http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[189 Issues]
[1849 Articles]
Home About US Temples Facebook
Issue No. 189

இதழ் 189
[ ஆகஸ்ட் 2026 ]


இந்த இதழில்..
In this Issue..

சமய எழுச்சியால் சமூக மறுமலர்ச்சி காட்டிய அப்பர் - 12
உத்தம சோழன் கல்வெட்டுகளின் அடிப்படையில் ஒரு புதிய வரலாற்றுப் பார்வை
பைஞ்ஞீலிப் பதிவுகளில் கோயிலும் மக்களும்
சக்கரபாணி சுவாமி மாடக்கோயில் - 2
ஜப்பானிய ஹைக்கு - தொடக்கமும் தொடர்ச்சியும்
இதழ் எண். 189 > கலையும் ஆய்வும்
பைஞ்ஞீலிப் பதிவுகளில் கோயிலும் மக்களும்
இரா.கலைக்கோவன், மு.நளினி

சிராப்பள்ளி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டத்திலுள்ள திருப்பைஞ்ஞீலிக் கோயில் பாடல் பெற்ற பெருங்கோயிலாகும். நெடுந்தொலைவு நடந்து களைத்தும் தளர்ந்தும் தம்மைக் காண வந்த அப்பர் பெருமானுக்குச் சோறூட்டிய பெருமானாகப் பைஞ்ஞீலி இறைவனைச் சேக்கிழார் படம்பிடித்ததால் சோறுடை நாயனாராகவும் அறியப்படும் இக்கோயில் இறைவன் விமானம் ஒருதள நாகரமாய் அமைந்துள்ளது. நீள்நெடுங்கண்ணி எனும் பெயரில் இரண்டு அம்மைகளைத் தனித்தனி விமானங்களில் பெற்றுள்ள தமிழ்நாட்டின் மிகச் சில இறைக்கோயில்களில் இதுவும் ஒன்று. மூன்று திருச்சுற்றுக்களுடன் விரியும் இக்கோயிலில் பொதுக்காலம் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாறைக் குடைவரையும் உள்ளடக்கமாய்ப் பொலிகிறது. அழகிய சிற்றுருவச் சிற்பங்களும் சோழர் காலக் கோட்டச் சிற்பங்களும் காணப்பெறும் இக்கோயில் வளாகத்திலிருந்து இந்தியக் கல்வெட்டுத்துறையும் டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையமும் படியெடுத்து வெளியிட்டுள்ள 71 கல்வெட்டுகளில் பெரும்பாலன நூற்றாண்டுகளின் நடையில் இக்கோயிலும் இதைச் சுற்றியிருந்த ஊர்களும் அங்கு வாழ்ந்த மக்களும் எனப் பல பயனுள்ள வரலாற்றுத் தரவுகளைப் படம்பிடித்துக் கதை வளர்க்கின்றன. அவற்றுள் சுவையான சிலவற்றை இத்தொடரில் தொடர்ந்து பார்க்கலாம்.















1. ஓடிப்போனவர்களும் ஒற்றிவைத்தவர்களும்

இக்கோயிலுக்கும் மக்களுக்குமான ஒன்பது நூற்றாண்டுக் கால வாழ்க்கை பேசும் இவ்வளாகத்துள்ள 71 கல்வெட்டுகளில் ஒன்றுதான், வரி கட்டாமல் சிலர் ஓடியதால், அந்த வரிக்குப் பொறுப்பானவர்கள் அவர்கள் நிலத்தை ஒற்றிவைத்து வரிகட்டிய வரலாற்றைப் பகிர்ந்துகொள்கிறது.

பொதுக்காலம் 13ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சோழ நாடு மூன்றாம் இராஜராஜரின் ஆட்சியிலிருந்தது. திருப்பைஞ்ஞீலிக்கு அருகில் அதே மண்ணச்சநல்லூர் வட்ட ஊராக இன்றும் விளங்கும் துடையூர் அக்காலத்தே பிராமணக் குடியிருப்பாக விளங்கியது. அங்கு ஊராட்சியாக இருந்த சபையின் உறுப்பினர்களுள் அறுவர்தான் இக்கல்வெட்டு உருவாகக் காரணமானவர்கள்.

துடையூரிலிருந்து பல்வேறு காரணங்களுக்காகப் பிரிக்கப்பட்டுச் சிறுசாத்தமங்கலம் என்ற பெயரேற்றிருந்த சிற்றூரில் அவர்களுக்கு உரிமையுடைய விளைநிலம் இருந்தது. அக்காலத்தே வழக்கிலிருந்த வருவாய்ப் பதிவான பொத்தகப்படி இச்சிறுசாத்தமங்கலம் இறைவனுக்கு அளிக்கப்பட்ட தேவதான ஊராக, இறைவன் பெயரேற்று அவர் பெயரிலான காணியாக விளங்கியது.

நில உரிமையாளர்களிடம், ‘கடமை’ என்ற பெயரில் விளைவாகவோ, காசாகவோ வரி பெறப்பட்ட காலம் அது. அதை உரியவரிடம் பெற்று அரசுக்குச் செலுத்தும் பொறுப்பு ஊரவையைச் சார்ந்தது. துடையூர் நிலங்களுக்கான இந்தக் கடமை வரிக்குப் பொறுப்பேற்றிருந்தவர் ஊர் சபையின் உறுப்பினரான வீற்றிருந்தான் சீரிளங்கோ. விளைவு குன்றியதாலோ அல்லது வேறு காரணங்களாலோ இந்த உறுப்பினர் அறுவரில் மூவர் வரி செலுத்த முடியாமல் ஊரைவிட்டே ஓடிப்போயினர். ‘இவர்கள் பேரால் இவ்வூர்க் கடமைக்கு இவர்கள் முன்னின்று கடமையிறாதே ஓடிப்போகையில்’ என்று இச்செயலை வெளிச்சப்படுத்துகிறது கல்வெட்டு.

அதனால், வரித்தொகுப்பின் அளவு குறைந்து, ஊரவை சிலருக்குத் தர வேண்டியிருந்த தொகையைத் தரக்கூடவில்லை. ‘கூபகராமர் அடைப்பில் கோடுமலையாளருக்கு இவ்வூர்க் கடமையில் தர எழுதின காசு’ தரமுடியவில்லை என்று இதைக் கல்வெட்டு சுட்டுகிறது. துடையூர்க் கடமைக்குப் பொறுப்பேற்றிருந்து பற்றாளரான இளங்கோ, இவ்விழப்பை நேர்செய்வதற்காகச் சிறுசாத்தமங்கலத்தில் தமக்கும் பிற ஐவருக்கும் உரிமையுடையதாய் இருந்த நிலத்தைப் பைஞ்ஞீலிக் கோயில் நிருவாகத்திடம் ஒற்றிக்கு வைத்துக் கோயில் கருவூலத்திலிருந்து 2500 காசு பெற முடிவு செய்தார். ‘ஒற்றித் தீட்டு’ என்ற பெயரில் அதற்கான ஆவணம் எழுதப்பெற்றது.

அதன்படி, துடையூர் ஊர்க்கடமைக்காகச் சிறுசாத்தமங்கல நிலம் புரட்டாசித் திங்களில் ஒற்றிக்கு வைக்கப்படுவதாகவும் இரண்டு திங்கள்களில், அதாவது கார்த்திகைத் திங்களுக்குள் இந்த ஒற்றிக்காகப் பெறப்படும் காசை அதற்கான வட்டியுடன் ஒற்றி வைப்பவர் கோயில் கருவூலத்தில் செலுத்துவதாகவும் ஆவணம் அமைந்தது. 100 காசுக்குத் திங்களுக்கு 4 காசென வட்டி முடிவானது.

கார்த்திகைக்குள் கருவூலப் பணத்தைச் செலுத்த முடியாது போனால், கோயிலே நிலத்தைக் கொள்ளலாம் என்றும், ஒற்றிக்காகப் பெறப்பட்ட முதலும் அதற்கான வட்டியுமே அந்நிலத்திற்கான விலையாகலாம் என்றும் ஒற்றி வைத்தவர் இசைவு தெரிவித்து ஆவணத்தில் கையெழுத்திடக் கருவூலம் தொகையளிக்க, துடையூர்க் கடமை முறைப்படிச் செலுத்தப்பட்டது.

இந்த ஆவணத்தில் இளங்கோவுடன் நிலஉரிமையாளர்களில் ஓடிப்போனவர்கள் தவிர்த்த பிற இரு நிலஉரிமையாளர்களும் கையெழுத்திட்டனர். ஆவணச் சான்றாளர்களில் இருவர் எழுத்தறிவற்றவர்களாக இருந்தமையால், அவர்கள் சார்பில் எழுதத் தெரிந்த வேறு இருவர் கையெழுத்திட்டனர்.

ஒற்றிப் பணம் திருப்பித்தரப்பட்டதா, நிலம் மீட்கப்பட்டதா என்பதெல்லாம் அறிய வழியில்லை என்றாலும், பைஞ்ஞீலிக் கோயிலில் கண்சிமிட்டும் இந்த ஆவணப் பதிவு, 13ஆம் நூற்றாண்டளவில் இப்பகுதியில் விளங்கிய ஊராட்சி, கோயிலாட்சி, வாழ்வியல் நடைமுறைகள், ஆவண-நாணய வழக்காறுகள், மக்களின் இயல்புகள் என எத்தனை வரலாற்றுத் தரவுகளை வழங்குகிறது! எனில், இத்தகு காலப் பதிவுகளைக் கருத்தாய்க் காக்காமல் திருப்பணிகளின் பெயரால் சிதறடிப்பது அறமாகுமா?

2. வெங்காநத்தம் சோழங்கநல்லூரான கதை

‘காதல் செய்பவர் பெறுவதென், சொலும் ஆரணீயவிடங்கரே’ என்று ஏழாம் திருமுறையில் கேள்வி கேட்ட சுந்தரர், மறுமொழிக்காய் நின்றது நீலிவனநாதர் கோயிலில்தான். சம்பந்தரின் பிள்ளைத் திருவடிகளும் இவ்வளாகத்தில் பதிகம் பாடப் பதிந்து சென்றன. தேவார மூவராலும் பாடப்பெற்ற தமிழ்நாட்டின் பெருமை மிகு கோயில்களுள் இப்பைஞ்ஞீலிப் பெருங்கோயிலும் ஒன்று.

டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின், ‘திருப்பைஞ்ஞீலி - கோயிலும் கல்வெட்டுகளும்’ என்ற அண்மை வெளியீட்டில் கண்கள் பரவிய போதுதான் சோழங்கநல்லூரின் கதை வடிவமானது. இவ்வூரின் வரலாறு பேசும் கல்வெட்டுகளுள் இரண்டு, இங்குள்ள பழைய அம்மன் திருமுன் வடசுவரில் பதிவாகியுள்ளன. தெற்கில் செட்டிமங்கலம், உலகளங்காறநல்லூர் எல்லைகளாக, மேற்கில் சிற்றாம்பூரும் கிழக்கில் பைஞ்ஞீலியும் சோழங்கநல்லூரின் எல்லைகளாக இருந்தன. சோழங்கநல்லூரின் வடக்கு எல்லையாகப் பைஞ்ஞீலிக் கோயிலின் தேவதான ஊர்களான குன்றத்தூரும் குளக்குடியும் அமைந்தன.

இந்த நான்கு திசை ஊர்களுக்கும் இடையிலிருந்த சோழங்கநல்லூரின் நிலம், குடியிருப்பான நத்தம், குளம் உட்பட்ட அனைத்தும், சுருங்கச் சொல்லின் மொத்த ஊரும் நெடுங்காலத்திற்கு முன்பே இறைவன் பெயரில் திருநாமத்துக்காணியாகக் கோயிலாரால் விலைக்குப் பெறப்பட்டு கோயிலுக்கு உரிமையுடைய ஊராக அவர்கள் பயன்பாட்டில் இருந்தது. வெங்காநத்தம் என்ற இவ்வூரின் பழம்பெயர் சோழங்கநல்லூரானது இந்த விற்பனைக்குப் பிறகுதான். புதிய பெயரேற்றபோதும் வெங்காநத்தம் முன்னொட்டாகவே தொடர்ந்து பயன்பாட்டில் இருந்தது.

இறைவன் பெயரில் கோயில் நிலமாக விளங்கியபோதும் இவ்வூருக்கான வரிகளைக் கோயில் செலுத்தவேண்டியிருந்தது. மூன்றாம் குலோத்துங்கசோழர் ஆட்சிக்காலத்தில் (பொ. கா. 1178-1218) அரசுஅலுவலராக இருந்த சோழகோன் என்பார் இக்கோயில் மீது மிகுந்த அக்கறை கொண்டதை இங்குப் பதிவாகியுள்ள கல்வெட்டுகள் சிலவற்றால் அறியமுடிகிறது. அவரே நேரடியாகவும் சில போதுகளில் தம்மினும் அரசருக்கு அண்மையராக இருந்த மற்றோர் உயர் அலுவலரான வாணாதராயர் வழியாகவும் மன்னரிடம் பரிந்துரைத்து இக்கோயில் நிலத்தொகுதிகள் சிலவற்றுக்கு வரி நீக்க ஆணை பெற்றுள்ளார்.

சோழங்கநல்லூர் மீதும் சோழகோனின் கண்கள் விழுந்தன. இறைவனின் வழிபாட்டிற்கும் கோயில் திருப்பணிகளுக்கும் உதவுமாறு சோழங்கநல்லூர் நிலம் 415 வேலியையும் தேவதான இறையிலியாக்கி ஆணை பிறப்பித்தருளுமாறு வாணாதராயர் வழிச் சோழகோன் மூன்றாம் குலோத்துங்கரிடம் வேண்டுதல் வைத்ததை, ‘இந்நிலம் இத்தேவற்கு பூசைக்குந் திருப்பணிக்கும் உடலாக தேவதான இறையிலியாக நிற்கக் கடவதாகப் பெறவேணுமென்று சோழகோன் சொல்லி வரக்காட்டினானாக வாணாதராயன் நமக்குச் சொன்னமையில் இப்படிச் செய்யக் கடவதாகச் சொன்னோம்.’ என்ற மன்னரின் வாய்மொழி ஆணை தெளிவாகப் படம்பிடிக்கிறது.

அரசரின் இந்த வாய்மொழி ஆணையை ஓலையாக எழுதியவர், திருமந்திரஓலை எனும் பொறுப்பிலிருந்த மீனவன் மூவேந்தவேளார் ஆவார். அரசரின் திருமுகமாக அழைக்கப்பெற்ற இந்த ஓலை, கோயில் ஆட்சியருக்கான அறிவிப்பாக அமைந்தது. இத்திருமுகத்தை மேற்கோள் காட்டிக் கோயில் ஆட்சியருக்கும் கணக்கருக்கும் உயர்அலுவலர் வாணாதராயன் ஓலை அனுப்பினார். ‘வெங்காநத்தமான சோழங்கநல்லூர் நன்செயும் காடும் குளமும் கொல்லையும் நத்தமும் உள்பட திருநாமத்துக்காணியாக விலைகொண்ட நிலம் நானூற்று ஒருபத்தைய் வேலியும் இக்கோயிலுக்குப் பூசைக்கும் திருப்பணிக்கும் உடலாகப் பெறவேணுமென்று சோழ கோனார் நாயனார்க்கு விண்ணப்பஞ் செய்கையாலே தேவதான இறையிலியாக நிற்பதாக பிரசாதஞ் செய்தருளி திருமுகம் போந்தது இத்திருமுகப்படியே தேவதான இறையிலியாகக் கைக் கொண்டு பூஜையுந் திருப்பணியும் தாழவுட்டாமல் பண்ணுக’ என்று அவ்வோலை கோயிலாருக்கு வழிகாட்டியது.

பைஞ்ஞீலிக் கோயில் இறைவனின் வழிபாட்டிற்கும் கோயில் திருப்பணிக்குமாய்த் தேவதான இறையிலியாக்கித் தரப்பட்ட திருநாமத்துக்காணியான சோழங்கநல்லூர், மாறவர்மர் வீரபாண்டியர் காலத்தில் (பொ. கா. 1178-1218) மற்றோர் அரசாணைக்கு உட்பட்டது. அவர் ஆட்சிக்காலத்தில் பைஞ்ஞீலிக் கோயிலில் அவரது சிறப்புப் பெயர்களுள் ஒன்றான கலியுகராமன் எனும் பெயரில் சிறப்பு வழிபாடு அமைக்கப்பட்டது.

‘கலியுகராமன் சந்தி’ என்று கல்வெட்டுகள் கொண்டாடும் அச்சிறப்பு வழிபாட்டிற்கான செலவினங்களுக்கும் கோயில் திருநாள்களுக்கும் இறைவனுக்கான நித்த வழிபாடு, படையல் ஆகியவற்றுக்குமாய் மன்னர் தம் 29ஆம் ஆட்சியாண்டின் (பொ. கா. 1449) கார்த்திகைத் திங்கள் முதல் பயன்படுமாறு கோயில் சார்ந்த மூன்று ஊர்களை வரி நீக்கப்பட்ட தேவதானங்களாக மாற்றித்தந்தார். அவற்றுள் சோழங்கநல்லூரும் ஒன்று.

வீரபாண்டியரின் இந்த அரசாணைக் கல்வெட்டால், பொ. கா. 15ஆம் நூற்றாண்டில் மக்களிடமிருந்து பெறப்பட்ட 15க்கும் மேற்பட்ட வரியினங்களின் பெயர்கள் கிடைக்கின்றன. அவற்றுள் காவேரிக்கரைத் தேவை குறிக்கத்தக்கது. காவிரியாற்றின் கரையைப் பராமரிக்கவும் நாணல் பயிரிட்டு அதை வலிமைப்படுத்தவும் தேவையான ஆள் உழைப்பை இது குறிப்பதாகக் கொள்ளலாம். இத்தகு ஆள் உழைப்புத் தொடர்பான பல வரிகளை முற்சோழர் காலத்திலிருந்தே காணமுடிவது குறிப்பிடத்தக்கது. இவை நீர்நிலைகளைப் பராமரிக்கவும் அவற்றை எப்போதும் பயன்பாட்டில் இருக்குமாறு கண்காணிக்கவும் ஊரவைகளுக்கு உதவின.

இந்தப் பதிவால், மூன்றாம் குலோத்துங்கர் காலத்திலேயே வரிநீக்கம் பெற்றிருந்தபோதும், சோழங்கநல்லூர் பின்னாளைய ஆட்சியர் காலத்தில் மீண்டும் வரிசெலுத்தும் நிலைமைக்கு ஆளாகியிருந்ததும் வீரபாண்டியர் அந்நிலை மாற்றி மீளவும் அவ்வூரை இறையிலித் தேவதானமாக்கியதும் தெரியவருகிறது. கோயில் ஆட்சியருக்கு வழங்கப்பட்ட இந்த அரசாணை அரசின் வருவாய்த் துறையினருக்கும் அனுப்பப்பெற்று அவர்கள் தங்கள் வரிப்பொத்தகங்களில் உரிய மாற்றங்களைச் செய்வதற்கும் வழிவகுத்தது.

ஓர் அரசரின் ஆணை தொடர்ந்து வருபவர்களால் பின்பற்றப்படுவதும் உண்டு. மாற்றத்திற்கு உள்ளாவதும் உண்டு. இது காலந்தோறுமான நடைமுறை என்பதை இப்பைஞ்ஞீலிக் கல்வெட்டுகள் தெற்றெனப் புலப்படுத்துகின்றன.

இதில் குறிப்பிடத்தக்க செய்தி இச்சோழங்கநல்லூர் இன்றளவும் அதே பெயரில் பைஞ்ஞீலிக்கருகில் மக்கள் வாழிடமாகத் தொடர்வதுதான்.
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.