![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 47
![]() இதழ் 47 [ மே 16 - ஜூன் 17, 2008 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
வாசகர்களுக்கு வணக்கம். சென்ற மாத இதழின் மூலம் முனைவர் இரா.கலைக்கோவன் அவர்களுக்கு வாழ்த்துச் செய்திகளைத் தெரிவித்த வாசகர்களுக்கும் அறிஞர்களுக்கும் டாக்டர் மற்றும் ஆசிரியர் குழுவினரின் நன்றிகளை உரித்தாக்குகிறோம். அவருக்கு இன்ப அதிர்ச்சியைத் தரவேண்டும் என்ற காரணத்திற்காக இதழ் மலரும்வரை இரகசியமாக வைத்திருந்தோம். இதனால், டாக்டர்.மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தில் கல்வெட்டய்வாளராக இருக்கும் முனைவர் மு.நளினி அவர்களிடம் டாக்டரைப் பற்றிய கட்டுரையைக் கேட்க முடியவில்லை. 'தலைமாணவி என்று கூறித் தள்ளி வைத்து விட்டீர்களே?' என்று செல்லமாகக் கோபித்துக் கொண்டவர்களை, அதற்கான காரணங்களைக் கூறிச் சமாதானப் படுத்தினோம். அதனால் வாசகர்களுக்குக் கிடைத்த பயன், டாக்டரைப் பற்றிய கட்டுரைத்தொடர் ஒன்று இம்மாதம் முதல் மலர்கிறது. என்றுமில்லாத வழக்கமாக, அதிகபட்சமாக 18 கட்டுரைகளைத் தாங்கி வெளிவந்த சென்றமாத இதழுக்கு வந்த வாசகர் வரவேற்பைச் சிலநாட்கள் மெய்மறந்து பார்த்திருந்துவிட்டு, அடுத்த இதழ்த் தயாரிப்பைத் தொடங்கலாம் என்றெண்ணியபோது, நாளிதழ்களில் வந்த ஒரு செய்தி எங்கள் கவனத்தை ஈர்த்தது. தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை ஆதாரங்களைத் தந்தால், முதலாம் இராஜராஜரின் நினைவு மண்டபம் கட்ட அரசு தயார் என்று அறிவித்திருக்கிறது. முதன்முதலில் டாக்டர். குடந்தை என். சேதுராமன் அவர்கள் மைசூரிலிருக்கும் தமிழ்க் கல்வெட்டுகளின் படிகளைப் படித்தபோது, முதலாம் குலோத்துங்கரின் கல்வெட்டு ஒன்று இராஜராஜதேவர் திருமாளிகை பற்றிக் குறிப்பிடுவது கண்டு, உடையாளூர் பால்குளத்தம்மன் கோயிலைக் கண்டறிந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அது இராஜராஜரின் பள்ளிப்படையாகக் கருதப்பட்டது. அதன்பின்பு அக்கல்வெட்டை ஆய்வு செய்த அறிஞர்கள் அது பள்ளிப்படை அல்ல என்று ஆதாரபூர்வமாக நிரூபித்த பின்பும், மீண்டும் மீண்டும் சில ஆய்வாளர்களால் ஊடகங்களில் செய்தியாக்கப்பட்டு வந்தது. பின்பு சமீபத்தில், உடையாளூரிலிருக்கும் வாழைத்தோப்பு ஒன்றில் அரைகுறையாகப் புதைந்திருக்கும் சிவலிங்கம் ஒன்று இருக்கும் இடம்தான் முதலாம் இராஜராஜரின் அஸ்தியை வைத்துக் காபாலிகர்கள் பூசை செய்துவந்த பள்ளிப்படைக் கோயில் என்ற வதந்தி உலா வர ஆரம்பித்தது. இதுகண்டு ஆச்சரியமடைந்த எங்கள் குழு, தமிழகத்தை ஆண்ட ஈடு இணையற்ற ஒரு மாமன்னரின் பள்ளிப்படை இப்படிக் கேட்பாரற்றுக் கிடக்கிறதே என்று பதறி, அதுபற்றிய தகவல்களைச் சேகரிப்பதற்காக, கடந்த 2004ல் அங்கு சென்றோம். முதலில் பால்குளத்தம்மன் கோயில்க் கல்வெட்டை வாசித்து, பள்ளிப்படை பற்றிய தகவலோ, அதைப் பராமரித்த காபாலிகர்களைப் பற்றிய தகவலோ ஏதுமில்லாததை உறுதிப்படுத்திக்கொண்டு, சிவலிங்கம் புதைந்து கிடக்கும் வாழைத்தோப்புக்குச் சென்றோம். முதலில், மணிமண்டபம் கட்டுவதற்காக நிலத்தை அபகரிக்க வந்திருக்கும் அதிகாரிகள் என்று எண்ணிக்கொண்ட நிலத்தின் உரிமையாளர், எங்களை உள்ளேவிட மறுத்தார். பின்பு அவரிடம் நிலைமையை விளக்கி, அங்கு அகழாய்வு மேற்கொண்டோம். அந்த லிங்கம் இருந்த இடத்தைத் தோண்டியபோது, அதற்குக் கீழே எந்தக் கட்டுமானமும் இல்லை. அதே பகுதியில் பல்வேறு இடங்களில் வெள்ளத்தில் அடித்துவரப்பட்டு, வயல்களில் புதைந்துகிடக்கும் பிற லிங்கங்களைப் போல்தான் இதுவும் இருந்தது. இந்த லிங்கம் ஒன்றைமட்டும் வைத்து இது இராஜராஜனின் பள்ளிப்படை என்று சொல்லிவிட முடியாது. ஒருவேளை அது பள்ளிப்படைதான் என்று ஒரு வாதத்திற்காக ஏற்றுக்கொண்டாலும், தஞ்சாவூரில் கோயில் கட்டிய முதலாம் இராஜராஜருடையதாக இருக்குமா அல்லது இதற்கு மிக அருகிலிருக்கும் தாராசுரத்தில் கோயில் கட்டிய இரண்டாம் இராஜராஜருடையதாக இருக்குமா என்று சிந்திப்பவர்கள் விளங்கிக்கொள்ளலாம். இதே அடிப்படையில் பார்த்தால், கங்கைகொண்ட சோழபுரத்திற்கு அருகில் ஒரு லிங்கம் புதையுண்டிருந்தால், அது முதலாம் இராஜேந்திரரின் பள்ளிப்படையா அல்லது அவருக்குப்பின் அவ்வூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட அவரது வம்சாவளியினருடையதா? இந்த வியக்கவைக்கும் 'லாஜிக்'கை நினைவுமண்டபம் கட்ட வலியுறுத்தும் ஆய்வாளர்கள்தான் விளக்கவேண்டும். பத்திரிக்கைகளில் பரபரப்புச் செய்தியாக உலா வந்துகொண்டிருந்த இவ்வதந்தி, தற்போது தமிழக சட்டசபையிலும் எதிரொலிக்க ஆரம்பித்திருக்கிறது. அரசும், மாபெரும் தமிழ்மன்னன் தொடர்பானது என்று உணர்ச்சி பூர்வமாக முடிவெடுக்காமல், ஆதாரமிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுபூர்வமாக அறிவித்திருக்கிறது. இந்த நேரத்தில், வரலாறு.காம் தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறது. தமிழகத் தொல்லியல்துறைக்கு அல்லது மத்திய அரசின் மூலமாக இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறைக்கு இவ்விடத்தை அகழாய்வு செய்ய ஆணையிட வேண்டும் என்பதே அது. இராஜராஜர் தம் கடைசிக் காலத்தைப் பழையாறையில் கழித்தார் என்பன போன்ற எந்த ஆதாரங்களும் முன்வைக்கப்படாத ஊகங்களைப் போலல்லாமல், முறையான அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு, அதன் முடிவுகளைத் தமிழர்களுக்கு எந்தவித ஒளிவுமறைவும் இல்லாமல் வெளியிட்டு, இது பள்ளிப்படைதான் என்று அறிவியல்பூர்வமான ஆய்வின் அடிப்படையில் உறுதியாக நிரூபிக்கப்பட்டால் மட்டுமே நினைவாலயத்தை எழுப்பி, அனைத்துத் தமிழர்களையும் பெருமிதம் கொள்ளச் செய்யவேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும். இல்லாவிடில், இதற்குச் சாதக பாதகமான இருபக்க வாத விவாதங்களும் வளர்ந்துகொண்டேபோய், சேதுசமுத்திரம் பிரச்சினைபோல் மீளமுடியாத ஒரு கட்டத்தில் தள்ளிவிடும். வரலாற்றில் ஒருமுறை தவறு நிகழ்ந்துவிட்டால், அதைத் திருத்துவது எத்தனை கடினம் என்பதற்கு நம் தமிழக வரலாற்றிலேயே ஏராளமான சான்றுகள் உள்ளன. இதுவும் அவற்றில் ஒன்றாகிவிடாமல் காக்கவேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. பெரும்பாலான மக்களின் நம்பிக்கை என்று ஜல்லியடிக்காமல், அறிவியல்பூர்வமான ஆய்வுக்கு வழியமைத்துத் தரவேண்டியதும் தமிழக அரசின் கடமை. தமிழ் மற்றும் தமிழர்களின் பெருமையைக் காக்கும் திட்டங்களைத் தீட்டும் தமிழக அரசு இதையும் சரியான முறையில் கையாளும் என்று நம்புவோமாக. அன்புடன் ஆசிரியர் குழு this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |