http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 16
இதழ் 16 [ அக்டோபர் 16 - நவம்பர் 15 ] இந்த இதழில்.. In this Issue.. |
இரண்டு மாதங்களுக்கு முன்பு, ஸ்ரீநிவாஸ நல்லூரில் முதல் வலத்தில் உங்களை நிற்கவைத்துவிட்டு, இரண்டு மாதங்களாகக் கட்டுரையைத் தொடராமல் இருந்துவிட்டேன். மன்னித்துக் கொள்ளவும்.
சரி உங்கள் முதல் வலத்தை இப்பொழுது தொடங்கலாம். கோயிலின் தெற்குப்பகுதியில் இருக்கும் பிக்ஷாடனரை முதலில் பார்க்கலாம். தன் சடையையே கிரீடம் போல் அலங்கரித்து, காதிரண்டும் நன்கு தொங்கும்படி, ஒரு காதில் மகர குண்டலமும், மறு காதில் பனையோலைக் குண்டலமும் அணிந்திருக்கிறார், கழுத்தில் சரபளியும், தோள்களில் நாகப்பூண்களும் அணிந்து, கவரி தன் தோளில் விழுமாறு, இடதுகையில் கவரியின் காம்பைப்பிடித்தபடி, லேசான புன்முறுவலுடனும், அமைதியான முகத்துடனும் விளங்கும் அந்த பிக்ஷாடனரை ஒருமுறை பார்த்துவிட்டால், உங்களால் மறக்க முடியாது. குறிப்பாக பிக்ஷாடனரின் கண்களை நோக்குங்கள், அட இது என்ன, அவரும் அல்லவோ உங்களை பார்த்தபடியிருக்கிறார், அரைக் கண்கள் திறந்த நிலையில். ஆஹா! இப்படி அந்த பிக்ஷாடனர் உங்களை பார்க்கும் வகையில் அமைத்த அந்த சிற்பிக்கு வந்தனம் தெரிவித்துவிட்டு அடுத்திருக்கும் தக்ஷிணாமூர்த்தியைக் காண நகருங்கள். தக்ஷிணாமூர்த்திக்கு அடுத்தார்போல் இருப்பவர் இரண்டு கையையும் மடித்துக்கட்டிக்கொண்டு நிற்கும் அழகைப்பாருங்கள். வில் போன்ற புருவத்தையும் அரக்கர்களுக்கேயுரிய கோரைப்பல்லுடன் கூடிய இவர், நீ என்னை ஏதாவது பண்ணினாயோ (உடனே அப்பெண்கள் சங்கூதுவார்கள், இவர்கள் ஊதினால் அவர்கள் வருவார்கள் என்று சொல்லும் ரஞ்சன் பாணியில்) நான் ஒன்றும் செய்யமாட்டேன், என் இடுப்பில் இருக்கும் புலி உன்னைப் பதம் பார்த்துவிடும் என்று சொல்லாமல் சொல்கிறார். அவர் இடுப்பிலே கட்டியிருக்கும் கச்சில், சீறியபடி இருக்கும் ஒரு புலிமுகம். புலிமுகக்கச்சு இருந்தாலே அது இராஜராஜன் காலத்தியது என்று சிலர் தவறாகக் குறிப்பிடுகின்றனர். இராஜராஜர் காலத்திற்கு முன்பும் புலிமுகக்கச்சு இருந்தது என்பதற்கு இது ஒரு சான்று. மேலும் நார்த்தமலையில் உள்ள முத்தரையர் கோயிலில் இருக்கும் 12 விஷ்ணு உருவங்களிலும் இந்த புலிமுகக்கச்சு காணக்கிடைக்கிறது. இதையெல்லாம் விட முக்கியமாக பார்க்கவேண்டிய ஒன்று அங்கே இரண்டு கன்னியருக்கும் நடுவில் உயரத்தில் அமைந்திருக்கும் மகர தோரணம். யாளிகளை ஓட்டிக்கொண்டிருக்கும், பாலகர்கள் போன்று தோற்றமளிக்கும் வீரர்கள், யாளிகளின் வாயிலிருந்து புறப்பட்டதுபோல் அமைக்கப்பட்டிருக்கும் வீரர்களின் அணிவகுப்பு, அவர்கள் போரிடும் திறன், அந்த வீரர்களின் அணிவகுப்பின் கீழே இருக்கும் பூதவரி (எருமைத்தலையுடன் கூடிய ஒரு உருவமும் இருக்கிறது), இவையெல்லாம் சுற்றியிருக்க, நடுவில் பூமாதேவியை மடியில் சுமந்திருக்கும் வராஹ மூர்த்தி இவற்றையெல்லாம் பார்க்கலாம். இன்னும் நன்றாக பார்க்க, அங்கே தூண்களில் கால் வைத்து ஏறிப்பார்த்தால், வராஹ மூர்த்தியின் உருவத்திற்குக் கீழே அவரை வணங்கியபடியிருக்கும் நாகராஜனையும் இராணியையும் பார்ப்பீர்கள். அந்த வராஹா சிற்பத்தொகுதி மிகவும் சிறியது. அதுவும், கீழேயிருந்து சுலபத்தில் பார்த்துவிடமுடியாது என்றாலும் அலட்சியம் காட்டாமல் அந்த நாகராஜனையும் இராணியையும் நன்கு நேர்த்தியாய் செதுக்கியிருக்கும் விதம், அந்த நாகராஜனின் புன்னகையின் அழகு இதையெல்லாம் பார்த்து வியக்காமல் இருக்க முடியாது. இந்த வராஹ மூர்த்தியின் வீரத்தையும், அவர் பூமாதேவியை அணைத்திருப்பதிலிருந்து தெரியும் வாஞ்சையையும் இவ்வளவு சிறிய உருவிலும் கொணர்ந்திருக்கும் அந்த சிற்பிகளை பாராட்டாமலும் இருக்க முடியாது. வராஹாவின் மேலிருக்கும் பூதகணங்களை நன்றாக பாருங்கள். குறிப்பாக, வராஹாவிற்கு மேல் இருகைகளின் ஆள்காட்டி விரலால் வாயைக் இழுத்துக்கொண்டு கேலிசெய்யும் பூதத்தையும் (அதன் வயிற்றுப்பகுதியில் இன்னொரு முகமும் இருக்கும்), வராஹாவின் வலப்புறத்தில் கோடியில் "நீ குடுக்கவில்லை என்றால் போ" என்று சொல்லிவிட்டு கோபத்துடன் ஒரு ஓரத்தில் போய் அமர்ந்து கொள்ளும் குழந்தையைப் போல் முகத்தை வைத்துக்கொண்டிருக்கும் பூதத்தையும் பார்த்தால் என்ன தோன்றுகிறது. நான் முதலில் சொன்ன பூதம் இரண்டாம் பூதத்தை பார்த்து பழிப்பு காட்டுவது போலவும், அந்த இரண்டாம் பூதம் அதனாலே (குழந்தை பாஷையில் "கா" விட்டு) முகத்தைத் திருப்பிக் கொண்டிருப்பது போலவும் தோன்றவில்லை!! அடுத்தார்போல், வலது பின் கையில் அக்கமாலை ஏந்தி, இடது பின் கையில் தாமரை மொட்டேந்தி, இடது முன்கையை தொடையில் இருத்தி, (வலது முன்கை உடைந்திருப்பதால் தெரியவில்லை, அபய ஹஸ்தத்தில் இருந்திருக்க வேண்டும்), நான் முகத்துடன் (ஒரு முகம் பின்னால் மறைந்துள்ளது) இருப்பவர் உங்களுக்குத் தான் தெரியுமே படைக்கும் தொழிலைக்கொண்டுள்ள பிரம்மா தான். கிரீடம், காதுகளில் குண்டலங்கள், கழுத்தில் பெரிய பட்டிகை, இடுப்புக்கு மேலே உதரபந்தம் அணிந்து, பாதம் வரையிலான மடிப்புகளுடன் கூடிய பட்டாடையினராய், அவ்வாடையின் முடிச்சுகள் இருபுறமும் நன்றாக சரிய நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். மேலே சொன்னவற்றையெல்லாம் பார்த்தபிறகு முதல் வலத்தை முடித்துக்கொண்டு இரண்டாம் வலம் வரத் தயாராகுங்கள். இரண்டு மற்றும் மூன்றாம் வலங்களில் நீங்கள் காணவேண்டியவற்றை அடுத்த இதழில் காணலாம். (தொடரும்) this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |