http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[177 Issues]
[1753 Articles]
Home About US Temples Facebook
Issue No. 27

இதழ் 27
[ செப்டம்பர் 16 - அக்டோபர் 15, 2006 ]


இந்த இதழில்..
In this Issue..

அர்ச்சகர்கள் - தகுதிகளும் பயிற்சிகளும்
கதை 8 - தேவன் தொட்ட சுனை (பகுதி 1)
வரலாற்றின் வரலாறு - 5
மெய்ப்பொருள் காண்பது அறிவு
தமிழ்நாட்டின் தொடக்கக் காலக் கலை வரலாறும் குடைவரைகளும்
மகேந்திரரின் விருதுப்பெயர்கள்
மும்மூர்த்தி - இலக்ஷிதாயனக் கோவில் (மண்டகப்பட்டு)
உடையார்குடி கல்வெட்டு - ஒரு மீள்பார்வை - 3
இரண்டாண்டு நிறைவு வாழ்த்துச்செய்திகள்
இதழ் எண். 27 > பயணப்பட்டோம்
மும்மூர்த்தி - இலக்ஷிதாயனக் கோவில் (மண்டகப்பட்டு)
ம.இராம்நாத்
சென்னையிலிருந்து தாத்தா, பாட்டியுடன் குழந்தைகள் அனைவரும் (அவர்களது பேரன் பேத்திகள்) விடுமுறையைக் கழிக்கத் திண்டிவனத்திற்கு அருகில் உள்ள அவர்களது சொந்த கிராமத்திற்கு சென்று கொண்டு இருந்தனர். கிராமத்தின் எல்லையில் நுழைந்ததும் தாத்தா தான் நடந்து வருவதாக கூறி வண்டியை நிறுத்தச் சொன்னார். தாத்தா இறங்கியதும், குழந்தைகளும் தாத்தாவுடன் தாங்களும் நடந்து வருவதாக கூறி வண்டியிலிருந்து இறங்கிக்கொண்டனர். ஆனால் பாட்டிக்கோ ஊரின் எல்லை நெருங்க நெருங்க தனது கடைசி மகனின் நினைப்பும், வீட்டின் நினைப்பும் தொற்றிக்கொள்ள, பாட்டி நேராக வீட்டிற்கு சென்றார்.

ஆனால் தாத்தாவோ சில நாட்களாக ஊரில் இல்லாததால் ஊரின் நிலையை அறிந்து கொள்ள வேண்டி மெதுவாக நடந்து வந்து கொண்டு இருந்தார். வழியில் தென்பட்ட அனைவரும், அவருடன் சில அடிகளாவது நடந்து வந்து அவரின் உடல்நலத்தைப்பற்றியும், பயணத்தைப்பற்றியும், மகன், மகள் என அனைத்து குடும்ப உறுப்பினர்களைப்பற்றியும் விசாரித்தனர். தாத்தா ஒரு புன்னகையோடு அனைவருக்கும் பதில் சொல்லிக்கொண்டே வீடு நோக்கி நடந்து கொண்டிருந்தார். குழந்தைகளுக்கோ இது வியப்பாக இருந்தது. ஏனென்றால் அவர்களோ, அவர்களது பெற்றோரோ எவ்வளவு நாள் கழித்து வந்தாலும், அருகில் வசிப்போர் கூட ஒரு புன்னகையோடு, சில சமயம் அது கூட இல்லாமல், சென்று விடுவர்.

தாத்தாவுடன் வந்த குழந்தைகள், யாரும் அவரிடம் பேசாத பொழுது, ஏன் தாத்தா நடந்து போகலாம்னு சொன்னீங்க, ஏன் தாத்தா எல்லோரும் உன்கிட்ட வந்து எல்லாரைப்பத்தியும் கேக்கறாங்க என கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டு வந்தனர். தாத்தா அதே புன்னகையோடு, இது கிராமம்டா குட்டிகளா, இங்க எல்லோரும், எல்லாரைப்பத்தியும் தெரிஞ்சு வெச்சிப்பாங்க, நானும் எல்லாரைப்பத்தியும் தெரிஞ்சுக்கதான் நடந்து வந்துகிட்டு இருக்கேன் என்றார்.

சிறிய கிராமம் தானே இதற்குள் வீடு வந்து விட்டது. பெட்டி போல உள்ள தங்கள் வீட்டில் இருந்து அடுக்கு அடுக்காக உள்ள இந்த வீட்டையும், வீட்டின் முன்னும் பின்னும் விளையாடுவற்கு உள்ள இடங்களைப் பார்த்த பிறகு, இந்த வீடு அவர்களுக்கு அரண்மனை மாதிரி இருந்தது.

வீட்டில் நுழைந்து சிறிது நேரம் கழித்து பாட்டி தாத்தாவிடமும், தனது கடைசி மகனிடமும், பம்புசெட் ஓடிக்கிட்டு இருக்கு நீங்க இரண்டு பேருமா குழந்தைகளை அழைச்சிக்கிட்டு போய் குளித்து கோவிலுக்கு போய் விட்டு வந்துடுங்க, நானும் சமையலை முடித்துவிட்டு கோவிலுக்கு வந்து விடுகிறேன் என தாத்தாவிடம் கூறி விட்டு குளிக்கச்சென்றுவிட்டார்.

அனைவரும் குளித்து விட்டு கிராம சிவன் கோவிலுக்கு வந்தனர். கோவில் சிறியது என்றாலும், பிள்ளையார், முருகன், சிவன், காமாட்ஷி, துர்கை, லிங்கோத்பவர், விஷ்ணு, அனுமார், நவக்கிரகம் என பல்வேறு சிறிய மற்றும் பெரிய சந்நிதிகளை கொண்டு இருந்தது. கோவிலை சுற்றி விட்டு அனைவரும் பிராகாராத்தில் அமர்ந்தனர். ஒரு சிறுவன் பாட்டியின் மடியில் அமர்ந்துகொண்டு, தாத்தா இந்த கோவிலை கட்டியது யார் என்றது? ஒரு வாணிகம் பண்ணின, அதாவது அந்த காலத்து business man, செட்டியார் கட்டினதுடா என்றார். அப்ப எல்லா கோவிலும் அவங்க தான் கட்டினாங்களா என்றது மற்றொரு குழந்தை. தாத்தா லேசான சிரிப்புடன் குழந்தையை கொஞ்சி விட்டு, இல்லைடா எனக்கூறி விட்டு, அந்த காலத்துல ராஜாக்களும், ராஜாக்கள் பேர்ல ஊரில் உள்ள பெரிய மனிதர்களும், அவங்க அவங்க வசதிக்கு ஏற்ப கோவிலை கட்டினாங்க என்றார்.

இவர்களின் ஆர்வத்தை பார்த்த தாத்தா, நாளைக்கு ஒரு வித்தியாசமான கோவிலுக்கு அழைத்துபோவதாக கூறினார். அது எந்த விதத்தில் வித்தியாசம் என அவரின் கடைசி மகன் கேட்க, அந்த கோவிலில் தான் கடவுளுக்கு செங்கல், கம்பி (உலோகம்), சிமெண்ட் (சுதை), மரம் இது எதுவுமே இல்லாமல், மலையில் உள்ள கல்லைக்கொண்டே குடைந்து கோவில் உருவாக்கியுள்ளனர். ஆனா இப்ப அங்க சாமியும் இல்லை பூஜையும் நடக்கறதில்லை என்றார். சாமியே இல்லைன்னா அத எப்படி தாத்தா கோவில்னு சொல்லறீங்க என்றாள் அவரது பேத்தி. இப்பொழுது தான் அந்த கோவிலில் கடவுளை பற்றி சித்தரிக்கும் சிலைகளே இல்லை. இதுதான் அந்த கோவிலின் தற்போதைய நிலைமை என்றார். கோவிலைக் கட்டின போது சிவபெருமான், பிரம்மா(நான்முகன்), விஷ்ணு (திருமால்) ஆகிய மும்மூர்த்திகளுக்கும் சேர்த்து ஒரே கோவிலா அந்த ராஜா கட்டினார்.

யார் தாத்தா அந்த கோவிலை கட்டினது?

சிம்மவிஷ்ணு பல்லவ மன்னனின் மகன் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் (590 A.D. to 630 A.D.) தான் அந்தக் கோயிலை கட்டினான். மகேந்திரவர்ம பல்லவன் முதலில் சமணத்தில் இருந்தான். அந்த மன்னன் இருந்த காலத்தில் தான் அப்பர் சுவாமிகள் வாழ்ந்தார். இந்த அரசன் தான் அவரைக் கல்லில் கட்டி கடலில் போட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அப்பர் சுவாமிகளின் அருளால், மகேந்திரவர்மனுக்கு ஏற்ப்பட்டு இருந்த தீராத வயிற்று வலி தீர்ந்தது. அதன் பின்னர் மன்னனும் சைவத்திற்கு மாறினான் அப்படின்னு சொல்றாங்க. ஆனா உறுதியான ஆதாரம் எதுவுமில்லை. அதற்கு பிறகுதான் மகேந்திரவர்மன் பல அரிய கோவில்களை மலையை வெட்டியம், குடைந்தும் உருவாக்கினான்.

பாட்டி அதற்குள், சரி சரி மிச்ச கதையை நாளைக்கு வண்டியில் போகும் போது பேசிக்கலாம் வாங்க என அனைவருடனும் வீடு திரும்பினார். தாத்தாவும், சரி வாங்க நாளைக்கு அந்த கோவில்ல மிச்ச கதையை சொல்றேன்.

கிராமத்திலிருந்து புறப்பட்டு திண்டிவனம், செஞ்சி வழியாக வந்து விழுப்புரம் நோக்கி செல்லும் போது, இடது பக்கம் மண்டகப்பட்டு என தெரியும் வழிப்பலகையை பார்த்து ஓட்டுனர், அங்கு பிரியும் மண் சாலையில் வண்டியை திருப்பினார். மண் சாலையில் வண்டியில் செல்வது குழந்தைகளுக்கு ஆனந்தமாக இருந்தது. இவர்களின் வண்டிக்கு பின்னால், அந்த கிராமத்து குழந்தைப்பட்டாளமும், ஹே என கத்திய படியே அவர்களின் வேகத்திற்கு ஓடி வந்தனர். சற்று நிமிடத்தில், தாத்தா ஒரு அறிவிப்பு பலகையை சற்று தூரத்திலேயே பார்த்து அங்கு வண்டியை நிறுத்தச் சொன்னார். தாத்தா, பாட்டி, சித்தப்பா, பேரன், பேத்திகள் மற்றும் இவர்களின் பின்னால் ஓடி வந்த குழந்தைகள் என ஒரு பட்டாளமே மண்டகப்பட்டு கோவிலை நோக்கி அந்த ஒற்றை அடி பாதையில் படையெடுத்தனர்.

அந்த ஒற்றை அடி பாதையின் முடிவில், வடக்கு நோக்கியுள்ள குடைவரையின் கீழே பரந்த சமன் செய்யப்பட்டுள்ள நிலையில் இருந்த அந்த மலையின் அடிவாரம் அவர்களை பாறைகளால் சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்றது. அந்த சமன் செய்யப்பட்ட தரையில் ஒரு மரம் இருந்தது. மரத்தின் அடியில் இருந்த கோவிலை பார்த்த குழைந்தகள், தாத்தா இந்த கோவிலில் கடவுள் சிலைகள் இல்லைன்னு சொன்னிங்க, ஆனால் ஆரம்பத்திலேயே ஒரு குட்டி கோவில் இருக்கு என்றனர். மகேந்திரர் காலத்து கோவில் இல்லை. இது இப்ப புதிதாக உருவான கோவில் என்றார்.

என்னதான் காலைப்பொழுதாக இருந்தாலும், சூரியனின் வெப்பத்தை தரையில் காணமுடிந்தது. பாட்டிக்கோ எங்கு குழைந்தகளுக்கு கால் சுட்டுவிடுமோ என்ற அச்சம். அவர்களைப்பார்த்து, சீக்கிரமா மேல வாங்க என்று கூறியபடியே தனக்கு வலது பக்கத்தில் உள்ள படிகளின் வழியாக குழைந்தைகளுடன் தானும் ஏறினார்.தாத்தாவும் மேலேயேறியவுடன் தம்முடன் வந்தவர்களை அழைத்து அந்த குடைவரையை பற்றி விளக்க ஆரம்பித்தார். இங்கே பாருங்கள் குடைவரையின் இரண்டு பக்கங்களிலும் வாயிற்க்காவலர்கள், அதாவது காவலாளிகள் உள்ளனர். தாத்தா, இவர்கள் கடவுளா இல்லை மனிதர்களா? பொதுவாக கல்லில் உள்ள உருவங்களுக்கு இரண்டு கைகள் இருந்தால் அவை மனிதர்கள். இரண்டு கைகளுக்கு மேலே இருந்தால் அவை கடவுளின் உருவம். எனவே இங்கு உள்ள வாயிற்க்காவலர்கள் மனிதர்கள்.

இவர்கள் தலையில் அணிந்துள்ளது மகுடங்கள். சில சமயம் தலைமுடியை கொண்டே மகுடம் அணிந்து கொள்வர். இவர்கள் அணிந்துள்ள மகுடங்கள் போதிகைக் கைகளுக்கு இடையில் உள்ள பகுதிவரை நீண்டுள்ளது. போதிகை என்பது இங்கே வளைந்து உள்ளது பாருங்கள் அதுதான். காதுகளில் பாருங்க, உங்க பாட்டியை போல பெரிய குண்டலங்கள் போட்டுக்கொண்டுள்ளனர். இந்த நீண்ட குண்டலங்கள் பனையோலைக்குண்டலங்கள்னு சொல்லலாம்.தாத்தா இவர்களுக்கு இன்னும் புரியம் வண்ணம் எடுத்துக்கூற விரும்பி, தன் கூட வந்த கிராமத்து பிள்ளைகளை பார்த்து, யாரிடமாவது பலப்பம் இருந்தால் கொடுங்கள் என்று கூற, அங்கு இருந்த ஒரு சிறுவன் தன்னிடம் இருந்ததை கொடுத்தான். பின்னர் அனைவரையும் நோக்கி இங்கே பாருங்கள், இந்த இரண்டு வாயிற்காவலர்களின் உருவத்திலும் உள்ளவற்றை குறித்து வைத்து உங்களுக்கு விளக்குகிறேன்.

இவர்களின் கைகளில் -
கிழக்கருக்கு - மூன்று வளையல்களும்
மேறக்கருக்கு - இரண்டு வளையல்களும்

கங்கணங்கள் - அதாவது தோள்களில் போட்டுக்கொள்ளும் அணிகலன்.
கிழக்கருக்கு - சிதைந்து தெரியவில்லை
மேறக்கருக்கு - உள்ளது.

கோரைப்பற்கள் - பற்களில் கடைசியில் வாயிற்கு வெளியே தெரியும் நீண்ட பற்கள்.
கிழக்கருக்கு - சிதைந்து தெரியவில்லை
மேறக்கருக்கு - உள்ளது.

உதரபந்தம் - அதாவது வயிற்றையும் மார்பையும் பிரிக்கும் பகுதியில் உள்ள கட்டு உதரபந்தம் ஆகும்.

இங்கே பாருங்கள் மார்பு பகுதியில் பூணூல், முப்புரிநூல், அணிந்துள்ளார்.

தாத்தா குழந்தைகளிடம் தொடைவரை சுருக்கி கட்டப்பட்டுள்ள அரையாடைகளை சுட்டிக்காட்டி இதோ பார் இது நம்ம தோட்டத்தில் மரமேறும் போது கட்டிக்கொள்வது போல உள்ளது. உடனே ஒரு சுட்டிப்பயல் கிழக்கு பக்கம் ஓடிப்போய், தாத்தா அங்க தெரியரா மாதிரி இதுல தெரியலை என்றான்.

அவர் சிரித்துக்கொண்டே சரி அங்கேயே இரு. நான் சொல்லும் போது நீ அங்கே அந்த உருவத்தை பார்த்து எப்படி இருக்குன்னு சொல்லு.

தாத்தா இருந்த பக்கம் (மேற்கர்) வலது கையை இடுப்பில் வைத்திருந்தார். இடது கையின் கீழே உருள்பெருந்தடியின் மீது தாங்கிய வண்ணம் நின்று கொண்டுருந்தார்.

இங்கே பாருங்கள் இடது கையை ஒரு தடி தாங்கிய வண்ணம் இருக்கு இல்லையா. அதாவது கைப்பிடியுடன் கூடிய இந்த உருளைத்தடிக்கு உருள்பெருந்தடி என்று பெயர்.

அந்த பக்கம் இருந்த சுட்டிப்பயலை நோக்கி அங்கு எப்படியுள்ளது என்று கூறு என்றார்.

தாத்தா, இவர் (கிழக்கருக்கு) வலது கையில் ஒரு தடியை பிடித்துக்கொண்டுள்ளார், அதே சமயம் இடது கையின் கீழே வலது கை உள்ளது. தாத்தா அதோட இவருக்கு இடுப்பு கொஞ்சம் அதிகமாக வளைந்துள்ளது என்றான்.

தாத்தா உடனே (மேற்கர்), இங்கு பாருங்க இவரின் தலைக்கு அருகில் இடப்புறமாக பாம்பு நெளிந்தவாறு உள்ளது. அதே மாதிரி உருள்பெருந்தடியின் மேல் சுற்றிய வண்ணம் ஒரு பாம்பு காட்டப்பட்டுள்ளது. ஆனால் அது போல பாம்பு எதுவும் அந்த பக்கம் இல்லை என்றார்.

சரி கால்கள் எப்படி உள்ளது என்று பார்பபோம். இவருக்கு (கிழக்கருக்கு) இடது கால் மடிந்து (பார்சுவத்தில்) உள்ளது. ஆனால் பாதம் தெரியவில்லை. வலது கால் தரையில் இருந்தாலும் பாதம் முழுமையடையவில்லை.

தாத்தா கேட்பதர்க்கு முன்னே முந்திக்கொண்டு, இவருக்கு (மேற்கருக்கு) இரண்டு கால்களும் தரையில் இரண்டு உயரத்தில் உள்ளது என்றான்.

சரி எல்லாம் இங்க வாங்க, இனி மற்ற இடங்களை பார்க்கலாம்.

நாம் நிற்கும் இந்த இடம் தான் முகமண்டபம். முகமண்டபம் அப்படிங்கறது - அர்த்த மண்டபத்திற்கு அடுத்து முன் உள்ள பெரிய மண்டபம். இதற்கு அடுத்து உள்ள இடம் அர்த்தமண்டபம். அதாவது கோவிலின் கடவுள் சந்நிதிக்கு முன் உள்ள மண்டபம், அர்த்தமண்டபம்
இந்த அர்த்தமண்டபத்தில் இரண்டு அரைத்தூண்களும், இரண்டு முழுத்தூண்களும் உள்ளன. இரண்டு முழுத்தூண்களும் தரையில் இருந்து சதுரம், கட்டு, சதுரம் என உள்ளது. அதாவது ஒரு கல்லை எடுத்து நான்கு பக்கமும் சமன் செய்து, நடுவில் வெட்டி எடுத்த மாதிரி இருக்கு பாருங்க. அடுத்தது உள்ள இரண்டு அரைத்தூண்களும் உள்ளது. அரைத்தூண்கள் என்றால் மூன்று பக்கம் மட்டுமே தெரியும் வெளியில் தெரியும். தூணை சுற்றி வர முடிஞ்சா அது முழுத்தூண் அப்படின்னும் சுற்றி வர முடியாதபடி ஒரு பக்கம் சுவரோட ஒட்டியிருந்தா அதை அரைத் தூண் அப்படின்னும் சொல்லுவோம்.

தாத்தா அங்குள்ள பெரியவர்களை பார்த்த வண்ணம், இந்த இடத்தை பாருங்கள் இது போதிகை (தூணுக்குக் கைகள் முளைத்து, அவை கூரையைத் தாங்கி நின்றால் எப்படி இருக்குமோ அந்த அமைப்புக்குப் போதிகை என்று பெயர்), உத்திரம் (போதிகை தாங்கி நிற்கும் உறுப்பு உத்தரம்), வாஐனம் (உத்தரத்திற்கு மேல் காட்டப்பட்டிருக்கும் வாஜனம் என்ற உறுப்பு உத்தரத்தையும் கூரையையும் இணைக்கும்) என பல அமைப்புகளை கொண்டுள்ளது.

இங்க எல்லோரும் வாங்க. நேற்று நான் சொன்ன கல்வெட்டு1 இங்க தான் இருக்கு.

தாத்தா இந்த கல்வெட்டுல என்ன எழுதியிருக்கு தாத்தா?

நாம இப்ப வீடு கட்ட பயன்படுத்தர செங்கல், கம்பி (உலோகம்), சிமெண்ட் (சுதை), மரம் இது எதுவுமே இல்லாமல், வெறும் கல் மட்டுமே (பாறைகளால்) கொண்டு சிவபெருமான், பிரம்மா (நான்முகன்), விஷ்ணு (திருமால்) ஆகிய மும்மூர்த்திகளுக்கும், விசித்திரசித்தன் எனும் அரசனால் எடுக்கப்பட்ட இலக்ஷிதாயனக் கோவில்னு எழுதியிருக்கு.

தாத்தா அப்ப பிரம்மாவிற்கு அந்த காலத்தில் கோவில் இருந்திருக்கா? இப்ப ஏன் தாத்தா பிரம்மாவிற்கு நிறைய கோவில்கள் இல்லை? தாத்தாவிற்கு இதற்கு என்ன பதில் செல்வது என்று தெரியவில்லை. இருந்தாலும் குழந்தைகளிடம் பொய் சொல்ல விரும்பாமல், தெரியலைடா குட்டிகளா. அப்ப இந்த கோவில்லை குடைந்த ராஜா, தான் குடைந்த கோவில்லை பிரம்மாவிற்கு ஒரு கருவரையோடு (சந்நிதி) குடைந்துள்ளார்.

தாத்தா நேத்து நீங்க இந்த கோயிலை கட்டினது மகேந்திரவர்ம பல்லவன்னு சொன்னீங்க. ஆனா இங்க வேற பெயர் எழுதியிருக்கே என்று கேட்டது ஒரு அறிவாளி வாண்டு. தாத்தா அதற்கு, ஆமாண்டா கண்ணா கட்டினது மகேந்திரவர்மர் தான். விஷ்ணுக்கு 1000 நாமங்கள் இருக்கில்ல, விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்றீங்க இல்ல. அப்பறம் நீங்க எல்லாரும் கதையெல்லாம் படிக்கறீங்க இல்லையா. அந்த கதைகளை எழுதினவர் தன்னோட நிஜப் பெயரில எழுதாம புனைப் பெயர் வைத்துக்கொள்றாங்க இல்லையா. அது மாதிரி அம்மன்னன் தனக்கும் நிறைய பெயர்களை வைத்துக்கொண்டான். அந்தப் பெயர்களை விருதுப்பெயர்கள் அப்படின்னு சொல்வோம். 'விசித்திரசித்தன்' அவனோட ஒரு விருதுப்பெயர். 'இலக்ஷிதன்' அவனோட இன்னொரு விருதுப்பெயர்.

(1) மேற்குப்புறத்தில் உள்ள அரைத்தூணில் பல்லவ கிரந்தத்தில் வடமொழி கல்வெட்டில் இக்குடைவரை லக்ஷிதாயனம் என பெயரிடப்பட்டுள்ளது.

எல்லா இடத்தையும் பார்த்தோம் இல்லையா, முக்கியமாக இந்த இடத்தை பார்க்கவேண்டும். இந்தக் கருவரைகளை பாருங்க. இன்று குழிகள் மட்டுமே உள்ள இந்த இடத்தில் தான், ஒரு காலத்தில் மூன்று தெய்வத் திருமேனிகள் இருந்திருக்கணும். இந்தக் குழிகள் கோயிலைக் கட்டினப்பவே ஏற்படுத்தப்பட்டதா இல்லை பிற்காலத்தில வேற யாராவது ஒரு ராஜா தெய்வச் சிலைகளை இங்கே பொருத்தி வைக்கிறாதுக்காக இந்த குழிகளை ஏற்படுத்தினாரான்னு தெரியலை.

குழந்தைகளுக்கு அங்கு உள்ள எல்லாவற்றையும் விளக்கிய சந்தோஷத்தில் தாத்தா அங்கிருந்து புறப்பட எண்ணி, இந்த மண்டகப்பட்டு கோவிலில் உள்ளவை இவ்வளவு தான். இது போல இன்னும் நிறைய கோயில்கள் இந்தப் பக்கம் இருக்கு. அதுக்கெல்லாமும் அடுத்த வருஷங்கள்ள விடுமுறைக்கு நீங்க வரும் போது போகலாம். சரி வாங்க கிளம்பலாம் என அவர்கள் வந்த வண்டி இருந்த இடத்தை நோக்கி நடையை போட்டார்.
this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.