http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 171
இதழ் 171 [ செப்டம்பர் 2023 ] இந்த இதழில்.. In this Issue.. |
மூலப்பாடம்: காஞ்சி எழுத்துருக்களில் あはれとも いふべき人は 思ほえで 身のいたづらに なりぬべきかな கனா எழுத்துருக்களில் あはれとも いふべきひとは おもほえで みのいたづらに なりぬべきかな ஆசிரியர் குறிப்பு: பெயர்: இளவரசர் கென்தொக்கு காலம்: கி.பி. 924-972. இவரது இயற்பெயர் கொரேததா. ஃபுஜிவாரா வம்சத்தைச் சேர்ந்தவர். பேரரசர் முராகமியின் வலங்கைப் படைப்பிரிவு அதிகாரியாக இருந்த மொரோசுகேவின் மூத்த மகன். இவரது மகள் பேரரசர் முராகமியின் மகனான பேரரசர் ரெய்ஸெய்யின் அதிகாரபூர்வமற்ற மனைவியாக இருந்தார். பேரரசர் ரெய்ஸெய் தன் தம்பியான என்யூவுக்கு வழிவிட்டு அரசபதவியைத் துறந்தார். பின்னர் என்யூவுக்குப் பிறகு ரெய்ஸெய்யின் மகன் கஸான் அரசரானார். பின்னர் என்யூவின் மகன் இச்சிஜோ சிலகாலம் ஆண்டபின் ரெய்ஸெய்யின் இன்னொரு மகனும் கஸானின் தம்பியுமான சான்ஜோ அரசரானார். இவ்வாறு இரு குடும்பத்தினரும் மாறிமாறிச் சிலகாலம் அரசாண்டார்கள். இவர் திறமையும் அழகும் நிரம்பிய இளவரசராக மட்டுமின்றி இலக்கியவாதியாகவும் திகழ்ந்தார். தனது 26ம் வயதில் கொசென்ஷூ தொகுப்பைத் தொகுத்த புலவர் குழுவின் தலைவராகவும் இருந்தார். இவரது தனிப்பாடல் தொகுப்பு இச்சிஜோ செஷ்ஷோ தொகுதி என அழைக்கப்படுகிறது. இச்சிஜோ செஷ்ஷோ என்றால் முதல்நிலை அதிகாரி என்று பொருள். இது தவிர இவரது 37 பிற பாடல்கள் ஜப்பானிய இலக்கியங்களில் பரவலாக இடம்பெற்றிருக்கிறது. கி.பி 972ல் மரணமடைந்த இவரது உடல் தெனான்ஜி கோயிலில் அடக்கம் செய்யப்பட்டது. இவரது பேரன் யுக்கினாரி பிற்காலத்தில் சிறந்த 3 எழுத்து வரைகலை நிபுணர்களில் (calligraphy masters) ஒருவராகத் திகழ்ந்தார். பாடுபொருள்: கைவிட்ட காதலி திரும்ப வரமாட்டாள் எனத் தனிமையில் ஏங்குதல் பாடலின் பொருள்: பாவம் என்று பரிதாபப்படக்கூட என்னை நேசிக்கும் மனிதர்கள் இல்லை என்பதை அறிவேன். இப்படியே வெறுமையான வாழ்க்கை வாழ்ந்து இறந்து போவதுதான் என் விதி போலும். ஜப்பானிய இலக்கியங்களில் காதலரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு இணையாகக் கைவிடப்பட்ட ஆண்களும் காணப்படுகிறார்கள். நேரடியாகப் பொருள்தரும் எளிமையான இப்பாடல் இவரது சொந்த அனுபவமே என ஷூஇஷூ என்ற தொகுப்பின் 950வது பாடலுக்கு எழுதப்பட்ட முன்னுரை பதிவு செய்திருக்கிறது. இப்பாடலை இயற்றுவதற்கு முன்பு இவர் ஒரு காதல் மன்னராகத் திகழ்ந்திருக்கிறார் என்பதை இவரது தொகுப்பான இச்சிஜோ செஷ்ஷோவில் இடம்பெற்றுள்ள பாடல்கள் உணர்த்துகின்றன. வெண்பா: பிரிந்தவள் மீண்டல் இலமே பரிவாய்த் தெரிந்தவர் சொல்லும் இலமே - பிரிவின் நிலையது நன்றாய் உணர்ந்தே னுறுதியே வெற்றாய் நிகழும் இறப்பு (மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்) இக்கட்டுரை சொல்வனம் இதழில் வெளியானது. |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |