![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 43
![]() இதழ் 43 [ ஜனவரி 16 - பிப்ரவரி 17, 2008 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
தொடர்:
குடைவரைகள்
மதுரை மேலூர் தேசிய நெடுஞ்சாலையில் மதுரையில் இருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கத்தப்பட்டிப் பிரிவில் வடமேற்கு நோக்கிப் பயணித்தால் பூசாரிப்பட்டியை அடுத்து வடக்காகத் திரும்பும் மீனாட்சிபுரம் சாலையை அடையலாம். குறுகலான அச்சாலை மீனாட்சிபுரத்தை ஒட்டித் தெற்கு வடக்காக அமைந்துள்ள ஓவாமலைச் சரிவில் முடிகிறது. கழுகுமலை என்றும் அழைக்கப்படும் இம்மலையில்தான் இயற்கையாய் அமைந்த ஐந்து குகைத்தளங்கள் உள்ளன.1 கிழக்குப் பார்வையாய் உள்ள இவ்வைந்து குகைத்தளங்களிலும் நீர்வடி விளிம்புகள் வெட்டப்பட்டுள்ளன. ஆனால், நான்கு குகைத்தளங்களில்தான் படுக்கைகள் உள்ளன. முதல் குகைத்தளத்திற்குச் செல்லும் பாதையின் ஓரிடத்தில் சிதைந்த நிலையில் செங்கல் கட்டமைப்பு ஒன்று உள்ளது. அதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் செங்கற்கள் பழங்காலத்தன வாக உள்ளன. குகைத்தளங்கள் சார்ந்த பயன்பாட்டிற்காக அவை அமைக்கப்பட்டிருக்கலாம் என்று வெ. வேதாசலம் கருதுகிறார்.2 மலையின் உயரமான பகுதியில் பெரிய அளவில் அமைந் துள்ள முதல் குகைத்தளத்தில் பல படுக்கைகள் உள்ளன. அதன் நீர்வடி விளிம்பிற்குக் கீழே ஒரே வரியில் வெட்டப்பட்டுள்ள 'கணிய் நத்திய் கொடிய்அவன்' எனும் சிறிய பழந்தமிழ்க் கல்வெட்டுக் காணப்படுகிறது.3 அதன் வடபுறம் சற்றுக் கீழ் இருக்குமாறு ஒரே வரியில் வெட்டப்பட்டுள்ள நீளமான கல்வெட்டு, 'கணிய் நந்தஅஸிரிய்இ குவ்அன்கே தம்மம் இத்தாஅ நெடுஞ்சழியன் பணஅன் கடல்அன் வழுத்திய் கொட்டுபித்தஅ பளிஇய்' என்று படிக்கப்பட்டுள்ளது.4 நெடுஞ்செழியனின் அலுவலர் கடலன் வழுதி, கணி நந்த ஸிரிகுவனுக்கு இவ்வுறைவிடத்தை உருவாக்கித் தந்தார் எனப் பொருள் தரும்5 இக்கல்வெட்டை வெட்டியவராகக் கணிய் நத்தியின் பெயரை முதலில் உள்ள சிறிய கல்வெட்டுச் சுட்டுகிறது.6 இவ்விரு கல்வெட்டுகளுமே கி.மு.இரண்டாம் நூற்றாண்டினவாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.7 முதற் குகைத்தளத்தின் வடபுறம் சற்றுக் கீழே அமைந்துள்ள இரண்டாம், மூன்றாம் குகைத்தளங்கள் அடுத்தடுத்து அமைந்துள்ளன. குறைவான படுக்கைகள் வெட்டப்பட்டுள்ள இரண்டாம் குகைத்தளத்தில் கல்வெட்டுகள் ஏதுமில்லை. அதிக அளவிலான படுக்கைள் பெற்றிருக்கும் மூன்றாம் குகைத்தளம் இரண்டு பழந்தமிழ்க் கல்வெட்டுகளை அடுத்தடுத்துப் பெற்றுள்ளது. அவற்றுள் முதற் கல்வெட்டு, 'சந்தரிதன் கொடுபிதோன்' என்றும் இரண்டாம் கல்வெட்டு 'வெள்அறை நிகமதோர் கொடி ஓர்' என்றும் படிக்கப்பட்டுள்ளன.8 உறைவிடம் அமைத்துத் தந்தவர்களாகச் சந்தரிதனையும் வெள்ளறையைச் சேர்ந்த வணிகக் குழுவினரையும் சுட்டும் இக்கல்வெட்டுகளும் கி. மு. இரண்டாம் நூற்றாண்டிற்கு உரியனவாகக் கொள்ளப்பட்டுள்ளன.9 படுக்கைகள் அற்ற நான்காம் குகைத்தளத்தின் தரை நன்கு தேய்த்து வழவழப்பாக்கப்பட்டுள்ளது. இக்குகைத்தளத்தின் நீர்வடி விளிம்பின் கீழே ஒரே வரியில் வெட்டப்பட்டுள்ள பழந் தமிழ்க் கல்வெட்டு 'கணிஇ நதஸிரிய் குவ(ன்)10 . . . வெள்அறைய் நிகமது காவிதிஇய் காழிதிக அந்தை அஸுதன் பிணஉ கொடுபிதோன்' எனப் படிக்கப்பட்டுள்ளது.11 வெள்ளறை நிகமத்தைச் சேர்ந்த காவிதியான முத்துக் கண்காணிப்பாளர் அந்தை அசுதன், கணி நந்தஸிரிகுவனுக்கு உறைவிடம் அமைத்துத் தந்தார் என இதற்குப் பொருள் காணப்பட்டுள்ளது.12 முதற் குகைத்தளத்திற்குக் கீழே மலைச்சரிவில் இறங்கிச் சென்றால் சற்றுத் தொலைவில் உள்ள ஐந்தாம் குகைத்தளத்தைக் காணலாம். முப்பத்து மூன்று கற்படுக்கைகளைப் பெற்றுள்ள இந்தக் குகைத்தளமே இங்குள்ள குகைத்தளங்களில் அதிக அளவிலான படுக்கைகள் கொண்டது. இதன் நீர்வடி விளிம்பிற்குக் கீழே ஒரே வரியில் வெட்டப்பட்டுள்ள கல்வெட்டு 'கணிய் நந்தஸிரிய் குஅன் தமம் ஈதா நெடிஞ்சழியன் ஸாலகன் இளஞ்சடிகன் தந்தைய் சடிகன் சேஇய பளிய்' என்று படிக்கப்பட்டுள்ளது.13 இதன் பொருள் நெடுஞ்செழியனின் சகலையாகிய இளஞ்சடிகனின் தந்தை சடிகன் கணி நந்தஸிரிகுவனுக்குத் தருமமாக உறைவிடம் அமைத்துத் தந்தார் என்பதாகும்.14 இவ்வைந்து குகைத்தளங்களிலிருந்தும் கிடைக்கும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும். நீளப் பாய் ஒன்றை விரித்தது போல் நெடுகப் படுத்திருக்கும் மலைத்தொடரும் காடாய் வளர்ந்திருக்கும் மரக்கூட்டங்களும் அவற்றிற்கு இடையில் மறைந்தும் தெரிந்தும் செல்லும் ஒற்றையடிப் பாதைகளும் சிறு வழிகளும் ஆங்காங்கே பளபளக்கும் நீர் நிறைந்த குளங்களும் ஏரிகளும் பச்சைப் பசேல் எனக் கதிர் வளர்த்திருக்கும் வயல்களும் உள்ளம் மயக்கும் அழகைக் கொள்ளைக் கொள்ளையாய் அள்ளித்தருகின்றன. மக்கள் வரத்து இன்மையால் நன்னிலையில் உள்ள இக்குகைத்தளங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்தும் கல் உடைப்பவர்களிடம் இருந்தும் காப்பாற்றப்படல் வேண்டும். மீனாட்சிபுரத்திற்கு வடமேற்கில் ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பாறைமலையான் அம்மன்பட்டிமலை15 என்றழைக்கப்படும் ஓவாமலைத் தொடர் சார்ந்த சரிவு ஒன்றின் இடைப்பகுதியில் முற்றுப் பெறாத குடைவரை ஒன்று மேற்குப் பார்வையாக அமைக்கப்பட்டுள்ளது. நிலத்திலிருந்து 5. 62 மீ. உயரத்தில் வெட்டப்பட்டுள்ள இக்குடைவரையின் முகப்பிற்கு முன்னுள்ள தரை தென்வடலாக 5. 69 மீ. நீளமும் கிழக்கு மேற்காக 75 செ. மீ. அகலமும் கொண்டமைந்துள்ளது. இத்தரையை அடுத்து அமைந்துள்ள முகப்பு, பாறைச் சுவர்களை ஒட்டி இரண்டு நான்முக அரைத்தூண்களும் நடுவில் இரண்டு நான்முக அரைத்தூண்களும் பெற்றுள்ளது.16 தென்வடலாக 5. 24 மீ. நீளமும் கிழக்கு மேற்காக 59 செ. மீ. அகலமும் கொண்டுள்ள இம்முகப்பின் தூண்களுக்கு இடையிலான பாறைப்பகுதிகள் பிளக்கப்படாமையின் அங்கணங்கள் உருப்பெறவில்லை.17 அதன் காரணமாக இடைத்தூண்கள் இரண்டும் பேரளவினவாக அமைந்தும் அவற்றை முழுத் தூண்களாகக் கொள்ள முடியவில்லை. முகப்புத் தூண்களின் மேல் அமர்ந்துள்ள போதிகைகள் கனமான தங்கள் விரிகோணக் கைகளால் சிறிய அளவிலான உத்திரம் தாங்குகின்றன. மேலே, கூரையைத் தழுவிய வாஜனம். முகப்பின் கூரை நன்கு சமன்படுத்தப்பட்ட நிலையில் முன்னிழுக் கப்பட்டுள்ளபோதும் கபோதமாக வடிவம் பெறவில்லை. முகப்பின் பக்கச்சுவர்களில் தென்சுவர் மேலே குறுகியும் கீழ்ப்பட விரிந்தும் அமைய, வடசுவர் மேலே நன்கு விரிந்தும் கீழே சற்றுக் குறுகியும் உள்ளது. முகப்பு, பக்கச்சுவர்கள், தரை, கூரை, தூண்கள் என அனைத்தும் சரியாக அமைந்திருந்தும் அங்கணங்கள்கூடத் திறக்கப்படாத நிலையில் இக்குடைவரைப் பணி கைவிடப்பட்டதற்கான காரணத்தை அறியக்கூடவில்லை. குறிப்புகள் 1. முதல் ஆய்வு மேற்கொண்ட நாள் 8. 3. 1991. மீளாய்வு செய்த நாள் 6. 10. 2007. 2. ஓவாமலைப் பயணத்தின்போது தெரிவிக்கப்பட்ட கருத்து. 3. I. Mahadevan, Early Tamil Epigraphy, Cre-A, Chennai, 2003, p. 321. 4. Ibid., யீ.315. 5. Ibid. 6. தி. ஸ்ரீ. ஸ்ரீதர் (பதி.), தமிழ் - பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை, சென்னை, 2006, ப. 17. 7. சு. இராசவேல், அ. கி. சேஷாத்திரி இவர்கள் கி. மு. நான்காம் நூற்றாண்டினவாகக் கொள்கின்றனர். மு. கு. நூல், ப. 153. 8. I. Mahadevan, op. cit., pp. 322 - 23. 9. இவற்றையும் சு. இராசவேல், அ. கி. சேஷாத்திரி ஆகியோர் கி. மு. நான்காம் நூற்றாண்டினவாகக் கொள்கின்றனர். மு. கு. நூல், ப. 153. 10. 'குவ'வை அடுத்து 'அன்' இருப்பதாகக் கருதும் வேதாசலம் அவற்றை அடுத்து ஓர் எழுத்து மட்டுமே கண்டறிய முடியாத நிலையில் உள்ளதாகக் கூறுகிறார். நேர்முகம், 6. 10. 2007. 11. I. Mahadevan, op. cit., p. 319. 12. Ibid., யீ.319. தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை, 'கணி நந்த ஸிரிய்குவனுக்கு வெள்ளறை நிகமத்துக் காவிதியான கழிதிக அந்தையின் மகன் அஸுதன் என்பவன் உறைவிடம் அமைத்துக் கொடுத்தான்' என்று பொருள் கொண்டுள்ளது. தமிழ் - பிராமி கல்வெட்டுகள், ப. 19. 13. I. Mahadevan, op. cit., p. 317. 14. தமிழ் - பிராமி கல்வெட்டுகள், ப. 18. 15. உள்ளூர்க்காரர்கள் கூறும் பெயர். பொதுவாக மாங்குளம் குடைவரை என்றே அறியப்படுகிறது. 16. சு. இராசவேல், அ. கி. சேஷாத்திரி ஆகியோர், 'தூண்களின் கீழும் மேலும் சதுரமாகவும் நடுப்பகுதி எட்டுப்பட்டைக் கொண்டும் அமைக்கப்பட்டுள்ளன' என்கின்றனர். மு. கு. நூல், ப. 153. 17. நடு அங்கணத்தில் முழு அளவிலான கல்வெட்டொன்று காணப்படுவதாகக் கே.வி.செளந்தரராஜன் கூறியிருப்பது சரியன்று. மு. கு. நூல், ப. 98. this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |