http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[189 Issues]
[1849 Articles]
Home About US Temples Facebook
Issue No. 189

இதழ் 189
[ ஆகஸ்ட் 2026 ]


இந்த இதழில்..
In this Issue..

சமய எழுச்சியால் சமூக மறுமலர்ச்சி காட்டிய அப்பர் - 12
உத்தம சோழன் கல்வெட்டுகளின் அடிப்படையில் ஒரு புதிய வரலாற்றுப் பார்வை
பைஞ்ஞீலிப் பதிவுகளில் கோயிலும் மக்களும்
சக்கரபாணி சுவாமி மாடக்கோயில் - 2
ஜப்பானிய ஹைக்கு - தொடக்கமும் தொடர்ச்சியும்
இதழ் எண். 189 > கலையும் ஆய்வும்
சமய எழுச்சியால் சமூக மறுமலர்ச்சி காட்டிய அப்பர் - 12
மு. சுப்புலட்சுமி

ஆசிரியர்: www.glorioustamils.com; www.attraithingal.com
வலையொலி/ podcast- அற்றைத்திங்கள்…. வலையொலியில் தமிழொலி

அப்பர் எடுத்துரைத்த அறிவுசார் பத்திமை

‘ஒன்றறி வதுவே உற்றறி வதுவே’ எனத் தொடங்கும் தொல்காப்பிய மரபியல் நூற்பா, அறுவகை உயிர்களை வரிசைப்படுத்திக் காட்டுகிறது. ‘ஆறறி வதுவே அவற்றோடு மனமே’ என்று கண், செவி, மூக்கு, வாய், உடல் என்ற ஐம்பொறிகளின் திறனோடு ஆறாம் அறிவாக மனதைச் சொல்கிறது.

சிலப்பதிகாரத்திலோ, அறிவின் துணைக்கொண்டு ஆய்ந்தறியாது கோவலனைத் தண்டித்த பாண்டிய மன்னரை- ‘அறிவறை போகிய பொறியறு நெஞ்சத்து இறைமுறை பிழைத்தோன்’ (25-26, வழக்குரை காதை), என்று கண்ணகி சாடினாள். கண்டதும் கேட்டதுமான செய்திகளை நெஞ்சத்தோடிணைத்துச் செயலாற்றாத வேந்தனின் நிலையை- ‘பொறியறு நெஞ்சத்து’ என்ற தொடர் குறிக்கிறது. அதே நேரத்தில் உணர்வால் ஆட்கொள்ளப்பட்ட நெஞ்சம் அறிவால் சிந்தியாது தவறிழைத்ததை, ‘அறிவறை போகிய’ என்றதன் மூலம் குறிக்கத் தவறவில்லை ஆசிரியர். பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்’என்று வள்ளுவர் காட்டிய சமூகநெறியால், சிந்தியாது தவறிழைத்த அரசர் தன்னுயிர் மாய்த்து நீதியை நிலைநிறுத்தினார்.

அடுத்து வந்த பத்திமைக் காலமோ, ‘மூக்கு வாய் செவி கண் உடலாகி வந்தாக்கும் ஐவர்தம் ஆப்பை யவிழ்த்தருள் நோக்குவான்…. கச்சி ஏகம்பன் (05.047.07)- ஐம்புலன்களால் பிணைக்கப்பட்ட நிலையைத் தன் அருள்நோக்கால் விலக்குவான் இறைவனென்று பெருமை சிறுமை நிறை குறையென்று அனைத்திற்கும் இறையருளையே துணைநிறுத்தியது. நெருக்கம் வளர்க்கும் எந்தவொரு உறவுக்கும் உணர்வே அடிப்படையல்லவா? அடியவர்களுக்கு அனைத்துமாய் இருப்பவன் இறைவனென்பதை அப்பரினும் உணர்வு பொங்கச் சொல்வாருமுளரோ?

அப்பன்நீ அம்மைநீ ஐய னும்நீ
அன்புடைய மாமனும் மாமி யும்நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொரு ளும்நீ
ஒருகுலமும் சுற்றமும் ஓரூ ரும்நீ (06.095.01)

என்று, எக்காலத்தும் அணுக்கராக இறைவனை உணர்ந்துருகுவதே பத்திமையின் உயிர்நாடி என்றுரைத்தவர் அவர். துணையாயென் நெஞ்சந் துறப்பிப்பாய்நீ’ என்று சொல்லி, உலக உறவுகளினின்று நெஞ்சை விலக்கி உய்விப்பதும் இறையருளேயென்று வழிப்படுத்தினார்.

அப்பரின் திருவங்கமாலை மறுபடி மறுபடி எடுத்தாளத் தூண்டும் பதிகம். ஐம்புலனடக்கி இறையெனும் சோதியை மையப்புள்ளியாகக் கொண்டு, பொறிகளைப் பழக்கும் பயிற்சிப் பதிகமது. ஐம்புலன்களோடு தலை வணங்கி, கை தொழுது, கால் கோயிலை வலம் வந்து, உடல் சிவனுக்கே பணிந்து பணி செய்தாலும், இறைவனையே நினைக்கும் அன்புநிறை நெஞ்சமன்றோ இவையனைத்தையும் இயக்கும் தூய கருவி?

அதனால்தான் அடுத்ததாக, ’தேடித் தேடொணாத் தேவனைத் தன்னுள்ளே தேடிக் கண்டுகொண்டதையும்’, ‘பாடுவார் பணிவார் பல்லாண்டிசை கூறு பத்தர்கள் சித்தத்துள் புக்குத் தேடிக் கண்டுகொண்டதையும்’ ஓயாது எடுத்துக்கூறி இறைவனை நெருக்கத்தில் கொணர்ந்தார் அவர்.

அப்பரின் ஆறாம் அறிவு

இப்படி, நெக்குருகும் நெஞ்சத்தையும் அதில் நிறைந்த இறையன்பையும் இறைவனை எளியோனாக்கி நெருக்கங்கொள்ளும் பத்திமை உணர்வையும் போற்றிப் பாடிய நாவுக்கரசர், பத்திமையில் அறிவுக்கும் பெரும்பொறுப்பைத் தந்தார். உணர்வும் அறிவும் இணைந்ததே மனமென்னும் சிறப்புப்புலம் என்பதை அப்பர் வலியுறுத்திய தன்மையே அவரை மற்ற நாயன்மாரிலிருந்து வேறுபடுத்தி நிறுத்துகிறது.

‘என்ன மாதவம் செய்தனை நெஞ்சமே’ என நெகிழ்ந்த இறையுணர்வை அறிவுசார் நெறியாகவும் போற்றியது அப்பரின் ஆன்மீகப் பகுத்தறிவு எனலாம். இதுவே அவருடைய ஆறாம் அறிவு. இறைவனையே நினைந்துருகும் பற்றையே முதன்மை இலக்காகக் கொண்டு வாழ்வது அன்பு பெருக்கெடுக்கும் இறையுணர்வு; ஆனால் இறைவன் பெயரால் தம்மைச் சுற்றியுள்ள மனிதர்களைப் பிரித்தாள்வதையும் வேறுபாடுகள் பெருக்குவதையும் சாடிக் குரல் கொடுப்பது பத்திமையில் பகுத்தறிவன்றோ?

அதனால்தான், ’நடையை மெய்யென்று நாத்திகம் பேசாதே’ என்று உலகியல் வாழ்வே மெய்யென நம்பி இறைவனை மறுத்தோரைக் கடுமையாக எதிர்த்த அதே வேளையில், சமயத்தின் பெயரால் புகுத்தப்பட்ட சமூகக் கேடுகளையும் அறவே மறுத்துக் குரல் கொடுத்த சமூகநீதிப் போராளியாகவும் இருந்தார் அவர்.

அப்பரின் ஆறாம் அறிவு மிகவும் பரந்துபட்ட களம். சமூகப் பொறுப்புணர்வுடன் இறையன்பர்கள் செயலாற்ற நெஞ்சத்தையும் அறிவையும் ஒருசேர எப்படிப் பழக்கச் சொன்னார் அவர்? ஆன்மீகப் பகுத்தறிவென்னும் குடைக்கீழ் அப்பர் முன்னிறுத்தியவை என்னென்ன?

1. உணர்வே இன்றுவரையில் இறைப்பற்றின் வேராக இருக்க, அறிவையும் பத்திமையின் இன்றியமையாப் பொருளாக்கினார்
2. உணர்வும் அறிவும் இணைந்து செயல்பட, தம் நெஞ்சைப் பழக்கினார்
3. சிந்தையில் தெளிவை அப்பரைப்போல் வேறெவரும் வலியுறுத்திலர்
4. அறத்தை அப்பரைப்போல் வேறோர் அடியார் போற்றியதில்லை
5. தன் குறைகள், தன் குற்றங்கள், தன் இயலாமைகளைப் புரிந்து கொள்ளலே, தன்னை உணர்தலின் முதல்படி எனவுணர்த்தினார்

மெல்ல மெல்ல ஆய்ந்திட இப்பட்டியல் நீளும் என்பதில் ஐயமில்லை. வரும் பதிவுகளில் இவற்றை விரிவாக நோக்கலாம்.

அப்பர் எடுத்துரைத்த அறிவுசார் பத்திமை

‘எல்லாம் அவன் செயல்’ என்ற எண்ணத் தாக்கத்திற்கிடையில், இறைவனை உணராத தன்னை- ‘பொறியிலா அறிவிலேனே’ என்று கூறுவதில் புரியும் நாவுக்கரசரின் அறிவுப்பசி. பின்விளைவுகள் குறித்து அறியாதிருந்த தம் நிலையைச் சுட்ட ‘விளைவு அறிவிலாமை’ என்ற சொல்லையும் பயன்படுத்தினார். தம் பிழைகளுக்குத் தாமே பொறுப்பேற்ற நாவுக்கரசர், புறச்சமயத்தாரை ‘விரிவிலா அறிவினார்கள்’ என்றழைத்தார்.

பத்திமையில் அறிவென்ற கூற்று இறைவனையடையும் நான்கு வழிகளில் ‘ஞானத்தைக்’ குறிக்கும். ஆயினும், அப்பர் பாடல்கள் பேசும் மாற்றம் நாடும் சமூகக் கருத்துகள், ஆன்மீக ஞானத்தோடு சமூகம் சார்ந்த அறிவெனவும் கொள்ளத் தோன்றுகிறது.

இறை நம்பிக்கை விதைத்த நெகிழ்த்தும் உணர்வு வித்துக்களை வளர்க்க, அன்பெனும் நீரைப் பாய்ச்சியதோடு தெளிந்த அறிவெனும் ஒளியை ஊட்டினார். அந்த அறிவொளியே, சமயம் திணித்த கட்டுப்பாடுகளையும் வேறுபாடுகளையும் பிரிவினைகளையும் சார்புகளையும் தெளிவுடன் நோக்கிக் களையெடுக்க அவரைக் குரல் கொடுக்க வைத்தது.

‘எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும்/ எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு’ என்ற குறள்வழி, இறையெனும் மெய்ப்பொருளைத் தாமே தேடியுணர அப்பர் எடுத்துரைத்த வழிவகைகள் பலப்பல. அவற்றுள், உருகும் உள்ளத்தோடு கைகோர்த்து நிற்பது அறிவு.

திருவொற்றியூர் பெருமானைப் பாடுகையில், ’மனமெனுந் தோணி பற்றி மதியெனுங் கோலை யூன்றிச் சினமெனுஞ் சரக்கை யேற்றிச் செறிகட லோடும் போது’ (04.046.02) என்று மனத்தோடு மதியையும் இணைத்தே பேசினார். அதிலும், மனத்தோணியை நகர்த்தும் கோல் அறிவென்பதைத் தெளிவாகக் காட்டி, தம் அறிவுசார் பத்திமை எண்ணத்தைப் பறைசாற்றினார்.





அப்பருக்கு முன்வந்த காரைக்கால் அம்மையார் வாக்கில்-

அறிவானுந் தானே அறிவிப்பான் தானே
அறிவாய் அறிகின்றான் தானே - அறிகின்ற
மெய்ப்பொருளுந் தானே விரிசுடர்பார் ஆகாயம்
அப்பொருளுந் தானே அவன்
(அற்புதத் திருவந்தாதி 20)

இறைவன் அனைத்தையும் அறிபவன்; அதனை அறிவிப்பவனும் அவனே; அறிவாயிருந்து அறிகின்றவனும் அவனே; அறிகின்ற மெய்ப்பொருளும் அவனே; விரிசுடர் பார் வானாகிய பொருட்களும் அவனேயாம்.

இதே கருத்தை எடுத்தாளும் அப்பர், இறைவனின் அறிவாற்றலைக் குறிக்க ‘அறிவிலங்கு மனத்தானை அறிவார்க்கன்றி அறியாதார் தந்திறத்தொன் றறியாதானை’ (06.091.09), என்று அறிவு விளங்கும் மனத்தைப் போற்றுவது சிலம்பின் தொடர்ச்சியென நினைத்தல் தவறோ?

எதிலும் முறைமையும் சீர்மையும் எதிர்பார்ப்பவர் என்பதால், அறிவோடு நிறுத்தவில்லை அவர் - ‘ஆதியு மறிவு மாகி யறிவினுட் செறிவு மாகி’ என்று இறையாற்றலுக்கு மேலும் தகவு சேர்த்தார்.

அன்புணர்வினால் கட்டுண்ட நெஞ்சம் இறைவனை நாடும்; அன்புணர்வும் அறிவும் சேர்ந்து சிந்தித்த உள்ளம் மனிதம் பேணும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். அதனால்தான், ‘நீதியேதும் அறிவிலேன் அமரர் கோவே…செய்வதென்னே திருப்புகலூரனீரே’ (04.054.04) என்றும், ‘நெறிபடு மதியொன்றில்லேன்… அறிவிலேன் அயர்த்துப் போனேன் ஆவடு துறையுளானே’ (04.057.07) என்றும், அறிவின்மையைச் சுட்டி மனம் வெதும்பினார்.

திருப்பாதிரிப்புலியூர் பதிகத்திலோ (04.094.05), ‘சிவனே நமக்குக் கிட்டிய பெரும்பொருளெனச் சொல்லி மனத்தடைத்து, சித்தத்தை ஒருமுகப்படுத்தி, சிவாய நமவென்று ஓதாவிட்டால் இறையருளைப் பெறவியலுமா?’ என்று ‘அறிவிலாப் பேதை நெஞ்சை’ வினவினார்.

திருவாரூர்ப் பதிகத்தில் (06.031.08), துன்பங்களும் தீவினையும் தடுமாற்றமும் பல்பிறப்பும் பாசப்பற்றுகளும் நீங்கி, புண்ணியமும் நன்னெறியும் பெறக்கூடிய வழிவகையை நெஞ்சுக்குரைத்தார். ‘ஆரூரா!’ என்றலறியழைத்துக் கதறியேத்திப் போற்றித் துதிசெய்து மலர்த்தூவிச் சூழும் வலஞ்செய்து தொண்டு பாடிக் கற்பகமே என்றுருகுவதே உய்வதற்கான வழியாம். இதனைப் புரிந்துகொள்ள ‘மதிதருவன் நெஞ்சமே’ என, உணர்வு நிறைந்த நெஞ்சத்திற்கு அறிவூட்டினார்.

இறைவனையடையும் ஒரே சிறந்த வழி அன்பே; அதைப் புரிந்துகொண்டு தெளிவுபெற கூரிய அறிவு வேண்டுமென்பதை அப்பர் பல பதிகங்களில் உணர்த்தக் காணலாம்.

இறைவனை வணங்கும் அடியவர்களுக்குக் கிடைப்பதென்ன?

எல்லையில்லாப் பயன்களை அடுக்கலாம். இறைவனோ ‘அறிவிலங்கு மனத்தான்’; அன்பால் இறைவனையடையலாம் என்றுணர ‘நெறிபடு மதி’ வேண்டும்; இப்படி, அறிவால் விளைந்த பத்திமையின் பயனை ஆய்ந்தால்- அதுவும் அறிவே என்றார் நாவுக்கரசர்.

‘திருச்சேறையுட் செந்நெறி நாரி பாகன்றன் நாம நவிலவே- கூரிதாய அறிவுகை கூடிடும்’ (05.077.01) என்றார். உள்ளொளிரும் அறிவாற்றலே இறைவனென்று குறிக்க, பூந்துருத்தியிலுறையும் செம்பொன்னான சிவனே தம் ‘புந்தியைப் புக்க அறிவு’ (04.088.09) என்றுரைத்தார்.

கல்வி, ஞானம், கலைகள், அறங்கள் என்று அறிவு காட்டும் உலகங்கள்தாம் எத்தனை எத்தனை? எனினும், தாமுரைத்த அறிவுசார் பத்திமை நலன்கள் அத்தனையிலும் மனிதத்தையே முதன்மைப்படுத்தியவர் அப்பர்.

இறைவனை வாழ்த்திய வாயும் நினைத்த மடநெஞ்சமும் அறிவின்வழி செல்லப் பழக்குவது ஒரு திறன் வளர்ப்பு. புலனடக்கி, வேண்டுவன நாடி- வேண்டாதவை ஒதுக்கி- மனதை ஒருமுகப்படுத்தி- தம்மையுணர்ந்து- ஆழ்நிலையில் இயங்கி இறைவனை உணர்வதே பற்றாளர் கடமை. அக்கடமையில் முழுமை எய்திட, அறிவின் பெருந்துணைக் கொண்டு மனம் இயங்க வேண்டுமென்று தம் பதிகங்கள் வாயிலாகச் சுட்டினார் நாவுக்கரசர்.

அன்பால் விளைந்த இறைப்பற்று, அறிவால் செதுக்கப்பெற்ற இறையுணர்வாகத் தழைத்திட அரும்பாடுபட்ட தொண்டர் அப்பர்.

நன்றி: டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம், திருச்சிராப்பள்ளி.
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.