http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[181 Issues]
[1796 Articles]
Home About US Temples Facebook
Issue No. 43

இதழ் 43
[ ஜனவரி 16 - பிப்ரவரி 17, 2008 ]


இந்த இதழில்..
In this Issue..

ஜல்லிக்கட்டு சங்ககாலப் பழமையதா?
மலையடிப்பட்டியில் புதிய கல்வெட்டு
திரும்பிப் பார்க்கிறோம் - 15
Temples of Narthamalai and Kadambar malai
மாங்குளம் குடைவரை
காரோணன் குடிகொண்ட கடல்நாகை
திரைக்கை காட்டும் தென் நாகை
மனிதம் சரணம் கச்சாமி!!!
காவிரியும் உன்னவளே! நந்தலாலா!
அங்கும் இங்கும் (ஜன. 16 - பிப். 15)
இதழ் எண். 43 > கலையும் ஆய்வும்
காரோணன் குடிகொண்ட கடல்நாகை
கோகுல் சேஷாத்ரி

மனைவி தாய் தந்தை மக்கள்
மற்றுள சுற்றமென்னும்
வினையுளே விழுந்தழுந்தி
வேதனைக் கிடமாகாதே
கனையுமா கடல்சூழ் நாகை
மன்னு காரோணத்தானை
நினையுமா வல்லீராகில்
உய்யலாம் நெஞ்சினீரே !


என்று அப்பர் பெருமான் (திருமுறை 4.17.1) அறைகூவல் விடுத்தபடி அறிமுகம் செய்யும் ஏழாம் நூற்றாண்டின் சைவத் திருப் பதிகளுள் நாகைப்பட்டினத்தின் காரோணமும் ஒன்று. அப்பர், அவருடைய சமகாலத்தவரான திருஞானசம்மந்தர், அதற்குப்பின்வந்த சுந்தரர் என்று தேவார சமயக்குரவர்கள் மூவராலும் பாடல் பெற்ற முக்கியப் பதி. சுந்தரரால் "அடியார்க்கு அடியேன்" என்று பணிவுடன் திருத்தொண்டர் தொகையில் குறிக்கப்பட்ட அறுபத்து நான்கு நாயன்மார்களுள் மீனவரான அதிபத்த நாயனார் அவதரித்த புனிதத்தலம். தென்னகச் சைவம் போற்றும் சப்த விடங்கத் தலங்களுள் ஒன்று. இந்திய சாக்த மரபு போற்றும் அறுபத்து நான்கு சக்தி பீடங்களுள் ஒன்று.

இத்திருக்கோயில் தமிழ்நாட்டின் கிழக்குக் கடற்கரையோரத்தில் அமைந்துள்ள இன்றைய நாகைப்பட்டினத்தில் நகரின் மையத்தில் அமைந்துள்ளது. நாகை புகைவண்டி நிலையத்திலிருந்தும் பேருந்து நிலையத்திலிருந்தும் கோயிலை சுலபமாக அடைந்து விடலாம். உள்ளுர்வாசிகளிடம் ஏனோ காரோணத்துப் பெருமானைவிட அம்மையே பிரபலமாக உள்ளார். நீலதயாட்சியம்மன் திருக்கோயிலுக்கு வழி என்ன என்று கேட்டால்தான் குழப்பமில்லாத பதில்கள் கிடைக்கின்றன.

திருக்கோயில் வளாகம் மிகப் பெரியது. வளாகத்தையொட்டி அமைந்துள்ள புனித நீர்நிலையிலிருந்து வளாகத்தின் முழு தரிசனத்தையும் கண்குளிரக் காணலாம்.





திருக்கோயில் குளத்திலிருந்து தரிசனம்



***********************************************************************************************


காரோணம் - பெயர்க்காரணம்

சுகன் என்னும் சோழ மன்னனால் இத்திருக்கோயில் கட்டப்பட்டதாகவும் புண்டரீக மகரிஷியை தன் உடலோடு (காயத்தோடு) கையிலாயத்திற்கு மேலனுப்பி (ஆரோகணம்) வைத்ததால் காயாரோஹணர் என்னும் பெயர் ஏற்பட்டதாகவும் கோயில் தலபுராணம் உரைக்கிறது. ஆனால் காயாரோஹணம் என்னும் சொல்லாட்சியோ ஆரோகணத் தத்துவமோ தேவாரப் பாடல்களில் காணப்படவில்லையாதலின் இப்புராணச் செய்தியின் பழமை கேள்விக்குறியாகின்றது. காரோணம் என்று மட்டுமே மூவராலும் குறிப்பிடப்பட்டுள்ள இப்பதியின் பெயர் திருமாலின் பெயர்களுள் ஒன்றான ஓணத்தான் என்பதிலிருந்தும் பெறப்பட்டிருக்கலாம். உறுதியாகத் தெரியவில்லை.

கல்வெட்டறிஞர் குடந்தை சேதுராமன் அவர்கள் "காயா ரோஹணம்" என்னும் தன்னுடைய கட்டுரையில்(1) இத்திருக்கோயில் பாசுபத மகாவிரதிகளினால் நிர்வகிக்கப்பட்டு வந்ததாகவும் காயாரோஹணம் அல்லது தன்னுடலுடன் கையிலாயம் புகுதல் என்பது பாசுபதர்களின் கொள்கை என்றும் குஜராத்தில் இருந்த காயாரோஹணம் என்னும் பதியின் இரட்டை நகரமே நாகையின் காயாரோகணம் என்றும் விரித்துக் கூறியுள்ளார். ஆனால் தேவாரப் பாடல்களிலோ கோயிலில் இன்றுள்ள கல்வெட்டுக்கள் மற்றும் சிற்பங்களிலோ இத் திருக்கோயில் பாசுபதர்களால் நிர்வகிக்கப்பட்டதற்கான சான்றுகளேதும் கிடைக்கவில்லை. சுந்தரரின் பதிகங்களில் கூட நாகை மட்டுமே "தென் நாகை" என்று குறிப்பிடப்படுகிறதே தவிர காரோணம் தென் காரோணம் என்று குறிப்பிடப்படவில்லை. ஆதலின் அவ்வறிஞரின் கூற்று மேலும் ஆராய்ச்சிக்குரிய ஒன்று எனத் தெளிவோம்.(2)

(1) குடந்தை சேதுராமன் ஆய்வுக்கட்டுரைகள் - தொகுதி 1, சேகர் பதிப்பகம், சென்னை

தென்னகத்தின் சிவாலயங்களில் அம்மனுக்குத் தனித்திருமுன்கள் அமைக்கும் மரபு குலோத்துங்க சோழருக்குப் பிறகுதான் ஏற்பட்டது என்பது ஆய்வாளர்களின் கருத்து. ஆனால் நீலதயாட்சி அம்மனின் பெயரை அழகுத் தமிழில் "கருந்தடங்கண்ணி" என்று அப்பர் பெருமான் தன்னுடைய பதிகங்களில் குறித்துவிடுகிறார். அப்பர் காலத்தில் இத்திருக்கோயிலில் அம்மைக்குத் தனித்திருமுன் இல்லையெனில் யாரை அவ்வாறு குறிப்பிடுகிறார் என்பதில் தெளிவேற்படவில்லை.


***********************************************************************************************


கோயில் அமைப்பு





பூர்த்தியாகாத முதல் கோபுரம்


கிழக்கு நோக்கிய இத்திருக்கோயில் நிலைகள் பூர்த்தியாகாது கல்ஹாரத்துடன் நிற்கும் முதல் கோபுர வாயிலுடன் (மகா துவாரம்) துவங்குகிறது. அதனைத் தொடர்வது நந்தி மண்டபம். இம்மண்டபத்திற்கு வடக்கேதான் திருக்கோயில் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. நந்திமண்டபத்தைத் தொடர்ந்து எழுவது ஐந்து நிலைகள் கொண்ட இரண்டாவது கோபுர வாயில். இதனை சோழர் காலத்தைய கோபுரமாக கோயில் வரலாறு குறிப்பிட்டாலும் உறுதிப்படுத்திக்கொள்ளமுடியவில்லை. கோபுரத்தையொட்டி இரு புறங்களிலும் படரும் மதில் சுவர், கோயில் வளாகத்தின் பல்வேறு மண்டபங்கள், உப-திருமுன்கள் (சன்னிதிகள்) என்று அனைத்தையும் உள்ளடக்கி அமைந்துள்ளது. பண்டைய கல்வெட்டுத் தொடரையொட்டி இச்சுவரை விளாகம் என்று குறிப்போம்.





இரண்டாவது கோபுரமும் முன்னால் அமைந்துள்ள நந்தி மண்டபமும்


கோயிலின் மையமாகத் திகழ்வது காரோணப் பெருமான் இலிங்க உருவில் குடிகொண்டுள்ள கருவரையாகும். நாகை சப்த (ஏழு) விடங்கத் தலங்களுள் கோமேதகத்தில் அமைந்ததாகக் கருதப்படும் சுந்தர விடங்கராம்(2) தியாகராஜரைப் பெற்றுத் திகழும் பதியாதலின் காரோணர் கருவரைக்கு அருகிலேயே தியாகராஜப் பெருமானுக்கும் தனிக்கருவரை அமைந்துள்ளது (3). பல்லவர்காலந்தொட்டுப் பாடல்பெற்ற பதியாகத் திகழந்தாலும் திருக்கோயிலின் முக்கியப் பகுதிகள் சோழர் காலத்தில்தான் கற்றளியாக மாற்றிக் கட்டப்பட்டுள்ளன. காரோணர் கருவரையின் அதிஷ்டானத்தில் காணப்படும் மிகப் பழைய கல்வெட்டே முதலாம் இராஜராஜருடையது என்பதால் திருக்கோயிலின் கட்டுமானத்தையும் இராஜராஜர் காலத்தியதாகவே முந்து ஆய்வாளர்கள் குறித்துள்ளனர்(4). வளாகத்துள் பழமையானதும் ஒரு தள வேசர விமானத்தைக் கொண்டு விளங்குவதுமான இக் காரோணர் கருவரையின் கட்டுமான அமைதியும் சிற்பங்களுமே இக்கட்டுரையின் கருப்பொருட்களாகும்.

(2) நாம் செல்லும்போது இக்கோமேதக லிங்கம் திருட்டுப் போயிருந்தது. இதனால் கோயில் நாகைப் போலீசாரின் காவலுக்கு உள்ளாகியிருக்கிறது. சமீப காலங்களில் நாம் இழந்த மிக மிக விலைமதிப்புள்ள லிங்கங்களில் திருஈங்கோய்மலை மரகத லிங்கமும் நாகை லிங்கங்களும் அடங்கும்
(3) விடங்கத் தலங்கள் பலவற்றிலும் இவ்வாறு மூலக் கருவரைக்கு அருகில் தியாகராஜப் பெருமானுக்குத் தனித்திருமுன் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வமைப்புக்கு திருவாரூர் சிறந்ததொரு உதாரணம்.
(4) எஸ் ஆர் பாலசுப்பிரமணியன், Middle Chola Temples


***********************************************************************************************


காரோணர் கருவறை - தாங்குதளம் (அதிஷ்டானம்)





காரோணர் கருவறை தாங்குதளம்


கற்களால் மறைக்கப்படாத உபானம், ஜகதி, எண்பட்டைக் குமுதம், தூண் பாதங்களுடன் கூடிய கண்டம், பட்டிகை, கண்டங்களுடன் கூடிய வேதிகை என்று பாதபந்த வகைத் தாங்குதளத்திற்குரிய அனைத்து உறுப்புக்களும் கொண்டு எழும் கருவரை அதிஷ்டானத்தின் கற்பரப்பு ஆங்காங்கே - குறிப்பாக ஜகதி மற்றும் பட்டிகைப் பகுதிகளில் - சிதைந்துள்ளது.

ஜகதி, குமுதம், பட்டிகை என்று மூன்று உறுப்புக்களிலுமே கல்வெட்டுப் பொறிப்புக்கள் காணக்கிடைக்கின்றன. கிழக்கு நோக்கிய கருவரைக்குப் பின்புறம் அமைந்துள்ள மேற்குப் பகுதியின் பட்டிகையில்தான் வளாகத்தின் பழமையான கல்வெட்டான முதலாம் இராஜராஜரின் கல்வெட்டு காணக்கிடைக்கிறது. கற்களின் சிதைவால் கல்வெட்டுக்களும் மிகுதியான பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளதைக் குறிப்பிடாமலே உணரலாம்.

அதிஷ்டானத்தின் பல்வேறு அளவுகளைக் கீழ்க்கண்ட படத்தில் காண்க.





காரோணர் கருவறை தாங்குதளம் - அளவுகள்



***********************************************************************************************


கருவறையின் சுவர்கள் (ஆதிதளம்)

கருவரையின் மூன்று பக்கங்களிலும் எழும் சுவர் கர்ணப்பத்தி - சாலைப்பத்தி - கர்ணப்பத்தி என்னும் பிரிப்புக்கு உள்ளாகியுள்ளது. கர்ணப்பத்தியின் அகலம் 7'5" (7 Feet 5 Inches). சாலைப்பத்தியின் அகலம் 9" (9 Feet). சாலைப்பத்தி சுவற்றிலிருந்து 15" (Inch) முன்னிழுப்பாக பிதுக்கம் (Projection) பெற்று அமைக்கப்பட்டுள்ளது. இப்பிதுக்கம் சாலைப்பத்தியில் அமைக்கப்பட்டுள்ள கோட்டங்களையும் கோட்ட தெய்வங்களையும் முன்னிறுத்திக் காட்டுவதற்காக அமைக்கப்பட்டதாகக் கொள்ளலாம்.





வடக்குச் சுவர் அமைப்பு





மேற்குச் சுவர் அமைப்பு


சகிக்க முடியாத எண்ணைப் பிசுக்கு, அழுக்கு, ஆங்காங்கே தெரியும் வண்ணங்கள் என்று சுத்தம் சுகாதாரத்தையெல்லாம் அறவே இழந்து நிற்கும் கருவரைச் சுவற்றின் மிச்சமிருக்கும் அழகையும் காணவொடாமல் கருவரையைச் சுற்றிப் படரும் பிற்கால மண்டபத்தின் தூண்கள் தடுத்தாட்கொண்டு விடுகின்றன. கருவரைச் சுவற்றின் சில பகுதிகளில் கல்வெட்டுப் பொறிப்புக்களையும் காணலாம்.


***********************************************************************************************


சாலைப் பத்தி (ஆதிதளம்)

கருவரைச் சுவற்றின் மூன்று பக்கங்களிலும் நடுவண் அமைந்து நன்கு முன்னிறுத்திக் காட்டுவதற்காக பிதுக்கத்தையும் பெற்றுத் திகழும் சாலைப்பத்தி அதிஷ்டானத்தின் பட்டிகையிலிருந்து கம்பீரமாக மேலெழுகிறது. பத்தியின் நடுவே அமைந்திருக்கும் கோட்டங்களுக்கு அதிஷ்டான வேதிகைகள் வழிவிட்டுப் படர்ந்துள்ளன.

சாலைப் பத்திகளின் இருபுறங்களையும் எண்பட்டைத் தூண்களான அழகிய விஷ்ணுகாந்தங்கள் முழுதாக அணிசெய்ய நடுவே அமைந்திருக்கும் கோட்டத்தை வட்ட வடிவ ருத்திர காந்த அரைத்தூண்கள் அணைத்துள்ளன. சதுரம், எண்பட்டைக்கட்டு, மாலைத்தொங்கல், எண்பட்டைக் கலசம், கும்பம் , பாலி என்று பல்வேறு அங்கங்களையும் பெற்று விளங்கும் விஷ்ணு காந்தத் தூண்களின் மாலைத்தொங்கல் பகுதிகளில் பல்வேறு சிற்றுருவங்கள் வடிக்கப்பட்டு அணிசெய்கின்றன. இவற்றுள் வீணாதாரர், இடக்கை-புல்லாங்குழல் முதலியவற்றை இசைக்கும் இசைக்கலைஞர்கள், ஆடல் நிகழ்த்தும் ஆடற்கலைஞர்கள் முதலான சிற்பங்கள் கண்டு இன்புறத்தக்கவை. அதிஷ்டானக் கற்களைப் போல் இத்தூண் கற்களும் சிதைவுகளுக்கு ஆளாகியுள்ளன. குறிப்பாகப் பல இடங்களில் மாலைத்தொங்கல் சிற்பங்கள் சிதைவுக்கு ஆளாகியுள்ளது வேதனை தருகின்றது.





சாலைப்பத்தி அமைப்பு


அரைத்தூண்கள் அணைக்க மேலெழும் தேவக் கோட்டங்களின் மேல் மகர தோரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வட பகுதியைத் தவிர மற்ற இரு சுவர்களிலும் இத்தோரணங்கள் காணுமாறு இல்லை.


***********************************************************************************************


கர்ணப் பத்தி (ஆதி தளம்)

சாலைப் பத்தியின் இரு புறங்களிலும் விரியும் கர்ணப்பத்திகள் இரு முழுத்துண்களையும் இரு அரைத்தூண்களையும் பெற்றுள்ளன. முழுத்தூண்களுள் ஒன்று பத்திகளின் ஓரத்தில் அமைந்திருக்க மற்றது ஏறக்குறைய இடைப்பகுதியில் அமைந்துள்ளது. அரைத்தூண்கள் சாலைப் பத்திகளை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள கோட்டத்தின் இரு மருங்குகளிலும் எழுவனவாய் உள்ளன. இக் கர்ணப்பத்திக் கோட்டங்கள், சாலைப்பத்தியில் உறையும் தெய்வங்களுக்குரிய உப தெய்வங்களையோ அடியவர்களையோ காட்டுவதற்காக அமைக்கப்பட்டிருக்கலாம். தட்சிணாமூர்த்தி அமைந்திருக்கும் தென் பகுதியைத் தவிர மற்ற கர்ணப் பத்தி கோட்டங்களனைத்தும் வெறுமையாகவே விடப்பட்டுள்ளன.

கர்ணப்பத்தி முழுத்தூண்களின் உயரம் சாலைப்பத்திகளின் விஷ்ணுகாந்தத் தூண்களின் உயரத்தை ஒத்திருக்க, கோட்டத்தை அணைக்கும் அரைத் தூண்களின் உயரம் சாலைக் கோட்ட அரைத்தூண்களின் உயரத்தை ஒத்துள்ளது. இந்த அமைப்பு ஒட்டுமொத்தச் சுவரமைப்பில் ஒரு ஒழுங்கையும் ஒத்திசைவையும் உருவாக்கிக் காட்டுவதாக அமைந்துள்ளது.


***********************************************************************************************


பிரஸ்தரம் (கூரை உறுப்புக்கள்)

ஆதிதளச் சுவர்களில் பதிக்கப்பட்டுள்ள தூண்களின் பாலிக்கு மேற்புறம் வீரகண்டத்திலிருந்து எழும் கூரை உறுப்புக்களைப் பொதுவாகப் பிரஸ்தரம் என்று குறிப்பர்.





பிரஸ்தர அமைப்பு


பாலியின் மேல் நிறுத்தப்பட்ட சிம்மங்களும், வீரகண்டத்திலிருந்து மேலெழும் போதிகைக் கரங்களும் உத்தரம் தாங்குகின்றன. தரங்கப் பட்டைகளுடன் அமைந்துள்ள போதிகைகளுக்கு இடையில் குளவு. வாஜனத்திற்குப்பின் அமைந்துள்ள வலபிப்பகுதியில் வரிசையாகப் பூதகணங்கள். அதற்கு மேல் எழும் கபோதங்களையும் நாசிகைகளையும் நாம் முன்பு குறிப்பிட்ட கருவறையைச் சூழ்ந்து நிற்கும் பிற்கால மண்டபத்தின் மேற்தளம் ஏறக்குறைய மறைத்துவிடுகிறது. அழகு மிகுந்த கருவரையின் அழகை இந்த மண்டபம் ஏறக்குறைய முழுவதுமாக சீர்குலைத்து விடுகிறது. ஆக கபோதத்திற்கு மேலெழும் விமான உறுப்புக்களை தரையிலிருந்து பார்க்கவியலாது. இம்மண்டபத்தைக் கட்டிய மகானுபாவர் நாகைக் காரோணரின் கருவரை அழகை ஒருவரும் சரிவரத் தரிசனம் செய்துவிடக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு காரியத்தை நல்லபடியாகச் செய்து முடித்திருக்கிறார். மண்டபத்தின் மேற்கூரைப் பரப்பில் சில பழைய ஓவியங்கள் ஏறக்குறைய முழுவதுமாக அழிந்த நிலையில் காட்சியளிக்கின்றன. இவை நாயக்கர் கால அல்லது அதற்கும் பிற்பட்ட காலத்தைய ஓவியங்களாக இருக்கலாம்.

நவகால வண்ணப்பூச்சில் முழுவதுமாக முங்கிக் குளித்து நிற்கும் வேசர விமானம் வழக்கமான உறுப்புக்களுடன் காட்சியளிக்கிறது. இதனைச் சரிவரக் காண்பதற்கு கருவரை மண்டபத்தில் ஏணியின் துணைகொண்டு ஏறியாக வேண்டுமென்பதால் அம்முயற்சி கைவிடப்பட்டது.


***********************************************************************************************


தேவகோட்டத் தெய்வங்கள்

சாலைப்பத்திகளில் அமைந்துள்ள தேவக் கோட்டங்களில் வடக்கே நான்முகனும் (பிரம்மா), மேற்கே லிங்கோத்பவரும், தெற்கே தட்ஷிணாமூர்த்தியும் உறைகின்றனர்.





வட கோஷ்ட நான்முகன்


நேர்த்தியாக வடிக்கப்பட்டுள்ள பிரம்மன் சிற்பம் அழகிய ஜடாமகுடத்துடன் திகழ்கிறது. துல்லியமான கண்கள். முகத்தில் மெல்லப் படரும் முறுவல். காதுகளில் நீளும் மகரக்குழை. நான்கு தலைகளில் ஒன்று பின்புறம் மறைந்துவிட்டிருக்க, கிழக்கும் மேற்கும் நோக்கும் திருமுகங்கள் பாதியளவில் தெரிகின்றன. வலக்கை அபய ஹஸ்தமாய் காக்கும் குறிப்பைக் காட்ட இடக்கை மிக நளினமான விரல்களுடன் கடியவலம்பிதத்தில் இடுப்பில் நிறுத்தப்பட்டுள்ளது. பின்கரங்கள் இரண்டும் திருத்தமாகச் செதுக்கப்படவில்லை. பின் வலக்கையில் அக்கமாலை மட்டும் மெல்லியதாகத் தெரியக் காணலாம். கழுத்தின் மேற்புறத்தில் ருத்திராக்ஷத்தினால் அமைந்த கண்டிகை என்னும் ஆபரணம். அதற்குப்பின் முத்து ஆபரணங்கள். கடைசியாக சரப்பளி. மார்பின் குறுக்கே வஸ்திர முப்புரி நூல் நிவிதமாய் மேற்படர்ந்துள்ளது. மார்பையும் வயிற்றுப்பகுதியையும் பிரித்துக்காட்டும் உதரபந்தம். கைகளின் மேற்பகுதியில் தோள்வளைகள். இடைக்கச்சில் சிங்கமுகம்.

பிரம்மனுக்கு மேலே விரியும் மகர தோரணத்தில் அரக்கனொருவனைக் கொல்லப்புகும் பெண் தெய்வமும் அதற்குமேல் நாட்டியமாடும் கண்ணனும் குறுவடிவங்களாகத் தெரிகின்றனர். அரக்கனின் முகம் மகிஷனின் எருமைத் தலையாகக் காட்டப்படாததால் இப்பெண்தெய்வத்தை "தாருகன் பேருரம் கிழித்த பெண்" என்று சிலப்பதிகாரம் குறிப்பிடும் காளியாகவும் அசுரனைத் தாருகாசுரனாகவுமே கொள்ளவேண்டியுள்ளது. என்றாலும் காளிக்கேயுரிய நாகக் கச்சு முதலானவற்றை காணமுடியவில்லை. இப்பெண்தெய்வத்துக்கு உதவியாக வேறொரு பெண்ணும் அரக்கனைத் துரத்துகிறார். ஆதிதளத்தின் மூன்று சுவர்களிலும் சிற்பங்கள் அமைந்து காணுமாறுள்ள மகரத் தோரணம் இது ஒன்றுதான்.





மேற்கு கோஷ்ட லிங்கபுராணத் தேவர்


மேற்குப் பகுதி கோட்டத்தின் லிங்கோத்பவர் அல்லது "லிங்க புராணத் தேவர்" சிற்பம் அமைதியிலும் அளவிலும் மற்ற இரு சிற்பங்களுக்கும் குறைபட்டதாகவே உள்ளது. நீண்டு விரியும் லிங்கத் தண்டிற்கு நடுவே பிளக்கும் ஜோதியில் அடி முடி காணமுடியாத இறைவன் வலக்கையில் காக்கும் குறிப்பான அபய ஹஸ்தம் காட்டி இடக்கையை கடியவலம்பிதத்தில் இடையில் நிறுத்தி நிற்கிறார். பின் இடக்கையில் மான். பின் வலக்கையில் மழு. லிங்கத்தின் மேற்பகுதியில் அன்ன உருவில் பிரம்மனும், லிங்கத்தின் கீழ்ப்பகுதியில் வராஹ (பன்றி) உருவில் திருமாலும் காணப்படுகின்றனர். லிங்கத்தின் மேற்பகுதியையும் கீழ்ப்பகுதியையும் வளை போன்றதொரு அணிகலன் அணிசெய்கிறது.

சோழர்களின் இணையில்லாத சிற்பத் திறனை பறைசாற்றி நிற்கும் தென் கோட்டமான தட்ஷிணாமூர்த்தம், பக்கத்திற்கு ஒருவராக கர்ணக் கோட்டங்களில் இரு அடியவர்களையும் பெற்றுத் திகழ்கிறது. நுழையவே முடியாத அளவிற்கு நூற்றுக்கணக்கான கரப்பான் பூச்சிகளுடன் வாழும் இக்கோட்ட தெய்வங்களைத் தரிசிக்க தேங்கி நிற்கும் தண்ணீர், வெளிச்சம் அறவே நுழைய முடியாத இருட்டு, நமது நுழைவால் தொந்தரவடைந்து பறந்தும் அமர்ந்தும் நம்மை விரட்ட முயுலும் கரப்பான் பூச்சிகள் - என்று பல இன்னல்களையும் சந்தித்தாக வேண்டும். தியாகராஜர் கருவரை இப்பகுதிக்கு மிக அருகிலேயே அமைந்திருப்பதால் உண்டாகும் இருட்டு, மக்களிடம் தட்சிணாமூர்த்தி பெற்றிருக்கும் குரு அந்தஸ்து, யுக யுகாந்திரங்களாகத் தேங்கி நிற்கும் அசுத்த நீரில் சுகம் கண்டுவிட்ட கரப்பான் பூச்சிகள் முதலானவையே இந்நிலைக்குக் காரணம்.





தட்சிணாமூர்த்தி தேவர்


இந்தக் கும்மிருட்டில் பாதை கண்டுபிடித்து விழாமல் செல்வதே ஒரு துணிகரச் செயல் எனில் இங்கு வெட்டப்பட்டிருக்கும் மிக நீண்ட கல்வெட்டுக்களை எவ்வாறு படிப்பது ? குருவின் திருப்பார்வை படுவதற்காக அடிக்கடி விளக்கேற்றிவைக்கும் பொதுமக்களின் நன்மைக்காகவாவது கோயில் நிர்வாகத்தார் இங்கொரு மின்விளக்கு போடக்கூடாதா ? வாழவைக்கும் தெய்வத்திற்காகவாவது வேண்டி கரப்பான் பூச்சிகளையும் அழுக்கு நீரையும் சுத்தம் செய்யலாகாதா ? வருமானம் கணிசமாக வரும் திருக்கோயில்களிலேயே இந்தக் கதியெனில் பாழடைந்து கிடக்கும் மற்ற திருக்கோயில்களின் கதி என்ன ? எத்தனை முறை எத்தனை திருக்கோயில்களைப் பற்றித்தான் இப்படிப் புலம்பிக்கொண்டே போவது ? ஆண்டவா !





(கேமரா Flash வெளிச்சத்தில்) தட்சிணாமூர்த்தி கோட்டத்து அடியவர்


மிகுந்த முகப்பொலிவுடன் கூர்மையான விழிகளுடனும் அப்பிக் கிடக்கும் மஞ்சள் பூச்சுடனும் திகழும் தென்கோட்டத் தெய்வமானவர் வலக்கையில் சின் முத்திரை காட்டி இடக்கையில் ஏட்டுச்சுவடி ஏந்தி நிற்கிறார். வலப் பின்கையில் அக்கமாலை மற்றும் நாகம். இடக்கையில் எரியும் தீப்பந்தம். வலது பாதம் அறியாமையின் வடிவமான முயலகனை அழுத்திக்கொண்டிருக்க, இடது கால் வலது தொடையில் கம்பீரமாகப் படிந்துள்ளது. இக்கோட்ட தெய்வத்திற்கு மேற்கே அதிஷ்டானத்தில் வரையப்பட்டுள்ள முதலாம் இராஜேந்திரரின் கல்வெட்டொன்று இவரை "தட்ஷிணாமூர்த்தி தேவர்" என்று அழைக்கிறது. வலப்புறமும் இடப்புறமும் திகழும் அடியவர்கள் கைகளில் மலர் மொட்டுடன் காணப்படுகிறார்கள்.


***********************************************************************************************


கருவறை

கருவறையில் லிங்க உருவில் மோனத்தில் வீற்றிருக்கும் காரோணருக்குப் பின்புறம் அமைந்துள்ள சிறிய சோமாஸ்கந்தர் தொகுதி இத்திருக்கோயிலின் பல்லவ வேர்களைப் பறைசாற்றி நிற்கிறது. நாகையின் எந்தப் பகுதிகளிலும் பல்லவ அரசர்களின் நேரடியான கல்வெட்டுக்கள் இதுவரை கிடைக்கவில்லை. நாகையின் மற்றொரு திருக்கோயிலான நாகநாதர் கோயிலில் பல்லவர் காலத்தியதாகக் கொள்ளப்படத்தக்கக் கல்வெட்டொன்றை முனைவர் ஜெயக்குமார் கண்டறிந்துள்ளார் (5). அக்கல்வெட்டு நீங்கலாக, நாகையின் பல்லவத் தொடர்பைக் காட்டும் ஒரே சான்று இங்குள்ள கருவறை சோமாஸ்கந்தர்தான். சிற்ப அமைதியில் இத்தொகுதியைப் பனைமலை தாளகிரீசுவரர் அல்லது தக்கோலம் ஜலநாதீசுவரம் கருவறைத் தொகுதிகளுடன் இணைத்துப் பார்த்து இன்புறலாம். கருவறையில் அமைந்துள்ளதாதலின் இத்தொகுதியைப் படமெடுக்கவோ நுணுகி ஆராயவோ இயலவில்லை.

(5) பார்க்க இவருடைய "தமிழகத் துறைமுகங்கள் - இடைக்காலம்" என்னும் புத்தகம்

அப்பர் பெருமான் குறிப்பிடும் கருந்தடங்கண்ணி இந்த சோமாஸ்கந்த உமையோ என்று முதலில் நமக்குச் சந்தேகம் உண்டானது. பின்னர் கருவரையின் பின்புறத்தில் சோமாஸ்கந்தரை அமைக்கும் மரபே இராஜசிம்ம பல்லவர் காலத்திற்குப் பிறகுதான் உண்டாயிற்று என்பதால் அக்கருத்து பிழையானது என்னும் எண்ணம் வலுப்பெற்றது.


***********************************************************************************************


அர்த்த மண்டபம்





அர்த்த மண்டப அமைப்பு - வடபுறம்


கருவரைக்கு முன்னால் நீளும் நீண்ட அர்த்த மண்டபத்தையும் கருவறையையும் இணைக்கும் சிறிய இடைநாழிகை பகுதியின் இரு புறங்களிலும் வெளிச்சம் கொடுப்பதற்காக அழகிய சாளரங்கள் சோழர்களால் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் சாளரத்திற்கு வெளியே இருட்டுக் கட்டியிருப்பதால் வெளிச்சம் நுழைய முடியவில்லை. யுக யுகாந்திரங்களாகப் படிந்து கிடக்கும் கறுப்புப் புகை மற்றும் அழுக்கிற்கு இச்சாளரங்கள் தென் பகுதியில் அடைக்கலம் கொடுக்கின்றன. வடபகுதிச் சாளரங்கள் சுண்ணப் பூச்சுக்கு ஆளாகியுள்ளன.

அர்த்த மண்டபத்தில் வடக்குப் பகுதிகளில் மட்டுமே கோட்டங்களும் தெய்வங்களும் காணக்கிடைக்கின்றன. பெரிய அளவில் அமைந்த பிட்சாடன மூர்த்தி, கொற்றவை, அர்த்தநாரி தேவர் முதலான மூன்று தெய்வங்களில் அர்த்தநாரியே அழகில் தலைசிறந்து விளங்குகிறார். கல்வெட்டுச் சான்றுகளின்படி தென்கிழக்கு ஆசிய நாடுகளுள் ஒன்றான கடாரத்து (இன்றைய மலேசியா) அரசரின் அலுவலராகத் (ஸ்ரீகாரியம்) தென்னிந்தியாவில் பணியாற்றிய ஒருவரால் கொடுக்கப்பட்ட இந்த "அர்ந்தநாரிகள்" முதலாம் இராஜராஜர் - இராஜேந்திரர் காலச் சிற்பத் திண்மைக்குச் சிறந்ததொரு சான்று.





அர்த்தநாரி தேவர்


ஒசிந்து நிற்கும் அர்த்தநாரிதேவரின் பெண்மைப் பகுதி சற்று கூடுதலாகத் தெரிவதைப்போல் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. வலது முன்கரத்தை அன்புடன் ரிஷபத்தின் மேல் நிறுத்தி, வலது பின்கரம் மழுவேந்த, உமை பாகத்தின் ஒரே கரம் கண்ணாடியொன்றினைப் பிடித்து அழகைச் சரிபார்ப்பதுபோல் அமைக்கப்பட்டுள்ளது. நேர்நோக்கும் முகத்தில் ஏனோ முறுவலேதும் முகிழவில்லை. வலக்காதில் பனையோலையினால் ஆன பத்ரகுண்டலம். இடக்காதில் மகரக்குழை. ஆண்மையையும் பெண்மையையும் பிரித்துக் காட்டுவதைப்போல் மார்பின் குறுக்கே செல்லும் முப்புரிநூல். கழுத்தணிகள், தோள்வளை, கைவளைகள். ஆயிரம் ஆண்டு காலப் பழமையைத் தாண்டி வந்து வியப்பேற்படுத்தும் அற்புதமான படிமம்.

மக்களிடம் பிரபலமான குற்றத்திற்காக பெரியதொரு கம்பியறைக்குள் சிறைவைக்கப்பட்டுள்ள அர்த்த மண்டபக் கொற்றவையை பார்க்கவியலாதபடி பட்டுப்புடவை, சந்தன அலங்காரங்கள் மற்றும் பூட்டு. தரிசனம் செய்யமுடியாததால் இக்கொற்றவையைப் பற்றி அதிகம் எழுதமுடியவில்லை. அன்னை இக்கட்டுரையாசிரியரை மன்னிக்கட்டும்.


***********************************************************************************************


அர்த்த மண்டபத்தின் செப்புத் திருமேனிகள்

பொதுவாக வரலாற்றாய்வு நோக்கில் திருக்கோயில்களுக்கு விஜயம் செய்யும் நமது குழுவினரை கோயில் நிர்வாகத்தார் ஏதோ கோயில் சொத்தைக் கொள்ளையடிக்க வந்திருப்பவர்களைப்போலவோ அல்லது அவர்களது "இறைப்"பணிக்கு இடைஞ்சல் விளைவிக்க வந்தவர்களைப் போலவோதான் பார்ப்பது வழக்கம். ஏதோ வந்தோமா, சுவாமிக்கு ஒரு கும்பிடு போட்டோமா, கிளம்பினோமா என்றில்லாமல் வேண்டாத வேலைகள் பலவற்றிலும் ஈடுபடும் நமக்கு இந்த மாதிரியான "வரவேற்புக்கள்" வழக்கமான ஒன்றாகிவிட்டன. குறிப்பாகக் கோயிலில் இருக்கும் செப்புத் திருமேனிகளை சற்று ஊன்றிக் கவனித்தாலோ அல்லது புகைப்படமெடுக்க முயன்றாலோ அதிகாரிகள் மற்றும் குருக்களுக்கு ஆவேசமே வந்துவிடும். இந்தச் சிற்பங்களை போட்டோ எடுத்து நாளையே வெளிநாட்டவரிடம் விலை பேசி அதற்கு அடுத்த நாளே திருடர்களுடன் கோயிலுக்கு நாம் நுழைந்துவிடுவோம் என்பதைப்போலத்தான் நடந்துகொள்வார்கள். இத்தனையையும் மீறி ஆர்வக்கோளாறு காரணமாக ஒருவருக்கும் தெரியாமல் அந்தச் செப்புத் திருமேனிகளை அவசர அவசரமாக கை வேறு கால் வேறு என்று நாம் படமெடுத்துக்கொண்டு வருவதும் உண்டு !

நாகை காரோணத்தின் அர்த்தமண்டபத்தில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த அற்புதமான சோழர்காலச் செப்புப்படிமங்களைப் பார்த்து இரசித்தாலும் முன் அனுபவங்கள் காரணமாகப் புகைப்படமெடுக்க அனுமதி கோரவேயில்லை. கிடைத்த ஒரு வினாடி - அரை வினாடி நேரத்திலும் கெழுதகை நண்பர் சக ஆய்வர் திரு.சீதாராமனால் தன்னுடைய மந்திரக் கேமராவில் அருமையான படங்கள் எடுக்க முடிந்தன. குறிப்பாக சண்டேசுவர நாயனாரின் அழகையும் ரிஷபாரூடரின் ஒய்யாரத்தையும் கண்டு களியுங்கள்.





சண்டேசுவரர்



***********************************************************************************************


கல்வெட்டுக்கள்

நாகைக் காரோணத்தில் பல முக்கியக் கல்வெட்டுக்கள் தொல்லியல் அளவீட்டுத் துறையின் கல்வெட்டுப் பிரிவினரால் கண்டறியப்பட்டுள்ளன.





கல்வெட்டுக்கள்


விரிவுக்கஞ்சி திருக்கோயில் கல்வெட்டுக்களையும் இதரப் பல திருமுன்களையும் (சன்னிதிகளையும்) இக்கட்டுரையில் ஆராயாமல் விட்டு விடுகிறோம். காரோணத்துப் பெருமான் கருணையினால் மீண்டும் வேறொருநாள் வேறொரு கட்டுரையில் நாகையை மீண்டும் சந்திப்போம். இப்போதைக்கு இப்பழம்பெரும் பதியிடம் விடைபெற்றுக்கொள்வோம். வணக்கம்.this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.