http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[179 Issues]
[1772 Articles]
Home About US Temples Facebook
Issue No. 27

இதழ் 27
[ செப்டம்பர் 16 - அக்டோபர் 15, 2006 ]


இந்த இதழில்..
In this Issue..

அர்ச்சகர்கள் - தகுதிகளும் பயிற்சிகளும்
கதை 8 - தேவன் தொட்ட சுனை (பகுதி 1)
வரலாற்றின் வரலாறு - 5
மெய்ப்பொருள் காண்பது அறிவு
தமிழ்நாட்டின் தொடக்கக் காலக் கலை வரலாறும் குடைவரைகளும்
மகேந்திரரின் விருதுப்பெயர்கள்
மும்மூர்த்தி - இலக்ஷிதாயனக் கோவில் (மண்டகப்பட்டு)
உடையார்குடி கல்வெட்டு - ஒரு மீள்பார்வை - 3
இரண்டாண்டு நிறைவு வாழ்த்துச்செய்திகள்
இதழ் எண். 27 > அறிஞர் பக்கம்
உடையார்குடி கல்வெட்டு - ஒரு மீள்பார்வை - 3
குடவாயில் பாலசுப்பிரமணியன்

சாசனம் குறிப்பிடும் நிலம்

இச்சாசனம் இரண்டே முக்கால் வேலி 1 மா நிலத்தையும், அகமனை ஆறையும் வாங்கியதாகக் குறிக்கின்றது. வியாழ கஜமல்லனால் இவையனைத்தும் ஸ்ரீபராந்தக வீரநாராயண சதுர்வேதி மங்கலத்து பெருங்குறி மகாசபையோரிடமிருந்து வாங்கப் பெற்றது என்பதை இச்சாசனத்தின் ஆறாம் வரி 'சபையார் பக்கல்' என்று தெளிவாக உரைக்கின்றது. பக்கல் எனும் ஏழாம் வேற்றுமை உருபு பற்றி சோழர் கல்வெட்டொன்று (SII, VI, 356) "யானிவர் பக்கல் விலைக்குக் கொண்டுடையன" என்று கூறுவதை நோக்கும்போது இங்கு நிலத்தை விற்றது பெருங்குறி சபையே என்பது உறுதியாகின்றது. ஸ்ரீவீரநாராயண சதுர்வேதிமங்கலம் பிரமதேயமாகவும், அது பெருங்குறி பெருமக்கள் நிருவாகத்திற்குரிய ஒரு சதுர்வேதிமங்கலமாகவும் திகழ்ந்தது என்பதை இச்சாசனத்தின் முதல்வரி தெள்ளத் தெளிவாக உரைக்கின்றது.

நிலத்தைத் தனிநபர் ஒருவரின் அறக்கட்டளைக்காக விற்ற பெருங்குறி மகாசபையோர் அந்நிலத்தின் முன்னைய வரலாற்றை மேற்படி விற்பனைச் சாசனத்தில் குறிப்பிட்டுள்ளனர். ஆதித்த கரிகாலனைக் கொன்ற இராஜ துரோகிகள், அவர்களின் தாயத்தார்கள், நெருங்கிய உறவினர்கள் ஆகியோருடைய நிலங்கள் முழுவதும் முன்பு அரசு ஆணைக்கு ஏற்ப ஸ்ரீபராந்தக வீர நாராயண சதுர்வேதி மங்கலத்து பெருங்குறி மகாசபையால் கையகப்படுத்தப் பெற்று, அவர்கள் பொறுப்பில் அந்நிலங்கள் முழுவதும் இருந்துள்ளது. இது எந்த சோழ அரசரின் ஆணையின் பேரில் எப்போது கையகப்படுத்தப் பெற்றது, அந்த நிலங்களின் அளவு எவ்வளவு என்பன போன்ற விவரங்கள் இச்சாசனத்தில் குறிக்கப்படவில்லை. அச்செய்திகள் சபையோர் ஆவணத்திலும், அரசு ஆவணங்களிலும் பதிவு பெற்ற செய்திகளாகும்.

கொலைக் குற்றம் புரிந்தவர்கள், தாயத்தார், உறவினர் எனப் பலரிடமிருந்தும் கையகப்படுத்தப் பெற்று சபையின் மேற்பார்வையில் இருந்த நிலங்களில் ஒரு பகுதியாக இருந்த மலையனூரான் ரேவதாச கிரம வித்தன், அவன் மகன், அவன் தாய் பெரிய நங்கைச் சானி என்ற மூவரின் உடைமையான 2 1/4 வேலி 1 மா நிலம், அகமனை ஆகியவற்றை மட்டுமே 112 கழஞ்சு பொன் விலையாகப் பெற்றுக் கொண்டு வியாழ கஜமல்லனுக்கு விற்றனர். எனவேதான் அந்நிலத்தின் முந்தைய உரிமையாளர் பற்றிய விவரங்களை இக்கல்வெட்டுச் சாசனத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

குற்றவாளிகளின் உடமை என அரசு கையகப்படுத்திய நிலங்களை சபையோர் விற்பனை செய்வதற்காக இரு கண்கானிப்பாளர்களை மாமன்னன் முதலாம் இராஜராஜன் தன் இரண்டாம் ஆட்சியாண்டில் நியமித்தான். கொட்டையூர் பிரம்மஸ்ரீராஜன், புள்ளமங்கலத்து சந்திரசேகர பட்டன் ஆகிய இருவரும் அப்பணியை மேற்கொள்ளவும், ஸ்ரீவீரநாராயண சதுர்வேதிமங்கலத்து பெருங்குறி மகாசபையோர் அந்நிலங்களை விற்று அவ்வூர் நிதியில் சேர்க்க வேண்டும் (தலத்திடுக) என்றும் ஸ்ரீமுகம் (ஆனைக்கடிதம்) அனுப்பியிருந்ததைத்தான் இச்சாசனம் முற்பகுதியில் முந்தைய அனுமதியாகவும், மேற்கோளாகவும் சுட்டுகின்றது.

இவ்வாறு குறிப்பிடப் பெற்றுள்ள ஸ்ரீமுகத்தினை சாஸ்திரியார் அவர்கள் இராஜராஜனின் இரண்டாம் ஆட்சியாண்டில்தான் குற்றம் கண்டுபிடிக்கப் பெற்றதாகவும், குற்றவாளிகளின் நிலங்கள் கையகப்படுத்தப் பெற்றதாகவும் கருதுவது ஏற்புடையதன்று. இச்சாசனத்தில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப் பெற்றது பற்றியோ, அவர்களிடமிருந்து கையகப்படுத்தப் பெற்ற நிலங்களின் முழு விவரங்களோ பதிவு செய்யப் பெறவில்லை என்பதை நோக்குதல் வேண்டும். சுந்தர சோழரின் ஆட்சிக் காலத்திலோ, மதுராந்தக உத்தம சோழரின் ஆட்சிக் காலத்திலோ கையகப் படுத்தப் பெற்ற நிலங்களைப் பின்னாளில் சபையோர் இருவர் கண்காணிப்பில் விற்பதற்குரிய உரிமையை இராஜராஜன் வழங்கியதைத்தான் இச்சாசனம் குறிப்பிடுகின்றது. அவ்வாணையை பெற்ற ஊர் சபையோர் அதன்பின்பு ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் கழித்து விற்பனை செய்த ஒரு சிறு கூறு நிலம் பற்றியே இச்சாசனம் பேசுகின்றது. குற்றவாளிகளின் நிலங்களைக் கையகப்படுத்த இராஜராஜன் வழங்கிய மூல ஆணையாக இந்த ஸ்ரீமுகத்தைக் கருதியதால்தான் பல வரலாற்றுக் குழப்பங்களை ஆய்வாளர்கள் சந்திக்க நேர்ந்தது.

கொலையாளிகளும் சுற்றத்தாரும்

உடையார்குடிக் (ஸ்ரீபராந்தக சதுர்வேதி மங்கலத்து திருவனந்தீஸ்வரத்துக்) கல்வெட்டு ஆதித்த கரிகாலனைக் கொன்ற துரோகிகள் மற்றும் அவர்தம் உறவினர்கள் பற்றி பின்வருமாறு குறிக்கின்றது.

"பாண்டியனைத் தலைகொண்ட கரிகால சோழனைக் கொன்று துரோகிகளான சோமன் . . . . றம்பி ரவிதாசனான பஞ்சவன் பிரமாதி ராஜனும் இவன் றம்பி பரமேஸ்வரன் ஆன இருமுடிச் சோழபிரமாதிராஜனும், இவர்கள் உடப்பிறந்த மலையனூரானும், இவர்கள் தம்பிமாரும் இவர்கள் மக்களிலும், இவர் பிரமாணிமார் பெற்றாளும், இ . . . . . ராமத்தம் பேரப்பம் மாரிடும், இவகள் மக்களிடும், தாயோடுடப் பிறந்த மாமன் மாமன்மாரிடும் இவகள் உடப்பிறந்த பெண்களை வேட்டாரினவும், இவகள் மக்களை வேட்டாரினவும் ஆக இவ்வனைவர் முடைமையும் . . . " என்று கூறும் கல்வெட்டுச் செய்தியினை ஆழ்ந்து நோக்கும்போது சோமன், அவன் தம்பி ரவிதாசனான பஞ்சவன் பிரமாதிராஜன், அவன் தம்பி பரமேஸ்வரன் ஆன இருமுடிச் சோழப் பிரமாதிராஜன் ஆகிய மூவர் மட்டுமே ஆதித்த கரிகாலனைக் கொன்ற துரோகிகள் என்பதும், மற்ற அனைவரையும் இக்கல்வெட்டு கூறும்போது இவகள் (இவர்கள்) என்ற சொல்லோடு தொடர்வதால் அவர்கள் குற்றவாளிகளோடு உறவின்முறையில் தொடர்புடையவர்கள் மட்டுமே என்பதும் புலனாகின்றது.

இச்சாசனத்தில் விற்கப்பெற்ற நிலத்திற்குரியவனான மலையனூரானான பாப்பனச்சேரி ரேவதாச கிரம வித்தன் என்பான் கொலையாளிகள் மூவருடைய தம்பி என்பதும், அவன் கொலையில் ஈடுபட்டவன் அல்லன் என்பதும் நன்கு விளங்கும். தாயத்தார் அனைவரும் குற்றமுடையவர்களே என்ற அடிப்படையில்தான் அவனது நிலமும் அவன் குடும்பத்தார் நிலமும் இங்கு விற்பனைக்குள்ளானது, எனவே கொலையில் நேரடித் தொடர்புடையவர்களான சோமன், ரவிதாசன், பரமேஸ்வரன் ஆகிய மூவருடைய நிலம் பற்றியோ அல்லது அகமனைகள் பற்றியோ இக்கல்வெட்டில் விற்பனை நிலமாகப் பேசப் பெறவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கதாகும்.

பிரமாதிராஜன் எனும் விருது அரசனால் உயர்நிலை வகிக்கும் (பெருந்தரத்து அலுவலர்) அந்தணர்களுக்கு மட்டுமே வழங்கப் பெறுவதாகும். இங்குக் கொலைக் குற்றவாளியாகக் கூறப் பெற்றிருக்கும் மூவரில் சோமன் பெற்ற விருதுப் பெயர் கல்வெட்டில் சிதைந்துள்ளது. இரண்டாமவன் ரவிதாசனான பஞ்சவன் பிரமாதிராஜன்; மூன்றாமவன் பரமேஸ்வரனான இருமுடிச் சோழ பிரமாதிராஜன். பஞ்சவன் பிரமாதிராஜன் என்ற விருது பஞ்சவர் என அழைக்கப்பெறும் பாண்டிய அரசர்கள் தங்கள் பிராமண அதிகாரிகளுக்கு அளிக்கும் விருதாகும். இருமுடிச் சோழ பிரமாதிராஜன் என்ற விருது சோழப் பேரரசனால் வழங்கப் பெற்றதாகும். இவ்விருவர் விருதுகளை வைத்து நோக்கும்போது முதலாமவனாகிய சோமன் நிச்சயம் பாண்டி நாட்டு பிரமாதிராஜன் விருது பெற்றவனாகவே இருந்திருத்தல் வேண்டும்.

ஆதித்த கரிகாலனின் கொலைக்குரிய திட்டம் பாண்டிய நாட்டிலேயே உருவானது என்பது திண்ணம். கொலையுண்ட ஆதித்த கரிகாலன் தன் கல்வெட்டுக்களில் "வீரபாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரி வர்மன்" எனக் கூறிக் கொள்வதை ஆராய்ந்த நீலகண்ட சாஸ்திரியார் கரிகாலன் வீரபாண்டியனின் தலையைத் துண்டித்திருக்க மாட்டான் என்றும். அவனை வெற்றி கொண்டதையே இவ்வாறு குறிப்பிட்டிருப்பான் என்றும் கூறுகிறார் (6). ஆனால் நீலகண்ட சாஸ்திரியார் மறைவிற்குப் பின்பு அண்மையில் எசாலம் (விழுப்புரம் வட்டம்) எனும் ஊரில் புதையுண்டு வெளிப்பட முதலாம் இராஜேந்திர சோழனின் செப்பேட்டுத் தொகுதியில் ஆதித்த கரிகாலன் பாண்டியனின் தலையைக் கொய்து, ஒரு கழியில் சொருகி, தஞ்சாவூர் அரண்மனை வாயிலில் நட்டு வைத்தான் என்று கூறுகிறது (7), போர்த் தர்மத்தையும் மீறி ஆதித்த கரிகாலன் செய்த அடாத செயலுக்குப் பழி தீர்க்கும் வகையில்தான் இக்கொலை நிகழ்ந்துள்ளது.

ஸ்ரீபராந்தக வீரநாராயண சதுர்வேதி மங்கலத்தில் (உடையார்குடியில்) பிறந்து பாண்டிய மன்னர்களிடமும் சோழப் பேரரசர்களிடமும் உயர்நிலை அலுவலர்களாக விளங்கிய உடன்பிறந்தோர் மூவரும் தங்கள் திட்டம் நிறைவுற்ற பிறகு, அவர்கள் நிச்சயம் சோழ நாட்டில் இருந்திருக்க வாய்ப்பே இல்லை. அதுவும் பாண்டிய அரசுக்காக இச்செயலைச் செய்ய முன்வந்தவர்கள் பாண்டிய நாட்டில் அல்லது அவர்களுக்குச் சார்புடைய கேரள நாட்டிற்குச் சென்று சிறிது காலமாவது தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்திருக்க வேண்டும். அவர்களது தாயத்தாரும், நெருங்கிய உறவினர்களும் புலம் பெயர்ந்து சென்றிருக்க வேண்டும். அதனால்தான் சோழ அரசு அவர்களுடைய நிலத்தையும் அகமனைகளையும் கையகப்படுத்தி இருந்திருக்கிறது. இந்நிகழ்வு சுந்தர சோழரின் இறுதி நாட்களிலோ அல்லது மதுராந்தக உத்தம சோழன் முடிசூடிய சின்னாட்களிலோ நிகழ்ந்த செயலாக இருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை.

மதுராந்தக உத்தம சோழனின் ஆட்சிமுறை, அவன்பால் மாமன்னன் இராஜராஜசோழன் கொண்ட பெருமதிப்பு, தன் புதல்வன் இராஜேந்திர சோழனுக்கு மதுராந்தகன் எனப் பெயர் சூட்டி அழைத்தது, செம்பியன் மாதேவியார் இராஜராஜ சோழன்பால் பேரன்பு கொண்டு அவனுடன் வாழ்ந்தது ஆகிய வரலாற்று நிகழ்வுகளின் சான்றாதாரங்களை ஆழ்ந்தும் கூர்ந்தும் நோக்குவோமாயின் அவன்மீது கொலைப்பழி கொள்ளல் எவ்வகையிலும் ஏற்புடையதாகாது.

இராஜராஜ சோழன் குற்றம் செய்த பிராமணர்களை கொல்லாது விடுத்தான் என்பதும் சான்றுகள் இன்றி கூறப்பெறும் கூற்றாகும். அவனது தாணைத் தலைவனான கிருஷ்ணன் இராமனான மும்முடிச் சோழ பிரம்மராயன் போர்க்களத்தில் போரிட்டவனே, இராஜராஜன் மேலைச் சாளுக்கிய மன்னன் சத்தியாச்சரியனுடன் போரிட்டதைக் கூறும் சாளுக்கிய நாட்டு கல்வெட்டுக்கள் அவன் அந்நாட்டில் பிராமணர்களைக் கொன்றவன் என்று குறிப்பிடுகின்றன. எனவே அவன் காலத்தில் பிராமணர்கள் வாளெடுத்துப் போர் செய்வதும், பிராமணர்களைப் போரில் கொல்வதும் இயல்பாக நடைபெற்ற செயல்களாகவே இருந்துள்ளன. அவ்வகையில் நோக்கும்போது இராஜராஜ சோழன் மீது வீண்பழி சுமத்துவது வரலாற்று அடிப்படையில் ஏற்புடையதாகாது.

உடையார்குடி கல்வெட்டுச் சாசனம் என்பது ஆதித்த கரிகாலனைக் கொலை செய்தவர்கள் யாவர் என்பதை ஒரு வரியில் கூறும் ஒரு கல்வெட்டேயன்றி அக்கொலை பற்றிய பிற செய்திகளையோ அல்லது அவர்களுக்கு கொடுக்கப் பெற்ற தண்டனை பற்றியோ விவரிக்கும் சாசனமாகாது. தனி நபர் ஒருவர் (வெண்ணையூருடையார் பரதன் எனும் வியாழ கஜ மல்லன்) தான் வாங்கிய நிலம் பற்றியும், வைத்த அறக்கொடை பற்றியும் பதிவு செய்த சாசனமேயாகும்.

குறிப்புகள்

1. The Colas, K.A.Nilakanta Sastri, University of Madras, 1984, pp. 157-158.

2. பிற்காலச் சோழர் வரலாறு, தி.வை.சதாசிவ பண்டாரத்தார், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 1974, பக்-76-78.

3. A Note on the Accession of Rajaraja - R.V.Srinivasan, Viveka, Vivegananda College Magazine, Madras, 1971, p.13.

4. ஆதித்த கரிகாலம் கொலை வழக்கு - ஒரு மறு ஆய்வு, க.த.திருநாவுக்கரசு, அருண்மொழி ஆய்வுத்தொகுதி, தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை, சென்னை-28, 1988, பக்.143-153.

5. No.27, The Udayargudi inscription of Rajakesarivarman : K.A.Nilakanta Sastri, Epigraphia Indica, Vol.XXI, pp.165-170.

6. The Colas, K.A.N., p.154.

7. Archaeological Finds in South India, Esalam Bronzes and Copper Plates, by Dr.R.Nagasamy, Bulletin DE 1' Ecole Francaise, D'Extreme Orieyt, Tome LXXVI, Paris, 1987, p.14.

(முற்றும்)
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.