http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 27

இதழ் 27
[ செப்டம்பர் 16 - அக்டோபர் 15, 2006 ]


இந்த இதழில்..
In this Issue..

அர்ச்சகர்கள் - தகுதிகளும் பயிற்சிகளும்
கதை 8 - தேவன் தொட்ட சுனை (பகுதி 1)
வரலாற்றின் வரலாறு - 5
மெய்ப்பொருள் காண்பது அறிவு
தமிழ்நாட்டின் தொடக்கக் காலக் கலை வரலாறும் குடைவரைகளும்
மகேந்திரரின் விருதுப்பெயர்கள்
மும்மூர்த்தி - இலக்ஷிதாயனக் கோவில் (மண்டகப்பட்டு)
உடையார்குடி கல்வெட்டு - ஒரு மீள்பார்வை - 3
இரண்டாண்டு நிறைவு வாழ்த்துச்செய்திகள்
இதழ் எண். 27 > கலையும் ஆய்வும்
மகேந்திரரின் விருதுப்பெயர்கள்
மா. இலாவண்யா
சென்ற இதழில் மாமன்னர் மகேந்திரவர்மரின் சிறப்பினையும் அவர் கொண்டிருந்த பல ஆற்றல்களையும், அச்சிறப்பினை விளக்கும் கல்வெட்டு ஆதாரங்களையும் பார்த்தோம். அச்சிறப்பினுள் ஒன்றாக அவர் பல விருதுப்பெயர்கள் புனைந்து கொண்டதைப் பற்றித் தெரிந்துகொண்டோம்.

அவரின் விருதுப்பெயர்கள் தமிழ், தெலுங்கு, வடமொழி ஆகிய மொழிகளில் அமைந்திருந்தது என்று தெரிந்துகொண்டோம் அல்லவா. அவரின் விருதுப்பெயர்களை அவற்றின் மொழி கொண்டு வகைப்படுத்தி, அப்பெயர்களுக்கான காரணமும் பொருளும் இவ்விதழில் அறிந்துகொள்ளலாம். சில விருதுப்பெயர்களுக்கு கன்னடமொழியிலும் பொருள் காணலாம்.

நம் தாய்மொழியாம் தமிழில் அவர் பெற்றிருந்த விருதுப்பெயர்களைக் கொண்டே தொடங்கலாம். பல விருதுப்பெயர்களுக்கு, பொருள் விளக்கம் என்பது அவ்விருதுப்பெயர்களுக்கான பல்வேறு பொருள்களின் பட்டியல் தான். ஆனால் இப்பொருளை முன்னிட்டே இவ்விருதுப்பெயரை சூட்டிக்கொண்டார் என்று ஒரே ஒரு பொருளை குறிப்பிட்டுச் சொல்வது கடினம். சென்ற இதழில் வெளியான சங்கீர்ணஜாதி என்ற கட்டுரையை படித்தவர்களுக்கு விருதுப்பெயர்களுக்கான சரியான பொருளை தெரிந்து கொள்வது எவ்வளவு கடினம் என்று தெரிந்திருக்கும். அவரின் ஒரு விருதுப்பெயரை சரியாக புரிந்து கொள்வதற்கு, புரிந்து கொள்வதற்கு கூட இல்லை, அதைப் பற்றி மேலும் ஆராய்ந்து தெரிந்துகொள்வதற்கு ஒரு முதல் முயற்சியே அந்த ஒரு கட்டுரை என்றால், அவரின் மற்ற எல்லா விருதுப்பெயர்களைப் பற்றியும் சரியாகப் புரிந்து கொள்ள எத்தனை கட்டுரைகள் தேவை என்பதை நீங்களே உணர்ந்து கொள்ளலாம். இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள பொருள்கள் அனைத்தும் மைக்கேல் லாக்வுட் விஷ்ணுபட், கிப்ட் சிரோமணி மற்றும் தயாநந்தன் ஆகியோருடன் சேர்ந்து எழுதிய "Pallava Art" என்ற ஆங்கிலப் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள பொருள்களே.
விருதுப்பெயர்கள்பொருள் விளக்கம்

இடுகளி
இடுகளி என்பதற்கும் பல்வேறு அர்த்தங்கள் இருக்கின்றன. இடு என்பதற்கு தடை என்று பொருள் கூறலாம். களி என்பதற்கு களைதல் அல்லது நீக்குதல் என்ற பொருள் இருக்கின்றது. எனவே இடுகளி என்பதற்கு தடைகளை நீக்குபவர் என்ற பொருள் கொள்ளலாம். இடு என்பதற்கு கொடு என்று ஒரு பொருள் இருக்கின்றது. களி என்பதற்கு அபரிமிதமான என்ற பொருள் உண்டு. இவை இரண்டு பொருள்களையும் சேர்த்து அபரிமிதமாய்க் கொடுப்பவர் அதாவது நல்ல கொடையாளி என்ற பொருள் கொள்ளலாம். அல்லது இடு என்பதற்கு வைப்பது, நிறுத்துவது என்ற பொருள் கொண்டு, 'களி'யின் ஒரு பொருளான கொம்பு, கோல் என்பதை சேர்த்து (செங்)கோல் வைத்திருப்பவர் என்றும் பொருள் கொள்ளலாம்.

ஏதி (ஏறி)
ஏதி என்ற சொல்லுக்கு அகராதிகளில் ஒரு ஆயுதம், வாள் ஒரு சிறு துளி என்றும் பொறுள் உள்ளது. மைக்கேல் லாக்வுட் தனது "Pallavas Art" புத்தகத்தில் நல்ல ஒளியுடன் திகழ்பவர் என்று கொள்ளலாம் என்றும் இச்சொல்லை ஏறி என்று கொண்டு நல்ல உயர்நிலையை அடைபவர் என்று பொருள் கொள்ளலாம் என்றும் கூறுகிறார். மற்றும் ஏறு என்பதற்கு காளை என்ற பொருள் கொண்டு, ஏறி என்பதற்கு காளையைக் கொண்டவர் என்று பொருள் கொள்ளலாம். காளையை உடையவர் சிவ பெருமான், மற்றும் பல்லவர்கள் எருதுக்கொடி கொண்டவர்கள். இவ்விருதுப்பெயரை தெலுங்குப் பெயராகக் கொண்டு மன்னன் என்ற பொருளையும் கொள்ளலாம் என்றும் கூறுகிறார்.

ஒத்து
ஒற்று என்பதற்கு வீணை போன்ற இசைக்கருவிகளில் ஸ்வரங்கள் வாசிப்பதற்காக அடுக்குகளாய் இருக்கும் ஓர் அமைப்பு அல்லது தந்தியை மீட்டி வாசிப்பதற்காக உள்ள மீட்டு என்று பொருள் இருக்கின்றதாம். நாதஸ்வரத்தில் ஒற்றூதுதல் என்று ஒன்று உள்ளது. அதாவது வாசிக்கும் பொழுது தாளம் மற்றும் நேரக்கணக்கை கவனித்து எடுத்துக்கொடுப்பதற்காக இருப்பது. அந்த வகையில் ஒற்று என்றும் கொள்ளலாம். இவையிரண்டுமே சங்கீதம் சம்பந்தப்பட்டதாய் உள்ளது. அவரின் சங்கீதப் புலமையை அவரின் பல்வேறு விருதுப்பெயர்கள் மற்றும் கல்வெட்டு ஆதாரங்கள் மூலம் அறியமுடிவதால், அவரின் சங்கீதப்புலமையைக் குறிக்கும் மற்றொரு விருதுப்பெயராய் இதற்கு பொருள் கொள்வது சரி என்றே தோன்றுகிறது.

கற்ற
நன்கு கற்றவர்

காற்று
புயல் காற்று என்று கொள்ளலாம்

சித்திரக்காரப்புலி
ஓவியம் வரைவதில் புலியைப் போன்றவர். ஓவியம் வரைவதில் சிறந்தவர்.

தாள்வி
தாள்-பாதம், கடவுளின் பாதம் பணிந்தவன். தாள் என்பதற்கு புதிய காரியங்களை செய்ய துணிவுள்ளவன் என்று ஒரு பொருள் இருக்கிறது. இந்த பொருளை மனதில் கொண்டே இவ்விருதுப்பெயர் ஏற்பட்டிருக்குமென்றால், அது மகேந்திரருக்கு மிகவும் பொருத்தமான பெயர் தான். தாள் என்பதற்கு விடா முயற்சி, சக்தி, திறமை என்றும் பொருள் உண்டு. எனவே தாள்வி என்பதற்கு திறமை மிக்கவர், பலமுடையவர், விடா முயற்சி கொண்டவர் என்றும் பொருள் கொள்ளலாம்.

தறுதண்ட
தறு என்பதற்கு உக்கிரமான என்ற ஒரு பொருள் இருக்கின்றதென்று மைக்கேல் லாக்வுட் குறிப்பிடுகிறார். நான் எனக்குக் கிடைத்த தமிழ் அகராதிகளில் தேடிப்பார்த்தவரை தறு என்ற சொல்லையே அவ்வகராதிகளில் காணமுடியவில்லை. தண்ட என்பதற்கு கம்பு, கோல் என்று பொருள். தறுதண்ட என்பதற்கு மிகவும் உக்கிரமான (தண்டனை வழங்கக்கூடிய) கோலை உடையவன் என்று பொருள் கொள்கிறார் திரு. மைக்கேல் லாக்வுட்.

தெப்பு
தெப்பம் - ஓடம். தெப்பு மற்றவர்களை வாழ்க்கைக் கடலை கடக்க உதவுபவன் அல்லது துன்பக்கடலை கடக்க உதவுபவன் என்றும் கொள்ளலாம். தெப்பு என்றால் தெலுங்கில் ஆறுதல் தருபவன் என்று பொருள். இச்சொல் தெலுங்குச்சொல் என்றே எனக்குத் தோன்றுகிறது.

தேற்ற
தேற்ற - ஆறுதல் தருபவன், தெளிவுடையவன் அல்லது உறுதியுடையவன்.

தொழ்புகா
தொழு - தொழுதல், இறைவனை வணங்குதல்; புகா(?) - பிரிவில்லாமலிருப்பது அல்லது நிலையாக இருப்பது. தொழ்புகா என்றால் நிலையான பக்தியுடையவன் என்று பொருள் கொள்ளலாம். இப்பொருள் அவரது வடமொழி விருதுப்பெயரான த்ருடபக்தி என்ற சொல்லுக்கு இணையான தமிழ் விருதுப்பெயராகும்.

நறுகு
நறுக்குபவன் - அதாவது பகைவர்களை வெட்டுபவன் என்ற பொருள் கொள்ளலாம். இச்சொல் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளிலும் இப்பொருளையே தருகின்றது.

பகாப்பிடுகு/புகாபிடுகு
பகாப்பிடுகு என்று வல்லம் குடைவரையிலும், புகாபிடுகு என்று பல்லாவரம் குடைவரையிலும் காணக்கிடைக்கிறது. இரண்டிற்கும் பொருள் ஒன்று தான். பகா அல்லது புகா என்றால் பிரிவில்லாதவன் (Undivided). பிடுகு என்பதற்கு தெலுங்கில் இடியுடன் கூடிய மின்னல் என்று பொருள். இரண்டையும் சேர்த்து கிளைகளில்லாத ஒரே ஒரு கூரிய மின்னல் என்று பொருள் கொள்ளலாம்.

பலபாடி
பலதும் பாடும் திறம் கொண்டவன்

பிடுவிரே
பிடு என்பதற்கு பிடுங்கல் அதாவது கொள்ளுதல் அல்லது பிடித்துக்கொள்ளுதல் என்று பொருள். விரே என்பதை விரை என்று படித்து அதற்கான ஆக்ரோஷம் அல்லது கொந்தளிப்பு என்ற பொருள் கொண்டால் ஆக்ரோஷமுடன் கவர்தல் என்று பொருள் கொள்ளலாம் (Possesive என்று கொள்ளலாம்). இந்த பொருள் ப்ரந்தஹ என்ற அவரின் வடமொழி விருதுப்பெயரின் பொருளுடன் ஒத்திருக்கின்றது.

பிணபிணக்கு
பிணம் என்பதற்கு ஒரு பொருள் அரக்கன் அல்லது பிசாசு என்பது. பிணபிணக்கு என்பதற்கு அரக்கனுக்கு அரக்கன் அல்லது பிசாசுகளுக்கு பிசாசு என்று பொருள் கொள்ளலாம். அதாவது அரக்கர்களும் கண்டு அஞ்சுகிற சூரன் என்று பொருள் கொள்ளலாம். இச்சொல்லை தெலுங்குமொழிச் சொல்லாகக் கொண்டால், பிணக்கு என்பதற்கு வீரன் போரில் வென்றவன் என்று பொருள், பிணபிணக்கு என்பதை வீரனுக்கு வீரன் என்று பொருள் கொள்ளலாம்.

பாகு
தமிழிலும் தெலுங்கிலும் இச்சொல்லுக்கு அழகு அல்லது வசீகரம் என்று பொருள், அதாவது அழகானவன் வசீகரமானவன் என்று பொருள் கொள்ளலாம். கன்னடத்தில் பாகு என்பதற்கு குத்து வாள் என்று பொருள்.

மயமயக்கு/மயமக்கு
மயக்கு - மயக்குதல். மய - தேவர்களின் கட்டிட சிற்பியான மயன் என்ற அரக்கன் தந்திரவித்தைகளிலும், வானசாஸ்திரத்திலும், போர்த்தந்திரங்களிலும் தேர்ந்தவன் என்பது புராணங்களின் வழி அறியப்படும் செய்தி. இவ்விருதுப்பெயர் மகேந்திரரும் மயனுக்கிருந்த ஆற்றல்களை கொண்டிருந்தவர் என்று பொருள் தரக்கூடியதாக இருக்கலாம்.

மறுமாற்ற
மறுமாற்றம் என்பதற்கு மறுபடியும் மாறியவர் என்று பொருள் கொண்டு, அதை இம்மன்னன் அவன் சமணத்திலிருந்து இந்துமதத்தைத் தழுவி, மக்களிடையே இந்துமதம் பற்றிய ஒரு புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியதைக் குறிக்கலாம். எனவே இவ்விருதுப்பெயர் அவரை மறுமலர்ச்சியாளர் என்று குறிப்பதாகக் கொள்ளலாம்.

வஞ்ஜவலவ
வஞ்சவளவ என்பதை இப்படிப் பொறித்திருப்பதாகக் கொண்டு, வஞ்சம் என்ற சொல்லுக்கு கொடுமை, பொய், வஞ்சனை என்று பொருள் கொண்டு, வளவ என்பதற்கு வளவன் அதாவது பேரரசன், கைப்பற்றி வெற்றிகொள்பவன் என்ற பொருள் கொண்டு, வஞ்சவளவ என்பதற்கு கொடுமை அல்லது வஞ்சனைகளை வென்றவன் அல்லது வஞ்சனைசெய்பவர்களை அடிபணியச்செய்பவன் என்று பொருள் கொள்ளலாம். அல்லது வஞ்ச என்பதை வடமொழிச்சொல்லான வம்ச அல்லது வம்சம் என்பதன் திரிபாகக் கொண்டு, பேரரசர்களின் வம்சத்தில் வந்தவன் என்றும் பொருள் கொள்ளலாம். இப்பொருள் வெந்துலவித்து (கீழே கொடுக்கப்பட்டுள்ளது) என்ற விருதுப்பெயரின் பொருளுடன் ஒப்புநோக்கத் தக்கது.

வம்பு
வம்பு என்ற சொல்லுக்கு பயனில்லாத பேச்சு, தீய வார்த்தை, வீம்பு, சண்டை, புதுமை, மூங்கில் கொம்பு என்ற பல பொருள்கள் இருக்கின்றன. கன்னடத்தில் வம்பு என்பது நிறைவடைதல், பிரகாசித்தல், கோணல்புத்திகொண்ட என்ற பொருள்படும்.

விலேயாள
இச்சொல்லை விலையாளன் என்று கொண்டு விற்பனையாளன் என்று பொருள் கொள்ளலாம்.

வெந்துலவித்து
வெந்து என்பதை வேந்தன் என்பதன் திரிபாகக் கொண்டு அரசன் என்ற பொருள் கொள்ளலாம், வித்து என்பதற்கு பரம்பரை என்று பொருள் கொள்ளலாம். இவ்விருதுப்பெயருக்கு பேரரச பரம்பரையில் வந்தவன் அரசவம்சத்தினன் என்று பொருள் கொள்ளலாம் என்று மைக்கேல் லாக்வுட் குறிப்பிடுகிறார்.


மேலே கொடுக்கப்பட்டுள்ள (அல்லது கொடுக்கப்படாத) பொருள்களில் எப்பொருளை முன்னிட்டு மகேந்திரர் இவ்விருதுப்பெயர்களை சூட்டிக்கொண்டாரோ யாமறியோம் பராபரமே. இந்த ஒரு கட்டுரையில் மற்ற மொழி விருதுப்பெயர்களையும் வழங்க நினைத்தேன். ஆனால் கட்டுரையும் பெரிதாகிவிடும் படிப்பதற்கும் கடினமாக இருக்கும் என்ற காரணத்தினால் இத்துடன் முடித்துக்கொள்கிறேன். மற்ற மொழி விருதுப்பெயர்களை அடுத்த இதழ்களில் பார்க்கலாம்.

this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.