http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[179 Issues]
[1772 Articles]
Home About US Temples Facebook
Issue No. 15

இதழ் 15
[ செப்டம்பர் 16 - அக்டோபர் 15
பயணச் சிறப்பிதழ் ]


இந்த இதழில்..
In this Issue..

வந்தியத்தேவன் வழியிலிருந்து வரலாற்று வழிக்கு
பழுவூர் - 5
கல்வெட்டாய்வு - 11
காந்தள்
ஒரு கடிதம்
மூன்றாம் யாத்திரை
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே!
நான்கு மணிக்குப் பின் நாகேஸ்வரன் கோயில்
Around My World in Two Days
சங்கச் சிந்தனைகள் - 3
அத்யந்தகாமம் - பின்னூட்டம்
இதழ் எண். 15 > பயணப்பட்டோம்
நான்கு மணிக்குப் பின் நாகேஸ்வரன் கோயில்
ச. கமலக்கண்ணன்
சீதாராமனின் வீட்டில் சிற்றுண்டியை முடித்துவிட்டுச் சிற்றுந்தில் சென்னைவாசிகளை வழியனுப்பிய பிறகு மணியத்தின் படங்களோடு கூடிய பொன்னியின் செல்வனில் நந்தினியை விழிகளால் ஆசைதீரப் பருகிவிட்டு, நான், ராம், சீதாராமன் மற்றும் பத்மநாபன் ஆகியோர் குடந்தை நாகேஸ்வரன் கோயிலுக்குச் செல்வது என முடிவெடுத்தோம். போய்விட்டு வந்து 9 மணிக்கு கே.பி.என் பேருந்தில் பெங்களூர் செல்ல வேண்டும். ஆகவே வெங்கட்ரமணா ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு அங்கிருந்து அப்படியே பேருந்தில் ஏறிவிடலாம் என நினைத்தோம். அதற்குள் சீதாராமனின் தாயார் கோபித்துக் கொண்டு விட்டார். இரவு உணவை அவர்கள் வீட்டில்தான் சாப்பிடவேண்டும் என அன்புக் கட்டளையிட்டார்கள். இட்லியும் வத்தக்குழம்பும் செய்து வைப்பதாகக் கூறினார்கள். ஏற்கனவே ஒருமுறை அவற்றை ருசி பார்த்தது நினைவுக்கு வர, தலை தானாகவே சரி என்று ஆடியது. அவர்கள் கொடுக்கும் காபியையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். அவ்வளவாக டீ/காபி சாப்பிட விரும்பாத நான் காபி வேணுமா எனக் கேட்டவுடன் சரி என்று சொல்லும் இடங்கள் இரண்டே இரண்டு. சீதாராமன் வீட்டிலும் மாமி மெஸ்ஸிலும்தான். ஆனால் அன்று வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். எப்போது கும்பகோணம் சென்றாலும் பன்னீர் சோடாவை ருசிக்காமல் திரும்ப மனம் வருவதில்லை. இப்பொழுது காபி சாப்பிட்டால் பன்னீர் சோடா சாப்பிட முடியாது என்பதால், காபியைத் தியாகம் செய்ய வேண்டியதாயிற்று.

நான்கு பேரும் இரண்டு வண்டிகளில் நாகேஸ்வரன் கோயிலை நோக்கிக் கிளம்பினோம். ஏற்கனவே மற்ற மூவரும் பலமுறை பார்த்திருக்கிறார்கள். எனக்கு இதுதான் முதல்முறை. ராம் இக்கோயிலைப் பற்றி நிறையக் கூறியிருந்ததால் அதிக எதிர்பார்ப்புடன் சென்றேன். நம் சின்ன பழுவேட்டரையர் கூட இருப்பதாகக் கேள்விப்பட்டேன். போகும் வழியெங்கும் சோடாக்கடை ஏதாவது கண்ணில் தென்படுகிறதா எனப் பார்த்தவாறே பத்மநாபனுடன் முந்தைய நாள் அனுபவங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். அன்று ஞாயிற்றுக்கிழமையாதலால் பல கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. ஒரு பீடாக்கடைக்கு அருகில் திறந்திருந்த சோடாக்கடையில் பத்மநாபன் வண்டியை நிறுத்தினார். ராமையும் சீதாராமனையும் அழைக்கலாம் எனப் பார்த்தால், அவர்கள் வெகு தொலைவில் சென்று கொண்டிருந்தனர். சரி! அவர்கள் காபி சாப்பிட்டு விட்டார்கள் அல்லவா? ஆகவே பன்னீர் சோடா சாப்பிட மாட்டார்கள் என எண்ணிக்கொண்டே கடைக்குள் நுழைந்தோம். பிறகு கோயிலுக்குச் சென்று அவர்களைக் காணாமல் தேடியபோதுதான் தெரிந்தது அவர்களுக்கும் சோடாவை விட மனசில்லை என்று.

அவர்கள் இருவருக்காகவும் காத்திருந்த நேரத்தில் நானும் பத்மநாபனும் வாயில் கோபுரத்தின் கட்டடக்கலைக்கூறுகளைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தோம். திரு. குடவாயில் பாலு அவர்கள் தனது கோபுரக்கலை மரபு புத்தகத்தில் கோபுரங்கள் முதலில் மாட்டுக் கொட்டிலின் வாயிலிலிருந்துதான் ஆரம்பித்ததாகக் கூறியிருந்ததைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோதுதான் மடிப்புக் கலையா சீதாராமனும் ராமும் வந்து சேர்ந்தார்கள். நான் முதலில் சின்ன பழுவேட்டரையர் எங்கே இருக்கிறார் எனக்கேட்டு அவசரப்படுத்த, கருவறைக்குப் பின்புறமிருக்கிறார் எனக்கூறி அழைத்துச் சென்றனர். அவரை நெருங்குமுன் இரண்டு பெண்கள் எங்கள் கவனத்தை ஈர்த்தனர். யார் இவர்கள்? குந்தவையும் வானதியுமா? ஆனால் மேலாடையின்றி இருப்பதால், அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க முடியாது என முடிவு செய்து கொண்டோம். யாராவது பணிப்பெண்கள் அல்லது நாட்டிய மங்கைகளாக இருக்கலாம். சின்ன பழுவேட்டரையரின் அரண்மனையில் இருப்பவர்கள் போலும்.

என்ன இருந்தாலும் பல்லவர் மற்றும் முற்சோழர் காலச் சிற்பங்களின் இயல்புத்தன்மைக்கு ஈடுகொடுக்கக் கூடிய பிற்காலச் சிற்பங்கள் மிக அரிது. உடல்வாகு என்ன! முகபாவனைகள் என்ன! சிகை அலங்காரம் என்ன! ஆஹா! நாள் முழுக்கப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். இப்பெண்கள் தலையில் சூடியிருக்கும் மலர்கள் கூட எத்தனை அழகுற வடிக்கப்பட்டுள்ளன! இந்தச் சோழநாட்டுச் சிற்பிகள் நிச்சயமாக மயன் ஆர்ட்ஸ் அண்ட் ஆர்க்கிடெக்சர் கல்லூரியில் முனைவர் பட்டம் பெற்றவர்களாகத்தான் இருக்க வேண்டும். தலையில் சூடிக்கொண்டிருக்கும் மலர்களை என்ன அழகாகக் காட்டியிருக்கிறார்கள்! கடியவலம்பிதத்தில் நின்றுகொண்டு (இடுப்பில் கையை வைத்துக்கொண்டு இருக்கும் நிலை) எதையோ வேடிக்கை பார்ப்பவர்கள் போல மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். மணிபல்லவம் கதையில் வரும் பூம்புகாரில் யவன மல்லர்களோடு மல்யுத்தம் புரிந்து கொண்டிருக்கும் இளங்குமரனை வைத்தகண் வாங்காமல் பார்க்கும் சுரமஞ்சரியையும் வசந்தமாலையையும் போல் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள் கவனத்தைக் கலைக்க முயன்றோம், முடியவில்லை. ஒருவேளை ஓவியன் மணிமார்பனை அழைத்து வந்தால் அவர்களைச் சுயநினைவுக்குக் கொண்டு வரமுடியுமோ என்னவோ!

கடிகாரத்தைப் பார்த்தால், மணி ஆறைத் தொட்டிருந்தது. இன்னும் இரண்டு மணிநேரம் இருக்கிறதே! சற்று ஆற அமர இவர்களை இரசித்துவிட்டுப் போகலாம். இவர்களும் என்ன ஈவ்டீசிங் புகாரா தரப்போகிறார்கள் என நினைத்தவாறே தரையில் அமர்ந்து கொண்டோம். சிறிது நேரம் கழித்து அவர்கள் காலருகே பார்த்தால், பல இன்ப அதிர்ச்சிகள் காத்திருந்தன. கோயில்களில் எங்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கக்கூடிய விஷயங்கள் இரண்டு. பூதவரியும் மினியேச்சர் சிற்பங்களும்தான். அங்கிருந்த மினியேச்சர் சிற்பங்களும் மிக அழகாக இருந்தன. புள்ளமங்கையைப் போலவே இங்கும் இராமாயணக் காட்சிகளும் இன்ன பிற புராணங்களும் இடம்பெற்றிருக்கின்றன.அனுமார் அசோகவனத்தில் சீதையைக் காணும் காட்சி.இராமன், சீதை, இலட்சுமணன் ஆகியோரைக் குகன் படகில் அழைத்துச் செல்வது.

இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும்போதுதான் சின்ன பழுவேட்டரையர் நமக்காகக் காத்துக் கொண்டிருப்பது நினைவுக்கு வந்தது. தாமதித்தால் சக்கரவர்த்தியைக் காண்பதற்கு அனுமதி மறுத்து விடப்போகிறார் எனப் பயந்து கொண்டே கருவறைக்குப் பின்புறம் சென்றோம். என்னடா இது! இவரும் கடியவலம்பிதத்தில் இருக்கிறாரே? இவருடைய சிகையலங்காரமும் மனதைக் கொள்ளை கொள்ளவல்லது. குழற்கற்றையா அல்லது தலைப்பாகையா என இனம் காணமுடியாதவாறு இருந்தது. எதையோ உற்றுப் பார்ப்பது போல் நின்றிருந்தார். ஒருவேளை வந்தியத்தேவனின் உடைகளைச் சோதனையிடுவதைப் பார்வையிடுகிறாரோ என்னவோ!நம்மையும் சோதனையிடுவாரோ என எண்ணிக் கொண்டிருந்தபோது, 'சோதனை சாதாரண மக்களுக்குத்தான்! ஆதித்த கரிகாலருக்கு அல்ல!' என்று கூறியதைப் போல் தோன்றியது. ஆ! இவரது அனுமதியின்றி இளையபிராட்டி கூடச் சக்கரவர்த்தியைக் காணமுடியாதே! இவர் ஏன் இப்படிச் சொல்கிறார்? மனதில் சந்தேகம் முளைவிட ஆரம்பித்தது. இவர் உண்மையிலேயே சின்ன பழுவேட்டரையர்தானா? முதலில் அந்தச் சிற்பத்துக்குக் கீழே பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறதா எனத் தேடினோம். கிடைக்கவில்லை. மேலாடையின்றி இருக்கிறாரே! இதற்கும் வாய்ப்பில்லை. கடைசிச் சான்று! அங்கிருக்கும் கல்வெட்டுகளில் மிகப் பழமையானது முதலாம் ஆதித்தருடையது. அக்காலத்தில் சின்ன பழுவேட்டரையர் வாழ்ந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, எல்லாக் கோணங்களிலும் ஆராய்ந்து பார்த்து அவர் சி.ப வாக இருக்க முடியாது என்ற முடிவுக்கு வந்தோம். பொ.செ நாடகத்தில் சி.ப வேடமேற்ற மனிதன் வேடத்தைக் கலைத்த பின் எப்படி இருப்பான் என்று காட்டும் சிற்பமாக வேண்டுமானால் கொள்ளலாம் என்று எண்ணியவாறே அடுத்த பக்கத்துக்கு நகர்ந்தோம்.

கருவறையின் வடக்குப்புறத்தில் உள்ள இரண்டு மினியேச்சர் சிற்பங்கள் எங்கள் கவனத்தைக் கவர்ந்தன. கட்டிலில் படுத்தவாறே ஒரு பெண் குழந்தைக்குப் பாலூட்டும் காட்சி அழகுற வடிக்கப்பட்டிருந்தது. தலையணை மீது ஒய்யாரமாகச் சாய்ந்து கொண்டு சுவாரசியமான நாவல் படிப்பதற்கு வசதியாகப் படுத்துக் கொள்வது போல் படுத்துக்கொண்டிருந்தாள் அந்தப்பெண். ஆனால் அந்த நாவலுக்குப் பதிலாகக் குழந்தை.இன்னொரு சிற்பத்திலும் ஒரு குழந்தைதான் இருந்தது. மல்லாக்கப் படுத்துக் கொண்டு கால் கட்டைவிரலை வாயில் வைத்துக் கடித்துக் கொண்டிருந்தது. இதை எங்கேயோ பார்த்திருக்கிறோமே என எண்ணிக் கொண்டிருந்தபோது, கோகுல் சாண்டல் பவுடர் டப்பாவிலிருக்கும் போட்டோ என்று ராம் நினைவுபடுத்திய பிறகுதான் தெரிந்தது. ஆம்! அதே ஆலிலை கிருஷ்ணன்தான்.அப்போதே மணி எட்டை நெருங்கிக் கொண்டிருந்தது. எனவே, கிளம்ப ஆயத்தமானோம். வீட்டிற்கு வரும் வழியில் ஐநூறு ரூபாய்க்குச் சில்லறை வேண்டி இன்னொரு பன்னீர் சோடா அடித்து விட்டு வந்தோம். வீட்டை அடைந்தவுடன் எங்கள் பெரியண்ணனிடமிருந்து போன். கடும் மழைக்கிடையே பயண நினைவுகளை அசைபோட்டுக் கொண்டே சேத்தியாதோப்பைக் கடந்து சென்றுகொண்டிருப்பதாகக் கூறினார். சென்னைவாசிகள் சென்ற சிற்றுந்து ஞாபகம் வந்தது. அடடா! கொளுத்தும் வெயிலிலேயே நம் ஓட்டுனர் 40-50 க்கு மேல் ஓட்ட மாட்டாரே! நாளை காலைதான் சென்னை சென்று சேர்வார்களோ என எண்ணி அவர்களைத் தொடர்பு கொள்ள முயற்சித்தோம். யாருக்கும் சிக்னல் இல்லை. இதற்குள் சுடச்சுட இட்லி தயாராக இருந்தது. அதன் சுவையை என்னால் வார்த்தைகளில் விளக்க முடியாது. அடுத்தமுறை சீதாராமன் வீட்டிற்குச் செல்லும்போது நீங்களே சுவைத்துத் தெரிந்து கொள்ளவும்.

பிறகு கே.பி.என் அலுவலகத்தில் பேருந்துக்காகக் காத்திருந்தபோது அதிர்ஷ்டவசமாக ஸ்வேதாவுக்கு லைன் கிடைத்தது. திண்டிவனம் அருகே வண்டி ப்ரேக் டவுன் ஆகி நின்றுவிட்டது. என்ன செய்வது எனத் தெரியவில்லை எனக் கூறினார். சாப்பிட்டு விட்டீர்களா எனக்கேட்டபோது 'சாப்பாடு கூடத் தேவையில்லை! வண்டி சரியாகி விட்டால் போதும்' எனப் பாவமாகக் கூறிவிட்டு, நீங்கள் சாப்பிட்டீர்களா எனக் கேட்டார். ஏற்கனவே பசியோடு இருப்பவர்களை மேலும் கடுப்பேற்ற வேண்டாமென எண்ணி, இட்லி வத்தக்குழம்பைப் பற்றிக் கூறாமல், 'ம், சாப்பிட்டோம்' என்று கூறிவிட்டுப் பேருந்தில் ஏறி அமர்ந்தோம். பிறகு நடுவழியில் எஸ்பி அவர்களுக்கு அபயமளித்ததை அடுத்த நாள் சதீஷிடமிருந்து தொலைபேசி மூலம் அறிந்து கொண்டோம்.
this is txt file�
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.