http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[176 Issues]
[1745 Articles]
Home About US Temples Facebook
Issue No. 48

இதழ் 48
[ ஜூன் 16 - ஜூலை 17, 2008 ]


இந்த இதழில்..
In this Issue..

வரலாறு.காம் அழைக்கிறது
எப்பாடு பட்டாகிலும்!
தண்ணியடிக்கும் கலை
திரும்பிப் பார்க்கிறோம் - 20
அவர் - இரண்டாம் பாகம்
செல்வம் தந்த மூதேவி
ஓடி விளையாடு கிளிமகளே! தமிழ் மகளே!
இதுவா? அதுவா?
இதழ் எண். 48 > கதைநேரம்
தண்ணியடிக்கும் கலை
கோகுல் சேஷாத்ரி
வரலாறு டாட் காம் குழுவினர் அனைவருக்குமே "தண்ணியடிக்கும்" பழக்கம் உள்ளது எனும் செய்தி உங்களில் சிலருக்கு அதிர்ச்சியாக இருக்கலாம்.

ஒரு சிலருக்கு வியப்பாக இருக்கலாம். வேறு சிலருக்கோ ஏற்கனவே தெரிந்த செய்தியாகக்கூட இருக்கலாம்.

"உங்களைப்பற்றி என்னவெல்லாமோ நினைத்துக்கொண்டிருந்தேனே !" "இப்படி ஏதாவது இருக்குமென்று அப்பொழுதே நினைத்தேன் - சரியாய்ப் போய்விட்டது !" - என்றெல்லாம் ஒரு சிலர் வாய்விட்டே புலம்பக்கூடும்.

உங்களின் எண்ணம் என்னவாக இருந்தாலும் சரி. பல நாட்களாக மனதில் ஊறிக்கிடந்த இந்த விஷயத்தை ஒரு வழியாக தைரியத்தை வரவழைத்துக்கொண்டு இந்த இதழில் எழுதியே விடுவது என்று முடிவு செய்து விட்டேன். உண்மை என்றாவது ஒருநாள் எப்படியும் எல்லோருக்கும் தெரியத்தானே போகிறது ? வேறு எவர் மூலமாகவோ கேள்விப்பட்டுத் தெரிந்துகொள்வதைவிட நாங்களே அதனை ஒப்புக்கொண்டுவிடுவது நல்லதுதானே ?

சத்தியமாக ஐந்து வருடங்களுக்கு முன் இந்தத் கலையைப் பற்றியோ அதன் முக்கியத்துவத்தைப் பற்றியோ எங்களுக்கு ஒன்றுமே தெரியாது. மென்பொருள் எழுதியும்(Software) கணக்கெழுதியும்(C.A) காலத்தைக் கழித்துக்கொண்டிருக்கும் எங்களுக்கு இப்பழம்பெரும் கலையைப் பற்றி எங்கே தெரியப் போகிறது ?? வரலாற்றின் பல அணுகுமுறைகளையும் நுட்பங்களையும் போதித்த டாக்டரவர்கள்தான் இக்கலையின் அருமை பெருமைகளையும் அதன் பழமையையும் விளக்கமாக எடுத்துரைத்தார்கள்.

அப்போதாவது இதன் மகத்துவங்களைத் தெளிவாக விளங்கிக்கொண்டோமாவென்றால் கிடையாது ! காலம் செல்லச் செல்ல - அனுபவங்கள் கூடக் கூடத்தான் - இதன் முக்கியத்துவம் நன்றாகப் புரியத் தொடங்கியது.

ஆனால் கடந்த சில வருடங்களில் இக்கலையில் நன்கு தேர்ச்சியடைந்துவிட்டோம் என்றுதான் கூறவேண்டும். இப்போதெல்லாம் எந்தக் கோயிலுக்குச் சென்றாலும் அங்கே "தண்ணியடிக்காமல்" இருப்பதே கிடையாது. திருவெள்ளறை புண்டரீகாட்சப் பெருமாள், அதே ஊரில் குடிகொண்டுள்ள ஜம்புகேஸ்வரர், பொன்செய் நல்துணை ஈஸ்வர நாதர், புள்ளமங்கை திருவாலந்துறையார், குடந்தை சாரங்கபாணி, கூகுர் ஆம்ரவனேஸ்வர், திருவீழிமிழலை வீழிநாதர், பழுவூர் திருவாலந்துறையார் மற்றும் வடவாயில் - தென்வாயில் ஸ்ரீகோயில் மகாதேவர்கள் என்று சமீப காலங்களில் நாம் தரிசித்த அத்தனை தெய்வங்களும் நமது "ஜலக்கிரீடை"யை அமோகமாகக் கண்டு களித்தார்கள். ஒருவராவது "போதும் நிறுத்து !" என்றோ "திருக்கோயில் வளாகத்தில் இப்படியொரு அக்கிரமமா ? வெட்கமாக இல்லை ?" என்றோ கேட்கவில்லை. அதனால் உற்சாகத்துடன் எங்களின் பணி எல்லா இடங்களிலும் நல்ல முறையில் நடந்தேறியது.

எந்த ஒரு நல்ல கலையுமே முதன் முதலில் பழகும்போது தயக்கமும் அச்சமும் நம்மை வாட்டியெடுக்கும். இது சரியா ? இது நமக்கு நன்றாகக் கைவருமா ? பார்ப்பவர்கள் ஏதாவது நினைத்துக்கொண்டு விடுவார்களோ ? கோயிலின் குருக்கள் நாம் இக்காரியத்தில் ஈடுபடுவதைக் கண்டறிந்துவிட்டால் என்ன செய்வது ? என்று பற்பல குழப்பங்களும் மனதில் தோன்றுவது இயற்கையே. ஆனால் நற்கலைகளை கற்பது என்று முடிவெடுத்த பின் இம்மாதிரியான அச்சங்களையும் தயக்கங்களையும் முற்றிலுமாக ஒழித்துவிடவேண்டும். "அச்சம் என்பது மடமையடா !" என்று திரும்பத் திரும்ப மனதிற்கு போதிக்க வேண்டும்.

இங்குதான் ஒத்த கருத்துடைய நண்பர்களை உடன்கூட்டிக்கொள்வது மிகுந்த அவசியமாகிறது. தனியாக ஒரு காரியத்தில் ஈடுபட்டால் அவ்வப்போது தலைகாட்டும் மனசாட்சி, கூட நான்கு நண்பர்களைக் கூட்டிக்கொண்டால் ஓடி ஒளிந்துகொண்டுவிடும். மிகப் பெரிய தயக்கங்களைக்கூட "கூட நான்கு பேர் இருக்கிறார்கள் !" எனும் எண்ணம் தகர்த்தெறிந்துவிடும். எங்களின் விஷயத்திலும் அப்படித்தான் ! அதனால்தான் எப்போது திருக்கோயில் ஆய்வுகளுக்குச் சென்றாலும் குறைந்தது நான்கு பேரையாவது கூட்டிக்கொண்டுதான் செல்வது என்பதை ஒரு கொள்கையாகவே கடைபிடித்து வருகிறோம். இல்லாவிட்டால் எங்களின் பயணங்கள் இத்தனை தூரம் "களை" கட்டியிருக்காது. தண்ணியடிக்கும் திருப்பணிக்கும் சங்கடங்கள் நேர்ந்திருக்கும்.

பொதுமக்களில் ஒரு சில நல்லவர்கள் எங்கள் திருப்பணிகளை கண்டும் காணாமல் போய்விடுவார்கள். "நமக்கு எதற்கு வீண் வம்பு ! ஏதேனும் கேட்கப்போய் வீண் சண்டை ஏற்பட்டுவிட்டால் என்ன செய்வது !" எனும் மனோபாவம்தான் இதற்குக் காரணம். இத்தகைய மகானுபாவர்களை நாங்கள் மனதார வாழ்த்துகிறோம். இவர்களால் எங்களுக்கோ எங்களால் இவர்களுக்கோ எந்தத் தொல்லையும் கிடையாது. அவரவர் அவரவர் பணிகளில் ஈடுபட்டு மகிழ்கிறோம்.

இவர்களில் அடுத்த இரகம் "ஆர்வக் கோளாறு" இடகம். இம்மாதிரியான மனிதர்களுக்கு தங்களைச் சுற்றி நடக்கும் அனைத்து விஷயங்களுமே என்ன ஏது என்று தெளிவாகத் தெரிந்தாக வேண்டும் ! இல்லையேல் மண்டை உடைந்துவிடும். இம்மாதிரியான பெருமக்கள் நாங்கள் திருப்பணி புரியும் இடத்திற்கு அருகில் வந்து நின்றுகொள்வார்கள். உள்ளவர்களில் சற்று தோதானவர்களாக, கேட்டால் பதில் சொல்லக்கூடியவர்களாக, பணியில் தீவிரமாக ஈடுபடாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பவர்களாகத் தெரிபவர்கள் யாரோ அவர்களைத் தேர்ந்தெடுத்து "என்ன நடந்து கொண்டிருக்கிறது தம்பீ ! என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் ?" என்று கேட்பார்கள்.

இம்மாதிரி மாட்டிக்கொள்வது எங்கள் குழுவில் பெரும்பாலும் கவிப்பெரும் பேரறிஞராகத்தான் இருப்பார். அவருக்கே உரித்தான இரக்க சுபாவத்தினால் ஆர்வக் கோளாறின் கேள்விக்கு அவரால் முடிந்தவரை அவர்களுக்குப் புரியும்படி மெல்ல பதில் சொல்வார். ஆனால் ஆர்வக் கோளாறு அத்துடன் திருப்தியடையாது ! ஒரு பதிலிலிருந்து ஒன்பது கேள்விகள் பிறக்கும். ஒன்பது பதில்கள் ஓராயிரம் கேள்விளைக் குட்டி போடும் ! ஒரு கட்டத்தில் கவிஞர் பொறுமையிழந்து போய் பதில் சொல்வதை நிறுத்திக் கொள்வார்.

இவ்விரண்டு தொல்லைகளைக் கூடச் சமாளித்து விடலாம் - ஆனால் அடுத்ததாக நாம் கூறப்போகும் இரு வேறு தொல்லைகள் இருக்கின்றனவே, அவற்றை சமாளிப்பது மிகக் கடினம்.

நமது திருக்கோயில் வளாகங்கள் பல்வேறு காலகட்டங்களில் பற்பல மனிதர்களுக்கு வாழ்வு அளித்திருக்கின்றன. ஆனால் தற்போது பெரும்பாலான பழங்கோயில்களில் ஆள் அரவம் குறைந்துவிட்டதால் அவை அவ்வூரின் சிறுவர் சிறுமியர்க்கு ஏற்ற விளையாட்டுக் களங்களாக மாறிவிட்டன. "சிறுவர்கள்தானே - என்ன பெரிதாகச் செய்துவிடப் போகிறார்கள் !" என்னும் அலட்சியமும் பரிதாபமும் எங்களுக்கு இறுதியில் பெருத்த வினையாகப் பல சமயங்களில் முடிந்திருக்கின்றன. உதாரணமாக, சமீபத்தில் ஆய்வுக்காக நமது குழு நண்பர் விசயமங்கை என்று அக்காலத்தில் அழைக்கப்பட்ட கோவிந்தப்புத்தூருக்குச் சென்றிருக்கிறார். கோட்டச் சிற்பங்களை அவருடைய அருமையான கேமராவில் பதிவு செய்துகொண்டிருக்கும்போது சட்டென்று வானத்திலிருந்து மண்மாரி (மண் மழை) பொழிந்திருக்கிறது. ஒரு கணம் அவருக்கு என்ன நடந்துகொண்டிருக்கிறதென்பதே விளங்கிவில்லை... அண்ணாந்து பார்த்ததில், ஆயிரம் வருடங்களுக்கு முன் அம்பலவாணன் பழுவூர் நக்கனான இராஜராஜப் பல்லவராயரால் கட்டப்பட்ட அந்த ஸ்ரீவிமானம் கோவிந்தப் புத்தூரின் வானரப் படைகளால் மெல்ல சிதைக்கப்படும் காட்சி புலனாகியிருக்கிறது. அந்த விமானத்திலிருந்துதான் மண்மாறி அவர் தலையிலும் உடலிலும் கையில் பிடித்திருந்த விலை உயர்ந்த கேமராவிலும் விழுந்திருக்கிறது. சற்றே ஆசுவாசப்படுத்திக்கொண்டு தலையிலிருந்த மண்ணையெல்லாம் தட்டிவிட்டு மீண்டும் கேமராவை ஆன் செய்த போதுதான் அது பரிதாபமாக உயிரை விட்டுவிட்டதென்பது அவருக்குப் புரிந்திருக்கிறது. அருமையான கேமராவைப் பறிகொடுத்துவிட்டு நின்ற நண்பரின் சோகத்தை சொல்லில் வடித்து மாளாது !

இதேபோல் புள்ளமங்கை திருவாலந்துறையார் கோயிலுக்கு எப்போது சென்றாலும் அங்கே சிறுவர் படையொன்று நம்மை வரவேற்கக் காத்திருக்கும். ஆனால் இப்படைகள் கோவிந்தப்புத்தூர் அளவிற்கு மோசமில்லை - அனைவரையும் நிற்கவைத்து ஒரு போட்டோ பிடித்து கண்ணாரக் காட்டினால் சந்தோஷமடைந்து வேறு உருப்படியான வேலைகளைக் கவனிக்கப் போய்விடுவார்கள். அந்தத் திருக்கோயிலுக்கு அடிக்கடி சென்று வந்ததினால்தான் இப்படிப்பட்ட நுட்பங்கள் புலப்பட்டன.

அடுத்த தொல்லை "குடிமகன்கள்" மற்றும் மனநிலை சரியில்லாத நண்பர்களின் தொல்லை. இவ்விரு சமூகத்தினருமே நமது பரிதாபத்திற்குரியவர்கள்தான் என்பதில் சந்தேகமில்லை. என்றாலும் கோயில்களுக்கு வரலாற்று ஆய்வு நோக்கத்தோடு செல்லும்போது இவர்களின் "அன்புத் தொல்லைகளை" அத்தனை தூரம் இரசிக்கமுடிவதில்லை.

குறிப்பாகப் பொன்செய் நல்துணை ஈஸ்வரத்தில் இப்படிப்பட்ட ஒரு இளைஞரால் நாங்கள் அனுபவித்த தொல்லைகள் ஓரிரண்டல்ல. அந்தக் கோயிலில் கண்டபாதச் சிற்பங்கள் பேர் போனவை. பல நாட்களாக நாங்கள் பார்க்கவேண்டுமென்று கருதியிருந்தவை. அதனால் காலை கிளம்பிவிட்டு முதல் வேலையாக அந்த வளாகத்தை அடைந்துவிட்டோம். சிறிது நேரம் சிரம பரிகாரம் செய்துகொண்டு நன்றாகத் "தண்ணியடித்துவிட்டு" சிற்பங்களை அனுபவிக்கலாம் என்கிற எங்களின் நினைப்பில் மண்ணை வாரிப்போடுவதுபோல் இவர் எங்கிருந்தோ வந்து சேர்ந்தார்.

என்னண்ணே செய்து கொண்டிருக்கிறீர்கள் ? - இதுதான் அவர் முதலிலிருந்து கடைசிவரை கேட்டுக்கொண்டிருந்த ஒரே கேள்வி.

அந்தக் கேள்விக்கு எங்களால் முடிந்தவரை பதில்சொல்ல முயன்றோம். ஆனால் எத்தனை எளிமைப்படுத்திக் கூறியும் அவருக்குத் திருப்தியளிக்கக்கூடியவகையில் பதில் அமையவில்லை. அதனால் தொடர்ந்து அதே கேள்வியை ஏறக்குறைய நூறு முறை கேட்டவாறு இருந்தார். எத்தனை பேசியும் அவரை சரிக்கட்ட முடியவில்லையாதலால் இறுதியில் எங்களின் பிரம்மாஸ்திரத்தை பிரயோகித்தோம். அவரும் அடியேனுமாக ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டு அதனை அவருக்குப் போட்டுக் காட்டியதில் சற்றே திருப்தியாகி அவ்விடம் அகன்றார். ஒரு நிம்மதிப் பெருமுச்சுடன் நாங்களும் பணியைத் தொடர்ந்தோம்.

இத்தனை தூரம் சொல்கிறாயே - அந்தக் கலையை எங்களுக்கும் கற்றுக்கொடுக்க வேண்டியதுதானே என்று நீங்கள் கூறுவது காதில் விழுகிறது. பழம் பெருமை மிக்க இக்கலையை உங்களுக்குக் கற்றுக்கொடுப்பதில் எங்களுக்கும் முழு திருப்தியே - வரலாறு டாட் காம் வாசகர்களான நீங்கள் அக்கலையை சரிவரப் பயன்படுத்துவீர்கள் என்பதிலும் எள்ளளவும் ஐயமில்லை.

இக்கலையை திருக்கோயில் வளாகங்களுக்குள் மட்டும்தான் உபயோகிக்கவேண்டும் என்பதுதான் கண்டிப்பான ஒரே விதி. மற்ற இடங்களில் இதனை உபயோகப்படுத்துக்கூடாது என்றில்லை - ஆனால் அதனால் பயனேதும் விளையாது. அவசியமும் இராது.

இனி இக்கலையைப் பயிலுவதற்கான பயிற்சிமுறை -

முதலில் கோயிலுக்குள் நுழைந்தவுடன் தண்ணி எங்கே கிடைக்கும் என்பதைக் கேட்டறிய வேண்டும். எல்லா திருக்கோயில்களிலுமே குளங்களோ கிணறுகளோ பைப்புகளோ நிச்சயம் அமைந்திருக்கும். அந்த இடத்தைக் கேட்டுத் தெரிந்து கொள்வது நல்லது. நாங்களெல்லோரும் தண்ணியடிக்க வந்திருக்கிறோம் - எங்கே கிணறு அமைந்திருக்கிறது ? என்று பச்சையாகக் கேட்காமல் முகம் கைகால்களை சுத்தம் செய்து கொள்ள வேண்டும் - தண்ணி எங்கே கிடைக்கும் ? என்று நயமாகக் கேட்க வேண்டும்.

அடுத்தபடியாக, தண்ணீர் பிடிக்க ஒரு பெரிய சொம்போ முடிந்தால் பிளாஸ்டிக் பக்கெட்டுகளையோ தேடிப்பிடித்தல் நலம். கோயில் குருக்களுடன் நட்புக்கொண்டு விட்டீர்களானால் இந்த வேலையெல்லாம் வெகு சுலபமாக நடக்கும். அல்லது கையோடு ஒரு பக்கெட்டையும் கொண்டு செல்வது சாலச்சிறந்தது.

கோயில் வளாகத்தில் எங்கெல்லாம் தண்ணி அடிக்கலாம் என்பது அனுபவத்தில் தெரியவேண்டும். பழங்காலச் சிற்பங்கள் - குறிப்பாக கண்டபாதம் மற்றும் வேதிக்கண்டச் சிற்பங்களுக்கு கண்டிப்பாக நீர் முழுக்காட்டு தேவை. நீரின் இருப்பையும் பக்கெட்டின் அளவையும் பொறுத்து தேவக்கோட்டத் தெய்வங்களுக்கும் தண்ணியடிக்கலாம் - தவறில்லை. ஆனால் அவற்றுக்கு அதிகமான தண்ணீர் தேவைப்படும்.

தண்ணியடிக்கும்போது சிற்பங்களின் மேல் படிந்துள்ள தூசு, சுண்ணாம்பு மற்றும் இதரக் கறைகள் நீங்குமாறு ஆவேசத்துடன் பளிச் பளிச்சென்று அடிக்கவேண்டும். சுற்றிலும் நடந்துகொண்டிருக்கும் பக்தகோடிகளுள் எவர்மீதாவது நீர் தெளித்துவிட்டால் வருந்தாதீர்கள்... இறைவனின் திருமேனியை தீண்டியப் புனித நீர் இது... என்றெல்லாம் கூறி அவரை சமாதானம் செய்து விடுங்கள்.

உங்களில் ஒருவர் தண்ணியடிக்கும் வேலையை ஏற்றுக்கொள்ள, மற்றவர் அடித்த நீர் காய்வதற்குள் புகைப்படம் எடுத்துவிடுவது நல்லது. நீங்களே இரண்டு வேலைகளையும் செய்ய முயன்றால் ஈரக் கை தீண்டி கேமரா கெட்டுவிடும். அல்லது நீங்கள் புகைப்படம் எடுப்பதற்குள் நீர் காய்ந்துவிடும்.

இத்தனை முன்னேற்பாடுகளையும் செய்துவிட்டு சிற்பங்களைப் புகைப்படம் எடுத்துப் பாருங்கள்... அப்படியே அசந்து போய் விடுவீர்கள். சிற்பங்களின் அழகை கேமரா அப்படியே அள்ளிக்கொண்டுவந்து உங்கள் மடிமீது கொட்டிவிடும்.

அது சரி, உங்களின் முகம் ஏன் இப்படி அஷ்ட கோணல்களை அடைந்திருக்கிறது...???

this is txt file
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.