http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 47
இதழ் 47 [ மே 16 - ஜூன் 17, 2008 ] இந்த இதழில்.. In this Issue.. |
பகலில் வந்தால் பலரும் பார்த்து வம்பு பேச வழியாகும் என்று அவள் இரவில் வந்தாள். அழகாகச் செய்யப்பட்ட பொலிவானதொரு பாவை நடைகற்றாற் போல மீன்களும் உறங்கும் அந்த நள்ளிரவில் அவள் நடந்து வந்தாள். கைகளில் வெள்ளி வளைகள். கூந்தலோ அவள் நடைக்கேற்ப கழுத்தில் புரண்டு அங்க்ுள்ள கழுத்தணியையும் அசைத்தபடி திகழ்கிறது. பொன்னை உலைக்களத்து அடிக்குங்கால் சிதறும் துகள் போல, அவள் சூடியுள்ள மாலையிலிருந்து தேன் பிலிற்றுகிறது. யாழொலி போல இனியன மொழிந்தபடி இதோ, அவள் வந்துவிட்டாள். கைவளைகள் என் உடலில் வடுக்களை ஏற்படுத்துமாறு எத்தனை நெருக்கமாய அணைக்கிறாள்! அந்த அணைப்பு தரும் சுகத்தில் உள்ளந்தான் எத்தனை நிறைவுடன் மகிழ்கிறது. இது, பரணர் படம்பிடிக்கும் காதல் இணையின் களிப்பான சேர்க்கை (அகம் 142). காதல் காட்டுவதுடன் நின்று விட பரணர் கவிஞர் மட்டும் அல்லர். வரலாற்று நோக்கரும் கூட. அதனால்தான் தழுவலுக்குள்ளும் வரலாறு நழுவாமல் இடம்பிடித்துள்ளது. நன்னன் நீதி முறை வழுவாமல் கடமையாற்றும் மன்னர். பல யானைகளை உடையவர். அவருடைய பாழி எனும் ஊருக்கருகில் போர் ஒன்று அமைகிறது. வெள்ளம் படையையும் பறவையினங்களுக்குக் காவலன் எனும் பெரும் புகழையும் உடைய அதிகன் எனும் சிற்றரசரை மிஞிலி எனும் மற்றோர் அரசர் போர்க்களத்தில் கொன்று உவக்கிறார். அந்தப் போரால் பாழியில் உறையும் பேய்களுக்கு உயிரற்ற உடல்கள் உணவாயின. வெற்றியின் மகிழ்வில் படைவீரர்கள் மிஞிலியுடன் இணைந்து ஒள்வாள் அமலை எனும் களக்கூத்து நிகழ்த்துகின்றனர். கூத்தின் பேரொலி களம் எங்கும் பரவுகிறது. ஒள்வாள்அமலைக் கூத்தின் பேரொலிக்காகவே இந்தக் காட்சியைக் காட்டும் பரணர் அந்தப் பேரொலியை வம்பு பேசும் ஊர்மக்களின் உரத்த குரல் ஒலிக்கு உவமையாக்குகிறார். காதலியின் தழுவலால் நெஞ்சத்திற்கு ஏற்பட்ட நிறைவான மகிழ்வை எடுத்துரைக்க சேர மன்னரான மாந்தரம் பொறையன் கடுங்கோவின் வள்ளன்மை அவருக்கு உதவுகிறது. புலமை மிக்கவர்கள் நாவலிக்கப் புகழும் அளவு கொடுத்துக் கொடுத்துக் கவிந்த கையினன் மாந்தரம் பொறையன் அவரைப் பாடித் தங்கள் வறுமை நீங்கப்பெறும் எளியோரின் நிறைவும் மகிழ்வும் போலக் காதலியின் தழுவல் காதலனின் ஏக்கம் போக்கி நிறைவும் மகிழ்வும் தந்ததாம். ஒரு தழுவலுக்கு இரண்டு மன்னர்கள்! அதுதான் பரணர் காட்டும் வரலாறு! அகம் 142. திணை : குறிஞ்சி ஆசிரியர் : பரணர் இலமலர் அன்ன அம் செந் நாவின் புலம் மீக்கூறும் புரையோர் ஏத்த, பலர் மேந் தோன்றிய கவி கை வள்ளல் நிறைஅருந் தானை வெல்போர் மாந்தரம் பொறையன் கடுங்கோப் பாடிச் சென்ற குறையோர் கொள்கலம் போல, நன்றும் உவ இனி வாழிய, நெஞ்சே! காதலி முறையின் வழாஅது ஆற்றிப் பெற்ற கறை அடி யானை நன்னன் பாழி, ஊட்டு அரு மரபின் அஞ்சு வரு பேஎய்க் கூட்டு எதிர்கொண்ட வாய் மொழி மிஞிலி புள்ளிற்கு ஏமம் ஆகிய பெரும் பெயர் வெள்ளத் தானை அதிகற் கொன்று, உவந்து ஒள் வாள் அமலை ஆடிய ஞாட்பின், பலர் அறிவுறுதல் அஞ்சி, பைப்பய, நீர்த் திரள் கடுக்கும் மாசு இல் வெள்ளிச் சூர்ப்புறு கோல் வளை செறித்த முன்கை குறை அறல் அன்ன இரும் பல் கூந்தல், இடன் இல் சிறு புறத்து இழையொடு துயல்வர, கடல் மீன் துஞ்சும் நள்ளென் யாமத்து, உருவு கிளர் ஓவினைப் பொலிந்த பாவை இயல் கற்றன்ன ஒதுக்கினள் வந்து, பெயல் அலைக் கலங்கிய மலைப் பூங் கோதை இயல் எறி பொன்னின் கொங்கு சோர்பு உறைப்ப, தொடிக்கண் வடுக்கொள முயங்கினள்; வடிப்பு உறு நரம்பின் தீவிய மொழிந்தே. this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |