http://www.varalaaru.com

A Monthly Web Magazine for
South Asian History
 
[177 Issues]
[1753 Articles]
Home About US Temples Facebook
Issue No. 48

இதழ் 48
[ ஜூன் 16 - ஜூலை 17, 2008 ]


இந்த இதழில்..
In this Issue..

வரலாறு.காம் அழைக்கிறது
எப்பாடு பட்டாகிலும்!
தண்ணியடிக்கும் கலை
திரும்பிப் பார்க்கிறோம் - 20
அவர் - இரண்டாம் பாகம்
செல்வம் தந்த மூதேவி
ஓடி விளையாடு கிளிமகளே! தமிழ் மகளே!
இதுவா? அதுவா?
இதழ் எண். 48 > இதரவை
அவர் - இரண்டாம் பாகம்
மு. நளினி
தொடர்: அவர்
எந்தக் கோயிலை முதுநிறைஞர் பட்ட ஆய்வுக்கு எடுத்துக் கொள்வது என்பதை நாங்கள் முடிவு செய்ய மூலகாரணமாக இருந்தது 1986 இறுதியில் நாங்கள் பங்குகொண்ட பழுவூர் கோயில்கள் சீரமைப்பு விழாதான். காலையில் அவருடன் மேடம், வளர்மதி, சரசுவதி, நான், மஜீது, ஆறுமுகம் மாமா எல்லோரும் விழாவில் கலந்து கொள்வதற்காகப் புறப்பட்டோம். அந்த விழாவிற்கும் எங்களை அழைத்துச் சென்றவர் அவர்தான். பழுவூர் செல்லும் வழியில் புள்ளம்பாடிக்கு அருகில் இருந்த புத்தர் சிற்பம் ஒன்றைப் பார்த்துக் குறிப்பெடுத்துக் கொண்டு புறப்பட்டோம். பயணத்தின்போது குழுமணிக்கு அருகில் புத்தர் சிற்பம் கண்டுபிடித்ததைப் பற்றியும் வாணியின் முள்ளிக்கரும்பூர் ஆய்வு தொடர்பாக அவ்வூரின் பல பகுதிகளுக்கும் சென்று ஆய்வு நிகழ்த்தியமை பற்றியும் எங்களுக்கு விளக்கிக் கூறினார். இது போல் பல ஊர்களுக்கும் சென்று அங்குத் தனிக்கற்களில் கல்வெட்டுகள், சிற்பங்கள் உள்ளனவா என்று விசாரித்துத் தெரிந்து கொண்டு அந்தத் தரவுகளின் அடிப்படையிலும் முனைவர் பட்ட ஆய்வு செய்ய வேண்டும் என்று அப்போது நினைத்தேன்.
உரை : முனைவர் இரா.கலைக்கோவன்
அமர்ந்திருப்பவர்கள் : (இடமிருந்து வலமாக) 1. திரு. அரங்கநாதன், கோட்ட வளர்ச்சி அலுவலர், 2. திரு. இல. வெங்கடேசன், காவல்துறைத் துணைத்தலைவர், திரு. க. அப்துல்மஜீது.
வலதுகோடியில் நிற்பவர்கள் : (முன்வரிசை) 1. மரு. அவ்வை கலைக்கோவன், 2. சரஸ்வதி, 3. மு.நளினி, (பின்வரிசை) 1. வளர்மதி, 2. வாணி செங்குட்டுவன், 3. அர. அகிலா.


நாங்கள் பழுவூரை அடைந்ததும் முதலில் மேலப்பழுவூரிலுள்ள பகைவிடை ஈசுவரம் கோயிலைக்குச் சென்றோம். மன்னு பெரும் பழுவூர் என்று கல்வெட்டுகளில் அழைக்கப்படும் ஊர் இப்போது மேலப்பழுவூர், கீழையூர் என்று இரண்டாகப் பிரிந்துள்ளது. பகைவிடை ஈசுவரத்து விமானம் சாந்தார அமைப்பில் இருந்தது. அதுதான் முதல் முறை நான் சாந்தார விமானம் பார்த்தது. நடைவழியுடன் கருவறை இரண்டு சுவர்கள் பெறுகின்ற அமைப்பையே சாந்தாரம் என்கிறோம் என்று அவர் விளக்கினார். காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் விமானம்தான் தமிழ்நாட்டின் முதல் சாந்தார விமானம் என்பதையும் அதன் விரிவாக்கமே முதல் இராஜராஜரின் இராஜராஜீசுவரம் என்பதையும் அவர் விளக்கியபோது அந்த இரண்டு கோயில்களையும் பார்க்கவேண்டும் என்ற ஆவல் எழுத்தது.

பகைவிடை ஈசுவரம் விமானத்தில் செடிகளும் மரங்களும் வளர்ந்திருந்தன. இது போல்தான் எல்லாக் கோயில்களிலும் செடி, கொடிகள் செழித்து வளர்ந்துள்ளன. அவற்றை அகற்றிக் கோயில்களைச் சீரமைப்பதற்காகத்தான் நாம் இங்கு வந்துள்ளோம் என்று அவர் விளக்கினார். கோயிலைச் சுற்றி வந்தபோதுதான் பழுவேட்டரையர் கால மிக அழகான சேட்டைத் தேவி தன் மகன் நந்தி, மகள் அக்னி இவர்களுடன் அமர்ந்திருப்பதைக் கண்டோம். அதற்குப் பிறகு எவ்வளவோ கோயில்களில் நூற்றுக் கணக்கான சேட்டைத் தேவியைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இதுபோல் இளமையான எழில் நலம் வாய்ந்த அழகிய சேட்டைத்தேவியைப் பார்த்ததில்லை!

கீழையூர் வளாகத்தில் பழுவேட்டரையர் கோயில்கள் இரண்டு அமைந்துள்ளன. தென்வாயில் ஸ்ரீகோயில் என்றும் வடவாயில் ஸ்ரீகோயில் என்றும் கல்வெட்டுகளில் அழைக்கப்படும் இக்கோயில்கள் உள்ள வளாகம் கல்வெட்டுகளில் அவனிகந்தர்வ ஈசுவர கிருகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தக் கோயில் கல்வெட்டுகள் எளிதாகப் படிக்கும் நிலையில் தெளிவாக இருந்தன. மஜீது அவர்களின் உதவியுடன் பரகேசரி, இராஜகேசரிக் கல்வெட்டுகளை அங்கொன்றும் இங்கொன்றுமாய்ப் படித்தோம். இராஜகேசரியின் இருபத்திரண்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு பழுவேட்டரையன் குமரன் கண்டன் காலத்தில் அக்கோயிலுக்கு நிலக்கொடை தரப்பட்டமையைப் பற்றிக் கூறுகிறது. பின்னாளில் பழுவேட்டரையர்களின் மரபு வழி குறித்து ஆய்வு செய்தபோது இந்த வளாகத்தில் உள்ள கல்வெட்டுகளில் காலத்தால் முற்பட்டது இதுதான் என்றும் இந்த இராஜகேசரி ஆதித்த சோழர் என்பதையும் கண்டுபிடித்தோம்.

கீழையூரிலுள்ள மகரதோரணச் சிற்பங்கள் மிகவும் சிறப்பாக இருந்தன. 15 செ. மீ. அளவுள்ள ஓர் அரை வட்டத்திற்குள் சிவபெருமானின் ஆடல் தோற்றத்தைப் பார்த்தோம். இது என்ன ஆடல் தோற்றம் என்று கேட்டதற்கு, 'இது ஊர்த்வஜாநு கரணம். ஒரு காலைத் தரையில் ஊன்றி, மறுகாலை முழங்காலளவில் மடித்து உயர்த்தி ஆடும் கோலத்திற்கு ஊர்த்வஜாநு என்று பெயர். இது போன்ற சிற்பத்தை அண்மையில் மழபாடியில் கண்டுபிடித்தேன். புஜங்கத்ராசிதக் கரணம்தான் ஆடல்வல்லானின் ஆனந்தத் தாண்டவத் தோற்றம். இதில், ஒரு காலைத் தரையில் ஊன்றி மறுகாலைக் குறுக்காக வீசியவாறு கால் நிலைகள் அமையும். ஒரு கை வேழமுத்திரையில் இருக்கவேண்டும். ஊர்த்வஜாநு கரணத்தில் கால் நிலையை மட்டும் கொண்டு கரணத்தைக் கூறலாம். ஆனந்தத் தாண்டவத்தில் கை நிலையையும் பார்க்கவேண்டும்.'

சதுரம், லலிதம் இரண்டு கரணங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன, அவற்றைக் கண்டறிய அவர் மேற்கொண்ட முயற்சிகள், ஸ்வஸ்திக நிலை, குஞ்சிதம், உத்கட்டிதம் எனப் பல கால் நிலைகள் இவை பற்றி விரிவாகப் பேசினார். கரணங்கள் பற்றி ஆய்வு செய்வதில் அவருக்கு மிகுந்த ஈடுபாடு இருந்ததை உணர்ந்த நான், பரதநாட்டியம் கற்றுக்கொண்டு அவருடைய கரண ஆய்வுக்கு உதவ வேண்டும் என்று அப்போது நினைத்தேன். அவர்கூட என்னிடம் கலைக்காவிரி ஆடற்கலைப் பள்ளியில் சேர்ந்து படிப்பதற்கு ஏற்பாடு செய்கிறேன் என்று கூறினார். ஆனால், அது முடியாமல் போயிற்று.

இதே போல் மற்றொரு மகர தோரணத்தில் யானையை அழித்த மூர்த்தி சிற்பம் 15 செ. மீ. அரைவட்டத்திற்குள் அமைந்திருந்தமை வியப்பளித்தது. மற்றோர் இடத்தில் பத்துக்குப் பத்து செ. மீ. அளவில் ஒரு மகிடாசுரமர்த்தனி சிற்பம் சிறப்பாக உருவாக்கப்பட்டிருந்ததைக் கண்டோம். பின்னாளில் புள்ளமங்கை சென்றபோது இன்னும் மிகச்சிறிய அளவில் கண்டபாதங்களிலும் மாலைக்கட்டுப் பகுதியிலும் பல சிவத்தோற்றங்களையும் இராமாயணக் காட்சிகளையும் பார்த்தபோது மலைத்துப்போனேன்.

அடுத்து விமானக் கோட்டங்களில் இருந்த பல சிற்பங்களைப் பார்த்துக் கொண்டே வந்தோம். அதில் வீணாதர சிவன் சிற்பம் எங்களை மிகவும் கவர்ந்தது. 'இதனினும் அழகிய வீணாதரர் சிற்பம் கும்பகோணம் நாகேசுவரர் கோயிலில் இருக்கிறது. இளம் புன்னகையுடன் கம்பீரமாக வீற்றிருக்கும் அந்தத் தோற்றம் எழில் கொஞ்சும் ஒன்று' என்று அவர் கூறியதும் உடனே அந்தச் சிற்பத்தைப் பார்க்கவேண்டும் என்று தோன்றியது. இறைவன் அதற்கான வாய்ப்பையும் விரைவில் ஏற்படுத்தித் தந்தார். கும்பகோணம் ஓவியக் கல்லூரிக்கு அவர் உரை நிகழ்த்தச் சென்றபோது அருகிலுள்ள நாகேசுவரர் கோயிலுக்குச் சென்று அந்த அரிய சிற்பத்தைப் பார்த்தோம். அதைப் பார்த்தபோதுதான் அவர் சொன்னது எவ்வளவு உண்மை என்று உணர்ந்து மகிழ்ந்தேன்.

கோட்டச் சிற்பங்களாக இருந்த நின்ற, அமர்ந்த நிலை முருகன் சிற்பங்கள், நான்முகன், சந்திரசேகரர், சூரியன், எழுவர்அன்னையர் தொகுதிச் சிற்பங்கள் அனைத்தையும் பார்த்தோம். முருகன் சென்னியும் சன்னவீரமும் அணிந்திருந்தார். அவை இரண்டும்தான் முருகனை அடையாளம் காண உதவும் முக்கிய அடையாளங்கள் என்று அவர் விளக்கினார். அதற்குள் சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகளும் கி. ஆ. பெ. விசுவநாதம் பள்ளி மாணவர்களும் அங்கு வந்துவிட்டனர். எங்கள் முதுகலைப் பட்ட ஆய்வு நெறியாளர் திருமதி. கீதாதான் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலராக வந்திருந்தார். அவர் மாணவிகளை தட்டிக் கொடுத்து தூய்மைப் பணியைச் சிறப்பாகச் செய்ய ஊக்கப்படுத்திக் கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் நாங்கள் சிறுபழுவூர்க் கோயிலுக்குப் பயணமானோம்.

அங்கும் இரண்டு கோயில்கள் இருக்கின்றன. மறவனீசுவரம் மிகவும் சிதிலமான நிலையில் இருந்தது. சுற்றிலும் முள்செடிகளும் கொடிகளும் வளர்ந்திருந்தன. அக்கோயிலைத் தொலைவிலிருந்தே பார்த்துவிட்டு, சிறுபழுவூர் ஆலந்துறையார்க் கோயிலுக்குச் சென்றோம். அந்தக் கோயில் வளாகம் மற்ற கோயில்களைவிடச் சற்றுப் பெரியதாக இருந்தது. வெளித்திருச்சுற்றிலேயே சுருதிமான்கள் பற்றிய கல்வெட்டைப் படித்தோம். அம்மன் கோயிலைக் கடந்து உள்ளே சென்றபோது சோழர் கால வாயிற்காவலர்கள், கங்காளர் இவர்கள் வரவேற்றனர். இக்கோயிலின் அர்த்தமண்டப, மகாமண்டபக் கோட்டங்களிலும் சிற்பங்கள் இருந்தன. கபோதக் கூடுச் சிற்பங்கள் அனைத்தையும் பார்த்துவிட்டு அங்கிருந்து மதிய உணவிற்குக் காமரசவல்லிக்குச் சென்றோம். அங்கு செம்பியன் மாதேவி காலக் கோயிலைப் பார்வையிட்டோம். முதல் இராஜேந்திரர் காலக் கல்வெட்டொன்றைப் படித்துவிட்டு மதிய உணவை முடித்துக் கொண்டு மீண்டும் பழுவூர் வந்து அன்று நடைபெற்ற ஆட்சித்தலைவர் பங்கேற்ற விழாவில் பங்கு கொண்டு திருச்சிராப்பள்ளி திரும்பினோம்.

திரும்பும் வழியிலும் அன்றிரவு உறக்கம் வரும் வரையிலும் அவர் தந்த விளக்கங்கள், சொல்லிய செய்திகள் இவற்றைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன். எந்தக் கேள்வி கேட்டபோதும் அது எவ்வளவு சாதாரணமான கேள்வியாக இருந்தபோதும் எங்களை ஊக்கப்படுத்துவது போல் அவர் பதில் சொன்னவிதம் கற்றுக் கொடுப்பதில் அவருக்கு இருந்த ஆர்வம் அவருடைய எளிமையான அணுகுமுறை எல்லாமே என் நினைவில் சுழன்றன. முனைவர் ஆய்வு செய்தால் அவரிடம்தான் செய்யவேண்டும் என்று அப்போதே முடிவு செய்தேன்.

'பழுவூர்க் கோயில்களின் கட்டடக்கலைக் கூறுகள், சிற்பக்கலைத் திறன், கல்வெட்டுச் சிறப்பு என அனைத்தும் கேட்டுத் தெரிந்துகொண்டீர்கள். இவற்றில் எவற்றை நீங்கள் தேர்ந்து கொள்கிறீர்கள்' என்று திரும்பும் வழியில் அவர் கேட்டார். வளர்மதி, 'அவனிகந்தர்வ ஈசுவர கிருக வளாகத்தை நான் ஆய்வு செய்கிறேன்' என்றார். நான் பகைவிடை ஈசுவரமும் மறவனீசுவரமும் சிறிய கோயில்களாக இருந்தமையால் சிறுபழுவூர்க் கோயிலை ஆய்வுக்கு எடுத்துக் கொள்வதாகக் கூறினேன். சரியாகத் தேர்ந்திருக்கிறீர்கள் என்று எங்களைப் பாராட்டினார்.

எங்கள் ஆய்வு முடிவதற்குள் முப்பது முறையாவது பழுவூர்ச் சென்றிருப்போம். பழுவூர் ஆய்வுக்காகச் செல்வது என்றால் நாங்கள் கல்வெட்டுகளைப் படித்து எழுதுவதற்கும் குறிப்புகள் எழுதுவதற்கும் ஒரு நோட்டுடன் புறப்பட்டு விடுவோம். அவர் வீட்டிலிருந்து காலைச் சிற்றுண்டி, காபி, மதிய உணவு எல்லாம் வந்துவிடும். நாங்கள் எப்பொழுது பசிக்கிறதோ அப்போது நன்றாக உணவருந்தி மீண்டும் ஆய்வில் ஈடுபடுவோம். மேடம் உணவு வகைகளைத் தயார் செய்து வைத்திருக்க, ஆறுமுகம் மாமா அவற்றை எல்லாம் காரில் கொண்டு வந்துவிடுவார். உணவு பற்றி நாங்கள் கவலைப்பட்டதே இல்லை. பின்னாளில் கோயில் ஆய்வுகளுக்குச் செல்லும்போது நான் வீட்டிலிருந்து உணவு தயாரித்து எடுத்துவந்த காலங்களில்தான், அவர் மட்டும் அல்ல மேடமும் நமக்காக எவ்வளவு துன்பங்களை அனுபவித்திருக்கிறார் என்பது புரிந்தது. மேடம் அவர்களின் விருந்தோம்பலைப் பற்றி அவசியம் சொல்லவேண்டும்.

முதுகலை ஆய்வேட்டுக் காலத்திலும் குறிப்பேடுகளுடன் மதியம் 2. 30 மணிக்கு அவர் வீட்டுக்குச் சென்றுவிடுவோம். செவிக்கு உணவு கிடைப்பதற்கு முன் சூடாகக் காபி கிடைக்கும். அதைக் குடித்துவிட்டுத்தான் சுறுசுறுப்பாக அவர் கூறும் குறிப்புகளை எழுத ஆரம்பிப்போம். பின்னாட்களிலும் எப்போது அவர் வீட்டிற்குச் சென்றாலும் காபி குடிக்காமல் வந்ததில்லை. நாம் வீட்டிற்குள் நுழைந்த சிறிது நேரத்திற்கெல்லாம் காபி குடிக்கிறீர்களா என்று மேடம் கேட்பார்கள். உடனே நான் சரி என்று கூறிவிடுவேன். அவர் தரும் காபியின் சுவை அப்படி!. அவர் வீட்டிற்கு வரும் விருந்தினர்கள் மேடம் தரும் காபியை விரும்பிப் பருகுவதைப் பார்த்திருக்கிறேன். அப்படி மிகவும் விரும்பி அருந்தியவர்களில் மேனாள் துணைவேந்தர் முனைவர் ச. முத்துக்குமரன் அவர்களும் ஒருவர்.

அவர் சில ஆண்டுகள் மாதந்தோறும் கோயிற்கலை, இலக்கியம், வரலாறு தொடர்பாகப் பல சொற்பொழிவுகளை நடத்தி வந்தார். அந்த விழாவிற்குச் சிராப்பள்ளியின் பல கல்லூரிகளிலிருந்தும் பேராசிரியப் பெருமக்களும் வரலாற்று ஆர்வலர்களும் வருவார்கள். சொற்பொழிவாளர்களுக்கு அவர் வீட்டில்தான் உணவு. அப்போது எனக்கும் அகிலாவுக்கும் செவிக்கு உணவு கிடைப்பதுடன் வயிற்றுக்கும் உணவு கிடைக்கும். விருந்தினர்கள் அனைவரும் அருமையான உணவு என்று புகழ்வதைக் கேட்டிருக்கிறேன். சாப்பாடு, மிக எளிமையாக அதே சமயம் மிகுந்த சுவையுடன் அமைந்திருக்கும்.

சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் கோ. வேணிதேவி அவர்கள் விடுதியில் தங்கியிருந்தமையால் எங்களுடன் இணைந்து உணவு அருந்துவது வழக்கம். மேடத்தின் உணவு தயாரிப்பைப் பற்றி புகழ்ந்து பேசாமல் ஒருநாள்கூட வேணிதேவி சாப்பிட்டதில்லை. 2008 ஜூன் முதல் வாரத்தில் மதுரை சென்றிருந்தபோது தமிழ்நாடு அரசு தொல்லியல்துறையின் மதுரைப் பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கும் முனைவர் வெ. வேதாசலம் அவர்கள் வீட்டிற்கு மதிய உணவிற்குச் சென்றபோது அவர், 'உங்கள் வீட்டுச் சாப்பாடு மிகவும் அருமை' என்று கூறியபோது, வேதாசலம், 'உங்கள் வீட்டிலும் அப்படித்தானே. மேடம் சமையல் மிக அருமையாக இருக்கும் 'என்று மகிழ்வுடன் கூறினார்.

பழுவூர் ஆய்வு செய்த காலத்தில், பழுவேட்டரையர்கள் பற்றி எழுதியிருந்த நூல்களை எங்களுக்குக் கொடுத்துப் படிக்கச் சொல்வார். நாங்களும் படித்துக்கொண்டு போவோம். என்ன புரிந்தது என்று கேட்பார். பயந்து கொண்டே புரிந்தவற்றைக் கூறுவோம். 'என்னிடம் பயம் தேவையில்லை. கற்றுக் கொள்வதற்கு வந்திருக்கிறீர்கள். நீங்கள் நிறைய பேசினால்தான் உங்களுக்கு என்ன புரிந்திருக்கிறது என்பதை என்னால் புரிந்து கொள்ளமுடியும்' என்று எங்களை ஊக்கப்படுத்துவார். பிறகுதான் எங்களுக்கு இது புரியவில்லை, அது புரியவில்லை என்று வெளிப்படையாகப் பேசுவோம். அவர் எங்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து விளக்குவார். நாங்கள் நிறையப் பேச வேண்டும், நிறையக் கேள்விகள் கேட்கவேண்டும், கேட்டால்தான் கிடைக்கும், உங்கள் கேள்வி என்னை இன்னும் சிந்திக்க வைக்கும் அதனால் நீங்கள் நிறைய கேளுங்கள் என்று பலவும் சொல்லி ஊக்கப்படுத்துவார்.

களஆய்வு செய்த நாட்களில் அதுநாள்வரை படியெடுக்கப்படாத பதினேழு கல்வெட்டுகளைச் சிறுபழுவூரில் கண்டறிந்தோம். அவற்றில் மிக முக்கியமானவை இரண்டு.. ஒன்று பழுவேட்டரைய அரசர்களுள் ஒருவரான குமரன் மதுராந்தகன் பற்றியது; மற்றொன்று மறவன் கண்டனே இக்கோயிலைக் கட்டியவர் என்பதை உறுதி செய்யும் பரகேசரிவர்மரின் ஒன்பதாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு. இந்தப் பரகேசரி உத்தமசோழர் என்பதை எளிதாக முடிவுசெய்ய முதுகலை ஆய்வின் போது அவருடன் செய்த விவாதங்கள் மிகவும் உதவின.

கல்வெட்டில் பயின்று வரும் சொற்கள் பற்றிக் கூறவேண்டும். கல்வெட்டைப் படிப்பது எளிது. அதன் செய்தியைப் புரிந்து கொள்வதுதான் மிகவும் கடினம். கண் இருக்கும் யார் வேண்டுமானாலும் கல்வெட்டுப் படிக்கலாம் என்று அவர் அடிக்கடி சொல்வார். திரும்பத் திரும்பக் கல்வெட்டுகளைப் படிக்கப் படிக்க, எழுத்துக்களின் வரிவடிம் நம் மனதில் பதிந்து அவற்றை வேகமாகப் படிக்கும் திறமையை நமக்குத் தரும். பழுவேட்டரையர்களின் வரலாறு ஆய்வேட்டின் முதல் இயலாக இருந்தமையால், அவர்களின் மரபு வழியைக் கண்டறிய அனைத்துக் கோயில்களிலும் கல்வெட்டுகளைப் படித்து நாற்பத்தொரு புதிய கல்வெட்டுகளைக் கண்டுபிடித்தோம். பழுவேட்டரைய இளவரசி அருமொழி நங்கை பற்றிய குறிப்பு திருச்சென்னம்பூண்டிக் கல்வெட்டில் குறிக்கப்பட்டிருந்ததால் அவ்வூர்க் கோயிலுக்குச் சென்று அந்தக் கல்வெட்டைப் படித்துவந்தோம். அதே போல் திருப்பழனம், திருவையாறு கோயில்களுக்கும் சென்றோம். கோயில் ஆய்வு என்பது நாம் தலைப்பிற்கு எடுத்துக் கொண்ட கோயிலோடு நின்று விடுவதில்லை, அதனோடு தொடர்புடைய பல கோயில்களுக்கும் சென்று ஆய்வு செய்தால்தான் ஆய்வில் முழுமை இருக்கும் என்பதை உணர்த்தியது பழுவூர் ஆய்வு.

பழுவேட்டரையர் மரபு வழி பற்றிக் கூறும்போது அவருக்கும் திரு. இல. தியாகராஜன் அவர்களுக்கும் இடையில் நிகழ்ந்த கருத்துப் போர் பற்றி அவசியம் கூறவேண்டும். திரு. தியாகராஜன் தினமலரில் பழுவேட்டரையர்களைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் நிறைய முரண்கள் இருந்தமை எங்களுக்கும் தெரிந்தது. குறிப்பாகக் கண்டன் அமுதன் பராந்தகரின் பன்னிரண்டாம் ஆட்சியாண்டிலேயே இறந்துவிட்டார் என்ற செய்தி.

சிறுபழுவூர்க் கோயிலில் உள்ள பராந்தகரின் பன்னிரண்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டொன்றில் கண்டன் அமுதன் குறிக்கப்பட்டுள்ளார். அக்கல்வெட்டில் வரும் 'வெள்ளூர்ப் போர் அஸ்தி கடை செய்த நான்று' என்ற சொல்லாட்சி நிறைய அறிஞர்களைக் குழப்பியிருந்தது. திருவையாறு பஞ்சநதீசுவரர் கோயிலில் உள்ள முதல் பராந்தகரின் பதினான்காம் ஆட்சியாண்டுக் கல்வெட்டில் கண்டன் அமுதன் இடம் பெற்றிருப்பதை அறியாமல், வெள்ளூர்ப் போரில் கண்டன் அமுதன் இறந்துவிட்டதாகத் திரு. தியாகராஜன் குறிப்பிட்டிருந்தார்.

அவர் இதற்கு மறுமொழி அளித்தபோது, 'பன்னிரண்டாம் ஆட்சியாண்டில் இறந்தவர் பதினான்காம் ஆட்சியாண்டில் எப்படிக் கொடையளிக்க முடியும். அமுதனின் ஆவியா வந்து கொடையளித்தது' என்று கேட்டிருப்பார். இந்தக் கருத்துப் போர்களைப் பார்த்த நாங்கள் இதன் விளைவு என்னவாகுமோ, அவர் இதனால் எவ்விதத்திலாவது பாதிக்கப்படுவாரோ என்றெல்லாம் பயந்தோம். இது வெறும் கருத்துப் போர் என்பது பின்னாளில் புரிந்தாலும், வாங்குவாதம் நடந்த காலங்களில் நாங்கள் மிகவும் பயந்தது உண்மை.

இந்தக் கருத்துப் போர்களினால் நிறைய உண்மைகள் எங்களுக்குப் புரிந்தது. ஒரு கோயிலை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டால் அதை மட்டும்தான் ஆய்வு செய்யவேண்டும் என்று நினைக்காமல், அதனோடு தொடர்புடைய அனைத்துக் கோயில்களுக்கும் சென்று கல்வெட்டுகளை ஆராய்ந்து பிறகே ஆய்வு முடிவுகளைக் கொள்ளவேண்டும். இரண்டாம் நிலைச் சான்றுகளை ஒருபோதும் அப்படியே கொள்ளக் கூடாது. அவை சரியா என்று உறுதி செய்துகொள்ளவேண்டும். கல்வெட்டுகளைக் கையாள்வதிலும் மிகுந்த கவனம் வேண்டும். கல்வெட்டுகளில் பயின்று வரும் சொற்களை நன்றாகப் புரிந்து கொண்டால்தான் முழுப் பொருளையும் நம்மால் உணரமுடியும். கல்வெட்டுச் சொற்களைப் புரிந்து கொள்ள இலக்கியப் பின்புலம் இன்றியமையாதது.

கல்வெட்டியலில் அவர் சிறந்து விளங்குவதற்கு முக்கியமான காரணம் இலக்கியப் பின்புலம்தான். கல்வெட்டில் ஒரு சொல்லுக்குப் பொருள் தெரிந்துகொள்ள வேண்டுமானால் முதலில் சொல் அகராதியைத்தான் பார்ப்பார். பிறகு கல்வெட்டுச் சொல் தொடர்பான நூல்களை அணுகுவார். பழுவூர்க் கல்வெட்டுகளில் பயின்று வரும் சொற்களை நன்கு புரிந்து கொண்டு அக்கால வரலாற்றை எழுதுவதற்கு மிகவும் உதவியாக இருந்தது அவருடைய இலக்கியப் புலமைதான். பொருள் காண்பதோடு நின்றவிடமாட்டார். அதன் தொடக்கம் என்ன, இந்தச் சொல் எந்தெந்த இலக்கியங்களில் பயின்று வந்துள்ளது, சொல் பயன்பாட்டில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளனவா என்றெல்லாம் ஆராய்வார். அப்படித்தான் தளிச்சேரிக் கல்வெட்டு பற்றிய ஆய்வின்போது, தளி என்ற சொல்லை குறித்து மட்டும் சில பக்கங்கள் பேசியிருப்பார். அந்தச் சொல்லின் வேர் என்ன, எந்தெந்த இலக்கியங்களில் அச்சொல் பயின்று வந்துள்ளது என்றெல்லாம் அவர் ஆராய்ந்தபோதுதான், தளி என்று சொல் எப்படிப் பொருள் மாறுபட்டுப் பின்னாளில் கோயிலுக்கு வழங்கப்பட்டது என்பதை நாங்கள் அறிந்து கொண்டோம். பொதுவாக, அவருடைய கோயில் கட்டுரைகளில் இலக்கிய ஆய்வும் ஏதோ ஒரு வகையில் இடம் பெற்றுவிடும்.

கல்வெட்டுச் சொற்கள் புரியவில்லை, தெரியவில்லை என்றால் உடனே மற்ற அறிஞர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளத் தயங்கமாட்டார். சிறுபழுவூர்க் கல்வெட்டு ஒன்றில் அக்கசாலை என்ற சொல் இடம்பெற்றிருந்தது. அதற்குச் சரியான பொருள் தெரியவில்லை. 'அறிஞர் கூ. ரா. சீனிவாசன் அவர்களை நீயே நேரில் சந்தித்து விளக்கம் கேட்டுவா' என்று அனுப்பினார். நானும் சீனிவாசன் ஐயா அவர்களைச் சந்தித்தேன். அந்த வயதிலும் என்னுடைய கேள்வியை ஒருமுறைக்கு இருமுறை கேட்டு விளக்கம் தந்தார் அப்பெருந்தகை. அக்கம் என்றால் காசு, அது தொடர்பானதாகத்தான் இச்சொல் இருக்கமுடியும் என்று அவர் முன்பே சொல்லியிருந்தார். அதையேதான் கூ. ரா. சீனிவாசன் அவர்களும் சொன்னார்கள்.

கல்வெட்டுச் சொற்கள் மட்டுமல்ல, கல்வெட்டுச் சொற்றொடர்கள் புரியாத சமயங்களில்கூட அந்தக் கல்வெட்டுத் தொடர்களை அப்படியே வரலாறு இதழில் பதிப்பித்து, பொருள் தெரிந்தவர்கள் கூறலாம் என்று எழுதியுள்ளார். சில போதுகளில் கல்வெட்டறிஞர்களுக்கு அந்தத் தொடர்களை எழுதி அனுப்பி அவற்றிற்குப் பொருள் கூறுமாறு வேண்டிக் கொண்டதும் உண்டு. எனக்குத் தெரிந்தவரையில் அவர் அப்படிப் பதிப்பித்த பெரும்பான்மையான சொற்களுக்கும் தொடர்களுக்கும் இதுநாள்வரை சரியான விளக்கங்கள் கிடைக்கவில்லை.

பின்னாளில் கல்வெட்டுச் சொற்கள் சிலவற்றிற்குப் பொருள் தெரியாதபோது அவற்றைக் கண்டுபிடிக்க நானும் அகிலாவும் முயற்சி செய்தமை சிறந்த அனுபவம். அக்கசாலை போல் கல்வெட்டில் பயின்று வரும் ஏதாவது ஒரு சொல்லிற்கு என்ன பொருள் என்று கல்வெட்டுத் தொகுதிகளைக் கொண்டே கண்டுபிடிக்கவும் அவரால் கற்றுக் கொண்டோம். குறிப்பாக காவிதி என்ற சொல். 'இதற்குச் சரியான பொருள் தெரியவில்லை. நீயும் அகிலாவும் தென்னிந்திய கல்வெட்டுகள் தேடிப் பாருங்கள் ஏதாவது விடை கிடைக்கலாம்' என்றார் அவர். உடனே ஆளுக்கொரு தொகுதியை எடுத்துக் கொண்டு கல்வெட்டுகளைப் படிக்க ஆரம்பித்தோம். காவிதி என்ற சொல் எந்தெந்தக் கல்வெட்டுகளில் வருகிறதோ அவற்றையெல்லாம் தனியே தொகுத்து என்ன பொருளில் அச்சொல் பயின்று வந்துள்ளது என்று பார்த்தபோதுதான் அது ஊர்க்கணக்கரைக் குறித்ததை அறிந்தோம்.

என்னுடைய முனைவர் பட்ட ஆய்வேட்டிற்காகத் திருவரங்கம் கல்வெட்டுகளை ஆய்வு செய்தபோது, திருவரங்கம் கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் பல மணலிட்டுப் பயிர் செய்ய முடியாமல் இருந்ததாகவும் அவற்றைப் பண்படுத்தி மீண்டும் விளைநிலமாகச் சிலர் மாற்றித் தந்ததாகவும் படித்ததுடன், அப்படிச் சீர்திருத்தியவர் தம் பெயருடன் வளாகம் என்ற சொல்லை இணைத்து அந்நிலத்தைக் குறித்திருந்தமையையும் கண்டேன். அவரிடம் இதுபற்றிக் கூறியபோது, 'இந்தச் சொல் எந்தக் காலத்தில் இருந்து கல்வெட்டுகளில் பயின்று வந்துள்ளது; அதன் பொருள் என்ன என்பதைக் கண்டறிய அனைத்துக் கல்வெட்டுத் தொகுதிகளையும் வாசி' என்று சொன்னார். இறுதியில் வளாகம் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதும் அளவிற்குச் செய்திகள் கிடைத்தன. கல்வெட்டில் இடம்பெறும் ஒரு சொல் எப்படிக் கட்டுரையாகும் அளவிற்குச் செய்திகளைத் தரமுடியும் என்பது அப்போதுதான் எனக்குப் புரிந்தது. அதைப் புரியவைத்ததும் அவர்தான். உண்மையாக உழைத்தால், எதுவுமே கடினம் இல்லை, எல்லாமே எளிதான விஷயங்கள்தான் என்று அவர் அடிக்கடி கூறுவார். அந்தக் கூற்று எவ்வளவு உண்மை என்பதை வளாகம் எனக்கு உணர்த்தியது. முற்றிலுமாய் என் உழைப்பில் உருவான முதல் கட்டுரை அது. என்னுடைய முதுகலை ஆய்வேட்டிற்கு அவருடைய பங்களிப்பு மிகுதியாக இருந்தது. ஆனால், வளாகம் அவருடைய வழிகாட்டலில் அகிலாவின் துணையுடன் நானே உருவாக்கிய முதல் படைப்பு. என்னாலும் எழுத முடியும் என்று என்னை நம்ப வைத்து, என் மூலமாகமே ஒரு கட்டுரையை உருவாக்கிய அவருடைய சாதனையை என்னால் மறக்கவே முடியாது.

(வளரும்)this is txt file
       
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
We welcome your Feedbacks on this Article. Please use the Form below to provide your Feedbacks.
 
தங்கள் பெயர்/ Your Name
மின்னஞ்சல்/ E-Mail
பின்னூட்டம்/ Feedback
வீடியோ தொகுப்பு
Video Channel


நிகழ்வுகள்
Events

சேரர் கோட்டை
செம்மொழி மாநாடு
ஐராவதி
முப்பெரும் விழா

சிறப்பிதழ்கள்
Special Issues

நூறாவது இதழ்
சேரர் கோட்டை
எஸ்.ராஜம்
இராஜேந்திர சோழர்
மா.ரா.அரசு
ஐராவதம் மகாதேவன்
இரா.கலைக்கோவன்
வரலாறு.காம் வாசகர்
இறையருள் ஓவியர்
மகேந்திர பல்லவர்
குடவாயில்
மா.இராசமாணிக்கனார்
காஞ்சி கைலாசநாதர்
தஞ்சை பெரியகோயில்

புகைப்படத் தொகுப்பு
Photo Gallery

தளவானூர்
சேரர் கோட்டை
பத்மநாபபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்
கழுகுமலை
மா.ரா.அரசு
ஐராவதி
வாழ்வே வரலாறாக..
இராஜசிம்ம பல்லவர்
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.