http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 172
இதழ் 172 [ அக்டோபர் 2023 ] இந்த இதழில்.. In this Issue.. |
மூலப்பாடம்: காஞ்சி எழுத்துருக்களில் 八重むぐら しげれる宿の さびしきに 人こそ見えね 秋は来にけり கனா எழுத்துருக்களில் やへむぐら しげれるやどの さびしきに ひとこそみえね あきはきにけり ஆசிரியர் குறிப்பு: பெயர்: மதகுரு யெக்யோ காலம்: கி.பி. 10ம் நூற்றாண்டின் பிற்பகுதி. கி.பி 10ம் நூற்றாண்டில் கோபே அருகில் மதகுருக்களின் ஆசிரியராக இருந்தார் என்பதைத் தவிர இவரைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகள் வரலாற்றில் அவ்வளவாகக் காணப்படவில்லை. இத்தொடரின் 42வது பாடலை இயற்றிய மொதோசுகே, 48வது பாடலை இயற்றிய ஷிகேயுக்கி, 49வது பாடலை இயற்றிய யொஷினோபு ஆகியோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்திருக்கிறார். ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக 56 பாடல்கள் பல்வேறு தொகுப்புகளில் இடம்பெற்றிருக்கின்றன. பாடுபொருள்: தனிமையின் வலியை உணர்த்துதல் பாடலின் பொருள்: களைகள் மண்டத் தொடங்கிப் பாழடைந்து கொண்டிருக்கும் இவ்வரண்மனைக்கு நாளடைவில் மக்கள் வருவதை நிறுத்திக் கொண்டார்கள். ஆனால் நான் எதிர்பார்த்ததைப் போலவே இந்த ஆண்டும் இலையுதிர்காலம் தவறாமல் வந்துவிட்டது. இத்தொடரின் 35வது பாடலில் மனித மனங்கள் வேண்டுமானால் மாறலாம் ஆனால் இயற்கை எப்போதும் மாறுவதே இல்லை என்று பார்த்தோம். அதேபோன்ற கருத்தை உடைய பாடல் இது. ஜப்பானிய இலக்கியங்களில் இலையுதிர்காலம் தனிமையின் குறியீடு என்பதைக் கண்டோம். இப்பாடலில் இலையுதிர்காலம் வந்தது என்பதைத் தனிமை சூழ்ந்தது என்னும் பொருளிலும் பொருத்திப் பார்க்கலாம். இத்தொடரின் 14வது பாடலை இயற்றிய அமைச்சர் தோரு தலைநகர் கியோத்தோவில் கவாராயின் என்றோர் அரண்மனையைக் கட்டினார். வீட்டைச் சுற்றிப் பரந்து விரிந்த தோட்டம் பலரைக் கவர்ந்தது. தோருவுக்குப் பின் அவரது பேரன் அன்போபோஷி காலம் வரை தோருவின் குடும்பம் இங்கே வசித்து வந்தது. அப்போதெல்லாம் பல புலவர்கள் ஒன்றுகூடிக் கவிதைப்போட்டிகள், கவியரங்குகள் நடத்துவதுண்டு. ஆனால் அன்போபோஷிக்குப் பிறகு சீரும் சிறப்பும் குன்றி இந்த நிலைக்கு ஆளாகிவிட்டது. இன்று அது ஓர் அழிவின் அடையாளமாக நின்றுகொண்டிருக்கிறது. வெண்பா: மாற்றம் புகுதலும் சூழ்நிலை மாறலும் ஏற்றம் கருதியே ஆயினும் - ஆற்றல் குறைதலைக் காலம் நடத்திடும் எங்கும் தனிமை தருமே நலிவு (மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்) இக்கட்டுரை சொல்வனம் இதழில் வெளியானது. |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |