடி, கண் ணங்குடி, நாகன்குடி, வடபுறக்குடி, வடவாலங்குடி, கொற்றத்தக் டி, ஏனத்தன்குடி, பெரியந்தைக்குடி, உழுதிறுக்குடி) உள்ளன. ஊர் என முடியும் பெயர்களுள் நான்கெழுத்து ஊர்ப்பெயர்களே அதிக அளவில் (10) உள்ளன. ஏழு எழுத்துகளில் இரு ஊர்ப் பெயர்களமைய, ஏனையன ஐந்தல்லது ஆறெழுத்துப் பெயர்களாக உள்ளன. வடபுறக்குடி பின்னாளில் வீரமரசநல்லூர் எனும் பெயரேற்க, கடையக்குடி கம்பரசநல்லூராகப் பெயர் மாறி நெடுங் களத்திற்கான கொடையூரானது.

பிராமணர் குடியிருப்புகளாகக் கெயமாணிக்கச் சதுர்வேதி மங்கலம், திருநாராயண சதுர்வேதிமங்கலம், வெண்ணெய்மங்க லம், குமாரமங்கலம், கிளிமதிமங்கலம் ஆகியன அமைய, வணிகக் குடியிருப்புகளாகப் புரம் என்ற பின்னொட்டுடன் வீரராசேந்திர சோழபுரமும் தாடனபுரமும் வீரதொங்கபுரமும் விளங்கின. நல் லூர் என்னும் பின்னொட்டுடன் விக்ரமாபரணநல்லூர், நித்த மணவாளநல்லூர், வானவன்மாதேவிநல்லூர், வீரமரசநல்லூர், கம்பரசநல்லூர், நித்தமணநல்லூர் ஆகியன அமைந்தன. அவற் றுள், நித்தமணவாளநல்லூர் மாங்கானமாக இருந்து பெயர் மாற, நித்தமணநல்லூர் தாடன்பாடியாக விளங்கிப் பெயர் மாற்றம் கொண்டது. தொடக்கத்தில் வடபுறக்குடி, கடையக்குடி என் றழைக்கப்பட்ட சிற்றூர்கள் பின்னாளில் முறையே வீரமரசநல்லூ ராகவும் கம்பரசநல்லூராகவும் பெயர் மாறின.

பல்வேறு பின்னொட்டுகள் கொண்ட ஊர்ப்பெயர்களாகத் திருநெல்வேலி, திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, திருவெண் காடு, திருவானைக்கா, தீயநேரி, முட்டபாடி, புதுவயல், வங்காரம், களரிக்குறிச்சி, நுணாங்குறிச்சி, மேலைக்குறிச்சி, அட்டுப்பள்ளி நியமம், குழித்தண்டலை, முழுக்குடிப்பாலை என்பன அமைந்தன. அவற்றுள் வங்காரம் தேவராயனேரியாகவும் அறியப்பட்டது. குழித் தண்டலை தற்போது குளித்தலையாகப் பெயர் மாறியுள்ளது.

அரசாணைகள்

நெடுங்களம் கோயில் இறைவனின் நிவந்தங்களுக்காக மூன் றாம் குலோத்துங்கர் பொ.கா. 1183இல் கள்ளிக்குடியில் 13 வேலி 3 மா அரைக்காணி நிலத்தை ஊர்நத்தம் உட்பட அளித்தார். அது போலவே மற்றோர் ஊரிலும் ஊர்நத்தம், ஐயன் - பிடாரி கோயில்கள், குளம், தோட்டம் உட்பட 14 வேலி நிலம் அரசரால் கோயிலுக்கு அளிக்கப்பட்டது. இவ்வாணையை எழுதிய திருமந்திரஓலை அலுவலர்களாகத் தியாகவிநோத மூவேந்த வேளாரும் வாணாதராயரும் கையெழுத்திட்டுள்ளனர். அதைச் செயற்படுத்திய புரவுவரிக்கூறு அலுவலராக வயிராதராயர் அறியப்படுகிறார்.

கோயில் தேவகன்மிகள், மாகேசுவரக் கண்காணிகள், ஸ்ரீகாரியம் செய்வார் ஆகியோருக்கு மூன்றாம் குலோத்துங்கர் அனுப்பிய திருமுகத்தில், நெடுங்களம் இறைவனுக்கான நித்தநிவந்தங்களுக்காகக் கிளியூர்நாட்டுப் பணைக்குடியில் பத்தேகால்வேலி ஒன்றரைக்காணி நிலத்தை இறையிலித் தேவதானமாக அளிப்பதாக அறிவிப்பிருந்தது. இந்த அரசாணையை எழுதிய திருமந்திர ஓலைநாயகமாக ராஜநாராயண வேளானும் அதில் கையெழுத்திட்டவர்களாகக் களப்பாளராயன், விழிஞத்தரையன், வாணாதராயன் ஆகியோரும் வெளிப்படுகின்றனர்.

நெடுங்களம் கோயிலில் சொன்னவண்ணம் செய்வாரின் மகன் கல்தச்சர் தம்பிக்குநல்லார் பல திருப்பணிகள் செய்தும் நடுவிற் குமிழி அமைத்தும் சிறப்பாகப் பணியாற்றியதைப் பாராட்டி பூபதிஉடையாரின் மகனான வீரராயணஉடையார் பொ. கா. 1412இல் அவருக்கு நிலமளித்ததுடன், திருநட்டப்பெருமாள் திருவீதியின் வடசிறகில் திருநாமத்துக்காணியாக ஒரு மனையும் வழங்கிக் கோயில் பரிகலத்தாரில் அவரும் ஒருவராக வாழச் செய்தார்.

வரிகள்

நிலத்தின் மீதான முதன்மை வரியாகக் கடமை அமைந்தது. இது சில ஊர்களில் தலைக்கடமை என்றும் அழைக்கப்பட்டது. உழுகுடிகள் செலுத்திய வரி, குடிமை எனும் பெயரில் பெறப்பட்டது. அந்தராயம், சில்வரி, புறவெட்டி உள்ளிட்டன அரசாயங்களாகவும் தருவெல்லை, தள்ளுக்கடைஇறை, தட்டார்ப்பாட்டம், ஈழம்புன்செய், கூலவரி உள்ளிட்டன ஆயங்களாகவும் அமைந்தன. மகன்மை என்ற பெயரில் ஊர்மகன்மை, புஞ்சைமகன்மை ஆகியன தண்டப்பெற்றன. சிறுகுடி என்ற பெயரிலும் ஒரு வரி பெறப்பட்டது. பொதுவாகச் சோழர்காலக் கல்வெட்டுகளில் சுட்டப்பெறும் வெட்டி, வேதினை, எச்சோறு முதலிய வரியினங்களை நெடுங்களம் கல்வெட்டுகளில் காணக்கூடவில்லை.

அளவைகள்

நெடுங்களம் பகுதியில் நிலமளக்கப் பயன்பட்ட கோல்களாகக் குகைக்கோல், செவ்வைக்கோல் ஆகியன பயன்பாட்டில் இருந்தன. முகத்தலளவைகளாக நாராயநாழி, கிள்ளிக்குடித்தேவர் சூலக்கால், கோதுகுலவன் மரக்கால், நித்தமணவாளன் மரக்கால் ஆகியனவும் பொன்னை நிறுக்கப் பாடிக்கல்லும் பயன்பட்டன. வழக்கிலிருந்த காசு அன்றாடு நற்காசு என்றும் ராசிப்பணம் என்றும் வழங்கப்பட, ஒரு கல்வெட்டு ஈழக்காசைக் குறிக்கிறது. பொதுவாகக் கல்வெட்டுகளில் நெல்லையளக்கப் பயன்பட்ட அளவைகளாகக் குறிக்கப்பெறும் குறுணி, தூணி, பதக்கு, கலம் என்பனவும் திரவங்களை அளக்க வழக்கிலிருந்த நாழி, ஆழாக்கு, உழக்கு என்பனவும் நெடுங்களக் கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளன. தூணி கொள்ளிக் குடம், இரு தூணி கொள்ளும் குடம் எனும் சொல்லாட்சிகள் கொள்ளும் அளவிற்கேற்பப் பாத்திரங்கள் அமைந்த வகைமை சுட்டுகின்றன.

வேளாண்மை

காவிரிப் பாய்ச்சலில் நெடுங்கள நிலங்களும் கோயிலுக்கு வழங்கப்பட்ட நிலத்துண்டுகள் இருந்த ஊர்களும் வளமான விளைச்சலைப் பெற்றன. பெறும் பாசனத்திற்கேற்ப நீர்நிலம், நன்செய், புன்செய் என நிலங்கள் பகுக்கப்பட்டிருந்தன. விளைந்தறியா நிலங்கள் களர், திடல் எனப்பட்டன. இத்தகு வளமற்ற நிலங்கள் கொடையாளர்களால் விலைக்குப் பெறப்பட்டுப் பண்படுத்தப்பட்டு வயக்கல் அல்லது மயக்கல் என்ற பின்னொட்டுடன் இறைக்கோயில் செயற்பாடுகளுக்கு வழங்கப்பட்டன.

முத்தி வயக்கல், குவாவன் வயக்கல், குஞ்சிரமலி வயக்கல், காடன் வயக்கல், கண்ணபிரான் வயக்கல், கணவதி வயக்கல், பரதன் வயக்கல், ஒலோகவிடங்கன் வயக்கல், குடிதாங்கி வயக்கல், கூத்தன் மயக்கல், மாதேவன் மயக்கல், அரையன் மயக்கல், நாகன் மசக்கல் எனும் நிலத்துண்டுகளைக் கோயில் பெற்றிருந்தது. அறக் கட்டளைகளுக்காக வழங்கப்பட்ட நிலங்கள் திருமஞ்சணப்புறம், திருவிழாப்புறம், நந்தவனப்புறம், திருவிளக்குப்புறம் என அவ்வச் செயற்பாடுகளின் பெயர்களைக் கொண்டன. அம்பலச்செய் எனும் தொடர் நெடுங்களத்தில் அம்பலம் இருந்தமை உணர்த்தும். தனியர் நிலங்கள் அவரவர் பெயரேற்க, முடுக்குச்செய், வேலஞ்செய், தன்மம் எனும் நிலம், காடருப்பற்று என்றும் சில நிலத்துண்டுகளை அழைத்தனர். பாண்டியர்பகுதிக் கல்வெட்டுகளில் பரவலாகக் காணப்படும் குடிக்காடு என்ற பின்னொட்டுடனும் சில நிலத்துண்டுகள் விளங்கியமையை ஒப்பிலாமுலை நாச்சியார் குடிக்காடு, சிங்காண்டான் குடிக்காடு எனும் பெயர்கள் உணர்த்துகின்றன.

காவிரியிலிருந்து பெருவாய்க்கால்கள் நெடுங்களத்திற்கும் அதைச் சுற்றியிருந்த ஊர்களுக்கும் நீரளித்தமையைத் தென்னாற்று வாய்க்கால், தென்னாற்றிலிருந்து கிள்ளிவயலுக்குப் பாய்ந்த குமிழியாறு, தென்னாற்றிலிருந்து வானவன்பேரையர் குளத்துக்கு நீரளித்த வாய்க்கால் எனும் சொல்லாட்சிகள் நிறுவுகின்றன. ஆற்றுக்குலை ஒட்டித் தலைவாய் இருந்தமையை ஆற்றுக்குலைத் தலைவாய் நிலம் எனும் தொடரால் அறியமுடிகிறது. வடக்கோடிய வாய்க்கால், கிழக்கோடிய வாய்க்கால், மேற்கு நோக்கிப் போன வாய்க்கால், களரிக்குறிச்சி மேல் வாய்க்கால், திருவெண்காட்டு வாய்க்கால், கிளிவாய்க்கால், மடக்கு வாய்க்கால், பாசன போக வாய்க்கால் என்பன ஆற்றுநீரைப் பலவூர் வயல்களுக்குப் பகிர்ந்தளித்தன. ஏரி, குளப்பாசனமும் செழித்திருந்தது. ஊர்க்குளம், நம்பன்குளம், திருமூவாணம்குளம், அரையர்குறிச்சிக்குளம், காணற் குளம், வானவன்பேரையர்குளம், புதுவயக்குளம், மேலை ஊருணி, ஊருணிக்குளக்கரை, கிளியூர்வாரி, தீயனேரி என நீர்நிலைகள் பலவாக இருந்தன. நீர்ப்போக்கைக் கட்டுப்படுத்தும் குமிழிகளும் பயன்பாட்டிலிருந்ததை மேலைக்குமிழி, குமிழியாறு உள்ளிட்ட சொல்லாட்சிகள் வழிச் சில கல்வெட்டுகள் உணர்த்துகின்றன.

-வளரும்
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.