http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[180 Issues]
[1786 Articles]
Home About US Temples Facebook
Issue No. 43

இதழ் 43
[ ஜனவரி 16 - பிப்ரவரி 17, 2008 ]


இந்த இதழில்..
In this Issue..

ஜல்லிக்கட்டு சங்ககாலப் பழமையதா?
மலையடிப்பட்டியில் புதிய கல்வெட்டு
திரும்பிப் பார்க்கிறோம் - 15
Temples of Narthamalai and Kadambar malai
மாங்குளம் குடைவரை
காரோணன் குடிகொண்ட கடல்நாகை
திரைக்கை காட்டும் தென் நாகை
மனிதம் சரணம் கச்சாமி!!!
காவிரியும் உன்னவளே! நந்தலாலா!
அங்கும் இங்கும் (ஜன. 16 - பிப். 15)
இதழ் எண். 43 > பயணப்பட்டோம்
மனிதம் சரணம் கச்சாமி!!!
ச. கமலக்கண்ணன்
சென்றமாதப் பயணக்கட்டுரைக்குக் கருத்துத் தெரிவித்திருந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. வேலைப்பளு காரணமாகச் சிலருக்கு உடனடியாகப் பதில் அனுப்ப முடியாமல் போய்விட்டது. இரண்டு பின்னூட்டங்கள் இங்குக் குறிப்பிடத்தக்கன. கோகுலின் அப்பா திரு.சேஷாத்ரி அவர்கள் தவறாமல் கட்டுரைகளை ஊன்றிப் படித்துக் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வார். பாண்டியர் குடைவரைகள் பயணத்திற்குக் கீழ்க்கண்ட மடலை அனுப்பியிருந்தார்.


Dear Sri Kamal,

Blessings.

It was a pleasant diversion to see your article in this issue. It would have been a rich experience for you as you spent some time comparing the rockfort kudaivarai with that of pandiyar kudaivarai. As only a short time intervened between these two, you would have a better perception and with that giant of an intellect nearby your questions would have been readily and satisfactorily answered. Such intellectual feasts are rare and are meant to be mulled over for ever. You all are indeed doubly fortunate to see the places first and get enlightened on the spot then and there. Yes, compared to the Pallava caves this was indeed smaller. And your perception that if there is no worship the place is forgotten and difficult to reach and explore is indeed true. As you had excellent company, all would have benefited by this exploration and would have grown taller in intellect and perception.

I agree too that Dr's books are written in terse language in lucid style and errors typographical are nil. Not an easy thing! And You can take them as manuals and appreciate things better. It was great to see sri seetharaman to stand on the inscription and try to figure it out elsewhere. Good that it was detected in time. Is it not true that we often fail to see properly, things under our very feet that cry for attention? You have listed some of the persons that you came into contact and their qualities of head and heart. I could see that their number is growing. It will.

Persons like you, including gokul spend a short time here and pack many things leaving very little time for family. Well, I am reconciled. We cant have the cake and eat it too! Apart from the history angle, I am taken in by the personal bond that you all have nurtured and kept in good shape. What more can one ask than understanding human beings and time spent with a purpose?

Yours ever,
D.Seshadri

NB:

1. What a happy thing to see japanese inscriptions at that odd place! You for one would have been astonished. Life is strange and full of riddles.

2. You were not caught in the rains that we have at this time of the year. All your programs would have been spoiled. And hence, Thank god!!


எங்கள் எழுத்துக்களை வெளியிலிருந்து படிக்கும் ஒரு வாசகராக மட்டுமில்லாமல், எங்களின் பார்வையையும் எண்ணங்களையும் புரிந்துகொண்ட ஒரு நண்பராகவும் இருந்து வருகிறார். அதனால்தான் கட்டுரையின் மைய இழையின் பின்னணியில் எங்கள் எண்ண ஓட்டத்தைச் சரியாகப் புரிந்துகொள்ள முடிந்திருக்கிறது. பொ.செ குழுவினரின் புதுக்கோட்டை மாவட்ட இரண்டாம் யாத்திரையில் ஏற்பட்ட அறிமுகத்தின்போது, கோகுலின் தந்தை என்ற முகம் மட்டுமே மனதில் நின்றது. அதன்பின் தொடர்ந்த உரையாடல்கள் மற்றும் கடிதங்களின் வாயிலாக, கோகுல் அளவுக்குச் சரித்திரத்திலும் பயணங்களிலும் ஆர்வம் உண்டு என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. ஒருவேளை, இவரிடமிருந்துதான் கோகுலுக்கு இந்த ஆர்வம் தொற்றிக்கொண்டதோ என்றும் சில நேரங்களில் எங்களுக்குச் சந்தேகம் தோன்றுவதுண்டு. ஒரு கதாசிரியரின் கோணத்தில் சிந்தித்து கோகுல் எழுதும் கதை மற்றும் கட்டுரைகளை ஒரு வரலாற்று ஆர்வலரின் கண்கொண்டு ஆராய்ந்து இவர் சொன்ன பல விமர்சனங்கள் எங்களை வியப்புற வைத்திருக்கின்றன.

இதேபோல் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய இன்னொரு பின்னூட்டம் திருச்சியைச் சேர்ந்த திரு.R.கார்த்திக் என்பவரிடமிருந்து வந்துள்ளது. இவர் தனது மின்னஞ்சல் முகவரியைத் தெரிவிக்காததால், மின்னஞ்சலில் பதில் அனுப்ப முடியவில்லை. இப்பின்னூட்டத்திற்கான பதில் மற்ற வாசகர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால், இங்கே அதைத் தெரிவிக்கிறோம்.


Sir,

I read your above article on lalithangura pallaveswara gruham. I was deeply pained to note that you've mentioned that a dog has been depicted in the hand of gangadhra relief.

Any person with a little knowledge about siva forms could have easily deduced that it is only a deer, of course in a posture to which we are not used to.

As a resident of trichy and a lover of lalithangura i am deeply anguished to see such mis information finding place in your magazine.

Sincerely,
R.Karthik


குடைவரைகளின் பெருமை தெரியாமல் புறக்கணிக்கும் மக்கள் வாழும் இந்நாளில், மகேந்திரரின் இலளிதாங்குரத்தின் மீது காதல் கொண்டிருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி. பொதுவாகச் சிவனின் கையில் மான் இருக்கும் என்பது உண்மைதான். ஆனால் இங்கு இருப்பது கையில் இல்லை. கட்டுரையில் கையிலிருப்பதாகக் குறிப்பிடவும் இல்லை. இடது பின்கையில் அக்கமாலை உள்ளது. அதன் மேற்புறமாக முன்னங்கால்களை நீட்டி அமர்ந்துள்ளதுபோல் நாயின் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. இலளிதாங்குரத்தில் இதன் உருவம் சிதைந்திருப்பதால் மான் என மயங்க வாய்ப்புள்ளது. ஆனால் மற்ற பல்லவத் தளிகளில் உள்ள கங்காதரர் சிற்பத்தொகுதியில் இடம்பெற்றிருக்கும் நாயின் சிற்பத்தைப் பார்த்தால், இந்த எண்ணம் மாயமானாகி மறைந்துவிடும். காஞ்சிபுரத்திலுள்ள கைலாசநாதர், முக்தேச்சுரம், பிறவாதானீசுவரம் உள்ளிட்ட பல கோயில்களில் உள்ள கங்காதரர் சிற்பங்களில் இந்நாயின் உருவத்தைத் தெளிவாகக் காணலாம். மானுக்கும் நாய்க்கும் உள்ள வித்தியாசத்தையும் உணர்ந்து கொள்ளலாம்.

பல்லவர் மட்டுமல்ல. பாண்டியர் குடைவரையான திருப்பரங்குன்றத்திலும் கங்காதரர் சிற்பத்தொகுதியில் நாய் இருக்கிறது. கங்காதரரின் கதையைக் கூறும் புராணங்களில் நாய் பற்றிய செய்திகள் இடம்பெறவில்லை. சிற்பங்களில் மட்டுமே இருக்கிறது. எனவே இந்நாயின் முக்கியத்துவம் என்ன என்பது விளங்கவில்லை. இதுபோல் புராணக் கதைகளிலிருந்து சிற்பக் காட்சிகள் வேறுபட்டிருப்பதைப் பல இடங்களில் காணலாம். மிகச்சிறந்த உதாரணம் கண்ணப்ப நாயனார் புராணம். ஏனெனில், புராணங்களும் இதிகாசங்களும் ஒரே நேரத்தில் ஒருவரால் மட்டும் எழுதப்படவில்லை. முதலில் வழிப்போக்கர் கதையாகத் தோன்றி, ஒவ்வொரு ஊராகச் செவிவழியாகப் பரவி, பின் யாரோ ஒருவரால் ஏட்டில் எழுதப்பட்டன. பிறகு அழியும் தருவாயில் உள்ள ஏடுகளில் இருக்கும் கதைகளையும் பாடல்களையும் வேறு புதிய ஏடுகளில் மறுபதிப்பு செய்வார்கள். குறிப்பிட்ட ஒரு கால இடைவெளியில் நிகழும் இந்த மறுபதிப்பின்போது சில மாற்றங்களும் பிழைகளும் நிகழ வாய்ப்புண்டு. ஒருவேளை இந்த நாய் பற்றிய தகவல்களும் இப்படிப்பட்ட மறுபதிப்பின்போது காணாமல்போய், இன்று கிடைக்கும் புராணங்களில் இல்லாமல் போயிருக்கலாம்.

இந்த மாற்றங்களில் மிகவும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை இடைச்செருகல்கள் பற்றி. இரண்டு காரணங்களால் இந்த இடைச்செருகல் நிகழ வாய்ப்புள்ளது. முதலாவது, மூலப்பிரதியில் இருக்கும் எழுத்து அல்லது சொற்கள் புரியாததால், தொடர்புடைய ஏதாவதொரு கருத்தை எழுதிக்கொள்வது. இரண்டாவது அந்தந்தக் காலகட்டத்திற்கேற்பத் தேவைப்படும் விஷயங்களைச் சந்தடியில்லாமல் புகுத்திக் கொள்வது. இன்று நம்மிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட வால்மீகி இராமாயணங்கள் இருப்பதற்குக் காரணம் இதுதான். ஒரு காலகட்டத்தில் எழுதப்பட்ட புராணக் கதைகளில் இருக்கும் தசாவதாரப் பட்டியலில் பலராமரும் சில நூற்றாண்டுகள் கழித்து எழுதப்பட்ட இன்னொரு புராணத்தில் பலராமருக்குப் பதிலாகப் புத்தரும் இடம்பெற்றிருப்பதற்கும்கூட இதுதான் காரணம். புத்தமதத்தின் வளர்ச்சியைத் தடுப்பதற்காக அதை வைதீக மதங்கள் திருதிராஷ்டிர ஆலிங்கனம் செய்துகொள்ளப் பயன்படுத்திய ஆயுதங்களில் ஒன்றுதான் இந்த இடைச்செருகல்கள். சைவம், வைணவம் முதலான ஆறு வைதீக மதங்களை இந்து மதம் என்ற பெயரில் ஒருங்கிணைத்து வளர்க்க முற்பட்ட காலத்தில் தமிழகம், மராட்டியம், வங்காளம் போன்ற மாநிலங்களின் வட்டார விழாக்கள் மற்றும் பண்டிகைகளைப் புராணங்களில் நுழைத்து அவை இந்துமதப் பண்டிகைகள் போல் தோற்றமளிக்குமாறு செய்யப் பயன்பட்டவை இத்தகைய இடைச்செருகல்கள்.

இந்துமதப் புராணங்களில் மட்டுமல்ல. சங்க இலக்கியங்களிலும் சிலப்பதிகாரத்திலும்கூட இடைச்செருகல்கள் நிகழ்ந்திருப்பதாகத் தமிழ் மற்றும் வரலாற்று அறிஞர்கள் கருதுகிறார்கள். இந்தியாவில் மட்டுமல்ல. இந்தியாவிலிருந்து கடல்கடந்து சென்று பரவிய புத்தமதத்திலும் இத்தகைய இடைச்செருகல்கள் ஏராளம். அந்நிய மண்ணிலிருந்து வரும் ஒரு மதம் உள்நாட்டில் வேரூன்ற இது ஒரு எளிமையான வழி. இதைப் புரிந்துகொண்டால், ஜப்பானில் எப்படிப் புத்தமதம் தழைத்தோங்கியது என்பதை விளங்கிக் கொள்ளலாம். வைதீக மதங்களின் கடவுள், ஆன்மா மற்றும் வர்ணாஸ்ரமக் கருத்துக்களுக்கு எதிராக சித்தார்த்தரால் கி.மு 5 ஆம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்டது புத்தமதம். இதன் தத்துவங்களால் கவரப்பட்ட மக்கள் பௌத்தத்தைத் தழுவ ஆரம்பிக்க, பாரதத்தில் அப்போதிருந்த மற்ற சமயங்கள் இதன் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த முயன்றன. தமிழில் ஐம்பெரும் மற்றும் ஐஞ்சிறுங்காப்பியங்களுக்கு இடையிலான சமய விவாதங்களைக்கொண்டு இதை உறுதிப்படுத்தலாம். பின்னர் குப்தர் காலத்தில் வைதீக மதங்கள் புத்த மதத்தினுள் ஊடுருவி, ஹீனயானம், மஹாயானம் என்ற இரு பிரிவுகளாகப் பிரிய வைத்தன. ஹீனயானம் புத்தர் கூறிய கருத்துக்களை முழுமையாகப் பின்பற்றி உள்நாட்டிலேயே முடங்கிக் கிடக்க, மற்ற சமயக் கருத்துக்களை உள்வாங்கி, மஹாயானம் பாரதம் தாண்டி அதன் குருமார்களை அனுப்பி வைத்தது. கி.பி 2, 3 ஆம் நூற்றாண்டில் இலங்கை, திபெத் மற்றும் சீனாவில் நுழைந்து வேரூன்ற ஆரம்பித்த பௌத்தம், மெதுவாக கி.பி 5, 6 ஆம் நூற்றாண்டில் தாய்லாந்து, இந்தோனேசியா, கொரியா மற்றும் ஜப்பான் வரை மூக்கை நுழைத்தது. அப்போது ஜப்பானின் தேசிய மதமாக ஷிண்டோ இருந்தது. இங்கே ஷிண்டோ மதத்தைப் பற்றி ஒரு சிறு அறிமுகம்.

'ஷிண்' என்றால் கடவுள். 'டோ' என்றால் வழி. கடவுளின் வழி என்ற பெயர் இருந்தாலும், மறைநூல்கள் எதுவும் கிடையாது. இயற்கையை அடிப்படையாகக் கொண்ட மதம். ஆதிமனிதனின் பயத்தால் உருவான சடங்குகளின் தொகுப்பே அந்தந்த நாடுகளின் ஆதிமதம் என்ற வரையறைக்கு ஷிண்டோவும் விதிவிலக்கல்ல. சக்தியுடைய அனைத்துப் பொருட்களும் கடவுளே அல்லது சக்தியுடைய அனைத்துப் பொருட்களுக்குள்ளும் கடவுள் இருக்கிறார் என்பதுதான் இம்மதத்தின் மூலத்தத்துவம். தமிழரின் வழிபாட்டு மரபைப்போல், இயற்கை வழிபாடும் உண்டு, குலதெய்வ வழிபாடும் உண்டு. நீர் தரும் ஆறும் கடவுள்தான். உணவு தரும் நெல்வயலும் கடவுள்தான். எதிரிகளை நெருங்க விடாமல் செய்யும் சூறாவளியும் கடவுள்தான். எதிரிப்படைகளுக்குச் சேதம் விளைவிக்கும் ஏவுகணையும் கடவுள்தான். இப்படிக் கணக்கு வழக்கற்றுக் கோலோச்சிக் கொண்டிருந்த இம்மதத்திற்குக் கடிவாளம் போடப்பட்டது பௌத்தத்தின் நுழைவுக்குப் பிறகே என்று கூறலாம். புதிய மதத்தின் பாதிப்பிலிருந்து தப்பிக்க, அதுவரை மக்களிடம் நிலவிவந்த நம்பிக்கைகளையும் சடங்குகளையும் நெறிப்படுத்தித் தொகுத்து 'கொஜிக்கி' மற்றும் 'நிஹோன் ஷொக்கி' என்ற இரண்டு நூல்களை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்நூல்கள் ஜப்பானின் புராணங்களை மட்டுமல்லாது, 'இஸானகி' (Izanagi) மற்றும் 'இஸானமி' (Izanami) என்ற கடவுள்கள் எப்படி ஜப்பான் தீவையும் 'அமாதெரசு ஒமிகாமி' எனப்படும் சூரிய, 'ட்சுகுயோமி னொ மிகொதொ' எனப்படும் சந்திர, 'சுசன்னோ னொ மிதொகொ' எனப்படும் மழைக்கடவுள்களையும் உருவாக்கினார்கள் என்றும் விளக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்தான், கி.பி 6 ஆம் நூற்றாண்டில் அப்போதைய கொரிய மன்னரால் புத்தரின் உருவச்சிலையும் புத்தமதக் கருத்துக்களின் பிரதியும் ஜப்பான் மன்னருக்குப் பரிசாக அனுப்பி வைக்கப்பட்டன. ஷோதொக்கு இளவரசர் புத்த மதத்திற்கு அளித்த நிபந்தனையற்ற ஆதரவின் காரணமாக, பௌத்தத்திற்கு எதிரான வாதங்களை முறியடித்து வெகுவேகமாகப் பரவ ஆரம்பித்தது. பல கோயில்கள் எழுப்பப்பட்டன. கி.பி 8 ஆம் நூற்றாண்டில் ஷோமு என்ற பேரரசர் புத்தமதத்தை ஜப்பானின் தேசிய மதமாக அறிவித்தார். நரா என்ற இடத்தில் பிரம்மாண்டமான புத்தர் சிலையையும் நிறுவினார். இதன் பிறகு அடுத்த நான்கைந்து நூற்றாண்டுகளில் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சிகள் எதுவும் ஏற்படவில்லை. பின்னர் 12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கமகுரா வம்ச ஆட்சி ஏற்பட்டபோது முக்கியமான மாற்றங்கள் நிகழ்ந்தன. 'ஜென்' என்ற பிரிவு உருவாகியது அதில் குறிப்பிடத்தக்கது. இது சுய ஒழுக்கத்தையும் தியானத்தையும் வலியுறுத்தியதால், முதலில் போர்வீரர்களையும் அடுத்தடுத்து பலதட்டு மக்களையும் கவர்ந்தது.

கி.பி 16 ஆம் நூற்றாண்டு வரை இந்த நிலை நீடித்தது. 16 ஆம் நூற்றாண்டின் நடுவில் கிறிஸ்தவம் ஜப்பானின் வடக்கு எல்லையான கியூஷூ தீவின் வழியாக உள்ளே நுழைந்தது. ஃபிரான்சிஸ் சேவியர் என்ற மதபோதகரின் தலைமையில் நுழைந்த அக்குழு முதல் கட்டமாக ஆறு இராணுவ உயரதிகாரிகளை மதமாற்றம் செய்தது. மிஷனரிகளின் தீவிரப் பிரச்சாரத்தால், அடுத்த முப்பது ஆண்டுகளில் கியூஷூ தீவில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சமாக உயர்ந்தது. மக்களின் இந்தத் திடீர் மாற்றத்தைக் கண்ட ஹிதேயோஷி என்ற இராணுவத் தலைவர், ஏதோ விபரீதமாக நடக்கிறது என்று உணர்ந்து, கிறிஸ்தவ மதப் பிரச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவெடுத்தார். மதமாற்றப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த 16 பேருக்கு மரணதண்டனை விதித்தார். இருப்பினும், தொக்குசகா இயேயசு என்ற இராணுவத்தளபதியைக் கைக்குள் போட்டுக்கொண்டு ஜப்பானின் மற்ற பகுதிகளுக்குப் பரவிப் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தினர். அடுத்த 14 ஆண்டுகளில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை மூன்று இலட்சமாக உயர்ந்தது. ஒருபுறம் மதமாற்றத்திற்கு எதிரான தண்டனைகள் தொடர்ந்தாலும், இன்னொரு புறம் தீவிரமடைந்து கொண்டிருந்தது. ஒருவகையில், இந்தத் தண்டனையே பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியது என்கிறார்கள்.

இந்த நிலையில், தொக்குகவா வம்ச மன்னர்கள், ஜப்பானின் தொன்மையான கலாச்சாரம் அயல்நாட்டுக் கலாச்சாரப் படையெடுப்பினால் சிதைந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில், வெளிநாட்டு வர்த்தகத் தொடர்புகளுக்குத் தடைவிதித்தது. ஏற்றுமதி இறக்குமதி கிடையாது. ஜப்பானியர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதோ, வெளிநாட்டு மக்கள் ஜப்பானுக்கு வருவதோ கூடாது. அந்நிய நாடுகளுடன் எந்த வகையிலும் தொடர்பு கொள்ளக்கூடாதென்று அறிவிக்கப்பட்டது. தாம் மீன்வளம் தவிர வேறு வளங்கள் ஏதுமற்ற ஒரு தனித்தீவு என்ற நிலை புரியாமல், ஜப்பான் தனக்குத்தானே விலங்கிட்டுக் கொண்டது எனலாம். கிறிஸ்தவம் ஒடுக்கப்பட்டது. மதம் மாறியவர்கள் தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக் கொள்வதற்கே அஞ்சும் நிலை ஏற்பட்டது. இந்நிலை புத்த மதத்தின் மறுமலர்ச்சிக்கு அடிகோலியது. நாட்டு மக்கள் அனைவரும் பௌத்தம் அல்லது ஷிண்டோ இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்து அந்தந்தப் பகுதியில் இருக்கும் கோயில்களில் பதிவு செய்து கொள்ளுமாறு வற்புறுத்தப்பட்டார்கள்.

பிறகு 19ஆம் நூற்றாண்டின் மத்தியில் இந்தத்தடை தளர்த்தப்பட்டதும் கிறிஸ்தவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள். கிட்டத்தட்ட 200 ஆண்டுகள். பல தலைமுறைகளுக்கு முன் மதம் மாறிய குடும்பங்கள் இவ்வளவு காலம் கிறிஸ்தவத்தை மறக்காமல் தொடர்ந்து பாதுகாத்து வந்தது ஒரு பேரதிசயம்தான். இதற்கு ஈடான அல்லது இதைவிட அதிகமான ஒரு மரபுப் பாதுகாத்தல் தமிழ்நாட்டில் நடந்திருக்கிறது. கி.பி 9 ஆம் நூற்றாண்டில் சோழர்களால் துரத்தியடிக்கப்பட்ட பாண்டியர்கள் சுமார் 400 ஆண்டுகாலம் பகையை மறக்காமல் போராடி இராஜ்ஜியத்தைப் பெற்றார்கள். இரண்டு நாடுகளிலுமே, இப்படித் தலைமுறை தலைமுறையாக ஒரு விஷயத்தைப் பாதுகாக்க வைப்பதற்கான உந்துகாரணி என்னவென்று புரியவில்லை. பிறகு இரண்டாம் உலகப்போர் வரை கிறிஸ்தவத்திற்கு வசந்தகாலமாகவே இருந்தது. 1930களில் தேசபக்தி உணர்வு ஓங்கியபோது கிறிஸ்தவத்திற்கு ஒரு தொய்வு ஏற்பட்டு, இரண்டாம் உலகப்போர் முடிந்தவுடன் நிலைமை சீரானது. கல்வி நிறுவனங்களும் மருத்துவ சேவை மையங்களும் நாடு முழுவதும் மிஷனரிகளால் தொடங்கப்பட்டன. 1996 ஆம் ஆண்டுக் கணக்குப்படி ஜப்பானில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை சுமார் 30 இலட்சம்.

ஜப்பானியர்களுக்கு மத சுதந்திரம் இருக்கிறது. அதாவது, தான் எந்த மதத்தையும் சார்ந்து இருக்க விரும்பவில்லை என்று அறிவித்துக்கொள்ளலாம். கல்வி மற்றும் வேலைக்கான விண்ணப்பப் படிவங்களில் மதம் என்ற இடத்தில், 'ஏதுமில்லை' என்று குறிப்பிட முடியும். இந்தியாவிலும் இப்படி ஒரு சுதந்திரம் வழங்கப்படுமானால், அனைத்து மதங்களும் சிறுபான்மை மதங்களாகிவிடும். அரசியல்வாதிகள் மதத்தை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துவதும் குறையும். உண்மையான மதச்சார்பற்ற நாடாகிவிடும். இன்று ஜப்பானியர்களின் மதநம்பிக்கை சரிவுப்பாதையில் இருக்கிறது எனலாம். மதநம்பிக்கை என்பதைவிட, கடவுள் நம்பிக்கை என்பது பொருத்தமாக இருக்கும். அறிவியல் முன்னேற்றங்கள் பெருகப்பெருக, கடவுளின் இருப்பு மீதான கேள்விகள் உண்டாகி, நம்பிக்கைக் குறைவு உண்டாகிவிட்டது. இருப்பினும், புதுவருடப்பிறப்பு போன்ற வருடத்தின் முக்கிய நாட்களில் பெரும்பாலானவர்கள் ஒரு சடங்காகக் கோயில்களுக்குச் செல்கிறார்கள். இன்னொருபுறம் கிறிஸ்தவ மதமாற்றமும் அமோகமாக நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. தெருமுனைக் கூட்டங்கள், 'இயேசு அழைக்கிறார்' கூட்டங்களுக்கும் குறைவில்லை. இதே ரீதியில் போனால், இன்னும் இருபது அல்லது முப்பது ஆண்டுகளில் ஜப்பான் ஒரு கிறிஸ்தவ நாடாகிவிடும் என்கிறார்கள். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் பௌத்தம் மற்றும் ஷிண்டோவை விட்டு விலக, கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் கிறிஸ்தவத்தில் சேர, நாட்டின் மத அடையாளமே மாறிவிடும் வாய்ப்பு இருக்கிறது. மதமாற்றப் பிரச்சாரம் எந்த அளவுக்குத் தீவிரமாக இருக்கிறது என்றால், அயல்நாட்டானான என்னையே மதம் மாற்ற நான்கு முறை முயற்சி நடந்துவிட்டது. சனி, ஞாயிறுகளில், காலை நேரங்களில் வீட்டிலிருந்தால், கீழ்க்கண்ட உரையாடல் சர்வசாதாரணமாக இடம்பெறும்.

பிரச்சாரகர் : வணக்கம். தொந்தரவுக்கு மன்னிக்கவும்.

நான் : பரவாயில்லை சொல்லுங்கள்.

பிரச்சாரகர் : நீங்கள் எந்த நாட்டிலிருந்து வருகிறீர்கள்?

நான் : இந்தியாவிலிருந்து.

பிரச்சாரகர் : நமஸ்தே! உங்கள் தாய்மொழி ஹிந்தியா?

நான் : இல்லை.

பிரச்சாரகர் : அப்படியானால் தமிழா?

நான் : ஆமாம். எப்படித் தெரியும்?

பிரச்சாரகர் : இந்தியாவில் ஹிந்தியும் தமிழும் முக்கிய மொழிகள். (வாழ்க இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்!!)

நான் : சொல்லுங்கள். என்ன விஷயம்?

பிரச்சாரகர் : இங்கு பக்கத்திலிருக்கும் தேவாலயத்தில் நாளை ஒரு விழா நடக்கிறது. தாங்கள் அவசியம் கலந்துகொள்ள வேண்டும்.

நான் : அடடே! நாளை எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கிறதே!

பிரச்சாரகர் : பரவாயில்லை. அடுத்த வாரமும் விழா நடக்கும். மறக்காமல் கலந்து கொள்ளுங்கள்.

நான் : சரி.

பிரச்சாரகர் : அதற்குமுன் இந்தப் புத்தகத்தை ஒருமுறை படித்து விடுங்கள். ('இயேசு அவதரிக்கப் போகிறார்' என்ற புத்தகம்)

நான் : சரி. நன்றி.

இப்படியே உரையாடல் போய்க்கொண்டிருக்கும். விடுமுறை நாட்களில் வீடுகளுக்கு வருவார்கள் என்றால், வார நாட்களில் மாலைகளில் ரெஸ்டாரண்டுகள், உடற்பயிற்சிக் கூடங்கள் என எங்கும் வியாபித்து இருப்பார்கள். இதில் அமெரிக்கர்களும் பிலிப்பைன்ஸ்காரர்களும்கூட ஈடுபட்டிருக்கிறார்கள். 'கிறிஸ்தவத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?' என்று மெதுவாக ஆரம்பிப்பார்கள். 'நான் ஒன்றும் நினைக்கவில்லை.' என்றுகூறி நழுவி வந்துவிடுவேன்.

இவையெல்லாம் சரிதான். பௌத்தத்துக்கும் ஷிண்டோவுக்கும் தகராறு எதுவும் வந்ததில்லையா? ஒரே உறையில் இரு கத்திகளைப் போடும்போது உராய்வு ஏற்படாமல் இருக்குமா? இங்குதான் ஜப்பானின் தலைமைக்கு மூளை வேலை செய்திருக்கிறது. இங்கு பௌத்தம் நுழைந்தபோது ஷிண்டோவில் குறிப்பிட்ட நெறிமுறைகள் ஏதும் கிடையாது என்று பார்த்தோம். ஷோதொக்கு இளவரசர் ஜப்பானியர்களை புத்த மதத்திற்கு மாறச்சொன்னபோது பலமான எதிர்ப்புக் கிளம்பியது. எனவே, இரு மதத்தின் தலைவர்களும் மன்னர் மற்றும் இளவரசருடன் கலந்தாலோசித்து, ஒரு முடிவுக்கு வந்தார்கள். அதாவது, இரண்டு மதங்களும் முரண்படும் சில விஷயங்களில் விட்டுக்கொடுத்து, சுமுகமாக அனுசரித்துப் போகவேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. உதாரணமாக, பௌத்தம் புலால் உண்ணாமையை வலியுறுத்துகிறது. ஆனால், ஜப்பான் ஒரு தீவுகளால் நிறைந்த குளிர்ப்பிரதேசம் என்பதால், மீன் மற்றும் இறைச்சி சாப்பிடாமல் வாழ்வது கடினம். பௌத்தம் இந்த விஷயத்தில் சமரசம் செய்துகொண்டது. ஷிண்டோவும் அதன் கடவுள்களில் சிலவற்றைப் புத்தரின் மறுபிறப்பாக ஏற்றுக்கொண்டு விட்டுக்கொடுத்தது. கிட்டத்தட்ட, தத்துவங்களால் நிரம்பிய பௌத்தமும் கலாச்சார பலம் வாய்ந்த ஷிண்டோவும் ஒன்றிலிருக்கும் இடைவெளியை மற்றொன்று நிரப்பி, நகமும் சதையுமாக மாறின. பௌத்தம் மட்டும் இப்படி நாணல் போல வளைந்து கொடுக்காமல் மரம் போல உறுதியாக இருந்திருந்தால், இன்று ஜப்பானில் பௌத்தமே இருந்திருக்காது.

இப்படி இரண்டு மதங்களும் சுமுகத் தீர்வு கண்டதால்தான், மக்கள் பிளவுபடாமல், அரசியலாக்கப்படாமல், பண்டிகைகளின்போது இரு கோயில்களுக்கும் அதிகளவு மக்கள்வரத்து இருக்கிறது. இப்படித்தான் கடந்த ஜனவரி 2ம் தேதி கமகுரா என்ற இடத்திற்கு நாங்கள் சென்றிருந்தபோதும் கூட்டம் அலைமோதியது.







வருடப்பிறப்பின் முதல் நான்கைந்து நாட்களில் மட்டும் சுமார் 4 லட்சம் மக்கள் வந்து போயிருக்கிறார்கள். இவ்வளவு பெரிய கூட்டத்தை எந்தவொரு அசம்பாவிதமோ அசௌகரியமோ இல்லாமல் சமாளித்திருக்கிறார்கள். பாராட்டப்பட வேண்டிய விஷயம். கோயில் வளாகத்துக்குள் மட்டுமின்றி, புகைவண்டி நிலையத்திலிருந்தே மக்கள் தரிசனத்துக்காகச் செல்லும் பாதையைத் திட்டமிட்டு, பல பகுதிகளாகப் பிரித்துக் கொள்கிறார்கள். ஒவ்வொரு பகுதியின் எல்லையிலும் காவலர்கள் கயிற்றைக் குறுக்கே வைத்து சுமார் 300 பேர்களாக அனுப்புகிறார்கள். முன்னாலுள்ள பகுதியிலிருந்து அனைவரும் வெளியேறியபின் அடுத்த பகுதியிலிருக்கும் மக்கள் முன்னோக்கி நகருகிறார்கள். இப்படியே நாள் முழுவதும் கூட்டத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் கருவறைக்கு முன்னுள்ள மண்டபத்தில் சுமார் 300 பேர் மட்டுமே இருப்பார்கள். யாருக்கும் எந்தவிதத் தொந்தரவும் இல்லாமல் சீக்கிரம் தரிசனம் முடிந்து வெளியே வந்துவிடலாம். நம் ஊரிலும் திருப்பதி, சபரிமலை, பழனி போன்ற இலட்சக்கணக்கில் மக்கள் கூடும் கோயில்களில் இத்தகைய முறைகளைப் பயன்படுத்திப் பார்க்கலாம். ஆனால் நம் மக்கள் பின்னாலிருப்பவர்கள் 'ஜருகண்டி' சொல்லாவிட்டால் கருவறையைவிட்டு வெளியே வரமாட்டார்கள் என்பது வேறுவிஷயம்.











Just Moment Please என்ற அட்டையைக் காட்டியதும் கயிற்றைக் குறுக்கே போட்டு நிறுத்தி விடுவார்கள்.

Please Walk Slowly என்ற அட்டையைக் காட்டிக் கயிற்றை மேலேற்றியதும் மெதுவாக நகர ஆரம்பிக்கவேண்டும்.





இப்படிப் பிரித்துப் பிரித்து விடுவதால் கோயிலுக்குள் பாருங்கள். இலட்சக்கணக்கில் கூட்டம் வந்தாலும் எவ்வளவு எளிதாக நடமாட முடிகிறது. இதைப் பார்த்து முடித்துவிட்டு Daibutsu எனப்படும் பெரிய புத்தரைக் காணச்சென்றோம். ஏற்கனவே இவர்கள் ஆஹா ஓஹோ என்று புகழும் விஷயங்களைப் பற்றித் தெரியுமாதலால், அவ்வளவாகப் பிரம்மாண்டத்தை எதிர்பார்க்கவில்லை.





இதுதான் ஜப்பானின் மிகப்பெரிய புத்தர் சிலை. 13.35 மீட்டர் உயரமுள்ள இச்சிலையின் எடை 121 டன்கள். கி.பி 1252ல் நிறுவப்பட்டது. இனாதனோ ட்சுபோனெ என்ற பணக்காரப் பெண்மணியும் ஜோக்கோ என்ற மதத்தலைவரும் இணைந்து மக்களிடம் நிதிவசூல் செய்து இப்பெரிய சிலையையும் அதைச்சுற்றிக் கோயிலையும் உருவாக்க முடிவெடுத்துச் செயல்படுத்தினார்கள். இதைச் செய்த தலைமைச் சிற்பிகள் ஓனோ கோரோஎமொன் மற்றும் தான்ஜி ஹிசாமோதோ ஆகியோர். கமகுரா ஒரு கடற்கரை நகரம் ஆதலால், கி.பி 1498ல் ஏற்பட்ட மிகப்பெரிய சுனாமியால் கோயில் அடித்துச் செல்லப்பட்டாலும், சிலைக்கு மிகப்பெரிய அளவில் சேதம் ஏதும் ஏற்படவில்லை. புத்தரின் கருணை என்கிறார்கள் இங்குள்ளவர்கள். அன்றுமுதல் இச்சிலை திறந்த வெளியிலேயே இருக்கிறது. சூரியஒளி, சுனாமி, பனிப்பொழிவு என அனைத்தும் பதம் பார்த்ததால் சிறிது பொலிவு குன்றியிருக்கிறதே தவிர, சேதம் ஏதும் ஏற்படவில்லை. பின்னர் 1960ல் நிலநடுக்கத்தால் பாதிக்கப்படாமல் இருக்க, பீடம் பலப்படுத்தப்பட்டும் பூமி அதிரும்போது அதிர்வின் திசையில் நகர்ந்து கொடுக்குமாறும் செப்பனிடப்பட்டன.







நம் ஊரில் இருக்கும் புத்தர் சிலைகளுக்கும் இந்தச் சிலைக்கும் கைமுத்திரை வேறுபட்டிருக்கிறது. நராவில் இருக்கும் பெரிய புத்தரின் கை ஆகூயவரதம் (சைகை செய்து அழைத்தல்) என்ற அமைப்பைக் கொண்டிருக்கிறது. இதன் பெயர் என்னவென்று தெரியவில்லை. உடலமைப்பும் வேறுபட்டிருக்கிறது. நம் ஊரில் நீண்ட உடலும் நீளமான முகமும் இருக்கும். இங்கே ஜப்பானியர்களின் உடலமைப்பைக் கொண்டிருக்கிறது. தியான நிலையில் இருப்பதால் முகத்தில் உணர்ச்சி எதுவும் இல்லை.









இதில் ஒரு சிறப்பம்சம் என்னவெனில், இது ஒரு உள்ளீடற்ற (Hallow) களிமண் சிற்பம். பக்கவாட்டில் இருக்கும் நுழைவாயிலில் உள்நுழைந்து, ஏணிப்படிகள் வழியாக ஏறிக் கழுத்துவரை செல்லலாம்.









கடந்த ஒரு மாதகாலமாக புத்தமதம் வாழ்க்கையில் நிறையக் குறுக்கீடுகள் செய்தது. சென்னையில் வாங்கிய நூல்களான அருணன் எழுதிய தமிழர் தத்துவ மரபு, இராகுல சங்கிருத்தியாயனின் புத்த தத்துவ இயல், நண்பர் அரும்பாவூர் செல்வபாண்டியனுடன் தொலைபேசியில் பௌத்தம் பற்றிய உரையாடல், ஜப்பானிய நண்பர்களுடன் ஜப்பானின் மதவரலாறு குறித்த கேள்விகள், கமகுராவிற்குச் சுற்றுலா எனப் பௌத்தம் புடைசூழ வலம்வந்ததைப் பார்த்து என் மனைவிக்கு ஒருகணம் திகைப்பு உண்டாகிவிட்டது. எங்கே புத்த மதத்தைத் தழுவப்போகிறேனோ என்று சந்தேகிக்குமளவுக்குப் போய்விட்டார். பிறகு எல்லாம் இந்தமாத வரலாறு.காம் கட்டுரைக்காகத்தான் என்று விளக்கியதும்தான் சற்று நிம்மதியடைந்தார்.

எந்த மதத்தைத் தழுவினால்தான் என்ன, மனிதனாக இருந்தால் போதுமானது. வாழ்க்கையை நல்ல முறையில் வாழ வழிகாட்ட வேண்டியதுதான் மதம். ஆனால், மதம் காட்டும் வழியில் வாழ்ந்தால்தான் அது நல்லவாழ்க்கை என்று சொல்ல முடியாது. இன்று நம்மில் பலர், மதத்தின் சாராம்சமாகிய தத்துவங்களை விட்டுவிட்டு வெறும் சடங்குகளின் தொகுப்புதான் மதம் என்று தவறாக நம்பிக்கொண்டிருக்கிறோம். மனிதம் தொலைந்து போனதற்கு இதுவும் ஒரு காரணம். எந்த மதத்தினனாக வாழ்கிறோம் என்பதைவிட மனிதனாக வாழ்கிறோமா என்பதை முக்கியமாகக் கொள்வோமாக.

மீண்டும் அடுத்த பயணத்தில் சந்திப்போம்.

this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.