http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[177 Issues]
[1753 Articles]
Home About US Temples Facebook
Issue No. 171

இதழ் 171
[ செப்டம்பர் 2023 ]


இந்த இதழில்..
In this Issue..

எங்கள் நெஞ்சில் நிறைந்த வேணிதேவி
MUSICAL INSTRUMENTS OF THE ANCIENT TAMILS: PART II- ‘THUDI’
MUSICAL INSTRUMENTS OF THE ANCIENT TAMILS : PART I- AN INTRODUCTION
இராஜராஜீசுவரத்தின் 82 நந்தாவிளக்குகள் - 2
சோழர் கால ஊரார்
ஜப்பானியப் பழங்குறுநூறு - 46 (காதலுக்கு ஏது சுக்கான்?)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 45 (வெறுமை இறப்புதான் முடிவோ?)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 44 (காதல்வலி விதைக்கும் வெறுப்பு)
ஜப்பானியப் பழங்குறுநூறு - 43 (தேடலும் மறத்தலும்)
இதழ் எண். 171 > கலைக்கோவன் பக்கம்
எங்கள் நெஞ்சில் நிறைந்த வேணிதேவி
இரா. கலைக்கோவன்

என் முதல் மாணவியாக 1985இல் முள்ளிக்கரும்பூரை ஆய்வு செய்ய வந்த திருமதி வாணி செங்குட்டுவனே வேணிதேவியை எனக்கு அறிமுகப்படுத்தியவர். 'தட்டுங்கள் திறக்கப்படும்' என்ற உரைக்காக, சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி வரலாற்றுத்துறைக்கு என்னை முதன்முதல் அழைத்தவரும் வாணியே. அங்குதான் வேணிதேவியைச் சந்திக்கும் வாய்ப்பமைந்தது. வாணியின் பேராசிரியர்களுள் ஒருவராக அமைந்த வேணிதேவி, சிராப்பள்ளிக் குறிஞ்சித் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை நிகழ்த்திய கருத்தரங்கில் என் உரையைக் கேட்டதாகவும் கோச்செங்கணானின் மாடக்கோயில்கள் பற்றிய அவ்வுரை தம்மைக் கவர்ந்ததாகவும் கூறித் தமக்குக் கோயில்கள் பால் இருந்த நெருக்கத்தை வெளிப்படுத்தினார்.

அவர்கள் துறையில் நிகழ்த்தவிருந்த சுற்றுலாத் தொடர்பான கருத்தரங்கு குறித்து விவாதிக்க அவரும் பேராசிரியர் கீதாவும் ஒரு முறை மருத்துவமனைக்கு வந்திருந்தனர். அப்போதுதான் இருவருடனும் வரலாறு குறித்து விரிவாகப் பேசும் வாய்ப்பமைந்தது. வரலாற்றிலும் மாணவர்களிடத்தும் இருவருக்கும் இருந்த உண்மையான ஈடுபாடும் அவர்தம் இணக்கமான அணுகுமுறையும் மகிழ்வளித்ததால், மருத்துவமனையில் கூட்டம் இருந்தபோதும் வாய்ப்பமைந்த போதெல்லாம் கருத்தரங்கம் குறித்துக் கலந்துரையாடிப் பயனுள்ள நிகழ்நிரலை உருவாக்கத் துணைநின்றேன். கருத்தரங்கில் நானும் பங்கேற்க வேண்டுமென அவர்கள் விரும்பியதால் உரிய தலைப்பொன்றைத் தேர்ந்து பேசினேன்.

சிராப்பள்ளி வானொலியில் நான் அமைத்த உரைச்சித்திர நிகழ்ச்சி ஒன்றில் வாணியுடன் அவரும் பங்கேற்றார். அதற்கான ஒத்திகைகளின்போதே வேணியின் தமிழ்ப்பற்றையும் தமிழ் இலக் கியங்களைப் பற்றிய அவரது கண்ணோட்டத்தையும் அறிய முடிந்தது. பிறப்பால் கேரளராக இருந்தபோதும் தமிழின்பால் அவர் கொண்டிருந்த காதலும் தம் மொழிவளத்தைப் பெருக்கிக் கொள்ள அவர் மேற்கொண்ட முயற்சிகளும் பல தமிழ்ப் பேராசிரியர்களிடத்தும்கூட நான் காணாதவை.

வேணிதேவியும் அவர்கள் துறை சார்ந்த மற்றொரு பேராசிரியர் முனைவர் அமிர்தவர்ஷினியும் என்னைச் சந்தித்தபோது, வரலாறு தொடர்பான பொழிவுகளைச் சிராப்பள்ளியில் அமைப் பது வரலாற்றுப் பேராசிரியர்களுக்குத் தொடர்கல்வி ஊட்டுமாறு அமையும் என்று தெரிவித்ததுடன், அதற்கான முயற்சியை டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம் மேற் கொள்ளுமானால், தாங்கள் துணைநிற்பதாகவும் கூறினர். அவர் கள் ஆர்வத்தை மதித்து வரலாறு, தமிழ் சார்ந்த திங்கட்பொழிவுகளை 1989இல் தொடங்கினேன். காவல்துறைத் துணைத்தலைவர் திரு. சு. குமாரசாமி நிகழ்ச்சியைத் தொடங்கிவைக்க அறிஞர் கூ. ரா. சீனிவாசன் தூண்கள் பற்றி முதல் உரை நிகழ்த்தினார்.

மிகச் சிறப்பாகத் தொடங்கிய அந்நிகழ்வில் 'இப்படி ஒரு தொடர் வேண்டும்' எனக் கேட்ட வேணியும் அமிர்தவர்ஷினியும் கலந்துகொள்ளாமை என்னை வருத்தியது. தொடர்ந்து நிகழ்ந்த சில கூட்டங்களுக்கும் அவர்கள் வரவில்லை. ஆனால், அவர்களால் சிராப்பள்ளி வாழ் வரலாற்றார்வலர்கள் தொடர்ந்து மூன்றாண்டுகள் சிறந்த பொழிவுகள் பலவற்றைக் கேட்கும் வாய்ப்புப் பெற்றார்கள். எங்களுக்கும் பல அறிஞர்களுடன் பழகவும் வரலாற்று நேயர்களை அடையாளம் காணவும் வாய்ப்பானது. அந்த வகையில் பேராசிரியர்கள் வேணிதேவி, வர்ஷினி இருவருக்கும் நாங்கள் கடப்பாடுடையவர்களானோம்.

இந்த வரலாற்றுப் பொழிவுகளே இரண்டாண்டுக் காலக் கோயிற்கலைப் பட்டயப் படிப்பு எங்கள் மையத்தில் உருவாகக் காரணமாயின. 1986இல் எறும்பியூர் ஆய்விற்காக மையத்திற்கு வந்த சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி மாணவி மு. நளினி 1990இல் முதுநிறைஞர், கல்வெட்டியல்-தொல்லியல் சான்றிதழ் படிப்பு முடித்து வந்தமையால் அவருக்கு வாய்ப்பளிக்குமாறு பட்டயக் கல்வித் திட்டம் அமைந்தது. நளினி ஆசிரியராக அமைந்த இப் படிப்பில் அவரது ஆசிரியரான வேணிதேவி மாணவராக இணைந்தார். பட்டயக்கல்வி வகுப்புகளே வேணிதேவியைப் புரிந்து கொள்ளவும் அவருடன் இணைந்து பல வரலாற்று முயற்சிகளை மேற்கொள்ளவும் துணைநின்றன. மாணவியிடம் பயில நேர்ந்த ஆசிரியராக ஒருமுறைகூட அவர் தம்மைக் காட்டிக்கொள்ளவில்லை. ஆசிரியரிடம் பயிலும் மாணவியாகவே பட்டயக்கல்வி முடியும்வரை அவர் இயங்கியமை அவரது பண்பு நலனுக்குச் சான்றாகும்.

பட்டயக்கல்வி பயணங்களின்போதுதான் அவரது அன்பை யும் கல்வெட்டு வாசிப்பில் அவருக்கிருந்த ஈடுபாட்டையும் நன்குணர முடிந்தது. ஜம்பை செல்லும் வழியில் வயல்வெளியில் கிடந்த உரலில் எழுத்துப் பொறிப்புகள் இருப்பதைக் கண்ட நளினி அவற்றைப் படிக்க முனைந்தார். வேணிதேவி உட்பட மாணவர் கள் அனைவரும் அவரைச் சூழ அமர்ந்து கல்வெட்டுப் படிப்பில் ஈடுபட்டனர். நளினி கல்வெட்டைப் படித்து முடித்ததும் வியப் பும் பூரிப்புமாய் அவரைத் தழுவிக்கொண்ட வேணிதேவி உளம் கனியப் பாராட்டிய பாங்கு அவரது பெருந்தன்மையை வெளிப் படுத்தியது. அது போலவே ஜம்பைக் கோயில் வளாகத்திருந்த பெரும் பாறையொன்றில் வெட்டப்பட்டிருந்த கல்வெட்டுகளைப் பாறையின் உயரம், வழித்தடம் பற்றியெல்லாம் கருதாமல் துணிந்து ஏறி நளினி படித்தபோதும் வேணியிடம் அச்சம் கலந்த வியப்பும் பெருமை கலந்த பூரிப்பும் வெளிப்பட்டதைக் காணமுடிந்தது.

ஜம்பைப் பயணத்தின்போது நளினிக்கு நலக்குறைவு ஏற்பட் டது. ஊர்தியில் நளினியைத் தம் பக்கத்தில் அமர்த்திக்கொண்டு ஆதரவாக அணைத்தவாறே ஒரு தாய் மகளைப் பேணுவதைப் போல் அவர் அன்பு காட்டியமை என் உள்ளத்தை நிறைத்தது. வாணி, நளினி, அகிலா மூவருமே அவரது மாணவிகளாக இருந்த போதும் மூவரையும் இதுநாள்வரை அவர் நடத்தும் விதம், அவர்களிடம் காட்டும் இணையற்ற அன்பு, அவர்கள் பணிமீது கொண் டிருக்கும் மதிப்புக் கலந்த நம்பிக்கை இவை அவரைப் பெருமைக் குரிய ஒரு பேராசிரியராக நிலை நிறுத்தியுள்ளன. தம் மாணவி களைப் பற்றிச் சொல்லும்போது, 'என் குழந்தைகள்' என்றுதான் எப்போதுமே அவர் சொல்வது வழக்கம். அது அவர் இதயத்தின் எதிரொலியாகவே இருந்தது.

கோயிற்கலைகளில் அவருக்கு ஏற்பட்ட ஆர்வத்தின் காரணமாகத் தம் துறையில் முதுகலைப் பாடதிட்டத்தில் கல்வெட்டியலையும் கோயிற் கட்டடக்கலையையும் அறிமுகப்படுத்தினார். அவற்றிற்கான பாடத்திட்டங்களை அவரும் பேராசிரியர்கள் கீதா, விஜயா ஆகியோரும் என்னுடன் கலந்துரையாடி அமைத்தனர். கோயிற் கட்டடக்கலைப் பாடத்தை முதல் மூன்றாண்டுகள் நான் எடுப்பதென முடிவானபோது, தாளாளரிடமும் முதல்வரிடமும் சிறப்பு அனுமதி பெற்று மாணவர்களை மையத்திற்கு அழைத்துவந்து கற்குமாறு செய்தார். அந்த மூன்றாண்டுகளும் அவரும் பேராசிரியர் கீதாவும் நாள் தவறாமல் வகுப்புகளுக்கு வந்து மாணவர்களோடு மாணவர்களாய் அமர்ந்து கோயிற்கலை பயின்றமை மறக்கமுடியாத அனுபவமாகும். அந்த மூன்றாண்டுப் பயிற்சி யில் பேராசிரியர் கீதா பெற்ற நம்பிக்கையின் விளைவாய்க் கோயிற்கலை வகுப்பெடுக்கும் பொறுப்பு அவருக்கு மாறியது.

1994இல் இருந்து அத்துறை மாணவியர் தங்கள் முதுகலை ஆய்வேட்டிற்காகத் தொடர்ந்து மையத்துடன் தொடர்பில் இருந்தனர். அதன் காரணமாகச் சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த பெரும்பாலான பழங்கோயில்களை நாங்கள் ஆய்வுசெய்ய முடிந் தது. அந்த ஆய்வுகள் வட்டார வரலாற்றை உருவாக்க உதவிய தோடு நூற்றுக்கணக்கான புதிய கல்வெட்டுகளைக் கண்டறியத் துணைநின்றன. ஆய்வுக்காக வந்த இளம்பிள்ளைகள் ஒரு கோயிலை எப்படி அணுகவேண்டும் என்பதை அறிந்துகொள்ள இவ்வாய்வுகள் உதவினாற் போலவே, சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி வரலாற் றுத்துறையின் பெருமையையும் ஆற்றலையும் தமிழ்நாட்டு மக்கள் அறிந்துகொள்ள வழிவகுத்தன.

தங்கள் கோயில்களை ஆய்வு செய்து வரலாறு தரவேண்டும் எனக் கேட்டுப் பல மடல்கள் அத்துறைக்கு வரத் தொடங்கின. இவை அனைத்திற்கும் வித்திட்ட பெருமை வேணிதேவியையே சேரும். தம்மை முன்னிருத்தாது, மாணவிகள், துறை, கல்லூரி, வரலாறு பெருமையடைய வேண்டும் எனக் கருதிய அந்தப் பெருநோக்கு எத்தனை பேராசிரியர்களுக்கு இருக்கமுடியும்? என்னை அந்தத் துறையின் ஓர் உறுப்பினராகவே நினைத்துக்கொள்ளும் அளவிற்குத் துறைப் பேராசிரியர்கள் அனைவருடனும் இணக்க மான நட்பு வளர அவர் காரணமானார்.

நளினி அக்கல்லூரியில் பணியில் சேர்வதற்கு அவரும் பேராசிரியர் கீதாவும்தான் வழியமைத்தனர். அதன் வழி, துறையில் கல் வெட்டியல் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டது. இளங்கலைப் பாடத்திட்டத்திலும் கல்வெட்டியலை இணைக்க முடிந்தது. நளினியின் களப்பணிகளுக்கு மாணவியர் துணை கிடைத்தது. வரலாற்றை நேசித்த அந்தப் பிள்ளைகளுக்கோ வாழ்க்கையே வரலாறானது. சுமிதா, சாந்தி, சுஜாதா, ஜான்சி, மாலதி, ரங்கநாயகி, நளினி, நாகேசுவரி, பாரதி, முத்துலட்சுமி, லதா, சங்கீதா, நந்தினி, மீனாம்பாள், வித்யா, கீதா, ராதிகா, ஜெயலட்சுமி என நளினியைச் சூழ்ந்து மையத்துடன் நெருங்கி வரலாறு வளர்த்த மாணவியரின் எண்ணிக்கை வளர்ந்தமைக்கும் அவர்கள் வழிக் கோயில்களின் வாழ்க்கை வெளிச்சத்திற்கு வந்தமைக்கும் ஆணிவேராக அமைந்தவர் பேராசிரியர் வேணிதேவி என்றால் அது மிகையாகாது.

பேராசிரியர்கள் வேணியும் கீதாவும் முனைவர்பட்ட ஆய்வு மேற்கொள்ள விரும்பி, அது குறித்துக் கலந்துரையாட வந்த போது அவர்கள் விருப்பத்தைக் கேட்டுத் தலைப்புகள் தேர்ந்து பின் நெறியாளரை முடிவு செய்தோம். வளனார் கல்லூரி வரலாற்றுத்துறைப் பேராசிரியர் முனைவர் ந. அருணாசலம் சிறந்த பண் பாளர். ஆய்வாளர்களை உரிய மரியாதையுடன் நடத்தத் தெரிந்த பெருந்தகை. அவரைத் தொடர்புகொண்டபோது இருவருக்குமே நெறியாளராக இருக்க அவர் இசைந்தார். வேணிதேவி கி. பி. 300க்கும் 600க்கும் இடைப்பட்ட தமிழ்நாட்டு வரலாற்றைத் தலைப்பாகக் கொள்ள, இராஜசிம்மரின் கட்டடக்கலைத் திறம் என்ற தலைப்பை கீதா தேர்ந்தார். தலைப்பை எப்படி அணுகுவது, களப்பயணங்களை எப்படித் திட்டமிடுவது, எத்தகு நூல்களைப் படிப்பது, யாரையெல்லாம் நேர்முகம் காண்பது எனப் பலவாறு சிந்தனைகள் விளைந்தன. பல சந்திப்புகள் நேர்ந்தன. அவற்றின் விளைவாக ஏற்பட்ட புரிதல் எங்களுக்குள் சிறந்த தோழமையை வளர்த்தது.

டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய மும் சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி வரலாற்றுத்துறையும் இணைந்து பல கருத்தரங்கங்களை எதிர்கொள்ளத் தொடங்கின. தமிழ்நாடு, தென்னிந்திய வரலாற்றுப் பேரவைகள், இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சிராப்பள்ளி நாணயவியல் கழகம் - அருங்காட்சியகம், பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் நிகழ்த்திய மாநாடுகள், கருத்தரங்குகள் ஆகியவற்றில் எங்கள் ஆய்வாளர்களால் புதிய தரவுகளுடன் அமைந்த பல அரிய கட்டுரைகள் படிக்கப்பட்டுள்ளன.

வேணிதேவி, கீதா ஆகியோரின் கட்டுரைகள் அவர்தம் முனைவர் பட்ட ஆய்வுத் தலைப்போடு தொடர்புடையனவாக அமையு மாறு பார்த்துக்கொண்டோம். வேணிதேவியின் இடையறாத உழைப்பும் தமிழிலக்கியங்களில் அவருக்கு இயல்பாகவே இருந்த ஈடுபாடும் கீழ்க்கணக்கு நூல்கள், காப்பியங்கள் ஆகியவற்றில் புதைந்திருந்த பல அரிய வரலாற்றுத் தரவுகளைக் கல்வி, கலைச் சொற்கள், அறிவியல், வாழ்வியல் எனும் பல்வேறு தலைப்புகளின் கீழ்த் தொகுத்துக் கட்டுரைகளாக்கத் துணைநின்றன. எது எழுதினாலும் என் பார்வைக்குக் கொணர்ந்து சரிசெய்து கொள்வதை அவர் விரும்பியபோதும் பயிற்சியும் தொடர்ந்து நிகழ்ந்த கருத்துப் பரிமாற்றங்களும் பின்னாட்களில் அத்தேவையைக் குறைத்தன.

இளங்கலை வரலாற்று மாணவிகளுக்குத் தேவையான ஆங்கில மொழிப் பயிற்சி இல்லாமையால் கற்பதிலும் தேர்வுகள் எழுதுவதிலும் அவர்களுக்கு நேரும் இடர்ப்பாடுகளைக் கண்டு வருந்திய வேணிதேவி அவர்களுக்கு எளிமையான முறையில் மொழிப் பயிற்சி அளிக்கக் கருதினார். அது குறித்து என்னுடன் அவர் கலந்துரையாடியபோது, மொழிவளம் மிக்க பேராசிரியர் ஒருவர் அதைச் செய்வதே சரியாகும் என்று எண்ணிய நான், பிஷப் ஈபர் கல்லூரித் தமிழ்த்துறைப் பேராசிரியரும் ஆங்கில மொழியில் இணையற்ற ஆற்றல் பெற்ற வரும் என் இனிய நண்பருமான முனைவர் க. பூரணச்சந்திரனுடன் உரையாடினேன். பொருள் நோக்கற்ற அப்பெருந்தகை தேவையான மாணவர் களுக்கு மையத்தில் வகுப்பெடுக்க இசைந்தார். வார இறுதி நாட்களில் அமைந்த மொழிப்பள்ளி வகுப்புகளில் அவர் பயிற்சி தர, மாணவர்களுடன் நாங்களும் இணைந்து பயிற்சி பெற்றோம். பேராசிரியர்கள் வேணிதேவி, கீதா, நளினி, அகிலா ஆகியோர் உதவியுடன் மாணவர்களின் மொழிப் பயிற்சி சிறக்கத் தொடர்ந் தது.

பூரணச்சந்திரனின் தோழமையான அணுகுமுறை, எளிய முறைப் பயிற்சிகள் காரணமாக மாணவர்களின் மொழி நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டது. ஏறத்தாழ இரண்டாண்டுகள் தொடர்ந்த இந்த வகுப்புகள் மைய ஆய்வர்களுக்கும் பயனுடையதாக அமைந் தது. எந்த எதிர்பார்ப்பும் இன்றித் தம் மாணவியரின் வாழ்க்கை நலம் மட்டுமே நோக்கமாய் வேணி தேவி மேற்கொண்ட இந்த மொழிப் பயிற்சி முயற்சி அவர் மீது எனக்கிருந்த மதிப்பைப் பன்மடங்காக உயர்த்தியது. ஊதியமாக எங்கள் அன்பையும் மாணவியரின் நன்றியையும் தவிர வேறேதும் பெறாது தம் வார இறுதி நாட்களை இரண்டாண்டுக் காலத்திற்கு இளையோர் மொழிநலம் வளர்க்க வழங்கிய பூரணச்சந்திரன் வாழும் அளவும் நினைக்கத்தக்க பெருந்தகையாவார்.

சிராப்பள்ளியின் தொல்லியல் சார்ந்த அனைத்து அமைப்புகளுடனும் இணைவு கொள்வது வரலாற்றுத்துறையின் பன்முகப் பணிகளைச் செழிக்கச் செய்யும் என்ற என் கருத்தை ஏற்ற பேரா சிரியர் வேணிதேவி, தமிழ்நாடு தொல்லியல்துறை பதிவு அலுவலர் திரு. கி. ஸ்ரீதரன், சிராப்பள்ளி அருங்காட்சியகக் காப்பாட்சியர் திரு. ப. இராஜமோகன், சிராப்பள்ளி நாணயவியல் கழகப் பொறுப்பாளர் திரு. மு. ம. கோபாலன் ஆகியோரைக் கல்லூரிக்கழைத்து மாணவியரின் ஆய்வுகளுக்கு அவர் தம் வழிகாட்டலையும் ஒத் துழைப்பையும் வேண்டினார். அந்தக் கூட்டத்தில் நானும் பங்கேற்றேன். வரலாற்றை வளப்படுத்த அமைப்புகளின் இணைவான உழைப்புப் பெரும் பயன் நல்கும் என்ற நோக்கில் அவர் வைத்த வேண்டுகோளை அனைத்து நண்பர்களும் ஏற்றனர்.

அதன் விளைவாக வரலாற்றுத்துறை மாணவியர் தொல்லியல் சார்ந்த பல துறைகளில் பயிற்சி பெற்றதுடன் அவ்வமைப்புகளின் கருத்தரங்குகளில் உரிமையோடு பங்களிப்புச் செய்யவும் முடிந்தது. பல கோயில்கள் ஸ்ரீதரனின் துறைசார்ந்த உதவியோடு மாணவிகளால் உழவாரப்பணிக்கு உட்படுத்தப்பட்டன. கல்லூரி எதிர்கொள்ளவிருந்த நிறுவனரின் நூற்றாண்டு விழாவை முன் னிட்டு வரலாற்றுத்துறை ஓர் அருங்காட்சியகம் அமைப்பது பயனுடையதாக இருக்கும் என்ற என் கருத்தை ஆர்வத்தோடு வரவேற்ற வேணிதேவிக்கு அதைச் செயற்படுத்த பேராசிரியர்கள் கீதா, நளினி ஆகியோரும் திருவாளர்கள் கோபாலன், அப்துல்மஜீது, ஸ்ரீதரன், மனோகரன் ஆகியோரும் துணைநின்றனர். மாணவியருக்கும் துறைக்கும் கல்லூரிக்கும் சிறப்புச் சேர்க்கும் எதுவாயினும் அதை முன்னின்று மேற்கொள்வதில் வேணிதேவி எப்போதுமே தயங்கியதில்லை.

அதன் விளைவாகத் தேசிய மதிப்பீட்டுக் குழு அவர்கள் கல்லூரிக்கு 1999இல் வருகை தந்தபோது கல்லூரியின் மிகச் சிறந்த துறையாக வரலாற்றுத்துறையைத் தேர்ந்து சிறப்பிக்கும் பேறு அமைந்தது. துறை மாணவியரின் கோயிற்கலை சார்ந்த கண்டு பிடிப்புகள் நாளிதழ்களில் வெளியாகித் தொகுக்கப்பட்டிருந்தமை மதிப்பீட்டுக் குழுவினரை வியப்பிலாழ்த்தியதுடன், அவர் தம் கருத்தரங்கப் பங்கேற்புகளும் வெளியீடுகளும் துறைசார்ந்த மதிப்பீட்டை உயர்த்தின. துறைக்குப் பல்கலைக்கழக நல்கைக் குழுவின் பெருங்கொடை கிடைக்கும் வாய்ப்பும் அமைந்தது. இணக்கமான தோழமை உயரத்திற்கே கொண்டு செல்லும் என்பதைத் துறையும் மையமும் இணைந்து மேற்கொண்ட முயற்சிகள் உண்மையாக்கின.

முனைவர் பட்ட ஆய்வுகளுக்காக நாங்கள் மேற்கொண்ட களப்பயணங்கள் கணக்கற்றன. தமிழ்நாடு முழுவதும் எங்கள் பார்வை படர்ந்தது. பல்லவர், பாண்டியர், சோழர், முத்தரையர், பழுவேட்டரையர், இருக்குவேளிர், அதியர் என இந்த மண்ணை ஆண்ட அத்தனை மரபுகளின் கலைப்படைப்புகளையும் எங்கள் ஆய்வுகள் தழுவின. பேராசிரியர் கீதாவின் தலைப்புடன் தொடர்புடைய பயணங்களுக்கு வேணிதேவியும், வேணிதேவியின் ஆய்வு எல்லைக்கு உட்பட்ட பகுதிகளுக்கு கீதாவும் இணைந்து துணை நின்றனர். நளினி, அகிலா ஒத்துழைப்புடன் அவர்தம் ஆய்வுகள் செழித்தன. வாய்ப்பமைந்த போதெல்லாம் வாணியும் இலலிதாம்பா ளும் பங்கேற்பர். களங்களை ஆய்வதும் இடைவேளைகளில் அறிந் தவை குறித்துக் கலந்துரையாடுவதும் எங்கள் அணுகுமுறையாக இருந்ததால் ஒருவர் தவறவிட்டதை மற்றவர் கண்ணோட்டத்தில் கொள்வது இயல்பானது.

வயதோ, அனுபவமோ, வகித்த பொறுப்போ கருதப்படாமையால் மிகுந்த நட்புணர்வோடும் புரிதலோடும் எளிதாகக் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வதும் பிழைகளைத் திருத்திக் கொள்வதும் நிகழ்ந்தன. குறிப்பெடுப்பது, வரைதல், ஒளிப்படம் எடுத்தல், கல்வெட்டுப் பாடங்களைப் பதிவுகளோடு சரிபார்த்தல், அரசியல்-சமூகப் பின்னணியோடு கலைப்படைப்புகளை அணுகல் என்பன எளிதாகப் பழக்கத்தில் வந்தன. இவை அனைத்திற்கும் எந்தத் தன் முனைப்பும் இன்றி உடன் நின்ற வேணிதேவியின் பெருந் தன்மை குறிப்பிடத்தக்கது.

பேராசிரியர் வேணிதேவி பணத்தை ஒரு பொருட்டாக என் றுமே கருதியதில்லை. அவரோடு அறிமுகம் மட்டுமே நிகழ்ந்திருந்த காலத்தில் நாங்கள் தொடங்கிய ஆவணம் இதழிற்கு முதல் வாழ் நாள் உறுப்பினராகச் சேர்ந்தவர் அவர்தான். அது போலவே வரலாறு இதழ் தோன்றியபோதும் அவரது கொடையே முதற் கொடை யாக அமைந்தது. முனைவர் பட்ட ஆய்வுகளின்போது அமைந்த பொதுவான சில களப் பயணங்களுக்குக்கூட, பொருள் பொறுப்பினை அவரே ஏற்றார். வரலாறு இதழின் வளமான பயணத்திற்குத் துணைநின்றவர்களில் வேணியே முதன்மையானவர். வரலாறு இதழிற்குப் பொருளாதார முட்டுப்பாடுகள் நேர்ந்த போதெல்லாம் அவற்றை எப்படியோ உணர்ந்து, எவ்வளவு மறுத்தாலும் கேட்காமல் வரலாறு தொடரத் தோள் தந்தவர் வேணி. விளம்பர வருவாய் இல்லாமல் வெளிவந்த சில இதழ்கள் முற்றிலும் அவரு டைய கொடையின் காரணமாகவே மலர்ந்தன. வரலாறு இதழைத் தன் பிள்ளையைப் போலவே நினைத்து அதன் வளர்ச்சியில் மகிழ்வும் பெருமையும் கொண்ட பெருந்தகை அவர். அவரும் வாணி, நளினி, இலலிதாம்பாள் ஆகியோரும் கைகொடுக்காது இருந்திருப்பின் வரலாறு இதழ் தன் வளத்தில் குறைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

முனைவர் பட்ட ஆய்வை எழுதிய காலத்தில்தான் வேணி தேவியின் சிந்தனை ஆற்றலை அறியும் வாய்ப்பமைந்தது. துறைசார்ந்த பலர் தடுத்தும் துணிந்து அவர் தேர்ந்துகொண்ட தலைப்பு அவரது தன்னம்பிக்கையையும் வரலாற்றின் மீது அவருக்கிருந்த உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்தியது. இருண்ட காலம் என வரலாற்றறிஞர்களே ஒதுக்கி வைத்த ஒரு காலகட்டத்தை முழுமையான ஆய்வுக்கு ஏற்பதென்பது எளிதான செயலன்று. தலைப்பை அவர் அறிவித்த போழ்தே மகிழ்ந்து வரவேற்ற நான், இருண்ட அந்தக் காலக்கட்டத்தை வேணி உறுதியாக ஒளிப்படுத்துவார் என்று நம்பினேன். என் எண்ணம் வீண்போகவில்லை. நான் காட்டிய வழிகளிலெல்லாம் தினையளவு தயக்கமும் இன்றிப் பயணப்பட்டார்.

அவர் தலைப்புச் சார்ந்த காலக்கட்டத்தைச் சேர்ந்தனவாகத் தமிழறிஞர்களால் கொள்ளப்பட்டிருந்த அத்தனை இலக்கியங்களையும் பலமுறை படித்தார். சிலப்பதிகாரம், பாரதியைப் போலவே அவர் நெஞ்சையும் அள்ளியது. சிலம்பில் ஈடுபட்ட பிறகு அவர் பார்வை விரிந்தது. வரலாறு பற்றிய அவர் சிந்தனைகளே மாறுபட்டன. இலக்கிய நிழல் வரலாற்றின் வெம்மைக்கு எத்தனை இன்றியமையாதது என்பதை அவர் வெள்ளிடை மலை யாய் உணர்ந்தார். கீழ்க்கணக்கு நூல்கள் அவருக்குப் புதுச் சாளரங்களைத் திறந்தன. நளினியின் துணை அரசியல் வரலாற்றைக் கல்வெட்டுகளின் வழிகாட்டலில் இனங்காண உதவியது.

அவர் கேட்ட என் முதல் உரையில் நான் வெளிப்படுத்தியிருந்த மாடக்கோயில்கள் அவர் காலகட்ட ஆய்வுக்குள் அமைந்தவை என்பதால், அவற்றைப் பற்றிய விரிவான ஆய்வை மேற்கொள்ள விழைந்தவர் அதற்கெனவே பல களப்பயணங்களை மேற்கொண்டார். அப்பயணங்களின்போது எங்களிடை நிகழ்ந்த உரையாடல்கள் வரலாற்றின் பல முகங்களைப் புரிந்துகொள்ள உதவின. சிந்தனைகள் செழுமையடையவும் அணுகுமுறைகள் கூர்மை பெறவும் கருத்துக்கள் விரிவடையவும் எங்களுக்குள் நிகழ்ந்த குழு விவாதங்கள் பேருதவியாய் அமைந்தன. ஆழப்படிப்பவர் என்பதனால் அவரது படிப்பனுபவங்கள் உலகளாவிய வரலாற்றின் நடப்புகளைப் பல்வேறு கண்ணேhட்டங்களில் காண உதவின. அவர் வழி எங்கள் மைய ஆய்வர்களும் அத்தகு பார்வை பெற்றனர்.

இராஜபாளையத்தில் சந்தித்து உரையாடிய மு. கு. ஜகந்நாத ராஜா, கோயிற்பட்டி சங்கரவள்ளிநாயகம் முதலிய அறிஞர்களின் படப்பிடிப்புகள் முற்றிலும் புதியனவாய் அமைந்து மொழி, காலம்சார்ந்த தெளிவை அவருக்கு உண்டாக்கின. அவ்வப்போது எழுதிப் படித்த சிறுசிறு கட்டுரைகள் வெள்ளமாய்ப் பெருகி இயல்களை உருவாக்கக் கைப்பிடித்தன. ஆய்வேட்டின் முதல் இயலை அவர் எழுதிக் கொணர்ந்தபோது அவரது அணுகுமுறையிலும் கண்டு பிடிப்புகளிலும் கருத்துக் கோவையிலும் இருந்த ஒருங்கிணைவு அவரது புதிய பார்வைக்குச் சான்றாகி மகிழ்ச்சிப்படுத்தியது. அவ்வியல் சார்ந்த கலந்துரைக்குப் பின் என் திருத்தங்களை விருப் போடு ஏற்றுக்கொண்டதுடன், நான் திருத்திக் கொடுத்த இயல் தாள்களை இன்றளவும் அவர் போற்றி வைத்துள்ளமை என் மீது அவர் கொண்டிருக்கும் அன்பிற்கும் அளவற்ற மதிப்பிற்கும் காட்டாக அமையும்.

வேணிதேவியின் தோழமையால் அவர் குடும்பமே உறவாகியது. அன்பே உருவான அவரது அன்னை, உடன்பிறப்புகள் என அனைவருமே எங்களிடம் நேயம் கொண்டனர். மாமல்லபுரம், காஞ்சிபுரம் களப்பயணங்களுக்குச் செல்லும்போதெல்லாம் ஒரு முறையாவது அவர்கள் இல்லம் காணாமல் வந்ததில்லை. ஒவ்வொரு முறையும் உளம் நிறைந்த அன்புடன் வரவேற்று அக்கறையோடு சமைத்த உணவை விருந்தாய்ப் படைத்த வேணியின் அன்புத் தாய், அன்னையை இழந்திருந்த எனக்கு என் தாயாகவே காட்சியளித்தார். அதனால்தான், 'மலைக்க வைக்கும் மாடக்கோயில் கள்' நூலை அவருக்குப் படையலாக்கி உளம் நிறைந்தேன்.

வரலாற்றுக்குள் நுழைந்த பிறகு வாழ்க்கை எனக்கு வழங்கிய கொடைகளுள் வேணிதேவியின் குடும்பம் குறிப்பிடத் தக்கது. அவரது உறவுகள் என் உறவுகளாகவே மாறின. ஒரு முறை அவர் தங்கை ராஷ்மி, 'நாம் எப்போதும் இது போலவே அன்பு மணக்க வாழ வேண்டும்' என்று கலங்கிய கண்களோடு கூறியதை என்றும் நினைத்திருப்பேன். எந்த அளவிற்கு எங்களைப் பற்றி வேணி எடுத்துரைத்திருந்தால் அந்த இளம் நெஞ்சம் இத்தகு அன்பை வெளிப்படுத்தியிருக்கும் என்பதை நினைக்கும்போது உள்ளம் கரைவதைத் தடுக்கமுடியவில்லை.

வேணியின் முனைவர் பட்ட வாய்மொழித் தேர்வில் பங்கேற்ற அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அன்று மாலை என்னை இல்லத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தபோது நான் நெகிழ்ந்தேன். ஒரு வழிகாட்டிக்குப் பயணம் செல்பவர்களின் வெற்றியில் பங்கிருக்க முடியாது. நடப்பவர்களின் முயற்சியே பயணங்களை நினைக்கும் இடங்களுக்குக் கொண்டு செலுத்து கிறது. வேணியின் முனைவர் பட்டம் அவர் உழைத்துப் பெற்றது. அதற்கான முழுப் பெருமையும் அவரையே சாரும். அவரது துணிவும் ஆற்றலும் தேடலும் தமிழ்நாட்டு வரலாற்றின் மூன்று நூற்றாண்டுக் கால இருட்டைச் சற்றேனும் வெளிச்சப்படுத்த உதவியதெனில் அது மிகையாகாது. அவரைத் தடுத்தவர்களும் கேலி பேசியவர்களும் அந்த ஆய்வேட்டின் முன் அமைதியானமை வேணியின் உழைப்பிற்குக் கிடைத்த பெருமை.

சாகித்ய அகாதெமி உள்ளிட்ட பெருமைக்குரிய பல நிறுவனங்களோடு இணைந்து அருமையான நிகழ்வுகளை மையமும் அவரது துறையும் கையிணைத்து நடத்தத் துணைநின்ற வேணி தேவி, பணி ஓய்வுக்குப் பிறகும் கல்லூரி, மையம் சார்ந்த நட்புகளைத் தொடர்ந்து பேணிவருவது அவரது உண்மைத் தன்மைக் குச் சான்றாகும். மையத்தின் ஆய்வுநிதிக்காகத் தம் ஓய்வுத் தொகையிலிருந்து பெருமைக்குரிய ஒரு கொடையை வழங்கிய அவரது பேருள்ளம் நினைக்குந்தோறும் நெஞ்சை நிறைக்கும்.











எளிமை, நல்லுறவு, நல்லது எது செய்யினும் பாரட்டும் பண்பு, தாயைப்போல் மாணவியரைத் தழுவிக்கொண்டு மாண்பு, நேரிய எது செய்யவும் தயங்காத துணிவு, துறைக்கெனவே நினைந்து நினைந்து உழைத்த பேராற்றல், பொருளைக் கருதாத சீர்மை இவற்றாலான அன்பின் கனிவாய் எங்கள் நெஞ்சில் நிறைந்திருக்கும் பேராசிரியர் வேணிதேவி 9.5.2023 அன்று அமரரானார். உள்ளம் இருக்கும்வரை உள்ளிருக்கும் தோழமையாய் அவர் நினைவுகள் எங்களை வழிநடத்தும். அவரோடு எங்களுக்கமைந்த நல்லுறவு வரலாற்றை வளப்படுத்தத் துணைநின்றது என்பது எங்கள் பேறு. காலம் அவ்வப்போதேனும் காட்சிப்படுத்தும் அன்பிற் செழித்த இத்தகு நல்லுள்ளங்களே பயணத் தடைகளைத் தகர்த்துச் செல்லும் பேராற்றலைத் தொடர்ந்து எங்களுக்கு வழங்கி வருகின்றன.
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.