http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[178 Issues]
[1762 Articles]
Home About US Temples Facebook
Issue No. 16

இதழ் 16
[ அக்டோபர் 16 - நவம்பர் 15 ]


இந்த இதழில்..
In this Issue..

கற்றளி கட்டிய காரணம்
பகவதஜ்ஜுகம் - 5
கோயில்களை நோக்கி - 4
பனைமலையில் ஒரு மாலைப்பொழுது
ஸ்ரீனிவாசநல்லூர் பயணம் - 2
சிந்து வெளியில் முருகன் - திரு. ஐராவதம் மகாதேவனின் மறுமொழி
ஜி.என்.பாலசுப்ரமணியம்
சங்கச் சிந்தனைகள் - 4
இதழ் எண். 16 > கலையும் ஆய்வும்
கோயில்களை நோக்கி - 4
அர. அகிலா, இரா. கலைக்கோவன்
தலைப்பெழுத்துக்களைத் தவிக்க விடலாமா?

கோயில்களில் என்ன இருக்கிறது, ஏன் இவற்றைக் காப்பாற்ற வேண்டும், இவற்றால் என்ன பயன் என்று பலப்பல கேள்விகள்! கேட்பவர்கள் இல்லாமல் இல்லை.

கோயில்களில் என்ன இருக்கிறது? இந்தக் கேள்வியை இப்படியும் கேட்கலாமே. கோயில்களில் என்ன இல்லை? கோயில் நம்முடைய சமய நம்பிக்கைகளின் பிரதிபலிப்பு. இறை நம்பிக்கை கொண்டவர்கள் தொழக் கூடும் இடம்; சமுதாயத்தை ஒருங்கு திரட்ட, சமுதாயமே அமைத்துக்கொண்ட கூட்டமைப்பு. அந்த நாட்களில் எந்த ஒரு முக்கியமான செய்தியைப் பற்றி விவாதிக்கவும் முடிவெடுக்கவும் இந்தக் கோயில்களில் தான் ஊர் கூடிப் பேசியது.

கூட்டம் குறைவறக் கூடியிருந்து பேசித் தீர்த்ததாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன. இப்படி மக்கள் கூடி ஊர் நலம் பேசுவதற்காகவே இங்கு மண்டபங்கள் கட்டப்பட்டன. இன்று தூங்குவார் தூங்க, பிழைப்பற்று ஏங்குவார் ஏங்க இடம் தந்திருக்கும் இந்த மண்டபங்கள் அந்த நாட்களில் அலைமோதும் மக்கள் கூட்டங்களால் மகிழ்ந்திருந்தன. ஊரவைக் கூட்டங்களும் கோயில் நிர்வாகிகளின் கூட்டங்களும், இவை நடைபெறாத நாட்களில் மக்களுக்கு அறிவுத் தெளிவூட்டும் சொல்லரங்குகளும் வழிகாட்டும் வாழ்க்கை விளக்கங்களாய் இசை, ஆடல் நிகழ்வுகளும் நடைபெற்றன. கோயில் சுவர்களில் நம்மால் சுண்ணாம்படிக்கப்பட்டு வேகவைக்கப்பட்ட கல்வெட்டுகள் அந்த வேதனையிலும் வெளிப்படுத்தும் வரலாற்று வெளிச்சங்கள் இவை.

பரந்த திருச்சுற்றுகளும் சுற்றிலும் நீண்டகன்ற மாளிகைகளும் தொலைநோக்குடன் எழுப்பப்பட்டன. ஊர் தொடர்பான அனைத்து நல்ல நிகழ்ச்சிகளுக்கும் இம்மாளிகைகள் இடமளித்தன. கோயிலுக்கு வருவோர் அமர்ந்து பேசவும் திருச்சுற்றில் நடந்து உடலுக்கு உரமேற்றவும் முடிந்தது. இன்றோ திருமண மண்டபங்களில் தான் எந்த நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது. அது பெருமைக்குரியதாகவும் கருதப்படுகிறது. கோயில் வசதியற்றவர்களின் நிகழ்ச்சிகளுக்குத்தான் என்ற கருத்து வேரோடிப் போய்விட்டது.

இறை வாழும் திருத்தலமான கோயில்களைப் பிறநாடுகளில் எப்படிக் காப்பாற்றுகிறார்கள் என்பதைப் பார்க்கும்போது ஏன் இங்கு மட்டும் இப்படி என்று மனம் மயங்குகிறது. அந்தந்த ஊர் மக்கள் அந்தந்த ஊர்க் கோயில்களைப் பராமரித்தால்கூடப் போதுமே என்று நினைக்கத் தோன்றுகிறது. நம்மை நெறிப்படுத்தும் சமயத்தின் பொருள் விளக்கமான இக்கோயில்கள் இறை மட்டும் வாழும் இடமில்லை. நம் முன்னோர்கள் தங்கள் கனவுகளுக்கு உரமூட்டி நினைவுகளை வளர்த்துக் கொண்ட வாழ்க்கைத் தடங்கள். அவர்களின் பண்பாட்டுத் தாக்கங்களைப் பல்வேறு வடிவங்களில் சிறைபிடித்துக் கொண்டிருப்பவை.

ஒரு மனிதனுக்கு வரலாறு முக்கியமல்லவா? தன் தந்தையும் தாயும் யாரென்பது சமுதாயத் தேவையல்லவா? பரம்பரை என்பது பண்புகளை வெளிக்காட்டும் விளைச்சல் நிலமல்லவா? இந்த உட்கூறுகளில்தானே அறிவியல் கூட இன்று அசுர சாதனைகளுக்கு விரைந்து வித்திடுகிறது. நடந்து வந்த பாதைகள் தெரியவில்லை என்றால், இருக்கும் அநுபவப் பாடங்கள் கிடைக்கவில்லையென்றால் அடுத்த அடியை எங்கே வைப்பது?

இழந்துவிட்ட ஒன்றுதான் என்றாலும் நேற்று மிகமுக்கியமானது. அதுதான் நாளையைத் திட்டமிட இன்றைக்கு உதவுகிறது. கோயில்கள் நேற்றைய வாழ்வின் சுவடுகள். ஆயிரத்தைந்நூறு ஆண்டுக் கால மனித வாழ்க்கை விட்டுப்போயிருக்கும் சரித்திர மிச்சங்கள் இன்று ஊருக்கு ஊர் கோயில்களாய் நின்று நம்மைத் திரும்பிப் பார்க்குமாறு கெஞ்சுகின்றன. அவை பயனடையவா? இல்லை நமக்கு வழிகாட்ட. அலட்சியப்படுத்தி, அலங்கோலமாகிப்போன வாழ்க்கையில் ஆழ அமிழ்ந்து போயும் கூடக் கண்திறக்காத நிலை நமக்கு. மேடைகளில் முழங்கும் மனிதநேயம் தெருக்களில் இல்லை. அன்றைக்குக் கோமகனும் குடிமகனும் கைகோத்திருந்தனர். இராஜராஜீசுவரத்துக் கல்வெட்டுப் பேசுகிறது; தம்முடைய போர் வீரர் ஒருவரின் நலத்திற்காக சோழப் பேரரசர் முதலாம் இராஜராஜர், தஞ்சாவூர்த் திருக்கோயிலில் வேண்டுதல் வைத்து விளக்கெரித்துள்ளார். பசித்திருந்தவர்களுக்குப் பணி தந்து சோறளித்தது கோயில். கருத்திட்டைக்குடிக் கல்வெட்டுக் காட்டும் பாடம் இது.

தண்ணீருக்குத் தவிக்கும் இந்த நாளில், 'குடிமராமத்து' கொணரும் திட்டங்கள் சிந்திக்கப்படுகின்றன. இந்தக் குடிமராமத்து பற்றிய அத்தனை தகவல்களும் எங்கிருக்கின்றன தெரியுமா? கோயில் சுவர்களில். ஊர்க் குளங்களையும் ஏரிகளையும் எப்படிக் காப்பது, அவற்றின் கரைகளை யார் பலப்படுத்துவது, மண்ணள்ளுவது எப்போது, படகுகள் பராமரிப்பது எப்படி? ஒரு கல்வெட்டா, இரண்டு கல்வெட்டுகளா! கணக்கற்ற கோயில்களில் காலம் காலமாய் வெட்டிவைத்திருக்கும் கல்வெட்டுகள் கண்காட்டுகின்றன. இந்தக் கல்வெட்டுகளை நாம் அழிக்கிறோம். நமக்குத்தான் நல்லதே பிடிக்காதே.

தேர்தல் சீர்திருத்தங்கள் நாளும் பொழுதும் நாட்டைக் கலக்குகின்றன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சோழர் காலத்தில் நடந்த ஆள்தேர்வு முறையை உத்திரமேரூர் வைகுந்தப் பெருமாள்கோயில் கல்வெட்டு விரிவாகக் காட்டுகிறது. தேர்தல் நடைமுறையில் செய்யப்பட்ட மாற்றங்களைப் பற்றியும் கல்வெட்டுகள் விளக்குகின்றன.

இன்றைக்கிருக்கும் இசைக் கருவிகளில் எது நம்முடையது? எது வெளியிலிருந்து வந்தது? கோயில் சிற்பங்களின் துணையில்லையென்றால் எப்படி முடிவுக்கு வரமுடியும்? ஆடையலங்காரங்கத்திலும் அணிமணித் தேர்ச்சிகளிலும் இன்றைய நாகரிகம் உச்சத்தில் இருப்பதாகப் பலர் நினைக்கிறார்கள். அப்படி நினைப்பவர்கள் கோயில்களுக்கு வாருங்கள். அங்குள்ள சிற்பங்களின் அணிமணிகளைப் பாருங்கள். பல்லவக் குமரியின் மெல்லிய கழுத்தணி மாமல்லைக் கடலோரக் காற்றோடு கண்களை மயக்கும். குடந்தைக் கீழ்க்கோட்டச் சோழப் பேரழகியர், கூடுதல் அணிகளின் எண்ணற்ற வடிவமைப்புகளை உங்களுக்குக் கற்றுத்தருவர். நாயக்கப் பெண்களோ இதுதான் நாகரிக உச்சமென்ற உண்மையை உணர்த்துவர்.

ஆடற்கலை கற்கவும் அழகோடு நிற்கவும் எங்கே கற்பது? கோயில்களில்தான். எத்தனை ஒயிலாய் எப்படி ஒசிந்து நிற்கும் சிற்பங்கள்! இப்படி நின்றால் எப்படியிருக்கும்? முயன்று பார்ர்காக் கோயில்கள் உதவும்.

கல்வெட்டுகள் மூலம் வரலாறு காட்ட, சிற்பங்கள், ஓவியங்கள் வழி நம் பண்பாடு புகட்ட, கட்டமைப்புகள் காட்டி நம் அறிவியல் வல்லமை எடுத்துரைக்க, சுற்றுவெளிகளால் நமக்கு நலவாழ்வு மந்திரம் போடக் கோயில்கள் காத்திருக்கின்றன. இந்தக் கோயில்களின் பயன்களை உணராமல் போனதால், இவை உடலுக்கும் உள்ளத்திற்கும் உரமூட்டும் என்பதை விளங்கிக்கொள்ளாமல் பரபரப்பான வாழ்க்கையென்ற பொய்யான போர்வைக்குள் பித்துப்பிடித்து ஒடுங்கிப்போய் அமைதியிழந்து, எது வாழ்க்கை என்பதையே உணராமல் மருகிக் கிடக்கிறோம்.

கோயில்களில் நலம் கிடைக்கிறது. அமைதி, ஆனந்தம் கிடைக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாய் அங்குதான் நம் வாழ்க்கை இருக்கிறது. நாம் யாரென்பதை நமக்கு அடையாளம் காட்டும் தலைப்பெழுத்துக்கள் அவை. அவற்றைத் தவிக்கவிடலாமா?

this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.