![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 164
![]() இதழ் 164 [ மே 2022 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
பத்திமையோடு மக்கள் கூடி வழிபடும் பொது இடமாகப் பொதியில் என்ற பெயருடன் தோன்றிய இறையகம் காலப்போக்கில் வளர்நிலைகளைக் கண்டு அளவிலும் அமைப்பிலும் பெருகிச் சோழர் காலத்தில் மிகப் பெரிய நிறுவனமாக உருவெடுத்தது. அதன் விளைவாகக் கோயில் நடைமுறைகளும் சடங்குகளும் சிறப்பு வழிபாடுகளும் திருவிழாக்களும் பலவாயின. இவை அனைத்திற்குமான பொருட்தேவைகளை அறக்கட்டளைகள் நிறைவுசெய்தன. எளியார் தொடங்கிப் பேரரசர்வரை கணக்கற்ற மக்களின் கருணைப் பார்வையால் கோயில் கடமைகள் பெருமையுற நிகழ்ந்தன. தனியாகவும் கூட்டாகவும் கோயில் நிகழ்வுகளுக்குப் பொறுப்பேற்ற பேராளர்கள் பற்றிய தகவல்கள் தமிழ்நாட்டுக் கல்வெட்டுகளில் பரவலாகக் காணப்படுகின்றன. அத்தகு பெருமைக்குரியவர்களுள் ஒருவர்தான் கம்பன் மணியனான விக்கிரமசிங்க மூவேந்தவேளார். சோழப் பேரரசர்களுள், ‘திருமகள் போலப் பெருநிலச் செல்வியும் தமக்கே உரிமைபூண்டமை மனக்கொள’ எனத் தொடங்கும் மெய்க்கீர்த்தியைக் கொண்டவரும் சோழப் பேரரசை நான்கு திசைகளிலும் பெருக்கியவரும் கடாரம் கொண்ட மாவீரர் முதலாம் ராஜேந்திரரின் தந்தையுமான முதலாம் ராஜராஜர் காலத்தில் வாழ்ந்தவர்தான் கம்பன் மணியனான விக்கிரமசிங்க மூவேந்தவேளார். அக்காலத்தே சோழ மண்டலம் பல ஊர்களை உள்ளடக்கிய நாடு அல்லது கூற்றங்களைக் கொண்டிருந்தது. அத்தகு கூற்றங்களுள் ஒன்றான சூரலூர்க் கூற்றத்துச் சூரலூரில்தான் கம்பன் மணியன் வாழ்ந்தார். இன்றைய சிராப்பள்ளி மாவட்டத்தின் அந்தநல்லூர்ப் பிரிவைச் சேர்ந்த பெருகமணியும் அதைச் சுற்றியுள்ள ஊர்களும் இணைந்ததே சூரலூர்க் கூற்றம். அக்கூற்றத்தின் தலைமை ஊராக விளங்கிய சூரலூரின் ஆட்சித்தலைவராக விளங்கிய கம்பன் மணியனைக் கல்வெட்டுகள் சூரலூர்க் கிழவராகப் பெருமைப்படுத்துகின்றன. கோயில்களின்பால் கம்பன் மணியன் கொண்டிருந்த நேயமிகு உறவு இப்பகுதியில் கிடைக்கும் கல்வெட்டுகளால் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சிராப்பள்ளித் தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் துவாக்குடிக்கு அருகிலுள்ள திருநெடுங்களம் கோயில் சம்பந்தரால் பாடப்பெற்றது. அங்குக் காணப்படும் முதலாம் ராஜராஜர் கல்வெட்டுகளுள் சில, சூரலூர்க் கிழவர் கம்பன் மணியனுக்கும் அக்கோயிலுக்குமான இனிய உறவைப் பதிவுசெய்துள்ளன. மன்னரின் 8ஆம் ஆட்சியாண்டில் நெடுங்களத்து சபையாரும் ஊராரும் கோயில் தேவகன்மிகளும் இணைந்து கம்பன் மணியனுக்குக் குடிநீக்காத் தேவதானமாகக் கிள்ளிவயல் பழநிலத்துக்கு வடக்கிலிருந்த நிலத்தை மதுரைப் பெருவழி நீக்கிக் கற்பூரவிலையில் 30 காசுக்கு விற்றனர். கோயில் நிலத்தை நன்கு தெரிந்த தனியாருக்குச் சில நிபந்தனைகளோடு விற்பனை செய்யும்போது தீர்மானிக்கப்படும் குறைந்த விலைத்தொகையே கற்பூரவிலை. விற்பனையான ஆண்டிற்கு அடுத்த ஆண்டு முதல் ஆண்டுதோறும் நிலவிளைவிலிருந்து ஊர்மரக்கால் கோதுகுலவனால் கம்பன் மணியன் கோயிலுக்கு 150 கலம் நெல்லளக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு விற்கப்பட்ட இந்நிலத்திற்குத் தென்னாற்றிலிருந்து கிள்ளிவயலுக்குப் பாய்ந்த குமிழியாறே பாசனமளித்தது. இந்நெல் கொண்டு கோயில் நடைமுறைகள் செவ்வனே நிறைவேற்றப்பட்டன. நெடுங்களம் இறைவன் முன் நந்தாவிளக்கேற்ற இக்கம்பன் மணியன் 90 ஆடுகள் அளித்தமையும் அவற்றைப் பராமரிக்கும் பொறுப்பேற்ற நிச்சல் காரி, காடன்சேனன், மாணி, சூரன்கஸ்யன் ஆகிய இடைப்பெருமக்கள் தலைக்குக் கால் விளக்கிற்கான நெய் அட்டுவதாக உறுதியளித்ததையும் ஒரு கல்வெட்டுப் பகிர, மற்றொன்று, கோயில் திருப்பலியின்போது எழுந்தருளும் கொள்கைத்தேவருக்கு 6 கழஞ்சுப் பொன்னில் அவர் அணிகலன் செய்தளித்ததாகவும் அதுபோழ்து ஒலிக்கச் செம்பாலான மூக்கு மத்தளிகை வழங்கியதாகவும் கூறுகிறது. திருப்பணியாளர்களால் துண்டுகளாகச் சிதறடிக்கப்பட்டுள்ள பிறிதொரு கல்வெட்டு சித்திரைத் திங்களில் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்த கம்பன் மணியன் தம் பிறந்தநாளை இக்கோயிலில் சித்திரைத் திருவிழாவாக ஆண்டுதோறும் சிறப்புற நிகழ்த்தவும் அது போழ்து நெடுங்களம் இறைவனுக்குச் சிறப்பு வழிபாடு, படையல் அளிக்கவும் பொற்கொடையளித்த தகவலைத் தெரிவிக்கிறது. இவரே இறைவனுக்குப் பொன்னாலான பட்டம் இரண்டும் பூக்கள் மூன்றும் வழங்கியதை மற்றொரு கல்வெட்டால் அறியமுடிகிறது. சிராப்பள்ளிக் குன்றிலுள்ள இறைவன் நிகழ்விலும் கம்பன் மணியனின் பங்களிப்பிருந்தது. இராஜராஜரின் 16ஆம் ஆட்சியாண்டில் சிராப்பள்ளிக் கோயில் ஆட்சியாளர்களும் சிற்றம்பர் ஊராரும் இணைந்து இறைவன் தேவதானமான விளத்தூர் நாட்டு ஆலங்குடியில் உத்தமசோழப் பேராற்றுக்குக் கிழக்கில் களரும் திடலுமாய் இருந்த இரண்டு வேலி நிலத்தைக் கம்பன் மணியனுக்கு விற்றனர். விளையாதிருந்த அந்நிலத்தை உழைத்துப் பண்படுத்திய மணியன் அதன் விளைச்சலைச் சித்திரைத் திருவிழா நிகழ்ந்த ஒன்பது நாட்களிலும் பிராமணர், சிவயோகிகள், தவசியர் உணவருந்த வழங்கி மகிழ்ந்தார். இக்கல்வெட்டுக் குறிப்பிடும் உத்தமசோழப் பேராறு காவிரியாகும். சூரலூர்க் கிழவர் கம்பன் மணியனான விக்கிரமசிங்க மூவேந்தவேளாரைப் போல் கல்வெட்டுகளுக்குள் கரைந்து கிடக்கும் நல்லுள்ள வள்ளல்கள் பலராவர். கோயில்களை நோக்கிய அவர்தம் விழுமிய கொடைகளால் கோயில் பணியாளர்களும் கோயிலைச் சார்ந்திருந்த துறவிகளும் அவ்வூர் வாழ் மக்களும் பயனடைந்தனர். |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |