http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [180 Issues] [1786 Articles] |
Issue No. 48
இதழ் 48 [ ஜூன் 16 - ஜூலை 17, 2008 ] இந்த இதழில்.. In this Issue.. |
அன்புள்ள நகுலன் அய்யாவிற்கு,
மாம்பழக் காலங்கள் சுவையாய்க் கழிக்கின்றன. இன்று வைகாசித் திங்கள், அறிவன்கிழமை (புதன்). இங்கே வெயில் நாட்கள் நத்தையாய் நகர்கின்றன. நீங்கள் சுகமா? உங்கள் நூல்வெளிகளில் உலா வந்த மனிதர்கள் சுகமா? தற்போது நீங்கள் வசிக்கும் உலகம் சுகமா? எங்கள் காவேரியும் சுகமாய் நடைபயிலுகிறாள். நாங்களும் சுகம். விளையாட வேண்டும் என்று தோன்றியது. ஆனால், வெயிலில் விளையாட வீட்டில் தடை. தெருவில் பிள்ளைகளைக் காணவில்லை. சிட்டுக்குருவிகள் இரண்டு மட்டும் வந்து போகின்றன. காக்கைகள் எல்லாம் எங்கே போயின என்று தெரியவில்லை. தென்றல் சுடுகின்றது. சங்கச்சாரல் மழைதான் தற்போதைய புகலிடம். தமிழன்தான் எண்ணற்ற துறையிலும் முன்னோடி. விளையாட்டுத்துறையிலும் கூட. இன்று பிரபலமாயிருக்கும் கால்பந்து விளையாட்டை அன்றே தமிழ்ப் பெண்கள் விளையாடி உள்ளார்கள். சான்று நற்றிணையில் உள்ளது. இத்தகைய பதிவுகள் வேற்றுமொழி - மேல்நாட்டு இலக்கியங்களில் உண்டா? தமிழன்தான் விடை கூற வேண்டும். நற்றிணைப்பாடல் இதோ, கண்டோர் கூற்று அந்தோ தானே அளியள் தாயே நொந்துஅழி அவலமொடு என்ஆ குவள்கொல் பொன்போல் மேனித் தன்மகள் நயந்தோள் கோடுமுற்று யானை காடுடன் நிறைதர நெய்பட்டு அன்ன நோன்காழ் எஃகின் செல்வத் தந்தை இடனுடை வரைப்பின் ஆடு பந்து உருட்டுநள் போலஒடி அம்சில் ஓதி இவள் உறும் பஞ்சி மெல்லடி நடைபயிற் றும்மே கயமனார் - நற்றினை் 324 விளக்கம் : பொன்னைப் போன்ற மேனியை உடையவள் தலைவி. இவளைப் பெற்ற அன்னை, மிகவும் அளிக்கத்தக்காள். அவள்தான், நொந்து அழிகின்ற துன்பத்தோடு இனி என்ன பாடுபடுவாளோ? ஜயோ! கொம்புகள் முதிர்ந்த யானை காட்டில் எங்கும் நிறைய. நெய் பூசினால் வலிய காம்பு செருகிய வேற்படையை ஏந்திய யானைச் செல்வத்தையுடைய தந்தையினது அகற்சியை உடைய இடத்தில், விளையாடுகின்ற பந்தைக் காலால் உருட்டுபவள் போல ஓடி ஓடி, அழகிய கூந்தலை உடைய இவளின் பஞ்சு போன்ற மெல்லிய அடிகள் பரலில் நடை பயிற்றுமே, என்ன பாபம்! ஆண்கள் கால்பந்தாடியதாய்ப் பதிவுகள் இல்லை. ஆனால், பெண்கள் பந்தைக் காலால் உருட்டி விளையாடும் வழக்கம் நடைமுறையில் சங்ககாலத்தில் இருந்துள்ளது. சங்ககாலப் பெண்டிர் போர்ப்பயிற்சி, கால் பந்தாட்டம் என்று செறிவான ஒரு வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்கள். இன்று நவீன காலத்தில் வியப்புக்குரியதாய், சாதனையாய்க் கருதப்படும் பல கடுமையான விஷயங்களைச் சங்ககாலப் பெண்கள் இயல்பாய், சாதாரணமாய் அன்று செய்திருக்கிறார்கள். சங்ககாலத் தமிழர்கள் பல துறைகளில் முன்னோடிகள்தானே! சுவையும், சுவாரசியமும் உள்ள பதிவுகள் இதுபோன்று ஏராளம் சங்க இலக்கியத்தில். விடைபெறுகிறேன். நிறைவான தருணங்களுடன், ரிஷி (யார் இந்த நகுலன்? தமிழ் எழுத்தாளர். இவர் மறைவுச்செய்தியை ஓரே ஒரு தமிழ்ப் பத்திரிக்கை வெளியிட்டது. ஆனால், சேர நன்னாட்டிலோ அனைத்துப் பத்திரிக்கைகளும் வெளியிட்டுத் துக்கத்தைப் பகிர்ந்து கொண்டன. அன்று மகாகவி பாரதி. இன்றோ நகுலன். தமிழ்ச் சமூகம், ஊடகம் காட்டும் மரியாதை இவ்வளவுதானா? இவ்வளவுதான். உண்மைகள் சுடுகின்றன, வெயிலை விட. this is txt file |
சிறப்பிதழ்கள் Special Issues புகைப்படத் தொகுப்பு Photo Gallery |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |