http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[181 Issues]
[1796 Articles]
Home About US Temples Facebook
Issue No. 27

இதழ் 27
[ செப்டம்பர் 16 - அக்டோபர் 15, 2006 ]


இந்த இதழில்..
In this Issue..

அர்ச்சகர்கள் - தகுதிகளும் பயிற்சிகளும்
கதை 8 - தேவன் தொட்ட சுனை (பகுதி 1)
வரலாற்றின் வரலாறு - 5
மெய்ப்பொருள் காண்பது அறிவு
தமிழ்நாட்டின் தொடக்கக் காலக் கலை வரலாறும் குடைவரைகளும்
மகேந்திரரின் விருதுப்பெயர்கள்
மும்மூர்த்தி - இலக்ஷிதாயனக் கோவில் (மண்டகப்பட்டு)
உடையார்குடி கல்வெட்டு - ஒரு மீள்பார்வை - 3
இரண்டாண்டு நிறைவு வாழ்த்துச்செய்திகள்
இதழ் எண். 27 > கலைக்கோவன் பக்கம்
வரலாற்றின் வரலாறு - 5
இரா. கலைக்கோவன்

சென்னை, திருச்சிராப்பள்ளி வானொலி நிலையங்கள் இராசமாணிக்கனாரின் பல பொழிவுகளை மக்களுக்கு வழங்கின. சமுதாய நலம் நாடும் கண்ணோட்டத்தில் அமைந்த அப்பொழிவுகள் பின்னாளில் தொகுக்கப் பெற்று நூல் வடிவமும் பெற்றன. இலங்கை வானொலியில் உரையாற்றவும் இலங்கைத் தமிழ் மன்றங்களில் மக்களுடன் கலந்துரையாடவும் அரசும் மக்களும் விரும்பி அழைத்தமையால் இருமுறை இலங்கை சென்று வந்த இப்பெருந்தகையின் ஆய்வுப் பணிகளைப் பெரிதும் போற்றிய தமிழ்நாடு அரசு 1966ல் மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் நடைபெற்ற இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டிற்குத் தேர்ந்தெடுத்து அனுப்பிய மிகச்சில தமிழறிஞர்களுள் இராசமாணிக்கனாரையும் ஒருவராகக் கொண்டது. அரசின் சார்பில் உலகத் தமிழ் மாநாட்டில் கலந்து கொண்ட இவரது சங்க காலத் தமிழ்ச் சமுதாயம் பற்றிய ஆய்வுக் கட்டுரை அறிஞர்களால் உவந்து ஏற்கப்பட்டது.

சமயத்துறையில் இவர் ஆற்றிய பணிகளில் மனம் நிறைந்த திருவாவடுதுறை ஆதீனம், 'சைவ வரலாற்று ஆராய்ச்சிப் பேரறிஞர்' (1951) என்னும் பட்டத்தையும், மதுரை திருஞானசம்பந்தர் ஆதீனம், 'ஆராய்ச்சிக் கலைஞர்' (1955) என்னும் பட்டத்தையும், தருமபுர ஆதீனம், 'சைவ இலக்கியப் பேரறிஞர்' (1963) என்னும் பட்டத்தையும் அளித்து உடன் பொற்பதக்கமும் பொன்னாடையும் வழங்கி மகிழ்ந்தன. தருமபுர மடத்தினர் டாக்டர் பட்டத்துக்குரிய ஆராய்ச்சி நூலான 'சைவ சமய வளர்ச்சி'யை ஆங்கிலத்தில் வெளியிட்டனர். இராசமாணிக்கனாரின் ஆய்வுகளைப் பிற மொழியினரும் அறிய இது வாய்ப்பாக அமைந்தது. சைவ சித்தாந்த சமாஜம், 'சைவ நெறிக் காவலர்' (1959) என்னும் பட்டத்தை வழங்கி மகிழ்ந்தது.

பல பல்கலைக்கழகங்களில் தலைமைத் தேர்வாளராகவும் பாடத்திட்டக்குழுத் தலைவராகவும் விளங்கிய இவ்வறிஞர் மாணவர் நலத்தில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். பாடத்திட்டங்களை வகுப்பதிலும் தேர்வுகளுக்கான வினாத்தாள்களைத் தயாரிப்பதிலும் மாணவர்களின் விடைத்தாள்களைத் திருத்துவதிலும் அவர் கொண்டிருந்த பொறுப்புணர்ச்சி குறிப்பிடத்தக்கது. 'தமிழ்ப்பாடத்தில் மாணவர்களுக்கு அவரவர் தகுதிக்குரிய மதிப்பெண்களைத் தருவதில் தயக்கம் கூடாது. இந்த அளவிற்கு மேல் உயர்ந்த மதிப்பெண் மொழிப் பாடத்தில் கூடாது எனும் போக்குத் தவறானது. மாணவர்கள் சிறப்பாக விடையெழுதியிருந்தால் உரிய உயரிய மதிப்பெண்களை வழங்கிடல் வேண்டும். அப்போதுதான் தமிழ்ப் பாடத்தைத் தயங்காது தேர்ந்து கொள்ள மாணவர்க்கு ஊக்கம் பிறக்கும்' என்பது இராசமாணிக்கனாரின் கருத்தாக இருந்தது. இதனால், சிறப்புத் தமிழ் மாணவர்கள் 1960களிலேயே தமிழ்ப்பாடத்தில் உயர்ந்த மதிப்பெண்களைப் பெறமுடிந்தது.

இராசமாணிக்கனாரின் பேச்சுத்திறம், உலகியல் அறிவு, பழகும் பாங்கியல் குறித்துக் குறிப்பிடும் ஆட்சிச்சொற் காவலர் கீ.இராமலிங்கனார், 'இவருடைய விரிவுரைகள் மனதில் பதியக்கூடிய முறையில் அமையும். கேட்போரைப் பிணிக்கும் நலம் பொருந்தியனவாக விளங்கும். இயலுமானால், கரும்பலகை இடச்சொல்லி, அதில் செய்திகளை எழுதிக் காட்டி விளக்குவார் என் தோழர். உள்ளத்தில் ஊன்றும்படி தேவையான இடங்களில் திரும்பத் திரும்பக் கூறிப் பதியவைப்பார். அவர் சொன்ன செய்திகளைக் கேட்டவர்கள் சிந்திப்பர்; அசை போடுவர்; வெறும் மனத்தோடு செல்லமாட்டார்கள்.

ஒருமுறை பெங்களூரில் நடந்த தமிழகப் புலவர் குழுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு, இராசமாணிக்கனாரும் நானும் மட்டுமே 'சிரவணபெளகோளா' முதலிய இடங்களுக்குச் சென்றோம். மணலில் புதையுண்ட கோயில்கள் ஓர் ஊரில் இருந்தன. அந்த ஊரின் பெயர் இப்போது எனக்கு நினைவில் இல்லை. மேற்பகுதியிலிருந்த மணலை மட்டும் அகழ்ந்து எடுத்துவிட்டுக் கோயில்களின் கோபுரங்களும் பிற உச்சிப்பகுதிகளும் கண்ணில் படும்படிச் செய்திருந்தனர். அவற்றைக் காண்பதிலும் ஆராயும் அவரது சிந்தையில் அவற்றைப் படம்பிடித்துக் கொள்வதிலும் என் தோழர் கண்ணும் கருத்துமாக இருந்தார். பொழுது போனதும் தெரியவில்லை. இருட்டியே போய்விட்டது. அது எங்களுக்கு அடியோடு புதிய ஊர். இரவில் அங்குத் தங்கியாக வேண்டிய நிலையாக நேர்ந்து விட்டதால், நான் திகைத்தேன், ஆனால், என் தோழரோ, 'இதற்கு ஏன் கவலை உங்களுக்கு? வசதியாகத் தங்கலாம் வாருங்கள்' என்று ஊருக்குள் அழைத்துச் சென்றார்.

அது சிறிய ஊர். சில ஐயங்கார்கள் வீடுகள் இருந்தன. அங்கேதான் தங்கும் வசதி கிடைக்கக்கூடும். ஒரு வீட்டுத் திண்ணையில் நாங்கள் இருவரும் படுத்துக்கொள்ள, அவரது உலகியல் ஞானமே துணை செய்தது. அவரது அரவணைத்த பேச்சினால் எங்களுக்குப் படுக்க விரிப்பும் தலைக்கு அணையும் கிடைத்தன. எதிர்ப்புறத்திலே, தமிழ்நலம் போற்றும் ஓர் ஐயங்கார் வீட்டு முகப்பிலே சிலர் தமிழில் உரையாடிக் கொண்டிருந்தனர். அங்கு என்னையும் அழைத்துக்கொண்டு சென்றார் என் தோழர். விரைவில் அங்கிருந்தவர்களில் முக்கியமானவரின் கருத்தை ஈர்த்து விட்டார். எங்களுக்குப் பால், பழம் முதலியன வலியக் கிடைத்தன. பசியும் ஆறிற்று' என்று நினைவு கூர்ந்துள்ளார்.

இராசமாணிக்கனாரின் குடும்பம் தமிழ் மணம் கமழும் குடும்பமாகும். தாம் உயர்ந்ததோடு நிறைவடையாத இராசமாணிக்கனார் தம் துணைவியாருக்கும் தமிழ் கற்றுத்தந்து அவரையும் புலவராக, ஆசிரியராக வளர்த்தார். 1947இல் வித்துவான் பட்டம் பெற்ற திருமதி. கண்ணம்மாள் இராசமாணிக்கனார் சென்னையில், மண்ணடிப் பகுதியில் தம்புச் செட்டித் தெருவிலிருந்த சி.எஸ்.எம் பெண்கள் நடுநிலைப்பள்ளியில் சில ஆண்டுகளும் பின்னர் மதுரையில், பாத்திமா கல்லூரியில் சில காலமும் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். அக்காலத்தே பள்ளி மாணவர்க்கான பாடநூல்களில், 'குடும்பக்கலை' முதலிய பல கட்டுரைகளை எழுதியதுடன், 'தமிழ்ப் புலவர் பெருமக்கள்' முதலிய நூல்களையும் அவர் படைத்துள்ளார்.

மனைவியைக் கல்வியில் வளர்த்தாற்போலவே தம் எட்டுக் குழந்தைகளையும் - ஆண், பெண் என்ற வேற்றுமை பாராது உயர்கல்வியில் தேர்ச்சி பெறச் செய்தவர் இராசமாணிக்கனார். திருச்சிராப்பள்ளியில் கண் மருத்துவராகப் பணிபுரியும் ஒருவர் நீங்கலாக ஏனையோர் பல்வேறு கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் தமிழ்ப் பணியாற்றியவர்கள். 'நல்ல குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் என்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் படம்பிடித்துக் காட்டியது மிகையல்ல என்று மெய்ப்பிக்கிறது இராசமாணிக்கனாரின் குடும்பம்' என்கிறார் நெ.து.சுந்தரவடிவேலு.

இராசமாணிக்கனாரின் இல்லறம் நல்லறமாக விளங்கியது. சொற்பொழிவுகளுக்குப் போகாமல் வீட்டிலிருந்த நாட்களில் தம் துணைவியாருக்கு வீட்டு வேலைகளில் உதவுவதைத் தம் கடமையாகக் கொண்டிருந்தார். 'ஒருமுறை அவர் இல்லம் சென்றிருந்தபோது, பேராசிரியர் தம் மனைவிக்கு வெங்காயம் நறுக்கி உதவி செய்து கொண்டிருந்தார். மற்றொரு முறை சென்றபோது தமிழ்ப்பாடம் சொல்லிக் கொண்டிருந்தார். ஒத்த நலம் - ஒத்த பண்புநிலை பேராசிரியர் இல்லத்தில் மலர்ந்தது என்பார் சிறுவை நச்சினார்க்கினியன்.

வாழ்வரசியார் மீது இராசமாணிக்கனார் கொண்டிருந்த அன்பு அளவற்றதென்பதை அவருடைய பாடல் ஒன்று தெரிவிக்கிறது.

உடம்புங் குணமில்லை; உணவுங் குணமில்லை;
படமுடியா தினித்துயரம் பாவையே! - திடமான
அன்பின் பெருக்கே ஆசைக் களஞ்சியமே!
இன்னே விரைந்து வருக.

ஏதோ காரணத்திற்காக அன்னை இல்லம் சென்றிருந்த துணைவியின் பிரிவுத் துன்பம் தாங்காமல் அவர் எழுதியனுப்பிய இந்தப் பாடல் அவர்தம் இல்லற மாண்பை நன்கு படம்பிடிக்கிறது.

'எங்கள் வளர்ச்சியில் அதிக அக்கறையும் ஆர்வமும் உடையவர்கள். படிப்பில், விளையாட்டில் எங்களில் யாராவது முதலாவதாக வந்தால் அவர்களைப் பாராட்டி, பரிசுகள் தந்து ஊக்கப்படுத்துவார்கள். பள்ளியில் சுற்றுலாக்கள் செல்வதென்றால், விருப்பத்தோடும் மகிழ்வோடும் அனுப்பி வைப்பார்கள். பயணங்கள் தரும் அனுபவங்கள் வாழ்க்கையை வளப்படுத்தும் என்ற கண்ணோட்டம் உள்ளவர்கள் அவர்கள். நாங்கள் எந்த வகையிலும் துன்பப்படக்கூடாது என்பதில் அதிக அக்கறை காட்டினார்கள். ஆரம்ப நாட்களில் நாங்கள் வாடகை வீடுகளில்தான் இருந்தோம். வாடகை வீடுகள் என்றாலும் பிற குடித்தனங்கள் இல்லாத தனி வீடுகளைத்தான் விரும்புவார்கள். எந்த விதத்திலும் தம் குழந்தைகளுக்கு வசதிக்குறைவுகள் இருக்கக்கூடாது என்று கருதினார்கள்' என்பார் பேராசிரியரின் மகன் மா.ரா.வஞ்சிக்கோவன்.

தமிழ்ப் புலவர் பெருமக்களிடம் இராசமாணிக்கனார் கொண்டிருந்த ஈடுபாடு அவர் வாழ்ந்த இல்லங்களுக்கு அவர் சூட்டியிருந்த பெயர்களால் விளக்கம் பெறுகிறது, வண்ணையம்பதியில் குடியிருந்த இல்லத்தைத் தொடக்கத்தில் 'நக்கீரனார் அகம்' என்று அழைத்து மகிழ்ந்த இப்பெருந்தகை, பின்னாளில் அதே இல்லத்தை 'இளங்கோ இல்லம்' எனக் குறித்துப் பெருமிதப்பட்டுள்ளார். 'பெரியபுராண ஆராய்ச்சி'யும் 'சைவ சமய வளர்ச்சி'யும் அவர் உள்ளத்தே உருவாகத் தொடங்கிய நாள் முதல் சேக்கிழார் பெருமான் மீது அவருக்கு மிகுந்த ஈடுபாடு உண்டாயிற்று. அதனாற்றான், தம் உழைப்பில் ஈட்டிய ஊதியத்தில் விலைக்குப் பெற்ற மேட்டுத்தெரு வளமனைக்குச் 'சேக்கிழார் அகம்' என்று பெயரிட்டார். இறுதிவரை அப்பெயரே அவர் வாழ்ந்த பிற இல்லங்களுக்கும் பெயராயிற்று.

பிள்ளைகள் கல்வி பெறுவதில் மிகுந்த கவனமுடன் இருந்த மா.இராசமாணிக்கனார் தேவையான சமயங்களில் அவர்களுக்குப் பாடங்கள் எடுக்கவும் தவறியதில்லை. வளரும் காலத்தில் ஒரு மணித்துளியைக்கூட வீணாக்கக்கூடாது என்பது அவரது கருத்தாக இருந்தது. வாழும் இடத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தமையால், விடுமுறை நாட்களில் அவரவர்க்கு ஏற்றவாறு வீட்டைத் தூய்மை செய்யும் பணியைப் பிள்ளைகளுக்குப் பங்கிட்டுத் தருவார்.

காலையிலிருந்து இரவுவரை சோர்வின்றி உழைப்பவர் என்பதால், இரவு உணவின்போது இயன்ற வரையிலும் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் உடனிருந்து உண்ணுவதை விரும்புவார். அந்த நேரத்தில்தான் பிள்ளைகளின் படிப்பு, நலம், பிற செயல்கள் முதலியன பேசப்படும். உறங்கப்போகும்போது தேவை ஏற்படும் நாட்களில் குடும்ப நிலை குறித்துப் பேராசிரியரும் அவர் துணைவியாரும் கலந்துரையாடுவது உண்டு. குடும்பச்செலவுகளை மாதந்தோறும் எழுதி வைத்து, வருவாய்க்கேற்ப செலவு செய்யும் பழக்கத்தை ஏற்படுத்தியவர். அவரது உலகியல் அறிவும் திட்டமிடும் பாங்கும் குடும்பத்தை உயர்த்த அவருக்குப் பெரிதும் உதவின.

சீர்திருத்தங்கள் வீட்டு வாயிலுக்கு வெளியில்தான் என்று வாழ்ந்த சமூகச் சிந்தனையாளர்களுக்கு நடுவே இராசமாணிக்கனார், வெறும் வாய்ச்சொல்லில் வீரராக இருந்து விடாமல், செயல் வீரராகவும் திகழ்ந்தமை அவருடைய தனிச் சிறப்பெனலாம். அவர் முன்னின்று நடத்தி வைத்த தம் திருமணம் பற்றிக் குறிப்பிடும் அவரது திருமகன் மா.ரா.வஞ்சிக்கோவன், 'என் திருமணம் காதல் திருமணம். வேறு இனத்துப் பெண்ணை விரும்பி மணந்தவன் நான். எங்கள் காதலை வரவேற்று, பல எத்டிர்ப்புகளுக்கு இடையே என் திருமணத்தை நடத்தி வைத்தார்கள். பொதுவாக, காதல் திருமணம் செய்பவர்கள் வெளியேறுவார்கள்; அல்லது வெளியேற்றப்படுவார்கள். இந்த நடைமுறைக்கு முற்றிலும் மாறாக என் குடும்பத்தைத் தம்முடனே இருக்கச்செய்து, நெறிப்படுத்தி, ஆளாக்கி விட்டார்கள். எங்கள் நாட்கள் நிறைவோடும் மகிழ்வோடும் அமைந்தன. என் வாழ்வின் வளர்ச்சி நிலைகளுக்கெல்லாம் என் தந்தையாரின் பேருள்ளமும் பெருந்தன்மையுமே அடிப்படை. நிறைந்த மனத்தோடும் நன்றியுணர்வோடும் இன்று அதை நினைத்துப் பார்க்கிறேன்' என்று உளம் நெகிழக் கூறியுள்ளார்.

ஒல்லும் வகையெல்லாம் பிறருக்கு உதவுவதை இனிய கடமையாகக் கருதியவர் இராசமாணிக்கனார். அறிஞர் ந.மு.வேங்கடசாமி நாட்டாரின் அறுபதாம் ஆண்டு நிறைவையொட்டி அப்பெருந்தகைக்கு நிதி திரட்டித்தர இவர் எடுத்துக்கொண்ட முயற்சிகளைப் பேராசிரியர் சி.ஜகந்நாத ஆச்சாரியார் குறிப்பிட்டுள்ளார். மொழிஞாயிறு தேவநேயப் பாவாணருக்குச் சிறப்பாக மணி விழா அமைக்க வேண்டும் என்று இவர் விழைந்தமையைத் தமிழறிஞர் இரா. இளங்குமரனார், 'பாவாணர் வரலாறு' எனும் தம் நூலில் சுட்டியிருப்பதுடன், பாவாணருக்கு எவ்விதத்தானும் உதவவேண்டும் என்று இராசமாணிக்கனார் ஆழக் கருதியிருந்தமையையும் அதற்கான வழிமுறைகளை மதுரை எழுத்தாளர் மன்ற ஆட்சிக்குழுவினரிடம் அவர் பகிர்ந்து கொண்டமையும் தெளிவுபடப் பதிவு செய்துள்ளார்.

இராசமாணிக்கனாரால் வாழ்வு பெற்றவர்கள் மிகப்பலர். இன்னார், இனியார், அறிந்தார், அறியாதார் என்ற வேறுபாடு இல்லாமல், முடிந்த வரையில் முடிந்தவர்களுக்கெல்லாம் உதவியவர் அவர். பகைவருக்கும் அருளும் நெஞ்சம் அவர்தம் தனிச்சிறப்பு. தாம் செய்த உதவிகளுக்கு விளம்பரம் தேடாதவர். ஏழை - பணக்காரர், படித்தவர் - படிக்காதவர் என்ற வேறுபாடில்லாமல் எல்லோரிடமும் ஒரே மாதிரியான அன்போடும் ஆர்வத்தோடும் அவரவர் நலன்களில் அக்கறையோடும் பழகுவார். பேச்சிலும் எழுத்திலும் எளிமை வேண்டும் என்னும் கொள்கை உடையவர் அப்பெருந்தகை. எளிமையும் இனிமையும் அவரது உடைமைகள்.

இத்துணை சிறப்புக்களை ஈட்டிப் புகழ் படைத்திருந்த இராசமாணிக்கனார் தம் உடல் நலத்தையும் ஒழுங்காகவே பேணிவந்தார். ஆயினும், உழைப்பின் மிகுதியாலும், ஆராய்ச்சிகளாலும் கள ஆய்வுகளுக்காகப் பல ஊர்களுக்குச் சென்றுவந்த காரணத்தாலும் ஐம்பத்தொன்பதாம் வயதில் இதயத் தசைச் செயலிழப்பு ஏற்பட்டது, உடனே மருத்துவமனைக்குச் சென்று மருத்துவஞ் செய்துகொண்டமையால் நலம் பெற்றார். எனினும், மேத்திங்களில் இரண்டாம் முறை நேர்ந்த இதயத் தசைச் செயலிழப்பினால் 26-5-1967 வெள்ளிக்கிழமை அன்று பேராசிரியர் இவ்வுலக வாழ்வை நீத்தார்.

பொறுப்புடைய பெரிய குடும்பத் தலைவராகவும் கல்வியாளராகவும் சமுதாய சீர்திருத்தச் சிந்தனையாளராகவும் மாணவர் நலன் நோக்கிய எழுத்தாளராகவும் அறிவியல் அணுகுமுறைகளைப் பயன்படுத்திய ஆராய்ச்சியாளராகவும் தமிழுலகும் வரலாற்றுலகும் இணைந்து போற்றிய பேராசிரியப் பெருந்தகையாகவும் சமயத் தூய்மை கருதிய சிவநெறிச் செல்வராகவும் பிறர்க்கு உதவும் பண்பாளராகவும் விளங்கிய டாக்டர்.மா.இராசமாணிக்கனார் தமிழ் உள்ளளவும் தமிழர் உள்ளத்தில் நீங்காதிருப்பார்.

(முற்றும்)
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.