http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[189 Issues]
[1849 Articles]
Home About US Temples Facebook
Issue No. 189

இதழ் 189
[ ஆகஸ்ட் 2026 ]


இந்த இதழில்..
In this Issue..

சமய எழுச்சியால் சமூக மறுமலர்ச்சி காட்டிய அப்பர் - 12
உத்தம சோழன் கல்வெட்டுகளின் அடிப்படையில் ஒரு புதிய வரலாற்றுப் பார்வை
பைஞ்ஞீலிப் பதிவுகளில் கோயிலும் மக்களும்
சக்கரபாணி சுவாமி மாடக்கோயில் - 2
ஜப்பானிய ஹைக்கு - தொடக்கமும் தொடர்ச்சியும்
இதழ் எண். 189 > கலையும் ஆய்வும்
சக்கரபாணி சுவாமி மாடக்கோயில் - 2
இரா.கலைக்கோவன், மு.நளினி

விஜயவல்லித் தாயார் மாடக்கோயில்

வெற்றுத்தளத்தின் மீதமைந்த இருதள வேசர விமானம், முகமண்டபம், பெருமண்டபம், முன்மண்டபம் என அமைந்துள்ள தாயார் திருமுன் பழுதுற்ற நிலையில் 1933இல் திருப்பணிக்காளாகியுள்ளது. தற்போதுள்ள முன், பெருமண்டபங்கள் திருப்பணியின்போது அமைந்தவை. விமானமும் முகமண்டபமும் பிற்சோழர் காலத்தவை.



விமானம்

இருதள வேசரமாக உள்ள தாயார் விமானம் கபோதபந்தத் துணைத்தளம், உறுப்பு வேறுபாட்டுடன் இறைவன் விமானம் போலமைந்த தாங்குதளம், வேதிகைத்தொகுதி, சுவரமைப்பு, கூரையுறுப்புகள் பெற்றுத் தெற்கு, வடக்குக் கோட்டங்களில் இறைவித் திருமேனிகளும் மேற்குக் கோட்டத்தில் காளிங்கமர்த் தனரும் கொண்டுள்ளது. துணைத்தளக் கபோதம் மாவிலைத் தோரண அமைப்புக் கொண்டுள்ளது.



பூதச்சிற்பங்கள்

விமானக் கீழ்த்தளச் சாலை முன்னிழுப்பின் துணைத்தளப் பகுதியில் தெற்கு, மேற்கு, வடக்கு முப்புறத்துமுள்ள அகலமான கண்டபாதங்களில் சடைப்பாரத்துடன் பூதச்சிற்பங்கள். தென்புறம் இரண்டு பூதங்கள் மலர்களுடன் விளங்க, வலப்பூதம் அவற்றைப் போற்றும் மெய்ப்பாட்டில். மேற்கில் வலப்புறம் தாளக்கலைஞரும் இடப்புறம் மத்தளக் கலைஞரும் இசையூட்ட நடுவிலுள்ள ஆடல் பூதத்தின் வல முன் கையில் மலர். இட முன் கை நெகிழ்ந்துள்ளது. வலப் பின் கை பதாகமாய் உயர்ந்திருக்க, இடப் பின் கை கடகத்தில். வடக்கில் நடுவிலுள்ள பூதம் கத்தி, கேடயத்துடன் ஆடல் நிகழ்த்த, வலப்பூதம் மத்தளமிசைக்கிறது. இடப்புறம் இடக்கைக் கலைஞர்.



தாங்கு சிற்பங்கள்

வடக்கில் கோட்ட அணைவுத் தூண்களிலும் சுவர்த் திருப்பத் தூண்களிலும் பலகைகள் மீதுள்ள தாவுயாளிகள் வலபி தாங்க, இடைப்பட்ட தூண்களின் பலகைகளில் ஆடற் பெண்களின் சிற்பங்கள். மேற்கில் இவை இல்லாத நிலையில் தெற்கில் கோட்ட அணைவுத் தூண் பலகைகள் மட்டும் தாவுயாளிகள் பெற்றுள்ளன.



கூரை, ஆரம், மேற்றளங்கள்

வலபியில் பூதவரி. கபோதம் மேலோட்டமான கூடுவளைவுகள் கொள்ள, மேலே வேதிகை. கீழ்த்தள ஆரச்சாலைகளிலும் கிரீவகோட்டங்களிலும் கவரிப்பெண்களுடனான தாயாரின் அர்த்தபத்மாசன வடிவங்கள். இரண்டாம் தளம் சாலை முன்தள்ளலுடன் உயரக் குறைவாக அமைய, கூரையில் நாற்புறத்தும் வணங்கிய கருடன். சிகரம் வேசரமாக, மேலே தூபி.

முகமண்டபம்

விமானத்தின் முன்னுள்ள முகமண்டபம் விமானக் கீழ்த்தள அமைப்பில் கோட்டங்களின்றிச் சிறிய அளவினதாக உள்ளது. அதன் சுவர்ப்பகுதியில் வடபுறத்தே மண்டல நிலையில் ஆடல் பெண் ஒருவர் அவிநயம் காட்டுகிறார்.

பெருமண்டபம்

திருப்பணிக்குள்ளான கட்டமைப்பாக விளங்கும் பெருமண்டபம் உறுப்பு வேறுபாடற்ற துணை, தாங்குதளங்களின் மீது இரட்டையாய் அமைந்த நான்கு இணை மெல்லிய அரைத்தூண்கள் தழுவும் சுவருடன் எழுகிறது. தூண்களின் வெட்டுப் போதிகைகள் கூரையுறுப்புகள் தாங்கும் அதன் தென், வடசுவர்களில் சாளரம். கிழக்குச்சுவரிலுள்ள வாயில் சற்றே முன்னிழுக்கப்பட்ட நிலையில் மேற்புறத்தே தாமரையில் அமர்ந்த விஜய வல்லித் தாயாரின் சுதையுருவம் பெற்றுள்ளது. வாயிலின் இரு புறத்துமுள்ள கல்வெட்டுகள், விஜயவல்லித் தாயார் சன்னதி பழுதுபட்டதால் இம்மண்டபம் திருப்பணிக்குள்ளான தகவலைத் தருகின்றன.

மண்டபங்களின் உட்புறம்

பெருமண்டபத்தின் உள்கூரையைப் பின்னாளைய திருப்பணியின் போதமைத்த செவ்வகம், நீள்கட்டு, சதுரம் அமைப்பிலான நான்கு தூண்கள் தாங்க, அவற்றின் மேல் பூமொட்டு நாணுதல்களுடனான பிற்சோழர் காலப் போதிகைகள் இணைக்கப்பட்டுள்ளன. அவற்றின் நடுப்பகுதியில் ஆடற்சிற்பங்கள்.

ஆடற்சிற்பங்கள்

முதற் சிற்பத்தில் இரு கைகளையும் உயர்த்தி மண்டல நிலையில் ஆடும் பெண்ணின் வலப்புறம் தாளக்கலைஞர். இடப்புறமுள்ளவர் உடுக்கை இயக்குகிறார். மற்றொரு சிற்பத்தில் மண்டல நிலையில் இரு கைகளையும் முழங்கால்களில் இருத்தி ஆடும் பெண்ணின் இடப்புற ஆடவர் இடக்கை வாசிக்க, வலப்புறத்தார் கைகளில் தாளங்கள். மூன்றாம் சிற்பத்தில் ஆடற்பெண்ணின் இடக்கை முழங்காலருகே அமைய, வலக்கை உயர்த்திய பதாகமாக உள்ளது. வலப்புற ஆடவர் தாளம் தட்ட, இடப்புறத்தார் ஒரு கையால் உடுக்கையைப் பிடித்தவாறு வலக்கையை உயர்த்தியுள்ளார். நான்காம் சிற்பம் இரு கைகளையும் அர்த்தரேசிதத்தில் வீசி உடலை வல, இடமாகச் சுழற்சியில் திருப்பியுள்ள ஆடற்பெண்ணைப் படம்பிடிக்க, இடப்புறம் இடக்கைக் கலைஞர். வலப்புறம் தாளக்கலைஞர்.













மண்டபத்தின் வடகிழக்கு மூலையிலுள்ள மேடையில் இருத்தப்பட்டிருக்கும் அழகிய சிற்பத்தில் விஷ்வக்சேனர் சுகாசனத்தில் உள்ளார். கிரீடமகுடம், மகரகுண்டலங்கள், சரப்பளி, அரும்புச்சரம் உள்ளிட்ட பல்வேறு அணிகள், பட்டாடை கொண்டிலங்கும் அவரது பின் கைகளில் சங்கு, சக்கரம். வல முன் கை காக்கும் குறிப்புக் காட்ட, இட முன் கை கடகத்தில். அவரது வலப்புறம் காளிங்கநர்த்தனர். இடப்புறம் பாம்பு.

சட்டத்தலை எண்முக அரைத்தூண்களால் அணைக்கப்பட்டுள்ள முகமண்டப வாயில் இரண்டு படிகள் கொண்டுள்ளது. வாயிலின் இருபுறச் சுவர்களிலும் வண்ண ஓவியமாய்க் காவல் காரிகைகள். தூண்களின் பூமொட்டுப் போதிகைகள் கூரையுறுப்புகள் தாங்க, இரு கூடுவளைவுகளுடன் கபோதம். கூடுகளுக்கு இடைப்பட்ட நிலையில் தாயாரின் வடிவம். கபோ தத்திற்கு மேலுள்ள கற்பலகையில் சங்கு, சக்கரம், நாமம்.

முகமண்டப வாயிலின் இருபுறத்துமுள்ள இலட்சுமி நரசிம் மர் சிற்பங்களுள் ஒன்றில் இறைவன் சுகாசனத்திலிருக்க, அவர் இடத்தொடையில் அமர்ந்துள்ள இறைவியின் இடக்கையில் தாமரை. வலக்கை இறைவன் தொடை மேல். இட முன் கையால் தேவியை அணைத்துள்ள நரசிம்மரின் வல முன் கை காக்கும் குறிப்புக் காட்ட, பின் கைகளில் சங்கு, சக்கரம். மற்றொரு சிற்பமும் இதே அமைப்பில் இருந்தபோதும் இறைவி வணங்கிய கைகளுடன் காட்சிதருவது மாறுபட்ட அமைப்பாக உள்ளது.

கருவறையில் உயரமான தளத்தின் மீது தாமரையில் அர்த்த பத்மாசனத்திலுள்ள மூலவர் விஜயவல்லித் தாயாரின் பின் கைகளில் தாமரைகள். கரண்டமகுடம், பனையோலைக் குண்டலங்கள், கழுத்தணி, தோள், கை வளைகள், மார்புக்கச்சு, பட்டாடை அணிந்துள்ள அம்மையின் முன் கைகள் காக்கும், அருட் குறிப்புகளில். அடுத்த நிலையிலுள்ள உற்சவரும் அதே அமைப்பில்.

முன்மண்டபம்

பெருமண்டபத்தின் முன் இருக்குமாறு அது திருப்பணிக்குள்ளான அதே காலத்தில் சற்றே உயரமான கட்டமைப்பாக உருவான புதிய முன்மண்டபம் இரண்டு யானைகள் இழுக்கும் தேர் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் கூரை முகப்பில் இருபுறத்தும் வணங்கிய நிலையில் அர்த்தபத்மாசனத்தில் கருடன். இடைப்பட்ட வளைவில் வானவப் பெண்கள் கவரி வீச, அர்த்தபத்மாசனத்தில் பின் கைகளில் தாமரைகளுடன், முன் கைகள் காக்கும், அருட்குறிப்புகளுடன் சுதையுருவ விஜய வல்லித் தாயார்.

இம்மண்டபக் கூரையை நான்கு வரிசைகளில் வரிசைக்கு நான்காக அமைந்த பேரளவுப் பாம்புப்படம் பெற்ற முச்சதுர, இருகட்டுத் தூண்கள் பெரும்பூமொட்டுப் போதிகைகளால் தாங்குகின்றன. அவற்றுள் சிலவற்றின் கீழ்ச்சதுரங்களில் ஆஞ்ச நேயர், கருடன், தும்புரு உள்ளிட்ட சிற்பங்கள். இரண்டு தூண்களிலுள்ள ஆடவர், பெண் உருவங்கள் இம்மண்டபத் திருப் பணிக்குத் துணை நின்றவர்களாகலாம்.

மண்டபத்தின் வடபுறத் துணைத்தளத்தில் பிற்சோழர் கால ஆடற்சிற்பத்தொகுதி இணைக்கப்பட்டுள்ளது. கேரளத் தெய்யம் ஆடலர்கள் போல் விரிவான தலையலங்காரமும் உடலெங்கும் அணிகலன்களும் இடைக்கட்டுடனான சிற்றாடையும் அணிந்து, இடுப்புக்கு மேற்பட்ட பகுதி முன்னிருக்குமாறு உடலைச் சுழற்சியில் திருப்பியுள்ள ஆடல் பெண்ணின் இடக்கை அர்த்தரேசிதமாக, வலக்கையில் கண்ணாடி. அவர் அருகே நிற்கும் பெண்கலைஞர் இடக்கை இயக்குகிறார்.

கல்வெட்டுகள்

1965-66க்கான இந்தியக் கல்வெட்டு ஆண்டறிக்கையில் 301-307 எண்களின் கீழ்ச் சக்கரபாணி சுவாமி கோயிலில் படியெடுக்கப்பட்ட கல்வெட்டுகளின் சுருக்கம் தரப்பட்டுள்ளது. அவற்றிற்கான பாடங்களைப் படித்தறியும் முயற்சியில் 7 புதிய கல்வெட்டுகளும் சில சிதைந்த கல்வெட்டுகளும் கண்டறியப்பட்டன. இந்த 14 கல்வெட்டுகளுள் சில இப்பகுதியிலிருந்து சிதைந்த கோயில்களுக்குரியனவாகலாம்.



பொ. கா. 1505இல் பதிவாகியுள்ள கல்வெட்டு, கோயில் கந்தாடைநாயன் ஆழ்வார் ஜீயர், திருவாழி ஆழ்வாருக்கும் பூதத் தாழ்வாருக்கும் முற்கான்னம் வழங்க 120 பணம் அளித்ததாகவும் இறைப்படையலுக்குப் பின் அவ்வுணவு கோயிலுக்கு வந்த வைணவத் தேசாந்திரிகளுக்கு வழங்கப்பட்டதாகவும் சொல்கிறது. அரிசி, சிறுபயறு, தேங்காய்த் துறுவல் கலந்து சமைத்த உணவாக இம்முற்கான்னம் அமைந்ததாக அகராதி குறிப்பிடுகிறது. கர ஆண்டு ஆடித்திங்கள் 5ஆம் நாள் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு, கிருஷ்ணராய நாயக்கரின் மகன் பெத்தப்ப நாயக்கர் திருவாழி ஆழ்வாருக்கு நாளும் நிகழும் திருவந்திக் காப்பிற்காக வெள்ளிக் குடமும் தோப்பும் கொடையளித்தமை கூறுகிறது.

வடக்குச்சுவர்க் கல்வெட்டு, சக்கரபாணி ஆழ்வாருக்கு மாலைகள் அளிக்கும் பொறுப்பு வெங்கடநாயக்கரிடம் இருந்ததைச் சுட்டுகிறது. உள்சுற்று வடசுவர்க் கல்வெட்டு, அக்ஷய ஆண்டு ஐப்பசி 15ஆம் நாள் பொறிக்கப்பட்டுள்ளது. திருக்குடந்தைச் சக்கர தீர்த்தத்து திருவாழி ஆழ்வார் தேரில் எழுந்தருளிப் பெரும்புதூர் ஆசூரி வீரராகவன் கோயிலுக்கு அமைத்துத் தந்த வீரராகவன் திருவீதி சேர்ந்த தகவலைத் தரும் இக்கல்வெட்டு அவ்வீதியின் எல்லைகளாகத் திருமஞ்சணத் திருவீதி, தேப்பெருமாள்நல்லூர் வாய்க்கால், காவேரி அமைந்தமை குறிக்கிறது.

மடைப்பள்ளிப் படிக்கட்டாகப் பயன்படும் பலகைக் கல்வெட்டு, சுபகிருது ஆண்டு சித்திரைத் திங்கள் 26ஆம் நாள் பொறிக்கப்பட்டுள்ளது. சிதைந்துள்ள அதிலிருந்து விஜய திருமலைராஜபுரம் என்ற பெயரில் அகரம் அமைக்கப்பட்ட செய்தியும் அதற்குப் பண்டாரத்திலிருந்து பொருள் கொள்ளப்பட்ட தகவலும் கிடைத்துள்ளன. மடைப்பள்ளித் தூணில் 13ஆம் நூற்றாண்டு எழுத்தமைவிலுள்ள கல்வெட்டு, தேவன் குடி ஓவாதகூத்தனும் அவர் மனைவி நமசிவாயதேவன் உய்ய வந்தாளும் திருக்கோளீசுவரம் உடையாருக்குச் சந்திவிளக்குகள் ஏற்றக் கொடையளித்த தகவலைத் தருகிறது.

இரு மடைப்பள்ளித் தூண்களில் பொறிக்கப்பட்டுள்ள மற்றொரு கல்வெட்டின் தொடக்கம் கிடைக்கவில்லை. கோயில் ஒன்றைச் சேர்ந்த சிவபிராமணர்களும் உவச்சரும் கங்கை கொண்டசோழபுரத்து மடிகைத்தெரு வாழ் வணிகரான முகுந்தனூர் தாவளன் ஆலையேற்றுப் பெருமாளிடம் 15 கலம் நெல் பெற்று, அதன் வட்டி கொண்டு ஐப்பசி மாதத்திலிருந்து ஒவ்வோர் அமாவாசையின் போதும் நிகழும் இறை உலாவிற்கான வற்றைச் செய்வதாக உறுதியளித்தனர். உவச்சர்களும் சிவபிராமணர்களும் தற்குறிகளானமையால் ஆவணத்தில் கோயில் கணக்கு சந்திரலேகை உடையார் கையெழுத்திட்டுள்ளார்.

இறையகத்தின் முன்னுள்ள நடைமண்டப வடசுவரில் கண்டறியப்பட்ட புதிய கல்வெட்டு, முத்தால கிருஷ்ணராய நாயக்கர் மகன் பெத்தப்பநாயக்கர் திருவாழி ஆழ்வார் பாதத்திற்கு நாளும் சேவை செய்யும் தகவலைத் தருகிறது. இக்கல்வெட்டை ஒட்டிப் பெத்தப்ப நாயக்கரின் வணங்கிய திருவடிவம் கோட்டுருவச் செதுக்கலாகப் பொறிக்கப்பட்டுள்ளது.

அதே மண்டபத்தின் கிழக்குச்சுவரில் கண்டறியப்பட்ட புதிய கல்வெட்டு, சாளுவத் திருமலைத்தேவ மகாராஜாவின் தன் மத்தைக் குறிக்கிறது. தன்மம் எது என்பதற்கான தரவுகள் கல்வெட்டில் இல்லை. இச்சாளுவத் திருமலை மகாராஜன் விஜய நகரப் பேரரசுடன் தொடர்புடைய சிற்றரசராகலாம். ‘சாளுவ ராஜா’ என்று நாகரி எழுத்துக்களில் பொறிக்கப்பட்ட பெயருடன் சங்கு, சக்கரம் பொறித்த இவருடைய காசுகள் கிடைத்துள்ளன. திருவரங்கம் கோயிலில் பொ. கா. 1464இல் பதிவான இவருடைய கல்வெட்டு அக்கோயில் பண்டாரத்திற்குத் திருமலை அளித்த நெற்கொடை பேசுகிறது.

தாயார் திருமுன் முன்மண்டபத்தின் உட்புறமுள்ள கல்வெட்டு, அகோபில மட 38வது பட்டமான திருக்குடந்தை ஸ்ரீஅழகியசிங்கரின் பூர்வாசிர மகன் சக்கரவர்த்தி ஸ்ரீநிவாசாச் சாரியார் மேற்பார்வையில், கமவாய்புரம் ஸ்ரீஅண்ணாவைய்யங்கார் வம்சத்தர் ஸ்ரீநரசிம்மய்யங்கார் இம்மண்டபத்தைக் கட்டிய தாகக் கூறுகிறது. இச்செய்தி முன்மண்டப உத்திரத்திலும் பதிவாகியுள்ளது. விஜயவல்லித் தாயார் சன்னதி பழுதுபட்ட தால் அகோபில மடத்து 41வது பட்டம் ஸ்ரீஅழகியசிங்கர் காலத்தில் உத்தர அகோபில மடாதிபதி பாலமுகுந்தாச்சாரியார் ஆணைப்படி அவரது ஜோத்பூர் சீடர்கள் மக்னிராம், இராம் குமார் ஆகியோரால் 1933இல் ஸ்ரீனிவாசாச்சாரியார் மேற் பார்வையில் இப்பகுதி புதுப்பிக்கப்பட்டதைப் பெருமண்டபக் கல்வெட்டுகள் வழி அறியமுடிகிறது.

காலம்

இறைவன், இறைவி இறையகங்களின் கட்டுமானம், தூண் போதிகைகளிலுள்ள ஆடற்சிற்பங்கள், தாராசுரக் கட்டமைப் பில் வளாகத்தின் பல பகுதிகளில் காணப்படும் சிற்பத்தூண்கள் கொண்டு அவற்றின் காலத்தைப் பிற்சோழர் காலமாகக் கொள்ளமுடியும். இங்குப் பதிவாகியுள்ள கல்வெட்டுகளில் சாளுவத் திருமலைத்தேவ மகாராஜாவின் கல்வெட்டே காலத் தால் முற்பட்டது. பிற்சோழர் கல்வெட்டுகள் சில இங்குள்ளமை திருப்பணிக்கால இணைப்பாகலாம்.
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.