http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[180 Issues]
[1786 Articles]
Home About US Temples Facebook
Issue No. 27

இதழ் 27
[ செப்டம்பர் 16 - அக்டோபர் 15, 2006 ]


இந்த இதழில்..
In this Issue..

அர்ச்சகர்கள் - தகுதிகளும் பயிற்சிகளும்
கதை 8 - தேவன் தொட்ட சுனை (பகுதி 1)
வரலாற்றின் வரலாறு - 5
மெய்ப்பொருள் காண்பது அறிவு
தமிழ்நாட்டின் தொடக்கக் காலக் கலை வரலாறும் குடைவரைகளும்
மகேந்திரரின் விருதுப்பெயர்கள்
மும்மூர்த்தி - இலக்ஷிதாயனக் கோவில் (மண்டகப்பட்டு)
உடையார்குடி கல்வெட்டு - ஒரு மீள்பார்வை - 3
இரண்டாண்டு நிறைவு வாழ்த்துச்செய்திகள்
இதழ் எண். 27 > கலையும் ஆய்வும்
தமிழ்நாட்டின் தொடக்கக் காலக் கலை வரலாறும் குடைவரைகளும்
மு. நளினி

புதிய கண்டுபிடிப்புகளாலும் நேரிய ஆய்வுகளாலும் தமிழ்நாட்டு வரலாற்றை வளப்படுத்த வேண்டுமென்ற நோக்கத்துடன், டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம் தொடங்கப்பட்டு இருபத்து நான்காண்டுகள் பயனுற முடிந்து, வெள்ளிவிழா ஆண்டு தொடங்கியிருக்கும் இந்த நல்லோரையில், கடந்த சில ஆண்டுகளில் நிகழ்த்தப்பட்ட எங்கள் ஆய்வுகளின் வழி வெளிப்பட்ட புதிய தரவுகளை இக்கட்டுரை வெளிப்படுத்துகிறது.

கோயில் சார்ந்த ஆய்வுகளில் முழுக் கவனம் செலுத்தி வரும் எங்கள் ஆய்வு மையம் தமிழ்நாட்டுக் குடைவரைக் கலைக்குப் பல்லவர், பாண்டியர், முத்தரையர், சேரர், அதியர் ஆற்றியுள்ள அரும்பணி பற்றிக் கடந்த பதினைந்தாண்டுகளாக விரிவான அளவில் ஆய்வு செய்துள்ளது. எங்கள் மைய ஆய்விதழான, 'வரலாறு' பல தொகுதிகளில் குடைவரைகள் பற்றிய மிக விரிவான கட்டுரைகளைப் பெற்றுள்ளது. மகேந்திரர் குடைவரைகளை மட்டுமே தனித்த அளவில் ஆய்வு செய்து, 'மகேந்திரர் குடைவரைகள்' என்ற தலைப்பில் அவர் ஆளுமையையும் உள்ளடக்கிய நூலொன்றும் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலில், 'மகேந்திரர் கலைமுறை' என்பதற்கான அடிப்படை விளக்கங்கள், அவர் குடைவரைகள் அனைத்தையும் ஒப்பீட்டு நோக்கில் ஆராய்ந்து தெளிந்த நிலையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

பல்லவர், பாண்டியர், முத்தரையர், அதியர், சேரர் குடைவரைகளை ஆராய்ந்த நிலையில், கட்டடக்கலைக் கூறுகளை அறிமுகப்படுத்தியுள்ள முறையிலும் அவற்றில் வளர்நிலைகளைக் கண்டுள்ள விதத்திலும் சிற்பச் செழுமையிலும் அவற்றைப் பரவலாக்கிச் சுவரளாவிய நிலையில், ஒவ்வொன்றும் ஓரளவேனும் புதிய கூறுகளைப் பெற்றிருக்குமாறு அமைத்திருக்கும் பாங்கிலும் பல்லவர் குடைவரைகள் முதல் நிலை பெறுவதைக் காணமுடிகிறது. பல்லவர் குடைவரைகளில் நன்கு வளர்ச்சியுற்ற நிலைகளில் இடம்பெற்றுள்ள பல கட்டடக்கலைக் கூறுகள் பிற அரச மரபு சார் குடைவரைகளில் தொடக்க நிலையில்கூடத் தோற்றம் காட்டாமை கண்கூடு. எடுத்துக்காட்டாக ஆரவரிசையைக் குறிப்பிடலாம். குடைவரை முழுவதும் தழுவி ஓடும் கூரையுறுப்புகளையும் குறிக்கலாம்.

ஆரவரிசை என்பது கருவறைத் தளக் கூரைமீது சுற்றிவர அமரும் அழகுறுப்புகளாகும். இவற்றைச் சிறு திருமுன்கள் என்றும் அழைப்பர். கர்ணகூடம், சாலை, பஞ்சரம் என்பன முதன்மை அமைப்புகள். இவற்றை இணைப்பது ஆரச்சுவர். இந்த ஆரவரிசையில் பஞ்சரம் தவிர ஏனைய அமைப்புகள் அனைத்தும் பல்லவர் குடைவரைகளில் காணக்கிடைக்கின்றன. கர்ணகூடத்தையும் சாலையையும் ஒருங்கிணைத்துக் கர்ணசாலையாக வடிவமைத்து உருவாக்கிய பெருமையும் பல்லவர்களுக்கு உண்டு. இதன் தொடக்க, வளர்ச்சி நிலைகளை மாமல்லபுரம் குடைவரைகளில் நன்கு காணமுடிகிறது. இதன் முழு வளர்ச்சி நிலையைப் பஞ்சபாண்டவர் மண்டபமும் வராகர் குடைவரையும் கொண்டுள்ளன. மும்மூர்த்திக் குடைவரையின் ஆரவரிசையும் குறிப்பிடத்தக்கதே. இங்குக் கர்ணசாலை இடம்பெற்றுள்ளது.

கூரையுறுப்புகளாக உத்திரம், வாஜனம், வலபி, கூரையின் முன்னிழுப்பான கபோதம், தள முடிவு காட்டப் பயன்படுத்தப்படும் பூமிதேசம் ஆகியவற்றை உள்ளடக்கலாம். உத்திரம் அனைத்துக் குடைவரைகளிலும் இடம்பெற, வாஜனம் பெரும்பாலான தமிழ்நாட்டுக் குடைவரைகளில் காட்டப்பட்டுள்ளது. ஆனால், வலபி அருகியே காணப்படுகிறது. பல்லவர் குடைவரைகளில் கணவரி பெருமளவு வளர்ச்சியுற்ற நிலையில் வெளிப்படும் இக்கூரையுறுப்பு, பிற பகுதிக் குடைவரைகளில் உரிய இடம்பெறாமை குறிப்பிடத்தக்கது. கரூர் தான்தோன்றிமலைக் குடைவரையின் முகப்பு வலபி மட்டுமே முழுமையான கணவரி கொண்டுள்ளது. கபோதம் அனைத்துப் பகுதிக் குடைவரைகளிலும் காணப்பட்டாலும், அதிக அளவில் பல்லவர் குடைவரைகளே இதை வடிவமைக்கப் பெற்ற நிலையில் பெற்றுள்ளன. முகப்பு, கருவறை என இருநிலைகளிலும் பல்லவக் கபோதம் கையாளப்பட்டுள்ளது. முழு நிலையிலான பூமிதேச அமைப்பைப் பல்லவர் பகுதிக் குடைவரைகளில் மட்டுமே காணமுடிகிறது. ஒரு சில பிற பகுதிக் குடைவரைகளில் இதன் தொடக்கநிலை இடம்பெற்றுள்ளது. குடைவரை முழுவதும் அனைத்துக் கருவறைகளின் மீதும் படர்ந்த நிலையில் பல்லவர் பகுதியில் மட்டுமே கூரையுறுப்புகள் காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க அமைப்பாகும்.

பல்லவர் பகுதிக் குடைவரைகளோடு ஒப்பிடும்போது, பிற பகுதிக் குடைவரைகளுள் ஒன்றிரண்டு தவிர, ஏனையன அனைத்தும் அளவில் சிறியனவே. மகிபாலன்பட்டி, பிரான்மலை, அரளிப்பட்டி, ஆனையூர், தேவர்மலை, பூவாலைக்குடி, குன்னத்தூர்க் குடைவரைகள் போல் அளவில் மிகச் சிறிய குடைவரைகள் பல்லவர் பகுதியில் ஒரு சிலவே உள்ளன.

முகப்புத் தாங்குதளம், பிடிச்சுவர்களோடு அமைந்த பாறைப் படிக்கட்டுகள் என்பன அனைத்துப் பகுதிக் குடைவரைகளிலும் காணப்பட்டாலும், நாமக்கல் பள்ளிகொண்ட பெருமாள் குடைவரை, ஆனைமலைக் கந்தன் குடைவரை இவை இரண்டின் முன் காணப்படும் உயரமான படிக்கட்டு மண்டபங்களை பல்லவர் குடைவரைகளுள் எதுவும் பெற்றிருக்கவில்லை என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கது.

பல்லவக் குடைவரைகளுள் பெரும்பான்மையன இருமண்டபக் குடைவரைகளாய் இரு வரிசைத் தூண்களுடன் அமையப் பெரும்பாலான பிற பகுதிக் குடைவரைகள் ஒரு மண்டபக் குடைவரைகளாகவே உள்ளமை கருதத்தக்கது. தூண்களின் வடிவமைப்பிலும் பல்லவர்கள் காட்டியுள்ள வகைமை, திறன், கலைநுட்பம் என்பனவற்றைப் பிற பகுதிக் குடைவரைகளில் காணமுடியவில்லை. குறிப்பாகப் பல்லவர் குடைவரைகளில் இடம்பெற்றுள்ள விலங்கடித் தூண்களைப் பிற பகுதிக் குடைவரைகளில் காணக்கூடவில்லை. மலையடிப்பட்டி ஒளிபதி விஷ்ணுகிருகம் மட்டுமே விலங்கடித் தூண்களைப் பெற்றுள்ளது.

தாமரைப் பதக்கங்கள் தமிழ்நாட்டின் பல குடைவரைகளில் இடம்பெற்றிருந்தாலும், பல்லவர் பகுதியில் காட்டப்பட்டுள்ள இதழ் அடுக்குத் திறன் பிற பகுதிகளில் இல்லை எனலாம். தூண்களின் சதுரங்கள் பெறும் பிறவகைப் பதக்கங்களும் பல்லவர் பகுதிக் குடைவரைகளிலேயே பன்முகத் தன்மையுடன் படைக்கப்பட்டுள்ளன. தூண்களில் இடம்பெறும் சிற்றுருவச் சிற்பங்கள் இருபகுதிக் குடைவரைகளிலும் உள்ளன எனினும், தமிழ்நாட்டுக் கலை வரலாற்றுக்குப் புதிய இறைவடிவங்களை அறிமுகப்படுத்தும் பெருமையைப் பல்லவர் பகுதியே பெறுகிறது. சான்றாக மகேந்திரரின் சீயமங்கலம் அவனிபாஜனத்தைக் குறிக்கலாம்.

வாயிற்காவலர் சிற்பங்களை ஒப்புமைப்படுத்தியபோது, பல பாண்டியர், முத்தரையர் பகுதிக் குடைவரைகள் வாயிற் காவலர்கள் பெறாமையும் (மகிபாலன்பட்டி, கோளக்குடி, தேவர்மலை, தென்பரங்குன்றம், மூவரைவென்றான், ஆனையூர், பழியிலி ஈசுவரம், பதினெண்பூமி விண்ணகர்) பெற்றிருக்கும் இடங்களிலும் பல்லவர் பகுதிக் காவலர்கள் வெளிப்படுத்தும் மாறுபட்ட தோற்றங்களையோ, ஒருக்களிப்பு உன்னதங்களையோ கொள்ளவில்லை என்பதும் நினைவில் கொள்ளத்தக்கது (செவல்பட்டிக் காவலர்கள் ஒருக்களித்திருந்தாலும் பல்லவர் பகுதி நளினமோ, நுட்பமோ இங்கில்லை எனலாம்). தமிழ்நாட்டுக் கலைமரபில் ஒருக்களிப்பு நிலைச் சிற்பங்களை எழில் சார்ந்த இயல்பான கோலங்களில் படைத்தளித்தவர்கள் பல்லவர்களே என்பதை எங்கள் ஆய்வு உறுதிபட முன்வைக்கிறது.

குடைவரைக் காவலர்கள், கருவறைக் காவலர்கள் என இருநிலைக் காவலர்களைக் காட்டும் மரபும் பல்லவர் கலைப் பகுதியிலேயே வளம் பெற்றுள்ளது. பிற பகுதிகளில் இவ்விணைவைக் காணக்கூடவில்லை. காவலர்களைக் கருவி அடியார்களாகக் (ஆயுத புருஷர்கள்) காட்டும் நிலையைப் பல்லவர் குடைவரைகளிலேயே பார்க்கமுடிகிறது. இந்த அமைப்பு முதல் மகேந்திரர் குடைவரையிலேயே தொடங்கிவிடுவது குறிப்பிடத்தக்கது. சூலதேவரையும், மழுவடியாரையும் ஒருசேர வல்லம் குடைவரையில் பார்க்கமுடிகிறது. இந்த மரபு இராஜசிம்மர் கற்றளிகளிலும் பரவலாகப் பின்பிற்றப்பட்டுள்ளது. பிற மரபுக் குடைவரைகளில் குன்றக்குடியில் மட்டுமே இவ்விரு அடியார்களையும் ஒருசேரக் காணமுடிகிறது. சூலதேவர் திருமெய்யத்திலும் காட்சிதருகிறார்.

தமிழ்நாட்டிலுள்ள பள்ளிகொண்ட பெருமாளின் குடைவரைகள் அனைத்தையும் தழுவிய ஆய்வு, முடியும் நிலையில் உள்ளது. இக்குடைவரைகள் அமைக்கப்பட்டுள்ள பெரும்பாலான இடங்களில் மற்றொரு தெய்வத்திற்கான பழங்கோயிலோ அல்லது சிற்பமோ உடன் நிலையாகக் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. மலையடிப்பட்டியில் சிவன் குடைவரை. சிங்கவரத்தில் கொற்றவைச் சிற்பம். மாமல்லபுரத்தில் மகிடாசுரமர்த்தனி. திருமெய்யத்தில் நின்றருளிய தேவரும் சிவன் குடைவரையும். திருத்தங்கலில் கொற்றவை. நாமக்கல்லில் மற்றொரு தெய்வமாக அல்லாது விஷ்ணுவின் பிற வடிவங்கள் இடம்பெற்றள்ள மற்றொரு குடைவரை. மாமல்லபுரம் தவிர ஏனைய அனைத்துப் பள்ளிகொண்ட பெருமாள் குடைவரைகளிலும் குடைவரைப் பின்சுவரிலோ, பக்கச் சுவர்களிலோ அல்லது அனைத்து இடங்களிலுமோ உடன் கூட்ட இறைவடிவங்கள் காணப்படுகிறன்றன. நாமக்கல் குடைவரை இவ்வடிவங்கள் பற்றிய கல்வெட்டுப் பெற்றுள்ளது.

குடைவரை மண்டபத்தில் தாய்ப்பாறையிலேயே உருவான நந்தியை இருத்தும் பழக்கத்தைப் பல்லவர் குடைவரைகள் எவற்றிலும் காணக்கூடவில்லை. இது பாண்டியர், முத்தரையர் மரபுக் குடைவரைகளில் மட்டுமே இடம்பெற்றுள்ள அமைப்பாக உள்ளது. தாய்ப்பாறை இலிங்கம் பெரும்பாலான பாண்டியர், முத்தரையர் குடைவரைகளில் காணப்படுகிறது. பல்லவர் பகுதியில் மேலைச்சேரிக் குடைவரை மட்டுமே தாய்ப்பாறை இலிங்கம் பெற்றுள்ளது. சிற்றண்ணல்வாயில், நகரத்தார்மலைக் குடைவரைகளில் தாய்ப்பாறை இலிங்கம் இருந்து அழிக்கப்பட்டதற்கான சுவடுகளைக் காணமுடிகிறது.

தமிழ்நாட்டுக் குடைவரைகளுள் சண்டேசுவரர், எழுவர் அன்னையர் சிற்பங்கள் சிராப்பள்ளிக்குத் தெற்கில் மட்டுமே காணப்படுகின்றன. பிள்ளையார் சிற்பம் பாண்டியர், முத்தரையர் குடைவரைகளில் காணப்பட்டாலும் பல்லவர் பகுதியிலும் இடம்பெற்றுள்ளது. வல்லம் முதலிரண்டு குடைவரைகளும் சிராப்பள்ளிக் கீழ்க் குடைவரையும் குறிப்பிடத்தக்கன.

தமிழ்நாட்டிலேயே மிக அதிக அளவிலான கருவறைகள் கருதப்பட்ட குடைவரையாக மாமண்டூர் மூன்றாம் குடைவரையைக் குறிப்பிடலாம். இங்கு ஒன்பது கருவறைகள் திட்டமிடப்பட்டன. அடுத்த அளவில் ஏழு கருவறைகள் அமைக்கப்பட்ட இடமாக குரங்கணில் முட்டத்தையும் ஐந்து கருவறைகள் உள்ள இடமாகப் பல்லாவரம் குடைவரையையும் குறிப்பிடலாம். இவை அனைத்துமே பல்லவர் படைப்புகள். பிற பகுதிகளில் பரங்குன்றம் ஒன்று மட்டுமே மூன்று கருவறைகளைப் பெற்றுள்ளது. குன்றக்குடியில் அடுத்தடுத்த நிலையில் மூன்று குடைவரைகள் குடையப்பட்டுள்ளனவே தவிர ஒவ்வொரு குடைவரையிலும் ஒரு கருவறைதான் உருவாக்கப்பட்டுள்ளது. சொக்கம்பட்டிக் குடைவரையில் எதிரெதிர்நோக்கில் இருகருவறைகள் முழுமையடைந்துள்ளன. பின் சுவரொட்டிக் காணப்படும் மூன்றங்கண அமைப்பு முழுமையடையாதிருப்பதால் அதன் நோக்கம் கருதக்கூடவில்லை என்றாலும், எஞ்சியிருக்கும் கட்டமைப்புக் கொண்டு அவற்றையும் கருவறைகளாகக் கொள்வதில் தடையில்லை. எனில், பின் சுவரில் மூன்று கருவறைகள் கொண்டிலங்கும் ஒரே பாண்டியர் பகுதிக் குடைவரையாகச் சொக்கம்பட்டியைக் கொள்ளலாம்.

குடைவரைகளில் கருவறையைச் சுற்றிவர வாய்ப்பாகத் திருச்சுற்று அமைக்கும் முயற்சியைப் பல்லவர் பகுதியில் இரண்டு குடைவரைகள் பெற்றுள்ளன. மாமண்டூர் மூன்றாம் குடைவரையில் இம்முயற்சி தொடக்க நிலையிலும் மாமல்லபுரம் பஞ்சபாண்டவர் குடைவரையில் முற்றுப்பெறா நிலையிலும் உள்ளது. திருச்செந்தூர் வள்ளிக் குடைவரைச் சுற்றுச் சிறிய அளவினது. இதே முயற்சி குன்றாண்டார் கோயில் குடைவரையில் தொடங்கிக் கைவிடப்பட்ட நிலையில் பதிவாகியுள்ளது.

தோற்றம், அழகூட்டல், ஆடையணிகள், தோரணங்கள், கலைவெளிப்பாடுகள், கணவரிசை எனச் சிற்பங்கள், கட்டமைப்புச் சார்ந்த பிற அனைத்துமே பல்லவர் பகுதியில் பெற்றுள்ள செழுமை பிற பகுதிகளில் இல்லை என்பது உறுதி. பல்லவர் பகுதியில் காணப்படும் இடத்தேர்வு, அழகுணர்ச்சி, முழுமை, மாறுபட்ட கட்டமைப்புக் கூறுகள், வகைமை, பங்கீடு, புத்தமைப்புகள் ஆகியவற்றையும் பிற மரபு சார் குடைவரைகளில் பரவலாகவோ, குறிப்பிடத்தக்க அளவிலோ காணக்கூடவில்லை. இதனால், தமிழ்நாட்டின் தொடக்கக் காலக் கலைவரலாற்றிற்குச் சிறப்பான பங்களிப்பைத் தந்தமை பல்லவர் பகுதிக் குடைவரைகளே என்று முடிவுகாணலாம்.

மிகவிரிவான ஓர் ஆய்வின் மிகச் சுருக்கமான இந்த முன்னோட்டம் காலம், இடம் கருதியது.

நன்றி, வணக்கம்.
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.